Showing posts with label எண்ணம். Show all posts
Showing posts with label எண்ணம். Show all posts

Wednesday, January 18, 2012

மனமும் எண்ணமும்

      


      மனம் என்கிறோம், எண்ணம் என்கிறோம், இரண்டும் ஒன்றே தான். ஆனால் ஏன் அதை எண்ணம் என்று சொல்கின்றோமென்றால் மனம் இயங்கும் போது நான்கு வகைக் கணிப்பாக இயங்குகின்றது - காலமாக, தூரமாக, பருமனாக, வேகமாக. 
      எந்த இயக்கத்திலே, எந்தப் பொருளைப் பற்றி, நினைத்தாலும் காலம், தூரம், பருமன், வேகம் என்ற நான்கு பரிமாணத்திலே தான் மனம் இயங்குகின்றது. இந்த நான்கு பரிமாணத்தைக் கணக்கிடுவதாலே, *கணக்கிடுதல்* என்ற சொல் எண்ணுதல் என்று வந்து, அந்த எண்ணுதலிருந்து எண்ணம் என்பதாகவே வந்தது. ஆகையினாலே மனத்துக்கு எண்ணம் என்ற பெயரும் உண்டாயிற்று.

------------------------------- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி ---------------------------------------------

Wednesday, June 22, 2011

எது வேண்டாம் என்பதை விட என்ன வேண்டும் என சிந்திப்போமா!



      ஆனந்தமான சூழ்நிலை உருவாக வேண்டுமானால் ஆனந்தமாக இருக்கிற மனிதர்களால் மட்டுமே முடியும். பதட்டமானவர்களால் ஆனந்தத்தை ஏற்படுத்த முடியாது. எனவே, எப்போதும் ஆனந்தமாக இருக்க பழகுங்கள்.
      வாழ்க்கையோடு விளையாடுவது, ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் மிகப்பெரிய அற்புதமாகும், ஆனால், வாழ்க்கை நம்மோடு விளையாடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
      உடலையும், மனதையும் மேல் நிலைக்குக் கொண்டு செல்வதுடன், அவற்றை புதிய பரிணாமத்திற்கு கொண்டு போய், அவற்றின் மூலம் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்று எண்ணிபாருங்கள்.
      எத்தகைய உலகில் வாழ விரும்புகிறீர்கள் என்று கேட்டால், அனைவரும் அமைதியான உலகில் வாழ விரும்புவதாகவே கூறுகின்றனர். அப்படியானால் அனைவருடைய கனவும் ஒன்றாகவே இருக்கிறது.
      வாழ்க்கையில் இறுக்கமில்லாமல் இயல்பாக செயல்படுகிற போதுதான் மனிதர்கள் பல மகத்தான கண்டுபிடிப்புகளை செய்கின்றனர்.
      எண்ணங்கள் குவியலாக கிடக்கும் போது, குழப்பங்கள் தான் மிஞ்சுகிறது. மனதுக்குள்ளே ஒரு வரிசையை, ஒழுங்கை, அழகை ஏற்படுத்த தியானம் உதவுகிறது.
      மனிதன் தனக்குள் இருக்கிற மிகப்பெரிய சக்தியை வெளிப்படுத்த வேண்டுமானால் அதற்கு ஒரே வழி இயல்பாக இருப்பது தான். இயல்பாக இருப்பது என்பதை, சோம்பலோடு இருப்பது என்று தவறாக பொருள் கொள்ளக்கூடாது. ஆனால், முயற்சிகளை மேற்கொண்ட பிறகும் சுமையோ, சோர்வோ தெரியாத ஒரு நிலைக்குப் பெயர் தான் இயல்பான வாழ்க்கை.
      வாழ்க்கையில் விலக்க வேண்டிய விஷயங்கள் குறித்து திரும்பத் திரும்ப சிந்தித்து பட்டியல் போடுகின்றனர். எது வேண்டாம் என்பதைச் சிந்திப்பதைவிட, என்ன வேண்டும் என்று எண்ணங்களைப் புகுத்துவதுதான் சரியான அணுகுமுறை.
      நதிகள் சங்கமித்திருக்கும் கடலின் நடுப்பகுதியும், தேங்கிப் போகிற குட்டையும் அமைதியாக காணப்படுகிறது. தியானம் என்பது மனிதனை, இயக்கங்கள் கடந்த ஒரு சமுத்திர நிலைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சியாகும். இயல்பான வாழ்க்கை அமைய, தியானம் மிகப்பெரிய சக்தியைக் கொடுக்கும்.
      உங்கள் வாழ்க்கையை நீங்களே தான் வடிவமைக்க வேண்டும், உங்களுடைய வாழ்வை நீங்கள் வடிவமைக்கிற முறையில் தான் உங்களைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கை, இந்தச் சமூகத்தின் வாழ்க்கை, இந்த தேசத்தின் வாழ்க்கை அனைத்துமே அடங்கி இருக்கிறது என்பதை அனைவரும் உணரவேண்டும்.
      விருப்பு, வெறுப்பு என்று சிலவற்றை வைத்துக் கொண்டிருக்கும் வரை வாழ்க்கை போராட்டமாகத்தான் இருக்கும் என்பதால், இவற்றை தவிர்த்து வாழ்க்கைக்கு தேவையான நல்ல செயல்களில் ஈடுபட வேண்டும்.
      தனக்குள் கடவுளை தேடி உணர்ந்தவர்கள் மற்றவர்களோடு சண்டையிடும் முட்டாள்தனத்தில் ஈடுபடமாட்டார்கள். 

Friday, November 12, 2010

நம்பிக்கை வெளிச்சம் :

      நினைத்தது நிறைவேற வேண்டுமானால், முதலில் உங்களுக்கு எது வேண்டும் என்ற தெளிவு வேண்டும்...உறுதி வேண்டும், உங்களில் பெரும்பாலானவர்களுக்கு எது வேண்டும் என்று கேட்கத்தெரியாது. எது வேண்டாம் என்று சொல்லித் தான் பழக்கம்.
             'நான் தோல்வி அடையக்கூடாது, என் தொழிலில் நஷ்டம் அடையக் கூடாது, இதை நான் இழந்துவிடக்கூடாது' என்று 'வேண்டாம்' களையும்,  'கூடாது' களையும் தான் அதிகம் நினைக்கிறீர்கள்.
      நீங்கள் எதற்கு ஆசைப்பட்டீர்களோ, அதை முதலில் மனதளவில் கற்பனையில் உருவாக்குங்கள் அப்போது தான் அது நிஜத்திலும் உருவெடுக்கும்!
             ஒரு வீடு கட்ட வேண்டும் என்றால், மனதில் அதை எழுப்பி, அதை காகிதத்தில் வரைந்து, திருத்தி அமைத்து தானே நிஜத்தில் கட்டுகிறீர்கள்?
      அஸ்திவாரம் போடும் நிலையிலேயே, மனதில் உறுதியில்லாமல், இது என்னால் முடியுமா? என்று சந்தேகப்பட ஆரம்பித்தால், உங்கள் வீடு கற்பனையில் கூட எழும்பாது.
             'கடவுளே, இது வேண்டும்' என்று தீவிரமாக வேண்டிக் கொண்ட சிலருக்கு, ஆசைப்பட்டது கிடைத்திருப்பதை கவனித்திருப்பீர்கள். கடவுளா வந்து அதை நடத்திக் கொடுத்தார்?
      போர்களம் நோக்கி படையை நடத்திக் கொண்டிருந்தான் ஒரு தளபதி. பாதி வழியில் ஒரு ஒற்றன் எதிர்கொண்டான்.
             "தளபதியாரே, நம்மிடம் ஆயிரம் வீரர்கள் தான் இருக்கிறார்கள், எதிரிகளிடமோ பத்தாயிரம் வீரர்கள் இருக்கிறார்கள், நாம் பேசாமல் சரணைந்து விடலாம்" என்றான்.
      தகவல் அறிந்ததும் ஆயிரம் வீரர்களும் தைரியமிழந்தார்கள். அவர்கள் எல்லோரையும் அம்மன் ஆலயத்துக்கு வரச்சொன்னான் தள‌பதி.
             “வலுவான எதிரியை நம்மால் வெல்ல‌ முடியுமா? என்பதை தெய்வத்திடமே கேட்டுவிடுவோம். சந்நிதியில் இந்த நாணயத்தை சுண்டுகிறேன், தலை விழுந்தால் போருக்கு போக அம்மன் உத்தரவு தந்ததாக ஏற்போம். பூ விழுந்தால் இப்படியே திரும்பி விடுவோம்" என்று நாணயத்தை சுண்டினான்.
      தலை விழுந்தது. வீரர்கள் அனைவரும் உற்சாகமானார்கள். போருக்கு போனார்கள். அவர்களைப் போல் பத்து மடங்கு படை பலம் கொண்ட எதிரியை வீழ்த்தி விட்டார்கள். வெற்றியுடன் நாடு திரும்புகையில் அம்மனுக்கு நன்றி சொல்ல, எல்லோரும் அதே கோயிலில் கூடினார்கள்.
      தளபதி அப்போது தான் தம்மிடம் இருந்த நாணயத்தை  எடுத்துக் காட்டினான். அதில் இரண்டு பக்கமும் தலை தான் அசசாகி இருந்தது.
தெய்வமே உத்தரவு தந்துவிட்டதாக எண்ணிய வீரர்கள், எப்படியும் வெற்றி பெறுவோம் என்று முழுமையாக நம்பினார்கள். அவர்களிடம் எதிர்மறையான எண்ணங்கள் எழவில்லை, அதனால் வெற்றியே பெற்றார்கள்.
      அந்த விதத்தில் கடவுள் என்பது, மனதை ஒருமுகப் படுத்த பயண்படும் ஒரு கருவி. அவ்வளவுதான்.
மற்றபடி எதற்கெடுத்தாலும் கோயிலுக்கு போய் வேண்டிக்கொண்டால் காரியங்கள் நடந்துவிடுமா? கடவுள் மீது இம்மியளவும் சந்தேகம் இல்லாத பூரண நம்பிக்கை இருக்கிறதா? கள்ளம் கபடமற்ற அந்த குணம் இருந்தால் தான் உங்களுக்கு எதிர்மறையான எண்ணங்கள் எழாது, ஆசைப்பட்டது கிடைக்கும்.
      ஆனால் சந்நிதியில் ஒரு கண்ணும், வாசலில் விட்டு வந்த செருப்பின் மீது ஒரு கண்ணுமாகத்தான் உங்களால் கடவுளுடன் உறவு கொண்டாட முடியும் என்றால், கடவுளை நம்புவதாக நீங்களே உங்களை ஏமாற்றிக் கொள்கிறீர்கள். அவ்வளவு தான். அந்த பொய் விசுவாசம், உங்கள் காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள உதவாது.
      கடவுளிடம் வேண்டிக்கொண்ட பிறகும், அது நடக்குமோ, நடக்காதோ என்ற பயமும், மனப்போராட்டங்களும் தொடர்ந்திருந்தால், ஆசைப்பட்டது எப்படி கிடைக்கும்?
      சங்கரன்பிள்ளை ஒருமுறை வெகு தூரம் நடந்து, தற்செயலாக சொர்கத்துக்குள் நுழைந்துவிட்டார். அவருக்கு அகோரப்பசி, மிகவும் களைப்பாக இருந்ததால் ஒரு மரத்தடியில் உட்கார்ந்தார்.
      அது கேட்கும் வரங்களையெல்லாம் அள்ளித் தரும் கற்பகவிருட்சம். அது தெரியாமலேயே, 'இப்போது மட்டும் வயிறார, விதவிதமாக உணவு கிடைத்தால் எப்படி இருக்கும்?' என்று நினைத்தார்.
      அடுத்த கனம் ஆசைப்பட்ட உணவுவகைகளெல்லாம் அவர் முன் தங்கத் தட்டில் இருந்தன. விரும்பிய பழச்சாறுகளெல்லாம் தங்க கோப்பைகளில் இருந்தன.
      வயிறு நிரம்பியவுடன் தூக்கம் வந்தது. 'வசதியான கட்டில் இருந்தால்?' என்று நினைத்தார். உடனே ஒரு சொகுசான கட்டிலும் மெத்தையும் வந்தது.
      அவருக்கு இப்போது அச்சம் வந்தது.
             'நினைத்தவுடன் எப்படி எல்லாம் கிடைக்கிறது?  இதென்ன பிசாசுகளின் இருப்பிடமா?' என்று நினைத்தார். உடனே பிசாசுகள் அவரை சூழ்ந்தன.
             'ஐயையோ, பிசாசுகள் என்னைக் கொன்று விட்டால்?' என்று நினைத்தது தான் தாமதம், அடுத்த கனம் பிசாசுகள் அவரை கிழித்துத் தின்றன.
      சங்கரன்பிள்ளைக்கு நேர்ந்த கதியை கவனித்தீர்களா? உங்கள் எண்ணங்கள் எதிர்மறையாக‌ இருந்தால் இது தான் விளைவு.
      உங்கள் மனதில் தேவையானதிற்க்கு ஆசைப்படும் எண்ணம் ஒன்று எழுந்தால், நம்பிக்கையின்றி அச்சப்படும் எண்ணங்கள் ஆயிரம் தோன்றுகின்றன. உங்கள் ஆசைஎண்ணத்தின் சக்தியை பலவீனப்படுத்தும் அபத்தத்தை முதலில் விட்டொழியுங்கள்.

             ஆசைப்பட்டதை கொடுக்கும் கற்பகவிருட்சங்களைத் தேடி நீங்கள் காட்டுக்குள் போகத்தேவையில்லை. உங்கள் மனம் உறுதியாக இருந்தால் அதுவே உங்களுக்கு வரமளிக்கும் விருட்சமாக செயல்படும். எண்ணங்களால் ஏற்படும் அதிர்வுகளுக்கு, அந்த சக்தி உண்டு என்று விஞ்ஞானத்திலும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்….  
வாழ்க வளமுடன்!