Showing posts with label கோபம். Show all posts
Showing posts with label கோபம். Show all posts

Monday, June 17, 2013

கோபப்படுங்கள் ஆனந்தம்



      காற்றுக்குமிழி ஊதி விளையாடியிருக்கிறீர்களா? அந்தக் குமிழிக்கு உள்ளே இருப்பதும் கார்றுதான், வெளியே இருப்பதும் காற்றுதான். ஆனாலும் அந்த குமிழிக்கென்று ஒரு தனித்தன்மை உண்டு. 
      அதே போல் மனிதனுக்கு உள்ளே என்ன இருக்கிறதோ அதேதான் மனிதனுக்கு வெளியேயும் இருக்கிறது. ஆனாலும் இடையில் ஒரு தந்திரமான ஒரு தடுப்பு வேலி இருக்கிறது. அது எவ்வளவு தந்தைரமானது என்பதை உங்களால் உணரமுடியாது. எப்படிப் பார்த்தாலும் அப்படி ஒருவேலி இல்லாதது போல் தான் தோன்றும். ஆனாலும் வேலி இருக்கிறது. அதுவும் ஒவ்வொரு மனிதரிலும் ஒவ்வொரு வகையான வேலி இருக்கிறது. இந்த வேலியை உடைத்துக்கரைவது தான் ஆன்மீகம். 
      அதைச் செய்ய பல விளையாட்டுக்கள் இருக்கின்றன. ஆனால் எந்த விளையாட்டு விளையாடினாலும் அதை முழுமையாக விளையாட வேண்டும். அரை மனதுடன் விளையாடுவது தான் உங்கள் பிரச்சனை. ஒரு ஆட்டத்தையாவது நூறு சதவிகிதம் முழுமையாக ஆடினால், ஒரு வினாடியில் உங்கள் இருப்பின் கட்டுப்பாடுகளைக் கடந்து, அந்த இடத்தில் இருக்கமுடியும். மிக விரைவில் நினைத்த இடத்தை சென்றடைவீர்கள். " 
      உங்களுக்கு தியானம் தெரியவில்லையா? கவலைப்படாதீர்கள், உங்களுக்கு அமைதி தெரியவில்லையா? கவலைப்படாதீர்கள், உங்களால் அன்பு செலுத்த முடியவில்லையா? தெரியவில்லையா கவலைப்படாதீர்கள், ஆனால் கோபப்படமுடிகிறதா? சரி வெறுமனே கோபப்படுங்கள். தொடர்ந்து 24மணி நேரமும் மிகத்தீவிரமான் கோபத்துடன் இருங்கள். இப்படி இருந்தால் நீங்கள் ஞானம் பெற்று விடுவீர்கள். நீங்கள் செய்ய வேன்டியது இதுதான் நீங்கள் எதைச் செய்கிறீர்களோ, அதில் முழுமையாக 100 சதவிகித தீவிரத்துடன் இருங்கள்! போதும், அதுவே உங்களை ஞானத்திற்க்கு அழைத்துச்செல்லும்.
      வாழ்க வளமுடன்!

Sunday, January 8, 2012

புத்தர் கூறிய கதை-ஆனந்தம்


      ஒரு முறை புத்தருடைய சீடர்களில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. அவர்களுடைய அறியாமையை விலக்கி, அஹிம்சா வழியை போதிக்க எண்ணிய புத்தபிரான் அவர்களுக்கு கீழ் கண்ட கதையைக் கூறினார்.
      முன்னொரு காலத்தில் பனாரஸ் என்ற ( வாரணாசி) பகுதியில் கௌசலா என்ற பகுதியை திர்கதி என்ற மன்னன் ஆண்டு வந்தான். ஆனால் பக்கத்து நாட்டு அரசனான பிரும்மதத்தா என்ற மன்னன் எல்லா நாடுகளின் மீதும் படையெடுத்தபடி கௌசலா நாட்டையும் கைப்பற்றிய பின் அந்த அரசனையும், அரசியையும் கொன்று விட்டால் பிறகு வேறு எவரும் தலை தூக்க முடியாது என எண்ணியதால் அவர்களைத் தேடத் துவங்கினான். ஆனால் அதற்கு முன்னரே அவர்கள் தப்பி ஓடி மாறு வேடத்தில் தங்கி இருந்து தமது நண்பனான ஒரு குயவன் வீட்டில் தங்கி இருந்தனர். அவர்கள் அங்கு எந்தவிதமான பிரச்சனையும் இன்றி வாழ்ந்து கொண்டு இருந்த பொழுது ஒரு குழந்தையும் பிறந்து பெரியவனாகியது. ஆனாலும் பிரும்மதத்தா அவர்களை கொன்று விட வேண்டும் என்ற கவலையில் அவர்களை தேடிக் கொண்டு இருந்தான்.
      ஒரு நாள் திர்கதியின் மகன் திர்காயு வெளியில் சென்று இருந்த பொழுது மாறு வேடத்தில் இருந்த மன்னனை அடையாளம் கண்டு கொண்ட முடி வெட்டுபவன் காசுக்கு ஆசைப்பட்டு அவர்களை அரசனிடம் காட்டிக் கொடுத்துவிட அவர்களை கைது செய்த அரசன் அவர்களை மக்கள் முன் சிரச்சேதம் செய்து கொல்ல ஏற்பாடு செய்தான். அந்த கொடுமை நடக்க இருந்த இடத்தில் கூடி இருந்த மக்கள் மத்தியில் திர்காயுவும் இருந்தான். மரணம் அடைய இருந்த திர்கதியோ எங்கே தன்னுடைய மகன் கோபப்பட்டு கூட்டத்தில் இருந்து வந்து சண்டையிடத் துவங்கி விடுவானோ, அப்படி வந்தால் அவனையும் அல்லவா மன்னன் கொண்று விடுவான் என பயந்து, உரத்த குரலில் கூவினான் ‘ மகனே, நீ நீண்ட தூரம் பார்க்காதே, குறைந்த தூரத்தையும் பார்க்காதே, வெறுப்பை வெறுப்பினால் அழிக்க முடியாது, அஹிம்சையே சிறந்த வழி’ அதைக் கேட்ட மன்னன் அதன் அர்த்தம் தெரியாமல் குழம்பினான். ஆனால் அவன் புரிந்து கொண்டான் கூட்டத்தில் திர்கதியின் மகனும் உள்ளான். ஆகவே திர்கதியையும், அவன் மனைவியையும் கொன்ற பின் திர்காயுவைத் தேடினான், அவன் கிடைக்கவில்லை. திர்காயுவின் மனதில் ஆத்திரம் நிறைந்து இருந்தது. தன் பெற்றோரைக் கொன்ற மன்னனை பழி தீர்க்க சமயம் பார்த்துக் கொண்டு இருந்தான்.
      திர்காயு யானைகளை அடக்குவதில் சிறந்து இருந்ததினால் அவனுக்கு அரண்மணையில் யானைக் கொட்டத்தில் வேலை கிடைத்தது. அவனுடைய சாதூர்யத்தை பலமுறை கண்ட மன்னன் அவன் மீது நம்பிக்கை கொண்டு அவனை தன் காவல் பணியில் வைத்துக் கொண்டான். ஆனால் அவனுக்கு திர்காயு யார் என்பது தெரியாது. ஒரு நாள் வேட்டையாடச் சென்ற பொழுது அவர்கள் இருவரைத் தவிற மற்றவர்கள் எங்கோ போய் விட்டனர். களைப்படைந்த மன்னனை ஒரு மர நிழலில் தன் தொடை மீது தலையை வைத்துக் கொண்டு படுத்து உறங்குமாறும், அதன் பின் கிளம்பிப் போகலாம் எனவும் திர்காயு கூற மன்னனும் உறங்கத் துவங்கினான். தான் எதிர் பார்த்து வந்த தருமணம் வந்து விட்டது என எண்ணிய திர்காயு மன்னனைக் கொல்ல வாளை கையில் எடுத்த பொழுது, தன் தந்தை கூறிய அறிவுறை மனதில் தோன்ற தனது முடிவை மாற்றிக் கொண்டு வாளை உறையில் வைக்க, திடுக்கிட்டு எழுந்த மன்னன் கூறினான் ‘எனக்கு பயமாக உள்ளது. என்னைக் கொல்ல எவனோ என் அருகில் வாளை எடுத்துக் கொண்டு வந்ததைப் போல இருந்தது.’ .அதற்கு திர்காயு பதிலளித்தான் ‘ அது நான்தான்’. மன்னன் கதறினான், கெஞ்சினான் ‘ ஐயோ என்னைக் கொன்று விடாதே, விட்டுவிடு’. திர்காயு அமைதியாகக் கூறினான் ‘உன்னை நான் விட்டு விடுகின்றேன். என்னையும் நீ கொல்ல மாட்டேன் என வாக்குறுதி கொடு’. உடனேயே மன்னனும் வாக்குறுதி அளிக்க தான் யார் என்பதை வெளிப்படுத்தினான் திர்காயு.
      அதன் பின் சற்று நேரம் கழித்து மன்னன் திர்காயுவிடம் அவனுடைய தந்தை தான் மரணம் அடையும் முன் கூறிய ‘ நீ நீண்ட தூரம் பார்க்காதே, குறைந்த தூரத்தையும் பார்க்காதே,’ என்ன கூறினாரே அதன் பொருள் என்ன என்பதை விளக்குமாறு கேட்க திர்காயு கூறினான் ‘நீண்ட தூரம் பார்க்காதே என்றால் உன் வெறுப்பை வளர்த்துக் கொண்டே இருக்காதே என்று பொருள், குறைந்த தூரத்தையும் பார்க்காதே என்றால் அவசரப்பட்டு இப்போது எதுவும் செய்து விடாதே என்ற அர்த்தம். அன்று அவசரப்பட்டு நான் ஓடி வந்து உங்களை கொன்று இருந்தால் மக்கள் என்னைக் கொன்று இருப்பார்கள். அதன் பின் என் ஆட்கள் என்னைக் கொன்றவர்களை பழி தீர்க்க சமயம் பார்த்துக் கொண்டு இருப்பார்கள். இரண்டும் தொடர் கதையாகி இருக்கும். இப்போது நாம் இருவரும் ஆத்திரத்தை விட்டுவிட்டு அஹிம்சையை பின் பற்றினால் அனைவருக்கும் நல்லது அல்லவா, என்று கூற விரோதிகள் இருவரும் இணைந்தனர்.
      இந்த கதையைக் கூறிய புத்தர் தம் சீடர்களுக்கு வெறுப்பை வளர்த்துக் கொள்வது ஒருவருக்கொருவர் அழிய அவரவர்களே காரணமாகி விடுவதினால், ஆத்திரத்தை அடக்கி, அமைதியாக எதற்கும் தீர்வு காண வேண்டும் என்றார்.

Wednesday, September 28, 2011

எதிர் செயல்‍ பதில் செயல் ஆனந்தம்


      எதிர் செயல் எண்ணங்களிலிருந்து வருவது. பதில் செயல் புரிதலிலிருந்து வருவது. எதிர் செயல் கடந்த காலத்திலிருந்து வருவது. பதில் செயல் நிகழ்காலத்தில் இருப்பது. ஆனால் நாம் எப்போதும் எதிர் செயல்தான் செய்கிறோம். – நம்மிடம் எப்போதும் உள்ளே எதிர்செயல் ஏற்கனவே தயாராக உள்ளது.
      யாரோ எதையோ செய்கிறார்கள். நாம் ஏதோ பட்டன் அழுத்தப்பட்டது போல எதிர்செயல் செய்கிறோம். யாரோ உன்னை அவமதிக்கிறார்கள். – நீ கோபமடைகிறாய். அது முன்போ நிகழ்ந்தது. அது எப்போதும் அப்படித்தான் நடக்கிறது. அது ஒரு பட்டன் போல ஆகி விட்டது. யாரோ அதை அழுத்துகிறார்கள். நீ கோபமடைகிறாய். ஒரு வினாடி கூட காத்திருக்கவில்லை. ஒரு வினாடி நேரம் கூட சூழ்நிலையை பார்க்கவில்லை. ஏனெனில் சூழ்நிலை வேறுபட்டிருக்கலாம். உன்னை அவமதித்த ஆள் சரியாக கூறியிருக்கலாம். அவர் உன்னிடம் உன்னைப் பற்றிய உண்மையை கூறியிருக்கலாம். அதனால் நீ அவமானமாக உணர்ந்திருக்கலாம். அல்லது அவர் தவறாக இருக்கலாம். அல்லது அவர் ஒரு குசும்பு பிடித்த ஆளாக இருக்கலாம். ஆனால் நீ அவரைத்தான் பார்க்க வேண்டும்.
      அவர் சரியாக சொல்லியிருந்தால் நீ அவருக்கு நன்றி சொல்ல வேண்டும், ஏனெனில் அவர் உனக்கு ஒன்றை சுட்டிக் காட்டியிருக்கிறார். அவர் உன்னிடம் கருணை காட்டி இருக்கிறார். உண்மையை சொன்னதன் மூலம் உன் நெஞ்சுக்கு நெருக்கமாயிருக்கிறார். அது சுடலாம், ஆனால் அது அவர் தவறல்ல, அல்லது அவன் மடையனாக, அறியாதவனாக, உன்னைப் பற்றி எதுவுமே தெரியாமல் ஏதாவது சொல்லிருக்கலாம். அப்போது அங்கே கோபப்பட வேண்டிய அவசியம் இல்லை. அவர் சொல்வது தவறு எனில் முற்றிலும் தவறான ஒன்றைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. அதில் ஏதோ சிறிதளவு உண்மையில்லாவிட்டால் நீ அதனால் கடுப்படைய மாட்டாய். நீ அதைப் பார்த்து சிரிப்பாய். அதன் முட்டாள்தனத்தைப் பார்த்து அதன் பொருந்தாதன்மையினால் சிரிப்பு வரும். அல்லது அந்த ஆள் ஒரு முசுடு, அவர் எப்போதும் அப்படித்தான், எல்லோரையும் அவமதித்துக் கொண்டிருப்பார். அதனால் அவர் குறிப்பாக உன்னைப் பார்த்துகூறவில்லை. அவர் எப்போதும் போல சொல்லிக் கொண்டிருக்கிறார், அவ்வளவுதான். உண்மையில் செய்ய வேண்டியது எதுவும் இல்லை. அவர் அது போலத்தான்.
      உன்னைக் கவனி. மற்றவர்களை கவனி, மற்றவர்கள் எப்படி ஒரு இயந்திரத்தனமாக, சுயநினைவின்றி, தூக்கத்தில் நடப்பவர்கள் போல செயல்படுகிறார்கள் என்று பார்.
எதிர் செயல் மனதிலிருந்து எழுவது,
பதில் செயல் மனமற்ற நிலையிலிருந்து வருவது.

Saturday, July 30, 2011

அகங்காரம்-தியானம் ஆனந்தம்


      அகங்காரத்துக்குள்ளேயே சிக்கி உழுன்று கொண்டிருக்கும் ஒரு மனிதன் அந்த அகங்காரத்தையே தன் அடையாளம் என்று கருதிக் கொண்டே இருக்கிறான். அது தன் அடையாளம் அல்ல என்கிற தெளிவு ஏற்படும் போது, அதற்கு “விழிப்புணர்வு” என்று பெயர். அடிப்படையில், அகங்காரம் என்பது ஒரு பாதுக்காப்பு ஏற்பாடு. அது பாதுகாப்பு உணர்வின் வெளிப்பாடு.
      ஒரு மனிதன், தன் எல்லையற்ற தன்மையை, ஒரு எல்லைக்குட்பட்ட உடலோடோ, வேறு சில எல்லைகளோடோ அடையாளப்படுத்தத் தொடங்கும் போது அது “அகங்காரம்” ஆகிறது. தன்னுடைய அகங்காரம் இன்னொரு மனிதனின் அகங்காரத்தால் ஆக்கிரமிக்கப்படும் போது சிக்கல் ஏற்படுகிறது. மாறாக, அன்பு நிலையில் அவரிடம் இன்னொருவர் கரைந்து போகிபோது அங்கே ஆக்கிரமிப்பு, ஆதிக்கம், போன்றவற்றிற்கு இடமில்லை.
      ஒரு கைக்குழந்தைக்குக் கூட தேவையான நேரத்தில் தேவையான உணவு தரப்படாவிட்டால் கோபம் வருகிறது.கோபத்தை வெளிப்படுத்த குழந்தை வீறிட்டு அழுகிறது இத்தனைக்கும் அந்தக் குழந்தைக்கு தன் பெயர் என்னவென்று கூட தெரியாது. ஆனால், தன்னைப் பற்றிய எண்ணம் அதற்குள் ஏற்பட்டு விடுகிறது.
      “அகங்காரம்” எனபது நிழலைப் போன்றது. உடல் என்ற ஒன்று ஏற்பட்டுவிட்டால் எப்படி நிழல் விழுவதைத் தடுக்க முடியாதோ அதைப்போல அகங்காரம் எழுவதையும் தடுக்க முடியாது. சிலர், என்னிடம் வந்து “ஊரில் மழை பெய்யவில்லை ஏதாவது செய்து மழை வர ஏற்பாடு செய்யுங்கள்” என்றுசில சமயங்களில் கேட்பதுண்டு. இதுவே, அகங்காரத்தின் வெளிப்பாடுதான்.
      இயற்கைக்கு எதிரான செயல்களைச் செய்வது, தங்கள் சுயநலத்திற்கு இயற்கைய மாசுபடுத்தும் தொழில்களை செய்வது, பிறகு யாரைக் கொண்டாவது மழையை வரழைத்து விடாலம் என்று கருதுவது, அகங்காரம் இல்லாமல் வேறென்ன?
      மகாத்மா காந்தி ஒரு முறை சொன்னார். “இந்த உலகில் எல்லா மனிதர்களின் தேவைக்கும் உரிய செல்வம் இருக்கிறது. ஆனால் ஒரு தனிமனிதனின் பேராசைக்குத்தான் அது போதாது” என்றார்.
      இத்தைகய அகங்காரம் அழிவுகளை ஏற்படுத்தும், அகங்காரத்தை முழுமையாக அகற்றுவதைவிட அதனை நேர்மறையாகப் பயன்படுத்துவதே நல்லது. அகங்காரத்தை உற்றுக் கவனித்து, அதுவே “தான்” என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் தன்மையிலிருந்து விடுபட்டு, அகங்காரத்தால் தனிமைப்பட்டுப் போகும் உயிரை மற்ற உயிர்களோடு அன்பில் கரைத்துக் கொள்வதே மனிதகுலத்திற்கு மேன்மைகள் தரும்.
      வாழ்க்கையை பலரும் வாக்குவாதங்களிலேயே கழிக்கிறார்கள். தாங்கள் விரும்புவதை செய்வதுதான் “சுதந்திரம்” என்று பலரும் எண்ணுகின்றனர். போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையில் எதைச் சுதந்திரமென்று மனிதன் கருதுகிறானோ, அதுவே அவனைப் பிணைத்து வைக்கிற விலங்காக மாறுகிறது.
      புகைப்பிடிப்பதை ஒரு மனிதர் விரும்புகிறார். அதையே தன் சுதந்திரம் என்றும் கருதுகிறார். ஆனால், சுற்றிலும் பெட்ரோல் சிந்தியிருக்கும்போது, “ சிகரெட் பிடிப்பது என் விருப்பம்” என்கிற அகங்காரம் வெளிப்பட்டால், அது அழிவைத் தரும்.
      சின்ன சின்ன விஷயங்களுக்கும், நிபந்தனை விதிக்கிற மனப்பான்மை மனிதனுக்கு இருக்கிறது. வாழ்க்கை எந்த நிபந்தனைகளும் இல்லாமல் மனிதனுக்கு, எல்லா வாய்ப்புகளையும் வழங்குகிறது. ஆனால், தனகுத்தானே விதித்துக் கொள்கிற நிபந்தனைகளால் மனிதன், தன் எல்லைகளைக் குறுக்கிக்கொண்டு சிரமப்படுகிறான்.
      ‘விழிப்புணர்வு’ இந்த நிலையை மாற்றி மனினை அன்புமயமாக ஆக்கும்.
      மனிதனின் உணர்வு நிலையிலேயே உச்சகட்டமானது அன்புதான். அன்பு என்பது ஆழமான அழகான வலி. அன்பு சக உயிர்கள் மீதான, பரிவாக வெளிப்படும். அந்த வலியின் விளைவாகக் கண்ணீர் வெளிப்படும்.அது அற்புதமான அனுபவம் மற்றவர்களுக்காக பொறுப்பேற்றுக் கொள்வதுதான் அன்பின் அடையாளம்.
      மேற்கத்திய நாடுகளில்தான் கண்ணீர் என்பது பலவீனத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. ஆனால், இந்தியப் பாரம்பரியத்தில் கண்ணீர் என்பது மனம் அன்புமயமாகவும், மென்மையாகவும் இருப்பதைக் குறிக்கிறது. உள்முகமாக, மனிதனைத திருப்பி விடுகிற நிகழச்சிகள் பல. அதை மனிதன், எந்த விதத்தில் உணர்ந்து கொள்கிறானோ, அதற்கேற்ப அவன் இயல்பு மாறுகிறது.
      உதாரணமாக, பெங்களூரில் காய்கறி விற்பனையாளர் ஒருவர் இருந்தார் கடும் நோய்வாய்ப்பட்டு ஆறு மாதம் படுக்கையில் இருந்தார். மரணத்திற்கும், வாழ்க்கைக்குமான போராட்டமாக அது இருந்தது.
      ஆறு மாதங்களுக்குப் பிறகு குணமடைந்தார். அத்தனை காலம், மருத்துவமனையில் இருந்ததால், எல்லாவற்றையுமே இழந்திருந்தார். எனினும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புபோது முன்பைவிடவும் அமைதியாக, ஆனந்தமாக, மகிழ்ச்சியாக வாழத் தொடங்கியிருந்தார்.
      கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலை அவருக்கு எத்தனையோ இழப்புகளை ஏற்படுத்தியிருந்தாலும், அந்த மரணப் போராட்டம் காரணமாக வாழ்க்கை குறித்த தெளிவு அவருக்கு ஏற்பட்டிருந்தது.
      உள் நிலையில், தெளிவு தோன்றவும், தன்னைக் குறித்த அகங்காரமும், அடையாளங்களும் மாறவும், ஒரு மனிதனுக்கு தியானம் மிகவும் அவசியம். தியானம் என்பது ஒருவர் மேற்கொள்கிற பயற்சியல்ல, தன் இயல்பு நிலையோடு இருப்பது தனக்குள் இருக்கிற உண்மையை உணர்வது.
      வெளிச்சூழ்நிலையை மனிதன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால், தன்னுடைய உள்நிலை குறித்த தெளிவு அவசியமாகிறது. அந்தத் தெளிவு வரும்வரை சிறிய நிபந்தனைக்களுக்குள், எல்லைகளுக்குள் மனிதன் சிறைபட்டிருப்பதோடு அதுவே, வாழ்வின் பலம் என்றும், தவறாகப் புரிந்து கொள்கிறான்.
      தானே, வகுத்திருக்கும் தடைகளிலிருந்து, மனிதனை விடுவிக்க வல்லதுதான் “தியானம்”. தியானம் என்று சொன்ன மாத்திரத்திலேயே அது குறித்து ஏராளமான, சந்தேகங்கள் தான் எல்லருக்கும் ஏற்படுகின்றன.
      தியானமும், பிரார்த்தினையும் ஒன்றா? வாழ்வில், நாம் விரும்பும் நன்மைகளை தியானம் தருமா? என்றெல்லாம், பலர் கேட்கின்றனர். முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கையோடு யாரக்கும், எந்தப் பிரச்னைஐயும் இல்லை. இவர்கள் விருப்பத்திற்கேற்ப, வாழ்க்கை இல்லை என்பதில் தான் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
      உடல், மனம், ஆகிய இரண்டு எல்லைகளுக்குள் மனிதன் இருக்கிற வரை அவன் விருப்பத்திற்கேற்ப வாழக்கை அமையாது. ஏனெனில், அந்த நிலைகளைப் பொறுத்தவரை புறச்சூழ்நிலைதான் வாழ்வைத் தீர்மானிக்கிறது. இந்த எல்லைகளைக்கடந்து உயிரின் மூலத்தை உணர்தற்கான கருவிதான் தியானம்.
      பிரார்த்தனை என்பது, இப்போதெல்லாம் பக்தியின் வெளிப்பாடாக இருப்பதில்லை. கடவுளிடம் வைக்கின்ற கோரிக்கைகளையே நாம், பிரார்த்தனை என்று புரிந்து கொள்கிறோம். உங்கள் கவலைகள், தேவைகள், ஆசைகள், அச்சங்கள் என்று நீண்ட புலம்பல்களின் பட்டியலை, பிரார்த்தனை என்று கருதுகிறீர்கள். அதுவம், உங்களுக்கு போதிக்கப்பட ஒரு சடங்காகவே ஆகிவிட்டது. அது வெறும் கோரிக்கைகளை இருக்கும் வரை பிரார்த்தனையால் புனிதத்தன்மை இருக்காது. ஆனால்; பிரார்த்தனையின் அடிப்படை கடவுளிடம் பேசுகிற முயற்சி, பிரார்த்தனை வழியாக கடவுளிடம் பேசுகிறீர்கள்.
      இதி என்ன சிக்கல் என்றால், இத்தனை ஆண்டுகளில் நீங்களே தொடர்ந்து, பேசிக்கொண்டேயிருக்கிறீர்களே தவிர அவரை ஒருவார்த்தைக்கூடப் பேச அனுமதிக்கவில்லை. நீங்கள் ஒரு நண்பரைப் பார்க்க போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர் வீட்டில் போய் அவரை ஒரு வார்த்தைகூட பேச அனுமதிக்காமல் நீங்களே தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறீர்கள். அரை மணி நேரம், ஒரு மணி நேரம் பேசினால் என்னாகும். அடுத்தமுறை நீங்கள் அவர் வீட்டுக்குப் போகும் போது அவர் உங்களைப் பார்க்கவே பயப்படுவார். வீட்டுக்குள் இருந்து கொண்டே இல்லை என்று சொல்லி அனுப்பிவிடுவார்.
      இப்போது கடவுளிடமும் அதுதான் நிகழ்ந்திருக்கிறது. நீங்கள் சொல்வதைப் பார்த்து அவர் இருந்து கொண்டே இல்லாது போல் பாசாங்கு செய்கிறார். எனவே, நீங்கள் பேசுவதை நிறுத்திக்கொண்டு, கடவுளைப் பேச அனுமதிப்பதற்குத்தான், தியானம் என்று பெயர்.
      தியானம் என்பது, இந்தப் படைப்பின் மூலத்தை உணர்வதற்கான வழி. வெறுமனே கண்மூடி அமர்வது, தியானமல்ல. பலர், வசியக் கலைக்கும், தியானத்துக்கும் உள்ள வேறுபாடு பற்றி என்னிடம் கேட்டிருக்கிறீர்கள். இரண்டும் ஒன்றுக்கொண்டு எதிரான நிலைகள். வசயத்தின் போது, யாரோ ஒருவர், அல்லது ஏதோ ஒன்றின் ஆளுமைக்குள் நீங்கள் அல்லது ஏதோ ஒன்றன் ஆளுமைக்குள் நங்கள் அகப்படுகிறீர்கள். அப்போது விழிப்புநிலை இருக்காது. ஆனால், தியானம் என்பது முழு விழிப்புணர்வில் நிகழ்வது. தியானத்தில் எல்லாற்றிடமிருந்தும் விலகி, சுதந்திரமாக இருக்கிறீர்கள். சுதந்திரம் பொதுவாகவே அச்சமூட்டுவதாய் இருக்கிறது. அதனால் தான் மேலை நாடுகளில், தியானம் என்றாலே அஞ்சுகிற நிலை இருந்தது. எல்லோரும், சுதந்திரத்தை விரும்புவதாகச் சொல்லிக்கொண்டால் கூட அடிப்படையில் ஏதாவதொன்றில் சிறைப்பட்டிருக்கவே விரும்புகிறார்கள்.
      மனைவிமார்கள் மீது, கணவன்கள் ஒரு புகார் சொல்வதுண்டு. எப்பதும் தங்களைத் தொந்தரவு செய்து கொண்டேயிருக்கிறாரகள். அது வேண்டும், அது வேண்டும். அங்கே அழைத்துச் செல்லுங்கள் என்று தொல்லைப்படுத்திக்க கொண்டேயிருக்கிறார்கள், என்று கணவன்மார்கள் அலுத்துக்கொள்வதுண்டு. அந்தப் பெண்கள் தியானம் செய்யத் தொடங்கியபின் தமது கணவர்களிடம் எதையுமே கேட்பதில்லை. உடனே இந்தக் கணவன்மார்கள் கவலைப்படத் தொடங்குகிறார்கள். பெண்கள் யாரையும் சாராமல் தனித்திருப்பதும் தங்களையும் தொல்லை செய்யாமல் இருப்பதும், அவர்களை தடுமாறச் செய்கிறது.
      தியானத்தின் வழியாக சார்பு நிலையிலிருந்து விடுதலைபெற முடியும், என்கிற அனுபவ உண்மைக்கு மனம், முதலில் தயாரடைய வேண்டும். தியானம் என்பது விழிப்புநிலை, தியானம் என்பது சுதந்திரம். தியானம் என்பது சுதந்திரம் என்பதைவிட தியானம் என்பதே சுதந்திரம் என்று சொல்ல வேண்டும்.
      தன்னை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் மனிதனை யாரும், எதுவும், அடிமைப்படுத்திவிட முடியாது. மனிதனின் புறவாழ்வுக்காக சில திறமைகள், தகுதிகள் தேவைப்படுகின்றன. அந்தத் திறமைகளோடும், தகுதிகளோடும் மனிதன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுவிட்டால், அதைத் தாண்டி வளர இயலாது. புறச்சூழலின் வெற்றிக்காக பெற்றிருக்கும் தகுதிகளே தடைகளாக மாறி மனிதனை அடிமைப்படுத்த வாய்ப்புண்டு.
      மாறாக, விழிப்புணர்வு நிலையில், எதனோடும், தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாத தன்மையில் இருக்கும்போது மனிதன் விரைவாக வளரமுடியும். அந்த விழிப்புணர்வை தியானம் தருகிறது. மனிதன் தேடிப் பெறுகிற தகவல் அறிவு அவனது உலக வாழ்க்கைக்குத் துணை புரிகிறது. ஆனால், தகவல் திரட்டு மட்டுமே இருந்தால் அந்தத் தகவல் திரட்ட உரிய முறையில் அறிவாக வெளிப்படுத்த முடியும்.
      தன் இயல்பான தன்மையை உணர்த்த ஒருவன், வாழ்வில் அன்பாக, அமைதியாக, ஆனந்தமாக இருக்க முடியும். தன்னுடைய சக்தியைத் தெரிந்து கொள்ளாத போதுதான் பதட்டம் வளரும், பயம் வளரும், சுயநலம் கூடும். மனிதனின் உடல் - மனம் - அறிவு - ஆன்மீகத் தேடல் அனைத்தையும் ஒரே புள்ளியில் சந்திக்க வைத்து, உள்நிலை வளர்ச்சிக்கு உறுதுணை புரிய ஈஷா யோகா மையம் ஏற்படுத்தியிருக்கும் வழியே “சஹஜ ஸ்திதி யோகா”
      சஹஜ ஸ்திதி யோகா என்றால், “இயல்பாக வாழும் கலை” என்று பொருள். தன் இயல்பு வாழ்க்கையில் இருந்தபடியே தன்னை மேம்படுத்திக் கொள்ள அனைவருக்கும் வழங்கப்படும் அரிய வாய்ப்பு இது.
      சஹஜ ஸ்திதி யோகா, எந்தவொரு பழக்கத்தயும் விடச்சொல்லி வற்புறுத்துவதில்லை. எந்தவொரு மனநிலையையும் மாற்ற சொல்லி வற்புறுத்தவதில்லை. அனுபவ ரீதியாக எதையும் உணர்ந்து, வேண்டாதவறை விலக்கிக் கொள்வதற்கான, விழிப்புணர்வைத் தருகிறது.
      இதுவரை உணராத பரிமாணத்தில் வாழ்கையை மனிதன் உணரத் தொடங்குகிறான். அன்பு, அமைதி, ஆனந்தம் ஆகியவை வெளியிலிருந்து பெருவதர்க்கல்ல. மனிதனிடம் ஏற்கனவே இருக்கும் இயல்புதான் என்பதை அனுபவ அடிப்படையில் உணரும்போது முற்றிலும் புதிய பார்வை கிடைக்கிறது.
      செயல்திறன் அதிகரித்தல், உடல் நலம், மன அமைதி இவையெல்லாம் சஹஜ ஸ்திதி யோகாவில் முக்கிய அம்சங்களல்ல. அவை பக்க விளைவுகள்தான். மனிதன் தன்னை உணர்ந்து, தனக்குள் இருக்கும் பேராற்றலை உணர்ந்து, உயிர்களிடையே பேதமில்லை என்கிற அனுபத்தைப் பெறுவதே சஹஜ ஸ்திதி யோகாவின் முக்கிய நோக்கம்.
     நோய் வாய்ப்பட்டிருக்கும் மனிதன் சஹஜ ஸ்திதி யோகாவிற்குப் பிறகு, நோயின் தன்மையை உணர்கிறான். ஆனால், அதனால் துன்பமடைவதில்லை. சில அடிப்படை அணுகுமுறைகள் மாறும்போதே சில நோய்கள் அவனைவிட்டு விலகுவதை இங்கே காணமுடியும்.
      கோபம், பதட்டம், போன்றவை தங்கள் பிறவிக் குணங்கள் என்று கருதியவர்கள், வகுப்புகள் தொடங்கி சில நாட்களிலேயே அந்த குணங்கள் தங்களை விட்டு விலகுவதைக் காண்கிறார்கள். சஹஜ ஸ்திதி யோகா, நீண்ட கால அனுபவத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள, ஆழ்ந்த யோக அறிவியலின் வெளிப்பாடு.
      எல்லா வயதினருக்கும் பொதுவான தன்மையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பயிற்சி, மனிதன் தனது அடிப்படை சக்தியை நன்கு உணரவும் அதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பாக அமைந்துள்ளது. உலகின் பல பகுதிகளிலும் பரவியுள்ள சஹஜ ஸ்திதி யோகாவை “தன்னை உணர்வதற்கான அமைதிப்புரட்சி” என்று அழைக்கிறோம். இந்த அமைதிப் புரட்சிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

..............சத்குரு ஜக்கிவாசுதேவ்...................

Tuesday, June 14, 2011

ஆசை‍ - கோபம் ஆனந்தம்


      கோபத்தின் மனோதத்துவம் என்னவென்றால் நீ எதையாவது விரும்புகிறாய், நீ அதை பெறுவதற்கு யாரோ தடையாக இருக்கிறார்கள், நீ அதை பெறுவதை தடுக்கிறார்கள், ஒரு தடங்கலாக இருக்கிறார்கள். உனது சக்தி முழுமையும் ஒன்றை பெற விரும்புகிறது, யாரோ அந்த செயலை தடுக்கிறார்கள். நீ விரும்பியதை பெற முடியவில்லை. அந்த விரக்தியடைந்த சக்தி கோபமாக மாறுகிறது. உன்னுடைய ஆசை பூர்த்தியடையக் கூடிய சாத்தியக்கூறை அழித்த மனிதர் மேல் கோபம் வருகிறது. உன்னால் கோபத்தை தடுக்க முடியாது. ஏனெனில் கோபம் ஒரு தொடர் விளைவு, பின் விளைவு. ஆனால் அந்த பின் விளைவு நிகழாமல் இருக்க நீ ஏதாவது செய்யலாம்.
      வாழ்வில் ஒன்றை மட்டும் நினைவில் கொள். வாழ்வா சாவா என்ற கேள்வி வரும் அளவு எதையும் ஆழ்ந்து விருப்பப் படாதே. சிறிது விளையாட்டுத்தனமாகவும் இரு.
      விருப்பப் படாதே என்று நான் சொல்லவில்லை. – ஏனெனில் அந்த ஆவல் உன்னுள் அழுத்தப்பட்டுவிடும், விருப்பம் கொள், ஆனால் அதைப்பற்றி சிறிது விளையாட்டுத்தனத்தோடு இரு என்றுதான் சொல்கிறேன். கிடைத்தால் நல்லது, கிடைக்காவிட்டால் பரவாயில்லை, அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் . விளையாடுபவர் போல இருந்து பழக வேண்டும்.
      நாம் நமது ஆசைகளுடன் ஒன்று பட்டு விடுகிறோம். அது தடைபடும்போது அல்லது தடுக்கப்படும்போது நமது சக்தியே தீயாகி விடுகிறது. அது உன்னை எரிக்கிறது. அந்த நிலையில் கிட்டதட்ட மனம் தடுமாறிய நிலையில் நீ என்ன வேண்டுமானாலும் செய்வாய் – பழி வாங்குவதற்காக. உன்னுடைய வாழ்வு முழுவதும் தொடரக்கூடிய சங்கிலி தொடர் நிகழ்ச்சிகளை அது உருவாக்கும்.
      நீ கோபத்தை நிறுத்த முயற்சி செய்யக்கூடாது. நீ செய்யவே கூடாது. எந்த வகையிலாவது கோபம் கரைந்து போக வேண்டும். இல்லாவிடில் அது உன்னை எரித்துவிடும். உன்னை அழித்துவிடும். நான் சொல்வது என்னவென்றால் அதன் வேர்களுக்கு செல். ஏதோ ஆசை தடைப்பட்டு, நிறைவேறாமல் உள்ளது. அந்த விரக்தி தான் கோபத்தை உண்டாக்குகிறது. இதுதான் அதன் ஆணி வேராக இருக்கும்.
      கோபத்தை ஒருமுறை உன் இருப்பில் உரைத்து, கரைத்து விட்டால் பின் எல்லாமும் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிடும், கோபம் மறைந்து விடும். அப்படி அது மறைவது உனக்கு ஒரு புது ஆச்சரியமாக இருக்கும் ஏனெனில் கோபம் மறையும் போது அது கருணையும், அன்பும், நட்பும், ஆனந்தமும் நிறைந்த அளவற்ற ஆற்றலை விட்டு செல்லும். விருப்பப்பட்டது கிடைக்கதபோது கூட மகிழ்ச்சியாக, ஆனந்தமாக‌ இருப்பது எப்படி என்று தெரிந்து கொள்வீர்கள்.
..........................................................................ஓஷோ.....................................................................

Friday, April 8, 2011

கோபம் உங்ளுடையது அல்ல ஆனந்தம்

ஜென் குரு பான்காய் என்பவரிடம் அவர் சீடர் ஒருவர் வருத்தத்துடன் சொன்னார். “குருவே, என்னால் என் கோபத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அதைப் போக்க நீங்கள் தான் எனக்கு ஒரு வழி சொல்ல வேண்டும்”

ஜென் குருக்கள் வித்தியாசமானவர்கள். அவர்கள் புனித நூல்களில் இருந்து மேற்கோள்கள் காட்டுவதோ, மணிக்கணக்காய் புத்தி சொல்வதோ இல்லை. பான்காய் சொன்னார். “உன்னுடைய கோபத்தை நீ கொஞ்சம் காட்டினால் அதைப் போக்க என்னால் வழி சொல்ல முடியும்”

சீடர் சொன்னார். “தற்சமயம் என்னிடம் கோபம் இல்லை. எனவே கோபத்தை என்னால் காட்ட முடியாது”

பான்காய் பொறுமையாகச் சொன்னார். “பரவாயில்லை. உன்னிடம் கோபம் இருக்கும் போது நீ அதை என்னிடம் கொண்டு வந்து காட்டுவாயாக”

சீடருக்கு ஒரே தர்மசங்கடம். கோபத்தை எப்படி ஒருவரிடம் கொண்டு போய் காட்ட முடியும்? திடீரென்று வந்து திடீரென்று போகும் கோபம் குருவிடம் வருகிற வரை இருக்குமா? அவன் தன் பிரச்னையைச் சொன்னான். “குருவே, கோபத்தை என்னால் கொண்டு வர முடியாது. கோபம் திடீரென்று ஏற்படுகிறது. அப்படி ஏற்படும் கோபம் உங்களிடம் வரும் வரை இருக்காது. காணாமல் போய் விடும்”

பான்காய் சொன்னார். “அப்படியனால் அது உன்னுடைய கோபமாக இருக்க முடியாது. அது உன் உண்மையான இயல்பாக இருந்தால் அது உன்னிடம் எப்போதும் இருக்கும். அதை நீ எப்போது வேண்டுமானாலும் அடுத்தவருக்குக் காண்பிக்க முடியும். கோபம் நீ பிறந்த போது இல்லை. உன் பெற்றோர்கள் அதை உனக்குத் தரவில்லை. எனவே அது வெளியே இருந்து தான் உன்னிடம் வர வேண்டும். உன்னுடையதல்லாததை, வெளியே இருந்து வருவதை விரட்டியடிப்பதில் என்ன பிரச்னை இருக்கிறது? இனி அப்போது உன்னுள்ளே நுழைய முயன்றாலும் கவனமாக இருந்து அதைப் பிரம்பால் அடித்துத் துரத்து”

பான்காய் மிக அழகாக ஒரு பேருண்மையை இங்கே சுட்டிக் காட்டி இருக்கிறார். சீடர் ‘என் கோபத்தைப் போக்க வழி சொல்லுங்கள்’ என்று கேட்டதறகு ‘என் கோபம்’ என்று சொல்வதே தவறு என்று மிக அழகாகச் சொல்கிறார். பிரச்னையே கோபத்தை தன்னுடன் இணைத்து தன்னுடையதாக பாவிப்பதில் தான் உருவாகிறது என்று கூறுகிறார்.

பான்காய் சொல்வதை நாம் ஆழமாகப் பார்க்க வேண்டும். நாம் கோபத்துடன் பிறக்கவில்லை. நம் கை, கால்களைப் போல, கண் காது மூக்கு போல நாம் பிறக்கும் போதே அது தரப்பட்டதல்ல. நம் உறுப்பு போல அது நம்முடன் ஒட்டி நாம் பிறந்திருந்தால் அதை நம்மிடம் இருந்து பிரிப்பது இயலாது. உடன் பிறந்தவற்றைத் துண்டித்து எறிவது கஷ்டம். அது பிரிவதே உடலுக்கு ஆபத்து அல்லது ஊனம் என்பதே உண்மை. ஆனால் இடையில் வந்து போகிற உணர்ச்சிகளை எல்லாம் நம்முடையது என்று பாவிப்பதனால் தான் அதனால் நாம் பெரிதாகப் பாதிக்கப்படுகிறோம்.

இது கோபத்திற்கு மட்டுமல்ல நம்மை அலைக்கழிக்கும் வெறுப்பு, பொறாமை, வருத்தம் போன்ற எல்லா உணர்ச்சிகளுக்கும் பொருந்தும். இது போன்ற உணர்ச்சிகள் எல்லாம் துன்பத்தைப் பெருக்குபவை. அவற்றை நம்முடையதாக பாவிக்கும் போது, அவற்றை நம்மை அறியாமல் வளர்த்து வலுவாக்குகிறோம். அவை வலிமையாகும் போது அதன் விளைவுகளும் வலிமையாக நம்மைத் தாக்குகின்றன. அந்தத் தாக்குதலால் பாதிக்கப்படும் போது நாம் மூன்று உண்மைகளை நினைவில் வைத்தால் அவற்றின் பிடியில் இருந்து விலகி விடுதலையாகலாம்.

1. இந்த உணர்ச்சிகள் என்றுமே என்னுடைய மன அமைதிக்கோ, மகிழ்ச்சிக்கோ வழி வகுப்பதில்லை. மாறாக இவை கவலைக்கும், துக்கத்திற்குமே வழி வகுக்கக் கூடியவை.

2. இந்த உணர்ச்சிகள் தவறான அபிப்பிராயங்களாலும், கணிப்புகளாலும் ஏற்படுபவை. இவை என்னிடம் வர முயற்சிக்கும் உணர்ச்சிகள். ஆனால் இவை என்னுடையவை அல்ல.

3. இவற்றை என்னுடையவை என்று நான் அங்கீகரித்தால் ஒழிய, அப்படி நினைத்து பற்றிக் கொண்டிருந்தால் ஒழிய இவை என்னைப் பாதிக்க முடியாது.

இந்த உணர்ச்சிகளை பான்காய் கூறுவது போல புறத்தில் இருந்து வருபவை என்று உணருங்கள். இதற்கெல்லாம் கோபப்பட வேண்டும், இதையெல்லாம் வெறுக்க வேண்டும், இதற்கெல்லாம் பொறாமைப் பட வேண்டும் என்று நாம் யாரோ போட்ட பாதையில் போக வேண்டியதில்லை. அதை நம் பாதையாக முட்டாள்தனமாய் ஆக்கிக் கொள்ள வேண்டியதில்லை. நாம் அப்படி போய் அவதிப்பட வேண்டியதில்லை.

இது போன்ற உணர்ச்சிகள் வரும் போது எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருங்கள். அவை வரும் போது வாசலிலேயே தடுத்து நிறுத்தி விடுங்கள். உங்களுக்குள்ளே விடாதீர்கள். “எனக்கு இயல்பானவன் போன்ற தோற்றத்தில் வந்தாலும் நீ அன்னியன். என்னுடையவன் அல்ல. எனவே போய் விடு” என்று அனுப்பி விடுங்கள்.

இந்த உணர்ச்சிகளை உங்களுடையது என்று நீங்களாகப் பற்றிக் கொண்டு இருந்தால் மட்டுமே உங்களுக்கு தீய பாதிப்புகள் ஏற்படும். அவற்றை உங்களுடையது அல்ல என்று கை விட்டு விடுங்கள். உதறித் தள்ளி விடுங்கள். அவை உங்களை கஷ்டப்படுத்துவது தானாக முடிந்து விடும்.