Monday, June 20, 2011

நல்ல பெற்றோராக இருப்பது எப்படி? ஆனந்தம்


      உண்மையில்,  பெற்றோராக இருப்பதே ஒரு வேடிக்கையான விஷயம்தான். இதுவரை யாரும் இருந்ததைவிட, நான் ஒரு நல்ல பெற்றவராக அல்லது பெற்றவளாக இருக்க வேண்டும் என்றும் ஒவ்வொருவரும் முயற்சிக்கிறீர்கள். ஆனால், இதுவரை யாருக்குமே, குழந்தைகளை வளர்ப்பதில் எது சிறந்த வழி என்று தெரிந்திருக்கவில்லை. உங்களுக்கு 12 குழந்தைகள் இருந்தாலும் நீங்கள் இன்னும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறீர்கள். 11 குழந்தைகளை நன்றாக வளர்த்திருப்பீர்கள். ஆனால், அந்த 12வது உங்களுக்கு நிறைய வேலையை கொடுக்கலாம். எனவே உங்கள் வேலையை இன்னமும் சிறப்பாக செய்ய ஆசைப்படுகிறீர்கள். அப்படி சிறப்பாக நீங்கள் என்ன செய்யமுடியும்?
      அதற்கு முன் முக்கியமாக உங்களையே நீங்கள் ஒருசில விஷயங்களில் கவனித்து சரிசெய்து கொள்ள வேண்டும். அதற்கு போதுமான நேரம் செலவு செய்ய வேண்டும். நீங்கள் எப்படி  இருக்கிறீர்கள்? எப்படி உட்காருகிறீர்கள்? எப்படி நிற்கிறீர்கள்? எப்படி பேசுகிறீர்கள்? என்ன செய்கிறீர்கள்? என்ன செய்யவில்லை....              
      எல்லாவற்றையும் நன்கு கவனியுங்கள். ஏனெனில், குழந்தைகள் உங்களிடமிருந்து எல்லாவற்றையும் மிக வேகமாக கற்றுக்கொள்கிறார்கள். அதுமட்டுமல்ல, அவர்கள் நீங்கள் செய்வதை எல்லாம் மிகைப்படுத்தியும் செய்வார்கள். எனவே உங்களை முதலில் மாற்றிக்கொள்ளுங்கள். மகிழ்ச்சி, அன்பு, கவனிப்பு, அக்கறை, கட்டுப்பாடு கொண்ட ஒரு சூழ்நிலையை உங்களுக்கும், உங்கள் வீட்டு சூழ்நிலைக்கும் நீங்கள் ஏற்படுத்தினால் நிச்சயமாக குழந்தைகளும் வளர்ச்சி பெறுவார்கள். உங்கள் எல்லைகளுக்குட்பட்டு எவ்வளவு வாய்ப்புகளை உருவாக்கித் தரமுடியுமோ அவ்வளவு வாய்ப்புகளை அவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்க வேண்டும். ஆனால், அடக்கமான குழந்தையை வளர்க்கிறீர்களா? அல்லது அடங் காப்பிடாரியை வளர்க்கிறீர்களா என்பதும் மிகவும் முக்கியமானதுதான். உங்கள் மனைவி கர்ப்பமடைந்துவிட்டால், நீங்கள் உங்களையே மாற்றிக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம். ஏனெனில், இன்னொரு உயிர் இப்போது உங்கள் குடும்பத்திற்குள் வருகிறது. நீங்கள் தற்போது இருக்கும் வழி உங்களுக்கே பிடிக்காதபோது இன்னொரு உயிரும் அந்த வழியில் போகவேண்டாமல்லவா? எனவே நாம் செய்யக்கூடிய செயல்களில் விழிப்புணர்வுடன் இருப்பது மிகவும் அவசியம். அவர்களுக்கு எதைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதுபற்றியும் நான் சொல்கிறேன். அவர்கள் எதைப்பற்றியும் கேள்வி கேட்கும்படி நீங்கள் கற்றுக்கொடுக்க வேண்டும்.  ஆனால் அவர்களின் கேள்வி சந்தேக மனப்பான்மையில் இருக்கக்கூடாது. தெரிந்துகொள்ளும் மனப்பான்மையில் இருக்க வேண்டும். கேள்வி கேட்பது என்பது ஒரு நோயைப் போலவும் ஆகலாம். அல்லது ஒரு ஆரோக்கியமான செயலாகவும் முடியலாம்.
      "எல்லாமே மோசம்' என்று மக்கள் ஏற்கனவே சந்தேகத்துடன் இருப்பதால்தான் கேள்வி கேட்கிறார்கள். இது ஒரு நோய். ஆனால் ஒரு கேள்வியின் அடிப்படை நோக்கம், இன்னமும் சிறிது ஆழமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்பதாகத்தான் இருக்க வேண்டும். உங்கள் குழந்தைகள் தங்கள் மனதில் தோன்றும் எதைப்பற்றி வேண்டுமானாலும், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதையும் சேர்த்து கேள்வி கேட்கலாம் என்ற நிலையை கொண்டுவந்தால் அவர்கள் ஆரோக்கியமான  வழியில் கேள்விகேட்க ஆரம்பிப்பார்கள். நல்ல வழியில் அவர்களுடைய அறிவை உபயோகிப்பார்கள். நீங்கள் இப்படிசெய்வதால் அவன் ஒரு டாக்டராகிவிடுவான்  அல்லது இன்ஜினியர் ஆகிவிடுவான் என்று நினைத்துவிடக்கூடாது. ஆனால் அவனுடைய மூளை எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். எதிலும் விருப்பமுடனும், திறந்த மனதுடனும் இருக்குமாறு அவனை வளர்த்தால் அவன் தன்னுடைய வாழ்க்கையை எந்த அளவு முடியுமோ அந்த அளவு சிறப்பாக அமைத்துக் கொள்வான்.  வேறு யார்  போலவோ ஆகாவிட்டாலும் அவனால் எவ்வளவு முடியுமோ அதைச் செய்வான். ஆனால் இவையெல்லாம் அவன் தன் பாதையில் யாரை சந்திக்கிறான், எந்தெந்த சூழ்நிலைகளை பார்க்கிறான், ஆன்மிக சூழலை பார்க்கிறானா, போர் முனையைப் பார்க்கிறானா, இவை அனைத்தையும் பொறுத்தது. ஏனெனில் இவையெல்லாம் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் இல்லை அல்லவா? நீங்கள் உங்கள் குழந்தையை அன்பு, தியானம், திறந்த மனது போன்ற சூழ்நிலைகளுடன் வளர்த்தால் அவர்கள் பொதுவாகவே நன்றாகத்தான் வளர்வார்கள்.
      அவன் யாரையோ பார்த்து ஏதோ ஒரு சூழ்நிலையில் சிக்கி, தவறாகப் போகிறான் என்றால் அது வேறு விஷயம். ஆனால் அவன் உங்களைப் பார்த்து தவறான வழியில் சென்றுவிடக்கூடாது அல்லவா? நீங்கள் அவர்களுக்குள் பயத்தையோ பாரபட்சத்தையோ, வெறுப்பையோ கொண்டுவந்தால், அது நீங்கள் அவனுக்கு செய்யும் குற்றமாகும்.
      ஏனென்றால் இப்போது உங்களால் அவர்கள் பாதை தவறிப் போக முடியும். எந்தப் பெற்றோருமே இதைத் தன் குழந்தைக்கு செய்யக்கூடாது. ஆனாலும் இது பலவிதமாக நடைபெறத்தான் செய்கிறது.  நீங்கள் உங்கள் பயத்தையும் உங்களுடைய  "இது', "அது' போன்ற குறைகளை எல்லாம் அவர்களுக்குள் விதைக்கிறீர்கள். உங்களுடைய பலவீனத்தை அடுத்த தலைமுறைக்கு மாற்றுகிறீர்கள். இது உங்கள் வேலையினால் இருக்கலாம். நீங்கள் எங்கு வாழ்கிறீர்கள்? என்ன செய்கிறீர்கள் என்பதுபோல பல விஷயங்கள் இருக்கலாம்.
      எல்லா பெற்றோருமே தங்கள் குழந்தைகளை நன்றாக வளர்ப்பதற்கான திறமையைக் கொண்டிருப்பார்கள் என்று சொல்ல முடியாது. எனவே, குழந்தைகள் சிறப்பாக வளர நிறைய இடங்களை உருவாக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இம்மாதிரி இடங்களை உருவாக்க தொழில் ரீதியாக யாரையும் ஆசிரியர் போல நியமித்து செய்ய முடியாது. அவர்கள் இன்னொருவர் குழந்தைக்காக தன்னைக் கொடுக்க மாட்டார்கள். இதற்காக அர்ப்பணிப்பு உணர்வுள்ள தன்னார்வ தொண்டர்களை வேண்டுமானால் நியமிக்கலாம். இது ஒரு சவாலான வேலைதான். ஆனால் அடுத்த தலைமுறையின்மேல் அக்கறை கொண்டவர்கள் இதை செய்யத்தான் வேண்டும். அடுத்த தலைமுறையில் வளர்பவர்கள் உங்களையும் என்னையும் விட ஒருபடி மேலாக இருக்க வேண்டும். அவர்கள் அதிக ஆனந்தத்துடனும்,குறைந்த பயத்துடனும் குறைந்த துன்பத்துடனும், குறைந்த வெறுப்புடனும் இருக்கவேண்டும். இதற்கு நாம் ஏதாவது செய்தாக வேண்டும்.
      உங்களுக்கு இரண்டுகுழந்தைகள் என்றால், அவர்களை அடுத்த தலைமுறைக்கு நீங்கள் விட்டுச்செல்லும் நன்கொடையாக இருக்க வேண்டும். அடங்காப் பிடாரிகளாக இருக்கக்கூடாது. உங்களைவிட சிறிதளவாவது உயர்ந்த மனிதர்களை நீங்கள்  விட்டுச் செல்வதுதான், இந்த மனித சமுதாயத்திற்கு நீங்கள் செய்யக்கூடிய பெரிய பங்களிப்பாக இருக்கும்.

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_22.html

தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். பார்த்து கருத்துக்களை தெரிவித்தால் மகிழ்ச்சி. நன்றி.

Post a Comment