Showing posts with label பொருள். Show all posts
Showing posts with label பொருள். Show all posts

Monday, July 18, 2011

அன்பினால் வியாபாரம் ஆனந்தம்

      அனைவரிடமும் அன்பாக இருக்க வேண்டும், நேசம் செலுத்தி அவர்களால் விரும்பப்படுபவராக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறோம். ஆனாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களால் அவ்வாறு இருக்க முடிவதில்லை. இந்த அன்பு நிலையை அடைவதற்கு, மற்றொருவரின் உதவி தேவையில்லை.
      ஆனால், அன்பு என்பது மற்றொரு நபரின் தூண்டுகோல் இருந்தால் மட்டுமே வெளிப்படும் என்ற மாயையான நிலைக்கு பலர் தள்ளப்பட்டுள்ளார்கள். அன்பு என்பதை தனிமையில் இருக்கும்போது நமக்கு நாமே கூட செலுத்திக் கொள்ளலாம். பிறர் மீது, அன்பு செலுத்த விரும்புபவர்கள், அதற்கான சூழலை உருவாக்கிக் கொண்டாலே போதும்.
      தற்போது மற்றவர்களை எப்படி பயன்படுத்துவது என்பதின் இலக்கணமாகத்தான் அன்பு கருதப்படுகிறது. ஒருவர் யார் மீது அன்பு செலுத்துகிறாரோ, அவர் இவரது விருப்பத்திற்கேற்ப நடந்து கொள்பவராக இருக்க வேண்டும் என்ற வரைமுறையும் வகுக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் தங்களுக்கு பிடிக்காத கொள்கை உடையவர்களை விரும்புவதில்லை. இத்தகைய செயல் வியாபாரமாக கருதப்படுமே தவிர நிச்சயமாக அன்பாக இருக்காது.
      ஒருவருக்கு பொருளோ, இன்பமோ தேவைப்படும் நேரத்தில் அதனை அடைவதற்காக சம்மந்தப்பட்ட நபரிடம் அன்பு செலுத்தக்கூடாது. உண்மையான அன்புடன் இருந்தால் விரும்பும் அனைத்தும் எளிதாக கிடைக்கும் என்ற மனப்பக்குவம் அனைவருக்கும் வர வேண்டும். இந்த மாதிரியான அன்பு இருந்தால் வாழ்க்கை முழுதும் ஆனந்தம் நிறைந்திருக்கும்.

Friday, June 17, 2011

அதிர்ச்சி மரணம்? ஆனந்தம்


      மனிதனுக்கு ஆக்க வாழ்வுக்காக நமது முன்னோர்கள் அமைத்துக் கொடுத்திருக்கும் இன்றியமையாத தேவைகள் நான்கு 1. அறம் 2. பொருள் 3. இன்பம் 4. வீடு பேறு. அறவழியில் பொருளீட்டி அதன் மூலம் இன்பம் துய்த்தால், தானாகவே அறிவு தடையற்ற வளர்ச்சி பெற்று முழுமைப்பேறாகிய வீடுபேறு கிட்டும். எனவே மனிதன் செய்யும் தொழில் இந்த நான்கில் ஒன்றைக் குறி வைத்துச் செயல்புரியும்போது மற்ற மூன்றும் சிறிதும் கெடாதவாறு காத்து விழிப்பு நிலையில் ஆற்ற வேண்டும். இந்த முறையில் தான் மனித வாழ்வு கெடாமலும் சீர்குலையாமலும் இனிமை காக்கப்படும்.
      அறம் என்றால் உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். ஒழுக்கம், கடமை, ஈகையெனும் மூன்றுறுப்புக்கள் ஒன்றிணைந்த எந்தச் செயலும் அறமேயாகும். இல்ல‌றவாழ்வில் பொருளீட்டி வாழ்வது மனிதனுக்குள்ள இயல்பான ஆற்றல்தான். இதனை அறவ‌ழியில் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அறநெறி இயல்பாகவும் எளிதாகவும் அமைந்து விடும். அறவழியில் பொருளீட்டி வாழ்வை நடத்தி மிஞ்சிய பொருளைச் சேர்த்து வைப்பதும் மனித சமுதாயச் சூழ்நிலையில் ஒப்புக் கொள்ளப்பட்ட நீதியேயாகும்.
      மரணம் நெருங்கும்போது அறவழியில் ஈட்டிப் பொருள் சேர்த்து வைப்பவரிடம் அறிவில் ஒரு தெளிவு பிறக்கிறது. அவன் சேர்த்து வைத்திருக்கும் பொருள் தனக்குப் பின்னால் நல்ல வழியில் மனித சமுதாயத்திற்கும் பயன்பட வழி வகுத்து விடுகிறான். பொருள்பற்று என்ற தளையிலிருந்து தன்னைத்தானே விடுவித்துக் கொள்கிறான். அந்த அளவிற்கு அருள் பற்று மலர்ந்து விடுகிறது. மனம் இனிமையான அமைதியில் இணைகிறது. மரணம் நெருங்க நெருங்க அந்த இன்ப வெள்ளத்திலேயே மிதந்து கொண்டு இறைநிலையோடு கலந்து விடுகிறான். அறநெறி மறந்து பொருள் சேர்த்தவன் மரணம் நெருங்கும் போது அப்பொருளை எண்ணி வருந்துகிறான். இவ்வளவு பொருளையும் தவிர்க்க முடியாமல் விட்டு விட்டுப் போக வேண்டியிருக்கிறதே என்று மனம் கலக்கம் அடைகிறான். அறிவில் இருள் சூழ்ந்து கொள்கிறது. மரணம் நெருங்க நெருங்க நிமிடந்தோறும் அதிர்ச்சியோடு அச்சப்படுகிறான்.
      இந்த அச்சத்தின் அதிர்ச்சியோடு அமைதியற்ற மரணம் அடைகிறான். பொருள்பற்று என்ற இருளிலிருந்து அவனால் மீள முடியவில்லை. அந்தோபரிதாபம் இவன் சேர்த்து வைத்த பொருளோ அறம் தெரியாத குருடர்களிடமே சேருகிறது. சூது, குடி, விபசாரம் என்னும் மூன்று வழியில் இந்தப் பொருள்கள் அனைத்தும் சூரை விடப்படுகிறது. சூரை விடுபவர்களும் அவர்கள் புரியும் பாவச் செயல்களால் தீவினைப் பதிவுகளை ஏற்றுத் தலைமுறை தலைமுறையாக உடல், மனநோய்களில் சிக்கித் தவிக்கிறார்கள் எனவே அன்பர்களே அறவழியில் பொருளீட்டுங்கள். பொருள் செழிப்பு நிச்சயமாக உண்டாகும். மீதமுள்ள பொருளில் ஈட்டும் போதே பிறர் நலத்துக்காக ஒரு சதவீதம் ஒதுக்கிச் செலவு செய்து பழகிக் கொண்டு எஞ்சிய பொருளை நல்ல முறையில் பங்கிட்டுக் கொடுங்கள். எப்போதும் மனம் பளுவற்றதாகவும் இனிமையாகவும், அமைதியாகவும் இருக்கும். நிலையான வாழ்வு பெறலாம். நீங்கள் விட்டுச் செல்லும் பொருள்கள் பலருக்கும் நலமளிக்கும் வழியில் செலவாகும் அதன் பயன் இன்பம் இன்பம் இன்பம்.
---------------------------------யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி--------------------------------