Monday, October 21, 2013

மன்னிக்க முடியாத மன்னிப்பு ! ஆனந்தம்

      


      வெறும் நம்பிக்கைகளாகவும் ஒழுக்க விதிகளாகவும் திணிக்கப்படும் அட்வைசுகளில் ஒன்றான மன்னிப்பை, மறுப்பதே நம்மில் பலர் வழக்கமாய் கொண்டிருக்கிறோம். மன்னிக்கச் சொல்லி பல மதங்கள் நமக்கு அறிவுரை வழங்கினாலும் ஏற்றுக் கொள்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் நம்மை படுத்துகிறது.

அமெரிக்கப் பெண்மணி ஒருவர் பகிர்ந்து கொண்ட விஷயம் இது.

      “நேற்று காலையில் என் மகளுடன் சண்டை. அவள் என்னை அடித்தாள்; கிள்ளினாள்; கடித்தாள். இரவு தூங்கப்போகும் முன், வழக்கம்போல் எனக்கு முத்தம் கொடுக்க வந்தாள். ‘ஒன்றும் தேவையில்லை’ என்றேன் வெறுப்புடன். ‘இதேபோல் நான் உன்னை அடித்துக் காயப்படுத்திவிட்டு, முத்தம் கொடுக்க வந்தால், நீ என்ன செய்வாய்?’ என்றேன். அவள் சற்றும் யோசிக்காமல், ‘உன்னை மன்னித்துவிடுவேன். என்ன இருந்தாலும் நீ என் அம்மா அல்லவா?’ என்றாள்” – இதைச் சொல்லும்போது அந்தப் பெண்மணிக்குக் கண்ணீர் வந்துவிட்டது.

மன்னிப்பு என்பது அவ்வளவு உணர்ச்சிகரமானது.

      என் வாழ்க்கையுடன் யாரும் விளையாடவில்லை என்று அர்த்தமல்ல. என் உயிரைப் பறிக்கும் முயற்சிகள் கூட நடந்து இருக்கிறது. அந்தந்தச் சந்தர்ப்பங்களில் அவசியமான நடவடிக்கைகள் எடுத்திருக்கிறேனே தவிர, எதையும் குற்றமாக நினைக்கவில்லை.
ஆனால், என் வாழ்வில் மன்னிப்பு என்ற வார்த்தைக்கே இடமில்லை. யாரையாவது குற்றவாளி என்று நினைத்தால்தானே மன்னிக்க முடியும்?

      அதற்காக என் வாழ்க்கையுடன் யாரும் விளையாடவில்லை என்று அர்த்தமல்ல. அந்தந்தச் சந்தர்ப்பங்களில் அவசியமான நடவடிக்கைகள் எடுத்திருக்கிறேனே தவிர, எதையும் குற்றமாக நினைக்கவில்லை. யாரையும் குற்றவாளியாகப் பார்க்கவில்லை.

     உண்மையில் மன்னிப்பு என்பதே ஒருவித தந்திரம். அது இன்றைக்கு உலகில் பெரிய வியாபாரமாகிவிட்டது. முதலில் தவறு செய்யது விட்டு அல்லது செய்ய வைத்து விட்டு பின் மன்னிப்பு என்பது?

      ஒருவன் கடற்கரையில் நடந்து கொண்டு இருந்தான். எதிரில் ஒரு விற்பனையாளன் வந்தான்.

“ஐயா, ஒரு டூத்பிரஷ் வாங்கிக் கொள்ளுங்கள். ஐந்நூறு ரூபாய்.”

“என்னது… பல் தேய்க்கும் பிரஷ் ஐந்நூறு ரூபாயா? கொள்ளையாக இருக்கிறதே?”

“வீட்டில் தயாரித்த சாக்லேட் இருக்கிறது. வெறும் ஐந்து ரூபாய்தான். அதையாவது வாங்கி உதவுங்கள்.”

“இது நியாயமாகத் தெரிகிறது” என்று அவன் ஐந்து ரூபாய் கொடுத்து அதை வாங்கி வாயில் போட்டான். உடனே, ‘த்தூ… த்தூ…’ என்று துப்பினான்.

“ஏய் இதில் கழிவறை நாற்றம் வருகிறதே?”

“அங்கிருந்து எடுத்ததுதான் சார். இப்போது சொல்லுங்கள். வாயைச் சுத்தம் செய்ய டூத்பிரஷ் வேண்டுமா?”

      இப்படித்தான், முதலில் உங்களைப் பாவம் செய்ய வைத்து பின்னர் அதற்கு மன்னிப்பு வழங்கி அல்லது கேட்க வைத்து வியாபாரம் செய்கிறார்கள். இது ஒரு வித அரசியல்

      ஒருவரை ஏன் குற்றவாளியாகப் பார்க்கிறீர்கள்? அவர் உங்களைப்போல் சிந்திக்கவில்லை. நடந்து கொள்ளவில்லை. உணரவில்லை என்பதால்தானே?

      நீங்கள் வாழ்க்கையை எப்படிப் பார்க்கிறீர்களோ, அப்படி சுதந்திரமாக வாழ விரும்புகிறீர்கள். உங்களைச் சுற்றி உள்ள மற்ற மனிதர்களும் வாழ்க்கையை எப்படிப் பார்க்கிறார்களோ, எப்படி அறிந்திருக்கிறார்களோ, அப்படி வாழ விரும்புகிறார்கள். அவ்வளவுதானே?

      யாரையும் பெருந்தன்மையோடு மன்னித்துவிட்டதாக நினைக்காதீர்கள். அப்படிச் செய்தால், வாழ்நாள் முழுவதும் அவர்களை உங்கள் அடிமைகளாக நினைக்கத் தோன்றும்.

அவர்களைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பு எழுதாமல் இருப்பது அதைவிடச் சிறப்பல்லவா?

Sunday, October 20, 2013

ஞானமடைந்தவர் உடலோடு இருக்க முடியுமா? ஆனந்தம்

      


      ஞானோதயம் அடைந்த மனிதர், உயிர் விடாமல் தன் உடலை தக்க வைத்துக் கொள்வது சிரமம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உயிரை தக்க வைத்துக் கொள்ள அவர் என்னென்ன தந்திரங்கள் செய்கிறார் என்று சொல்ல முடியுமா?

சத்குரு:

      ஒரு மனிதர் ஞானமடையும் வரை எல்லா பிறவிகளிலும் தன் கர்மவினையை கரைப்பதற்காக முயல்கிறார்; ஞானமடைந்த பிறகு. விழிப்புணர்வோடு கர்மவினைகளை உருவாக்குகிறார். ஏனென்றால் போதிய கர்மவினை இல்லையென்றால், அவருடைய பக்கம் சமநிலையாக இல்லையென்றால், இந்த உடலில் அவரால் இருக்கமுடியாது.

      90 சதவிதம் பார்த்தால், ஞானமடைகிற நேரமும் உடலை விடுகிற நேரமும் ஒன்றாகவே இருந்திருக்கிறது. இந்த உடல் இயக்கம் குறித்து நிபுணத்துவம் இருக்கிற மனிதர்கள்தான் உடலிலே தொடர்ந்திருக்கிறார்கள். பிறரால் முடிவதில்லை. இதற்கென்று பல வழிகள் உண்டு. உங்கள் இயக்கத்தின் மேல் உங்களுக்கு நிபுணத்துவம் இல்லையென்றால் இன்னொரு வழி, விழிப்புணர்வோடு கர்மவினைகளை ஏற்படுத்திக்கொண்டே போவது. நான் இங்கே என்ன செய்கிறேன் என்பது குறித்து இந்த நேரத்தில் நான் பேச விரும்பவில்லை.

      இராமகிருஷ்ண பரமஹம்சரை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். அவர் தெளிந்த விழிப்புணர்வில் இருந்தவர். மிக அற்புதமான ஒரு உயிர். பல எல்லைகளையும் கடந்தவர். ஆனால் உணவின் மீது அவருக்கு ஒரு வெறியே இருந்தது. சீடர்களோடு பேசிக்கொண்டே இருப்பார். “கொஞ்சம் இருங்கள்”’ என்று சொல்லிவிட்டு சமையலறைக்குச் சென்று சாரதா தேவியாரைப் பார்த்து, “இன்று என்ன சமையல்?” என்று கேட்பார். சாரதாதேவிக்கு வெட்கமாக இருக்கும். இந்த மனிதர் கடவுளைப் போல் இருக்கிறார். எல்லோரும் இவரை வணங்குகிறார்கள். ஆனால் உணவின் மீது இவ்வளவு பைத்தியமாக இருக்கிறாரே என்று.

      புராணங்கள் எல்லாம் என்ன சொல்கின்றன? நீங்கள் ஆன்மீகவாதியாகிக் கொண்டிருந்தால் உணவிலே நாட்டம் குறையவேண்டும் என்று, இல்லையா? ஆனால் இங்கே கடவுளாகவே கருதி வழிபடக்கூடிய ஒரு மனிதர், உணவின் மீது இவ்வளவு பிரியத்துடன் இருக்கிறார். பலவிதங்களில் அவரை சாரதாதேவி கேட்பார். ஆனால் இவர் பதில் எதையும் சொல்லமாட்டார். ஒவ்வொரு நாளும் சாரதாதேவி உணவு பரிமாறுவார். இவர் ஒரு ஊஞ்சலில் அமர்ந்துகொண்டு சாப்பிடுவார்.

      ஒருநாள் மிகவும் கோபம் வந்து சாரதாதேவி சொன்னார். “உங்களை நினைத்தாலே எனக்கு மிகவும் வெட்கமாக இருக்கிறது. உணவின் மீது ஏன் இவ்வளவு பைத்தியமாக இருக்கிறீர்கள்? பலர் உங்களைத் தேடி வருகிறார்கள். அவர்கள் உணவைப்பற்றி நினைப்பதே இல்லை. உணவே இல்லாமல் உங்கள் முன் அமர்ந்திருக்க விரும்புகிறார்கள். நீங்கள் உணவின் மீது இவ்வளவு பைத்தியமாக இருக்கிறீர்கள், ஏன்?” என்று. அப்போது இராமகிருஷ்ணர் சொன்னார், “சாரதா, நீ என்னிடம் உணவு கொண்டு வந்து, நான் அந்த நாளில் அதில் ஈடுபாடு காட்டவில்லை என்றால், அன்று தொடங்கி 3 நாட்கள் வரையே நான் உயிரோடு இருப்பேன் என்று தெரிந்து கொள்,” என்றார்.

      ஏழு ஆண்டுகள் கழித்து சாரதாதேவி உணவு கொண்டுவந்து அந்த ஊஞ்சலில் வழக்கமான இடத்தில் வைத்தபோது, ராமகிருஷ்ணர் உணவில் நாட்டம் கொள்ளவில்லை. நேரம் வந்துவிட்டது என்று தெரிந்து சாரதாதேவி அழத்தொடங்கினார். ராமகிருஷ்ணர் சொன்னார், “இப்போது அழுது எந்தப் பயனும் இல்லை. நேரம் வந்துவிட்டது, அது எல்லோருக்கும் வரும்,” என்றார்.

      இது கர்மவினையை உருவாக்குகிற முறை. தெரிந்தே உணவில் ஒரு விருப்பத்தை வளர்த்துக்கொள்வது. விழிப்புணர்வோடு வேண்டுமென்றே எப்போதும் உணவை விரும்புவது. இந்த விருப்பம் இல்லை என்றால் அவரால் அந்த உடலில் இருந்திருக்க முடியாது. நான் இந்த உடலில் தொடர்ந்து இருக்க என்னென்ன தந்திரங்கள் செய்கிறேன் என்று எனக்கு நெருக்கமாக இருப்பவர்களுக்குத் தெரியும்.

      நீங்கள் விழிப்புணர்வோடு இத்தகைய கர்மவினையை ஏற்படுத்தவில்லை என்றால் உடலில் இருப்பது என்பது முடியாது. கர்மவினையின் கட்டமைப்பு இல்லாமல் உங்களுக்கும் உங்கள் உடம்புக்கும் ஒன்றுக்கொன்று செய்துகொள்ள ஒன்றுமே இல்லை.
................வாழ்க வளமுடன்!

Tuesday, October 15, 2013

செயலா? செய்யும் விதமா? குட்டிக்கதை! ஆனந்தம்.

      அடிப்படையாக, வாழ்க்கையில் நாம் என்ன செயல் செய்கிறோம் என்பதைவிட, அந்த செயலை எப்படி செய்கிறோம் என்பதில்தான் நம் வாழ்க்கையின் தன்மை அமைகிறது.
     
      ஒரு ஊரில் மூன்று பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்த ஒரு வழிப்போக்கர் முதல் நபரிடம், “நீ இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார். அந்த நபர் நிமிர்ந்து பார்த்து, “பார்த்தால் தெரியவில்லையா?, நான் கல் கொத்திக்கொண்டு இருக்கிறேன். உனக்கு என்ன கண் குருடா?” என்று கேட்டார்.

      உடனே அந்த நபர் அடுத்தவரிடம் சென்று, “நீ இங்கே என்ன செய்துகொண்டு இருக்கிறாய்?” என்று கேட்டார். அவர் உடனே நிமிர்ந்து பார்த்து, “ஏதோ வயிற்றுப் பிழைப்பிற்காக செய்கிறேன். அவர்கள் என்ன செய்யச் சொல்கிறார்களோ அதைச் செய்வேன், அவ்வளவுதான்” என்று சொன்னார்.

      அடுத்து அவர் மூன்றாவது நபரிடம் சென்று, “நீ இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்,” என்று கேட்டார். அதற்கு அந்த மூன்றாவது நபர் மிகவும் ஆனந்தமாக எழுந்து நின்று, “நான் இங்கே ஒரு அழகான கோவிலை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்” என்று சொன்னார். அவர்கள் எல்லோருமே ஒரே வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த ஒரே வேலையை மூன்று பேருமே மூன்று விதமாக உணர்கிறார்கள். அதற்கேற்றார் போல்தான் அவர்கள் வாழ்க்கையின் தன்மையும் அமைகிறது. எனவே எளிமையான செயல் செய்கிறீர்களா அல்லது மிகவும் கடினமான செயல் செய்கிறீர்களா என்பதைவிட செய்யும் வேலையை எப்படி செய்கிறீர்கள் என்பதுதான் உங்கள் வாழ்க்கைத் தன்மையை நிர்ணயிக்கிறது.

Saturday, October 12, 2013

இறந்தபின் கட்டை விரல்களைக் கட்டுவது ஏன்? ஆனந்தம்
ஒருவர் மரணமடைந்தவுடன், அந்த உடலை வடக்கு தெற்காக வைப்பது, கால் கட்டைவிரல்கள் ஒன்று சேர்த்துக் கட்டுவது போன்ற சடங்குகளை எதற்காகச் செய்கிறார்கள்?

      இறப்பு நேர்கிற நொடியில் இருந்து அல்லது இறப்பு நேர்வதற்கு முன்பிருந்தே ஒரு மனிதன் பயனுள்ள வகையில் இறந்து போவதற்கு என்னென்ன செய்யலாம் என்று இந்தக் கலாசாரத்தில் பல வழிகள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒருவருக்கு மரணம் நெருங்குகிற வினாடியில், அது குறித்து தெரிந்தவர்கள் ஒருவித சுலபத்துடன் மரணம் நிகழ வேண்டுமென்பதற்காக, அந்த மனிதரை வீட்டுக்கு வெளியே கொண்டுபோய், வடக்கு தெற்காக உடலைக் கிடத்துவார்கள். ஏனெனில், ஒரு கட்டடத்துக்குள் இருக்கிறபோது அவ்வளவு சுலபமாக உயிர் பிரியாது. தலை வடக்கு நோக்கி வைக்கப்படும்போது காந்த ஈர்ப்பு காரணமாக அந்த உயிர் உடலைவிட்டு எளிதாகப் பிரியும்.
      மரணம் நிகழ்ந்த பிறகுகூட பிராண சக்தி ஸ்தூல உடலை விட்டு முழுவதும் அகன்றுவிடுவதில்லை. எனவே, அந்த உயிர் உடலை சுற்றிக் கொண்டே இருக்கிறது. ஆனால், உடல் வடக்கு தெற்காக வைக்கப்பட்டு உயிர் பிரியும்போது அந்த உடலில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. எனவே, அந்த உடலைச் சுற்றிக்கொண்டு இருப்பது பயன் தராது என்று அந்த உயிருக்குத் தெரிந்துவிடுகிறது. மற்ற சூழ்நிலைகளில் உயிரானது தொடர்ந்து உடலுக்குள் நுழைய முயற்சிக்கும். இந்தப் போராட்டம் அந்த இடத்தில் ஒருவிதமான சக்தியை ஏற்படுத்தும். இது இறந்துபோன மனிதருக்கும் நல்லதல்ல, வாழ்கிறவர்களுக்கும் நல்லதல்ல.
      இன்னொரு முக்கிய சடங்கு, இறந்த மனிதரின் இரண்டு கால் கட்டை விரல்களும் ஒன்றாகக் கட்டப்படுவது. பொதுவாகவே மரணம் நிகழ்கிறபோது கால்கள் அகலமாகத் திறந்துகொள்கின்றன. அந்த நிலையில் பின்புறத் துவாரம் திறந்திருக்கும். எனவே பிரிந்து போன உயிர் அந்த மூலாதாரம் வழியே உள்ளே நுழைய முயலும். அது அந்த உயிருக்கும் அந்தச் சூழலுக்கும் நல்லதல்ல.
      எனவே, கால் கட்டை விரல்களைக் கட்டுவதன் மூலம் மூலாதாரம் மூடப்படுகிறது. யோகக் கிரியைகள் செய்வதற்காக நீங்கள் கால்கட்டை விரல்களை ஒன்று சேர்க்கும்போது பின்புறத் துவாரம் இயல்பாகவே மூடிக்கொள்ளும். இதையேதான் இறந்தவர்களுக்கும் செய்கிறார்கள். எனவே உடலை கைக்கொள்ளலாம் என்கிற அந்த உயிரின் முயற்சி இப்போது பலிக்காது.
      மூலாதாரம் திறந்திருக்கிறபோது அந்த உடலின் உள்ளே நுழைய வேறு சில ஆவிகளும் முயலக்கூடும். மாந்திரீகப் பயிற்சி மேற்கொள்பவர்களும் அந்த உடலைப் பயன்படுத்தக்கூடும். அப்படி அந்த உடல் வேறு விதத்தில் பயன்படுத்தப்பட்டால், அது பிரிந்து சென்ற ஆன்மாவைப் பலவிதங்களில் துன்புறுத்துவதாக இருக்கும். அதனால்தான் ஒரு மனிதர் இறந்துவிட்டார் என்று தெரிந்ததும் அவரின் கால் கட்டைவிரல்கள் ஒன்று சேர்த்துக் கட்டப்படுகின்றன!

Friday, October 11, 2013

வெற்றிக்காக காத்திருத்தல் ஆனந்தம்

      

      வெறுமனே காத்திருத்தலுக்கும், 'ஏதோ ஒன்றிற்காகக் காத்திருத்தலுக்கும் இடையே நூலிழை வித்தியாசம். அமைதியான முன்னேற்றத்திற்கும், மன அழுத்தத்துடன்கூடிய வெற்றிக்கும் இடையே உள்ள வித்தியாசம் தான் அது.
      விவசாயி தன் நிலத்தை உழுது, விதையும் விதைத்தாகி விட்டது. இப்போது அவன் காத்திருக்க வேண்டும் அவ்வளவுதான். மனிதனின் பொறுப்பு முடியுமிடத்தில் பரம்பொருளின் பொறுப்பு தலைதூக்குகிறது. காத்திருத்தல் கலையை அந்த விவசாயி அறிந்திருந்தால், அவன் பொறுமையுடன் காத்திருப்பான். மாறாக, பொறுமையின்றி இருப்பானெனில், காத்திருக்கும் ஒவ்வொரு கணமும் அவனது பதற்றமும், மன அழுத்தமும் அதிகரிக்கும். "ஏன் இன்னும் இது நடைபெறவில்லை? மற்றும் ஏன் இன்னும் இது முளைவிட வில்லை?" என்று கேள்விகளால் அவன் மனம் அலைக்கழிக்கப்படும். விதை ஒருவழியாக முளை விடும் போது அவன் வெற்றிக்காக விவசாயி தன் மன அமைதியை அடகு வைத்திருப்பான். பாதிப்பு ஏற்க்கனவே ஏற்ப்பட்டு விட்டது.
      லிஃப்ட் வருவதற்க்கான பொத்தானை அழுத்திவிட்டீர்களா? காத்திருங்கள்! அது வரும்போது வரட்டும். ஆனால் லிஃப்ட்க்காக காத்திருதுக்கொண்டிருக்கும் வேளையில் நீங்கள் அங்கும் இங்கும் நடை போடுவது, கண்களால் மேலும் கீழும் பார்ப்பது போன்றவற்றால், லிஃப்ட்டை வேகப்படுத்தி உங்களிட்ம் அதை விரைவாக சேர்த்து விடுமா என்ன? சர்வரிடம் உங்களுக்கு வேண்டிய உணவு வகைகளை கூறியாகி விட்டதா என்ன? காத்திருங்கள்! பொறுமை இழக்காதீர்கள், பொறுமை இழந்தால் சர்வருக்காக காத்திருப்பதை மோசமான அனுபவமாக்கிவிடும். எடுக்கப்பட வேண்டிய முடிவுகளை எடுத்து விட்டீர்களா? செய்ய‌ப்பட வேண்டிய செயல்களை செய்து விட்டீர்களா? மேற்க்கொள்ள‌ப்பட வேண்டிய நடவடிக்கைகளை மேற்க்கொண்டுவிட்டீர்களா? வெறுமனே காத்திருங்கள். இதற்காக அல்லது அதற்காக காத்திருக்காதீர்கள். வெறுமனே காத்திருங்கள். சாந்தமான முன்னேற்றத்திற்க்கான திறவு கோள் அதில் இருப்பதை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். ஏதாவது ஒன்றிற்க்காக காத்திருப்பது வெற்றியை கொண்டுவரலாம், ஆனால் அது மன அழுத்தத்தோடு கூடியதாக இருக்கும். வெற்ரியை அடைய அமைதியான வழி இருக்கும் போது ஏன் மன அழுத்ததோடு கூடிய வழியை தேர்ந்தெடுக்கவேண்டும்?
      உங்கள் கடமையை செய்யுங்கள். உங்கள் பங்கை வழங்குங்கள். வெறுமனே காத்திருங்கள் அதுதான் அமைதியான முன்னேற்றத்திற்கான பாதை...............
                              வாழ்க வளமுடன்!