Wednesday, June 22, 2011

எது வேண்டாம் என்பதை விட என்ன வேண்டும் என சிந்திப்போமா!



      ஆனந்தமான சூழ்நிலை உருவாக வேண்டுமானால் ஆனந்தமாக இருக்கிற மனிதர்களால் மட்டுமே முடியும். பதட்டமானவர்களால் ஆனந்தத்தை ஏற்படுத்த முடியாது. எனவே, எப்போதும் ஆனந்தமாக இருக்க பழகுங்கள்.
      வாழ்க்கையோடு விளையாடுவது, ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் மிகப்பெரிய அற்புதமாகும், ஆனால், வாழ்க்கை நம்மோடு விளையாடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
      உடலையும், மனதையும் மேல் நிலைக்குக் கொண்டு செல்வதுடன், அவற்றை புதிய பரிணாமத்திற்கு கொண்டு போய், அவற்றின் மூலம் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்று எண்ணிபாருங்கள்.
      எத்தகைய உலகில் வாழ விரும்புகிறீர்கள் என்று கேட்டால், அனைவரும் அமைதியான உலகில் வாழ விரும்புவதாகவே கூறுகின்றனர். அப்படியானால் அனைவருடைய கனவும் ஒன்றாகவே இருக்கிறது.
      வாழ்க்கையில் இறுக்கமில்லாமல் இயல்பாக செயல்படுகிற போதுதான் மனிதர்கள் பல மகத்தான கண்டுபிடிப்புகளை செய்கின்றனர்.
      எண்ணங்கள் குவியலாக கிடக்கும் போது, குழப்பங்கள் தான் மிஞ்சுகிறது. மனதுக்குள்ளே ஒரு வரிசையை, ஒழுங்கை, அழகை ஏற்படுத்த தியானம் உதவுகிறது.
      மனிதன் தனக்குள் இருக்கிற மிகப்பெரிய சக்தியை வெளிப்படுத்த வேண்டுமானால் அதற்கு ஒரே வழி இயல்பாக இருப்பது தான். இயல்பாக இருப்பது என்பதை, சோம்பலோடு இருப்பது என்று தவறாக பொருள் கொள்ளக்கூடாது. ஆனால், முயற்சிகளை மேற்கொண்ட பிறகும் சுமையோ, சோர்வோ தெரியாத ஒரு நிலைக்குப் பெயர் தான் இயல்பான வாழ்க்கை.
      வாழ்க்கையில் விலக்க வேண்டிய விஷயங்கள் குறித்து திரும்பத் திரும்ப சிந்தித்து பட்டியல் போடுகின்றனர். எது வேண்டாம் என்பதைச் சிந்திப்பதைவிட, என்ன வேண்டும் என்று எண்ணங்களைப் புகுத்துவதுதான் சரியான அணுகுமுறை.
      நதிகள் சங்கமித்திருக்கும் கடலின் நடுப்பகுதியும், தேங்கிப் போகிற குட்டையும் அமைதியாக காணப்படுகிறது. தியானம் என்பது மனிதனை, இயக்கங்கள் கடந்த ஒரு சமுத்திர நிலைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சியாகும். இயல்பான வாழ்க்கை அமைய, தியானம் மிகப்பெரிய சக்தியைக் கொடுக்கும்.
      உங்கள் வாழ்க்கையை நீங்களே தான் வடிவமைக்க வேண்டும், உங்களுடைய வாழ்வை நீங்கள் வடிவமைக்கிற முறையில் தான் உங்களைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கை, இந்தச் சமூகத்தின் வாழ்க்கை, இந்த தேசத்தின் வாழ்க்கை அனைத்துமே அடங்கி இருக்கிறது என்பதை அனைவரும் உணரவேண்டும்.
      விருப்பு, வெறுப்பு என்று சிலவற்றை வைத்துக் கொண்டிருக்கும் வரை வாழ்க்கை போராட்டமாகத்தான் இருக்கும் என்பதால், இவற்றை தவிர்த்து வாழ்க்கைக்கு தேவையான நல்ல செயல்களில் ஈடுபட வேண்டும்.
      தனக்குள் கடவுளை தேடி உணர்ந்தவர்கள் மற்றவர்களோடு சண்டையிடும் முட்டாள்தனத்தில் ஈடுபடமாட்டார்கள். 

No comments:

Post a Comment