Thursday, May 23, 2013

உங்களுக்குள் ஒரு மர்மப் புதையல்! ஆனந்தம்


     
      குண்டலினி பரமரகசியங்களுக்கு எல்லாம் பரமரகசியமாய் காலம் காலமாய் பொத்திப் பொத்தி பேசி வரப்படும் ஒரு ஆன்மீக சமாச்சாரம். உனக்கு தெரியுமா, உன் குண்டலினியை எழுப்பினால் நீ பறக்கலாம், நீ தண்ணீரில் மிதக்கலாம் என்னும் பல கதைகள் கேட்டிருப்பீர்கள். இங்கே குண்டலினியின் அறிவியல்…

      குண்டலினி, உங்களுக்குள் பொதிந்து கிடக்கும் ஒரு சக்தி. தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ளாத நிலையிலேயே நமக்குள் இது புதைந்து கிடக்கிறது. நீங்கள் “மனிதன்” என்று குறிப்பிடும் தன்மை இன்னும் உருவாக்கத்தில் இருப்பதால், இந்த சக்தி இன்னும் வெளிப்படாமல் காத்துக்கொண்டே இருக்கிறது. நீங்கள் இன்னும் முழுமையான மனிதனாக இல்லை. உங்களை நீங்கள் மேம்பட்ட மனிதராக வளர்க்க ஒரு தொடர்ச்சியான நோக்கம் இருந்துகொண்டே இருக்கிறது.

      இந்த சக்தியை பற்றி உங்களுக்கு கவனமிருந்தால், இதை பயன்படுத்தி அற்புதங்களை படைக்க முடியும்.

      நீங்கள் குரங்காக இருந்தபோது, உங்களுக்கு மனிதனாக மாற விருப்பமில்லை. இயற்கைதான் உங்களை அந்த நிலைக்கு தள்ளியது. ஆனால் மனிதனாக மாறியபின், அதைத்தொடர்ந்து ஒரு விழிப்புணர்வான பரிணாம வளர்ச்சி அங்கே நடைபெறவில்லை. நீங்கள் விழிப்புணர்வாக இல்லாத பட்சத்தில், அந்த சுழற்சி திரும்பத்திரும்ப நடந்துகொண்டே இருக்கும்.
எந்த ஒரு மாற்றமும் சரி, பரிணாம வளர்ச்சியும் சரி, போதிய சக்தி இல்லாமல் நடப்பதில்லை. இந்த சக்தியை பற்றி உங்களுக்கு கவனமிருந்தால், இதை பயன்படுத்தி அற்புதங்களை படைக்க முடியும். ஒரு புதையலின் மேல் உட்கார்ந்து இருப்பதுபோன்றது இது. ஆனால் நீங்கள் தவறான திசையில் பார்த்துக் கொண்டிருந்தால், அங்கே புதையல் இருப்பதே உங்களுக்குத் தெரியாது.

      ஒரு பிச்சைக்காரர் கடுமையான வறுமையில் வாழ்ந்து வந்தார். மரத்தடியில் உட்கார்ந்து பிச்சை எடுத்து கொண்டிருந்தார். அவர் இறந்தபிறகு அவர் உடலை அங்கிருந்து வேறு இடத்திற்கு கொண்டு போய் புதைக்க யாரும் பிரயத்தனப்படாமல் அந்த மரத்தடியிலேயே புதைக்க முடிவு செய்தனர். அங்கே தோண்டும்போது ஒரு சில அடிகளிலேயே பெரும் புதையல் ஒன்று கிடைத்தது.

      ஒரு பானை நிறைய தங்கத்தை கீழே வைத்துக்கொண்டு அந்த முட்டாள் தன் வாழ்க்கை முழுவதும் பிச்சை எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார். கீழே தோண்டியிருந்தால் அவர் பெரும் பணக்காரர் ஆகியிருக்க முடியும். ஆனால் அங்கேயே உட்கார்ந்துகொண்டு எப்போதும் பிச்சை மட்டுமே எடுத்துக் கொண்டிருந்தவரை என்ன சொல்ல?

      இப்படித்தான் குண்டலினியும். அது அங்கே அடியில் மௌனமாய் உட்கார்ந்து கொண்டிருக்கிறது. இது எப்படி தெரியுமா? ஜாக்பாட்டின் மேல் உட்கார்ந்து கொண்டிருப்பதைப் போன்றது. ஆனால் தவறான திசையைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். புதையல் இருக்கும் பக்கம் திரும்பவில்லை.

      அதனால் குண்டலினி சக்தி இருப்பதையே நீங்கள் உணரவில்லை. குண்டலினி என்பது உங்களுக்குள் இருக்கும் பயன்படுத்தப்படாத, தொடப்படாத சக்தி. உங்களை முற்றிலும் கற்பனை செய்யமுடியாத பரிமாணத்திற்கு மாற்றிட இந்த சக்தியைப் பயன்படுத்த முடியும்.

      முறையான யோகப் பயிற்சிகள், குண்டலினி சக்தியை மேலெழுப்ப துணை நிற்கும்!
........................வாழ்க வளமுடன்!..............................

Wednesday, May 22, 2013

இறந்த உடலை ஏன் எரிக்கிறோம்? ஆனந்தம்


நமது கலாசாரத்தில், இறந்தவர் உடலை எரிக்க வேண்டும் என்ற பழக்கம் எப்படி வந்தது?

      நமது கலாசாரத்தில் இறந்தவர் உடலைப் பாதுகாக்கும் வழக்கம் இல்லை. இந்தத் தேசத்தின் கலாசாரம், வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சமும் மனிதனை மேல்நோக்கிக் கொண்டுசெல்வதாக அமைய வேண்டும் என்றே நினைக்கிறது. உடலை எரிப்பது என்ற சடங்கும் அந்த நோக்கத்திலேயே அமைக்கப்பட்டது.

      உங்களைப் பொறுத்தவரையில் அவர் இறந்துவிட்டார். ஆனால் அந்த உயிரைப் பொறுத்தவரையில் உடலைவிட்டு நழுவிவிட்டதாகத்தான் நினைத்துக்கொண்டு இருக்கும்.

      இறந்தவர் இந்த உடல்தான் தனது உயிர் என்று வாழ்ந்திருப்பார். அந்த உடலோடு மிகவும் ஆழமான தொடர்போடு வாழ்ந்திருப்பார். உங்களைப் பொறுத்தவரையில் அவர் இறந்துவிட்டார். ஆனால் அந்த உயிரைப் பொறுத்தவரையில் உடலைவிட்டு நழுவிவிட்டதாகத்தான் நினைத்துக்கொண்டு இருக்கும். எனவே மீண்டும் அந்த உடலுக்குள் நுழைந்துவிடலாம் என்றே அந்த உயிர் துடிக்கும். எனவே, வாய்ப்பை எதிர்நோக்கி அந்த உடலைச் சுற்றியே உயிர் சுற்றிக்கொண்டு இருக்கும். உடல் முழுமையாக இருக்கும் வரை அந்த உயிரால் அங்கிருந்து நகர முடியாது. அந்த மனிதர் ஞானம் அடைந்திருந்தால், அந்த உடலைவிட்டு நீங்கிய கணத்திலேயே அந்த உயிர் மகிழ்ச்சியாக அங்கிருந்து வெளியேறிவிடும். ஆனால், சரியான புரிதல் இல்லாத உயிர் அந்த உடலையே சுற்றிவரும். இது அந்த உயிருக்கும் நல்லதல்ல. இறந்தவருடன் பழகியவர்க்கும் அந்த உடலைப் பார்த்துப் பார்த்து பல நினைவுகளால் வருத்தம் அதிகமாகியே போகும்.

      உயிரை விட்டவரும் சரி, உறவினர்களும் சரி, உடல் அங்கிருக்கும் வரை, வேதனையோடு இருப்பர். எனவே விடைபெற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை அந்த உயிர் உணர வேண்டும் என்பதால், அந்த உடலை முழுமையாகவும் விரைவாகவும் அழிக்க வேண்டும் என்னும் நடைமுறை உண்டாக்கப்பட்டது. எனவேதான் இறந்த ஒன்றரை மணி நேரத்துக்குள் உடலை எரிக்க வேண்டும் என்ற விதி ஏற்படுத்தப்பட்டது. அவசரத்திலும் பதற்றத்திலும் தவறான முடிவெடுத்து உயிருடன் இருக்கக்கூடியவரையும் தவறுதலாக எரிக்கப்பட்டுவிடலாம் என்பதால், அதை நான்கு மணிநேரம் என பிற்பாடு மாற்றி அமைத்தார்கள்.

      தாம் அறிந்த அந்த உடல் இனி இல்லை, அடையாளமற்று எரிந்து கையளவு சாம்பலாகிவிட்டது என்னும் உண்மையை அறியும்போது, இறந்த உயிரும் அந்த இடத்திலேயே பரிதவித்துக்கொண்டு இருக்காது. இங்கு உயிருடன் இருப்பவர்களும் மாண்டவன் இனி மீளப்போவதில்லை என்று ஒருவித அமைதி கொள்வார்கள். எனவேதான் ஒருவர் இறந்துவிட்டால் அவரை உடனடியாக எரிப்பது நமது கலாசாரத்தில் இருந்து வருகிறது.

      போதிய விறகு இல்லாத பாலைவனங்களிலும், நெருப்பு நின்று எரியாத குளிர்ப் பிரதேசங்களிலும் எரிப்பதைவிட புதைப்பது சுலபமாக இருந்தது. எனவே அத்தகைய நாடுகளில் அதுவே அவர்களது நடைமுறையாக மாறிவிட்டது!

Sunday, May 5, 2013

ஹே நண்பா ! ஆனந்தம்


      பள்ளியில் தோள் கொடுத்தவன், கல்லூரி வாழ்க்கையை கலகலப்பாக்கியவன், திருமண மேடையில் கைக்குட்டையால் முகம் துடைத்தவன், எல்லோருக்கும் இன்பத்திலும் துன்பத்திலும் உடனிருப்பவன் எப்போதும் ஒரு நண்பன்தான். ஆனால், ஆயிரம்பேர் படிக்கும் கல்லூரியில், நாம் ஏன் ஒரு சிலரைமட்டும் நண்பர்களாக ஆக்கிக் கொண்டுள்ளோம்?! நட்பு பற்றி சத்குருவின் சில வரிகள்…

சத்குரு:

      உங்களைப் போலவே எண்ணுகிற, உணர்கிற, உங்களைப் புரிந்துகொள்கிற, உங்களைப்போல விருப்பங்களைக் கொண்டவர்களைத்தான் நண்பர்கள் என்கிறீர்கள்!
      எனவே எப்போதும் உங்கள் முட்டாள் தனங்களை ஆதரிப்பவர்களைத்தான் தேடிச் செல்கிறீர்கள். அந்த விதத்தில் பார்த்தால் ஒரு குருவோடு இருப்பது வித்தியாசமானது. அவர் உங்கள் நண்பர். ஆனால், உங்கள் அகங்காரத்தைக் கீழே இழுத்து அதன் மீது நடனமாடுபவர். சாதாரணமாக அகங்காரத்தைச் சீண்டினால், உங்கள் நண்பர் எதிரியாகி விடுவார். நாம் செய்வது என்னவென்றால் உங்கள் அகங்காரத்தின் மீது நடனமாடினாலும் பரவாயில்லை, நீ என் நண்பன் என்ற நிலையை ஏற்படுத்துவது.
      நீங்கள் யாருக்காவது நண்பர் எனில் அவருக்குப் பிடித்தவராக இருக்க எவ்வளவு முட்டாள்தனங்களைச் செய்கிறீர்கள் பாருங்கள். சூழலைக் காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியில், இனிமையற்ற எத்தனை விஷயங்களை உங்களுக்குள் போட்டுப் புதைத்து வைத்திருக்கிறீர்கள் பாருங்கள்.
இனிமையற்ற விதைகளை மண்ணில் விதைத்தால், பழங்களும் அப்படித்தான் இருக்கும். வாழ்க்கையும் அப்படித்தானே இருக்கும்.
      உங்களுக்கு ஒரு நண்பர் இருந்தால், அவருக்கு உங்களைப் பிடிக்காது என்றாலும் பரவாயில்லை என்ற தைரியம் உங்களுக்கு வேண்டும். தற்போது உங்கள் நண்பர்களில் பலர் ஒப்பந்தங்களோடும் விருப்பு வெறுப்புகளோடும்தான் உள்ளனர்.
      ஓர் உண்மை நண்பர் உங்களின் முட்டாள்தனங்களைச் சுட்டிக்காட்டினாலும் அன்போடு பழகும் தைரியமுடன் இருக்க வேண்டும். அதுதான் நட்பு! வாழ்க வளமுடன்!

Friday, March 29, 2013

காலை எழுந்தவுடன் காபி? ஆனந்தம்


   
       “ஜோரான மழை, சுவையான காபி, சூடான பஜ்ஜி, கடலைபோட ரெண்டு ப்ரண்ட்ஸ் இதைவிட என்னவேணும் வாழ்கைல” என்பவரா நீங்கள்… அப்படியே இருந்தாலும் காபி உடம்புக்கு நல்லதா என்ற சந்தேகமும் தலையெடுக்கிறதா உங்கள் மனதில்? குறைத்துக் கொள்ள வேண்டுமோ என்கிற கேள்வியும் எழுந்துவிட்டதா? ம்ம்… இந்நிலையில் நீங்கள் தனியாகத் தவிக்கவில்லை, உங்களுக்கு ஏகத்துக்கும் இருக்கிறது துணை…
      காபியைப் பற்றி பல வாதங்கள் இவ்வுலகில் பல இடங்களில் நடந்திருக்கிறது. அது விளைவிக்கும் கேடுகள், அதற்கு இருக்கும் மருத்துவ குணங்கள் என்று பலர் இதில் பிளவுபட்ட கருத்துடனே இருக்கிறார்கள். நீரிழிவு நோய், உடல் தளர்ச்சி போன்றவற்றிற்கு காஃபியைப் போன்ற மருந்தில்லை என்று சிலரும், இதய நோய்கள் புற்று நோய்களுக்கு முக்கிய காரணமே காஃபிதான் என்று சாடுவதற்கு சிலரும் போர்கொடியோடு தயாராக இருக்கிறார்கள். வல்லுனர்கள் இப்படி வேறுபட்டு நிற்க, இங்கு காபி பற்றி சத்குருவின் வார்த்தைகளில்…
      காபி உங்களை விழிப்புடன் வைக்கிறது, சுறுசுறுப்பாக்குகிறது, கிளர்ச்சியடையச் செய்கிறது, அதனால் அதற்கு நல்ல சர்டிபிகேட் கொடுத்தே ஆக வேண்டும். அதிலும் மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே காபி குடித்தால், நீங்கள் ஆச்சரியப்படும் அதிசயம் எல்லாம் உங்களுக்கு நடக்கும். நீங்கள் ஏதோ வீர அபிமன்யு போல் தெம்பாகக் கூட உணர்வீர்கள்.
ஆனால் தினம் தினம் அதை அருந்தினால், நீங்கள் அதை சார்ந்து வாழ்பவர் ஆகிவிடுவீர்கள். காபியை குடித்தவுடன் உங்கள் பயம், கவலைகள் எல்லாம் விலகிவிட்டது போல் தோன்றினாலும், சிறிது நேரத்திலேயே உங்கள் உடல் ‘இன்னும் கொஞ்சம் காபி வேண்டும்’ என்று அனத்தத் துவங்கிவிடும்.
      ஒரு இரண்டு மாதங்கள் நீங்கள் காபியே அருந்தாமல் ஒதுக்கி வைத்துவிட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். திடீரென்று ஒரு நாள் காலை எழுந்தவுடன் நல்ல ஸ்ட்ராங்காக ஒரு காபி, அதிகமாக டிகாக்ஷன் சேர்த்து குடித்தீர்கள் என்றால் உங்கள் கைகள் நடுங்குவதை நீங்கள் உணர முடியும்.
      இதுவே ஒரு ஆறு மாத காலம் தொடர்ந்து நீங்கள் காபி அருந்தி வந்தீர்கள், திடீரென்று ஒரு நாள் காபி வேண்டாம் என்று நிறுத்த முயல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், அன்று உங்கள் முடிவை ஏற்க முடியாமல் உங்கள் உடல் தவிப்பதையும், மீண்டும் மீண்டும் காபி வேண்டும் என்று அது ஏக்கமாக நச்சரிப்பதையும் நீங்கள் நிச்சயமாக கவனிக்க முடியும். அப்படி என்றால் நிச்சயமாக ஏதோ ஒரு வகையில் காபி உங்களுக்கு பாதிப்பு விளைவிக்கிறதுதானே?
      அப்போது நான் காபி குடிப்பதை நிறுத்தி விட வேண்டுமா என்று நீங்கள் கேட்கலாம். எதை விட வேண்டும், எதை விட வேண்டாம் என்று நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இதை விடுங்கள், அதை விடுங்கள் என்று நான் எப்போதும் வலியுறுத்த மாட்டேன்.
      நான் சொல்வதெல்லாம் – நீங்கள் இங்கு வாழும்போது, எதற்கும் நீங்கள் அடிமைப்பட்டு வாழாதீர்கள் என்பது மட்டும்தான். பதிலாக, விழிப்புணர்வுடன் வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.
      காபியாக இருந்தாலும் சரி, சிகரெட்டாக இருந்தாலும் சரி, ஏன் கடவுளாக இருந்தாலும் கூட சரி, அதனுடன் ஒரு விழிப்புணர்வோடு வாழக் கற்றுக் கொள்ளுங்கள். ஒவ்வொன்றும் உங்களுக்கு எவ்வளவு வேண்டும் என்று நீங்கள் மட்டும்தான் முடிவு செய்ய முடியும்.
      ஆனால் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், தூண்டுகோள்களை ஓரளவிற்கு மேல் பயன்படுத்தினால், அதற்கு நீங்கள் விலை கொடுத்துதான் ஆக வேண்டும். “அதனால் என்ன…? வாழ்க்கையே கொஞ்சம் காலம்தானே.
      90 வயது வரைக்கும் வாழாமல், நான் 70 வயதிலேயே போகிறேன்” என்று நீங்கள் சொல்பவராக இருந்தால்… பரவாயில்லை. நான் இந்த எண்ணத்தையும் எதிர்க்கவில்லை. காபியையும் எதிர்க்கவில்லை.
      ஆனால் இது வலுக்கட்டாயமாக பருகப்பட வேண்டிய ஒரு பானம் அல்ல. அதன் சுவை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா, என்றோ ஒரு நாள் ஒரு பெரிய குவளை நிறைய வேண்டுமானலும் குடியுங்கள். அதன் சுவையில் திளைத்திடுங்கள். ஒரு நாள் குடித்தால் பரவாயில்லை. ஆனால் தினம் தினம் குடித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தால் அது பெரும் பிரச்சனைதான்.
      ஒரு நாள் காபி கிடைக்காவிட்டாலும் அந்த நாளைக் கடக்கவே முடியாது என்ற நிலையில் நீங்கள் இருந்தால், நிச்சயமாக நீங்கள் இப்பிரச்சனையை சரி செய்துக் கொள்ளத்தான் வேண்டும். போயும் போயும் ஒரு குவளை காபி தானா உங்கள் வாழ்க்கையின் தரத்தை நிர்ணயிப்பது…?
      நீங்கள் எதை உண்ண வேண்டும் எதைப் பருக வேண்டும் என்று சொல்வது என் வேலை அல்ல. இந்தப் பொருள் உங்களுக்குள் எப்படி வேலை செய்கிறது என்று மட்டுமே நான் சொல்கிறேன். உங்களுக்கு நீங்கள் எதைச் செய்து கொண்டாலும் சரி, அதை உங்கள் விருப்பத்தோடு முழுத் தெளிவுடன் செய்யுங்கள்.
      ஏதோ கட்டாயத்தினாலோ, அறியாமையினாலோ வேண்டாம். உங்கள் சாவை வரவேற்கசச் செல்கிறீர்கள் என்றாலும் கூட, முழு விழிப்புணர்வோடு, என்ன செய்கிறோம் என்று தெளிவாகத் தெரிந்து கொண்டு செய்யுங்கள்.

Monday, March 25, 2013

"கோபத்தில் கத்துவது ஏன்?" ஆனந்தம்


"Why We Shout In Anger?"

A Hindu saint who was visiting river Ganges to take bath found a group of family members on the banks, shouting in anger at each other.
 He turned to his disciples smiled 'n asked.

'Why do people shout in anger shout at each other?'

Disciples thought for a while, one of them said, 'Because we lose our calm, we shout.'

'But, why should you shout when the other person is just next to you? You can as well tell him what you have to say in a soft manner.' asked the saint

Disciples gave some other answers but none satisfied the other disciples.
Finally the saint explained, .

'When two people are angry at each other, their hearts distance a lot. To cover that distance they must shout to be able to hear each other. The angrier they are, the stronger they will have to shout to hear each other to cover that great distance.

What happens when two people fall in love? They don't shout at each other but talk softly, Because their hearts are very close. The distance between them is either nonexistent or very small...'

The saint continued, 'When they love each other even more, what happens? They do not speak, only whisper 'n they get even closer to each other in their love. Finally they even need not whisper, they only look at each other 'n that's all. That is how close two people are when they love each other.'

He looked at his disciples and said.

'So when you argue do not let your hearts get distant, Do not say words that distance each other more, Or else there will come a day when the distance is so great that you will not find the path to return.'

Friday, February 8, 2013

வெற்றி வேண்டுமா? இதோ 5 டிப்ஸ்! ஆனந்தம்


     success, victory, isha, sadhguru, yoga, mediation, kundalini, win win, you can win, secret, businesssecret, life, flexible, isha foundation, great, thumbs up, personality, inter personal skills, skills, failure, looser, luck, fortune, talent, clarity, confidence, belief, embrace, like, dislike, calculation, sense, aspiration, vision,
      “எல்லாம் செய்துவிட்டேன், ஆனாலும் வெற்றி கழுவும் மீனில் நழுவும் மீனாக இருக்கிறது” என்பவர்கள் இங்கே வாருங்கள். சத்குரு சொல்லும் இந்த 5 வழிமுறைகளில் ஒன்றைப் பற்றிக்கொண்டால் உங்கள் வாழ்க்கையில் இனி வெற்றி வெற்றி வெற்றி மட்டும்தான். வெற்றியைத் தேடுபவர்களுக்குப் புதிய பொன்மொழிகள் இதோ.

1. கைகளை நம்புவோம்! கைரேகையை அல்ல…
   சத்குரு:

      சில சமயங்களில் எதேச்சையாக, அதிர்ஷ்டவசமாக, சில விஷயங்கள் உங்களுக்குச் சாதகமாக நிகழ்ந்துவிடலாம். அப்படிக் காற்று உங்கள் பக்கம் வீசும் சமயத்திற்காக நீங்கள் காத்திருந்தால், நல்ல விஷயங்கள் உங்கள் கல்லறையில்தான் நடக்கும், ஏனென்றால் அச்சமயம் வராமல் கூட போய்விடலாம்.
      உங்களுக்கு தெரியுமா? கோடான கோடி தடவை ஒரு திடமான சுவரின் ஊடே நடந்து அதைக் கடக்க முயன்றால், அதில் ஒரு முறை நீங்கள் கடந்துவிட முடியுமென்று குவான்டம் கோட்பாடு (Quantum Theory) கூட சொல்கிறது. அதில் சிறிய சிக்கல் அந்த கோடான கோடி தடவையைத் தொடும்முன் உங்கள் மண்டையோடு உடைந்திருக்கும்.
      நீங்கள் அதிர்ஷ்டத்தை நம்பி வாழும்போது, நீங்கள் பயத்திலும் பதற்றத்திலும் வாழ்கிறீர்கள். நீங்கள் தெளிவான நோக்கத்துடனும் திறமையுடனும் வாழும்போது உங்களுக்கு எது நடந்தாலும் நடக்காவிட்டாலும், உங்களுக்கு நடப்பவை மேல் உங்களுக்கு ஆளுமை இருக்கும். அதுதான் ஸ்திரமான வாழ்க்கை.

2. தோல்வியில் தொலைவதை நிறுத்துங்கள்
   சத்குரு:
      உறுதியோடு இருக்கும் ஒரு மனிதனுக்குத் தோல்வி என்பதே கிடையாது. ஒரு நாளுக்கு 100 முறை நீங்கள் கீழே விழுந்தால், அவை நீங்கள் கற்கும் 100 பாடங்களாகிவிடும். நீங்கள் விரும்புவதை உருவாக்குவதில் உறுதியுடன் இருந்தால், உங்கள் மனம் ஒரே திசையில் நிலைத்துவிடும். உங்கள் மனம் இருக்கும் திசையில் உங்கள் உணர்ச்சிகளும் ஒன்றிவிடும். ஏனென்றால் நீங்கள் சிந்திக்கும் விதமாகத்தான் நீங்கள் வாழ்க்கையை உணரும் விதமும் இருக்கும். உங்கள் எண்ணமும் உணர்வுகளும் ஒன்று சேர்ந்தால், உங்கள் சக்திகளும் உங்கள் உடலும்கூட அத்திசையில் ஒருங்கிணைந்துவிடும். இவை அனைத்தும் ஒருமுகமாகின்ற போது, நீங்கள் விரும்புவதை உருவாக்கி உங்கள் கனவை நிஜமாக்கும் திறமை அபாரமாகிவிடும். பல விதங்களில் நீங்கள் படைப்பாளராகி விடுவீர்கள்.

3. தேவை தெளிவு – குருட்டு நம்பிக்கை அல்ல
   சத்குரு:
      ஒரு மனிதனுக்குத் தேவை தெளிவு, குருட்டு நம்பிக்கை அல்ல. ஒரு கூட்டத்தின் நடுவே நீங்கள் நடக்கும்போது, உங்கள் பார்வை தெளிவாக இருந்தால், ஒவ்வொருவரும் எங்கு இருக்கிறார் என்று உங்களால் பார்க்க முடிந்தால், கூட்டத்தில் ஒருவரைக் கூடத் தொடாமல் நீங்கள் மிகச் சுலபமாக நடந்து சென்றுவிடுவீர்கள்.
      உங்கள் பார்வைத் தெளிவாக இல்லை, ஆனால் நீங்கள் அதீத நம்பிக்கை உடையவர் என்கிறபோது, எல்லோர் மீதும் நடந்து செல்வீர்கள். தெளிவில்லாத காரணத்தால், தன்னம்பிக்கை நல்ல மாற்றுப்பொருள் என்று கருதுகிறீர்கள். அது ஒருக்காலமும் அப்படி ஆக முடியாது.
      உதாரணமாக, நீங்கள் உங்கள் வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளையெல்லாம் இப்படி எடுக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு நாணயத்தைச் சுண்டிவிடுங்கள். “சரி, தலை விழுந்தால் முதல் திட்டப்படி செயல்படுவோம், ஒருவேளை பூ விழுந்துவிட்டால் இரண்டாம் திட்டப்படி செயல்படுவோம்,” என்று நீங்கள் முடிவெடுத்து செயல்பட்டால், உங்கள் திட்டம் வேலை செய்ய 50 சதவிகிதம் வாய்ப்பிருக்கிறதா இல்லையா?
      வாழ்க்கையில் 50 சதவிகிதம்தான் நீங்கள் சரியாக இருக்கிறீர்கள் என்கிறபோது, நீங்கள் இரண்டு தொழில்கள்தான் செய்ய முடியும். ஒன்று நீங்கள் வானிலை அறிக்கையாளராகவோ அல்லது ஜோசியக்காரராகவோ இருக்க முடியும். இந்த பூமியில் நீங்கள் வேறெந்த வேலையும் செய்ய முடியாது.

4. கொஞ்சம் வளைந்து கொடுங்கள்
   சத்குரு:
      நம் வாழ்க்கையில் பலவிதமான சூழ்நிலைகளைக் கையாள்வதற்கு, நமக்கு வெவ்வேறு விதமான ஆளுமை குணங்கள் தேவை. அதில் நீங்கள் நீரோடைபோல் வளைந்துகொடுக்கும் தன்மையுடன் இருந்தால், நீங்கள் எடுத்திருக்கும் பாத்திரத்தில் உங்களால் முழு திறனுடன் செயல்பட முடியும். அதில் சிறிதும் சிக்கலிருக்காது. ஆனால் பலருக்கோ சூழ்நிலைக்கேற்றவாறு வளைந்து கொடுக்க முடியாமல் கட்டுண்டு கிடக்கிறார்கள். அவர்களுக்கு பிடிக்காதவற்றையும் புரியாதவற்றையும் எதிர்கொள்ளும்போது, அவர்கள் சொல்ல முடியாத பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.
      நீங்கள் அதை உடைக்க வேண்டுமென்றால், நீங்கள் அதை முற்றிலும் வேறுவிதமாக அணுக வேண்டும். நீங்கள் செய்யக்கூடிய மிக எளிமையான செயல் இது: உங்களுக்குப் பிடிக்காத ஒருவருடன் சேருங்கள். அவர்களுடன் சிறிது நேரம் செலவிடுங்கள், மிக அன்பாக, ஆனந்தமாக! உங்களுக்குப் பிடிக்காதவற்றைச் செய்யுங்கள், உங்களுக்குப் பிடிக்காதவர்களுடன் இருங்கள். அந்த சூழ்நிலையிலும் நீங்கள் புத்தியுடன், அன்புடன், ஆனந்தத்துடன் வாழக் கற்றுக் கொண்டால் அதுவே உங்களுக்கு வெற்றி.
5. எனக்கு என்ன கிடைக்கும்?
   சத்குரு:
      உயர்ந்த மனிதனாக ஆக வேண்டும் என்கிற பேராவல் உங்களுக்கு இருக்கத் தேவையில்லை. நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பதன்மேல் உள்ள கவனத்தைத் தாண்டி உங்கள் குறிக்கோளையும், நீங்கள் இயங்கும் வளையத்தையும் விரிவுபடுத்திவிட்டால், எப்படியும் நீங்கள் உயர்ந்த மனிதராகத்தான் இருப்பீர்கள்.
      உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்று சில மனிதர்கள் ஏங்கியதில்லை. அவர்கள் பார்வை “எனக்கு என்ன கிடைக்கும்?” என்பதைத் தாண்டி இருந்தது. “எனக்கு என்ன கிடைக்கும்?” என்ற இந்த ஒரு கணக்கை மட்டும் நீங்கள் கைவிட்டுவிட்டு, உங்கள் திறமையின் உச்சத்தில் செயல்பட்டால், ஏதோ ஒருவிதத்தில் நீங்கள் உயர்ந்தவராகத்தான் இருப்பீர்கள்.
      அப்போது இயல்பாகவே “என்னைச் சுற்றியிருக்கும் உயிர்களுக்கு நான் என்ன செய்ய முடியும்?” என்று பார்க்கத் துவங்கிவிடுவீர்கள். உங்கள் திறமைகளையும் இயல்பாகவே அதிகரித்துக் கொள்வீர்கள், ஏனென்றால் செய்வதற்கு அவ்வளவு செயல்கள் இருக்கும்!

............................................." வாழ்க வளமுடன்"........................................

Saturday, December 22, 2012

இளைஞன் – கலக்கமா விளக்கமா? ஆனந்தம்


   
      இந்த உலகத்தில் ஏதாவது ஆக்கப்பூர்வமான வேலைகள் நடக்க வேண்டுமானால், அது இளைஞர்களால்தான் முடியும். ஏதாவது நாசகரமான வேலைகள் நடக்க வேண்டுமானாலும், அதுவும் இளைஞர்களால்தான் முடியும்.ஏனென்றால், அவர்கள் மிகவும் உயிர்ப்புடனும் துடிப்புடனும் இருக்கின்றனர்.

      இன்றைய இளைஞர்கள் உயிரோட்டத்தோடும், சிறந்த லட்சியங்களோடும், சிறந்த ஊக்கத்துடனும் இருக்கிறார்கள். இந்த உலகம் இளைஞர்களால் வழிகாட்டப்படுமானால், வாழ்வதற்கு இன்னும் சிறந்த இடமாக அமையும் என்பதே உண்மை. ஆனால், அவர்கள் ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் சற்று மிகைப்படுத்திச் செய்துவிடுகிறார்கள் என்பதும் உண்மை.

      வயதான தலைமுறையினர், இன்றைய இளைஞர்களை ஏதோ சிகிச்சை தேவைப்படுகிற நோயாளிகளைப்போல கருதுகிறார்கள். அது உண்மை அல்ல. வாழ்க்கையைவிட்டு மிகவும் விலகிப் போய்விட்ட மனிதர்களுக்குத்தான் சிகிச்சை தேவை. இளைஞர்களோ, வாழ்க்கைக்கு மிக நெருக்கமாக இருக்கிறார்கள். இளைஞர்கள் எப்போதும் ஓர் உயர்ந்த சக்தி நிலையில் இருப்பதால், அவர்களுக்குச் சரியான வழிகாட்டுதலோ, தூண்டுதலோ கிடைக்கவில்லையென்றால், அவர்களது சக்தி எளிதில் எதிர்மறையாகிவிடும்.

      நமது கல்விமுறை 100% தகவல் அளிப்பதாகத்தான் இருக்கிறது. அது ஒரு தூண்டுகோலாக, ஊக்கம் கொடுப்பதாக இல்லை. ஊக்குவிப்பவர் இல்லையென்றால், ஒரு மனிதன் அவனுடைய எல்லைகளைத் தாண்டி உயர முடியாது. வெறும் தகவல் தேவை என்றால், ஓர் ஆசிரியர் சிறந்தவராக இருக்க முடியாது. புத்தகங்களும், இணையத்தளமும் இந்த வேலையை இன்னும் சிறப்பாகச் செய்யும்.

      ஓர் ஆசிரியரின் பங்கு, ஒரு மாணவரை கற்கத் தூண்டுவதாக இருக்க வேண்டும். அறிவுக்கான தாகத்தை உருவாக்குவதாக இருக்க வேண்டும். அப்போதுதான் ஆசிரியரின் பங்கில் ஏதாவது பொருள் இருக்கும்.

      கல்விமுறையை முற்றிலும் தகவல் தொடர்புடையதாய் செய்திருப்பது நம் நாட்டில் ஏராளமான சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வாழ்க்கையில் இளைஞராய் இருக்கும்போது, பல விஷயங்கள் செய்யக்கூடியவராய் இருக்கும்போது, அவர்களுக்குத் தேவையான தூண்டுகோல் இல்லாமல் போய்விட்டால், துரதிர்ஷ்டவசமாக அவர்கள் வாழ்க்கையின் முக்கியக் காலம் பயனற்றுப் போய்விடும்.

      இளைஞர்களுக்குத் தேவையான தூண்டுகோலாக இருப்பதற்கு உங்களுக்குப் பெரிய பொறுப்பும், அர்ப்பணிப்பு உணர்வும் வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, பொறுப்பு உணர்ச்சியும், அர்ப்பணிப்பு உணர்வும் இந்த உலகத்தில் ஒரு பற்றாக்குறைப் பொருளாய் ஆகிவிட்டது. எல்லோரும் ஒரு நாளில் கோலாகலமாக விழா ஒன்று நடத்தி இளைஞர்களை அற்புதமான நிலைகளுக்கு ஊக்குவிப்பது பற்றியே நினைக்கிறார்கள். ஆனால் இது இவ்வாறு நடக்காது. இது ஒரு வாழ்க்கை முழுவதும் நடக்க வேண்டிய விஷயமாகும். இன்றைக்கு ஒன்று செய்துவிட்டு, எல்லாம் முடிந்துவிட்டது என்று வெறுமனே இருந்துவிட முடியாது.

      இது ஒரு செடியைப் பேணி வளர்ப்பதுபோல. அது ஒரு நாள் பழம் கொடுக்க வேண்டுமானால், நீங்கள் அதை தினமும் பேணி வளர்க்க வேண்டும். அதற்குத் தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும். தினமும் அதனைப் பாதுகாக்க வேண்டும். இந்த அர்ப்பணிப்பு உணர்வு வயதானவர்களுக்கு இருக்குமானால், இளைஞர்களால் பல அற்புதமான செயல்களைச் செய்ய முடியும். இந்த அர்ப்பணிப்பு உணர்வு பெரியவர்களிடம் இல்லாததால்தான், இளைஞர்கள் திசைமாறி, என்ன செய்வதென்றே தெரியாமல் தங்களுக்குத் தோன்றியதை எல்லாம் செய்து வருகிறார்கள். பொறுப்பில் உள்ளவர்கள் குறுகிய கால இலக்குகளை நோக்கிச் செயல்படுவதால், இளைஞர்களும் குறுகிய கால இலக்குகளை நோக்கிச் செயல்படுகிறார்கள்.

      இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனும், மனிதர்களின் நலன் குறித்துத்தான் அக்கறை கொண்டு உள்ளார்கள். ஆனால், ஒவ்வொருவரும் மனித நலன்பற்றி வெவ்வேறு அளவுகளில் அக்கறை கொண்டுள்ளார்கள். ஒருவருக்கு மனித நலன் என்பது அவரும் அவரது குடும்பமும். இன்னொருவருக்கு அவரும் அவரது நாடும். மற்றொருவருக்கோ மனித நலன் என்பது இந்த முழு உலகமும் உள்ளடங்கியது. ஒரு குற்றவாளியோ அல்லது ஒரு திருடனோ அவரும் மனித நலன் குறித்துத்தான் அக்கறைகொண்டு இருக்கிறார். ஆனால் அவர், மனித நலன் என்றால் தனது நலன்தான் என்ற கருத்தில் இருக்கிறார்.

      அதனால் இளைஞர்கள் மற்றும் எல்லோரிடமும் ஒரு பெரிய மாற்றம் வர வேண்டும். ஒவ்வொருவருடைய எண்ணமும் தன்னைப்பற்றி மட்டுமல்லாமல் அது இந்த முழுச் சமூகத்தையும், முழு உலகத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

      துரதிர்ஷ்டவசமாக, இது நமது கல்விமுறையில் காணாமல் போய்விட்டது. நவீனக் கல்விமுறை, மக்களைத் தொடர்ந்து தங்களைப்பற்றி மட்டுமே நினைத்துக்கொள்ளப் பயிற்சி அளிக்கிறது. இந்த முழு விஞ்ஞானச் செயல்முறையே, எப்படி எல்லாவற்றையும் நமது இன்பத்துக்கும், நலத்துக்கும் உபயோகப்படுத்துவது என்பதில்தான் இருக்கிறது. இந்த மனப்பாங்கு புதிய கல்விமுறையால் ஆழமாகச் செய்யப்பட்டுவிட்டது.

      தகவல் அறிவைக் கொடுப்பதற்காக எப்படி நமது நேரம், வளங்கள் மற்றும் சக்தி முதலிய-வற்றை முதலீடு செய்கிறோமோ அவ்வாறே நமது இளைஞர்களை ஊக்குவிப்பதற்கும் நமது நேரம், வளங்கள் மற்றும் சக்தி முதலியவற்றை முதலீடு செய்ய வேண்டும். இது நடந்துவிட்டால், நமது உலகம் உண்மையிலேயே ஓர் அழகான இடமாக மாறும்!