Thursday, June 16, 2011

சோதனை ஆனந்தம்

       உலகையே சிரிக்க வைத்தவர் சார்லி சாப்ளின்! ஆனால் அவரது வாழ்க்கை சந்தோஷமாக இருந்ததே இல்லை. பிறந்ததில் இருந்தே துன்பங்கள், அவமானங்கள், தோல்விகள்! 1889-ல்…லண்டன் நகரில் சாப்ளின் பிறந்து ஓரிரு வருடங்களிலேயே பெற்றோரிடையே சண்டை வந்து விவாகரத்து அகிவிடவே, பேசத் தொடங்கும் முன்பே, தாயுடன் சேர்ந்து மேடையில் பாட வேண்டிய நிர்பந்தம். ஐந்து வயதுச் சிறுவனின் பாட்டுக்குக் கிடைத்த அமோக வரவேற்பு, ஏழு வயதிலேயே பறிபோனது. காரணம், அவரது தாயாரின் மனநிலை பாதிக்கப்பட்டதுதான்.
      குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக முடிதிருத்தும் நிலையம், கண்ணாடித் தொழிற்சாலை, மருத்துவமனை என எங்கெங்கோ வேலைபார்த்தவர் சில காலம் தந்தையுடன் சேர்ந்து மேடை நாடகங்களிலும் நடித்தார். ஆனால் தந்தை திடீரென இறந்துவிடவே, மீண்டும் தொய்வு! 1910ல்…நாடகக் குழுவினருடன் அமெரிக்கா சென்றவருக்கு குறும்படங்கலில் நல்ல பெயர் கிடைத்தது. அவரது முத்திரை நடிப்பான ‘டிராம்ப்’ (பேகி பேண்ட், தொப்பி, கைத்தடி, வளைந்த கால்கள்) பிரபலமானது. ‘தி கிட்’ படத்தில் தொடங்கிய வரவேற்பு ‘தி கிரேட் டிக்டேட்டர்’ வரை நீடித்தது. ஆனால், இந்த காலகட்டங்களில் குடும்ப வாழ்வு அவரை பாடாய்ப் படுத்தியது.
      1918-ல் நடந்த முதல் திருமணம் இரண்டு வருடம் மட்டுமே நீடித்தது. அதற்கு பின் நடந்த இரண்டு திருமணங்களும் கூட சாப்ளினுக்கு சோகத்தை மட்டுமே கொடுத்தன. 1920-ல் நான்காவது மனைவியாக ஓ ரெய்ல் அமைந்தபின் இல்லறத் தொல்லைகள் நின்றன. 1945-ம் ஆண்டு சாப்ளின் ஒரு கம்யூனிஸ்ட் தீவிரவாதி என அமெரிக்க அரசு குற்றம் சாட்டியது. இரண்டாவது மனைவி ஜோன் பெர்ரியும் சாப்ளின் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்திருந்தார். அவர் தரப்பு நியாயங்களை அமெரிக்க அரசு கேட்காததால், வேறு வழியின்றி, 1952-ல் கனத்த இதயத்துடன் சுவிட்சர்லாந்தில் அடைக்கலமானார் சாப்ளின்.
      1972-ல்… காலச் சக்கரம் சுழல, அதே அமெரிக்க அரசு, ‘உலகின் தலைச்சிறந்த நகைச்சுவை நடிகர்’ விருதுபெற சாப்ளினை அழைத்தது. பரிசினை ஏற்றுக் கொண்டாலும், அமெரிக்காவில் தங்க விருப்பமின்றி, மீண்டும் சுவிட்சர்லாந்து திரும்பினார். விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து நின்று, “வாழ்நாள் முழுவதும் போர்களமாக இருந்தாலும் எப்படி ஜெயித்தீர்கள்? அது என்ன ரகசியம்?” எனக் கேட்டார்கள்.
      சாப்ளின் சிரித்தார், “இந்த நிலை மாறிவிடும்” என்பதை நான் எப்போதும் மறந்ததில்லை. அது இன்பமாக இருந்தாலும் சரி, துன்பமாக இருந்தாலும் சரி… மாறிவிடும்! இதோ இந்த கணத்திலும் கூட! வறுமையில் பிறந்து, வாழ்வெல்லாம் போராடி, உலகையே தன் பெயரை உச்சரிக்க வைத்த அந்த நடிகனிற்கு, கலைஞனுக்கு ஏற்பட்ட சோதனை நம் வெற்றிக்கு நல்லசாவி.
------------------------------“இந்த நிலை மாறிவிடும்”--------------------------------------------

1 comment:

rajamelaiyur said...

//
“இந்த நிலை மாறிவிடும்”
///
உண்மையான வரிகள்

Post a Comment