Showing posts with label கடவுள். Show all posts
Showing posts with label கடவுள். Show all posts

Thursday, August 22, 2013

சிகரத்தை அடைவதற்க்கு சுலபமான‌ வழிகள்! ஆனந்தம்

      


      வாகனம் ஓட்டுவது என்று தேர்ந்தெடுத்துவிட்டால் போக்குவரத்து நெரிசலை ஏற்றுக்கொண்டாக வேண்டும். ஆரோக்கியம் குறித்து அக்கறை கொண்டிருந்தால், நாக்கு கேட்டதையெல்லாம் அதற்கு கொடுக்க முடியாது! வருமானம் என்றால் வருமான வரியும் உடன் வரும்.

      வாழ்க்கையில் நீங்கள் எதைத்தேர்ந்தெடுத்தாலும் அதோடு ஒட்டிப்பிறந்த நன்மைகளோடும் தீமைகளும் தான் அதுவரும். முட்களற்ற ரோஜாவைத் தேடுவது எவ்வளவு மடத்தனம்! நானயத்தின் ஒரு பக்கத்தை நீங்கள் தேர்ந்தெடுத்தால் அதன் மறுபக்கத்தையும் சேர்த்துதான் நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள். பிரச்சனைகளற்ற ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு வாழ்க்கை வாழவேண்டும் என்று கேட்க்காதீர்கள். அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை மகான்க‌ளால் கூட வாழமுடியாது! அப்படிப்பட்ட வாழ்க்கை எதுவும் கிடையாது!

      கனவுகள் பெரிதாகும் போது பிரச்சனைகளும் பெரிதாகும். நீங்கள் நடக்க விரும்பும் போது ஒருசில பிரச்சனைகள் மட்டுமே இருக்கும். அதே நேரம் ஒரு ஓட்டப்பந்திய வீரனாக பந்தயங்களில் கலந்து கொள்ள நீங்கள் விரும்பினால், பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும் என்பது வெளிப்படை. வெறுமனே வாழ்க்கையை ஓட்டினால் மட்டும் போதும் என்று நீங்கள் நினைத்தால், பிரச்சனைகள் குறைவு தான். ஆனால் உங்கள் முழுத்திறனையும் வெளிப்படும் விதத்தில் வாழ நினைத்தால், நீங்கள் பெரிய பெரிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

      செதுக்கப்பட நீங்கள் தயாராக இருந்தால் தான், துதிக்கப்படும் ஒரு சிலையின் நிலையை அடையும் தகுதியை உங்களால் பெற‌ முடியும். சிகரத்தை அடைவதற்க்கு சுலபமான‌ வழிகள் ஏதும் கிடையாது. சிகரத்தை அடைந்தவர்கள் அதை சுலபமாக சென்றடையவில்லை.

      என்ன இருந்தாலும் வரலாற்றை படிப்பவனுக்கும், வரலாற்றைப் ப‌டைப்பவனுக்கும் வித்தியாசம் இருக்கத்தானே வேண்டும்?

வெள்ளியின் கதை:    

      பைபிள் வாசிப்புக் குழு ஒன்றில் இப்படி ஒரு வாசகத்தைப் படித்தனர்: "வெள்ளியை சுத்தப்படுத்தும் மாசு அகற்றும் நபர் போல அவர் அமர்ந்திருப்பார்." கடவுளின் குணம் மற்றும் இயல்பு குறித்து இங்கு கூற முற்படுவது என்ன?
      அந்த வாரம் அக்குழுவில் இருந்த ஒரு பெண்மனி வெள்ளி உலோகக்கொல்ல‌ன் ஒருவன் வேலை செய்வதைப் பார்ர்கச் சென்றாள். அங்கே
முதலில் கொல்லன் ஒரு துண்டு வெள்ளியை  எடுத்து தீயில் வைத்து அது சூடாவதற்காக காத்திருந்தான். "வெள்ளியை தீயின் நடுவில் வைக்கவேண்டும். ஏனெனில் அங்கே தான் சூடு அதிகமாக இருக்கும், அது அனைத்து மாசுகளையும் எரித்துவிடும்" என்று எடுத்துரைத்தான் கொல்லன். "முழுநேரமும் உலையின் முன்னாலேயே உட்கார்ந்திருக்க வேண்டும் என்பது உண்மையா?" என்று அந்தப் பெண்மனி கேட்டாள். "உண்மைதான்! முழுநேரமும் உட்கார்ந்திருப்பது மட்டுமல்லாமல், வெள்ளியில் இருந்து கண்களை அகற்றவும் கூடாது" என்றும் தெரிவித்தான். "அதிகப்படியான் ஒரே ஒரு கணம் வெள்ளியை நெருப்பில் விட்டுவிட்டால் அது உருகி ஓடிவிடும்". உடனே அப்பெண்மனி "வெள்ளி முழுவதும் மாசு அகற்றப்பட்டுவிட்டது என்பது உனக்கு எப்படித் தெரியும்?" "ஓ! அது ரொம்ப சுலபம்...... என் உருவத்தை நான் அதில் பார்க்கும் போது!"
      வாழ்க்கைப் பிரச்சனை உங்களை அதிகமாகத் தாக்குவதாக நீங்கள் உணர்ந்தால், கடவுள் உங்கள் மீது தான் வைத்த கண்னை எடுக்கவில்லை என்பதையும், அவரது பிம்பம் உங்களில் தெரியும் வரை அவர் தனது கண்களை அகற்ற மாட்டார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒவ்வொரு மனிதனுள்ளும் ஒரு தீர்கதரிசி உறங்கிக்கொண்டிருக்கிறான். கடவுள் மனிதனாக மாறியதற்க்கு காரணம், மனிதன் மீண்டும் கடவுளாக ஆக வேண்டும் என்பதற்காகதான். வாழ்க்கை என்பது உங்களை எரித்துக் கொண்டிருக்கும் ஒரு உலை அல்ல. ஜொலிக்கும் வெள்ளியாக மாற்றிக் கொண்டிருக்கும் ஒரு உலை!
      வாழ்க வள‌முடன்! 

Monday, November 19, 2012

ஹிக்ஸ் போஸான் – கடவுள் துகளா அல்லது கடவுள் சபித்த துகளா? ஆனந்தம்


      கேள்வி: சத்குரு, ஹிக்ஸ் போஸான் என்று ஒரு புதிய அணுத் துகளை கண்டுபிடித்திருக்கிறார்கள். இதன் மூலம் கடவுள் இருப்பது நிரூபிக்கப்படுமா? அறிவியல் மூலம் அது விளக்கப்படுமா?

      கடவுள் துகள் (god particle) என்று அதற்கு பெயர் வைத்தது நல்லதாய் போயிற்று. ஏனென்றால் யாரோ ஒருவர் அதற்கு கடவுள் சபித்த துகள் (god damn particle) என்று பெயரிட வேண்டும் என்று நினைத்தார்கள்.
      உலகம் முழுவதிலும், பௌதிகத்தில் ஈடுபாடு இல்லாதவர்கூட, இப்பொழுது அணுத்துகள் பௌதிகம் (particle physics) பற்றி பேசுவதே மிகப் பெரிய சாதனைதான். தற்சமயம் போஸானால் தொழில்நுட்ப ரீதியாக உபயோகம் இல்லாவிட்டாலும் அதனை அறிந்து கொள்வதற்காக மட்டுமே பத்து பில்லியன் டாலர் செலவழிக்கப் போகிறார்கள்.
      அறிவியல் ரீதியாக இதன் விளக்கம் என்ன? யோகாவில் படைப்பனைத்தையும் ஸ்தூலம், சூட்சுமம், சூனியம், சிவம் என்று பகுத்துள்ளார்கள். ஸ்தூலம் என்றால் பொருள்தன்மையில் இருப்பது. நீங்கள் பார்ப்பவை, கேட்பவை மற்றும் ஐம்புலன்களால் உணரக்கூடிய அனைத்தும் ஸ்தூலமாகக் கருதப்படுகிறது. அவற்றை உங்கள் அறிவுத்திறனால் புரிந்துகொண்டு கிரகித்துக்கொள்ள முடியும். ஒரு பொருளின் அடிப்படைக் கட்டுமானப்பொருள் அணு. தேவையான அணுக்கள் சேர்ந்தால் நம் கண்ணுக்கு அது புலப்படுகிறது.
      சூட்சுமம் என்பது நம் கண்ணுக்கும் மற்ற புலங்களுக்கும் அப்பாற்பட்டு இருக்கும், ஆனாலும் அதுகூட பொருள்தன்மை கொண்டதுதான். சூட்சும நிலைக்கு வந்துவிட்டால், அப்பொருளை உங்கள் புத்தியால் ஆராய்ந்து அறிய முடியாது. அதற்கு அசாதாரணமான அறிவுத்திறன் அதாவது, விசேஷ ஞானம் தேவைப்படும்.
      இந்த விசேஷ ஞானம்தான் விஞ்ஞானம் எனப்படும். ஐம்புலங்களால் கூட உணர முடியாதவற்றை உங்களால் உணர முடிந்தால் அதுவே விஞ்ஞானம். ஹிக்ஸ் போஸானை யாருமே பார்த்த்தும் இல்லை, பார்க்கவும் முடியாது – அதன் கால்தடம் மட்டுமே பார்க்கமுடியும். கால்தடத்தைப் பார்த்து தான் ஹிக்ஸ் போஸான் இருப்பதாக நம்புகிறார்கள். காட்டில் புலியின் கால்தடத்தைப் பார்த்து புலி நடமாட்டம் இருப்பதாக நம்புகிறோம் அல்லவா, அதுபோலத்தான்.
      இன்னும் மேற்கொண்டு சென்றால் சூன்யம் ஆகிவிடும். சூன்யம் என்றால் முழு வெறுமை என்று அர்த்தம். சூன்யத்தில் உங்கள் அறிவுத்திறன், ஐம்புலங்கள் எல்லாமே பயனற்று போய்விடும். ஏனென்றால் அங்கே பொருள், உருவம் எதுவும் இல்லை. சூன்யத்திற்கும் அப்பாற்பட்டது சிவம். எது இல்லையோ அதுவே சிவம். அது உருவமாக இல்லை. இதனை உங்கள் தர்க்க மனம் கொண்டு உணரவும் முடியாது.
      இன்று நவீன அறிவியல் பிரபஞ்சம் முழுவதையும் தர்க்க மனம் கொண்டு புரிந்து கொள்ளமுடியும் என்று நம்புகிறது. உங்கள் அறிவு வேண்டுமானால் இந்த பிரபஞ்சத்திற்குள் அடங்கலாம்; ஆனால் பிரபஞ்சம் உங்கள் அறிவுக்குள் அடங்கிவிடாது. புலன்களுக்கு அப்பாற்பட்ட பரிமாணத்தை தாண்டியவுடனேயே உங்கள் தர்க்க அறிவு பயனற்றுப் போகிறது.
      பிரபஞ்சம் பற்றி யோகக் கலாச்சாரத்தில் இப்படியெல்லாம் விவரித்து இருக்கிறார்கள் என்று நோபல் பரிசு பெற்ற அறிஞர் ஒருவரிடம் விளக்கினேன். பிரபஞ்சம் குறித்த விஷயங்கள் யோகக் கலாச்சாரத்தில் கதைகளாக சொல்லப்படுகின்றன. அவற்றை எல்லாம் ஒருவர் தன் அனுபவத்தின் மூலம் நிதர்சனமாய் அறிந்தால் மட்டுமே நம்பவேண்டும். அதுவரை எதையும் அப்படியே நம்பக்கூடாது என்றும் இக்கலாச்சாரத்தில் சொல்வார்கள் என்று சொன்னேன்.
      மேலும் என் அனுபவத்தில் இது தான் பிரபஞ்சம் குறித்த நிதர்சனம் என்று என் அனுபவத்தைச் சொன்னேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டேன். உடனே அவர்கள், “சத்குரு, நீங்கள் சொன்ன விஷயத்திற்கு, கூடவே கணிதம் மூலம் ஆதாரம் காண்பித்தால், நோபல் பரிசே கிடைத்து விடும்,” என்றார்கள்
      எனவே அறிவியல் மூலம் அறிய விரும்பும் விஷயங்களை எனக்குள் உண்மை என்று உணர்ந்திருக்கிறேன். இருந்தாலும் பத்து பில்லியன் டாலர் கருவி செய்துதான் நிரூபிக்க முடியும் என்று சிலர் நினைத்தால் அது அவர்கள் பாடு. இது (தன்னைச் சுட்டிக் காட்டுகிறார்) என்ன என்பதின் ஆழத்திற்கு நீங்கள் போகத் தயாராக இருந்தால், உங்களுக்கு அந்த உண்மை நிரூபணமாகிவிடும்.
      ஏனென்றால் இதுவும் (தன்னைச் சுட்டிக் காட்டுகிறார்) பிரபஞ்சமும் ஒரே விதமாகத்தான் உருவாக்கப்பட்டுள்ளது. இது எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது என்று அறிந்தால் பிரபஞ்சம் உருவாக்கப்பட்டுள்ள விதத்தையும் ஊகித்து அறிய முடியும். விஞ்ஞானமும் இப்பொழுது ஊகம் தானே செய்கிறது.
      பிரபஞ்சம் முடிவில்லாதது என்று விஞ்ஞானம் இப்போது ஒப்புக்கொண்டுள்ளது. முடிவில்லாத ஒன்றில் போய் படைப்பின் மூலத்தை தேடுவது எளிதா? அல்லது உங்களுக்குள்ளேயே தேடுவது எளிதா? காலையில் சாப்பிட்ட இட்லி, தோசை எப்படி சிலமணி நேரங்களில் மனிதனாக மாறியது? படைப்பின் மூலமே உங்களுக்குள் இருப்பதால்தான் இது சாத்தியமாகிறது. எனவே படைப்பினைப் பற்றி ஏதேனும் அறிந்து கொள்ள வேண்டும் என்றால், நமக்குள் பார்ப்பது தானே சிறந்த வழியாக இருக்க முடியும்?
      விஞ்ஞானம் இன்று பிழைத்திருப்பதன் காரணம், அது வழங்கும் தொழில்நுட்பம்தான். தொழில்நுட்பமாக மாறாமல் இருந்திருந்தால், விஞ்ஞான ஆய்விற்கு யார் இவ்வளவு செலவு செய்யப்போகிறார்கள்? எனவே விஞ்ஞானத்தால் இத்தகைய பயன்கள் உள்ளன. ஆனால் அந்த விஞ்ஞானத்தால் பிரபஞ்சத்தை உங்களுக்கு திறந்து காட்ட முடியாது. ஏனென்றால் அது அறிவின் மூலம் மட்டுமே அறியமுயல்கிறது. உங்கள் அறிவுத்திறன் எதையும் கூறுபோட்டுதான் பார்க்கும்.
      அழகிய மலரை கூறுபோட்டு அதன் அங்கங்களை அறிய முடியும் – ஆனால் அதன் அழகை, அதன் முழுமையை, தெய்வீகத்தின் கரங்களைப் பார்க்க முடியாது. நீங்கள் அந்த மலரில் முழு கவனம் செலுத்தினால் அதில் பிரபஞ்சத்தையே காண முடியும்.
      இப்பொழுது விஞ்ஞானம் எப்படி ஆகிவிட்டது தெரியுமா? பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றையும் நாம் எப்படி உபயோகப்படுத்துவது என்று பார்க்கிறார்கள். கண்ணுக்குத் தெரியாத அணு, ஏன் அந்த கடவுள் துகள் போஸானைக் கூட விட்டு வைக்கவில்லை. ஒருவேளை ‘போஸான் குண்டு’ செய்தால்? உலகமே ஒரு நொடியில் காணாமல் போய்விடும். புரிகிறதா?
      இன்று இந்த உலகத்தையே நாசப்படுத்துவது இதே தொழில்நுட்பம் தானே? ஒன்றை நன்றாக புரிந்துகொள்ளுங்கள், நவீன தொழில்நுட்பம் முதலில் இராணுவத்தில் பயன்படுத்தி பல உயிர்களை வாங்கிய பின்பே மற்ற பயன்பாட்டிற்கு வரும். இன்னும் எவ்வளவு உயிர்ச்சேதம் வேண்டும்?
      எதைப்பார்த்தாலும் அதை எப்படி உபயோகிப்பது? அதிலிருந்து எனக்கு என்ன பயன்? இப்படித்தான் பார்க்கிறோம். இது தான் நவீன யுகத்தின் போக்காக உள்ளது. எப்போதுமே எனக்கு என்ன பலன் என்று வாழ்வது பெறுமைக்குரிய முறை அல்ல. அப்படி வாழ்ந்தால், எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதது போல்தான் உணர்வீர்கள்.
      எனவே உங்களை முழுமையாக வழங்குவது எப்படி என்று நீங்கள் அறிய வேண்டும். இதோ இந்த மரத்தைப் பார்த்தால் கூட நாம் எப்படி இந்த மரத்திற்கு நம்மை முழுமையாக அர்பணிக்க முடியும் என்று பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் வாழ்க்கையை உணர்வீர்கள். இதில் எனக்கு என்ன கிடைக்கும் என்ற மனப்பான்மையால் வாழ்க்கை உங்களை தவிர்த்து போய்விடும்.
      இந்த போஸான், இந்திய விஞ்ஞானி சத்யேந்திரநாத் போஸ் பெயர்கொண்டிருக்கிறது தெரியுமா? அவர் ஒரு கணித மேதை. ஐன்ஸ்டைன் சொன்னார், “மேற்கத்திய விஞ்ஞானிகள், இந்திய கணிதவியல் வல்லுனர்களின் உதவி இல்லாமல் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை.” கணிதத்தின் அடிப்படையே கிழக்கு நாடுகள்தான். ஆனால் நாம் நம் கலாச்சாரத்தில் இயற்கைக்கு மாறாக எதுவும் செய்ய மாட்டோம். இங்கே இயற்கையை இயற்கை அன்னை என்றுதான் குறிப்பிடுகிறோம்.
      அன்னையிடம் இருந்து என்ன வேண்டுமோ அது மட்டும்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அவளை கற்பழிக்கக்கூடாது. விஞ்ஞானத்தை ஒரு கருவியாக, தேடுதலாக பயன்படுத்துவதே சிறந்ததாகும். இல்லையேல் அதுவே நமக்கு வீழ்ச்சியாகி எல்லாமே ‘கடவுள் சபித்தது’ ஆகிவிடும்.

Wednesday, September 5, 2012

"கடவுளைத் தொலைத்துவிட்டார்கள்?" ஆனந்தம்


      ஓர் ஊரில் குறும்புக்கு பெயர் போன இரண்டு சிறுவர்கள் இருந்தனர். வம்பை விலைக்கு வாங்குவது அவர்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு. பெற்றோர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர்கள் கேட்டபாடில்லை. எனவே பெற்றோர் அவர்களை ஒரு மதகுருவிடம் அழைத்துச் சென்றனர். முதலில் இளையவனை மட்டும் அழைத்துச் சென்று மதகுருவிடம் விட்டுவிட்டு வந்தனர்.
      குறும்பு கார‌ச் சிறுவனை மேலும் கீழும் பார்த்த மதகுரு, நாடக பாணியில் அங்கும் இங்கும் நடக்க ஆரம்பித்தார். "எப்படியாவது கடவுள் அவனுள் தான் இருக்கிறார் என்று உணர்த்திவிட்டால், அவன் குறும்புத்தனம் எல்லாம் அடங்கிவிடும்!" என்று நினைத்தார்.
      பாதி நடையில் நின்று விட்டு கணீர் குரலில், "எங்கே கடவுள்?" என்று கேட்டார். அந்த சிறுவன் மொத்தமாக குழம்பிப்போய் கடவுள் அந்த இடத்தில் தான் எங்கோ இருக்கிறார் போலும் என்று நினைத்து அங்கும் இங்கும் கண்களால் தேடினான்.
      "அவர் உண்ணுள் தான் இருக்கிறார் என்று சிறுவனுக்கு உணர்த்த, மேஜையின் குறுக்கே சாய்ந்து கொண்டு, "கடவுள் எங்கே?" என்று மறுபடியும் கேட்டார் மதகுரு. சிறுவன் இன்னும் குழம்பிப்போய் மேஜைக்கு கீழே குணிந்து கடவுளைத் தேடினான். ஆனால் மதகுரு அவனுடைய இதயத்தை சுட்டிக்காட்டி, "கடவுள் எங்கே?" என்று திரும்பக் கேட்டார். கடவுள் அங்கு தான் இருக்கிறார் என்பதை அந்த பையனுக்கு புரிய வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தார்.
      அவ்வளவு தான் அந்த சிறுவன் கதவு தாள்ப்பாளைத் திறந்து கொண்டு தன் அண்ணன் இருக்கும் இடத்திற்க்கு ஓட்டமாய் ஓடிவிட்டான். அங்கே அண்ணனிடம், "அண்ணா! நாம் பெரும் பிரச்சனையில் மாட்டிக் கொண்டுவிட்டோம்!, அவர்களுடைய கடவுளைத் தொலைத்து விட்டார்கள், அதை நாம் தான் திருடினோம் என்று நினைக்கிறார்கள்!" என்றான்.

Sunday, June 17, 2012

குட்டிக்கதை! கடவுளுக்கு ஓய்வு? ஆனந்தம்


      தாங்களே கடவுளாக மாற விரும்பிய சில விஞ்ஞானிகள் ஒன்றாக சேர்ந்து கடவுளை சந்தித்து. 'முதியவரே, இதுவரை நீங்கள் நன்றாக படைப்புத்தொழிலை செய்து வந்தீர்கள், நாங்களும் உயிரை உருவாக்க முடியும், எதை விரும்புகிறோமோ, எதை விரும்புகிறோமோ அதை எங்களால் உருவாக்க முடியும், எனவே நீங்கள் ஓய்வு பெறுவதற்க்கு இது தான் சரியான நேரம்' என்றார்கள்.
      அதற்கு கடவுள், 'அப்படியா, உங்களால் எதை வேண்டுமானாலும் உருவாக்க முடியுமா? எங்கே ஒரு உயிரை உருவாக்கிக் காட்டுங்கள் பார்க்கலாம்' என்றார். விஞ்ஞானிகள் கொஞ்சம் மண்ணை எடுத்து, எதேதோ செய்து அந்த மண்ணை ஒரு சிறு குழந்தையாக மாற்றி விட்டார்கள். உடனே கடவுள் சொன்னார் 'இதெல்லாம் சரி தான், முதலில் உங்களுடைய சொந்த மண்ணை உருவாக்குங்கள்!

Friday, January 13, 2012

யார் மனிதன்? யார் கடவுள்? ஆனந்தம்

                                          
      கடவுள் என்ற தன்மையில் ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றும் சேர்ந்தால் மனிதன். மனிதன் என்ற தன்மையின் ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றையும் கழித்து விட்டால் அவன் தான் கடவுள்.

Tuesday, July 26, 2011

உண்ணாவிரதப் போராட்டம் ஆனந்தம்


      இன்றைக்கு ஏதாவது பிரச்னை என்றால், அரசியல்வாதிகள் உண்ணாவிரதம் என்று அறிவிக்கிறார்கள். பிரபலம் அடைகிறார்கள். அவர்களுக்கு உடல்நலம் மோசமானால், மக்கள் கொதித்து எழுந்து வன்முறையில் ஈடுபடுகிறார்கள். ஆட்சியில் இருப்பவர்களை அச்சுறுத்தும் ஆயுதமாகிவிட்ட உண்ணாவிரதப் போராட்டத்தைத் தடைசெய்தால் என்ன?''
      ''பொதுவாக, போராட்டம் என்றால் என்ன நடக்கிறது? கடை அடைப்பு அறிவிக்கிறார்கள். தொழில் நடத்துபவர்கள் தாக்கப்படுகிறார்கள். வேலைக்குச் செல்பவர்கள் மிரட்டப்படுகிறார்கள். பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் அடைக்கப்படுகின்றன. தெருவில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, தீ வைத்துக் கொளுத்தப்படுகின்றன.
      நினைத்ததைச் சாதிப்பதற்காக, சாலை மறியல்களில் ஈடுபட்டு மக்களின் அன்றாட வாழ்வைப் புரட்டிப்போடுவதைவிட, உண்ணாவிரதம் சிறப்பான போராட்டம் இல்லையா?வாகனங்கள் மீது கல் எறிவதிலும், பேருந்துகளுக்குத் தீ வைப்பதிலும், கடைகளை உடைத்துச் சூறையாடுவதிலும் ஈடுபடாமல், உண்ணாவிரதம் அறிவித்து அமைதியாக
எதிர்ப்பைக் காட்டுவது கண்ணியமான போராட்டம்.
      இந்தியாவில் இரண்டு வகையான மனிதர்கள் இருக்கிறார்கள். வயிறு பெருத்தவர்கள். வயிற்றுக்குக் கிடைக்காதவர்கள். வயிறு பெருத்தவர்கள் உண்ணாவிரதம் இருந்தால், அது அவர்களுக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது.
      பிரேசிலில் ஒரு நாடோடிக் கதை உண்டு.
      ஒரு பாதிரியார் வாரத்துக்கு ஒரே ஒரு முறை உணவு அருந்தி ஓர் ஆண்டு முழுவதும் விரதம் இருந்தார். கேட்டால், பைபிளில் உள்ள குறிப்பிட்ட வாசகங்களுக்கு நேரடியாகக் கடவுளிடம் இருந்து அர்த்தம் அறியப்போவதாகச் சொன்னார். ஆனால், கடவுளிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை.
      ''சே, உணவையே விட்டுக்கொடுத்தேனே? கடவுளுக்குக் கருணையே இல்லை. வேறு அறிஞர் யாரிடமாவது கேட்டுத் தெரிந்துகொண்டால் போயிற்று!'' என்று அவர் சொன்னதுதான் தாமதம், அவர் முன் ஒரு தேவதை தோன்றியது.
      ''ஒரு வருடம் உண்ணாவிரதம் இருந்தது, மற்றவர்களைவிட நீ உயர்ந்தவன் என்று காட்டிக்கொள்வதற்காக. அப்படிப்பட்டவர்களுக்குக் கடவுள் உதவுவது இல்லை. இப்போது மற்றவர்களிடம் கேட்டு அறியலாம் என்று உன்னிடம் பணிவு வந்தது. உனக்கு விளக்கம் கொடுக்கக் கடவுள் என்னை அனுப்பினார்'' என்றது.
      உங்கள் கொள்கைக்காக உண்ணாவிரதம் என்று நாடகம் போடுவது சரியல்ல. உண்மையான உறுதியுடன் உண்ணாவிரதம் இருந்தால், அது நிச்சயம் வெற்றிபெறும்.
      உண்ணாவிரதம் இருக்கும் தலைவருக்கு உடல்நிலையில் ஏதாவது பிரச்னை வந்தால், தொண்டர்கள் கொதித்துப்«¦பாகிறார்கள். எதையெல்லாம் தலைவர் தவிர்த்தாரோ, அவற்றில் தவறாமல் ஈடுபடுகிறார்கள். பஸ்களுக்குத் தீ வைக்கிறார்கள். கடை அடைப்பை
வற்புறுத்துகிறார்கள். ரயில் தண்டவாளங்களைப் பெயர்த்து எறிகிறார்கள்.
      இதை நிறுத்த வேண்டுமானால், உண்ணாவிரதத்தில் அமர்வதற்கு முன் தலைவர் இப்படி ஓர் அறிக்கை வெளியிட வேண்டும். வன்முறையில் ஈடுபடுவது நம் கொள்கைகளுக்கு எதிரானது. எனக்கு ஏதாவது நடந்தால், எதிர்ப்பைக் காட்ட நினைக்கும் தொண்டர்கள் அனைவரும் உண்ணாவிரதத்தில் ஈடுபட வேண்டும்.'
      ஒரு மனிதர் ஒற்றையாக உண்ணாவிரதம் இருந்தால், நாடு அவரை அலட்சியம் செய்யலாம். ஆனால், நூற்றுக் கணக்கானோர் அமைதியாக உண்ணாவிரதம் மேற்கொண்டால், நாடு அதைக் கவனிக்காமல் தவிர்க்க முடியாது.
      சுமார் 50 வருடங்களுக்கு முன்பு ஆந்திராவில் நடந்த சம்பவம் இது. குறிப்பிட்ட ஒரு கோரிக்கைக்காக 58 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மரணம் அடைந்தார் ஒருவர். அதே கோரிக்கைக்காக அடுத்த நபர் உண்ணாவிரதத்தில் அமர்ந்தபோது, பத்தே நாட்களில் தீர்வு கிடைத்தது.
      1814. பிரான்ஸ் தேசத்துக்கும் பிரிட்டனுக்கும் நடந்த போர் முடிந்திருந்தது. சிறைப்பிடிக்கப்பட்ட ஆங்கிலேய ராணுவக் கைதிகளைச் சொந்த நாட்டுக்கு அனுப்ப பிரான்ஸ் அரசு முடிவு செய்தது. அவர்களை அழைத்துச் செல்ல கப்பல் வரும் வரை, அவர்களை விருந்தினர்களாக ஏற்று, கவனித்து உணவு வழங்கும் பொறுப்பு உள்ளூர் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
      இரண்டு நாட்கள் சென்றிருக்கும்... ஆங்கிலேயத் தளபதி ஒருவர் பிரான்ஸ் அதிகாரியைச் சந்தித்தார்.
      'கப்பல் வரும் வரை எங்களை மறுபடி சிறையிலேயே அடைத்துவிடுங்கள், பிரபு' என்றார் பிரிட்டிஷ் தளபதி.
      'ஏன்? உங்களைக் கவனித்துக்கொள்ள வேண்டிய குடும்பம் உங்களிடம் மோசமாக நடந்துகொண்டதா?'
      'ஐயோ, அப்படி இருந்தால் பிரச்னை இல்லையே? நாங்கள் தங்கியிருப்பது ஒரு விவசாயியின் வீட்டில். அந்தக் குடும்பத்தில் கணவன், மனைவி, ஆறு குழந்தைகள் இருக்கின்றனர். போர் காரணமாக எங்கும் உணவுப் பற்றாக்குறை. அவர்களிடம் இருக்கும் தானியங்கள் அவர்களுக்கே அரை வயிற்றுக்குத்தான் காணும். அதையும் எங்களுக்கு இன்முகத்துடன் வழங்கிவிட்டு, அவர்கள் இரண்டு நாட்களாகப் பட்டினி கிடப்பதைக்
கண்டுபிடித்தோம். சிறையின் கொடுமைகளை எங்களால் தாங்க முடிகிறது. இந்த ஏழைகளின் கருணையை எங்களால் தாங்க முடியவில்லை' என்றார் பிரிட்டிஷ் தளபதி.
      பிரான்ஸ் அரசு, ஆங்கிலேயர் முன் பெருமையுடன் தலை நிமிர்ந்தது. அதே சமயம், அதன் குடிமக்கள் முன் நன்றியுடன் தலை குனிந்தது. விருந்தோம்பலில் ஈடுபட்ட அத்தனைக் குடும்பங்களுக்கும் மகிழ்ச்சியுடன் பரிசளித்தது.
      நீங்கள் உணவு அருந்தாமல் இருப்பது, வெறும் அரசியல் நாடகமாக இல்லாமல், இது போல் மற்றவர் இதயத்தைத் தொட வேண்டும்.
      அமெரிக்காவில், சாலை விபத்தில் உங்கள் மனைவியை, குழந்தையை, நெருக்கமான உறவினரை, நண்பரை நீங்கள் இழந்திருக்கலாம். ஆனால், அந்த விபத்தில் பொதுச் சொத்து எதையாவது
உங்கள் வாகனம் சிதைத்திருந்தால், அதற்கான கட்டணத்தை நீங்கள் கட்டித்தான் ஆக வேண்டும்.
      பொதுச் சொத்துக்களை விறகுகளைப்போல் நினைத்து தீக்கு இரையாக்கும் வன்முறையாளர்கள் நிச்சயம் நிறுத்தப்பட வேண்டும்.
      நீங்கள் எரித்த வாகனத்துக்காக அதன் சொந்தக்காரன் தன் வாழ்க்கையையே அடமானம் வைத்திருக்கக்கூடும். அதை ஓட்டித்தான் அவனுடைய வயிற்றுப்பிழைப்பே நடக்கக்கூடும். மற்றவர் சொத்தை எரிப்பதற்கு உங்களுக்கு ஏது உரிமை?
      மகாத்மா காந்தி வன்முறையில் நம்பிக்கை இல்லாதவர். அதனால், தன் கொள்கைகளை அடுத்தவர் கவனத்துக்குக் கொண்டுவர மற்றவரை வருத்துவதை விடுத்து, தன்னை வருத்திக்கொள்ள உண்ணாவிரதம் இருந்தார்.
      'என் முன் எரியும் பிரச்னை ஒன்று இருக்கலாம். ஆனால், அதற்காக என் உயிரை முன்வைத்தேனே தவிர, உங்கள் உயிரை நான் துச்சமாக நினைக்கவில்லை' என்பதே மகாத்மா காந்தி மற்றவர்களுக்கு முன்வைத்த சேதி.
      'என் கொள்கைக்காக, உங்கள் உயிரையோ, அன்றாட அலுவல்களையோ எந்தவிதத்திலும் ஆபத்துக்கு உள்ளாக்க மாட்டேன்' என்பதுதான் அரசியல்வாதிகள் விடுக்கும் சேதியாக இருக்க வேண்டும். தொண்டர்களும் அதை முழுமனதாகப் புரிந்துகொண்டு தலைவருக்கு
ஆதரவு தெரிவிக்க வன்முறையை நாடாமல், உண்ணாவிரதங்களையே நாட வேண்டும்!''

Wednesday, June 22, 2011

எது வேண்டாம் என்பதை விட என்ன வேண்டும் என சிந்திப்போமா!



      ஆனந்தமான சூழ்நிலை உருவாக வேண்டுமானால் ஆனந்தமாக இருக்கிற மனிதர்களால் மட்டுமே முடியும். பதட்டமானவர்களால் ஆனந்தத்தை ஏற்படுத்த முடியாது. எனவே, எப்போதும் ஆனந்தமாக இருக்க பழகுங்கள்.
      வாழ்க்கையோடு விளையாடுவது, ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் மிகப்பெரிய அற்புதமாகும், ஆனால், வாழ்க்கை நம்மோடு விளையாடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
      உடலையும், மனதையும் மேல் நிலைக்குக் கொண்டு செல்வதுடன், அவற்றை புதிய பரிணாமத்திற்கு கொண்டு போய், அவற்றின் மூலம் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்று எண்ணிபாருங்கள்.
      எத்தகைய உலகில் வாழ விரும்புகிறீர்கள் என்று கேட்டால், அனைவரும் அமைதியான உலகில் வாழ விரும்புவதாகவே கூறுகின்றனர். அப்படியானால் அனைவருடைய கனவும் ஒன்றாகவே இருக்கிறது.
      வாழ்க்கையில் இறுக்கமில்லாமல் இயல்பாக செயல்படுகிற போதுதான் மனிதர்கள் பல மகத்தான கண்டுபிடிப்புகளை செய்கின்றனர்.
      எண்ணங்கள் குவியலாக கிடக்கும் போது, குழப்பங்கள் தான் மிஞ்சுகிறது. மனதுக்குள்ளே ஒரு வரிசையை, ஒழுங்கை, அழகை ஏற்படுத்த தியானம் உதவுகிறது.
      மனிதன் தனக்குள் இருக்கிற மிகப்பெரிய சக்தியை வெளிப்படுத்த வேண்டுமானால் அதற்கு ஒரே வழி இயல்பாக இருப்பது தான். இயல்பாக இருப்பது என்பதை, சோம்பலோடு இருப்பது என்று தவறாக பொருள் கொள்ளக்கூடாது. ஆனால், முயற்சிகளை மேற்கொண்ட பிறகும் சுமையோ, சோர்வோ தெரியாத ஒரு நிலைக்குப் பெயர் தான் இயல்பான வாழ்க்கை.
      வாழ்க்கையில் விலக்க வேண்டிய விஷயங்கள் குறித்து திரும்பத் திரும்ப சிந்தித்து பட்டியல் போடுகின்றனர். எது வேண்டாம் என்பதைச் சிந்திப்பதைவிட, என்ன வேண்டும் என்று எண்ணங்களைப் புகுத்துவதுதான் சரியான அணுகுமுறை.
      நதிகள் சங்கமித்திருக்கும் கடலின் நடுப்பகுதியும், தேங்கிப் போகிற குட்டையும் அமைதியாக காணப்படுகிறது. தியானம் என்பது மனிதனை, இயக்கங்கள் கடந்த ஒரு சமுத்திர நிலைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சியாகும். இயல்பான வாழ்க்கை அமைய, தியானம் மிகப்பெரிய சக்தியைக் கொடுக்கும்.
      உங்கள் வாழ்க்கையை நீங்களே தான் வடிவமைக்க வேண்டும், உங்களுடைய வாழ்வை நீங்கள் வடிவமைக்கிற முறையில் தான் உங்களைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கை, இந்தச் சமூகத்தின் வாழ்க்கை, இந்த தேசத்தின் வாழ்க்கை அனைத்துமே அடங்கி இருக்கிறது என்பதை அனைவரும் உணரவேண்டும்.
      விருப்பு, வெறுப்பு என்று சிலவற்றை வைத்துக் கொண்டிருக்கும் வரை வாழ்க்கை போராட்டமாகத்தான் இருக்கும் என்பதால், இவற்றை தவிர்த்து வாழ்க்கைக்கு தேவையான நல்ல செயல்களில் ஈடுபட வேண்டும்.
      தனக்குள் கடவுளை தேடி உணர்ந்தவர்கள் மற்றவர்களோடு சண்டையிடும் முட்டாள்தனத்தில் ஈடுபடமாட்டார்கள். 

Thursday, June 2, 2011

கட‍-உள் ஆனந்தம்


      ஒருவன் ஞானியிடம் சென்று,  கடவுள் எல்லா இடத்திலும் இருப்பது  உண்மை எனில் ஏன் காண முடிவதில்லை என்று கேட்டான்.

ஞானி : (கொஞ்சம் உப்பை எடுத்து) "உப்பு தெரிகிறதா"

அவன்: "தெரிகிறது"

ஞானி : (பிறகு அதை தண்ணீரில் கரைத்து) "இப்போது உப்பு தெரிகிறதா"

அவன்: "இல்லை"

ஞானி : உப்பு இல்லையா, அல்லது உன்னால் காணமுடியவில்லையா,  நீரை அருந்திப்பார்.

அவன்: (நீரை அருந்திவிட்டு) உப்பு இருக்கிறது, அதனை என்னால் உணரமுடிகிறது, ஆனால் உப்பு கரைந்துவிட்டதனால் என்னால் பார்க்க முடியவில்லை.

அப்போது ஞானி கூறினார்  "அது போலதான் கடவுளும்". காண முடியல்லை என்பதால் இல்லை என்று பொருள் கொள்ளக்கூடாது. காண வேண்டி அலையாதே, உணர்ந்து கொள், கட-உள் என்றார்.

Sunday, February 27, 2011

மனித வாழ்வு எதற்காக? ஆனந்தம்

      மனித வாழ்வு எதற்காக? ஏன் இந்தப் பிரபஞ்சம் இருக்கின்றது? என்று கேட்கும்போதெல்லாம், நான் உங்களுக்குக் கதைகள்தான் சொல்ல வேண்டும்.
      ஒருநாள் கடவுள் வேலையேதுமின்றி அமர்ந்திருந்தார். அப்போது அவர் கோலிக்குண்டு விளையாடிக் கொண்டிருந்தார். ஒரு கோலி இங்கே விழுந்து அது பூமியானது. மற்றொன்று அங்கே விழுந்து சூரியன் ஆனது. வேறு ஏதோ செய்தார். மனிதர்கள் உருவானார்கள். இதுபோன்ற கதைகளை நான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டே போகலாம்.
      நான் என்ன கதைகளை உங்களுக்குச் சொன்னாலும், சிலர் அவற்றை நம்பலாம்; சிலர் அவற்றாஇ நம்பாமலும் இருக்கலாம். நீங்கள் இந்தக் கதைகளி நம்பினாலும், நம்பாவிட்டாலும் உங்கள் வாழ்க்கை எந்த வழியிலும் வளமடையப் போவதில்லை. உங்களில் பலர் இதுவரையில் ஏதோவொன்றில் எப்போதுமே நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள்.
      இங்கே இருக்கும் உங்களில் எவ்வளவு பேர் கடவுள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள்? சரி. எவ்வளவு பேர் கடவுள் மீது நம்பிக்கையின்றி இருக்கிறீர்கள்? (மிகச் சிலர்தான்). சிலர் கடவுளை நம்புகிறார்கள், சிலர் கடவுள் மீது நம்பிக்கையற்று இருக்கிறார்கள். சரி. உங்களில் எத்தனைபேர் இரண்டு கைகள் உங்களுக்கு இருப்பதாக நம்புகிறீர்கள்? உங்களுக்கு இரண்டு கைகள் இருப்பதாக நீங்கள் நம்புகிறீர்களா? அல்லது உங்களுக்கு இரண்டு கைகள் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? கைகளைக் காண்பதற்கு நமக்குக் கண்களே இல்லாவிட்டால் கூட, நமக்கு இரண்டு கைகள் இருப்பதை அனுபவப்பூர்வமாய் அறிவீர்கள், இல்லையா?
      யாரேனும் உங்களிடம் ஒரு விவாதம் தொடங்கி, உங்களுக்கு கைகளே இல்லையென நிரூபிக்க முடியுமா? அது சாத்தியமா? இந்த விவாதம் மிகவும் சூடாகும்போது, அவருக்கு ஓங்கி ஒரு அறை கொடுத்தால், உங்களுக்குக் கைகள் இருக்கின்றன என்பதை அவர் அறிந்துகொள்வார். உங்களுக்கு கைகள் இருப்பதை அறிவீர்கள்.
      ஆனால் கடவுளை மட்டும் எப்படி நம்புகிறீர்கள். இது ஏன்? நமக்கு எதுவெல்லாம் தெரியாதோ, அவற்றை நாம் நம்புகிறோம். சிலர் கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறார்க்ள். சிலர் கடவுள் இல்லையென்று நம்புகிறார்கள். நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் அவற்றால் எந்தப் பயனும் இல்லை.
      எனக்குத் தெரியாது என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டால்தான் ஒரு தேடுதல் உங்களுக்குக் தொடங்கும். தேடுதலுக்கான தேவை ஒருமுறை வந்துவிட்டால், அதற்கான விடை வெகுதூரத்தில் இல்லை. ஒருமுறை நீங்கள் ஏதாவது ஒன்றை நம்பத் துவங்கிவிட்டால், உங்களுக்குள் உள்ள தேடுதல் அழிந்து விடும். நீங்கள் ஒரு முடிவுக்கு வந்து விடுகிறீர்கள். ஏதாவதொன்றைப் பற்றி ஒருமுறை நீங்கள் முடிவு செய்துவிட்டால், உண்மையைப் பற்றி அறிவதற்கான அடிப்படை வேட்கையே உங்களுக்குள் அழிந்துவிடும்.
      நீங்கள் கௌதம புத்தரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒருமுறை புத்தர் அதிகாலைப் பொழுதில், சூரியோதயத்திற்கு முன்பு தனது சீடர்களுடன் சத்சங்கத்தில் அமர்ந்திருந்தார். இன்னும் இருட்டாகவே இருந்தது. அப்போது ஒரு மனிதர் அங்கே வந்தார். அவர் ஒரு ராமபக்தர். அவர் வாழ்க்கை முழுவ்டஹும் சொல்லிக் கொண்டிருந்தது, ‘ராம், ராம், ராம்!’ தான். வேறெதையும் அவர் சொன்னதில்லை. அவரது ஆடைகளில் கூட முழுவதுமாக ‘ராம், ராம்’ என்றே எழுதி இருந்தது. அவர் கோவிலுக்குச் செல்பவர் மட்டுமல்ல; நிறைய கோவில்கள் கட்டியவரும்கூட. வயதாக வயதாக ஒரு சிறு சந்தேகம் அவருக்கு எழுந்தது. ‘என் வாழ்க்கை முழுவதும் நான் ராம், ராம் என்றே சொல்லி வந்துள்ளேன். ஆனால் கடவுள் மீது நம்பிக்கை இல்லையென்று சொல்பவர்கள் கூட உள்ளனர், அவர்களுக்கும் கூட சூர்யோதயம் நடக்கின்றது, சுவாசமும் நடக்கின்றது. அவர்களும் சந்தோஷமாகத் தான் இருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்விலும் பல‌ சந்தோஷமான நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நான் வெறுமனே அமர்ந்து ‘ராம், ராம்’ எனச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை இவர்கள் கூறுவதைப் போல கடவுள் இல்லையென்றால்… எனது வாழ்க்கை முழுவதும் வெறுமையாகி, ஒன்றுமில்லாமல் போய்விடுமே!’ கடவுள் இருக்கிறார் என்ற ஆழ்ந்த நம்பிக்கை அவருக்குத் உண்டு. ஆனாலும் சிறு சந்தேகம் வந்துவிட்டது; அவ்வளவுதான்.
      ஆனால் எப்படி இந்தக் கேள்வியை புத்தரிடம் அனைவர் முன்னிலையிலும் கேட்பது? எனவே அவர் அதிகாலையில் இருட்டாக இருக்கும்போதே வந்து ஒரு மூலையில் நின்றவாறு, ‘கடவுள் இருக்கின்றாரா, இல்லையா?’ என்ற கேள்வியைக் கேட்டார். கௌதம புத்தர் அவரைப் பார்த்து ‘இல்லை’ என்று கூறினார். இந்தப் பதிலைக் கேட்டவுடன் சீடர்கள் மத்தியில் ஒரு நிம்மதிப் பெருமூச்சு வெளிப்பட்டது. கடவுள் இருக்கின்றாரா, இல்லையா என்ற போராட்டம் அவர்களுக்குள் அன்றாடம் நிகழ்ந்து கொண்டிருந்தது. பலமுறை அவர்கள் இந்தக் கேள்வியை கௌதமரிடம் கேட்கும்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் அவர் அமைதியாகவே இருந்துவிடுவார். இப்போதுதான் முதன்முறையாகத் தெளிவாகவும், அழுத்தமாகவும் ‘கடவுள் இல்லை’ என்று கூறியிருக்கிறார்.
      கடவுள் இல்லாமல் இருப்பதென்பது எவ்வளவு மகிழ்ச்சியானது! உங்கள் வாழ்வில் நீங்கள் எது வேண்டுமாலும் செய்ய முடியும். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள், என்ன செய்யவில்லை என்பதை கவனித்துக் கொண்டிருக்க ஒருவரும் இல்லை. உங்களை நரகத்தில் தள்ளித் துன்புறுத்துவதற்கு யாருமே இல்லை. இது உங்களுக்கு முழுமையான சுதந்திரம் இல்லையா? கடவுள் இல்லையென்றால் உங்களுக்கு முழுமையான சுதந்திரம். சீடர்கள் மத்தியில் நிறைவான சந்தோஷம். அந்த நாள் சந்தோஷமான நாளாக இருந்தது.
      மாலை நேரத்தில் புத்தர் அவருடைய சீடர்கள் மத்தியில் அமர்ந்திருந்த போது, மற்றொரு மனிதர் அங்கே வந்தார். அவர் ஒரு சார்வாகர். அந்த நாட்களில் சார்வாகர்கள் என்றொரு பிரிவினர் இருந்தனர். அவர்கள் பொருளீட்டுவதில் மட்டுமே நாட்டம் உள்ளவர்கள். அவர்கள் பார்ப்பதை மட்டுமே நம்புபவர்கள். வேறு எதையும் நம்புவதில்லை. அவர்கள் உங்கள் நகருக்கு வந்து உங்களிடம் சவால் விடுவார்கள். ‘யாராவது கடவுள் இருக்கின்றார் என்று நிருபித்தால் தான் நூறு பொற்காசுகள் தருவேன். இல்லையென்றால், நீங்கள் அனைவரும் சேர்ந்து நூறு பொற்காசுகளை எனக்குத் தர வேண்டும்.” அவருடைய வாழ்க்கை முழுவதும் இந்த வழியில் மட்டும் சம்பாதித்தார். ஊர் ஊராகச் சென்று ‘கடவுள் இல்லை, கடவுள் இல்லை’ என நிருபித்து வந்தார். இது அவருடைய வேலை. கடவுள் இல்லை என்பதை ஆயிரக்கணக்கான மக்களுக்கு நிரூபித்து அவர் தனது துறையில் பெரிய மனிதராகத் திகழ்ந்தார்.
      தற்போது வயது ஆக ஆக சிறு சந்தேகம் வந்துவிட்டது. ‘எனது வாழ்க்கை முழுவதும் கடவுள் இல்லையென்றே நான் மக்களிடம் கூறி வந்திருக்கிறேன். ஒருவேளை கடவுள் இருந்தால்? நான் அங்கே போகும்போது அவர் என்னை விடுவாரா? நரகம் என்று ஏதோ இருப்பதாக மக்கள் சொல்கிறார்களே.’ சிறு சந்தேகம்… கடவுள் இல்லையென்று அவருக்குத் தெரியும். இதனை அவரது வாக்கை முழுவதும் நிருபித்தும் வந்திருக்கிறார். ஆனால் ஒரு சிறு சந்தேகம்… ஒருவேளை கடவுள் இருந்தால்? எதற்கு வம்பு, நகரிலே ஞானமடைந்த மனிதர் ஒருவர் இருக்கிறார். அவரிடம் கேட்போம். ஆகவே மாலை வேளையில் இருட்டிய பிறகு, அவர் புத்தரிடம் சென்று, ‘கடவுள் இருக்கிறாரா?’ என்று கேட்டார்.
      கௌதமர் அவரைப் பார்த்து, ‘ஆமாம்’ என்று கூறினார். மீண்டும் ஒரு மிகப் பெரிய போராட்டம் சீடர்களிடையே தொடங்கியது. கடவுள் இல்லையென்று அவர் கூறியதால் காலை முதல் அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். ஆனால் மாலையிலோ கடவுள் இருக்கிறார் என்று கூறுகிறார். ஏன் இப்படி?
      வளர்ச்சியடைவதற்கான தேவை உங்களுக்குள் ஆதாரமாக இருக்கும்போது, இது உங்களுடைய நோக்கமாக இருக்கும் போது, எது உங்களுடைய அனுபவத்தில் இருக்கின்றது. எது இல்லை என்பதைப் பற்றிய தெளிவு முதலில் உங்களுக்கு இருக்க வேண்டும். உங்கள் அனுபவத்தில், இருப்பது எது?, இல்லாதது எது? என்பதைப் பற்றித் தெளிவாக வ்ரையறுத்துக் கொள்ளூங்கள். உங்கள் அனுபவத்தில் எது இல்லையோ அதனை இல்லையென நீங்கள் கூறத் தேவையில்லை. வெறுமனே ‘எனக்குத் தெரியாது’ என்று கூறுங்கள். நீங்கள் ‘தெரியாது’ என்று ஏற்றுக்கொண்டால், பிறகு வளர்ச்சி ஏற்படும். ஆனால் தற்போது உங்களுக்கு எதுவெல்லாம் தெரியாதோ, அவற்றை நம்பத் தொடங்குகிறீர்கள். உங்களுக்கு அனைத்துமே தெரிந்ததாக எண்ணுகிறீர்கள்.
      இந்தியாவில் உங்களுக்குக் கடவுளைத் தெரியும். அவ்ர் எங்கிருக்கிறார் என்று தெரியும். அவ்ருடைய பெயரும் உங்களுக்குத் தெரியும்.. அவருடைய மனைவி யாரென்று உங்களுக்குத் தெரியும். அவருக்கு எத்தனை குழந்தைகள் என்றும் உங்களுக்குத் தெரியும். அவருடைய பிறந்தநாளும் தெரியும். அவருடைய பிறந்த நாளிற்கு அவர் விரும்பும் இனிப்பு என்ன என்பதும் உங்களுக்குத் தெரியும். ஆனால் உங்களுக்குள் என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது. தற்போதிய முழுப்பிரச்சனையும் அதுதான். உங்களுக்கு சொர்க்கத்தின் முகவரி கூடத் தெரியும். ஆனால் இந்தக் கணத்தில் உங்களுக்குள் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய விழிப்புணர்வு உங்களுக்கு இல்லை.
      இப்போது உங்களுக்குள் வளர்ச்சி நடைபெற வேண்டுமெனில், இப்போது உங்கள் அனுபவத்தில் என்ன இருக்கின்றது என்பதைப் பார்க்க வேண்டும். இப்போது உங்கள் அனுபவத்தில் என்ன இருக்கின்றது? உங்கள் உடலை ஓர் அளவிற்கு உணர்ந்திருக்கிறீர்கள். இந்த மனதை ஓரளவிற்கு உணர்ந்திருக்கிறீர்கள். இந்த உடலையும், மனத்தையும் இயக்குகின்ற சக்தியினை ஒரு குறிப்பிட்ட ஆளவிற்கு ஒரு சிஅல் கணங்கள் நீங்கள் உணர்ந்திருக்க முடியும். இதைத் தாண்டி நீங்கள் எதையும் உணரவில்லை. மற்றவை எல்லாமே கற்பனைதான்.
      இந்தச் சமூகம் எந்த வழியில் கற்பித்ததோ, அதே வழியில்தான் உங்கள் கற்பனையும் உள்ளது. உங்கள் அனுபவத்தில் எது இருக்கின்றது? எது இல்லை? என்று பாருங்கள். உங்களது அனுபவத்தில் இல்லாததை எல்லாம் ‘எனக்குத் தெரியாது’ என்று நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள். இது மிக மிக அவசியமானது. இல்லாவிட்டால் உங்கள் வாழ்க்கை முழுவதும் பாசாங்காகிவிடும். நிஜமான ஆனந்தத்தை இழந்து விடுவீர்கள். இப்பொழுது என்ன நடக்கிறது என்பதை உணரத் தொடங்கினால் அது உங்களை ஆனந்தமயமான வாழ்கைக்கு இட்டு செல்லும்....

Friday, January 7, 2011

கடவுளைத் நம்பாதீர்கள் ஆனந்தம்

       வாழ்க்கையின் ஒவ்வொரு கோணத்தையும், படைபின் ஒவ்வொரு ரகசியத்தையும் நுணுக்கமாக கவனித்து உருவான கலாச்சாரம், இங்கு போல் உலகத்தில் வேறு எங்கும் இல்லை.
       வாழ்க்கையின் பூரணத்துவத்தை வேர் வரை உய்ந்து உணரக்கூடிய கலாச்சாரத்தில் பிறந்தும், உலகில் நாம் கோமாளிகளாகத் தோற்றம் அளிக்கக் காரணம் என்ன?
       அடிப்படையான பிழைப்புக்குக் கூட நம்மை நம்புவதை குறைத்துக் கொண்டு, கடவுளை நம்பி இருப்பது தான்!
       இந்த உலகில் த்ங்களுக்குத் தேவையானதை தேடிப் பெற, மண்புழுவிலிருந்து மாபெரும் யானை வரை யாவும் த‌ங்கள் திறமையை நம்பித்தான் இருக்கின்றன. யாரிடமும் போய் உதவி கேட்பதில்லை.
       அவற்றையெல்லாம் விட மிக அதிகமான புத்திசாலித்தனம் கொண்ட மனிதன் மட்டும்தான் தனக்குத் தேவையானதைக் கடவுளிடம் கேட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கிறான்.
       நீங்களும் பிழைத்திருக்க உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கைகளும் கால்களுமே போதும்!
       உங்கள் உடலையும் மனதையும் எப்படி திறம்படப் பயன்படுத்துவது என்பதற்கான பயிற்சிகள் கொடுத்தால் போதும்!
       அதை விட்டுவிட்டு, கடவுளை உங்கள் பிழைப்புக்காக உதவுவதற்கு அழைப்பது கேவலம்.
       ஆம், தினப்படி வாழ்க்கைக்குக் கடவுள் தேவையில்லை!
       பல லட்சம் கோயில்கள் இருந்தும், எங்கு திரும்பினாலும் ஏன் வேதனை மிகுந்த முகங்களைப் பார்க்கிறோம்?
       உண்மையையும், உபதேசத்தையும் போட்டுக் குழப்பிக் கொண்டதால் வந்த பிரச்சனை இது.
       கடவுள் உங்களை விட மிக சக்தி வாய்ந்தவர்; அவர் இல்லாமல் ஓர் அணுவும் அசையாது என்பீர்கள்.
       ஆனால் அவரை நம்பி உண்மையிலேயே உங்களை ஒப்படைப்பீர்களா? மாட்டீர்கள்?
       அவரின் புத்திசாலித்தனத்தின் மீது சந்தேகம் கொண்டு தினம் தினம் அவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் முன் நின்று கண்களை மூடிய படி, நீங்கள் அல்லவா அவருக்கு சொல்லிக் கொடுக்கிறீர்கள்?
       உழைக்காமல் சாப்பிடவும், படிக்காமல் தேர்வுகளில் பாஸ் செய்யவும், உங்கள் த‌வறுகள் கவனிக்கப்படாமல் போகவும் கடவுளைத் துணையிருக்கச் சொல்லுகிறீர்கள்.
       வாழ்க்கை திடுமெனப் புரண்டுவிட்டால் என்ன செய்வது என்று கடவுளை ஒரு இன்சூரன்ஸாக வைத்திருக்கிறீர்கள். கோயில் கோயிலாக அதற்கான பிரிமியம் கட்டுகிறீர்கள்.
       'இதையெல்லாம் கொண்டு வா!' ' இதிலிருந்து காப்பாத்து!' என்று உங்கள் சேவகனாகவும், பாதுகாப்பு சிப்பாயாகவும் கடவுளை நியமிக்கப் பார்க்கிறீர்கள்.
       வாழ்க்கையை பற்றிய அச்சம் மட்டுமே உங்களிடம் கடவுள் நம்பிக்கையை வளர்த்திருந்தால் உங்களிடம் தெய்வமும் தங்காது... வாழ்க்கையும் மிஞ்சாது!
       சங்கரன்பிள்ளையிடம் ஒரு வேலைக்காரன் இருந்தான். ஒரு முறை உப்பும் சர்க்கரையும் வாங்கி வர அவனை சங்கரன்பிள்ளை கடைத்தெருவுக்கு அனுப்பினார்.
       வேலைக்காரன் முத‌லில் பை நிறைய சர்க்கரை வாங்கினான். அடுத்ததாக உப்பு வாங்கப் போனபோது, 'இரண்டையும் கலந்து வாங்கி வந்து விடாதே' என்று சங்கரன்பிள்ளை எச்சரிக்கை செய்திருந்தது நினைவுக்கு வந்தது.
       பையை உள்ளும் வெளியுமாக புரட்டி விட்டால் வேறொரு பையாகி விடுமே என்று புரட்டினான், சர்க்கரையெல்லாம் தெருவில் கொட்டி வீணானது.
       பையில் உப்பை நிரப்பிக் கொண்டு வீடு திரும்பினான்.
       "உப்பு இருக்கிறது சர்க்கரை எங்கே?" என்று சங்கரன்பிள்ளை கேட்டார்.
       அந்த புத்திசாலி வேலைக்காரன், 'பையின் அந்தப் பக்கம் இருக்கிறது' என்று பையை மறுபடி புரட்டினான். உப்பும் பூமியில் கொட்டி மண்ணில் கலந்தது.
       அச்சமும் கடவுள் நம்பிக்கையும் இப்படித்தான். இரண்டையும் குழப்பிக்கொண்டால் எதற்கும் உதவாது. இத்ற்கு பக்தி என்று பெயர் சூட்டி ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்.
       உண்மையில் கடவுளை உங்க‌ளுக்கு மேலானவராக எண்ணினால், உங்கள் வாழ்க்கை எதிர்பார்த்தபடி நடக்காத போது, ஆஹா, கடவுள் விருப்பப்படி நடக்கிறதே! என்று ஆனந்தமல்லவா கொள்ள வேண்டும்! முடிகிறதா?
       மாறாக, வாழ்க்கையை எப்படி நடத்தித்தர வேண்டும் என்று பிரார்த்தனை என்ற பெயரில் கடவுளுக்கு உத்தரவு அல்லவா கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்?
       சந்தேகம் இருக்கும் மனதில் பக்தி நிகழ்வதில்லை. கடவுளிடம் பணிவது போன்ற பாசங்கு தான் நிகழ்கிறது.
       பக்தி என்பது உங்கள் அடையாளங்களை இழந்து எதன் மீது பக்தி கொண்டீர்களோ அதனுடன் இரண்டரக் கரைவது.
       உங்கள் தவறுகளுக்கான பழியை சகமனிதர்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லாத‌ போது, தெய்வச் செயல் என்று அவற்றை சுமத்த வசதியான தோள்களாகக் கடவுளை வைத்திருக்கிறீர்கள்.
       அதன் பெயர் பக்தி இல்லை. போலித்தனம்!
       உங்கள் வாழ்க்கையை, கடவுளின் உதவியைக் கோராமல் நீங்களாக வாழக் கற்றுக் கொண்டீர்களானால், உங்கள் வாழ்க்கை மேன்மையாகிவிடும்.
       உங்களூக்குத் தேவையான உணவு கிடைத்துவிட்டது, விரும்பிய துணை, குழந்தைகள், வசதிகள் அனைத்தும் கிடைத்து விட்டது, இருந்தாலும் இன்னும் வேறு எதற்காகவோ மனம் ஏங்குகிறதே அதன் பெயர் என்ன?
       இந்தப் படைபின் வேர் என்ன என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் அப்போது தான் தலையெடுக்கிறது என்று அர்த்தம். அதுதான் உண்மையான தேடல்......
       அப்போது தான் கடவுளைப் பார்க்க நீங்கள் தயார். உண்மையான ஆனந்தத்தை அடைய நீங்கள் தயார்..........அதுவரை கடவுளைத் துரத்தாதீர்கள், விட்டுவிடுங்கள்........
வாழ்க வளமுடன்!

Friday, December 31, 2010

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? - 2 ஆனந்தம்:

      கடவுள் இருக்கிறார் என்று யாரோ சொன்னதற்க்காக நம்புவதோ, கடவுள் இல்லை என்று யாரோ சொன்னதற்க்காக மறுதலிப்பதோ எப்படி புத்திசாலித்தனம் ஆகும்?
       கடவுளை நம்புவதும் நம்பாததும் கடவுளின் பிரச்சனை இல்லை அது முழுக்க முழுக்க உங்கள் பிரச்சனை.
       ராமர் இருந்தாரா, கிருஷ்ணர் வந்தாரா, ஜீஸஸ் இருந்தாரா, நபிகள் வந்தாரா என்பதா பிரச்சனை?
       உங்கள் அனுபவம் என்ன?
       யூதர்கள் கடவுளுடன் நேரடித் தொடர்பு வைத்திருப்பதாகச் சொல்லிக் கொள்பவர்கள். அவர்களைப் பற்றி ஒரு வேடிக்கைக் கதை.....
       யூதர்களின் தலைவரான ஜோஷ்வா கோல்டுபெர்க் வருடத்திற்கொரு தடவை சொர்கத்திற்குப் போய் கடவுளுடன் அமர்ந்து விருந்து உண்ணும் உரிமை பெற்றிருந்தான்.
       அப்படி ஒருமுறை கடவுளுடன் விருந்துக்கு அமர்ந்திருந்த நேரம்.... வருடா வருடம் மாற்றமில்லாமல் வறட்டு ரொட்டிகள் தான் பரிமாரப்படுவது தான் வழக்கம்.
       'கடவுளே ஒரு சந்தேகம் என் மனதை அரித்துக் கொண்டிருக்கிறது' என்று கேட்டு விட்டு ரொட்டியை கஷ்டப்பட்டு மென்றான் ஜோஷ்வா.
       'கேள்,மகனே!'
       'உங்கள் சாம்ரஜ்ஜியத்தில் உங்களுக்கு நெருக்கமானவர்கள் நாங்கள் மட்டும் தானா? வேறு யாராவது உண்டா?' என்று அடுத்த ரொட்டித் துண்டை விழுங்கித் தண்ணீரைத் தொண்டையில் சரித்துக் கொண்டான்.
       'சந்தேகமே வேண்டாம். வேறு யாருக்கும் அந்த சிறப்புரிமை இல்லை. அதனால் தான் உன்னை மட்டும் விருந்துக்கு அழைத்தேன்...'
       ஜோஷ்வா கையில் எடுத்த ரொட்டித்துண்டை கீழே போட்டுவிட்டு எழுந்து, 'எத்தனை நாட்களுக்கு எங்களுக்கே இந்த அவஸ்த்தை? வேறு யாரையாவது உங்களுக்கு நெருக்கமானவர்களாக தேர்ந்தெடுத்துக் கொள்ளக்கூடாதா?' என்றான் கோபமாக.
       இப்படிக் கடவுளுக்கு நெருக்கமானவர்களாக சொல்லிக் கொள்பவர்களுக்குத் தானே அதிக வேதனை?
       இவர்கள் கடவுள் என்பதன் உன்னதத்தை புரிந்து கொள்ளவில்லை. கடவுளைப் பற்றிய உண்மையான அனுபவத்தை பெற்றதில்லை.
       ஆனாலும் கடவுளுக்கும் மற்றவர்களுக்கும் இடைத்தரகர்களாக இருந்து ஆதாயம் தேட, இவர்கள் போடும் நாடகங்கள் சகிக்க முடியாதவை.
       கடவுளை நீங்கள் முழுமையாக நம்பி வாழ்ந்திருக்கிறீர்களா?
       சிலர் இருக்கிறார்கள்... நெருக்கமானவர்களுக்கு உடல்னிலை மோசமாக இருந்தால் கடவுளிடம் வேண்டிக்கொள்வார்கள்.
       அப்படியும் அவர்கள் பிழைக்கவில்லை என்றால் 'கடவுள் என்பதெல்லாம் பொய்' என்று வீட்டில் இருக்கும் படங்களை எல்லாம் கழற்றி விட்டெறிவார்கள்.
       தனக்கு ஏதாவது காரியம் ஆகவேண்டும் என்று கேட்டு நடக்கவில்லை என்றால், கடவுளே இல்லை என்று சொல்வார்கள்.
       வளர்க்கப்பட்ட விதத்திலும், விதைக்கப்பட்ட் விதத்திலும் தானே உங்களுக்கு கடவுளை நம்பத் தெரிந்திருக்கிறது?
       கடவுள் இருக்கிறார் என்பது ஒரு நம்பிக்கை. இல்லை என்பது இன்னொரு நம்பிக்கை. இருக்கிறாரா? இல்லையா? என்பது உஙளுக்குத் தெரியாது என்பதே பட்டவர்த்தனமான உண்மை.
       எனக்குத் தெரியாது என்று எப்பொது தைரியமாக ஒப்புக்கொள்கிறோமோ, அப்போது தானே எதைப் பற்றியும் தெரிந்து கொள்வதற்க்கான வாய்ப்பு முழுமையாகக் கிடைக்கும்!
       வெறும் நம்பிக்கைகளை வைத்துப் பின்னப்படும் கற்பனைகளை எதற்கு ஏற்றுக்கொள்ள வேண்டும்?
       கடவுளைப் பற்றி அறிந்துகொள்ளும் பற்றி அறிந்துகொள்ளும் தாகம் உண்மையிலேயே உங்களுக்கு இருந்தால், மற்ற‌வர்கள் சொல்லிக் கொடுத்ததை குருட்டுத்தனமாக நம்புவதை முதலில் விட்டுவிடுங்கள்.
       கடவுள் இருக்கிறாரா? என்று நீங்களே தேடுங்கள்,
       உங்கள் தேடலை உங்களிடமே ஆரம்பியுங்கள்.
       எல்லையற்ற கடவுள் என்றொருவன் எல்லா இடங்களிலும் இருப்பது உண்மையாக இருந்தால், அந்தத் தன்மை உங்களிலும் இருக்கவேண்டுமே?
       உருவமாகத் தேடாமல் கடவுள் தன்மை என்பதை முதலில் உங்களில் தேடிப் பாருங்கள்.
       உங்களுக்குள் கடவுளைக் கவனித்து அனுபவமாகப் பெற்றுவிட்டால். அப்புறம் அவன் எங்கும் இருப்பதை உணர்ந்து கொள்ளலாம், கடவுள் இருப்பதாக ஒப்புக்கொள்ளலாம்.
       ஒரு விசயத்தை முதலில் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.
       உங்களுக்குப் புத்திசாலித்தனமாக வாழ்க்கையை நடத்தத் தெரிந்திருந்தால், கடவுள் இல்லாமலும் சுகமாக வாழலாம்.
       வாழ்க்கையைப் பற்றி புரிந்து கொள்ளாமல், மூடத்தனமாக வாழ்பவராக இருந்தால் பூஜை அறையில் எத்தனை கடவுள் படங்களைத் தொங்க விட்டிருந்தாலும் புண்ணியமில்லை......

வாழ்க வளமுடன்!

Thursday, December 30, 2010

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? - 1 ஆனந்தம்:

      "கடவுள் இருக்கிறாரா? இல்லையா?"
       ஆதி மனிதன் பயத்தால் ஆட்டுவிக்கப்பட்டான்...
திடீரென்று வானில் வெளிச்சக்கீற்றுகள், தடதடவென்று ஓசை, பொத்துக் கொண்டு கொட்டும் தண்ணீர், அள்விடமுடியாத வான் பரப்பு, கணக்கிட முடியாத நட்சத்திரங்கள், எல்லைகள் புரியாத அலைகடல்.... எதற்கும் காரணம் புரியாமல் மனிதன் மிரண்டான்.
       இந்த பிரபஞ்சத்தின் பிரம்மாண்டம் முன் தன்னை ஒரு தூசு போல உணர்ந்தான்.
       தனக்கு புரிபடத சக்திக்கு முன் பணிந்து தன்னை பாதுகாக்க வேண்டினான்.
       மழையை கும்பிட்டான், சூரியனை வணங்கினான்.
       அன்றிலிருந்தே அச்சத்தின் காரணமாக ஏற்றுக்கொள்ளப் பட்டவரானார் கடவுள்!
       பிறந்ததில்லிருந்தே உங்கள் தாயும் தந்தையும் சமூகமும் கட்வுள் உண்டு என்று சொல்லி வந்திருப்பதனால் தான், நீங்களும் கடவுள் உண்டு என்று நம்புகிறீர்கள்!?
       உங்கள் குடும்பத்தினர் எந்தக் கடவுள் கட்சியை சேர்ந்தவரோ, அந்தக் கட்வுளை மட்டும் தான் உங்க‌ளால் ஏற்றுக்கொள்ள முடிகிறது.
       உங்களூக்கு பழக்கமான ஜ‌ரிகையிட்ட உடைகளையும், ஆபரணங்களையும் அணிந்து தானே உங்களுக்கு கடவுள் அருள்புரிவார்?
       காலண்டரில் அச்சிட்ட தோற்றங்களீல் வராமல் வித்தியாசமாக ஜீன்ஸும், ஜிப்பாவும் அணிந்து வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?
       யானைகள் உலகத்துக்குப் போய் கடவுள் எப்படி இருப்பார் என்று கேளுங்கள், "எங்களைவிட பெரிய உருவத்துடன், நான்கு தும்பிக்கைகளுடன் இருப்பது தான் கடவுள்" என்று சொல்லும்.
       எறும்புகளிடம் கேட்டால்' "ஆறங்குளம் உள்ள பிரம்மாண்ட எறும்பு தான் தங்கள் கடவுள்" என்று சொல்லும்.
       இந்த பிரபஞ்சத்தில் மனிதனை விட பரினாம வளர்ச்சி கண்டிட்ட வேறு எதாவது உயிரிணம் இருக்கக்கூடும், அதனிடம் சென்று உங்கள் கடவுள்களைக் காட்டினால், 'சீச்சீ!' கேவலம் மனிதனின் தோற்றத்தையா கடவுள் கொண்டிருப்பார், அவர் எங்களைப் போலல்லவா இருப்பார்' என்று கைகொட்டி சிரிக்கலாம்.
       தங்களுடைய பிரச்சனனைகளை தீர்க்கத் தெரியாத சிலர், மற்றவர்களின் பிரச்சனைகளை தீர்த்துவைக்கப் புறப்பட்டு விடுகின்றனர்.
        கடவுளைப் பற்றி உங்களுக்கு நேரடி அனுபவங்கள் கிடையாது.
       அதனால் அடுத்தவர் சொன்னதை ஏற்று அப்படியே நம்பிக்கை வைத்தீர்கள்.
       கோயிலுக்கு எதற்காக போகிறீர்கள்?
கடவுளை உண்ர்வதற்காகவா?
       'அதைக் கொடுப்பா, இதைக் கொடுப்பா, கப்பாற்றுப்பா என்று வேண்டிக் கொள்ளத்தானே?
       உங்கள் கடவுள் நம்பிக்கைகள் பெரும்பாலும் பேராசை மற்றும் பயத்தின் அடிப்படையில் தானே வளர்க்கப்பட்டிருக்கின்றன?
       உங்கள் வீட்டில் டஜன் கணக்கில் கடவுளரின் படங்களை மாட்டி வைதிருக்கின்றீர்களே அதனால் உங்கள் வாழ்கையைப் பற்றிய பயம் உங்களுக்கு நீங்கிவிட்டதா?
       கடவுளைகளையும் சேர்த்து அல்லவா வீட்டுக்குள் பூட்டி வைத்து விட்டு போகவேண்டியிருக்கிறது?
       கடவுள் என்பதே உங்கள் அச்சத்தின் அடையாளமாக அல்லவா இருக்கிறது, அதனால் தான் பயபக்தி என்ற வார்த்தையை ரசிக்கிறீர்கள்.
       கடவுள் அன்பானவர் என்றால், பயம் என்ற வார்த்தை எதற்கு? பக்தி மட்டும் போதாதா?
       கடவுளை உணராதவர்கள் தான் இன்றைக்கு பக்தியை பற்றி அதிகம் பேசுகிறார்கள்....
       அப்படியானல் கடவுள் என்பவர் கற்பனைப்பாத்திரம் தானா?
       அவரைப் பற்றிக் கவலைப் படவேண்டாமா? அவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா?
       ஒரு சிறு விதை பூமிக்குள் விழுந்ததும் மிகப்பெரிய விருட்சமாக வளர்கிறதே, எப்படி?
       இந்த விதையிலிருந்து, இப்படிப் பட்ட மரம் தான் வளரும், இந்த அளவு வளரும், இந்த மாதிரியான பூ மல‌ரும் என்று பதிவு செய்யப்பட்டிருக்கிறதே இந்த விதிகளை அமைத்தது யார்?
       உங்களை மீறிய சக்தியை கடவுள் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்லுவது?
       ஆக தொடங்கிய இடத்துக்கே வந்து விட்டோம் கடவுள் இருக்கிறாரா? இல்லையா?
       இதை அறியும் ஆவல் உங்களுக்கு வந்து விட்டால்? இதைப் பற்றி நீங்கள் யாரிடம் கேட்டு அறிய முடியும்...............

வாழ்க வளமுடன்!