Showing posts with label ஓஷோ. Show all posts
Showing posts with label ஓஷோ. Show all posts

Tuesday, July 5, 2011

பெண்கள் இல்லாமல் ஞானம் சாத்தியமே இல்லை


      ஞானம் நிகழக்கூடிய ஒன்று. தியானம் செய்யப் பட வேண்டிய தயாரிப்பு. அத்துடன் ஆழமான தவிப்பும் தேவைப்படுகிறது. புரிந்து கொள்ளுதல் தவிர வேறு எதுவும் முக்கியமில்லை என்று நீங்கள் சொன்னதை கேட்டேன். எனக்கு எல்லாவற்றிலுமே ஆர்வம். மனதில் தோன்றும் கற்பனைகள், இசை, பெண்கள், உணர்வுகள் என எல்லாவற்றிலும் எனக்கு ஆர்வம் இருக்கின்றது. இவையெல்லாம், ஞானத்தை தடுத்து விடக் கூடுமா?
      ஒரு பழைய கதை இருக்கிறது. ஒரு கிழவன் தன் குருவிடம் வந்து நான் பல ஆசான்களை பார்த்துவிட்டேன். எத்தனையோ ஆசைகளையெல்லாம் துறந்தும் விட்டேன். உண்ணாவிரதம் இருந்தேன். பிரம்மசரியம் மேற்கொண்டேன். ஞானம் தேடி இரவெல்லாம் விழித்திருந்தேன். வெறுக்க சொன்ன எல்லாவற்றையும் வெறுத்தேன். மிகவும் துன்பங்கள் அனுபவித்தேன். ஆனால் ஞானம் பெற முடியவில்லை. நான் என்னதான் செய்யட்டும்? என்று கேட்டான்.
      துன்பங்களையும் துறந்துவிடு என்றார் குரு.
      ஞானம் பெறுவதை இசையும் தடுக்காது, புலனின்பங்களும் தடுக்கா, பெண்களும் தடுக்க மாட்டார்கள். ஒன்று மட்டும் அதை தடுக்கும். அதுதான் உன் துன்பம்.
      ஞானம் என்பது எல்லையற்ற ஆனந்த பரவசம். ஆகவே, எந்த சிறிய கொண்டாட்டமும் ஞானத்திற்கான படிக்கட்டுதான். ஆனால் வேதனை ஞானத்திற்கான படியாக அமையவே முடியாது.
      எல்லாவற்றிலும் உனக்கு ஆர்வம் இருப்பதாக குறிப்பிடுகிறாய். உன் தியானம் வளர வளர அவை காணாமல் போய்விடும், வெளிச்சத்தை கொண்டு வந்தவுடனே இருட்டு மறைந்து விடுவது போல. இருள் ஒரு தடையே அல்ல. இருள் மிக பழையது, கெட்டி தட்டி போய் இருக்கிறது, விளக்கை கொண்டு வந்தால், அதை அமுக்கி அணைத்து விடுகிறது. என்று சொல்ல முடியுமா என்ன? இருளால் விளக்கை அணைக்க முடியவே முடியாது.
      மனக் கற்பனைகள் எல்லாம் சோப்பு நுரை குமிழிகள். தியானத்தின் ஒரு சிறு பகுதியின் தீண்டுதலில், மனதின் மாயக் கற்பனைகள் என்ன, மனமே மாய்ந்து போய்விடும்.
      ஆனால் தியானம் வளர இசை ஆழப்பட்டு விடும். உனது இசையில் புதிய சுவை பிறக்கும். புதிய மலர்கள் புதிய மணத்துடன் மலரும். உனது இசை, உனது தியானத்துடன் இசைந்து சுப சுரமாய் ஒலிக்கும்.
      பெண்கள் விஷயத்தை பொறுத்தவரை, அவர்கள் இல்லாமல் ஞானமடைதல் சாத்தியமே இல்லை. அவர்கள்தான் உண்மையான உந்து சக்தி. வெற்றி பெறும் ஒவ்வொரு ஆணுக்கும் பின்னால், ஒரு பெண் இருக்கிறாள் என்று சொல்கிறார்கள். அது உண்மையோ, பொய்யோ. ஆனால் ஒவ்வொரு ஞானிக்கும் பின்னால் பல பெண்கள் இருக்கவே செய்கிறார்கள்.
      அவனை தொல்லை படுத்த, சித்ரவதை செய்ய பெண்கள் இருந்தால்தான் போதுமடா சாமி என்று அவன் ஞானத்தை தேடி போக முடியும். அப்படி எந்த பெண்ணும் உன்னை தொல்லை படுத்த வில்லையென்றால், நீ ஞானத்தை தேடி செல்ல வேண்டிய தேவை என்ன வந்தது?
      எந்த ஆணும் தம்மை தொல்லைப் படுத்தாததால்தான், பெண்கள் ஞானம் பெறுவதில்லை என்பது எளிய உண்மை. அதனால் பெண்களை கண்டு பயப்படாதே. அவர்கள் உனக்கு மிகவும் உதவியாக இருப்பார்கள். அதனால் அவர்கள் உனக்கு நிச்சயம் தேவைப்படுவார்கள்.
      புலனுணர்வுகள் தடையல்ல. தியானம் ஆழப்பட பட, உன் உணர்வுகள் கூர்மை அடையும். அதனால்தான், அந்த கதையில் வரும் கிழவனுக்கு அப்படி பதில் சொன்னார் குரு.
      துயரங்களை விட்டொழி.
      உன் தியானத்தை தடுக்க வல்லது இந்த உலகில் எதுவுமே இல்லை.
                                                   .....................ஓஷோ....................

Tuesday, June 14, 2011

ஆசை‍ - கோபம் ஆனந்தம்


      கோபத்தின் மனோதத்துவம் என்னவென்றால் நீ எதையாவது விரும்புகிறாய், நீ அதை பெறுவதற்கு யாரோ தடையாக இருக்கிறார்கள், நீ அதை பெறுவதை தடுக்கிறார்கள், ஒரு தடங்கலாக இருக்கிறார்கள். உனது சக்தி முழுமையும் ஒன்றை பெற விரும்புகிறது, யாரோ அந்த செயலை தடுக்கிறார்கள். நீ விரும்பியதை பெற முடியவில்லை. அந்த விரக்தியடைந்த சக்தி கோபமாக மாறுகிறது. உன்னுடைய ஆசை பூர்த்தியடையக் கூடிய சாத்தியக்கூறை அழித்த மனிதர் மேல் கோபம் வருகிறது. உன்னால் கோபத்தை தடுக்க முடியாது. ஏனெனில் கோபம் ஒரு தொடர் விளைவு, பின் விளைவு. ஆனால் அந்த பின் விளைவு நிகழாமல் இருக்க நீ ஏதாவது செய்யலாம்.
      வாழ்வில் ஒன்றை மட்டும் நினைவில் கொள். வாழ்வா சாவா என்ற கேள்வி வரும் அளவு எதையும் ஆழ்ந்து விருப்பப் படாதே. சிறிது விளையாட்டுத்தனமாகவும் இரு.
      விருப்பப் படாதே என்று நான் சொல்லவில்லை. – ஏனெனில் அந்த ஆவல் உன்னுள் அழுத்தப்பட்டுவிடும், விருப்பம் கொள், ஆனால் அதைப்பற்றி சிறிது விளையாட்டுத்தனத்தோடு இரு என்றுதான் சொல்கிறேன். கிடைத்தால் நல்லது, கிடைக்காவிட்டால் பரவாயில்லை, அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் . விளையாடுபவர் போல இருந்து பழக வேண்டும்.
      நாம் நமது ஆசைகளுடன் ஒன்று பட்டு விடுகிறோம். அது தடைபடும்போது அல்லது தடுக்கப்படும்போது நமது சக்தியே தீயாகி விடுகிறது. அது உன்னை எரிக்கிறது. அந்த நிலையில் கிட்டதட்ட மனம் தடுமாறிய நிலையில் நீ என்ன வேண்டுமானாலும் செய்வாய் – பழி வாங்குவதற்காக. உன்னுடைய வாழ்வு முழுவதும் தொடரக்கூடிய சங்கிலி தொடர் நிகழ்ச்சிகளை அது உருவாக்கும்.
      நீ கோபத்தை நிறுத்த முயற்சி செய்யக்கூடாது. நீ செய்யவே கூடாது. எந்த வகையிலாவது கோபம் கரைந்து போக வேண்டும். இல்லாவிடில் அது உன்னை எரித்துவிடும். உன்னை அழித்துவிடும். நான் சொல்வது என்னவென்றால் அதன் வேர்களுக்கு செல். ஏதோ ஆசை தடைப்பட்டு, நிறைவேறாமல் உள்ளது. அந்த விரக்தி தான் கோபத்தை உண்டாக்குகிறது. இதுதான் அதன் ஆணி வேராக இருக்கும்.
      கோபத்தை ஒருமுறை உன் இருப்பில் உரைத்து, கரைத்து விட்டால் பின் எல்லாமும் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிடும், கோபம் மறைந்து விடும். அப்படி அது மறைவது உனக்கு ஒரு புது ஆச்சரியமாக இருக்கும் ஏனெனில் கோபம் மறையும் போது அது கருணையும், அன்பும், நட்பும், ஆனந்தமும் நிறைந்த அளவற்ற ஆற்றலை விட்டு செல்லும். விருப்பப்பட்டது கிடைக்கதபோது கூட மகிழ்ச்சியாக, ஆனந்தமாக‌ இருப்பது எப்படி என்று தெரிந்து கொள்வீர்கள்.
..........................................................................ஓஷோ.....................................................................

Saturday, February 12, 2011

சொர்கம்‍‍ - நரகம் ஆனந்தம்


       இந்த கதை அழகானது. ஜென் குரு ஹேக்குன் அபூர்வ மலர்களில் ஒருவர். ஒரு போர்வீரன் அவரிடம் வந்தான். ஒரு சமுராய், ஒரு சிறந்த வீரன் வந்து ஹேக்குனிடம் நரகம் என்று ஏதாவது உள்ளதா ? சொர்க்கம் என்று ஏதாவது உள்ளதா ? நரகம் மற்றும் சொர்க்கம் என்று ஒன்று இருக்குமானால் அவைகளின் கதவுகள் எங்கே உள்ளன ? நான் எங்கேயிருந்து உள்ளே செல்வது ? நான் எவ்வாறு நரகத்தை தவிர்த்துவிட்டு சொர்க்கத்தை தேர்ந்தெடுப்பது ?என கேட்டான், அவன் ஒரு எளிய வீரன். வீரர்கள் எப்போதும் எளிமையானவர்கள்.
       எளிமையாக இருக்கும் ஒரு வியாபாரியை கண்டுபிடிப்பது கடினம். ஒரு வியாபாரி எப்போதும் தந்திரமான புத்தியை உடையவன். இல்லாவிடில் அவன் ஒரு வியாபாரியாக இருக்கமுடியாது. ஒரு வீரன் எப்போதும் எளிமையானவன், இல்லாவிடில் அவன் ஒரு வீரனாக இருக்கமுடியாது. ஒரு வீரன் இரண்டு விஷயங்களை மட்டுமே அறிவான், வாழ்க்கை மற்றும் இறப்பு – அதிகமல்ல.
அவனுடைய வாழ்க்கை எப்போதும் பணயத்திலேயே உள்ளது, அவன் எப்போதும் சூதாடிக்கொண்டிருக்கிறான், அவன் ஒரு எளிமையான மனிதன். அதனால்தான் வியாபாரிகள் ஒரே ஒரு மகாவீரரையோ, ஒரே ஒரு புத்தரையோ கூட உருவாக்கமுடியவில்லை.  இது அதிசயமாய் உள்ளது. 24 தீர்த்தங்கரர்கள் அனைவரும் சத்திரியர்கள், வீரர்கள். புத்தர் ஒரு சத்திரியர், இராமன் மற்றும் கிருஷ்ணர் இருவரும் சத்திரியர்கள். அவர்கள் எளிமையான மக்கள், அவர்களுடைய மனதில் எந்த தந்திரமும், எந்த கணக்கீடும் இல்லை. அவர்களுக்கு இரண்டு விஷயங்கள் மட்டுமே தெரியும் – வாழ்க்கை மற்றும் இறப்பு.
       இந்த எளிமையான வீரன் ஹேக்குனிடம் சொர்க்கம் எங்கே இருக்கிறது மற்றும் நரகம் எங்கே இருக்கிறது என்று கேட்பதற்காக வந்துள்ளான், அவன் எந்த கோட்பாடுகளையும் தெரிந்துகொள்வதற்காக வரவில்லை. அவன் கதவுகளை தெரிந்துகொள்ள விரும்பினான். அதனால் அவன் நரகத்தை தவிர்த்துவிட்டு சொர்க்கத்தில் நுழையலாம் ஹேக்குன் ஒரு வீரன் மட்டுமே புரிந்துகொள்ளகூடிய வகையில் பதிலளித்தார்.  
       ஆனால் இந்த சமுராய் ஒரு வியாபாரியல்ல, அவன் ஒரு போர்வீரன். அவன் ஒரு எளிமையான கேள்வியோடு வந்துள்ளான். அவனுக்கு வேதங்களிலோ, விலையிலோ, சொல்லும் பதிலிலோ, ஆர்வமில்லை. அவன் உண்மையின் மீது ஆர்வம் கொண்டிருந்தான். மற்றும் ஹேக்குன் என்ன செய்தார் ? அவர் நீ யார் ? என கேட்டார் போர்வீரன் நான் ஒரு சமுராய் என பதிலளித்தான். ஒரு சமுராயாக இருப்பது ஜப்பானில் மிகவும் பெருமை வாய்ந்த ஒரு விஷயம். அதன் பொருள் ஒரு சிறந்த போர்வீரன், அவனுடைய வாழ்க்கையை இழப்பதற்கு ஒரு நொடிகூட தயங்கமாட்டான். அவனைப்பொறுத்தவரை, வாழ்வும் இறப்பும் வெறும் ஒரு விளையாட்டு.
       அவன் நான் ஒரு சமுராய், சமுராய்களின் தலைவன். அரசரும்கூட எனக்கு மரியாதை அளிக்கிறார், என கூறினான். ஹேக்குன் சிரித்துவிட்டு, நீ ஒரு சமுராய் ? நீ ஒரு பிச்சைக்காரனைப்போல இருக்கிறாய் என கூறினார்.
       உடனே சமுராயின் பெருமை காயப்பட்டுவிட்டது, அவனுடைய ஆணவம் அடி வாங்கிவிட்டது. அவன் எதற்காக வந்தான் என்பதை அவன் மறந்துவிட்டான். அவன் அவனுடைய வாளை எடுத்து ஹேக்குனை கொல்லப்போனான். சொர்க்கத்தின் கதவைப்பற்றியும் நரகத்தின் கதவைப்பற்றியும் கேட்க இந்த குருவிடம் அவன் வந்துள்ளான் என்பதையே அவன் மறந்துவிட்டான்.
       அப்போது ஹேக்குன் சிரித்துவிட்டு இதுதான் நரகத்தின் கதவு. இந்த வாளோடு, இந்த கோபம், இந்த ஆணவம், கதவு இங்குதான் திறக்கிறது என கூறினார்.
       இதைத்தான் ஒரு போர்வீரன் புரிந்துகொள்ளமுடியும். உடனடியாக அவன் புரிந்துகொண்டான், இதுதான் கதவு. அவன் அவனுடைய வாளை அதன் உறைக்குள் போட்டான்.
       அப்போது ஹேக்குன் இங்கு சொர்க்கத்தின் கதவு திறக்கிறது என கூறினார்.
       நரகமும் சொர்க்கமும் உனக்குள் உள்ளன. இரண்டு கதவுகளும் உனக்குள் உள்ளன. நீ உணர்வற்று செயல்படும்போது அங்கு நரகத்தின் கதவு உள்ளது, நீ கவனமாகவும், உணர்வுடனும் இருக்கும்பொழுது, அங்கு சொர்க்கத்தின் கதவு உள்ளது.
       இந்த சமுராய்க்கு என்ன நடந்தது? ஹேக்குனை கொல்லப்போகும் அந்த சமயத்தில் அவன் உணர்வோடு இருந்தானா ? அவன் என்ன செய்யப்போகிறான் என்பதுபற்றி அவன் உணர்வோடு இருந்தானா ? அவன் எதற்காக இங்கு வந்துள்ளான் என்பதுபற்றி உணர்வோடு இருந்தானா ? எல்லா உணர்வும் மறைந்துவிட்டது.
       ஆணவம் ஆட்கொள்ளும்போது, நீ கவனமாக இருக்கமுடியாது. ஆணவம் ஒரு போதை, அந்த போதை உன்னை முழுமையாக உணர்வற்றவனாக்கிவிடும். நீ செயல்படுவாய் ஆனால் அந்த செயல் உனது உணர்வற்ற நிலையிலிருந்து வெளிப்படும் உன்னுடைய உணர்வு நிலையிலிருந்து வெளிப்படாது. மற்றும் உணர்வற்ற நிலையிலிருந்து எந்த செயல் வந்தாலும் அப்போதெல்லாம், நரகத்தின் கதவு திறந்துள்ளது. நீ என்ன செய்தாலும், நீ என்ன செய்கிறாய் என்ற உணர்வு உனக்கு இல்லாவிட்டால் நரகத்தின் கதவு திறந்துவிடுகிறது.
       திடீரென, ஹேக்குன் இதுதான் கதவு அதை நீ ஏற்கனவே திறந்துவிட்டாய் என சொன்னவுடன் உடனடியாக சமுராய் கவனமடைந்தான் – சூழ்நிலையே கண்டிப்பாக கவனத்தை உண்டாக்கியிருக்கவேண்டும்.
       வெறுமனே கற்பனை செய்து பார். நீ போர்வீரனாக இருந்திருந்தால், சமுராயாக இருந்திருந்தால், வாளை கையில் ஏந்திகொண்டு, கொல்லப்போகிறாய். என்ன நடந்திருக்கும். ஒரு நொடி அதிகமாகியிருந்தால் ஹேக்குனின் தலை வெட்டப்பட்டிருக்கும், ஒரு நொடி அதிகமாகியிருந்தால் அது உடலிலிருந்து பிரிக்கப்பட்டிருக்கும். அப்போது ஹேக்குன் இதுதான் நரகத்தின் கதவு என கூறினார்.
       இது ஒரு தத்துவார்த்தமான பதில் அல்ல. எந்த ஞானியும் தத்துவார்த்தமான முறையில் பதில் அளிப்பதில்லை, சாதாரண ஞானமடையாத மனங்களுக்கு மட்டுமே தத்துவம் இருக்கிறது. ஞானி பதிலளிக்கிறார். அப்போது அந்த பதில் வார்த்தைகளால் ஆனதல்ல. அது முழுமையானது. இந்த மனிதன் அவரை கொன்றிருக்கலாம் என்பது பொருட்டல்ல. நீ என்னை கொன்றால் நீ கவனம் பெறுவாய் என்றால், அது தகுதிவாய்ந்ததே – ஹேக்குன் விளையாட்டை விளையாடினார். ஒரு வினாடி தப்பியிருந்தாலும் அந்த மனிதன் அவரை கொன்றிருக்கலாம். ஆனால் சரியான நொடியில் ஹேக்குன் இதுதான் கதவு என கூறினார்.
              ஹேக்குன் இதுதான் கதவு என கூறியபோது சமுராய் சிலைபோல நின்றிருக்கவேண்டும். அந்த சிலைபோன்ற நிலையில், எல்லா செயல்களும் உறையும்போது, நீ கவனமடைகிறாய். ஏதாவது செயல் தேவை . . . இல்லாவிடில் உனது உணர்வற்ற தன்மை உடைந்து நீ உணர்வு பெறுவாய். ஒரு மனிதன் ஆறு மணிநேரம் எதுவும் செய்யாமல் அமர்ந்திருந்தால் அவன் ஞானடைந்துவிடுவான் என ஜென் கூறுகிறது. வெறும் ஆறு மணிநேரம் . . .ஆனால் ஆறுமணிநேரம் உண்மையிலேயே மிக அதிகம். நான் ஆறு நிமிடங்கள் போதும் என கூறுகிறேன். நீ முற்றிலுமாக எந்த செயல்பாடும் இன்றி இருக்கமுடியுமானால் ஆறு நொடிகள் கூட போதும். நீ ஏதும் செய்யாமல் இருக்கும்போது, நீ உணர்வற்று இருக்கமுடியாது, நீ ஏதும்செய்யாமல் இருக்கும்போது உன்னுடைய முழு சக்தியும் உணர்வுதன்மை அடைகிறது. ஒரு பிரம்மாண்ட வெடித்தல் நிகழ்கிறது.
  ...............................................................................ஓஷோ..............................................................................................................

Thursday, February 3, 2011

வேஷம் ஆனந்தம்


        முல்லா, நஸ்ருதீன் என்ற‌ ஒரு பெண்ணைக் காதலித்தார். முல்லாவுக்கு எல்லாம் நல்லபடி அமைந்திருந்தது. ஆனால் அவருடைய கண்பார்வை மங்கலானது.
ஆகவே அவர் கண் டாகடரிடம் கேட்டார், "கண்ணுக்கு சோடாபுட்டி போட்டுக் கொண்டிருந்தால் அந்தப் பெண் எப்படி என்னைக் காதலிப்பாள்? அவளுடைய முகம் கூட எனக்கு சரியாகத் தெர்யவில்லையே! நான் கண்ணாடி போட்டபடி அவள் எதிரில் போகக் கூடாது : உடனே என்னை நிராகரித்து விடுவாள். என்ன செய்யலாம் ?"
        டாக்டர் ஆலோசனை கூறினார், "ஒன்று செய்யலாமே! வெகு தொலைவு வரை உம்மால் பார்க்க முடிவது போல் நடியும். இப்படி அவள் நம்பும்படி ஏதாவது செய்து பாரும்!" முல்லா இதை செய்து பார்த்துவிடுவது என்று முடிவு செய்தார்.
        ஒரு நாள் பூங்காவில் உட்கார்ந்திருந்தபோது அவருக்கு ஒரு யுக்தி தோன்றியது. தூரத்தில் இருந்த ஒரு மரத்தில் ஒரு தையல் ஊசியைக் குத்திவிட்டு வந்தார். நல்ல கண்பார்வை இருந்தால் கூட அவ்வளவு தொலைவில் உள்ள ஊசியை யாராலும் பார்க்க முடியாது.
        முல்லா விண்மீ ன்கள் பளிச்ச்சிடும் இரவில் அன்று அந்த மரத்திலிருந்து 100 அடி தொலைவில் தன் காதலியுடன் உட்கார்ந்திருந்தார், திடிமென அவளிடம் "அதோ அந்த மரத்தில் பொருப்பில்லாமல் யாரோ ஒரு தையல் ஊசியை குத்தி வைத்திருக்கிறார்களே!" என்று கூறினார்.
        அப்பெண் முல்லாவின் கண்பார்வையின் மேல் ஏற்க்னவே சந்தேகம் கொண்டிருந்தாள். அப்படி இருக்க இவ்வளவு தொலைவில் ஒரு ஊசி இருப்பதை அவரால் எப்படி காண முடிந்தது என்று ஐயம் கொண்டாள். மேலும் அவளாலும் அதை பார்க்க முடியவில்லை; அந்த மரத்தையும் கூட சரியாகப் பார்க்கவில்லை. "நஸ்ருதீன், எனக்கு ஊசி ஒன்றும் தெரியவில்லையே," என்று கூறினாள்.
        முல்லா பந்தாவாக எழுந்து , "நான் போய் அதை எடுத்து வருகிறேன்", என்று கூறியபடி நடக்கலானார். ஓன்றிரண்டு அடி வைத்ததுமே தொப்பென்று தரையில் விழுந்தார். ஏனேன்றால் எதிரில் ஒரு எருமை மாடு நின்று கொண்டிருந்தது. இது அவர் கண்ணுக்குத் தெரியவில்லை.
        எந்த வேஷமும் நெடு நேரம் நிலைத்திருக்காது! உங்கள் வேஷத்தை மக்கள் கண்டுபிடிக்க வெகுநேரமாகாது. ஆனாலும் மரியாதைக்காக நீங்கள் வேஷம் போடுகிறீர்கள் என்று உங்களிடம் அவர்கள் சொல்லுவதில்லை. ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொள்வது நாகரீகமாகிவிட்டது.
........................................................ஓஷோ.........................................................................................

Wednesday, February 2, 2011

ஆணவம் என்பதே இல்லை ஆனந்தம்

        நான் என்பது என்ன நீ இதைப் பற்றி அமைதியாக சிந்தித்துப் பார்த்திருக்கிறாயா அது உன்னுடைய காலா, கையா, அல்லது உன்னுடைய இதயமா, தலையா அல்லது இது வெறும் அகங்காரமா?
        எது உன்னுடைய "நான்"? எங்கே உன்னுடைய  "நான்"? உன்னுடைய ஆணவமா?
        அது அங்கிருத்தலின் உணர்வு இருக்கிறது, ஆனாலும் அதை குறிப்பாக எங்கேயும் காண முடியவில்லை. மௌனமாக ஒரு நிமிடம் அமர்ந்து அந்த "நானை" தேடிப் பார். நீ ஆச்சரியமடைவாய். எவ்வளவு ஆழமாக தேடினாலும் உன்னை எங்கும் கண்டு பிடிக்க முடியாது. ஆனால் ஆழமாக தேடும்போது "நான்" என்று ஒன்று இல்லை என்பதை உணர்வாய். அது போல ஆணவம் என்பதும் கிடையாது. சுயத்தின் உண்மை அங்கிருக்கும்போது "நான்" அங்கிருக்காது.
        எல்லோராலும் நன்கு மதிக்கப்பட்ட நான்சென் என்ற ஞானியை அப்போதிருந்த மாமன்னன் மாலிண்ட் தனது அரசவைக்கு அழைத்தான்.
        தூதுவன் நான்சென்னிடம் சென்று, “குரு நான்சென் அவர்களே, அரசர் உங்களை காண விரும்புகிறார். நான் உங்களை அழைப்பதற்காக வந்திருக்கிறேன்.” என்றான்.
நான்சென், “நீ விரும்பினால் நான் வருகிறேன், ஆனால் நான்சென் என்று யாரும் இங்கு இல்லை. அது வெறும் ஒரு பெயர்தான், ஒரு தற்காலிக குறியீடு.” என்றார்.
        தூதுவன் அரசரிடம் சென்று நான்சென் ஒரு வித்தியாசமான மனிதர், அவர் வருவதாக ஒத்துக் கொண்டார், ஆனால் நான்சென் என்று யாரும் இல்லை என்று அவர் கூறியதைக் கூறினான். மாமன்னன் ஆச்சரியமடைந்தான்.
        நான்சென் வருவதாக கூறிய நேரத்தில் தேரில் அழைத்து வரப் பட்டார். மன்னன் வாசலில் நின்று அவரை, “குரு நான்சென் அவர்களே, வாருங்கள், வாருங்கள்!” என வரவேற்றான்.
        இதைக் கேட்டவுடன், துறவி சிரித்தார். “நான்சென்னாக நான் உன்னுடைய வரவேற்பை ஏற்றுக் கொள்கிறேன், ஆனால் நினைவில் கொள், நான்சென் என்ற பெயருடைய யாரும் இங்கு இல்லை.” என்றார்.
        அரசன், “நீங்கள் வித்தியாசமாக பேசுகிறீர்கள், நீங்கள், நீங்கள் இல்லை என்றால் யார் என்னுடைய அழைப்பை ஏற்றுக் கொண்டது? யார் என்னுடைய வரவேற்புக்கு பதில் சொல்வது?” என்று கேட்டான்.
        நான்சென் பின்னே திரும்பி பார்த்து கேட்டார், “நான் வந்த ரதம் அதுதானே?”
        “ஆம், அதுவேதான். இதுதான்”
        “தயவுசெய்து குதிரைகளை கழற்றி விடுங்கள்” என்றார்.
        அது செய்யப்பட்டது.
        குதிரைகளை காட்டி, “அது ரதமா?” என்று கேட்டார் நான்சென்.
        அரசர், “குதிரைகளை எப்படி ரதம் என்று அழைக்க முடியும்?” என்று கேட்டார்.
        துறவி கூறியதின் பேரில் குதிரைகளை கட்டும் நுகத்தடி கழற்றப்பட்டது.
        “அந்த நுகத்தடிதான் ரதமா?” என்று துறவி கேட்டார்.
        “அது எப்படி?, அவை நுகத்தடிகள், அது ரதமல்ல.”
        துறவி கூற கூற, ஒவ்வொரு பாகமாக கழற்றப்பட்டது, ஒவ்வொரு பாகமாக கழற்றப்பட, பட அரசரின் பதில் ‘ இது ரதமல்ல ‘ என்பதாக இருந்தது.
        கடைசியில் ஒன்றும் மிச்சமில்லை.
        துறவி, “எங்கே உனது ரதம்? ஒவ்வொரு பாகம் எடுத்துச் செல்லப் பட்டபோதும் இது ரதமல்ல என்று நீயே கூறினாய். ஆகவே இப்போது சொல், உனது ரதம் எங்கே?” என்று கேட்டார்.
        அரசரிடம் ஒரு நிலைமாற்றம் நிகழ்ந்தது.
        துறவி தொடர்ந்தார், “நான் சொல்வதை புரிந்து கொண்டாயா? ரதம் என்பது ஒரு கூட்டுமுயற்சி. சில குறிப்பிட்ட விஷயங்கள் சேர்ந்த சேகரிப்பு. ரதம் என்பது தனித்து இருப்பதல்ல. இப்போது உள்ளே பார். எங்கே உனது ஆணவம்?, எங்கே
        உனது ‘ நான் ‘?.
        நீ எங்கேயும் ‘ நானை ‘ கண்டு பிடிக்க முடியாது. அது பல சக்திகள் ஒன்று சேர்ந்த ஒருமித்த ஒரு வெளிப்பாடு. அவ்வளவுதான். ஒவ்வொரு உறுப்பையும் எண்ணிப்பார், உன்னுடைய ஒவ்வொரு பார்வையை பற்றியும் நினைத்துப்பார், பின் ஒவ்வொன்றாக வெளியேற்று, இறுதியில் ஒன்றுமற்றது தான் இருக்கும்.  
.........................................................ஓஷோ.........................................

Monday, January 31, 2011

அன்பின் கதை ஆனந்தம்


        முன்னொரு நாள் மிகப் பழமை வாய்ந்ததும் கம்பீரமானதும் ஆன ஒரு மரம் இருந்தது. அதன் கிளைகள் வான்வரை விரிந்து பரவிக் கிடந்தன.
        அது பூத்துக் குலுங்கும் தருணத்தில் எல்லா வண்ணங்களிலும் சிரிதும் பெரிதுமான எல்லாவித வண்ணத்துப் பூச்சிகளும் அதைச் சுற்றி நடனமாடிக் கொண்டிருக்கும்.
        அது மலர்ந்து கனிகளைத் தாங்கிக் கொண்டிருக்கையில் தொலைதூர பிரதேசங்களிலிருந்து பறவைகள் வந்து அதில் பாடும்.
        நீண்டு திறந்திருக்கும் கைகளைப் போன்ற அதன் கிளைகள் அதன் நிழலில் வந்து இளைப்பாறும் அனைவரையும் ஆசிர்வதிக்கும்.
        அதன் அடியில் எப்பொழுதும் ஒரு சிறுவன் வந்து விளையாடிக் கொண்டிருப்பான். அந்த மரம் அந்த சிறுவனிடம் ஒரு நேசத்தை வளர்த்துக் கொண்டது.
        பெரியவர் தான் பெரியவர் என்ற நினைப்பைக் கொண்டிருக்காவிட்டால்
பெரியவர்க்கும் சிறியவர்க்கும் நட்பு சாத்தியமே.
        அந்த மரத்திற்கு அது மிகவும் பெரிது என்பது தெரியாது. அந்த விதமான அறிவை மனிதன் மட்டுமே கொண்டிருக்கிறான்.
        பெரியது எப்பொழுதும் தனது ஆணவத்தையே முக்கியமாகக் கருதும். ஆனால் அன்பிற்கு சிறியது பெரியது என்று எதுவும் கிடையாது. நெருங்கிவரும் எவரையும் தழுவிக் கொள்வது அன்பு.
        இப்படியாக அந்த மரம் எப்பொழுதும் தன்னருகில் விளையாடுவதற்காக வரும் அந்த சிறுவனிடம் அன்பை வளர்த்துக்கொண்டது.
        அதன் கிளைகளோ உயர்ந்திருப்பவை ஆனால் அது அவைகளை அவனுக்காக வளைத்துத் தாழ்த்திக் கொடுத்தது. அப்போதுதானே அவன் அதனுடைய பூக்களையும் பழங்களையும் பறிக்கமுடியும்.
        அன்பு எப்போதும் வளைந்து கொடுக்கத் தயாராயிருக்கும் ஆணவம் ஒருபோதும் வளைந்து கொடுக்காது. நீ ஆணவத்தை நெருங்கினால் அதன் கிளைகள் இன்னும் எட்டமுடியாமல் மேல்நோக்கி நீளும். அது நீ அதை நெருங்க முடியாதபடி விரைத்து நிற்கும்.
        அந்த விளையாட்டுச் சிறுகுழந்தை வந்தான் அந்த மரம் தனது கிளைகளைத் தாழ்த்திக் கொடுத்தது அந்தச் சிறுகுழந்தை சில பூக்களைப் பறித்துக்கொண்டதில் அந்த மரத்துக்குப் பெருமகிழ்ச்சி. அதன் முழு இருப்பும் சப்த நாடியும் அன்பின் ஆனந்தத்தில் நிறைந்தது.
        எப்பொழுதும் எதையாவது கொடுக்க முடியும்போது சந்தோஷப்படுவது அன்பு. எப்பொழுதும் எதையாவது பெற முடியும்போது சந்தோஷப்படுவது ஆணவம்.
        சில நேரங்களில் அந்தச் சிறுவன் அந்த மரத்தின் மடியில் படுத்து உறங்கினான் சில நேரங்களில் அவன் அதனுடைய பழங்களைப் பறித்து உண்டான். இப்படியாக அவன் வளர்ந்து வந்தான்.
        சிலநேரம் அவன் அந்த மரத்தின் மலர்களால் கிரீடம் செய்து அணிந்துகொண்டு காட்டு ராஜாவைப்போல நடித்துக் கொண்டிருப்பான். அன்பில் மலர்கள் நிறைந்திருக்கும்போது ஒருவன் அரசனாகி விடுவான்.ஆனால் ஆணவத்தின் முட்கள் அங்கிருந்தால் ஒருவன் துன்பமும் ஏழ்மையும் உள்ளவனாகவே இருப்பான்.
        அந்தச் சிறுவன் மலர்கிரீடம் அணிந்து ஆடிக்கொண்டிருப்பதைப் பார்த்து அந்த மரம் ஆனந்தத்தால் பூரித்தது. அது அன்பில் தலையசைத்தது. அது தென்றலில் இசைபாடியது.
        அந்தச் சிறுவன் மேலும் வளர்ந்தான் அவன் அந்த மரத்தின் கிளைகளில் ஊஞ்சலாடுவதற்காக மரத்தின் மேல் ஏற ஆரம்பித்தான். அந்தச் சிறுவன் 
அதனுடைய கிளைகளின் மேல அமர்ந்திருக்கையில் அந்த மரம் மிக மிக சந்தோஷப்பட்டது.
        யாருக்காவது சுகத்தை அளிக்க முடியும்போது சந்தோஷப்படுவது அன்பு. கஷ்டத்தைக் கொடுக்கையில் மட்டுமே சந்தோஷப்படுவது ஆணவம்.
        கால ஓட்டத்தில் அந்தச் சிறுவனுக்கு மற்ற பொறுப்புகளின் சுமை சேர்ந்தது. குறிக்கோள்கள் வளர்ந்தன. அவன் தேர்ச்சி பெற வேண்டிய தேர்வுகள் இருந்தன 
        அவன் அரட்டை அடிக்க ஊர் சுற்ற நண்பர்கள் சேர்ந்தனர். எனவே அவன் அடிக்கடி அந்த மரத்திடம் வருவதில்லை. ஆனால் அந்த மரம் அவனுடைய வரவை எதிர்நோக்கி ஆவலோடு காத்திருந்தது. அது அதனுடைய 
ஆன்மாவிலிருந்து அழைப்பு விடுத்தது. வா....வா.
        அன்பு இரவும் பகலும் காத்திருக்கும். இப்படியாக அந்த மரம் காத்திருந்தது. அந்தச் சிறுவன் வராததால் மரம் சோகத்தில் ஆழ்ந்தது. பகிர்ந்துகொள்ள முடியாதபோது அன்பு சோகத்தில் ஆழ்கிறது. எதையும் கொடுக்க முடியாதபோது அன்பு வருத்தப்படுகிறது.
        பகிர்ந்து கொள்ள முடிவதற்காக நன்றி சொல்வது அன்பு. முழுமையாகத் தன்னைக் கொடுக்க முடியும்பொழுது அன்பு ஆனந்தத்தின் உச்சத்தைத் தொடுகிறது.
        அந்தச் சிறுவன் வளர வளர அந்த மரத்தினிடம் அவன் வருவது குறைந்து கொண்டே வந்தது. பெரிதாக வளர்ந்துவிட்ட மனிதனுக்கு குறிக்கோள்கள் அதிகரித்துவிட்ட மனிதனுக்கு அன்புகொள்ள நேரம் கிடைப்பது குறுகிக் கொண்டே வரும். இப்பொழுது அந்தச் சிறுவன் உலக விஷயங்களில் தன் முழு கவனத்தையும் கொண்டுவிட்டான்.
        ஒருநாள் அவன் கடந்துசெல்லும்போது அந்த மரம் அவனிடம் சொல்லியது. நான் உனக்காகவே காத்திருக்கிறேன் ஆனால் நீ வருவதில்லை. நான் தினமும் உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். 
        அந்தச் சிறுவன் கேட்டான் உன்னிடம் என்ன இருக்கிறது? நான் ஏன் உன்னிடம் வர வேண்டும்? உன்னிடம் ஏதாவது பணம் இருக்கிறதா? நான் பணத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.
        நான் எனும் ஆணவம் எப்பொழுதும் காரியத்தில் குறிகொண்டதாகவே இருக்கும். ஏதாவது காரியம் ஆகவேண்டுமென்றால் மட்டுமே ஆணவம் தேடி வரும்.
        ஆனால் அன்பு பயன்கருதாதது. அன்பிற்கு அன்புகொள்வதே அதன் பயன் பரிசு.ஆச்சரியப்பட்ட அந்த மரம் கேட்டது நான் ஏதாவது கொடுத்தால் மட்டும்தான் நீ வருவாயா?
        அந்தச் சிறுவன் சொன்னான் 'பின் ஏன் நான் உன்னிடம் வர வேண்டும்? நான் எங்கு பணம் இருக்கிறதோ அங்கு போகிறேன். எனக்குப் பணம்தான் வேண்டும்.
        ஆணவம் பணத்தைக் கேட்கிறது ஏனெனில் அதற்கு அதிகாரம் வேண்டும்.
        அந்த மரம் சிறிது யோசித்துவிட்டுக் கூறியது. எனது அன்பே வேறு எங்கும் நீ போக வேண்டாம் எனது பழங்களைப் பறித்து அவைகளை விற்பனை செய்.அந்த வகையில் உனக்குப் பணம் கிடைக்கும். அந்தச் சிறுவன் உடனே பிரகாசமானான்.
        அவன் அந்த மரத்தின் மீதேறி அதன் எல்லாப் பழங்களையும் பறித்துக் கொண்டான்: கனியாத பழங்களைக்கூட உலுக்கி எடுத்துக் கொண்டான்.
        அந்த மரம் மகிழ்ச்சியடைந்தது அதன் சில கொம்புகளும் கிளைகளும் முறிந்துவிட்ட போதிலும் அதனுடைய பல இலைகள் நிலத்தில் உதிர்ந்துவிட்ட போதிலும்.
        தான் உடைந்தாலும் கூட அது அன்பை சந்தோஷப்பட வைக்கிறது ஆனால் முடிவதையெல்லாம் எடுத்துக்கொண்ட பின்னும் ஆணவம் சந்தோஷமடைவதில்லை.
        ஆணவம் எப்பொழுதும் இன்னும் அதிகத்திற்கே ஆசைப்படுகிறது. அந்தச் சிறுவன் ஒருமுறைகூடத் திரும்பிப்பார்த்து அதற்கு நன்றி சொல்லவில்லை
        ஆனால் அதையெல்லாம் அந்த மரம் கவனிக்கவேயில்லை. அது அதனுடைய நன்றியுணர்வில் நிரம்பியிருந்தது‍ தனது கனிகளைப் பறித்து
விற்றுக்கொள்ளச் சொன்னதை அந்தச் சிறுவன் ஏற்றுக்கொண்டதிலேயே அது நன்றியுணர்வு கொண்டது.
        அதன்பின் அந்தச் சிறுவன் நீண்டகாலத்திற்குத் திரும்பி வரவேயில்லை. இப்போது அவனிடம் பணம் இருந்தது ஆகவே பரபரப்பாக இருந்தான்‍ இருக்கும் பணத்திலிருந்து இன்னும் பணம் பண்ணும் வேலை.
        அந்த மரத்தை அவன் சுத்தமாக மறந்துவிட்டான். ஆண்டுகள் பல கழிந்தன.
        அந்த மரம் சோகத்தில் ஆழ்ந்தது. அது அந்தச் சிறுவனின் வருகைக்காக ஏங்கியது‍ எப்படி மார்பில் பால் நிரம்பிய நிலையிலுள்ள தாய் தன் மகனைத் தவறவிட்டுவிட்டு தவிப்பாளோ அதுபோல.
        அவளுடைய முழு ஜீவனும் தனது மகனுக்காக ஏங்கும் அவள் பயித்தியம் போல தனது மகனைத் தேடுவாள்‍ எப்படியாவது அவன் வந்து
அவளை லேசாக்கிவிடமாட்டானா என்று.
        அந்த மரத்தின் உள் கதறல் அத்தகையதாயிற்று அதன் முழு ஜீவனும்
வேதனையில் துடித்தது. பல வருடங்களுக்குப் பிறகு தற்போது வளர்ந்த ஓர் ஆளாக அந்தச் சிறுவன் அந்த மரத்தினிடம் வந்தான்.
        அந்த மரம் கூறியது வா என் சிறுவனே வா என்னைக் கட்டித் தழுவிக்கொள். அந்த மனிதன் சொன்னான் அந்தப் பாசத்தையெல்லாம் நிறுத்திக்கொள். அவையெல்லாம் குழந்தைப் பருவ சங்கதிகள். நான் இன்னும் குழந்தையல்ல.
        ஆணவத்தின் பார்வைக்கு அன்பு பயித்தியக்காரத்தனம் குழந்தைத்தனமான கற்பனை. ஆனால் அந்த மரம் அவனை அழைத்தது, வா.. வந்து என் கிளைகளில் ஊஞ்சலாடு. வா... ஆடு. வா... என்னோடு விளையாட வா.
        அந்த மனிதன் கூறினான் இந்தப் பயனற்ற பேச்சையெல்லாம் முதலில் நிறுத்து! நான் ஒரு வீடு கட்ட வேண்டும். நீ எனக்கு ஒரு வீட்டைத் தர  முடியுமா?
         அந்த மரம் வியப்படைந்தது! ஒரு வீடா! நான் வீடில்லாமல் தானே இருக்கிறேன். மனிதன் மட்டும்தான் வீடுகளில் வாழ்கிறான். மனிதனைத் தவிர வேறு எவரும் வீடுகளில் வாழ்வதில்லை. அப்படி நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுக் கொண்டுவிட்ட அவனுடைய நிலையை கவனித்தாயா?
         அவனது கட்டிடங்கள் எவ்வளவு பெரியதாகியதோ அந்தஅளவு மனிதன் சிறிதாகிப் போனான்.நாங்கள் வீடுகள் கட்டி வாழ்வதில்லை ஆனாலும் நீ எனது கிளைகளை தாராளமாய் வெட்டி எடுத்துக் கொள்ளலாம் பின் அவைகளைக் கொண்டு ஒரு வீடு கட்டிக்கொள். என்றது. 
        கொஞ்சம் கூடத் தாமதிக்காமல் அந்த மனிதன் ஒரு கோடாலியைக் கொண்டு வந்தான் அந்த மரத்தின் எல்லாக் கிளைகளையும் வெட்டிக் கொண்டான்.
        இப்போது அந்த மரம் வெறும் ஒற்றை மரத்தண்டாய் ஆகிப்போனது.
ஆனால் அன்பு இவை போன்றவைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை  
அன்பு கொண்டவருக்காக அதன் அங்கங்கள் துண்டிக்கப்பட்டாலும். அன்பு என்றால் கொடுப்பது அன்பு எப்பொழுதும் கொடுக்கத் தயாராயிருக்கிறது.
        அந்த மரத்திற்கு நன்றி சொல்லவேண்டும் என்றுகூட அவன் நினைக்கவில்லை. அவன் அவனுடைய வீட்டைக் கட்டிக்கொண்டான். நாட்கள் வருடங்களாக உருண்டோடியது.
        அந்தக் கிளைகளையிழந்த மரத்தண்டு காத்திருந்தது.... காத்திருந்தது. அது அவனுக்கு அழைப்புவிட நினைத்தது ஆனால் அதற்கு பலமூட்டும் அதன் கிளைகளோ இலைகளோ இப்போது அதனிடம் இல்லை.
        காற்றடித்தது ஆனால் அந்தக் காற்றிடம் ஒரு செய்தியைக் கொடுத்தனுப்பக் கூட அதனால் இப்போது முடியவில்லை. இருந்தபோதிலும் அதனுடைய ஆன்மாவில் ஒரே ஒரு பிரார்த்தனையே ஒலித்துக் கொண்டிருந்தது: வா வா என் அன்பே வா.
        ஆனால் எதுவுமே நிகழவில்லை. காலம் ஓடியது அந்த மனிதனுக்கு இப்போது வயதாகிவிட்டது. 
        ஒருமுறை அதைக் கடந்து போகும்போது அவன் வந்தான் வந்து அந்த மரத்தினடியில் நின்றான். அந்த மரம் உடனே கேட்டது உனக்காக நான் செய்யக் கூடியது இன்னும் ஏதாவது இருக்கிறதா?
        நீ மிக மிக நீண்டகாலம் கழித்து வந்திருக்கிறாய். அந்த வயதான மனிதன் சொன்னான் நீ எனக்கு வேறு என்ன செய்ய முடியும்?
        நான் இப்போது தூர தேசங்களுக்குப் போக வேண்டும் - அதிகப் பணம் சம்பாதிப்பதற்காக அதற்குப் பயணப்பட எனக்கு ஒரு படகு வேண்டும்.
        உற்சாகத் துள்ளலோடு அந்த மரம் கூறியது எனது அன்பே அதில் எந்தப் பிரச்சனையும் இல்லை எனது மரத்தண்டை வெட்டிக்கொள் அதிலிருந்து ஒரு படகு செய்துகொள்.
        ஆனால் தயவுசெய்து ஞாபகத்தில் வைத்துக்கொள் - நான் உனது வரவிற்காக எப்பொழுதும் காத்துக் கொண்டிருப்பேன்.
        அந்த மனிதன் ஒரு ரம்பத்தை எடுத்து வந்தான் மரத்தண்டை வெட்டிச் சாய்த்தான் அதிலிருந்து ஒரு படகு செய்தான் கடல்பயணம் புறப்பட்டுச் சென்றுவிட்டான். 
        இப்போது அந்த மரம் ஒரு வெறும் அடிக்கட்டை. அது காத்திருந்தது - 
அதன் அன்பானவனின் வருகைக்காக. அது காத்திருந்தது மேலும் அது காத்திருந்தது..... மேலும் அது காத்திருந்தது.
        அந்த மனிதன் ஒருபோதும் திரும்பவில்லை. ஆணவம் எங்கே ஏதாவது கிடைக்குமோ அங்கு மட்டுமே போகும். ஆனால் அந்த மரத்திடமோ எதுவுமேயில்லை கொடுப்பதற்கு சுத்தமாக எதுவுமில்லை. அடைவதற்கு எதுவுமில்லாத இடம்நோக்கி ஆணவம் ஒருபோதும் போகாது ஆணவம் என்றுமே பிச்சைக்காரன்தான் அது எப்போதும் யாசித்துக் கொண்டேதான் இருக்கும். 
        ஆனால் அன்பு ஒரு அறக்கட்டளை. அன்பு ஒர் அரசன் ஒரு பேரரசன் அன்பை விட உயர்ந்த ஒரு அரசன் எங்காவதுண்டா? 
        ஒருநாள் இரவு அந்த அடிக்கட்டையின் அருகில் நான் ஓய்வுகொண்டேன். அது என்னிடம் குசுகுசுத்தது என்னுடைய அந்த நண்பன் இன்னும் திரும்பி வரவில்லையே.
        அவன் ஒருவேளை முழுகிப் போயிருப்பானோ அவன் ஒருவேளை தொலைந்து போயிருப்பானோ என்று எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது. அந்தத் தொலைதூர தேசங்கள் ஏதாவதொன்றில் அவன் காணாமல் போயிருக்கலாமல்லவா. அவன் இப்போது உயிரோடுகூட இல்லையோ என்னவோ. அவனைப் பற்றிய ஏதாவது செய்திக்காக எவ்வளவு நான் ஏங்குகிறேன் தெரியுமா?
        எனது வாழ்வின் கடைசிகாலத்தை நெருங்கிவிட்ட இந்த சமயத்தில் அவனைப் பற்றித் தகவல் ஏதாவது கிடைத்தால்கூட நான் திருப்திப் பட்டுக் கொள்வேன். அதன் பிறகு நான் சந்தோஷமாக இறந்து விடுவேன். ஆனால் என்னால் அவனை அழைக்க முடிந்தாலும்கூட அவன் வர விரும்ப மாட்டான்.
        என்னிடம் கொடுப்பதற்கு இனி எதுவும் இல்லை ஆனால் அவனுக்கோ
எடுத்துக்கொள்ளும் மொழி மட்டும்தான் புரியும். ஆணவத்திற்கு எடுத்துக்கொள்ளும் மொழி மட்டுமே புரியும். ஆனால் கொடுக்கும் மொழியே அன்பு.
        நான் இதற்கு மேல் சொல்ல எதுவுமில்லை. மேலும் இதற்கு மேல் சொல்ல எதுவும் பாக்கியும் இல்லை. வாழ்க்கை அந்த மரத்தைப்போல ஆகமுடிந்தால் தனது கிளைகளை பரந்து விரிந்து பரவச்செய்தால் அதனால்
எல்லோரும் அதன் நிழலில் பாதுகாப்புப் பெற முடிந்தால் அப்போது அன்பு என்றால் என்ன? என்பதை நாம் புரிந்துகொள்வோம்.  
        எந்த வேதப் புத்தகமும் கிடையாது.
        எந்த வழிகாட்டலும் இல்லை.
        எந்த அகராதியும் கிடையாது  அன்புக்கு.
        எந்த குறிப்பிட்ட கொள்கைகளும் கிடையாது அன்புக்கு.
        அன்பைப் பற்றி நான் எப்படிப் பேச முடியும் என்று நான் ஆச்சரியமே படுகிறேன்! விளக்குவதற்கு அவ்வளவு கஷ்டமானது அன்பு. ஆனால் அன்பு இதோ இருக்கிறது! 
..................................ஓஷோ

Wednesday, January 26, 2011

வாழ்வின் உண்மை ஆனந்தம்

ஒரு அரசர் தனது அரசவையிலுள்ள அறிஞர்களிடம், நான் எனக்காக ஒரு அழகான மோதிரம் செய்யப் போகிறேன். அதில் மிகச்சிறந்த வைரங்கள் பதிக்கப் போகிறேன்.அந்த மோதிரத்திற்க்குள் மிக மோசமான சமயத்தில் படித்தால் எனக்கு உதவக்கூடிய ஒரு செய்தியை வைத்திருக்க விரும்புகிறேன். அது மிகவும் சிறியதாக இருக்கவேண்டும். அப்போதுதான் அதை மோதிரத்தில் பதிக்கும் வைரத்தின் கீழே மறைத்து வைக்கமுடியும். அப்படி ஒரு செய்தி வேண்டும். என்று கேட்டான்.
        அவர்கள் யாவரும் அறிஞர்கள், மிகச்சிறந்த பண்டிதர்கள். அவர்களால் மிகச்சிறந்த உபதேசங்களை எழுத முடியும். ஆனால் மிக மோசமான தருணத்தில் உதவக்கூடிய இரண்டு அல்லது மூன்று வார்த்தைகளுக்குள் அடங்கும் ஒரு செய்தியை எழுதுவது என்றால்...... அவர்கள் சிந்தித்தனர், தங்களது புத்தகத்தில் தேடிப்பார்த்தனர், ஆனால் அவர்களால் அப்படி ஒன்றை கண்டு பிடிக்கவே முடிய வில்லை. அரசரிடம் ஒரு வயதான வேலையாள் இருந்தான். அவனுக்கு அவரது தந்தையின் வயது. அவன் அரசரது தந்தையின் வேலையாள். அரசி சிறுவயதிலேயே மரணமடைந்து விட்டதால் இந்த வேலையாள்தான் அரசரை பாதுகாப்பாக வளர்த்தான். அதனால் அரசர் இவனை ஒரு வேலையாளாக கருதுவதில்லை. அவனிடம் மிகவும் மதிப்பு வைத்திருந்தான்.
        அந்த வயதானவன், நான் அறிவாளியுமல்ல, பண்டிதனுமல்ல, படித்தவனுமல்ல, ஆனால் எனக்கு அந்த செய்தி என்னவென்று தெரியும் – அப்படி பட்ட செய்தி ஒன்றே ஒன்றுதான் உள்ளது. இவர்களால் அதை உங்களுக்கு கொடுக்கமுடியாது. ஏனெனில் தன்னை உணர்ந்த ஒரு மனிதனால்தான், ஒரு ஞானியால்தான் அது போன்ற ஒரு செய்தியை கொடுக்கமுடியும். என்றான்.
        இவ்வளவு காலம் இந்த அரண்மனையில் இருந்ததால் நான் பல்வேறு தரபட்ட மக்களை சந்தித்திருக்கிறேன். அதில் ஒருமுறை ஒரு ஞானியை சந்தித்திருக்கிறேன். அவர் உனது தந்தையின் விருந்தாளியாக வந்திருந்தார். அவருக்கு சேவை செய்வதற்காக உனது தந்தை என்னை அனுப்பினார். அவர் விடைபெறும்போது, நான் அவருக்கு செய்த பணிவிடைகளுக்கு நன்றியுரைக்கும் விதமாக அவர் இந்த செய்தியை எனக்கு அளித்தார். எனக்கூறி அந்த செய்தியை ஒரு சிறுதாளில் எழுதி அதை சுருட்டி அரசரிடம் கொடுத்து, இதை படிக்க வேண்டாம். மோதிரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். எல்லாமும் முடிந்து விட்டது, வேறு வழியேயில்லை எனும் சமயத்தில் இதை திறந்து பாருங்கள் என்றார்.
        அந்த சமயமும் விரைவிலேயே வந்தது. அந்த நாட்டின்மீது படையெடுப்பு நடந்தது. அரசர் தனது நாட்டை போரில் இழந்தார். அவர் தனது குதிரையில் தப்பித்து ஓடினார். அவரது பின்னால் அவரது எதிரி படை வீரர்கள் குதிரையில் துரத்தி வந்தனர். அவர் ஒரு ஆள், அவர்கள் பலர். அவர் ஒரு பாதை முடிவுக்கு, அதற்கு மேல் பாதையில்லை என்ற இடத்திற்கு, ஒரு மலைமுகடுக்கு வந்து விட்டார். கீழே பெரும் பள்ளத்தாக்கு, அதில் விழுந்தால் முடிந்தது. அவரால் திரும்பியும் போக முடியாது, எதிரிகள் வந்து கொண்டிருந்தனர், குதிரைகளின் குளம்படி சத்தம் கேட்டது. – முன்னேயும் போக முடியாது, அங்கே வழியில்லை.
        திடீரென அவருக்கு மோதிரத்தின் நினைவு வந்தது. அவர் அந்த மோதிரத்தை திறந்து, அந்த பேப்பரை எடுத்தார், அதில் மிகச் சிறந்த பொருளுடைய ஒரு வாசகம் இருந்தது. அது இதுவும் கடந்து போகும் அந்த வாசகத்தை படித்தவுடன் அவருக்குள் மிகப் பெரும் அமைதி வந்தமர்ந்தது. இதுவும் கடந்து போகும், அதுவும் கடந்து போயிற்று.
        எல்லாமும் கடந்து போகும், எதுவும் இந்த உலகில் தங்காது. அரசரை பின்தொடர்ந்து வந்த எதிரிகள் வழி மாறி போய் விட்டனர், வேறு வழியில் அவரை தேடி சென்று விட்டனர். குதிரைகளின் குளம்பொலி படிப்படியாக குறைந்து தேய்ந்து போய் விட்டது. அரசருக்கு அந்த ஞானியிடமும், அந்த வேலையாளிடமும் அளப்பரிய நன்றியுணர்வு தோன்றியது. இந்த வார்த்தைகள் அபூர்வ சக்தி படைத்தவை. அவர் அந்த தாளை மடித்து, திரும்பவும் அந்த மோதிரத்தினுள் வைத்தார்.
        பின் தனது படைகளை திரட்டிக் கொண்டு வந்து, திரும்பவும் போராடி தனது அரசை வென்றார். அவர் தனது தலைநகரத்தில் வெற்றியோடு நுழையும்போது, ஆடல்பாடலோடு கோலாகலமாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அரசர் தன்னைப் பற்றி பெருமையாக உணர்ந்தார். அந்த வேலையாள் அவரது ரதத்தின் கூட நடந்து வந்து கொண்டிருந்தார். அவர், இதுவும் சரியான தருணம். அந்த வாசகத்தை திரும்பவும் பாருங்கள். என்றார்.
        அரசர், என்ன சொல்கிறீர்கள், இப்போது நான் வெற்றி பெற்று இருக்கிறேன். மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள், நான் தோல்வியுற்ற நிலையில் இல்லையே. வேறு வழியே இல்லை என்ற நிலையில் நான் இப்போது இல்லையே. எனக் கேட்டார்.
        அந்த வயதானவன், பாருங்கள், இதைத்தான் ஞானி என்னிடம் கூறினார். அந்த செய்தி கையறு நிலைக்கானது மட்டுமல்ல, அது சந்தோஷ தருணங்களுக்கானதும்தான். நீங்கள் தோல்வியுற்ற நிலையில் மட்டுமல்ல, வெற்றி பெற்ற நிலையில் கூட அந்த செய்தி உண்மையானது தான். நீ தொலைந்து போன சமயத்தில் மட்டுமல்லாமல் முதல் ஆளாக நீ இருக்கும் நேரத்தில்கூட அது தேவைதான். என்று கூறினார்
        அரசர் தனது மோதிரத்தை திறந்து, இதுவும் கடந்து போகும் என்ற செய்தியை படித்தார். உடனே திடீரென அந்த கூட்டத்தினுள்ளும், மகிழ்ந்து கூத்தாடிக் கொண்டிருக்கும் அந்த நேரத்திலும் அதே அமைதி, அதே மௌனம் கவிழ்ந்தது. அந்த பெருமை, அந்த ஆணவம் அகன்றது............ எல்லாமும் கடந்து போகும்..........
..........................ஓஷோ

Sunday, January 23, 2011

யார் குரு? ஆனந்தம்

மிகச் சிறந்த சூஃபி ஞானிகளில் ஒருவரான ஹாசன் என்பவரிடம் இறக்கும் சமயத்தில் உங்களது குரு யார் என்று யாரோ ஒருவர் கேட்டார்.
        அதற்கு அவர், மிக தாமதமாக இந்த கேள்வியை கேட்டிருக்கிறீர்கள். நேரம் இல்லை. நான் இறந்து கொண்டிருக்கிறேன். என்று கூறினார். அதற்கு கேள்வி கேட்டவர், நீங்கள் பெயரை மட்டும் சொன்னால் போதுமானது. நீங்கள் இன்னும் உயிரோடு இருக்கிறீர்கள், இன்னும் சுவாசித்து கொண்டும், பேசிக் கொண்டும் இருக்கிறீர்கள். நீங்கள் பெயரை மட்டும் சொன்னால் போதுமானது என்று கேட்டார்.
        அதற்கு ஹாசன் எனக்கு ஆயிரக்கணக்கான குருமார்கள் இருக்கிறார்கள். நான் அவர்களது பெயரை சொல்வதற்கே எனக்கு பல மாதங்கள் பிடிக்கும் அவர்களைப் பற்றி பேச வருடங்கள் ஆகும். இருப்பினும் மூன்று பேர்களை மட்டும் நான் குறிப்பிட விரும்புகிறேன்.
        அதில் ஒன்று ஒரு திருடர். ஒருமுறை நான் பாலைவனத்தில் தொலைந்து போய் வழி கண்டுபிடித்து கிராமத்தை போய் சேரும்போது நடு இரவாகி விட்டது. பாதி இரவு சென்று விட்டது. கடைகள் அனைத்தும் மூடிக் கிடந்தன. கதவுகள் அனைத்தும் அடைபட்டுக் கிடந்தன. ரோட்டில் மனித நடமாட்டமே இல்லை. நான் விசாரிப்பதற்காக யாராவது இருக்கிறார்களா என்று தேடினேன். இறுதியில் சுவற்றில் உள்ளே நுழைவதற்காக கன்னம் வைத்துக் கொண்டிருந்த ஒரு திருடனை பார்த்தேன்.
        நான் அவரிடம், நான் தங்க இங்கே ஏதாவது இடம் இருக்குமா என்று கேட்டேன். அவர், நான் ஒரு திருடன், நீங்களோ ஒரு சுஃபி ஞானி போல தோன்றுகிறீர்கள். இப்போது தங்க இடம் கண்டு பிடிப்பது மிகவும் கடினம். ஆனால் நீங்கள் விருப்ப்பட்டால் என் வீட்டிற்கு வரலாம், திருடனுடன் தங்க உங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லையென்றால் என்னுடன் வாருங்கள். என்று அழைத்தார்.
        நான் கொஞ்சம் ஒரு வினாடி தயங்கினேன். பின் எனக்கு உரைத்தது. ஒரு திருடன் சூஃபியை பார்த்து பயப்படாத போது ஏன் சூஃபி திருடனைக் கண்டு அஞ்ச வேண்டும். உண்மையில் அவன்தான் என்னைக் கண்டு அஞ்ச வேண்டும். அதனால் நான் அவனிடம் சரி நான் உன் வீட்டிற்கு வருகிறேன் என்று கூறினேன். நான் அவனுடன் சென்று அவன் வீட்டில் தங்கினேன். அந்த மனிதன் மிகவும் அன்பானவன், மிகவும் அருமையான மனிதர். நான் அவருடைய வீட்டில் ஒரு மாதம் தங்கினேன். ஒவ்வொரு இரவும் அவர் திருடுவதற்கு கிளம்பும்போதும், சரி, நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள், தியானம் செய்யுங்கள், ஓய்வெடுங்கள், நான் என் வேலையை பார்க்கப் போகிறேன் என்பார். அவர் திரும்பி வரும்போது, ஏதாவது கிடைத்ததா என்று நான் கேட்பேன். இன்று எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் நாளை திரும்பவும் முயற்சிப்பேன். என்று கூறுவார். ஒருநாளும் அவர் நம்பிக்கையிழந்து நான் பார்க்கவேயில்லை.
        ஒரு மாதம் முழுவதும் அவர் வெறும் கையுடன்தான் திரும்பி வந்தார். ஆனாலும் அவர் மகிழ்ச்சியாகத்தான் இருந்தார். அவர் நாளை முயற்சி செய்வேன். கடவுள் விருப்பபட்டால் நாளை ஏதாவது கிடைக்கும். நீங்களும் எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள். இந்த ஏழைக்கு உதவி செய்யுங்கள் என்று நீங்கள் கடவுளிடம் சொல்லுங்கள். என்று கூறுவார்.
        மேலும் தொடர்ந்து ஹாசன் சொல்லுகையில் நான் பல வருடங்கள் தொடர்ந்து தியானம் செய்து கொண்டிருக்கையில் எதுவும் நிகழவில்லை. நான் மிகவும் மனமுடைந்து நம்பிக்கையிழந்து இது எல்லாவற்றையும் நிறுத்திவிடலாமா என்று பல சமயங்களில் நினைத்ததுண்டு. கடவுள் என்று ஒருவரும் இல்லை, எல்லா பிரார்த்தனைகளும் மடத்தனம், எல்லா தியானங்களும் பொய் என்று நினைப்பேன் – அப்போது திடீரென அந்த திருடனின் நினைவு வரும். அவர் ஒவ்வொரு நாள் இரவும் கடவுள் விருப்பபட்டால் நாளை ஏதாவது கிடைக்கும் என்று கூறியதை நினைத்துக் கொள்வேன்.
        அதனால் மேலும் ஒருநாள் முயற்சி செய்து பார்க்கலாம் என்று நினைத்துக் கொள்வேன். திருடன்கூட அந்த அளவு நம்பிக்கையுடனும் அந்த அளவு நம்பிக்கையுணர்வுடனும் இருக்கும்போது நான் ஏன் இன்னும் ஒருநாள் முயற்சி செய்து பார்க்கக் கூடாது என்று தோன்றும். பலமுறை இப்படி நிகழ்ந்திருக்கிறது. அந்த திருடனும் அவனைப் பற்றிய நினைவும் நான் இன்னும் ஒருநாள் என்று முயல உதவி செய்திருக்கிறது. ஒருநாள் அது நிகழ்ந்து விட்டது. அது நிகழ்ந்தே விட்டது. நான் அந்த திருடனின் வீட்டை விட்டும் அவனை விட்டும் பலஆயிரம் மைல் தூரம் அப்பால் இருந்தேன். ஆயினும் நான் அந்த திசையில் வணங்கினேன். அவர்தான் எனது முதல் குரு.
        எனது இரண்டாவது குரு ஒரு நாய். நான் மிகவும் தாகமாக இருந்தேன். தண்ணீர் குடிப்பதற்காக நதியை நோக்கி போய்க் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நாயும் தண்ணீர் குடிப்பதற்காக நதியை நோக்கி வந்தது. அதற்கும் மிகவும் தாகமாக இருந்தது. அது நதிக்குள் பார்த்தது. அங்கே வேறொரு நாய் இருப்பதை பார்த்தது. – அதனுடைய பிம்பம்தான் – அதைப் பார்த்து பயந்தது. அது குரைத்தது உடனே அந்த நாயும் குரைத்தது. இது மிகவும் பயந்து போய் தயங்கிக் கொண்டே திரும்பி போனது. ஆனால் தாகம் மிகவும் அதிகமாக இருந்ததால் திரும்பி வந்தது, தண்ணீரில் பார்த்தது, அந்த நாய் அங்கேயே இருப்பதை பார்த்தது. ஆனாலும் தாகத்தினால் தண்ணீரில் எட்டிக் குதித்தது, அந்த பிம்பம் கலைந்து போய் விட்டது. தண்ணீரை குடித்து அது ஒரு கோடை காலமாக இருந்ததால் தண்ணீரில் நீச்சலடித்து ஆனந்தப்பட்டது. நான் பார்த்துக் கொண்டே இருந்தேன். அதன்மூலம் கடவுளிடமிருந்து எனக்கு ஒரு செய்தி வந்ததை புரிந்து கொண்டேன். ஒருவர் எல்லா பயங்களோடும் எட்டிக் குதித்து விடவேண்டும் என்பதை புரிந்து கொண்டேன்.
        நான் அறியாததற்குள் குதித்து விடும் ஒரு சமயம் வந்த போது ஒரு பயம் வந்தது. அந்த எல்லை வரை போய்விட்டு தயக்கப் பட்டுக் கொண்டு திரும்பி வந்து விடுவேன். அப்போது அந்த நாயின் நினைவுதான் வந்தது எனக்கு. நாய் எட்டிக் குதிக்கும்போது நான் ஏன் எட்டிக் குதிக்கக் கூடாது என்று தோன்றியது. ஒருநாள் நான் அறியாததற்குள் எட்டிக் குதித்துவிட்டேன். நான் கரைந்து அறியாதது மட்டுமே இருந்தது. அந்த நாய்தான் எனது இரண்டாவது குரு.
        எனது மூன்றாவது குரு ஒரு சிறு குழந்தை. நான் ஒரு நகரத்தினுள் சென்றபோது அந்த குழந்தை ஒரு மெழுகுவர்த்தியை ஏந்திக்கொண்டு சென்றது அதன் திரி ஏற்றப்பட்டிருந்தது, மசூதியில் வைப்பதற்காக ஏற்றப்பட்ட அந்த மெழுகுவர்த்தியை கைகளில் எடுத்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தது அந்த குழந்தை. ஒரு கிண்டலுக்காக நான் அந்த குழந்தையை நீயா இந்த மெழுகுவர்த்தியை ஏற்றினாய் என்று கேட்டேன். அவன் ஆமாம் என்று கூறினான். நான் தொடர்ந்து, அந்த ஒளி எங்கிருந்து வந்தது என்று உன்னால் கூற முடியுமா மெழுகுவர்த்தி எரியாமல் இருந்தது, நீ ஏற்றினாய் ஒளி வந்தது. நீ ஏற்றியபோது பார்த்தாய் அல்லவா அந்த ஒளி எங்கிருந்து வந்தது என்று உன்னால் கூற முடியுமா என்று கேட்டேன். அந்த பையன் சிரித்துவிட்டு, மெழுகுவர்த்தியை ஊதி அணைத்துவிட்டு, இப்போது நீங்கள் இந்த ஒளி எங்கு போனது என்று பார்த்தீர்கள் அல்லவா அது எங்கு போனது என்று எனக்கு கூறுங்கள் என்று கேட்டான். என்னுடைய ஆணவம் சுக்குநூறானது, எனது அறிவு அனைத்தும் பொடிபொடியானது. அந்த வினாடியில் நான் எனது முட்டாள்தனத்தை உணர்ந்தேன். அப்போதிலிருந்து நான் அறிந்தவன் என்பதை விட்டு விட்டேன். என்றார்.
        ஹாசன் மூன்று குருக்களைப் பற்றி கூறினார். மேலும் அவர் பலர் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் எல்லோரையும் பற்றியும் பேச எனக்கு நேரம் இல்லை என்றார்.
        ஆம், அது உண்மை. எனக்கு ஒருவர்தான் குரு என்று கிடையாது. ஏனெனில் எனக்கு ஆயிரக்கணக்கான குருக்கள் இருக்கின்றனர். நான் சாத்தியப்பட்ட எல்லா வழிகளிலும் கற்றுக் கொண்டேன்.
        நீ அப்படிப்பட்ட விதமான ஒரு சீடன் என்றால் உனக்கு குரு என்று ஒருவர் தேவை இல்லை. ஆனால் நினைவில் கொள், குரு என்ற ஒருவர் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நீ தேர்ந்தெடுத்தாலும் சரி, தேர்ந்தெடுக்காமல் எல்லோரையும் வைத்துக் கொண்டாலும் சரி, நீ ஒரு சீடனாக இருக்க வேண்டியது அவசியம்.
        சீடனாக இருப்பது இந்த பாதையில் மிக அவசியமான ஒரு விஷயம்.
        சீடனாக இருப்பது என்றால் - கற்க முடிவது, கற்க தயாராக இருப்பது, இந்த இயற்கைக்கு திறந்தவனாக இருப்பது. நீ ஒரு குருவை தேர்ந்தெடுக்கும் போது என்ன நிகழ்கிறது எப்படி கற்றுக் கொள்வது என கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறாய். ஒரு குருவுடன் இருக்கும்போது நீ மெதுமெதுவாக லயப்பட ஆரம்பிக்கிறாய். மெதுமெதுவாக நீ இயற்கையுடன் லயப்படுவது எப்படி என கற்றுக் கொள்கிறாய்.
        குரு என்பவர் இந்த இயற்கையின் சிறிய வடிவம்தான். குருவுடன் நெருங்கி வர வர நீ அழகு, நேசம், நெருக்கம், அணுக்கம், அன்யோன்யம், ஒப்புக்கொடுத்தல் ஆகியவற்றை பற்றி தெரிந்து கொள்கிறாய். ஒருவரிடம் ஒன்றாக இருக்கும்போது இவ்வளவு ஆனந்தம் கிடைக்கும்போது முழுமையுடன் ஒன்றாக இருக்கும்போது எவ்வளவு ஆனந்தம் கிடைக்கும் என்பதை நீ பார்க்கும் ஒரு நேரம் வரும். குரு என்பவர் ஒரு ஆரம்பம்தான், அவர் முடிவு அல்ல. உண்மையான குரு என்பவர் ஒரு வாசல்தான், நீ அவர் மூலம் சென்று கடந்து போக முடியும். உண்மையான குரு நீ அவரை கடந்து செல்ல உதவுபவர். .................................................................................ஓஷோ

Monday, January 3, 2011

நேசித்தல்: ஆனந்தம்

          நேசத்திலிருந்து சந்தோஷம் பிறக்கிறது. அதுதான் ஒரே சந்தோஷம். நீ எப்போதெல்லாம் நேசிக்கிறாயோ, அப்போதெல்லாம் நீ சந்தோஷமாக இருக்கிறாய். எப்போதெல்லாம் நேசமாக இருக்க முடிவதில்லையோ, அப்போதெல்லாம் நீ சந்தோஷமாக இருக்க முடிவதில்லை. சந்தோஷம் நேசத்தின் விளைவு, நேசத்தின் நிழல். அது நேசத்தை பின்தொடரும். நீ மேலும் மேலும் நேசமாக இருக்க இருக்க நீ மேலும் மேலும் சந்தோஷப்படுவாய்.
           உன்னுடைய நேசம் திரும்ப வருகிறதா இல்லையா என்பதைப் பற்றி கவலைப்படாதே. அது முக்கியமல்ல. அது திரும்ப வருகிறதோ இல்லையோ, மற்றவர்கள் பெற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நீ நேசித்தால் சந்தோஷம் நேசத்தை தானாகவே பின்தொடரும்.
           நீ சந்தோஷமாயிருப்பாய், அதுவே போதும். ஒருவர் எதிர்பார்ப்பதை விட போதும். அதுதான் நேசத்தின் அழகு – அதன் விளைவு – அதன் அர்த்தம் - அது அடுத்தவரின் எதிர்விளைவை பொறுத்ததல்ல, அது முழுமையாக உன்னுடையது.
           மக்கள் எப்போதும் திரும்ப எதையாவது எதிர்பார்கிறார்கள். அவர்களது நேசம் நிபந்தனைக்குரியது. அவர்கள் என்னை சந்தோஷப்படுத்து, பின் நான் உன்னை நேசிக்கிறேன் என்கின்றனர். அவர்களது நேசத்தில் கட்டுப்பாடு உள்ளது, அதில் பேரம் உள்ளது. அவர்கள் முழுமையான குருடர்களாக உள்ளனர். நேசிப்பதன் மூலம் சநேதோஷம் தானாகவே மலரும் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. அது ஒரு தொடரும் பின்விளைவு. அதனால் நேசி, நீ யாரை அல்லது எதை நேசிக்கிறாய் என்பது முக்கியமல்ல – பூனை, நாய், மரம், பாறை எதுவாக இருந்தாலும் சரி, ஒரு பாறையின் அருகில் உட்கார்ந்து அதை நேசி! அதனுடன் பேசு! அதை முத்தமிடு.
          அந்த பாறை மீது படுத்துக்கொள். அந்த பாறையுடன் ஒன்றாக உணர்ந்து பார்! திடீரென ஒரு சக்திபிரவாகம், ஒரு சக்தி வெள்ளம் வருவதை உணர்வாய். நீ அளவற்ற மகிழ்ச்சியடைவாய். அந்தப் பாறை திரும்ப எதுவும் கொடுக்காமல் இருக்கலாம், கொடுக்கலாம் – ஆனால் அது முக்கியமல்ல! நீ நேசிப்பதன் மூலம் நீ மகிழ்ச்சியடைகிறாய்.
          யார் நேசிக்கிறார்களோ அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். ஒருமுறை உனக்கு இந்த சாவி கிடைத்துவிட்டால், உன்னால் இருபத்திநான்கு மணி நேரமும் சந்தோஷமாக இருக்க முடியும். நீ இருபத்திநான்கு மணி நேரமும் நேசமாக இருந்தால் பின் நேசிக்க பொருளை தேட மாட்டாய். மேலும் மேலும் நீ விடுதலை பெற்றவனாக இருப்பாய். ஏனெனில் உன்னால் நேசிக்க முடியும் என்பதை மேலும் மேலும் அதிகமாக அறிந்து கொள்வாய் – அங்கு யாரும் இல்லையென்றால் கூட உன்னைச் சுற்றியுள்ள அந்த வெறுமையை நேசிப்பாய். உன்னுடைய அறையில் தனிமையில் அமர்ந்திருக்கும்போதுகூட அந்த அறையை உனது அன்பால் நிறைத்துவிடுவாய். நீ சிறையில் இருக்கலாம், நீ அதை கோவிலாக ஒரு வினாடிக்குள் மாற்றி விடுவாய். நீ அதை நேசத்தால் நிறைக்கும்போது அது ஒரு சிறையாக இருக்காது!
          மரங்கள், பாறைகள், அன்னியர்கள், மக்கள், நண்பர்கள் ஆகிய எல்லோரையும் நேசிக்க ஆரம்பி.
          ஒரு பாறை மேல் உட்கார்ந்து அதை நீ காதலிப்பதுபோல உணர்ந்து தொட்டுப்பார்! நீ உடனடியாக பதில்விளைவை உணர்வாய்! ஒரு மரத்தை ஆழ்ந்த நேசத்துடன் தொட்டுப்பார்! திடீரென அது ஒரு வழிப்பாதையல்ல என்பதை உணர்வாய்! உணவை சாப்பிடும்போது, உணவை அன்புடன் மெல்லு! குளிக்கும்போது தண்ணீரை தெய்வீகம் போன்று ஆழ்ந்த அன்புடன் நன்றியுடன் பெற்றுக் கொள்! ஏனெனில் தெய்வீகம் எல்லாவற்றிலும் எல்லா இடத்திலும் உள்ளது.
          ஒருமுறை எல்லாமும் தெய்வீகம் என்று உணர ஆரம்பித்துவிட்டால் பின் நீ நேசத்திற்காக ஏங்க மாட்டாய், ஏனெனில் எல்லா இடங்களிலும் அது நிறைந்திருப்பதை நீ உணர்வாய். அது தான் ஆனந்தம் என்பதை உணர்வாய்........ ..................................................................ஓஷோ.................................................................................