Monday, June 27, 2011

கனவுகள் ஆனந்தம்

      இளமையாய் இருக்கும்போது எல்லோருக்குமே நிறைய கனவுகள் இருக்கும். சில லட்சியங்கள், எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என்பது பற்றிய கற்பனைகள், வாழ்க்கையை எந்தவிதத்தில் அமைத்துக்கொள்ளலாம். என்பதைப்பற்றிய எண்ணங்கள் என நிறைய கனவுகள் இருக்கும். ஆனால், எல்லோருக்கும் அதே மாதிரியான கனவுகள் ஏற்படுவதில்லை. ஏனெனில் கனவு காண்பதற்குக்கூட கொஞ்சம் துணிச்சல் வேண் டும். நிறைய பேர் தங்கள் கனவுகள் நனவாகுமோ இல்லையோ என்கிற அச்சத்திலேயே கனவு காண்பதை நிறுத்திக்கொண்டு விட்டார்கள். 18லிருந்து 20 வயது வரை பார்த்தால் மிகப்பெரிய லட்சியக் கனவுகள் மனதுக்குள் குடிகொண்டிருக்கும். 25 வயது எட்டுவதற்குள் அவர்கள் தங்கள் கனவுகளை
      சராசரி தேவைகளாக சுருக்கிக்கொண்டு விடுகிறார்கள். அதுவும் அவரவர், அவரவரின் தனிப்பட்ட ஆசைகளைச் சார்ந்த தேவைகளாகவே இருக்கிறது. அவர்களைக் கேட்டால், "இதுதான் யாதார்த்தம்' என்று சொல்வார்கள். இதன் பெயர் யதார்த்தம் அல்ல. கோழைத்தனம். கனவுகளை நனவாக்கத் தெரியாத கோழைத்தனம்.35 வயதாகும்போது நிறைய பேரிடம் கனவுகளே இருப்பதில்லை. தொந்தரவு இல்லாமல் வாழ்ந்தால் போதும் என்கிற நிலைக்கு வந்துவிடுகிறார்கள். ஒரு தலைமுறை, கனவுகளை இழக்கிறபோது, எத்தனைதான் நற்பணிகள் செய்தாலும் அவற்றின் பயனை யாரும் அனுபவிக்க முடியாது. நீங்கள் எந்த ஒரு சமூகத்தையும், நாட்டையும் பாருங்கள். மனதில் மிக வலிமையான கனவுகளை சுமந்துகொண்டு வாழ்ந்தவர்களின் வாழ்க்கைதான் தீவிரத் தன்மையும் அர்த்தமும் நிறைந்ததாக இருக்கிறது. அவர்களிடம் ஒரு மகத்தான சக்தி இருந்திருக்கிறது. நமது நாட்டிலேயே சில ஆண்டுகளுக்கு முன்பு எத்தனையோ பேர் இந்த நாட்டிற்காக தங்கள் உயிரை துச்சமாக மதித்து தூக்கி எறிய தயாராக இருந்தார்கள். ஏனெனில் சுதந்திர இந்தியா பற்றி அவ்வளவு வலிமையான கனவு அவர்களுக்கு இருந்தது.
      உங்களுடைய கனவுகளையும் நினைத்துப்பாருங்கள். உங்களில் ஒருவருக்கொருவர் காணுகிற கனவுகளில் அப்படியொன்றும் பெரிய வேறுபாடு கிடையாது. தனிப்பட்ட சுயநலத்தை தள்ளிவிட்டுப் பார்த்தால் எல்லோருடைய கனவுகளின் அடிப்படையும் ஏறக்குறைய ஒன்றாகவே இருக்கிறது. உங்களுடைய கனவு, அவருடைய னவு, இன்னொருவருடைய கனவு... இதற்கெல்லாம் பெரிய வேறுபாடு இல்லை.இன்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பணிகளைச் செய்து வருகிறீர்கள். சிலபேர் படிக்கிறார்கள். சிலர் திருமணம் செய்துகொள்கிறார்கள். சிலர் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். இவற்றைச் செய்வதெல்லாம் மகிழ்ச்சிக்காகத்தான். மகிழ்ச்சிக்கு இதுதான் வழி என்று ஒவ்வொருவரும் அவரவருக்கு பிடித்த
காரியங்களை செய்கிறார்கள். அப்படியானால் ஒவ்வொரு மனிதரும்
மகிழ்ச்சியாக இருக்கத்தான் விரும்புகிறார்கள் இல்லையா... இப்போது மகிழ்ச்சிக்காக நீங்கள் பின்பற்றுகிற வழிகள் எல்லாம் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் அடிப்படையில் அனைவரும் தேடுவது மகிழ்ச்சிதான்.

      எனவே "மகிழ்ச்சி' என்ற பொதுவான கனவு எல்லோருக்கும் தேவையாய் இருக்கிறது. அன்பு எல்லோருக்கும் தேவையாய் இருக்கிறது. ஆனால் இந்த கனவுகளை சின்னச்சின்ன ஆதாயங்களுக்காக அடைத்து வைத்து விடுகிறீர்கள். இந்தக் கனவுகளை எட்டுவது சாத்தியமில்லை என்றுகருதி, சின்னச்சின்ன சுய லாபங்களிலேயே அமைதி அடைந்துவிடுகிறீர்கள். இது வெறும் கோழைத்தனம். குறிப்பாக, இளமையில் கனவுகளை கைவிடலாகாது. கோழைத்தனம் கூடவே கூடாது. இளைஞர்களுக்கு இருக்கிற சக்திக்கு அவர்களை கோழைத்தனம் நெருங்கவே கூடாது. பல இளைஞர்கள் 18 வயதிலேயே வாழ்க்கை குறித்தும் மரணம் குறித்தும் 60 வயது ஆனவரைப் போல் அச்சப்படுகிறார்கள். எனக்கு இப்படி நடந்துவிட்டால் என்ன செய்வது, அப்படி நடந்துவிட்டால் என்ன செய்வது... என்றெல்லாம் கவலைப்படுகிறார்கள். எதுவுமே நிகழாவிட்டால் உங்களுக்கு வாழ்க்கை என்ற ஒன்றே இல்லை. வாழ்க்கை என்றால் ஏதாவது ஒன்று நிகழ்ந்தாக வேண்டும். எதிர்பாராத ஒன்று ஏற்படுமேயானால் அதற்குப் பெயர்தான்வாழ்க்கை.எனவே இன்றைய இளைஞர்களுக்கு வாழ்க்கை பற்றிய நம்பிக்கை, கனவுகள், லட்சியங்கள், அதே நேரம் அச்சம், பதட்டம் அனைத்தும் ஒன்றாக இருப்பதைப் பார்க்கிறோம்.
      இப்போது உங்களை நீங்களே சில கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்கள். வாழ்க்கையில் செய்ய விரும்புவதை, அது எதுவாக இருந்தாலும் சரி, அதனை முழுமையாக எவ்வளவு சிறப்பாக முடியுமோ, அவ்வளவு சிறப்பாக செய்ய முடியுமா என்று கேட்டுப் பாருங்கள். முதலில், நீங்கள் யார் என்றுகூட தெரிந்துகொள்ளாமல் என்ன செய்ய முடியும் என்பதை உணர்ந்து செயல்பட முடியுமா? இப்போது உங்களைப்பற்றி நீங்கள் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிற விஷயங்கள் அனைத்துமே, மற்றவரோடு ஒப்பிட்டு நீங்களே எடுத்திருக்கிற முடிவுகள்தான்.
      உதாரணத்திற்கு ""நான் உயரமானவன்'' என்று ஒருவர் சொல்கிறார் என்றால் தன்னைவிடகுள்ளமானவர்களோடு ஒப்பிடும்போது தான் உயரம் என்று சொல்கிறார். அவர் ஆறடி உயரம் இருக்கிறார் என்றால் அவரைச் சுற்றி இருப்பவர்கள் ஐந்தடி, ஐந்தரை அடி இருக்கலாம். ஏழடி உயரம் உள்ளவர்கள் அருகில்சென்றால் மிகவும் குள்ளமாக தன்னை உணர்வார். அப்படியானால் தன்னைப்பற்றி அவருக்கு இருந்த மதிப்பீடு ஒப்பீட்டில் விளைந்த மதிப்பீடே தவிர, உண்மையான மதிப்பீடு அல்ல.
      ஒவ்வொரு மனிதரும் தனக்குள்ளேயே ஒரு அற்புதத்தை நிகழ்த்துகிற வல்லமை படைத்தவர்கள். உங்களுக்குள் அது நிகழ்ந்துவிட்டால் கண்டிப்பாக வெளிச்சூழலிலும் அது நிகழ்ந்தே தீரும்.வாழ்க்கை முழுவதும் ஒருவர் கண்மூடி அமர்ந்துவிட்டால்கூட இந்த உலகத்தை அவரால் இன்னும் அழகாக்க முடியும். எனவே உள்நோக்கி பாருங்கள். உங்கள் உடலையும் மனதையும் மேல்நிலைக்கு கொண்டு செல்லுங்கள். இந்த உடலையும் மனதையும் முற்றிலும் புதிய பரிமாணத்திற்கு கொண்டுபோய் அவற்றை எப்படியெல்லாம் பயன்படுத்த முடியும் என்று பாருங்கள், ஆனந்தம் தொடரும்.

Wednesday, June 22, 2011

ஆன்மீகம் கல்வி ஆனந்தம்


      கடவுளைப் பற்றி நினைக்கிறீர்கள். உயிரைப் பற்றி நினைக்கிறீர்கள். உண்மையைப் பற்றி நினைக்கிறீர்கள். ஆனால், உங்கள் பார்வை மட்டும் வெளியுலகைப் பற்றியே இருக்கிறது. உலகம் எப்படி இருக்க வேண்டும் என்று பார்ப்பதற்கு முன்பாக, உங்களுக்குள் நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என பார்க்க வேண்டும். உங்கள் மனதை அமைதியாக வைத்திருக்காவிட்டால் உலகை அமைதியாக வைத்திருக்க முடியாது.
      வாழ்க்கை தற்செயலாகவோ மற்றொருவருடைய கருணையாலோ நடப்பது நல்லதல்ல. உங்கள் தெளிவினாலும் திறமையாலும் நடக்க வேண்டும்.
      கடந்த வினாடியை, இந்த வினாடிக்கு சுமந்து கொண்டு வராத மனிதர் தான் அனைத்திலிருந்தும் விடுபட்டு சுதந்திரமானவராக இருக்கிறார்.
      காலையில் கண் விழிப்பதிலிருந்து சிற்றுண்டி சாப்பிடுவது வரை பலர் போராட்டத்தின் உச்சியில் இருக்கின்றனர். வெறுமனே உங்கள் கணவன், மனைவி அல்லது குழந்தைகளைப் பார்க்காதீர்கள். அவர்களுடைய தந்திரங்கள் அனைத்தும் ஏற்கனவே உங்களுக்கு பழக்கமானவை, எதுவும் உங்களுக்குப் புதிதல்ல, அவர்களின் குணம் இன்னதென்று தெரிந்திருந்தும், காலை உணவை முடிப்பதற்குள்ளாக, போராட்டத்தின் உச்சிக்கே போய் விடுகிறீர்கள். நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை மனதின் கட்டுப்பாட்டில் விட்டுவிட்டால் பதட்டமாகத் தான் இருப்பீர்கள் என்பதை உணருங்கள்.
      எது மிக உயர்ந்ததோ அதைப் பெறுவதற்கான எண்ணத்திலேயே இருங்கள். அவ்வாறு இருந்தால், மனதிற்கு உள்நிலையிலும், வெளிநிலையிலும் தூய்மை தானாகவே கிடைக்கும்.
      மனம் என்பது எதையும் பாகுபடுத்தி பார்க்கும் தன்மையுடையது. இல்லையென்றால் மனதால் எந்த பயனும் இல்லை, மனம் எந்த வகையில் உங்களுக்குப் பயன்படக்கூடியது என்றால் எது நல்லது, எது கெட்டது, எது சரி, எது தவறு, என்பதை அது பகுத்துப்பார்ப்பதாக உள்ளது.
      எந்த மூலதனத்துடனும் உலகத்துக்கு நீங்கள் வரவில்லை. எனவே, உங்கள் வாழ்க்கையில் எது நடந்தாலும் லாபம் தான்.
      குழந்தைகளுக்கு எழுதப்படிக்க மட்டும் கற்றுக் கொடுக்காமல், மூளையை எப்படிப் பயன்படுத்துவது என்பதையும் கற்றுக்கொடுக்க வேண்டும்.
      பெரும்பாலான மக்கள் தங்கள் இயல்புப்படி வாழாமல், தங்கள் மேல் சுமத்தப்பட்ட கல்வியறிவின்படி வாழ்வதாலேயே, ஆன்மிகம் என்பது அவர்களது வாழ்வில் அதிதொலைவில் உள்ளது.
      கல்வியென்பது குழந்தைகளுக்கு திணிக்கப்பட்டதாக இல்லாமல், அறிந்துகொள்வதற்கான தாகத்தினை அதிகப்படுத்துவதாகவும், புத்திசாலித்தனம் குறைவுபடாமல் வளருமாறும் இருக்க வேண்டும்.
      உயிர்வாழ்வது மட்டும் நோக்கமாக இருந்தால் ஐம்புலன்கள் போதும். அதையும் கடந்த நிலைக்கு செல்லவேண்டுமானால், ஐம்புலன்கள் என்ற கருவிகள் உங்களுக்குப் போதாது.
      நாம் மட்டும் வாழ,நமக்கு நாமே செய்யும் செயல்களால் மட்டும் நம் வாழ்க்கை அழகாவதில்லை. நம்மைச் சூழ்ந்திருக்கும் அனைவரும் அவ்வாறு வாழ வேண்டும் என்று நினைக்கிற போது தான், அது அழகாகிறது.
      ஒரு காலத்தில் பணத்தை தேடுவீர்கள், ஒரு காலத்தில் சொந்த வீட்டைத் தேடுவீர்கள், ஒரு காலத்தில் அறிவைத் தேடுவீர்கள், தேடுகிற பொருட்கள் மாறுமே தவிர உங்கள் வாழ்க்கை மாறுவதில்லை. இத்தனையையும்தேடி வாழ்க்கையைவிட்டுவிடுகிறீர்கள்.இதை எப்படி அனுபவத்தில் உணர்கிறீர்கள்என்பதைப் பொறுத்தே வாழ்க்கையின் சாரம் இருக்கிறது.

எது வேண்டாம் என்பதை விட என்ன வேண்டும் என சிந்திப்போமா!



      ஆனந்தமான சூழ்நிலை உருவாக வேண்டுமானால் ஆனந்தமாக இருக்கிற மனிதர்களால் மட்டுமே முடியும். பதட்டமானவர்களால் ஆனந்தத்தை ஏற்படுத்த முடியாது. எனவே, எப்போதும் ஆனந்தமாக இருக்க பழகுங்கள்.
      வாழ்க்கையோடு விளையாடுவது, ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் மிகப்பெரிய அற்புதமாகும், ஆனால், வாழ்க்கை நம்மோடு விளையாடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
      உடலையும், மனதையும் மேல் நிலைக்குக் கொண்டு செல்வதுடன், அவற்றை புதிய பரிணாமத்திற்கு கொண்டு போய், அவற்றின் மூலம் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்று எண்ணிபாருங்கள்.
      எத்தகைய உலகில் வாழ விரும்புகிறீர்கள் என்று கேட்டால், அனைவரும் அமைதியான உலகில் வாழ விரும்புவதாகவே கூறுகின்றனர். அப்படியானால் அனைவருடைய கனவும் ஒன்றாகவே இருக்கிறது.
      வாழ்க்கையில் இறுக்கமில்லாமல் இயல்பாக செயல்படுகிற போதுதான் மனிதர்கள் பல மகத்தான கண்டுபிடிப்புகளை செய்கின்றனர்.
      எண்ணங்கள் குவியலாக கிடக்கும் போது, குழப்பங்கள் தான் மிஞ்சுகிறது. மனதுக்குள்ளே ஒரு வரிசையை, ஒழுங்கை, அழகை ஏற்படுத்த தியானம் உதவுகிறது.
      மனிதன் தனக்குள் இருக்கிற மிகப்பெரிய சக்தியை வெளிப்படுத்த வேண்டுமானால் அதற்கு ஒரே வழி இயல்பாக இருப்பது தான். இயல்பாக இருப்பது என்பதை, சோம்பலோடு இருப்பது என்று தவறாக பொருள் கொள்ளக்கூடாது. ஆனால், முயற்சிகளை மேற்கொண்ட பிறகும் சுமையோ, சோர்வோ தெரியாத ஒரு நிலைக்குப் பெயர் தான் இயல்பான வாழ்க்கை.
      வாழ்க்கையில் விலக்க வேண்டிய விஷயங்கள் குறித்து திரும்பத் திரும்ப சிந்தித்து பட்டியல் போடுகின்றனர். எது வேண்டாம் என்பதைச் சிந்திப்பதைவிட, என்ன வேண்டும் என்று எண்ணங்களைப் புகுத்துவதுதான் சரியான அணுகுமுறை.
      நதிகள் சங்கமித்திருக்கும் கடலின் நடுப்பகுதியும், தேங்கிப் போகிற குட்டையும் அமைதியாக காணப்படுகிறது. தியானம் என்பது மனிதனை, இயக்கங்கள் கடந்த ஒரு சமுத்திர நிலைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சியாகும். இயல்பான வாழ்க்கை அமைய, தியானம் மிகப்பெரிய சக்தியைக் கொடுக்கும்.
      உங்கள் வாழ்க்கையை நீங்களே தான் வடிவமைக்க வேண்டும், உங்களுடைய வாழ்வை நீங்கள் வடிவமைக்கிற முறையில் தான் உங்களைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கை, இந்தச் சமூகத்தின் வாழ்க்கை, இந்த தேசத்தின் வாழ்க்கை அனைத்துமே அடங்கி இருக்கிறது என்பதை அனைவரும் உணரவேண்டும்.
      விருப்பு, வெறுப்பு என்று சிலவற்றை வைத்துக் கொண்டிருக்கும் வரை வாழ்க்கை போராட்டமாகத்தான் இருக்கும் என்பதால், இவற்றை தவிர்த்து வாழ்க்கைக்கு தேவையான நல்ல செயல்களில் ஈடுபட வேண்டும்.
      தனக்குள் கடவுளை தேடி உணர்ந்தவர்கள் மற்றவர்களோடு சண்டையிடும் முட்டாள்தனத்தில் ஈடுபடமாட்டார்கள். 

Monday, June 20, 2011

நல்ல பெற்றோராக இருப்பது எப்படி? ஆனந்தம்


      உண்மையில்,  பெற்றோராக இருப்பதே ஒரு வேடிக்கையான விஷயம்தான். இதுவரை யாரும் இருந்ததைவிட, நான் ஒரு நல்ல பெற்றவராக அல்லது பெற்றவளாக இருக்க வேண்டும் என்றும் ஒவ்வொருவரும் முயற்சிக்கிறீர்கள். ஆனால், இதுவரை யாருக்குமே, குழந்தைகளை வளர்ப்பதில் எது சிறந்த வழி என்று தெரிந்திருக்கவில்லை. உங்களுக்கு 12 குழந்தைகள் இருந்தாலும் நீங்கள் இன்னும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறீர்கள். 11 குழந்தைகளை நன்றாக வளர்த்திருப்பீர்கள். ஆனால், அந்த 12வது உங்களுக்கு நிறைய வேலையை கொடுக்கலாம். எனவே உங்கள் வேலையை இன்னமும் சிறப்பாக செய்ய ஆசைப்படுகிறீர்கள். அப்படி சிறப்பாக நீங்கள் என்ன செய்யமுடியும்?
      அதற்கு முன் முக்கியமாக உங்களையே நீங்கள் ஒருசில விஷயங்களில் கவனித்து சரிசெய்து கொள்ள வேண்டும். அதற்கு போதுமான நேரம் செலவு செய்ய வேண்டும். நீங்கள் எப்படி  இருக்கிறீர்கள்? எப்படி உட்காருகிறீர்கள்? எப்படி நிற்கிறீர்கள்? எப்படி பேசுகிறீர்கள்? என்ன செய்கிறீர்கள்? என்ன செய்யவில்லை....              
      எல்லாவற்றையும் நன்கு கவனியுங்கள். ஏனெனில், குழந்தைகள் உங்களிடமிருந்து எல்லாவற்றையும் மிக வேகமாக கற்றுக்கொள்கிறார்கள். அதுமட்டுமல்ல, அவர்கள் நீங்கள் செய்வதை எல்லாம் மிகைப்படுத்தியும் செய்வார்கள். எனவே உங்களை முதலில் மாற்றிக்கொள்ளுங்கள். மகிழ்ச்சி, அன்பு, கவனிப்பு, அக்கறை, கட்டுப்பாடு கொண்ட ஒரு சூழ்நிலையை உங்களுக்கும், உங்கள் வீட்டு சூழ்நிலைக்கும் நீங்கள் ஏற்படுத்தினால் நிச்சயமாக குழந்தைகளும் வளர்ச்சி பெறுவார்கள். உங்கள் எல்லைகளுக்குட்பட்டு எவ்வளவு வாய்ப்புகளை உருவாக்கித் தரமுடியுமோ அவ்வளவு வாய்ப்புகளை அவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்க வேண்டும். ஆனால், அடக்கமான குழந்தையை வளர்க்கிறீர்களா? அல்லது அடங் காப்பிடாரியை வளர்க்கிறீர்களா என்பதும் மிகவும் முக்கியமானதுதான். உங்கள் மனைவி கர்ப்பமடைந்துவிட்டால், நீங்கள் உங்களையே மாற்றிக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம். ஏனெனில், இன்னொரு உயிர் இப்போது உங்கள் குடும்பத்திற்குள் வருகிறது. நீங்கள் தற்போது இருக்கும் வழி உங்களுக்கே பிடிக்காதபோது இன்னொரு உயிரும் அந்த வழியில் போகவேண்டாமல்லவா? எனவே நாம் செய்யக்கூடிய செயல்களில் விழிப்புணர்வுடன் இருப்பது மிகவும் அவசியம். அவர்களுக்கு எதைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதுபற்றியும் நான் சொல்கிறேன். அவர்கள் எதைப்பற்றியும் கேள்வி கேட்கும்படி நீங்கள் கற்றுக்கொடுக்க வேண்டும்.  ஆனால் அவர்களின் கேள்வி சந்தேக மனப்பான்மையில் இருக்கக்கூடாது. தெரிந்துகொள்ளும் மனப்பான்மையில் இருக்க வேண்டும். கேள்வி கேட்பது என்பது ஒரு நோயைப் போலவும் ஆகலாம். அல்லது ஒரு ஆரோக்கியமான செயலாகவும் முடியலாம்.
      "எல்லாமே மோசம்' என்று மக்கள் ஏற்கனவே சந்தேகத்துடன் இருப்பதால்தான் கேள்வி கேட்கிறார்கள். இது ஒரு நோய். ஆனால் ஒரு கேள்வியின் அடிப்படை நோக்கம், இன்னமும் சிறிது ஆழமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்பதாகத்தான் இருக்க வேண்டும். உங்கள் குழந்தைகள் தங்கள் மனதில் தோன்றும் எதைப்பற்றி வேண்டுமானாலும், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதையும் சேர்த்து கேள்வி கேட்கலாம் என்ற நிலையை கொண்டுவந்தால் அவர்கள் ஆரோக்கியமான  வழியில் கேள்விகேட்க ஆரம்பிப்பார்கள். நல்ல வழியில் அவர்களுடைய அறிவை உபயோகிப்பார்கள். நீங்கள் இப்படிசெய்வதால் அவன் ஒரு டாக்டராகிவிடுவான்  அல்லது இன்ஜினியர் ஆகிவிடுவான் என்று நினைத்துவிடக்கூடாது. ஆனால் அவனுடைய மூளை எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். எதிலும் விருப்பமுடனும், திறந்த மனதுடனும் இருக்குமாறு அவனை வளர்த்தால் அவன் தன்னுடைய வாழ்க்கையை எந்த அளவு முடியுமோ அந்த அளவு சிறப்பாக அமைத்துக் கொள்வான்.  வேறு யார்  போலவோ ஆகாவிட்டாலும் அவனால் எவ்வளவு முடியுமோ அதைச் செய்வான். ஆனால் இவையெல்லாம் அவன் தன் பாதையில் யாரை சந்திக்கிறான், எந்தெந்த சூழ்நிலைகளை பார்க்கிறான், ஆன்மிக சூழலை பார்க்கிறானா, போர் முனையைப் பார்க்கிறானா, இவை அனைத்தையும் பொறுத்தது. ஏனெனில் இவையெல்லாம் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் இல்லை அல்லவா? நீங்கள் உங்கள் குழந்தையை அன்பு, தியானம், திறந்த மனது போன்ற சூழ்நிலைகளுடன் வளர்த்தால் அவர்கள் பொதுவாகவே நன்றாகத்தான் வளர்வார்கள்.
      அவன் யாரையோ பார்த்து ஏதோ ஒரு சூழ்நிலையில் சிக்கி, தவறாகப் போகிறான் என்றால் அது வேறு விஷயம். ஆனால் அவன் உங்களைப் பார்த்து தவறான வழியில் சென்றுவிடக்கூடாது அல்லவா? நீங்கள் அவர்களுக்குள் பயத்தையோ பாரபட்சத்தையோ, வெறுப்பையோ கொண்டுவந்தால், அது நீங்கள் அவனுக்கு செய்யும் குற்றமாகும்.
      ஏனென்றால் இப்போது உங்களால் அவர்கள் பாதை தவறிப் போக முடியும். எந்தப் பெற்றோருமே இதைத் தன் குழந்தைக்கு செய்யக்கூடாது. ஆனாலும் இது பலவிதமாக நடைபெறத்தான் செய்கிறது.  நீங்கள் உங்கள் பயத்தையும் உங்களுடைய  "இது', "அது' போன்ற குறைகளை எல்லாம் அவர்களுக்குள் விதைக்கிறீர்கள். உங்களுடைய பலவீனத்தை அடுத்த தலைமுறைக்கு மாற்றுகிறீர்கள். இது உங்கள் வேலையினால் இருக்கலாம். நீங்கள் எங்கு வாழ்கிறீர்கள்? என்ன செய்கிறீர்கள் என்பதுபோல பல விஷயங்கள் இருக்கலாம்.
      எல்லா பெற்றோருமே தங்கள் குழந்தைகளை நன்றாக வளர்ப்பதற்கான திறமையைக் கொண்டிருப்பார்கள் என்று சொல்ல முடியாது. எனவே, குழந்தைகள் சிறப்பாக வளர நிறைய இடங்களை உருவாக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இம்மாதிரி இடங்களை உருவாக்க தொழில் ரீதியாக யாரையும் ஆசிரியர் போல நியமித்து செய்ய முடியாது. அவர்கள் இன்னொருவர் குழந்தைக்காக தன்னைக் கொடுக்க மாட்டார்கள். இதற்காக அர்ப்பணிப்பு உணர்வுள்ள தன்னார்வ தொண்டர்களை வேண்டுமானால் நியமிக்கலாம். இது ஒரு சவாலான வேலைதான். ஆனால் அடுத்த தலைமுறையின்மேல் அக்கறை கொண்டவர்கள் இதை செய்யத்தான் வேண்டும். அடுத்த தலைமுறையில் வளர்பவர்கள் உங்களையும் என்னையும் விட ஒருபடி மேலாக இருக்க வேண்டும். அவர்கள் அதிக ஆனந்தத்துடனும்,குறைந்த பயத்துடனும் குறைந்த துன்பத்துடனும், குறைந்த வெறுப்புடனும் இருக்கவேண்டும். இதற்கு நாம் ஏதாவது செய்தாக வேண்டும்.
      உங்களுக்கு இரண்டுகுழந்தைகள் என்றால், அவர்களை அடுத்த தலைமுறைக்கு நீங்கள் விட்டுச்செல்லும் நன்கொடையாக இருக்க வேண்டும். அடங்காப் பிடாரிகளாக இருக்கக்கூடாது. உங்களைவிட சிறிதளவாவது உயர்ந்த மனிதர்களை நீங்கள்  விட்டுச் செல்வதுதான், இந்த மனித சமுதாயத்திற்கு நீங்கள் செய்யக்கூடிய பெரிய பங்களிப்பாக இருக்கும்.

Friday, June 17, 2011

அதிர்ச்சி மரணம்? ஆனந்தம்


      மனிதனுக்கு ஆக்க வாழ்வுக்காக நமது முன்னோர்கள் அமைத்துக் கொடுத்திருக்கும் இன்றியமையாத தேவைகள் நான்கு 1. அறம் 2. பொருள் 3. இன்பம் 4. வீடு பேறு. அறவழியில் பொருளீட்டி அதன் மூலம் இன்பம் துய்த்தால், தானாகவே அறிவு தடையற்ற வளர்ச்சி பெற்று முழுமைப்பேறாகிய வீடுபேறு கிட்டும். எனவே மனிதன் செய்யும் தொழில் இந்த நான்கில் ஒன்றைக் குறி வைத்துச் செயல்புரியும்போது மற்ற மூன்றும் சிறிதும் கெடாதவாறு காத்து விழிப்பு நிலையில் ஆற்ற வேண்டும். இந்த முறையில் தான் மனித வாழ்வு கெடாமலும் சீர்குலையாமலும் இனிமை காக்கப்படும்.
      அறம் என்றால் உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். ஒழுக்கம், கடமை, ஈகையெனும் மூன்றுறுப்புக்கள் ஒன்றிணைந்த எந்தச் செயலும் அறமேயாகும். இல்ல‌றவாழ்வில் பொருளீட்டி வாழ்வது மனிதனுக்குள்ள இயல்பான ஆற்றல்தான். இதனை அறவ‌ழியில் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அறநெறி இயல்பாகவும் எளிதாகவும் அமைந்து விடும். அறவழியில் பொருளீட்டி வாழ்வை நடத்தி மிஞ்சிய பொருளைச் சேர்த்து வைப்பதும் மனித சமுதாயச் சூழ்நிலையில் ஒப்புக் கொள்ளப்பட்ட நீதியேயாகும்.
      மரணம் நெருங்கும்போது அறவழியில் ஈட்டிப் பொருள் சேர்த்து வைப்பவரிடம் அறிவில் ஒரு தெளிவு பிறக்கிறது. அவன் சேர்த்து வைத்திருக்கும் பொருள் தனக்குப் பின்னால் நல்ல வழியில் மனித சமுதாயத்திற்கும் பயன்பட வழி வகுத்து விடுகிறான். பொருள்பற்று என்ற தளையிலிருந்து தன்னைத்தானே விடுவித்துக் கொள்கிறான். அந்த அளவிற்கு அருள் பற்று மலர்ந்து விடுகிறது. மனம் இனிமையான அமைதியில் இணைகிறது. மரணம் நெருங்க நெருங்க அந்த இன்ப வெள்ளத்திலேயே மிதந்து கொண்டு இறைநிலையோடு கலந்து விடுகிறான். அறநெறி மறந்து பொருள் சேர்த்தவன் மரணம் நெருங்கும் போது அப்பொருளை எண்ணி வருந்துகிறான். இவ்வளவு பொருளையும் தவிர்க்க முடியாமல் விட்டு விட்டுப் போக வேண்டியிருக்கிறதே என்று மனம் கலக்கம் அடைகிறான். அறிவில் இருள் சூழ்ந்து கொள்கிறது. மரணம் நெருங்க நெருங்க நிமிடந்தோறும் அதிர்ச்சியோடு அச்சப்படுகிறான்.
      இந்த அச்சத்தின் அதிர்ச்சியோடு அமைதியற்ற மரணம் அடைகிறான். பொருள்பற்று என்ற இருளிலிருந்து அவனால் மீள முடியவில்லை. அந்தோபரிதாபம் இவன் சேர்த்து வைத்த பொருளோ அறம் தெரியாத குருடர்களிடமே சேருகிறது. சூது, குடி, விபசாரம் என்னும் மூன்று வழியில் இந்தப் பொருள்கள் அனைத்தும் சூரை விடப்படுகிறது. சூரை விடுபவர்களும் அவர்கள் புரியும் பாவச் செயல்களால் தீவினைப் பதிவுகளை ஏற்றுத் தலைமுறை தலைமுறையாக உடல், மனநோய்களில் சிக்கித் தவிக்கிறார்கள் எனவே அன்பர்களே அறவழியில் பொருளீட்டுங்கள். பொருள் செழிப்பு நிச்சயமாக உண்டாகும். மீதமுள்ள பொருளில் ஈட்டும் போதே பிறர் நலத்துக்காக ஒரு சதவீதம் ஒதுக்கிச் செலவு செய்து பழகிக் கொண்டு எஞ்சிய பொருளை நல்ல முறையில் பங்கிட்டுக் கொடுங்கள். எப்போதும் மனம் பளுவற்றதாகவும் இனிமையாகவும், அமைதியாகவும் இருக்கும். நிலையான வாழ்வு பெறலாம். நீங்கள் விட்டுச் செல்லும் பொருள்கள் பலருக்கும் நலமளிக்கும் வழியில் செலவாகும் அதன் பயன் இன்பம் இன்பம் இன்பம்.
---------------------------------யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி--------------------------------

Thursday, June 16, 2011

சோதனை ஆனந்தம்

       உலகையே சிரிக்க வைத்தவர் சார்லி சாப்ளின்! ஆனால் அவரது வாழ்க்கை சந்தோஷமாக இருந்ததே இல்லை. பிறந்ததில் இருந்தே துன்பங்கள், அவமானங்கள், தோல்விகள்! 1889-ல்…லண்டன் நகரில் சாப்ளின் பிறந்து ஓரிரு வருடங்களிலேயே பெற்றோரிடையே சண்டை வந்து விவாகரத்து அகிவிடவே, பேசத் தொடங்கும் முன்பே, தாயுடன் சேர்ந்து மேடையில் பாட வேண்டிய நிர்பந்தம். ஐந்து வயதுச் சிறுவனின் பாட்டுக்குக் கிடைத்த அமோக வரவேற்பு, ஏழு வயதிலேயே பறிபோனது. காரணம், அவரது தாயாரின் மனநிலை பாதிக்கப்பட்டதுதான்.
      குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக முடிதிருத்தும் நிலையம், கண்ணாடித் தொழிற்சாலை, மருத்துவமனை என எங்கெங்கோ வேலைபார்த்தவர் சில காலம் தந்தையுடன் சேர்ந்து மேடை நாடகங்களிலும் நடித்தார். ஆனால் தந்தை திடீரென இறந்துவிடவே, மீண்டும் தொய்வு! 1910ல்…நாடகக் குழுவினருடன் அமெரிக்கா சென்றவருக்கு குறும்படங்கலில் நல்ல பெயர் கிடைத்தது. அவரது முத்திரை நடிப்பான ‘டிராம்ப்’ (பேகி பேண்ட், தொப்பி, கைத்தடி, வளைந்த கால்கள்) பிரபலமானது. ‘தி கிட்’ படத்தில் தொடங்கிய வரவேற்பு ‘தி கிரேட் டிக்டேட்டர்’ வரை நீடித்தது. ஆனால், இந்த காலகட்டங்களில் குடும்ப வாழ்வு அவரை பாடாய்ப் படுத்தியது.
      1918-ல் நடந்த முதல் திருமணம் இரண்டு வருடம் மட்டுமே நீடித்தது. அதற்கு பின் நடந்த இரண்டு திருமணங்களும் கூட சாப்ளினுக்கு சோகத்தை மட்டுமே கொடுத்தன. 1920-ல் நான்காவது மனைவியாக ஓ ரெய்ல் அமைந்தபின் இல்லறத் தொல்லைகள் நின்றன. 1945-ம் ஆண்டு சாப்ளின் ஒரு கம்யூனிஸ்ட் தீவிரவாதி என அமெரிக்க அரசு குற்றம் சாட்டியது. இரண்டாவது மனைவி ஜோன் பெர்ரியும் சாப்ளின் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்திருந்தார். அவர் தரப்பு நியாயங்களை அமெரிக்க அரசு கேட்காததால், வேறு வழியின்றி, 1952-ல் கனத்த இதயத்துடன் சுவிட்சர்லாந்தில் அடைக்கலமானார் சாப்ளின்.
      1972-ல்… காலச் சக்கரம் சுழல, அதே அமெரிக்க அரசு, ‘உலகின் தலைச்சிறந்த நகைச்சுவை நடிகர்’ விருதுபெற சாப்ளினை அழைத்தது. பரிசினை ஏற்றுக் கொண்டாலும், அமெரிக்காவில் தங்க விருப்பமின்றி, மீண்டும் சுவிட்சர்லாந்து திரும்பினார். விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து நின்று, “வாழ்நாள் முழுவதும் போர்களமாக இருந்தாலும் எப்படி ஜெயித்தீர்கள்? அது என்ன ரகசியம்?” எனக் கேட்டார்கள்.
      சாப்ளின் சிரித்தார், “இந்த நிலை மாறிவிடும்” என்பதை நான் எப்போதும் மறந்ததில்லை. அது இன்பமாக இருந்தாலும் சரி, துன்பமாக இருந்தாலும் சரி… மாறிவிடும்! இதோ இந்த கணத்திலும் கூட! வறுமையில் பிறந்து, வாழ்வெல்லாம் போராடி, உலகையே தன் பெயரை உச்சரிக்க வைத்த அந்த நடிகனிற்கு, கலைஞனுக்கு ஏற்பட்ட சோதனை நம் வெற்றிக்கு நல்லசாவி.
------------------------------“இந்த நிலை மாறிவிடும்”--------------------------------------------

Wednesday, June 15, 2011

இன்றைய பெண் ஆனந்தம்


      திரு.சுகிசிவம் அவர்கள் இன்றைய பெண்களைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். இவர் கூறுவது பெண்களை இழிவுபடுத்துவதற்காகவோ அல்லது குறை கூறுவதற்காகவோ கிடையாது. பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே!!!
      வாரப் பத்திரிக்கை, மாதப் பத்திரிக்கை படிக்கிற பெண்கள் அதிகம். ஆனால் தினப்பத்திரிக்கை  படிக்கிற பெண்கள் எத்தனை பேர்? நாட்டு நடப்பு பற்றி எத்தனை பெண்கள் அக்கறை காட்டுகிறார்கள்? மிகவும் யோசிக்க வேண்டிய விஷயம்.
      தொலைக்காட்சிப் பெட்டியில் சினிமா பார்க்கும் போது குடும்பமே பார்க்கிறது. ஆனால் செய்திகள் தொடங்கியதும் பெண்கள் அடுப்படிக்குள் பாய்ந்து உணவை தயார் செய்வது ஏன்? செய்தி நேரம் வந்ததும் சினிமாவில் இடைவெளி மாதிரி அதை சாப்பாட்டுக்குப் பயன்படுத்த பல பெண்கள் விரும்புவது உண்மைதானே! இது சரிதானா? செய்தி நேரம் என்ன சினிமா இடைவெளியா? இப்படி இருந்தால் பெண்ணின் பொது அறிவு எப்படியிருக்கும்?
      பெண்களின் அழகுணர்ச்சிக்கான விலை இன்று மிகமிக அதிகம். காலக் கொலையோ அதைவிட அதிகம். எப்படி? நகங்களை வண்ணப்படுத்தி, பழைய வண்ணங்களை நீக்கப் புது வண்ணம் பூச நெயில் பாலிஷ் ரிமூவர், உதடுகளை உயரிப்பேற்ற உதட்டுச் சாயம் (லிப்ஸ்டிக்), கன்னங்களில் கவர்ச்சி கூட்ட ரூஜ், கண்ணிமைகளை பெரிதுபடுத்தி அழகைக் கூட்ட மஸ்காரா, அழகாய்க் காட்ட ஐ லைனர், கழுத்தை, முகத்தைக் கழுவிக் காட்ட கிளன்சிங் மில்க், மாஸ்க் பிளீச், தோலின் இயற்கை மணத்தை வாசனையில் புதைக்க பாடி ஸ்ப்ரே மற்றும் சென்ட் வகைகள். கொண்டை தொடங்கி கெண்டைக்கால் வரை ‘மாட்சிங்’ பார்த்து அலங்கரிக்கத் தேவையான விதவிதமான உபகரணங்கள். பொருட்ச்செலவும், நேரச் செலவும் இவ்வளவு தேவையா? யோசியுங்கள். அறிவார்ந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்துங்கள். அதற்காக மம்தா பானர்ஜியாகவும், மாயாவதியாகவும் மாறச் சொல்லவில்லை. கொஞ்சம் சிக்கனம்… தேவை இக்கனம்!!!
      இந்த பெண்மையின் நிலை நமது இந்தியப் பெண்ளுக்கு மட்டுமல்ல. எல்லா நாடுகளிலும் இந்த வியாதி இருக்கிறது. உதாரணமாக, அமெரிக்காவில் பல விஞ்ஞானிகள் பங்கேற்ற விருந்து ஒன்றினுக்கு உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் போயிருந்தார். அவர் மனைவி அவருடன் போக வேண்டியவர். போக முடியவில்லை. கடைசி நேரத்தில் உடம்பு சரியில்லை.
      விருந்து முடிந்து வீட்டுக்குத் திரும்பிய ஐன்ஸ்டீனிடம் அவர் மனைவி கேட்டார்…. விருந்து எப்படி நடந்தது? “நன்றாக இருந்தது?” என்று சுருக்கமாக கூறிவிட்டு அங்கு தாம் சந்தித்த விஞ்ஞானிகள் பற்றியும், அவர்களுடன் விவாதித்த அறிவு பூர்வமான விஷயங்கள் பற்றியும் ஆவலுடன் ஐன்ஸ்டீன் சொல்லத் தொடங்கினார். அவர் மனைவிக்குப் பிடிக்க வில்லை.
      ஐன்ஸ்டீன் மனைவி சற்றே கோபமாக, “நான் இந்த அறுவையைக் கேட்கவில்லை. அங்கு விருந்துக்கு வந்திருந்த பெண்கள் எந்த மாதிரி கவுன் அணிந்திருந்தார்கள் கவனித்தீர்களா?” என்று சீறினார். ஐன்ஸ்டீன் பொறுமையாக, “இதோ பார்… விருந்து மேஜைக்கு மேலே பெண்களின் முகம் மட்டும் தான் தெரிந்தது. அதனால் அவர்கள் அணிந்து வந்த ஆடை எப்படிப்பட்ட ஆடை என்று எனக்குத் தெரியாது. உனது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென்றால் நான் மேஜைக்கு கீழே குனிந்து பார்த்திருக்க வேண்டும். அது அவ்வளவு கவுரமாக இருந்திருக்காது” என்றார்.
      பெண்கள் வாழ்விற்கு எது தேவை என்பதை முழுமையாக புரிந்து கொண்டால் அவர்களது வாழ்க்கை வளமானதாகவும் இனிமையானதாகவும் ஆனந்தமாகவும் அமையும்!!!

Tuesday, June 14, 2011

ஆசை‍ - கோபம் ஆனந்தம்


      கோபத்தின் மனோதத்துவம் என்னவென்றால் நீ எதையாவது விரும்புகிறாய், நீ அதை பெறுவதற்கு யாரோ தடையாக இருக்கிறார்கள், நீ அதை பெறுவதை தடுக்கிறார்கள், ஒரு தடங்கலாக இருக்கிறார்கள். உனது சக்தி முழுமையும் ஒன்றை பெற விரும்புகிறது, யாரோ அந்த செயலை தடுக்கிறார்கள். நீ விரும்பியதை பெற முடியவில்லை. அந்த விரக்தியடைந்த சக்தி கோபமாக மாறுகிறது. உன்னுடைய ஆசை பூர்த்தியடையக் கூடிய சாத்தியக்கூறை அழித்த மனிதர் மேல் கோபம் வருகிறது. உன்னால் கோபத்தை தடுக்க முடியாது. ஏனெனில் கோபம் ஒரு தொடர் விளைவு, பின் விளைவு. ஆனால் அந்த பின் விளைவு நிகழாமல் இருக்க நீ ஏதாவது செய்யலாம்.
      வாழ்வில் ஒன்றை மட்டும் நினைவில் கொள். வாழ்வா சாவா என்ற கேள்வி வரும் அளவு எதையும் ஆழ்ந்து விருப்பப் படாதே. சிறிது விளையாட்டுத்தனமாகவும் இரு.
      விருப்பப் படாதே என்று நான் சொல்லவில்லை. – ஏனெனில் அந்த ஆவல் உன்னுள் அழுத்தப்பட்டுவிடும், விருப்பம் கொள், ஆனால் அதைப்பற்றி சிறிது விளையாட்டுத்தனத்தோடு இரு என்றுதான் சொல்கிறேன். கிடைத்தால் நல்லது, கிடைக்காவிட்டால் பரவாயில்லை, அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் . விளையாடுபவர் போல இருந்து பழக வேண்டும்.
      நாம் நமது ஆசைகளுடன் ஒன்று பட்டு விடுகிறோம். அது தடைபடும்போது அல்லது தடுக்கப்படும்போது நமது சக்தியே தீயாகி விடுகிறது. அது உன்னை எரிக்கிறது. அந்த நிலையில் கிட்டதட்ட மனம் தடுமாறிய நிலையில் நீ என்ன வேண்டுமானாலும் செய்வாய் – பழி வாங்குவதற்காக. உன்னுடைய வாழ்வு முழுவதும் தொடரக்கூடிய சங்கிலி தொடர் நிகழ்ச்சிகளை அது உருவாக்கும்.
      நீ கோபத்தை நிறுத்த முயற்சி செய்யக்கூடாது. நீ செய்யவே கூடாது. எந்த வகையிலாவது கோபம் கரைந்து போக வேண்டும். இல்லாவிடில் அது உன்னை எரித்துவிடும். உன்னை அழித்துவிடும். நான் சொல்வது என்னவென்றால் அதன் வேர்களுக்கு செல். ஏதோ ஆசை தடைப்பட்டு, நிறைவேறாமல் உள்ளது. அந்த விரக்தி தான் கோபத்தை உண்டாக்குகிறது. இதுதான் அதன் ஆணி வேராக இருக்கும்.
      கோபத்தை ஒருமுறை உன் இருப்பில் உரைத்து, கரைத்து விட்டால் பின் எல்லாமும் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிடும், கோபம் மறைந்து விடும். அப்படி அது மறைவது உனக்கு ஒரு புது ஆச்சரியமாக இருக்கும் ஏனெனில் கோபம் மறையும் போது அது கருணையும், அன்பும், நட்பும், ஆனந்தமும் நிறைந்த அளவற்ற ஆற்றலை விட்டு செல்லும். விருப்பப்பட்டது கிடைக்கதபோது கூட மகிழ்ச்சியாக, ஆனந்தமாக‌ இருப்பது எப்படி என்று தெரிந்து கொள்வீர்கள்.
..........................................................................ஓஷோ.....................................................................

மௌன‌ம் கொண்டட்டம் ஆனந்தம்


      அமைதியாய் உருவானோம் தாயின் கருவறையில். வயிற்றிலிருந்து வெளி வந்த கணமே ஆரம்பித்தோம் நம் சப்தத்தை. ஆஹா ! எத்தனை விதமான சப்தங்கள், ஆரவாரங்கள். தொடர்ந்து கொண்டேயிருக்கும் இதற்கு இடையில் சப்தங்களின் மூலமான ஒன்றை சிந்திக்க நேரம் காண்பதில்லை. அப்படியே விழைந்தாலும் சந்தர்ப்பங்கள் நம்மை விடுவதில்லை. காரணம் என்ன ? அமைதியை மற்றுமொரு கோணத்திலே பார்க்க முனைந்தால், மூலத்திலேயே என்றும் நிலைத்து நிற்க மனம் எத்திக்கும்.
      கொண்டாட்டம் என்றால் நிறைய பேசவது, ஆடுவது, பாடுவது இப்படி பழகி போன மனத்திற்கு அதன் உண்மயான நிலையென்ன என்பதை மறைக்கிறது. உண்மையான கொண்டாட்டத்தினை அமைதியில் பார்க்கமுடியும். பேரானந்த களிப்பிலே எப்போதுமே திளைத்து கொண்டிருக்கும் சித்தர் பெருமக்கள் அமைதியில்தான் இந்த நிலையை அடைந்தனர் என்பதற்கு எடுத்துக்காட்டுக்கள் எண்ணிலடங்கா !
      சாதரண வழக்கிலே, கொண்டாட்டம் என்றால் நிறைய ஆட்கள் தேவை. கொண்டாட இடம் தேவை (வாடகை வேறு தரவேண்டும்), நிறைய பொருட்கள் வேண்டும். அமைதி என்ற கொண்டாடத்திற்கு பிரபஞ்சமே இடமாக கிடைக்கும், வாடகை என்பதில்லை, தனியொருவரே போதும், இறைவன் மட்டும் இணைந்து கொள்வார். மனம் என்ற ஒன்று மட்டுமே போதும்.
      அமைதி கொண்டாட்டதிற்கு நிகராக எதையுமே நாம் ஒப்பிட முடியாது. உண்மையான ஆனந்தம், பேரானந்தம் இங்குதான் கிட்டும். மெளனம் என்ற ஒன்றைப் பற்றிய மகான்களின் சிந்தனையை பார்ப்போம்.
      யோகஸ்தய பிரதமம் வாக் நிரோத என்பதில் ஆதிசங்கர பெருமாகன் யோகத்தின் நுழைவாயில் மெளனம் என்பதை கூறிப்பிடுகிறார்.

   நாக்கு அசையாமல் இருந்தால் வாக்கு மெளனம்.
   உடம்பு அசையாமல் (சைகைகள் காட்டாமல்) இருந்தால் காஷ்ட மெளனம்.
   மனம் அசையாமல் (சிந்தையற்று நின்றால்) இருந்தால் மஹா மெளனம்.
   மெளனம் லேகநாஸ்தி–வீட்டில், வெளி தொடர்பில், உறவு முறையில்
   பிரச்சனை இல்லாமல் செய்வது மெளனம்.
   மெளனம் சர்வார்த்த சாதகம் – தர்ம, அர்த்த, காம, மோட்சம் – அறம், பொருள், இன்பம், வீடு என்ற செல்வங்களை அடைய சாதகமாக உள்ளது.

   வாய்ப் பேச்சை குறைத்தாலே வையகத்தில் பாதி சித்தி

      பேசுவதிலே ஒரு இன்பம் இருக்கின்றது. ஆனால் அதில் அளவும் முறையும் மீறும் போது வாக்கில் தெளிவையும், புத்தியில் கூர்மையையும் இழக்கச் செய்து வாழ்க்கைச் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. மெளனத்தினால் வாக்கில் தெளிவு ஏற்படுகிறது, புத்தி கூர்மை பெறுகிறது.அமைதி, மெளனம் என்பது மாபெரும் சேவையாகும்.
      இன்று பேசப்படும் (Pollutions: Air, Water, Sound, Environmental, Light, Marine, Thermal, Nuclear) மாசுபாடுகள் அனைத்தையும் விட மிக அழிவைத் தரக்கூடிய ஒன்று எண்ணம் மாசுபடுதல் (Thought Pollution / Mind Pollution). இவற்றைப் பற்றி எந்த ஒரு விஞ்ஞானியும் கவலைப் பட்டதில்லை, ஏதோ ஒரு சில அறிஞர்கள் பேசுகின்றனர். மெஞ்ஞானிகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் இதைப் பற்றிய ஆராய்ச்சி செய்து நமக்கு நல்வழி படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நாம் கடைபிடித்தால் நன்மை நமக்கே………
      மோனநிலையின் பெருமை யார் எவர்க்கு
      முன்படர்ந்து வாயாலே சொல்லக்கூடும்?
      மோனமே அறிவினது அடித்தளம் ஆம்;
      மிகவிரிவு! எல்லையில்லை! காலம் இல்லை!
      மோனத்தின் அறிவு தோய்ந்து பிறந்தால்,
      முன்வினையும் பின்வினையும் நீக்கக் கற்கும்;
      மோனநிலை மறவாது கடமை ஆற்ற,
      மென்மை, இன்பம், நிறைவு, வெற்றி அமைதியுண்டாம்.
               - வேதாத்திரி மகரிஷி.................................
      மகான்களின் முழுமையான கொண்டாட்டங்கள் அமைதியில்தான் மலர்ந்தது, நாமும் அவர்கள் வாழ்ந்த அந்த அனுபவங்களைக் கொண்டு, அமைதி கொண்டாட்டத்தினை கடைபிடிப்போம் வாழ்க்கையில் சிறந்து, அனைவரையும் மகிழ்விப்போம்.உங்கள் ஆடைகள் வெளுக்க, உடல் பளபளக்க பலவிதமான Soap உள்ளது, உங்கள் மனம் வெளுக்க மெளனம் உள்ளது.
      நீங்கள் பேசாத போது இறைவன் பேசிக் கொண்டிருக்கிறான்.
      இறுதியாக, Speech is Silver but Silence is Golden என்கிறது ஒரு ஆங்கில பழமொழி. உங்களுக்கு வேண்டியது வெள்ளியா ? தங்கமா ? முடிவு உங்களிடம் தான்.

Sunday, June 12, 2011

ஆசை-துன்பம் ஆனந்தம்


      கங்கையில் ஒரு வியாபாரி குளித்துக் கொண்டிருந்தான்.அப்போது அழகான கைத்தடி ஒன்று மிதந்து வந்தது. அதை எடுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தினான் அவன். அப்போது ஒரு நீர்ச்சுழலில் மாட்டிக் கொண்டான்.தப்பிக்கக் கடும் முயற்சி செய்தான்.ஒரு வழியாகப் போராடி உயிர் பிழைத்தான். ஆனால் அந்தக் கைத்தடி எங்கோ நழுவிப் போய் விட்டது.
      கரைக்கு வந்த அவன் அழகான கைத்தடியை இழந்து விட்டேனே என்று கதறினான். அங்கு இருந்த ஒரு துறவி, ''அய்யா, நீங்கள் குளிக்க வெறுங்கையுடன் வந்ததை பார்த்தேனே? இப்போது கைத்தடியை நழுவ விட்டதாகக் கூறுகிறீர்களே?'' என்று கேட்டார். வியாபாரி நடந்ததைக் கூறினான்.
      துறவி சொன்னார், ''அய்யா, உங்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு வருகிறது. கங்கையில் கைத்தடி மிதந்து வந்தது. இப்போதும் அது மிதந்து கொண்டு போகிறது.அப்படி இருக்கையில் அது உங்கள் கைத்தடி என்று எப்படிக் கூறுகிறீர்கள்? அந்தக் கைத்தடியை இரண்டு நிமிடங்கள் தங்கள் கையில் வைத்திருந்ததனால் அது உங்களுடையது என்று சொந்தம் கொண்டாட உரிமை பெற்று விட்டீர்களா?''
      ஆசையே துன்பத்திற்க்கு காரணம் என்று புத்தர் சொன்னது இது தானோ? அந்த கைத்தடியை, பற்றியதால் அவனே அவனுக்கு துன்பத்தை வரவழைத்துக் கொண்டான். இந்த சிந்தனை சாதாரண விசயமில்லை, ஆழ்ந்து யோசியுங்கள். பல துன்பங்கள் உங்களை விட்டு விலகும்.

Friday, June 10, 2011

இல்லறம்-துறவறம் ஆனந்தம்


      அரசன் ஒருவனுக்கு ஓர் ஐயம் எழுந்தது – ‘உலகைத் துறந்தவன் உயர்ந்தவனா? உலகியல் கடமைகளை ஒழுங்காகச் செய்யும் இல்லறத்தான் உயர்ந்தவனா?’ என்று. இதற்கு விடை தரும்படி துறவி ஒருவரிடம் அரசன் வேண்டினான். ‘அவரவர் நிலையில் இருவரும் உயர்ந்தவரே’ என்றார் துறவி. ‘இதை நிருபிக்க வேண்டும்’ என்றான் வேந்தன். ‘நிச்சயமாக! என்னோடு வாருங்கள்’ என்றார் துறவி.
      வேந்தனும் துறவியும் வேறொரு நாட்டில் நுழைந்தபோது, அங்கே சுயம்வரம் நடப்பதாக அறிந்தனர். சுயம்வர மண்டபத்தை இருவரும் அடைந்தனர். இளவரசி கையில் மணமாலையுடன் நின்றபடி, மண்டபத்தில் வீற்றிருந்த மன்னர்களைப் பார்த்தாள். ஒருவரிடமும் அவள் மனம் மயங்கவில்லை. வேடிக்கை பார்த்த இளம் துறவி ஒருவரின் பேரழகு அவளை ஈர்த்தது. ஓடிச்சென்று அவன் கழுத்தில் மாலையிட்டாள்.
      இளந்துறவியோ மாலையை வீசியெறிந்து விட்டு விரைவாக வெளியேறினான். மனம் நிறைந்த அவனையே மணாளனாக அடைவது என்ற முடிவுடன் இளவரசியும் பின் தொடர்ந்தாள். எந்த நிலையிலும் தன்னால் அவளை ஏற்க இயலாது என்று மறுத்துவிட்டு, அந்த இளந்துறவி நடந்தார். அழுத கண்ணீருடன் இளவரசி இதயம் வருந்த, அங்கேயே நின்றாள். அரசனும் துறவியும் அந்தக் காட்சியைக் கண்டனர். அவர்களது வழிப்பயணம் தொடர்ந்தது.
      அடர்ந்த காட்டில் நடந்த இருவரும் ஒரு மரத்தின் அடியில் வந்து நின்றனர். இருவருக்கும் கடுமையாகப் பசித்தது. இரவுக் குளிரில் உடல் நடுங்கியது. மரக்கிளையில் ஒரு குருவி தன் துணையுடனும், மூன்று குஞ்சுகளுடனும் கூடு கட்டி வாழ்ந்து வந்தது.
      வேந்தனும் துறவியும் கீழே வாடி நிற்பதை பார்த்த குருவி, பறந்து சென்று சுள்ளிகளைச் சுமந்து வந்து தீ வளர்த்து, முதலில் அவர்களது குளிரைப் போக்கியது. விருந்தினரின் பசியாற்ற விரும்பிய குருவி, ‘என் உடலை அவர்களுக்கு உணவாக்குகிறேன்’ என்று பெண் குருவியிடம் சொல்லிவிட்டு நெருப்பில் விழுந்தது. ஒரு சிறிய குருவியால் எப்படி இருவர் பசி தீரும் என்று சிந்தித்த பெண் குருவி, தன் கணவன் வழியைப் பின்பற்றித் தானும் தீயில் விழுந்தது. ‘நம் பெற்றோருடன், நாமும் வந்த விருந்தினர்க்கு உணவாவோம்’ என்று மூன்று குஞ்சுகளும் நெருப்பில் விழுந்து கரிந்தன.
      அரசனும் துறவியும் அந்த அன்பிற் சிறந்த பறவைகளின் பண்பைக் கண்டு வியந்தனர். ‘மன்னா, அவரவர் நிலையில் அவரவர்  உயர்ந்து நிற்க முடியும் என்பதை இப்போது உணர்ந்திருப்பாய். அழகான பெண்ணையும்,  பேரரசையும் துரும்பென உதறித் தள்ளிய அந்த இளந்துறவி எப்படி உயர்ந்தவனோ, அப்படித்தான் பிறருக்காகத் தம்மைத் தியாகம் செய்த இந்தப் பறவைகளின் இல்லறமும் உயர்ந்தது. ஏற்றுக் கொண்ட நெறியில் இருந்து எள்ளளவும் பிறழாமல் வாழ்வதுதான் முக்கியம்’ என்றார் துறவி

Saturday, June 4, 2011

நெருப்பு சுடும்-ஆனந்தம்

       நெருப்பு சுடும். இது தான் இயல்பு எனினும் நெருப்பு நமது வாழ்வில் தவிர்க்க முடியாத தேவைப் பொருளாக இருக்கிறது. முறையோடும் அளவோடும் இடத்திற்கும் தேவைக்கும் ஏற்ப நெருப்பை பயன்படுத்தி வாழ்வில் பயன்பெறுகிறோம். உணவு சமைக்கும் போது அடுப்பின் மீது உள்ள பாத்திரத்தைக் கையால் எடுத்தாலும், தொட்டாலும் சுட்டு விடுகிறது. அதற்கு என்ன செய்கிறோம் அதை அப்படியே விட்டு விடுகிறோமா? ஒரு கந்தைத் துணியைக் கையில் பிடித்துக் கொண்டு அடுப்பின் மீது உள்ள பாத்திரத்தை நகர்த்துகிறோம், எடுக்கிறோம், பயன்பெறுகிறோம்.
      இது போன்றே நாம் நமது வாழ்வில் கருத்து வேறுபாடு உடைய பலரோடு தொடர்பு கொள்ள வேண்டியுள்ளது. ஒவ்வொருவரும் தேவை, பழக்கம், சந்தர்ப்ப சூழ்நிலைகள், அறிவின் வளர்ச்சி என்ற நான்கு தவிர்க்க முடியாத நிர்ப்பந்த நிலைகளுக்கு உட்பட்டே வாழ்ந்து வருகின்றனர்.
      இதனால் ஒருவரோடு ஒருவர் கருத்து வேறுபாடு கொள்வது இயல்பு. தவிர்க்க முடியாதது. இக்கருத்து வேறுபாடுகளில் மனதைச் சிக்க வைத்துக் கொண்டு உணர்ச்சி வயப்படுத்துகிறோம். தவறு செய்கிறோம். வருந்துகிறோம். மேலும் மேலும் வாழ்வில் சிக்கல்களைப் பெருக்கிக் கொள்கிறோம். மனிதன் தனித்து வாழ்வது முடியாது. கூடாது. இயன்ற மட்டும் எல்லோருடனும் அளவோடும், முறையோடும் பழகி வாழ்வில் நலம் பெற்று வெற்றிகாண வேண்டும்.
      சூடுள்ள பாத்திரத்தைக் கந்தைக் துணி உதவி கொண்டோ, கொரடாவின் உதவி கொண்டோ அடுப்பிலிருந்து இறக்கிப் பயன் காண்பது போல, கருத்து வேறுபாடு உடையவர்களோடு மனநிலையுணர்ந்து, அன்பு காட்டல், பொறுமை கொள்ளுதல், கடமையுணர்ந்து ஆற்றல் எனும் மூன்றிணைப்புத்திறன் கொண்டு பழகி வாழ்வில் வெற்றியும், மகிழ்ச்சியும், அமைதியும் காண வேண்டும். இந்த முறையில் விழிப்போடு வாழ்வை நடத்தும்போது வெறுப்புணர்ச்சி என்ற தீமை அணுகாது. சினமும், கவலையும் எழாது. வளராது. வாழ்வில் நாளுக்கு நாள் அன்பும், இன்பமும், அமைதியும் ஓங்கும்.
      இந்த விளக்கத்தை மனதில் நன்றாகப் பதிய வைத்துக் கொண்டு கணவன்மனைவி, பெற்றோர், மக்கள், உடன்பிறந்தோர், நண்பர்கள் என்ற எல்லா உறவுகளிலும் பயன்படுத்தி முதலில் வெற்றி பெறுங்கள். இதன் விளைவாக வெறி உலக மக்களிடம் கொள்ளும் தொடர்பிலும் உங்கள் வாழ்வின் மற்றெல்லாப் பகுதிகளிலும் வெற்றி ஒளி வீசும். போதனை மட்டும் போதாது. சாதனை செய்க.

Thursday, June 2, 2011

கட‍-உள் ஆனந்தம்


      ஒருவன் ஞானியிடம் சென்று,  கடவுள் எல்லா இடத்திலும் இருப்பது  உண்மை எனில் ஏன் காண முடிவதில்லை என்று கேட்டான்.

ஞானி : (கொஞ்சம் உப்பை எடுத்து) "உப்பு தெரிகிறதா"

அவன்: "தெரிகிறது"

ஞானி : (பிறகு அதை தண்ணீரில் கரைத்து) "இப்போது உப்பு தெரிகிறதா"

அவன்: "இல்லை"

ஞானி : உப்பு இல்லையா, அல்லது உன்னால் காணமுடியவில்லையா,  நீரை அருந்திப்பார்.

அவன்: (நீரை அருந்திவிட்டு) உப்பு இருக்கிறது, அதனை என்னால் உணரமுடிகிறது, ஆனால் உப்பு கரைந்துவிட்டதனால் என்னால் பார்க்க முடியவில்லை.

அப்போது ஞானி கூறினார்  "அது போலதான் கடவுளும்". காண முடியல்லை என்பதால் இல்லை என்று பொருள் கொள்ளக்கூடாது. காண வேண்டி அலையாதே, உணர்ந்து கொள், கட-உள் என்றார்.

தோல்வி ஆனந்தம்


      ஒரு காரியத்தைச் சாதிக்க முற்பட்டு நீங்கள் தோல்வியடையும் ஒவ்வொரு முறையும் வெற்றிப்பாதையில் அடியெடுத்து வைக்கிறீர்கள் என்பதே உண்மை! நீங்கள் தடுமாறியபடி அடியெடுத்து வைத்திருக்கலாம். வெற்றி என்பது அநேகமாக முன்னோக்கித் தடுமாறி… முன்னோக்கி விழுந்து… விழும் போதெல்லாம் மீண்டும் எழுந்து கொள்வதைப் பொறுத்ததே!!! தோல்வி தவிர்க்க முடியாதது… அவசியமானது… உபயோகமானது… வெற்றியின் ஓர் அங்கமாக உள்ளது.
      வெற்றியிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ளக்கூடிய பாடத்தைக் காட்டிலும் தோல்வியிலிருந்து கற்றுக் கொள்ளக்கூடிய பாடம் அதிகம். ஏனெனில் என்னென்ன செய்யக்கூடாது என்பதை தோல்வி உங்கள் மனத்தில் அழுத்தமாகப் பதித்து விடுகிறது. மறக்க முடியாதபடி பதித்து விடுகிறது. முதுகில் தட்டிக் கொடுக்கப்பட்டால் விரைவில் மறந்து போகும். கன்னத்தில் விழுந்த குத்து சீக்கிரத்தில் மறந்து போகாது. தோல்வியானது உங்களை வெற்றிக்குத் தயார்ப்படுத்துகிறது. இடுக்கண்களை வெல்வதற்குத் தேவையான பலத்தைக் கொடுக்கிறது. நீங்கள் வெற்றிகரமாகத் தோற்கக் கற்றுக் கொள்ள வேண்டும்! தோற்பதன் மூலம்தான் வெற்றி பெறுவது எப்படி என்று கற்றுக் கொள்ள இயலும். தோல்வி கற்றுத்தரும் விலை மதிப்பிட முடியாத பாடங்களைப் படித்துக் கொள்வது முக்கியமானது.
      எது செல்லுபடியாகாது என்று தோல்வி உங்களுக்குச் சொல்லித் தரும். போதுமான முறை தோல்வியடைந்தீர்களானால், எது எதெல்லாம் செல்லுபடியாகதோ அவை அனைத்தையும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
      தோல்வியிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான பாடம் தோல்வியைச் சரியான முறையில் சந்திக்க உதவக்கூடிய உணர்ச்சிப் பக்குவம்தான்! தோல்வியை எப்படி ஏற்றுக் கொள்வது என்று தோல்வியே உங்களுக்குக் கற்றுத் தரும்!
      எதிரியின் குத்துக்கு இலக்காகாத அடியே வாங்காத குத்துச் சண்டை வீரர் யாரையாவது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
      கால்பந்து விளையாட்டில் ஒரு முறை கூடக் கோட்டைவிடாத கோல்கீப்பர் இருக்க முடியுமா?
      சந்தித்த ஒவ்வொருவரிடமும் வெற்றிகரமாக விற்பனை செய்த விற்பனையாளர் இருக்க முடியுமா?
      ஒவ்வொருமுறையும் நீங்கள் வெற்றியடைய வேண்டும் என்று கட்டாயமில்லை… கிட்டத்தட்ட எல்லா முயற்சிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்பதும் அவசியமில்லை.. போதிய முறை வெற்றியடைந்தாலே போதும். நீங்கள் விரும்பிய எதையும் அடைந்துவிடலாம்!
      “நீங்கள் தோல்வியின் மூலம் வெற்றி பெற முடியும்”.
      “சில முறையேனும் தோற்காமல் பெரிய வெற்றியை அடைவது என்பது இயலவே இயலாது”.
                     ஒன்றி புள்ளியாய் ஒடுங்கி நீ இரு,
                     அன்றி விரிந்திடில் ஆராய்ச்சியோடிரு,
                     நின்றிடு அகண்டாகார நிலையினில்
                     வென்றிடுவாய் புலன் ஐந்தையும் வெற்றியே.
         ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍            ---------------தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி---------------

Wednesday, June 1, 2011

சோம்பல் ஆனந்தம்


      கேரி பிளேயர் என்ற கோல்ஃப் விளையாட்டு வீரர் புகழ் பெற்றிருந்த காலக்கட்டத்தில், சமகாலத்தில் எந்த வீரரையும் விட சர்வதேச அளவில் வெற்றிகளைக் குவித்தவர். அவருடைய விளையாட்டைப் பார்கிற யாரும், மறவாமல் அவரிடம் சொல்லும் வாக்கியம், ‘எனக்கு மட்டும் உங்களைப் போல சுலபமாக அடிக்க வருமானால்…. அதற்கு விலையாக எதை வேண்டுமானாலும் கொடுப்பேன்’. கேரி பிளேயர் இதைக் கேட்டு புன்னகைப்பார்.
      ஒரு நாள் கேரி, மிகக்கடுமையான போட்டியில் விளையாடிவிட்டு வந்தார். அதைப் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர், மேற்சொன்ன வாசகத்தை வழக்கம் போல சொன்னார். சட்டென்று வந்த கோபத்தில் கேரி சொன்னார், “இல்லை, உங்களால் முடியாது. என்னைப் போல ‘சுலபமாக’ அடிக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா?” ஒவ்வொரு நாளும் விடியற்காலை 5 மணிக்கெல்லாம் எழுந்து, கோல்ஃப் மைதானத்துக்குச் செல்ல வேண்டும். ஒரு நாளைக்கு ஓராயிரம் முறையாவது அடித்துப் பழக வேண்டும். உங்களது கைகளில் இருந்து இரத்தம் வரும். விளையாட்டு ஓய்வு அறைக்குச் சென்று இரத்தத்தைக் கழுவி விட்டு, ஒரு பாண்டேஜ் சுற்றிக் கொண்டு மறுபடியும் விளையாட்டுத் திடலுக்கு வந்து, தொடர்ந்து அடிக்க வேண்டும். இப்படி அடித்தால்தான் உங்களால் என்னைப் போலச் சுலபமாக அடிக்கமுடியும் என்றார்.
      கோல்ஃப் மட்டுமல்ல,  நம்மைத் தடுக்கும் எதையும் மீற வேண்டுமானால் வெற்றி பெற வேண்டுமானால், உழைக்கத் தயாராக இருக்க வேண்டும். அதிலும் சோம்பல் என்பது யாருடைய வாழ்க்கையில் புகுந்தாலும், அதன்பின் தோல்வியும், பிரச்சனைகளும் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும். இதை உடைத்தெறிவது வாழ்க்கையை மீட்டு எடுக்கக்கூடிய அளவுக்கு மிக முக்கியமான காரியம்.
      எதையாவது மிகவும் மதித்தால், அது நமக்குக் கைவரப்பட்டால், பல நன்மைகளும் (நல்ல‌ வாழ்க்கை, நல்ல எதிர்காலம், மனத்திருப்தி, ஆனந்தம்)இதை விட மதிப்புக்கு உரியது என்ன இருக்க முடியும்? அதனால்  அது கிடைக்கப் பெறுவதற்கு பெரு முயற்சி எடுப்போம். இவை நமக்குக் கிடைக்க வேண்டுமானால், சோம்பலை ஒழித்துக் கட்டுவது மிக முக்கியமானது. ஆகவே, பெரு முயற்சி எடுத்து சோம்பல் விலங்கை உடைத்து வெளியே வருவோம். ஆனந்தத்தை ருசிப்போம்..

விமர்சனம் ஆனந்தம்


      பட்டினத்தார் எத்தனை பெரிய துறவி? கோடிக்கணக்கான சொத்தை அப்படியே விட்டுவிட்டுக் கோவணத்துடன் வெளியேறிய கடுந்துறவி. சோற்றாசை கூட இல்லாத சந்யாஸி. கையில் ஓடு வைத்திருந்த பத்திரிகிரியாரைத் சொத்து வைத்திருக்கும் குடும்பஸ்தன் என்று கிண்டலடித்த அப்பழுக்கற்ற துறவி. அவரையே உலகம் என்ன பாடுபடுத்தியது தெரியுமா?
      நடந்த களைப்பால் வயலில் படுத்திருந்தார் பட்டினத்தார். அறுவடை நடந்திருந்த வயல் அது. குச்சி குச்சியாய்ப் பூமியில் இருந்து கிளம்பி அறுபடாதிருந்த வைக்கோல் அவர் உடம்பில் குத்திக் கொண்டிருந்தது. அதைச் சட்டை செய்யாமல் (சட்டை இல்லாமல்) படுத்துக் கிடந்தார். இருக்கும் போதே இறந்து போன மாதிரி இருந்தார்.
      அந்த வழியாகப் போன இரண்டு பெண்கள் வரப்பு வழியாக நடந்து போக முடியாதபடி பட்டினத்தார் வரப்பு மீது தலைவைத்துப் படுத்திருந்தார். ஒரு பெண்மணி, “யாரோ மகானா!” என்று அவரை வணங்கி வரப்பிலிருந்து இறங்கி நடந்தார். மற்றொரு பெண்மணியோ, “ஆமாம்… ஆமாம்… இவரு பெரிய சாமியாராக்கும்… தலையணை வைச்சுத் தூங்கறான் பாரு… ஆசை பிடிச்சவன்” என்று கடுஞ்சொல் வீசினார். அவர்கள் அங்கிருந்து போனதும் எழுந்து உட்கார்ந்த பட்டினத்தார், “ஆஹா… நமக்கு இந்த அறிவு இது நாள் வரை இல்லையே” என்று வருந்தி வரப்பிலிருந்து தலையைக் கீழே வைத்துப் படுத்தார்.
      சற்று நேரத்தில் அந்த இரண்டு பெண்களும் அதே வழியாகத் திரும்பி வந்தனர். வரப்பிலிருந்து தலையை இறக்கிக் கீழே வைத்திருந்த பட்டினத்தாரைப் பார்த்து முதல் பெண் பரிதாபப்பட்டு, “பார்த்தாயா… நீ சொன்னதைக் கேட்டு உடனே கீழே இறங்கிப் படுத்துட்டாரூ… இப்பவாவது ஒத்துக்கோ… இவரு மகான்தானே…! என்றார். அந்த பெண்மணியோ, தனக்கே உரித்த பாணியில் “அடி போடி… இவனெல்லாம் ஒரு சாமியாரா? தன்னைப் பத்தி யார் யாரு என்ன என்ன பேசுறாங்கன்னு ஒட்டுக் கேட்கிறான்… அதைப் பத்திக் கவலைப்படறான். இவனெல்லாம் ஒரு சாமியாரா?” என்று ஒரு வெட்டு வெட்டினாள். பட்டினத்தாருக்குத் தலை சுற்றியது.
      எப்படி இருந்தாலும் உலகம் நம்மை விமர்சிக்கும். இது பேருண்மை. தரமானவர்களின் தரமான விமர்சனத்தை மதிக்க வேண்டும். விமர்சிக்க வேண்டும் என்கிற வெறியுடன் விமர்சிக்கிறவர்களின் விமர்சனத்தைப் புறக்கணியுங்கள்!!!