Friday, June 17, 2011

அதிர்ச்சி மரணம்? ஆனந்தம்


      மனிதனுக்கு ஆக்க வாழ்வுக்காக நமது முன்னோர்கள் அமைத்துக் கொடுத்திருக்கும் இன்றியமையாத தேவைகள் நான்கு 1. அறம் 2. பொருள் 3. இன்பம் 4. வீடு பேறு. அறவழியில் பொருளீட்டி அதன் மூலம் இன்பம் துய்த்தால், தானாகவே அறிவு தடையற்ற வளர்ச்சி பெற்று முழுமைப்பேறாகிய வீடுபேறு கிட்டும். எனவே மனிதன் செய்யும் தொழில் இந்த நான்கில் ஒன்றைக் குறி வைத்துச் செயல்புரியும்போது மற்ற மூன்றும் சிறிதும் கெடாதவாறு காத்து விழிப்பு நிலையில் ஆற்ற வேண்டும். இந்த முறையில் தான் மனித வாழ்வு கெடாமலும் சீர்குலையாமலும் இனிமை காக்கப்படும்.
      அறம் என்றால் உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். ஒழுக்கம், கடமை, ஈகையெனும் மூன்றுறுப்புக்கள் ஒன்றிணைந்த எந்தச் செயலும் அறமேயாகும். இல்ல‌றவாழ்வில் பொருளீட்டி வாழ்வது மனிதனுக்குள்ள இயல்பான ஆற்றல்தான். இதனை அறவ‌ழியில் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அறநெறி இயல்பாகவும் எளிதாகவும் அமைந்து விடும். அறவழியில் பொருளீட்டி வாழ்வை நடத்தி மிஞ்சிய பொருளைச் சேர்த்து வைப்பதும் மனித சமுதாயச் சூழ்நிலையில் ஒப்புக் கொள்ளப்பட்ட நீதியேயாகும்.
      மரணம் நெருங்கும்போது அறவழியில் ஈட்டிப் பொருள் சேர்த்து வைப்பவரிடம் அறிவில் ஒரு தெளிவு பிறக்கிறது. அவன் சேர்த்து வைத்திருக்கும் பொருள் தனக்குப் பின்னால் நல்ல வழியில் மனித சமுதாயத்திற்கும் பயன்பட வழி வகுத்து விடுகிறான். பொருள்பற்று என்ற தளையிலிருந்து தன்னைத்தானே விடுவித்துக் கொள்கிறான். அந்த அளவிற்கு அருள் பற்று மலர்ந்து விடுகிறது. மனம் இனிமையான அமைதியில் இணைகிறது. மரணம் நெருங்க நெருங்க அந்த இன்ப வெள்ளத்திலேயே மிதந்து கொண்டு இறைநிலையோடு கலந்து விடுகிறான். அறநெறி மறந்து பொருள் சேர்த்தவன் மரணம் நெருங்கும் போது அப்பொருளை எண்ணி வருந்துகிறான். இவ்வளவு பொருளையும் தவிர்க்க முடியாமல் விட்டு விட்டுப் போக வேண்டியிருக்கிறதே என்று மனம் கலக்கம் அடைகிறான். அறிவில் இருள் சூழ்ந்து கொள்கிறது. மரணம் நெருங்க நெருங்க நிமிடந்தோறும் அதிர்ச்சியோடு அச்சப்படுகிறான்.
      இந்த அச்சத்தின் அதிர்ச்சியோடு அமைதியற்ற மரணம் அடைகிறான். பொருள்பற்று என்ற இருளிலிருந்து அவனால் மீள முடியவில்லை. அந்தோபரிதாபம் இவன் சேர்த்து வைத்த பொருளோ அறம் தெரியாத குருடர்களிடமே சேருகிறது. சூது, குடி, விபசாரம் என்னும் மூன்று வழியில் இந்தப் பொருள்கள் அனைத்தும் சூரை விடப்படுகிறது. சூரை விடுபவர்களும் அவர்கள் புரியும் பாவச் செயல்களால் தீவினைப் பதிவுகளை ஏற்றுத் தலைமுறை தலைமுறையாக உடல், மனநோய்களில் சிக்கித் தவிக்கிறார்கள் எனவே அன்பர்களே அறவழியில் பொருளீட்டுங்கள். பொருள் செழிப்பு நிச்சயமாக உண்டாகும். மீதமுள்ள பொருளில் ஈட்டும் போதே பிறர் நலத்துக்காக ஒரு சதவீதம் ஒதுக்கிச் செலவு செய்து பழகிக் கொண்டு எஞ்சிய பொருளை நல்ல முறையில் பங்கிட்டுக் கொடுங்கள். எப்போதும் மனம் பளுவற்றதாகவும் இனிமையாகவும், அமைதியாகவும் இருக்கும். நிலையான வாழ்வு பெறலாம். நீங்கள் விட்டுச் செல்லும் பொருள்கள் பலருக்கும் நலமளிக்கும் வழியில் செலவாகும் அதன் பயன் இன்பம் இன்பம் இன்பம்.
---------------------------------யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி--------------------------------

2 comments:

rajamelaiyur said...

//
மீதமுள்ள பொருளில் ஈட்டும் போதே பிறர் நலத்துக்காக ஒரு சதவீதம் ஒதுக்கிச் செலவு செய்து பழகிக் கொண்டு எஞ்சிய பொருளை நல்ல முறையில் பங்கிட்டுக் கொடுங்கள். எப்போதும் மனம் பளுவற்றதாகவும் இனிமையாகவும், அமைதியாகவும் இருக்கும்
//

உண்மையான வரிகள்

rajamelaiyur said...

இன்று என் வலையில்

வருகிறார்-ஜேம்ஸ் பாண்ட்-23

Post a Comment