Wednesday, June 1, 2011

சோம்பல் ஆனந்தம்


      கேரி பிளேயர் என்ற கோல்ஃப் விளையாட்டு வீரர் புகழ் பெற்றிருந்த காலக்கட்டத்தில், சமகாலத்தில் எந்த வீரரையும் விட சர்வதேச அளவில் வெற்றிகளைக் குவித்தவர். அவருடைய விளையாட்டைப் பார்கிற யாரும், மறவாமல் அவரிடம் சொல்லும் வாக்கியம், ‘எனக்கு மட்டும் உங்களைப் போல சுலபமாக அடிக்க வருமானால்…. அதற்கு விலையாக எதை வேண்டுமானாலும் கொடுப்பேன்’. கேரி பிளேயர் இதைக் கேட்டு புன்னகைப்பார்.
      ஒரு நாள் கேரி, மிகக்கடுமையான போட்டியில் விளையாடிவிட்டு வந்தார். அதைப் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர், மேற்சொன்ன வாசகத்தை வழக்கம் போல சொன்னார். சட்டென்று வந்த கோபத்தில் கேரி சொன்னார், “இல்லை, உங்களால் முடியாது. என்னைப் போல ‘சுலபமாக’ அடிக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா?” ஒவ்வொரு நாளும் விடியற்காலை 5 மணிக்கெல்லாம் எழுந்து, கோல்ஃப் மைதானத்துக்குச் செல்ல வேண்டும். ஒரு நாளைக்கு ஓராயிரம் முறையாவது அடித்துப் பழக வேண்டும். உங்களது கைகளில் இருந்து இரத்தம் வரும். விளையாட்டு ஓய்வு அறைக்குச் சென்று இரத்தத்தைக் கழுவி விட்டு, ஒரு பாண்டேஜ் சுற்றிக் கொண்டு மறுபடியும் விளையாட்டுத் திடலுக்கு வந்து, தொடர்ந்து அடிக்க வேண்டும். இப்படி அடித்தால்தான் உங்களால் என்னைப் போலச் சுலபமாக அடிக்கமுடியும் என்றார்.
      கோல்ஃப் மட்டுமல்ல,  நம்மைத் தடுக்கும் எதையும் மீற வேண்டுமானால் வெற்றி பெற வேண்டுமானால், உழைக்கத் தயாராக இருக்க வேண்டும். அதிலும் சோம்பல் என்பது யாருடைய வாழ்க்கையில் புகுந்தாலும், அதன்பின் தோல்வியும், பிரச்சனைகளும் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும். இதை உடைத்தெறிவது வாழ்க்கையை மீட்டு எடுக்கக்கூடிய அளவுக்கு மிக முக்கியமான காரியம்.
      எதையாவது மிகவும் மதித்தால், அது நமக்குக் கைவரப்பட்டால், பல நன்மைகளும் (நல்ல‌ வாழ்க்கை, நல்ல எதிர்காலம், மனத்திருப்தி, ஆனந்தம்)இதை விட மதிப்புக்கு உரியது என்ன இருக்க முடியும்? அதனால்  அது கிடைக்கப் பெறுவதற்கு பெரு முயற்சி எடுப்போம். இவை நமக்குக் கிடைக்க வேண்டுமானால், சோம்பலை ஒழித்துக் கட்டுவது மிக முக்கியமானது. ஆகவே, பெரு முயற்சி எடுத்து சோம்பல் விலங்கை உடைத்து வெளியே வருவோம். ஆனந்தத்தை ருசிப்போம்..

No comments:

Post a Comment