Tuesday, May 31, 2011

கருத்து ஆனந்தம்


      ஒரு முறை ஒரு விவசாயி தன்னுடைய கழுதையை விற்று விடத் தீர்மானித்தான். அருகிலுள்ள கிரமாத்துக்குத் தன் மகனையும் அழைத்துக் கொண்டு சென்றான். அவர்கள் இருவரும் கழுதையை இழுத்துக் கொண்டு நடந்தே போனார்கள். வழியில் செல்லும்போது சில வழிப் போக்கர்கள் இவர்களைப் பார்த்துச் சிரித்தனர். பிறகு, “அந்த முட்டாளைப் பாருங்கள்! இருவருமே நடந்து போகிறார்கள்! யாராவது ஒருவர் கழுதையின் மீது சவாரி செய்யலாமே”, என்று கேலியாகச் சொன்னார்கள். அதனால், தன் மகன் கழுதையின் மீது ஏறி உட்காரட்டும் என்று விவசாயி தீர்மானித்தான். மகன் கழுதை மீது சவாரி செய்ய விவசாயி பயணத்தைத் தொடர்ந்தான்.
      சிறிது தொலைவு சென்ற பிறகு, வேறு சிலர் பார்த்தனர். வயதான தந்தை நடந்து வர இளவயது மகன் இவ்வாறு கழுதையின் மீது அமர்ந்து வருகிறானே என்று இவர்களைக் கோபித்துக் கொண்டனர். அவர்கள் பேச்சைக் கேட்டவுடன் அவர்களைத் திருப்தி செய்ய உடனே மகன் கீழிறங்கித் தந்தையைக் கழுதையின் மீது உட்காரச் செய்தான். தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். இன்னும் சிறிது தொலைவு சென்றதும், வீட்டுவாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த சில முதிய பெண்களைப் பார்த்தனர். அந்தப் பெண்கள், “தான் வசதியாக உட்கார்ந்து கொண்டு அந்த முதியவன் மகனை நடந்து வரச் சொல்லிக் கொடுமைப்படுத்துகிறானே”, என்று விவசாயியைக் குற்றம் சாட்டினார்கள். விவசாயிக்கு மிகவும் கோபம் ஏற்பட்டது. தன் மகனையும் தன்னோடு கழுதையின் மீது அமர்த்திக் கொண்டான்.
      இப்போது தந்தையும் மகனும் மகிழ்ச்சியாகக் கழுதையின் மீது அமர்ந்து பிரயாணத்தைத் தொடர்ந்தனர். வயலில் வேலை செய்து கொண்டிருந்த சில உழவர்கள் இவர்களைப் பார்த்தனர். “எத்தகைய கொடூரமானவர்கள்! பாவம், அந்தக் கழுதை, கண்டிப்பாகச் சுமை தாங்காமல் நொடிந்து போகும்”, என்று விமர்சித்தார்கள். இதைக் கேட்டவுடன் தந்தையும் மகனும் உடனே கழுதையின் மீதிருந்து கீழே குதித்தார்கள். கழுதையைத் தூக்கிக் கொண்டு செல்வது தான் சிறந்தது என்று அவர்கள் இருவரும் தீர்மானித்தனர். மிகவும் சிரமப்பட்டுக் கழுதையின் கால்களைக் கட்டியபிறகு, ஒரு கொம்பில் அதைக் கட்டி அதைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு அவர்கள் தொடர்ந்து நடந்தனர். கிராமத்தை அடைவதற்கு முன்னால் ஆற்றின் மீதிருந்த ஒரு பாலத்தை அவர்கள் கடக்க வேண்டியிருந்தது.
      விவசாயியும் அவன் மகனும் மிகவும் சிரமப்பட்டுக் கழுதையைத் தூக்கிக் கொண்டு வரும் வினோதக் காட்சியை, ஆற்றுக்கு அக்கரையில் இருந்த குழந்தைகள் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தனர். பெரிய சத்தத்தைக் கேட்டுப் பயந்து போன கழுதை பெரிதாக மூச்சு விட்டது. அதைத் தூக்கிக் கொண்டு வந்த தந்தை, மகன் இருவரின் பிடியும் நழுவியது. அந்தப் பரிதாபமான கழுதை ஆற்று நீரில் தூக்கி எறியப்பட்டது! ஏமாற்றமடைந்த விவசாயி வெறுங்கையுடன் வீடு திரும்பினான்.
      ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து. எல்லோரையம் திருப்திப் படுத்த முடியாது. அவ்வாறு திருப்தி படுத்த ஆரம்பித்தால், இந்த விவசாயிக்கு நேர்ந்த கதி தான் எல்லோருக்கும். அடுத்தவர் கருத்துக்காக மட்டும் வாழ ஆரம்பித்தால், அதில் ஆனந்தம் ஏது? சிரமம் தான் எற்படும். சுதந்திரமாக வாழ்வதே, நம் வாழ்க்கையை நாமே தீர்மானித்து அதற்கேற்ப்ப வாழ்வதே ஆனந்தம்.

நிரந்தர எதிரி ஆன‌ந்தம்


      “நாம் அறிவாளியாவது என்பது வேறு. பிறரை முட்டாளாக்குவது என்பது வேறு”. இரண்டும் ஒன்றாகி விட முடியுமா? நீங்கள் எத்தனைபேரை வேண்டுமானாலும் சுலபமாக முட்டாளாக்கிவிட முடியும். ஆனால் நீங்கள் அறிவாளி ஆவது சுலபமான காரியம் இல்லை. முயற்சி, திறமை இப்படி எவ்வளவோ அதற்குத் தேவை.
      பள்ளிக்கூடத்தில் படிக்கும் பத்து வயதுப் பெண் தனது முப்பத்துஐந்து வயது அப்பாவிடம் வந்து நின்றாள். விழிகளை அகல விரித்தபடி அப்பாவிடம் ஒரு புதிர் போட்டாள். “அப்பா.. ஒரு குட்டிக் குரங்கு… தனியா மரத்துல உட்கார்ந்து இருக்கு… அந்த மரத்துக்குக் கீழே திடீர்னு வெள்ளம் வந்துடுச்சு… காட்டாத்து வெள்ளம்… திரும்பின பக்கம் எல்லாம் ஓடுது… அந்தக் குட்டிக் குரங்குக்கு நீந்தத் தெரியாது.. பயங்கர வெள்ளம் கீழே… அது எப்படித் தப்பிக்கும் சொல்லுங்கள்?” என்று அப்பாவை அசர வைத்தாள் மகள்.
      அரைமணி நேரம் மாறி  மாறி யோசித்த அப்பா முடிவில் தன் தோல்வியை ஒப்புக் கொண்டார். “அந்தக் குட்டிக் குரங்கு எப்படித் தப்பிக்கும் … தெரியலை, நீயே சொல்லு” என்றார் மகளிடம். “ஆம்… இவ்வளவு பெரிய குரங்கு உனக்கே தெரியலை… அந்தக் குட்டிக் குரங்குக்கு மட்டும் எப்படி தெரியும்?” என்று கையை அப்பா முகத்துக்கு நேரே ஆட்டிவிட்டுச் சிட்டாய்ப் பறந்தாள்.
      அந்தச் சின்னப் பெண். அவளிடத்திலும் கேள்விக்கு விடையில்லை; ஆனால் அப்பாவைக் குரங்கு என்று கேலி செய்ய, முட்டாளாக்க அரை மணி நேரம் செலவிட்டாள் அந்தச் சின்னப் பெண். இன்றைக்கு இந்தச் சின்னத்தனம் தான் எங்கும் நடக்கிறது.
      பிறரை வாய் மூடச் செய்வது, செயலிழக்கச் செய்வது, தோற்றுப் போகச் செய்வது, ஆளவிடாமல் தடுப்பது, முன்னேற முடியாதபடி முதுகை முறிப்பது… இப்படிப் பிறரைத் தோற்கடிப்பதைத் தம்முடைய வெற்றியாகக் கருதுகிறோம். இந்தத் தவறுதலான எண்ணத்திலிருந்து தயவு செய்து வெளியே வரவேண்டும். பிறரைத் தோற்கடிப்பது லட்சியமல்ல… நமது வெற்றியே நமது குறிக்கோள் என்கிற தெளிவு இருக்க வேண்டும்.
      நாம் வெற்றி பெற்றால் நமக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள். பிறரைத் தோற்கடித்தால் நாம் ஒரு நிரந்தர எதிரியை ஏற்படுத்திக் கொள்கிறோம். நாம் யாரைத் தோற்கடித்தாலும் அவர் நம்மைத் தோற்கடிக்கவே தமது எஞ்சிய காலம் முழுவதையும் செலவிடுகிறார்.
      “நாம் வெற்றி பெறுவது வேறு, பிறரைத் தோற்கடிப்பது வேறு, பிறரைத் தோற்கடிப்பதே வெற்றி என்று தவறுதலாக அர்த்தம் கொள்ள வேண்டாம்”.

Monday, May 30, 2011

விருப்பு‍-வெறுப்பு அமைதி ஆனந்தம்


      சில விஷயங்கள் எனக்கு வசதியாகவே இல்லை” என்று பலபேர் சொல்லக் கேட்டிருக்கிறோம். வேண்டிய வசதி வாய்க்காததால், வாழ்க்கை சிலருக்கு நரகமாய் இருக்கிறது. ஒரு உண்மை தெரியுமா? உள்ளபடியே வாழ்க்கை எப்போது வசதியாகுமென்றால், சில வசதிகளுக்கான தேவைகள் நம் மனதிலிருந்து நீக்கும் போதுதான்.
      “ஒரு காலத்தில் விஷமாய் இருந்தது. இன்னொரு காலத்தில் அமுதம்”, “ஒரு காலத்தில் அமுதமாய் இருந்தது இன்னொரு காலத்தில் விஷம்” என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். இதுதான் வாழ்க்கையின் அடிப்படை உண்மை. விருப்பு, வெறுப்பு என்று சிலவற்றை வைத்துக் கொண்டிருக்கும் வரை, வாழ்க்கை போராட்டமாகத்தான் இருக்கும்.
      வாழ்க்கையை, தன் தன்மையோடு முழுமையாக நாம் ஏற்றுக்கொள்ளுகிறபோது, வசதி குறைவு என்கிற ஒன்றே வராது. மாறாக ஆனந்தம் மட்டும்தான் நிலைத்திருக்கும். சிலபேர் நிலையான மகிழ்ச்சியை ஆனந்தம் என்று சொல்லுவதைவிட பேரானந்தம் என்று சொல்வதில் கூடுதல் சுகம் காண்கிறார்கள். ஆனந்தம் என்றாலே அது உச்சநிலைதான். பேரானந்தம் என்கிற சொல் மிகையானது. ஆனந்தம் என்பதே பொதுவானது. மகிழ்ச்சிக்கும், ஆனந்தத்திற்கும் இருக்கும் அடிப்படை வேற்றுமை அதுதான்.
      மகிழ்ச்சியை நீங்கள் விலைக்கு வாங்கலாம். அது நீண்டகாலம் நிலைத்திருக்காது. உதாரணத்திற்கு இரண்டு சக்கர வாகனம் வைத்திருப்பவர் ஒரு கார் வாங்கினால் மகிழ்ச்சியடைவார். அந்தக் கார் நிறைய தொந்தரவு தரத் தொடங்கினால், அதே கார் அவருடைய துன்பத்திற்கும் காரணமாகி விடுகிறது. ஆனால், ஆனந்தம் என்பது நம் உள்ளிருந்து ஏற்படுவது. இந்த ஆனந்தம், இன்பம், துன்பம் இரண்டுக்குமே அப்பாற்பட்டது.
      ஒரு மனிதன் எப்போதும் ஆனந்தமயமாக இருப்பானேயானால் சராசரி வாழ்க்கையின் இன்ப, துன்பங்கள் அவனைப் பாதிப்பதில்லை. அதற்காக வாழ்க்கையின் அன்றாட அம்சங்களிலிருந்தும் அவன் விடுபட்டிருப்பான் என்பதும் அர்த்தமல்ல.
      ஒரு மரணம் நிகழ்கிறதென்றால் அதற்காக வருந்திக்கொண்டே அவனால் ஆனந்தமாக இருக்க முடியும். அவனுடைய அடிப்படைத் தன்மையாகிய ஆனந்தத்தை யாராலும், எந்த சம்பவத்தாலும் மாற்ற முடியாது. அதற்கு ஒரே வழி விருப்பு, வெறுப்பு போன்றவற்றைக் கடந்து வருவது.
      சில விஷயங்கள் நமக்கு வேண்டும், வேண்டாம் என்கிற போதே சில எதிர்பார்ப்புகள், தொடங்கி விடுகின்றன. அந்த எதிர்ப்பார்ப்புகள் அகந்தையின் காரணமாக எழுபவை. அகந்தை உங்களைக் கட்டி வைக்கிற ஒரு கயிறு போல. அதனை அறிவு என்கிற நெருப்பு கொண்டு நீங்கள் எரித்து விட முடியும். எரித்த போதும் அது ஒரு கயிறு போலத்தான் தோன்றுமே தவிர, அந்த கயிற்றால் யாரையும் கட்டிவிட முடியாது.
      அகந்தை என்கிற கயிறு எரிக்கப்படாத வரையில் அது நமை வாழ்வில் கட்டிப்போடுகிறது. அதை எரித்தபிறகு அகந்தை இருப்பது போல் தோன்றினாலும், அதனால் நம்மை எதுவும் செய்ய இயலாது. அப்போதுதான் முழுமையான, ஆனந்தத்தை நம் மனம், உணரத் தொடங்கும்.
      உள்ளுணர்வில் ஆனந்தம் இருக்கிறபோது, வாழ்வின் சகல அம்சங்களிலும், நம்மால் முழுமையாக பங்கேற்க இயலும். வீண் விவாதங்கள், தேவையில்லாத வாக்குவாதங்கள் போன்றவற்றில் நாம் ஈடுபட மாட்டோம். ஒரு முட்டாளும் எப்போதும் அமைதியாக இருப்பான், முற்றும் உணர்ந்த ஞானியும் அமைதி நிலையிலிருப்பார். ஆனால் இருவரின் அமைதியும் ஒன்றே அல்ல.
      முட்டாளின் அமைதிக்கும், ஞானியின் அமைதிக்கும் மூலத்திலேயே வேறுபாடு உண்டு. ஒருமுட்டாள் எப்படிப் பேசுது என்று தெரியாததால் அமைதியாக இருக்கிறான். ஒரு ஞானியோ வெறுமனே விவாதிப்பதால் பயனில்லை என்று உணர்ந்து அமைதியாக இருக்கிறார். ஒரு முது மொழி உண்டு. “ஒரு மனிதன், தான் எண்ணுவது சரி என்று உணர்ந்தும், அமைதியாக இருப்பாரேயானால் அவர் இறைத்தன்மைக்கு மிக நெருக்கமானவர்” என்று, இது மிக முக்கியம்.
      நம் கருத்து சரியென்று தெரிந்துவிட்டால், வாழ்க்கை முழுக்க விவாதித்துக் கொண்டு இருக்கத்தான் தோன்றும். ஆனால் நம் உள்ளுணர்வுக்கு சரியென்று பட்டாலே போதும். அதை உலகுக்கு அறிவிக்க வேண்டிய அவசியம் கிடையாது.
     விருப்பு, வெறுப்பால் ஏற்படுகிற தீமை என்னவென்றால், நமது கண்ணோட்டங்களுக்கு ஏற்ப இந்த உலகம் முழுவதையும் வளைப்பதற்கு நாம் வாழ்க்கை முழுவதும் முயன்று கொண்டிருப்போம். விருப்பு, வெறுப்பின் அடிப்படையில் உலகத்தைப் பார்க்கிறபோது, நிபந்தனை இல்லாத வாழ்க்கையை நம்மால் முழுமையாக நுகர முடியாது. 
      விருப்பு, வெறுப்பு ஆகிய நிலைகளைக்கடந்து நிற்கிற மனிதர், வாழ்க்கையிலிருந்து விலகி ஓடுபவரல்ல. வாழ்க்கையில் முழுமையாக ஈடுபடுபவர். ஆனந்தமானவர். ஆனந்தத்தில் திழைப்பவர்...

Saturday, May 28, 2011

புத்திசாலித்தனம் அமைதி ஆனந்தம்


      பத்து ரூபாய் சம்பாதிப்பவன் நூறு ரூபாய் ஈட்டிவிட்டால், அது அவனைப் பொறுத்தவரை வெற்றி. ஆயிரம் ரூபாய் சம்பாதித்துக்கொண்டு இருப்பவன் கண்ணோட்டத்தில் அது தோல்வி!
      சமூக அளவுகோல்களால் அளந்து பார்க்கப்படும் வெற்றிக்கும் மனிதனின் அடிப்படையான புத்திசாலித்தனத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. வாழ்க்கையை அமைதியாகவும் ஆனந்தமாகவும் உயிர்ப்புடனும் வைத்திருப்பதே உண்மையான வெற்றி. உங்களுடைய உள் சூழ்நிலையையும் வெளிச் சூழ்நிலையையும் நீங்கள் வெற்றிகரமாகக் கையாள்வதற்கு அடிப்படைப் புத்திசாலித்தனம் நிச்சயம் தேவை.
      புத்திசாலித்தனம் என்பது இன்றைய கல்வி மூலம் பெறப்படும் அறிவாற்றலை அல்ல; பல தரப்புகளிலிருந்து சேகரிக்கப்படும் விஷய ஞானத்தையும் அல்ல!
      புத்திசாலித்தனம் என்பது வாழ்க்கையைத் தோலுரித்து, அதன் அடிப்படை உண்மையை அறிந்துகொள்ளும் திறன். பக்குவத்துடனும் தெளிவுடனும் வாழ்க்கையை நடத்துவதற்கு இந்த புத்திசாலித்தனம் மிக மிக அவசியம்!
      ஒரு மனிதனிடம், புத்திசாலித்தனத்துடன் அமைதியும் சேர்ந்து இருந்தால் அவன் ஆனந்தமானவன்.
      அமைதி என்பது நம் உள்ளம் சார்ந்த விஷயமே. எந்த இடத்தில் இருந்தாலும் மனம் கூடவே தான் இருக்கும். அமைதியைத் தேடி மலைகளுக்குச் செல்கிறீர்கள் என்றால், மலை அமைதியாக இருப்பதாகத் தான் அர்த்தமே தவிர நீங்கள் அமைதியாக இருப்பதாக அர்த்தம் அல்ல. இரைச்சல் மிக்க சந்தைக்கு நடுவிலும் அமைதியாக இருக்க முடிந்தால் தான் நீங்கள் அமைதியானவராக இருப்பதாக அர்த்தம்.
      மகிழ்ச்சியாக,ஆனந்தமாக‌ இருக்கும் போது, உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கு நீங்கள் அற்புதமான மனிதர் தான். ஆனால், மகிழ்ச்சியின்றி இருக்கும்போது, இந்த உலகுக்கு நீங்கள் ஒரு ஆபத்தான மனிதர். நமது மனநிலை நாம் இருக்கும் சூழ்நிலையை வெகுவாகப் பாதிக்கிறது.
      உங்கள் வாழ்வின் மிக அழகான தருணங்கள் நீங்கள் மகிழ்ச்சியைத் தேடிக் கொண்டு இருந்த கணங்கள் அல்ல. நீங்கள் மனமகிழ்ச்சியை ஆனந்தத்தை, வெளிப்படுத்திய நல்ல தருணங்களே. அமைதியும் ஆனந்தமும் வாழ்வின் உச்சக்கட்ட நிலை அல்ல. அவை வாழ்வின் தொடக்கமே. அந்த தொடக்க கட்டம் உங்களை உச்சகட்ட நிலையான பேரானந்த நிலைக்கு தானாகவே அழைத்துச் செல்லும்.

Friday, May 27, 2011

துன்பம் போதை ஆனந்தம்


      துன்பம் என்பது, தன்னுணர்வற்ற மனதின் ஒரு நிலை. நாம் என்ன செய்கிறோம், நாம் என்ன நினைக்கிறோம், நாம் என்ன உணர்கிறோம் என்கின்ற விழிப்புணர்வு இல்லாததால், நாம் துன்பம் அடைகிறோம். அதனால்தான் ஒவ்வொரு நொடிப்பொழுதும் நாம் நம்முடனேயே முரண்பட்டுக் கொண்டிருக்கிறோம். நமது செயல் ஒரு திசையில் செல்கிறது, சிந்தனை மற்றொரு திசையில் செல்கிறது, உணர்வுகள் வேறு எங்கோ செல்கிறது. நாம் பிரிந்து பிரிந்து செல்கிறோம். நாம் மேலும் மேலும் பிளவுபட்டுச் செல்கிறோம். அதுதான் துன்பம் ஆகும். நாம் நமக்குள் ஒருங்கிணைந்து இருப்பதில்லை. நாம் நமக்குள் ஒற்றுமையை இழந்து விட்டோம். நாம் முற்றிலுமாக மையத்தில் இல்லாமலும், வெறுமனே வெளிவட்டத்திலுமாக இருக்கிறோம். எனவே, இயல்பாகவே ஒத்திசைவு இல்லாததொரு வாழ்க்கை துன்பம் நிறைந்ததாகவும், துக்கமானதாகவும், ஏதோ ஒருவித சுமை போன்றும், ஒரு கஷ்டமாகவும் இருக்கிறது. அதிகபட்சமாக, ஒருவர் இந்த துன்பத்தை கொஞ்சம் வேதனை குறைந்ததாக ஆக்கிக் கொள்ளலாம். மேலும், வாழ்க்கையில் ஆயிரக்கணக்கான வலி நிவாரணிகள் கிடைக்கின்றன.
      மக்கள் துன்பத்தில் வாழ்கிறார்கள். அதில் இருந்து விடுபட இரண்டு வழிகள்தான் உள்ளன. அவர்கள் தியானம் செய்பவர்களாக, உஷாரானவர்களாக, விழிப்புணர்வு உள்ளவர்களாக, தன்னுணர்வு பெற்றவர்களாக ஆக முடியும். ஆனால், அது மிகவும் கடினமான வேலை. அதற்கு தைரியம் தேவை. அல்லது இன்னொரு மலிவான வழி என்னவென்றால், நீங்கள் இப்போது எப்படி இருக்கிறீர்களோ, அதைவிட இன்னும் அதிகமான தன்னுணர்வு இழந்த நிலைக்கு நீங்கள் சென்றுவிட்டு, அந்த நிலையில் நீங்கள் அந்த துன்பத்தை உணராமல் இருக்க முடியும். உங்களை முற்றிலும் புலன்நுகர்ச்சி அற்றவர்களாக ஆக்குகின்ற ஒரே ஒரு பொருளை, ஏதோ ஒரு மயக்க மருந்தை, ஏதோ ஒரு வலி நிவாரணியை, போதைப்பொருளை எடுத்துக் கொள்வதால், அது உங்களை தன்னுணர்வு இழந்த நிலைக்கு கொண்டு சென்றுவிடுவதால், நீங்கள் அந்த தன்னுணர்வு அற்ற நிலையில் உங்களது கோபம், துன்பம், அர்த்தமற்ற தன்மை இவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
      இந்த இரண்டாவது வழி, உண்மையான வழி அல்ல. இந்த இரண்டாம் வழி, உங்களது துன்பத்தை கொஞ்சம் சௌகரியமானதாகவும், கொஞ்சம் தாங்கக்கூடியதாகவும், கொஞ்சம் வசதியானதாகவும் மட்டுமே ஆக்கக் கூடியது. ஆனால் இது உங்களுக்கு உதவிகரமாக இருக்காது. இது, உங்களை மாற்றியமைக்காது. உங்களுக்குள் மாற்றம் ஏற்பட வேண்டுமென்றால், அது தியானத்தால் மட்டுமே முடியும். ஏனெனில் தியானம் ஒன்றுதான் உங்களை விழிப்புணர்வு உள்ளவர்களாக ஆக்குகின்ற வழி.
      இங்கு, என்னுடைய முயற்சி என்னவென்றால், உங்களை இந்த துன்பத்தைக் கடந்து அதற்கு அப்பால் கொண்டு செல்வதுதான். நீங்கள் துன்பத்தை நீங்கள் விரும்பிய வகையில் மாற்றி அமைத்துக் கொள்ள மட்டுமே முடியும் என்பது கிடையாது. நீங்கள் இந்த துன்பத்திலிருந்து முற்றிலும் விடுதலை பெறுகின்ற ஒரு சாத்தியம் உள்ளது. ஆனால், அந்தப் பாதை கொஞ்சம் கடினமானது. ஆனால் அந்தப் பாதை சவாலானது. அதில் நீங்கள், உங்களது உடல் குறித்த விழிப்புணர்வுடன் மட்டுமல்ல; அதனால் நீங்கள் செய்கின்ற காரியங்கள் குறித்தும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
      ஒரு நாள் புத்தர் தனது காலை சொற்பொழிவை நிகழ்த்திக் கொண்டிருந்தார். அந்த நாட்டின் அரசரும் அதைக் கேட்பதற்கு வந்திருந்தார். அவர், புத்தரின் முன்னால் உட்கார்ந்து கொண்டிருந்தார். மேலும் அவர், தனது பெருவிரலை ஆட்டிக் கொண்டே இருந்தார். புத்தர், பேசுவதை நிறுத்திவிட்டு, அரசரின் பெருவிரலைப் பார்த்தார். புத்தர் தனது பெருவிரலைப் பார்ப்பதைக் கண்டவுடன், அரசர் தனது பெருவிரல் அசைப்பதை நிறுத்திவிட்டார். புத்தர் தனது பேச்சை தொடர்ந்தார். அரசரும் மீண்டும் தனது பெருவிரலை அசைக்க ஆரம்பித்தார். உடனே புத்தர் அவரிடம், “ நீங்கள் ஏன் அப்படிச் செய்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அரசர், “நீங்கள் பேசுவதை நிறுத்திவிட்டு, எனது பெருவிரலை பார்க்கும் போதுதான் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்கின்ற விழிப்புணர்வு எனக்கு வருகிறது. மற்றபடி நான் எனது தன்னுணர்வுடன் இருப்பதே இல்லை.” என்று பதில் கூறினார். அதைக் கேட்ட புத்தர், “அது உங்களது பெருவிரல்தானே! அப்படியிருக்கும்போது, அது அசைவதைக் கூட உங்களால் தன்னுணர்வுடன் கவனிக்க முடியாதா? இப்படியிருந்தால், நீங்கள் ஒருவரைக் கொலை செய்துவிட்டும் கூட அதைப் பற்றி எந்தவிதமான விழிப்புணர்வும் இல்லாமலும்கூட இருக்கலாமே!” என்றார்.
      மேலும், இது போன்றதொரு வழியில் தான் மக்கள் கொலை செய்யப் படுகின்றனர். மேலும், கொலைகாரர்களும், தாங்கள் என்ன செய்கிறோம் என்கின்ற தன்னுணர்வு இல்லாமல் செய்கின்றனர். நீதிமன்றங்களில் அநேகமுறை கொலை செய்தவர்கள் தாங்கள் கொலை செய்ததை முழுமையாக மறுத்துள்ளனர். ஆரம்பத்தில் அவர்கள் நீதிமன்றத்தை ஏமாற்றுவதாகத் தான் எண்ணப் பட்டது. ஆனால் சமீபகால கணடுபிடிப்புகள் மூலம், அவர்கள் ஏமாற்றவில்லை என்றும், அவர்கள் அதை தங்களது சுயநினைவு இழந்த நிலையில் செய்து விடுகிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. அந்த நொடிப் பொழுதில், அவர்கள் அந்த அளவுக்கு ஆக்ரோஷத்துடனும், அந்த அளவுக்கு கோபத்துடனும் இருந்துவிட்டதால், அவர்கள் அந்த ஆக்ரோஷத்தின் பிடியில் அகப்பட்டுக் கொள்கின்றனர். மேலும் நீங்கள் ஆக்ரோஷம் அடையும்போது உங்களது உடலில் சில வெறியூட்டும் விஷங்கள் சுரக்கின்றன. அதனால் உங்களது இரத்தம் வெறியூட்டப் படுகிறது. ஆக்ரோஷத்தில் இருப்பது என்பது தற்காலிகமாக புத்தி சுவாதீனம் இல்லாமல் இருப்பதைப் போன்றது. இதனால் அந்த மனிதர் அந்த சம்பவத்தைப் பற்றி முழுமையாக மறந்துப் போய்விடுவார். ஏனெனில் அவருக்கு அந்த சம்பவம் எப்படி நடந்தது என்கின்ற விழிப்புணர்வு இருக்காது. இப்படித்தான் மக்கள் காதல் வசப்படுவதும், ஒருவரை ஒருவர் கொலை செய்வதும், தற்கொலை செய்து கொள்வதும், இது போன்ற காரியங்களைச் செய்வதும் நடக்கிறது.
      எனவே, நீங்கள் உங்களது உடல்குறித்து நிறைகவனத்துடன், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது தான் முதல்படி. கொஞ்சம் கொஞ்சமாக ஒருவர் தனது ஒவ்வொரு அசைவையும், ஒவ்வொரு நகர்வையும் குறித்து விழிப்புணர்வு கொள்ள முடியும். மேலும் இப்படி நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்க ஆரம்பித்துவிட்டால், ஒரு அதிசயம் நடக்கும்; இதற்கு முன்புவரை நீங்கள் செய்துவந்த அநேக காரியங்கள் வெறுமனே மறைந்து போகும். உங்களது உடல் ஓய்வுடன் இருக்கும். உங்களது உடல் ஒத்திசைந்துவிடும், உங்களது உடலில் ஒரு ஆழ்ந்த அமைதி நிலவும், உங்களது உடலில் ஒரு மெல்லிய சங்கீதம் துடிக்கும்.
      அதன்பின்னர், உங்களது எண்ணங்கள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க ஆரம்பியுங்கள். நீங்கள், உங்களது உடல் மீது செலுத்திய விழிப்புணர்வை இப்போது அப்படியே உங்களது எண்ணங்களின் மீது செலுத்த வேண்டும். உங்களது எண்ணங்கள், உங்களது உடலைவிட மிகவும் கண்ணுக்கு புலப்படாதவை. மேலும், அவை அபாயகரமானதும்கூட. மேலும், நீங்கள் உங்களது எண்ணங்கள் குறித்து விழிப்புணர்வு பெற்றுவிட்டால், அதன்பின்னர் உங்களுக்குள் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்து, நீங்கள் ஆச்சரியமடைவீர்கள். எந்த நேரத்திலும் உங்கள் மனதினில் ஓடிக் கொண்டிருக்கும் எண்ணங்களை எழுத ஆரம்பித்தால், உங்களுக்கு அது மிகப் பெரிய ஆச்சரியத்தைக் கொடுக்கும். “இதுதான் எனக்குள் நடந்து கொண்டிருக்கிறதா?” என்று நீங்கள் அதை நம்ப மாட்டீர்கள். வெறும் பத்து நிமிடங்கள் வரை உங்களுக்குள் என்னென்ன எண்ணங்கள் ஓடுகின்றன என்று வெறுமனே குறித்து வைத்துப் பாருங்கள். அப்போது வேண்டுமானால், யாரும் உள்ளே வராதபடிக்கு கதவை மூடி தாழிட்டுக் கொள்ளுங்கள். எனவே, அப்போது நீங்கள் நேர்மையுடன் உங்களுக்குள் ஓடுகின்ற எண்ணங்களை எழுத முடியும். மேலும் எழுதி முடித்து அதை படித்த பின்னர், அதை தீயிட்டுக் கொளுத்துவதற்கு ஒரு தீப்பெட்டியையும் தயாராக வைத்திருங்கள். எனவே உங்களைத் தவிர வேறு யாரும் அதில் உள்ளதை அறிய முடியாது. அதனால் அப்போது நீங்கள் நேர்மையுடன் இருந்து, உங்களுக்குள் என்னென்ன எண்ணங்கள் வருகின்றனவோ, அதையெல்லாம் எழுதி விட வேண்டும். அதை திரித்துக் கூறாதீர்கள், அதை மாற்றி விடாதீர்கள், அதை வெட்டிச் சுருக்கிவிடாதீர்கள். அதை அப்படியே நிர்வாணமானதாக காகிதத்தில் எழுதுங்கள். சரியாக அப்படியே எழுதுங்கள்.
      அதன்பிறகு, பத்து நிமிடங்கள் கழித்து அதைப் படித்துப் பாருங்கள். அப்போது நீங்கள் உங்களுக்குள் ஒரு பைத்தியக்கார மனம் இருப்பதைக் காண்பீர்கள். இப்படிப்பட்ட முழு பைத்தியக்காரத்தனம் ஒன்று நமக்குள் ஒரு அடி நீரோட்டம் போல் ஓடிக் கொண்டிருப்பதை நாம் ஒருபோதும் கவனிப்பதில்லை. உங்களது வாழ்க்கையின் முக்கியமான விஷயங்களை அது பாதிக்கும். அது எல்லாவற்றையும் பாதிக்கும். ஆனால், இதுதான் உங்களது ஒட்டுமொத்த வாழ்வாகவும் இருந்துவருகிறது!
      ஆகவே, இந்த பைத்தியக்காரத்தனம் மாற்றப்பட வேண்டும். மேலும், விழிப்புணர்வின் அற்புதம் என்னவென்றால், நீங்கள் விழிப்புணர்வுடன் இருப்பதைத் தவிர வேறு எதுவும் நீங்கள் செய்ய வேண்டியதில்லை என்பதுதான். நீங்கள் அதை கவனிக்கின்ற விஷயமே அதை மாற்றிவிடும். கொஞ்சம் கொஞ்சமாக உங்களது எண்ணங்கள் ஒரு குறிப்பிட்ட வகைக்குள் விழ ஆரம்பித்து விடும். அதன் பின்னர், அவைகளில் குழப்பம் இருக்காது. அவைகள் குழப்பங்கள் இல்லாத இந்த பிரபஞ்சம் போல ஆகிவிடும். எனவே அதன்பிறகு மீண்டும் அங்கே ஒரு ஆழ்ந்த அமைதி நிலவும்.
      மேலும், இவ்வாறு உங்களது உடலும், உங்களது மனமும் அமைதியடைந்து விட்டால், அப்போது அவைகள் இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒத்திசைந்து செல்வதையும் நீங்கள் காண்பீர்கள். அங்கே ஒரு பாலம் அமைந்து விடும். இப்போது உங்களது உடலும் மனமும் வெவ்வேறு திசையில் ஓடாது. அவைகள் வெவ்வேறு குதிரைகளில் சவாரி செய்யாது. முதல் முறையாக அவைகள் இரண்டும் ஒத்துப் போகும். மேலும், அவைகளின் இந்த ஒத்து போகும் செயலானது நீங்கள் அதற்கடுத்த மூன்றாவது படிக்கு செல்வதற்கு மிகவும் உதவும். அதாவது, மூன்றாவதாக நீங்கள் உங்களது உணர்வுகள், மனக் கிளர்ச்சிகள், மனநிலைகள் ஆகியவைகள் குறித்து விழிப்புணர்வுடன் இருப்பதற்கு ஏதுவாக இருக்கும். இந்த உணர்வுகள்தான் உங்களுக்குள் உள்ள கண்களுக்குப் புலப்படாத, அதே சமயம் மிகவும் கடினமானதொரு அடுக்கு. ஆனால் நீங்கள் உங்களது எண்ணங்கள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க முடியுமெனில், அதன்பின்னர் இது இன்னும் ஒரே ஒரு படிதான் அதிகம். உங்களது மனநிலையை, உங்களது மனக்கிளர்ச்சியை, உங்களது உணர்வுகளை பிரதிபலிக்கும்போது, நீங்கள் கொஞ்சம் விழிப்புணர்வுடன் இருந்தால் போதும்.
      இப்படி நீங்கள் இந்த மூன்று நிலைகளிலும் விழிப்புணர்வுடன் இருந்துவிட்டால், அவைகள் எல்லாம் ஒரே விஷயமாக ஒன்று சேர்ந்துவிடும். மேலும், இவைகள் மூன்றும் இப்படி ஒன்றாக ஆகிவிட்டால், முற்றிலும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டால், உங்களால் இந்த மூன்றின் சங்கீதத்தையும் உணரமுடியும். அவைகள் ஒரு இசைக்குழு போல ஆகிவிடும். அதன்பின்னர்தான் நான்காவது விஷயம் நடக்கும். இந்த நான்காவது விஷயத்தை, நீங்கள் ஏதாவது செய்வதால் கொண்டு வரமுடியாது. அது தானாகவே நிகழ்வது. அது பூரணத்தின் வரமாகும். இந்த மூன்றையும் செய்தவர்களுக்கு கிடைக்கின்ற வெகுமதியாகும்.
      மேலும் இப்படி நான்காவதாக எழுகின்ற அந்த விழிப்புணர்வுதான் உங்களை ஞானமடைந்த ஒருவராக ஆக்கும். அப்போது ஒருவர் தனது விழிப்புணர்வு குறித்தே விழிப்புணர்வுடன் இருப்பார். இதுதான் நான்காவது படி. அது ஒருவரை புத்தராக ஆக்கிவிடும். ஞானமடைந்தவராக ஆக்கிவிடும். மேலும் இப்படி ஒருவர் விழிப்படைந்தால் மட்டுமே ஒருவர் பேரானந்தம் என்றால் என்ன என்று அறிந்து கொள்ள முடியும். உடலை அறிவது சுகம், மனதை அறிவது சந்தோஷம், உள்ளத்தை அறிவது மகிழ்ச்சி, நான்காவதாக அறியப்படுவது பேரானந்தம். எனவே பேரானந்தம்தான் நமது லட்சியம்; விழிப்புணர்வு தான் அதற்கான பாதையாகும். எல்லா நிலையிலும் ஆனந்தமாக வாழமுற்ப்படுவோமானால் பேரானந்தம் என்கிற நிர‌ந்தர ஆனந்த நிலை கிடைக்கும்.அதுவே ஒவ்வொரு மனித உயிரின் குறிக்கோளாக இருக்கவேண்டும். அதுதான் ஆனந்த வாழ்வு. அதுதான் ஞானவாழ்வு. அதுதான்  அனைத்து மகான்க‌ளின் வாழ்க்கை நிலை.
                         ...........................................ஓஷோ..................................................................

Tuesday, May 24, 2011

அயோக்யன்-நல்லவன் ஆனந்தம்


      ஒருத்தரை நல்லவர் என்றும் கெட்டவர் என்றும் எவ்வாறு தீர்மானிக்கிறீர்கள்! ஓருவன் மிகவும் போகிரித்தனம் பண்ணிக்கொண்டு இருப்பவன், மகா அயோக்யன், கொலை பாதகங்களுக்கு அஞ்சாதவன் மகளிடம் கேட்டீர்கள் என்றால் என் தந்தை மிகவும் நல்லவர் என்று சொல்லுவாள். அதே போல் மிகவும் நல்லவன் என்று சமுதாயத்தால் தீர்மானிக்கப்படும் ஒருவனிடம் கூட சில கெட்ட குணங்கள் இருக்கலாம்.
      ஆதலால் முழுவதுமாக நல்லவர்களும் கிடையாது, கெட்டவர்களும் கிடையாது. மனிதர்களை அவர்கள் எப்படியோ அப்படியே எற்றுக்கொள்ளப் பழக வேண்டும். அப்போது தான் நாம் என்றும் ஆனந்தமாக வாழ முடியும்.
      ஒரு முறை பிம்பிசாரன் என்ற அரசன், மாஹாவீர் என்ற மகானை சந்திக்க அவனுடைய மந்திரிகள் மற்றும் பரிவாரங்களுடன் வந்தான். அப்போது வழியில் அவனுடைய நண்பன் பிரசன்னகுமார் என்பவரை சந்தித்தான்.
      அவர் அரசனாக இருந்து பின்பு அனைத்தையும் துறந்து யோகியாக, மகாவீருடைய சிஷ்யனாக, ஞானவானாக இருந்தார். அவரை சந்தித்து விட்டு பின்பு மகாவீரிடம் வந்தான்.
      மாகவீரிடம் வந்த பிம்பிசாரன், அவரிடம் சுவாமி, மனிதர்கள் இறந்தபின்பு சொர்கத்துக்கு போவார்களா? நரகத்திற்க்கு போவார்களா? என்பதை எதை வைத்து தீர்மானிப்பது? உதாரணத்திற்க்கு என் நண்பன் பிரசன்னகுமார் அரசனாக இருந்தபோது, அனைத்து பாவகாரியங்களையும் கூசாமல் செய்தவன், ஆனால் இப்பொதோ அனைத்தையும் துறந்து ஞானவானாக இருக்கிறார். அவர் இறந்தால் சொர்கத்துக்கு போவாரா? அல்லது நரகத்திற்க்கு போவாரா?
      மகாவீர் அவரிடம், நீ பிரசன்னகுமாரைப் பார்த்தாயே அப்போது இறந்திருந்தால் அவர் நரகத்திற்க்கு போயிருப்பார்! ஆனால் இப்போது இந்த கணம் இறந்தால் சொர்கத்திற்க்கு போவார்! என்றார் மகாவீர்.
      பிம்பிசாரன் ஒருகணம் மிகவும் குழம்பிப்போனான். நாம் கேட்ட கேள்வி என்ன? இவர் சொல்லும் பதில் என்ன? உடனே அதை புரிந்துகொண்ட மகாவீர், பிம்பிசாரா, நீ சந்திக்கப் போனபோது உன்னுடைய பரிவரங்களுடன் போனாய், அதைப்பார்த்த அவருடைய மனதில் இதையெல்லாம் (அரசவாழ்வை)விட்டுவிட்டோமே என்ற எண்ணம் தோன்றி அவரை துன்புருத்தியது, அதை நினைத்து மிகவும் வேதனைப் பட்டார். அப்போது அவர் இறந்திருந்தால் நரகத்திற்க்கு போயிருப்பார், ஆனால் இவ்வாறு ஞான வாழ்விற்க்கு வந்தபிறகு சிந்தித்து விட்டோமே என்று வருந்தி மனதாற என்னிடம் மனதாலேயே மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கின்றார். அதனால் அவர் இப்போது இறந்தால் சொர்கத்திற்க்கு போவார் என்று கூறினேன், என்றார் மகாவீர்.
      ஒரு மனிதன் சொர்கத்துக்கு போவானா? அல்லது நரகத்திற்க்கு போவானா? என்று நான் கூறவரவில்லை. மாறாக வாழும்போதே சொர்கம் நரகம் என்பதை நம் எண்ணங்கள் தான் தீர்மானிக்கின்றன. நல்ல எண்ணங்கள் நம்மை ஆனந்தமாகவும், கெட்ட எண்ணங்கள் துன்பத்துடனும் வாழவைத்துவிடுகின்றன. நாம் வாழும் போதே நல்ல எண்ணங்களால் ஆனந்தமாக‌ வாழவேண்டும்..........................
     

Monday, May 23, 2011

இறந்த காலம் ஆன்ந்தம்


      சத்குரு! "நான் என் இளமைக் காலத்தில் வெளியில் சொல்ல முடியாத சில தவறுகளைச் செய்திருக்கிறேன். நெருக்கமானவர்களிடம்கூடப் பலப் பொய்களைச் சொல்லி ஏமாற்றியிருக்கிறேன். இப்போது, உடல் ஓய்ந்து விட்டது. என்னைப்பற்றி முழுமையாகத் தெரியாத என் குடும்பத்தார் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும், மரியாதையும் என்னை உறுத்துகின்றன.
      எவ்வளவுதான் முயன்றாலும், இறந்த காலத்தில் செய்த பிழைகள், தவறுகள் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்து தாங்க முடியாத வருத்தத்தில் தள்ளுகின்றன. இதிலிருந்து மீள வழி இல்லையா ?"
      " சிறு வயதில் செய்ய முடிந்ததை எல்லாம் இப்போது செய்ய முடியவில்லையே என்று வருத்தம் வந்துவிடவில்லையே உங்களுக்கு ?
வாழ்க்கையில், ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விஷயம் முக்கியமாகத் தோன்றுகிறது. அதற்கு முன்னுரிமை கொடுக்கும்போது, மற்றவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்களில்கூட ஈடுபடத் தோன்றுகிறது. யாரோ ஒருவரைக் கொலை செய்யும் ஒருவன்கூட அந்தக் கணத்தில் அதுதான் சரியான செயல் என்று கருதுவதால்தான் அப்படிச் செய்கிறான்.
      கோயிலுக்கு அழைத்துச் சென்று அப்பா மகனிடம் சொன்னார்,கடவுளிடம் பிரார்த்தனை செய்து, உனக்கு வேண்டியதைக் கேள். கொடுப்பார்."
      " நீங்கள் பிரார்த்தனை செய்து கேட்டால், அதையும் உங்களுக்குக் கொடுப்பாரா அப்பா?"
      " ஆம், மகனே. நிச்சயமாக!"
      மகன் இப்போது அப்பாவைச் சந்தேகத்துடன் பார்த்தான். "அதெப்படி அப்பா நடக்கும் ? நம் இரண்டு பேரில்யார் பேச்சை அவர் கேட்பார் ?"
      உலகம் அப்படித்தான். ஒரு விஷயத்தை இருவர் ஒரே மாதிரி பார்ப்பது இல்லை.தவறு என்று மற்றவர்கள் கருதியது அந்தக் கணத்தில் உங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் சந்தோஷம் கொடுத்திருக்கிறது. அதனால், அந்தச் செயலில் ஈடுபட்டீர்கள். எப்போது தவறு என்று மனதார உணர்ந்துவிட்டீர்களோ,அதை மறுபடியும் செய்ய மாட்டீர்கள்.
      ஆனால், நினைவுகள் சுமையாகத் தங்கி அவதிக்கு உள்ளாக்குகின்றன. நரகத்துக்குப் போய்விடுவோமோ, அல்லது வேறு ஏதாவது பாதிப்பு வந்துவிடுமோ என்று இப்போது பயம் வந்து விட்டது. இந்தப் பயம், குற்ற உணர்வு இதெல்லாம் மனதின் செயல்.
      நமக்கு ஏற்கனவே நடந்தது எல்லாம் ஞாபகங்களாகத் தங்கி விடுகின்றன. அந்த ஞாபகங்கள் மீது கட்டப்படும் கற்பனைதான் எதிர்பார்ப்பாக, குற்ற உணர்வாக, அச்சமாக எழுகிறது. கற்பனை என்று புதிதாக ஒன்றும் வரப்போவது இல்லை. நம் அனுபவத்தில் உள்ளதை அடிப்படையாகக் கொண்டு, ஏற்கனவே உள்ள ஞாபகங்களைச் சற்று மிகைப்படுத்தினால், அதுதான் கற்பனை.
      ஒரு சின்னப்பையன் தன் அம்மாவிடம் ஓடி வந்தான்.
      " அம்மா, நான் நீச்சலடிக்க ஆற்றுக்குப் போகலாமா ?"
      "ஐயோ, அங்கே எல்லாம் போகாதே...ஆற்றில் பெரிய பெரிய முதலைகள் இருக்கும். உன்னை இழுத்துப்போய்விடும்." என்றாள் அம்மா.
பையனுக்கு ஆச்சர்யம், "ஆனால், தினமும் அப்பா அங்கே போய் நீச்சல் அடிக்கிறாரே... அம்மா?" என்றான்.
      "டேய் ! உங்கப்பா பெரிய தொகைக்கு இன்ஷூரன்ஸ் எடுத்திருக்கார். அவர் போகலாம்... நீ போகக்கூடாது!"
      அந்த அம்மாவுக்கு கணவனைப் பற்றிய ஞாபகம், மகனைப்பற்றிய கற்பனை... இரண்டும் எப்படி இருக்கிறது பாருங்கள். நிறையப் பேர் என்னிடம் தங்கள் குழந்தையைக் கூட்டி வந்து நிறுத்துவார்கள், "சத்குரு, இவனுக்கு ஞாபகசக்தி கம்மியாக இருக்கிறது. அதை அதிகப்படுத்திக் கொள்ள வழிசொல்லுங்கள்" என்பார்கள்.
      "பழசெல்லாம் ஞாபகம் இருப்பதால்தானே நீங்கள் இப்படிக் கஷ்டப்படுகிறீர்கள்? எல்லாம் மறந்துபோனால் நல்லதுதானே? நேற்று பள்ளிக்கூடத்தில் நடந்தது ஒன்றும் ஞாபகம் இல்லாமல் உங்கள் பையன் ஆனந்தமாகத் தானே இருக்கிறான்?" என்று வேடிக்கையாகச் சொல்வேன்.
      உங்கள் தாய்,தந்தை, கணவன்,மனைவி,குழந்தை தொழில் எதுவானாலும் உங்களுடைய ஞாபகசக்தி காரணமாகத்தானே அடையாளம் காண முடிகிறது? அதேபோல், உங்கள் சாதி, மதம்,அந்தஸ்து எல்லாமே ஞாபகப் பதிவுகள்தானே?
      ஞாபக சக்தியும், கற்பனையும் கூடாது என்று சொல்லவில்லை. ஆனால், அவை மனதின் மிக அடி நிலையில் உள்ள சக்தி. அந்த நிலையிலேயே மனதைப் பயன்படுத்தினால், இறந்தகாலம் என்பது நம் வாழ்க்கையின் நிகழ்காலமாகி விடும்.
      கடற்கரையில் இருக்கிறீர்கள். சிலுசிலுவென்று காற்று பிரமாதமாக வீசுகிறது. ஆனால், அதை அனுபவிக்காமல், பத்து நாட்களுக்கு முன்னால் நடந்த அசம்பாவிதம் பற்றியே புத்தி சிந்தனை செய்கிறது. இந்தக் கணத்தின் சுகம் கிடைக்காமல் போகிறது.பழைய வேதனையை அதற்கான சூழ்நிலை இல்லாதபோதிலும், மறுபடி அனுபவிக்கிறீர்கள்.
      ஜப்பானில் இருந்து வருபவர்களிடம் ஒரு விசித்திர நோய் இருக்கும். ஒரு வீட்டில் இருந்து நான்கு பேர் சுற்றுலா வந்தால், நான்கு பேரிடமும் தனித்தனி கேமரா இருக்கும். மலையை, நதியை, சூரிய உதயத்தை, அஸ்தமனத்தை எதையும் நேரடியாக அனுபவிக்காமல், கேமரா வழியே கவனிப்பதிலேயே நேரம் செலவு செய்வார்கள்.
      துருக்கி சென்றிருந்தேன். அங்கே வெப்பக் காற்றை நிரப்பிய பலூன்களில் மேலே பறக்கையில், அதை ஆழ்ந்து அனுபவிக்காமல், நான்கைந்து ஜப்பானியர்கள் கேமரா வழியே படம் எடுப்பதிலேயே குறியாக இருந்தார்கள்.
      கண்கள் இப்படிச் சிறைபட்டுப் போனதில்,அதில் ஒருவர் தவறாக நகர்ந்து, கிட்டத்தட்ட முப்பதடி உயரத்தில் இருந்து தவறி விழுந்தார். தோள்பட்டையில் எலும்பு முறிவோடு அவரைத் தூக்கிப் போனார்கள். தலத்தில் அனுபவிப்பதை விடுத்து, வீட்டில் போய் நினைத்துச் சந்தோஷப்படுவதற்கு என்ன இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை.
      உலகத்தில் பொதுவான பிரச்னையாக இருப்பதே, இந்த மனதை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளத் தெரியாமல் இருப்பதுதான். இறந்த காலத்தை நினைத்தபடி, உயிர் இல்லாத ஒன்றுக்கு உயிர் கொடுக்க முயற்சி செய்தால், உயிரோடு இருப்பது கூட உயிர் அற்றதாகிவிடும்.
      இப்படி மனதை மிகமிக அடிநிலையிலேயே உபயோகப்படுத்தி வராமல், நினைவாற்றல்,கற்பனை இரண்டையும் கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு மனதைப் பயன்படுத்தினீர்கள் என்றால், அது எப்பேர்ப்பட்ட கூர்மையான கருவி என்று உணர்வீர்கள். உங்கள் அனுபவத்தில் இல்லாத பரிமாணங்கள்கூட உங்கள் அனுபவத்தில் வந்து சேரும். அதற்காகத்தான் தியானம் என்று கொண்டு வந்தார்கள்.
      உண்மையில், எந்தக் கணத்திலும் ஆனந்தமாக இருப்பது எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது இல்லையா? உங்கள் வாழ்க்கையில் ஆனந்தம்தான் முக்கியம் என்று நினைத்தால், அதுபற்றி மட்டுமே உங்ள் மனம் செயல்படட்டும்!" ஆனந்தமே எல்லாம்!....

மரணத்திற்க்குப் பின்? ஆனந்தம்


      "மரணத்துக்குப் பின் எங்கேதான் போகிறோம்?"

      "சங்கரன் பிள்ளை ஒரு முறை தன் நண்பரிடம் சொன்னார், "செத்துப்போனால், மற்றதெல்லாம் இல்லாமல்கூடச் சமாளித்துவிடலாம். ஆனால், மேல் உலகத்தில் கிரிக்கெட் இல்லை என்றால், போரடிக்குமே. அங்கே கிரிக்கெட் இருக்குமா?"
      நண்பர் சொன்னார், "நீ முதலில் போனால், நீ பார்த்துச் சொல். நான் முதலில் போனால், நான் பார்த்துத் தெரிவிக்கிறேன்".
      அந்த நண்பர்தான் முதலில் இறந்தார். அவர் இறந்த மூன்றாவது நாள் சங்கரன் பிள்ளைக்கு மேலே இருந்து அவர் குரல் மட்டும் கேட்டது.
       "கிரிக்கெட் பற்றிக் கேட்டாயே, ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி. எது முதலில் வேண்டும்?"
      "ஐயோ, நல்ல செய்தியை முதலில் சொல்."
      "இங்கே கிரிக்கெட் இருக்கிறது."
      "கெட்ட சேதி?'"
      "திங்கள்கிழமை நடக்கும் மேட்ச்சில் நீதான் ஓப்பனிங் பேட்ஸ்மேன்!"
      ஏதோ சங்கரன்பிள்ளைக்கு வருகிறது என்றவுடன் உங்களால் சிரிக்க முடிகிறது. ஆனால், எந்த ஒரு மனிதனும் இதில் இருந்து தப்பிக்க முடியாது.
      உங்கள் உயிர் எங்கே இருக்கிறது என்று கவனித்திருக்கிறீர்களா? மூச்சு உள்ளே வருகிறது. வெளியே போகிறது. வெளியே போன மூச்சு திரும்பவும் உள்ளே வராவிட்டால், மரணம் நிகழ்கிறது. அதாவது, ஒவ்வொரு சுவாசத்திலும் உயிர் வெளியே போய்விட்டு உடல்கூட்டுக்குள் திரும்புகிறது. அப்படித் திரும்பும் போது, அதை ஏற்கும் நிலையில் உடல் இருந்தாக வேண்டியிருக்கிறது.
      அப்படியானால், நம் உயிருக்கு அடிப்படையானது நமக்கு உள்ளே மட்டும் இல்லை. வெளியேயும் இருக்கிறது என்று புரிகிறதா? உங்கள் உயிர் இங்கேதான் இருக்கிறது என்றோ, அங்கேதான் இருக்கிறது என்றோ சொல்ல முடியவில்லை என்றால், என்ன அர்த்தம்? அது எல்லை இல்லாமல் இருக்கிறது.
      நம் கற்பனைதான் இது ஒரு தனி உயிர், அது ஒரு தனி உயிர் என்றெல்லாம் பிரித்துப் பார்க்கிறது. எப்படி இருந்தாலும், மரணத்தில் இருந்து தப்பிக்க முடியாது. அப்புறம் எப்படி வாழ்ந்தால் என்ன என்று வாழப்பார்த்தால், வாழ்க்கை பலவிதமாகப் புரட்டிப் போட்டுவிடும்.
      அப்படி இல்லாமல், ஆனந்தமாக வாழ வேண்டும், ஆனந்தமாக முடிய வேண்டும் என்றால், அதற்கு விழிப்பு உணர்வு தேவைப்படுகிறது. விழிப்பு உணர்வு இல்லாதவர்கள் உடல் கீழே விழுகையில் மட்டும்தான் இறப்பைப் பார்க்கிறார்கள். விழிப்பு உணர்வோடு இருப்பவர்கள் வாழும் ஒவ்வொரு கணத் திலும் மரணத்தையும் சேர்த்துப் பார்க்கிறார்கள். அப்படி மரணத்தை வாழ்வின் ஓர் அங்கமாகக் கவனித்துவிட்டால், அப்புறம் மரணத்தால், நம்மைத் தளையிட முடியாது.
      ஆனால், இந்தப் புரிதல் இல்லாமல், மரணமற்ற ஒரு வாழ்க்கை வேண்டும் என்ற வெறி புராண காலத்திலேயே இருந்திருக்கிறது. ஆயிரம் நிபந்தனைகள் போட்டு ஹிரண்யகசிபு வரம் வாங்கினான். அவன் உயிரை எடுப்பதற்கு கடவுளே தந்திரமாக மனிதனும் அல்லாத, மிருகமும் அல்லாத நரசிம்ம அவதாரம் எடுக்க வேண்டியிருந்தது.
      பஞ்சதந்திரத்தில் ஒரு கதை இருக்கிறது. குரங்கு ஒன்று குடுவையில் இருக்கும் கடலைகளை அள்ளி எடுக்கப் பார்த்தது. கை நிறையக் கடலைகளை எடுத்து விட்டால், குடுவையின் சிறு கழுத்துப்பகுதியைத் தாண்டி கையை வெளியே எடுக்க முடியவில்லை. கடலைகளை விட்டால்தான் கை வெளியே வரும். ஆனால், ஆசையோடு அள்ளிய கடலைகளை விட குரங்குக்கு
மனம் வரவில்லை. கையை வெளியே எடுக்கவும் முடியாமல், கடலைகளை விடவும் முடியாமல் குரங்கு அல்லாடியதைப் போல்தான் அல்லாடுகிறது மரணத்தை மறுக்க நினைக்கும் மனது.
      மரணம் என்பது இல்லாமல் போனால் என்ன ஆகும்?
      ஓர் இளைஞன் இமயத்தில் இருந்த யோகிகளைச் சந்தித்து சில அபூர்வ சக்திகளைப் பெற்று தன் ஊருக்குத் திரும்பினான். தன் தெருவில் முக்காடு போட்டபடி, முகமே இல்லாத ஓர் உருவம் தன் வீட்டுக்குள் நுழையப் பார்ப்பதைக் கவனித்து அதை வழி மறித்தான். 'வழிவிடு. நான் மரணதேவன். உன் தாயின் மரண நாள் வந்துவிட்டது' என்றது அந்த உருவம். இளைஞன் தன் சக்தியைப் பிரயோகித்து மரணதேவனைப் பிடித்து தன் கமண்டலத்தில் அடைத்தான். கமண்டலத்தைப் பூமியில் புதைத்துவிட்டு, வீட்டுக்குப் போனான்.
      அவனுடைய அம்மா வுக்குப் பல வருடங்கள் கழித்து மகனைப் பார்த்ததும், அளவற்ற மகிழ்ச்சி. அவனுக்குப் பிடித்த கோழிக்கறி யைச் சமைத்துப் போட விரும்பினாள்.
      கோழியைப் பிடித்துக் கழுத்தை வெட்டினாள். எத்தனை தடவை வெட்டினாலும், வெட்டுப் பட்ட கழுத்து மறுபடி சேர்ந்துகொண்டது. கோழி சாக மறுத்தது. இது என்னடா அதிசயம்?
      ஒரு வேளை மகன் பூரண சைவத்துக்கு மாறிவிட்டானோ என்று குழப்பம் வந்தது. தோட்டத்துக்குப் போய் கீரையைப் பிடுங்கினாள். கீரை வரவில்லை. காய்களைப் பறித்தால், அவை மறுபடி செடியில் போய் ஒட்டிக்கொண்டன. அம்மா மிரண்டுபோய் மகனிடம் வந்தாள். நடந்ததைச் சொன்னாள்.
      "ஏதோ மந்திர தந்திரம் எல்லாம் கற்று வந்திருக் கிறாயே! என்னடா செய்தாய்?" என்று கேட்டாள். மகன் அவளைத் தேடி வந்த மரண தேவனைப் பிடித்து புதைத்துவிட்டதைச் சொன்னான்.
      "வேண்டாமடா இந்த விபரீதம்! முதலில் அவனை விடுவித்துவிடு. அவனுடைய வேலையை அவன் செய்யட்டும். நம் வேலையை நாம் செய்வோம். இல்லை என்றால், உலகத்தில் யாரும் உண்ண முடியாது. எதுவும் செய்ய முடியாது" என்றாள், அவன் அம்மா.
      மரணத்தை நிறுத்தினால், அப்படித்தான் ஆகி விடும். ஏனென்றால், உயிர் என்பதோ, மரணம் என்பதோ தனித்தனியாக வரவில்லை. இரண்டும் சேர்ந்துதான் வந்திருக்கின்றன.
      இதை நீக்கினால், அது நடக்காது. அதை நீக்கினால், இது நடக்காது.
      ஓர் அறைக்குள் நீங்கள் உள்ளே போக முடி யும்; வெளியேயும் வர முடியும் என்றால், அதை உங்கள் குடியிருப்பு என்கிறீர்கள். உள்ளே போனீர்கள், வெளியே வர முடியவில்லை என்றால், அது அரண்மனையாகவே இருந்தாலும், அதைச் சிறை என்கிறீர்கள். ஆக, வெளியே வந்துவிட்டு உள்ளே போக முடியாது என்றாலும் பிரச்னைதான். இங்கே வந்தால் இங்கே
சிக்கிப்போவீர்கள். அங்கே போனால், அங்கே சிக்கிவிடுவீர்கள் என்றால், அதைச் சுதந்திரம் என்று எப்படிச் சொல்ல முடியும்?
      வாழ்ந்தாலும் ஒருவிதச் சிறை. செத்தாலும் ஒரு விதச் சிறை என்பதை எப்போது நாம் உணர்வுபூர்வமாகப் புரிந்துகொள்கிறோமோ, அப்போது இதைத் தாண்டிப் போக வேண்டும் என்ற ஆர்வம் நமக்கு வந்துவிடும். உயிரின் தன்மையைப் புரிந்துகொள்ளும் தேடுதல் துவங்கிவிடும். முக்திக்கான முதல் அடிஎடுத்து வைத்துவிடுவோம்.
      விழிப்பு உணர்வோடு இருந்தால், உங்களுக்குள்ளேயே ஒரு பகுதியில் பிறப்பு நிகழ்வதும், இன்னொரு பகுதியில் மரணம் நிகழ்வதையும் பார்க்க முடியும். இதை முழுமையாக உணர்ந்து, அடுத்த கணத்தில் உயிர் பிரியும் என்று தெரிந்தாலும் ஒரு மனிதன் ஆனந்தமாக இருக்க முடிந்தால், அதுவே அவன் மேன்மையான நிலையை எட்டிவிட்டதற்கு அடையாளம். ஆனந்த வாழ்வே மேண்மையான நிலை....
      மரணத்துக்குப் பின் எங்கே போவோம் என்ற கேள்வி இன்னும் உங்கள் மனதில் தொக்கி நின்றால், அனுபவித்துப் பார்த்தால்தான் புரியும் என்று சொல்வேன்!

Saturday, May 21, 2011

கல்வி ஆனந்தம்


      'நான்கு அரியர்களை வைத்துஇருக்கும் என் மாணவன், யாரோ ஒரு பெண்ணுக்காக மூன்று மணி நேரம் தெருவில் காத்திருப்பதைக் கவனித்தேன். நன்றாகப் படிக்க வேண்டும், வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டும் என்ற ஆர்வத்தைவிட, ஒரு பெண் பின்னால் சுற்றும் ஆர்வம்தானே அவனுக்கு அதிகமாக இருக்கிறது?' என்று அண்மையில், கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்னிடம் கேட்டார்.
      நான் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தபோது, எங்களுக்கு ஓர் ஆசிரியை இருந்தார். ஆங்கிலக் கவிதைகள் பற்றிப் பாடம் நடத்துவார். சரியாகப் புரிந்துகொள்ளாத மாணவர்களைப் பார்த்து, 'காதல் இல்லாமல் கல்லைப்போல் உட்கார்ந்தால், கவிதை எப்படிப் புரியும்? போய், மகாராணி காலேஜ் முன்னால் நின்று பாருங்கள். காதல் வந்தால் கவிதையும் தானே வரும்' என்பார்.
      ஈஷா நடத்தும் பள்ளிக்கூடத்தில், ஜூன் மாதத்தில் திடீர் என்று மழை பிய்த்துக்கொண்டு கொட்டியது. பள்ளி ஆசிரியர்கள் பெரிய பெரிய பாடத் திட்டங்களுடன் வந்து என்னைச் சந்தித்தார்கள்.
      'நான் ஒரு குழந்தையாக இருந்தால், இப்படி எல்லாம் வகுப்பு நடத்தும் பள்ளிக்குப் போகவே மாட்டேன். குழந்தைகளைச் சும்மா காட்டுக்குள் கூட்டிப்போங்கள். ஆற்றில் விளையாடட்டும். மழையில் நன்றாக நின்று நனைந்து ஊறட்டும். அதன் பிறகு அழைத்து வாருங்கள்' என்றேன்.
      குழந்தைகள் குதூகலமாக மழையில் விளையாடினார்கள். போதும் என்று தோன்றிய பிறகு, உள்ளே வந்தார்கள். இப்போது அவர்களிடம் மழை பற்றி உணர்வுபூர்வமாக ஓர் ஆர்வம் வந்துவிட்டது. மழையின் மீது பிறந்த காதல், அதுபற்றிய விஞ்ஞானத்தை அறிந்துகொள்வதிலும் வந்துவிட்டது. மழையின் புவியியல் பின்னணி என்ன? உயிர்களுக்கும் மழைக்குமான தொடர்பு என்ன? மழையை வைத்து நம் நாட்டின் வரலாறு, கலாசாரம், பொருளியல், ரசாயனம், சமூகவியல் என்று அனைத்தைப்பற்றியும் அவர்களிடம் பேச முடிந்தது.
      எதன் மீதாவது ஆர்வம் வந்துவிட்டால், அதுபற்றி அறிந்துகொள்ளாமல் தூங்க முடிவது இல்லை. அந்த ஆர்வத்தைத் தூண்டிவிடாமல், பாடப் புத்தகங்களை எழுதினால், தொட்டுப் பார்க்கவே பிடிக்காமல் போகிறது. தொட்டுத் திறந்தாலே... தூக்கம்தான் வருகிறது.
      இது எப்படி மாணவனின் தப்பாகும்? பாடப் புத்தகத்தை ஒரு காதல் கதை மாதிரி எழுதி இருந்தால், ஏன் படிக்காமல் தவிர்க்கப்போகிறார்கள்? அறிவியலையும், வரலாற்றையும், கணிதத்தையும் காதலுக்குரிய சுவாரஸ்யத்தோடு எழுதக் கூடாதா? காதலை கெமிஸ்ட்ரி என்பவர் கள், கெமிஸ்ட்ரியைக் காதலாகத் தர முடியாதா? பாடத்தின் மீது காதல் பிறப்பதுபோல் அமைக்காத கல்வி முறையின் மீதுதானே அடிப்படைத் தவறு?
                                            ................சத்குரு....................

Friday, May 20, 2011

காதல் ஆனந்தம்

      கொஞ்சம் ஆழமாகப் பார்த்தீர்கள் என்றால், காதல் என்பது ஒரு மனிதனுக்கு ஆழமான, மகிழ்ச்சியான, ஆனந்தமான உணர்வாக இருக்கிறது. இந்த உணர்வை ஏதோ ஒரு காரணம் தூண்டிவிடுகிறது.
      ஆங்கிலத்தில் அழகாக 'Falling in Love’ என்று சொல்வார்கள். காதலில் ஏற முடியாது, இறங்க முடியாது. நிற்க முடியாது, பறக்க முடியாது. விழத்தான் முடியும். 'நான்' என்ற தன்மை கொஞ்சம் நொறுங்கிக் கீழே விழுந்தால்தான், காதல் பிறக்க முடியும்.
      சென்ற கணம் வரை உங்கள் வாழ்க்கையில் நீங்கள்தான் ஹீரோ. காதல் வந்துவிடட்டுமே, உங்களைவிட இன்னொருவர் முக்கியமாகி விடுகிறார். எப்போது இன்னோர் உயிர் நம்மை விட முக்கியமாக ஆகிவிட்டதோ, அதற்குப் பெயர்தான் காதல்.
      கல்லூரி நண்பர்கள் சிலர் பல வருடங்கள் கழித்து தங்கள் புரொஃபசர் வீட்டில் சந்தித்தனர். எங்கெங்கோ சுற்றிவிட்டு பேச்சு அவர்களுடைய காதல் வாழ்வு பற்றித் திரும்பியது. ஒவ்வொரு நண்பரிடத்திலும் ஏதோ ஓர் ஏமாற்றம், ஏதோ ஒரு வருத்தம்.
      புரொஃபசர் ஒரு ஜாடியில் தேநீர் கொண்டுவந்து வைத்தார். 'அந்த அலமாரியில் நிறையக் கோப்பைகள் இருக்கின்றன. உங்களுக்குப் பிடித்த கோப்பையில் தேநீரை எடுத்துக்கொள்ளுங்கள்' என்றார்.
      பீங்கான் கோப்பை, கண்ணாடிக் கோப்பை, வெள்ளிக் கோப்பை என்று விதவிதமான கோப்பைகள். நண்பர்கள் ஆளுக்கு ஒரு கோப்பையை எடுத்து தேநீர் நிரப்பி அமர்ந்ததும், புரொஃபசர் சொன்னார்...
      'சாதாரணமான மண் கோப்பைகளை யாரும் எடுக்கவில்லை. விலை உயர்ந்த அழகான கோப்பைகளைத்தான் நீங்கள் எல்லோரும் எடுத்திருக்கிறீர்கள் என்பதைக் கவனித்தீர்களா? கோப்பையைக் கையில் வைத்திருக்கப்போகிறீர்கள். அவ்வளவுதான். தேநீர்தான் உள்ளேபோய் உங்களுடன் ஒன்றாகப்போகிறது. ஆனால், உங்கள் கவனம் கோப்பையில் நின்றுவிட்டது.
      எனக்கு என்ன கிடைத்தது, அடுத்தவருக்கு எந்தக் கோப்பை போய்விட்டது என்பதில் சிந்தனை போய்விட்டதால், தேநீரின் உண்மை யான ருசியைக் கவனிக்கத் தவறுகிறீர்கள். காதலும் அப்படித்தான். அந்த அற்புதமான உணர்வு கொண்டுவரும் ஆனந்தத்தை வெளித் தோற்றங்களுடன் தொடர்புபடுத்தி, ருசிக்கத் தவறுகிறீர்கள்... வேதனையில் அல்லாடுகிறீர்கள்!’
      உண்மைதான். மாட்டுக்குக்கூடக் காதல் இருக்கிறது. கழுதைக்குக்கூடக் காதல் இருக்கிறது. புழு, பூச்சிக்கும் காதல் இருக்கிறது. காதலிக்கத் தெரியாதவர்கள் அதற்கும் கீழே இருப்பவர்கள். காதல் என்பது மிக ஆழமான ஈடுபாடு. துறவறம் பூணுபவர்கள் காதல் அற்றவர்கள் அல்ல... குறிப்பிட்ட நபரோடு மட்டும் பிரியத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல், அவர்களுக்கு எல்லாவற்றின் மீதும் காதல் வந்துவிட்டது என்று அர்த்தம்.
      வாழ்க்கை என்றாலே காதல்தான். நீங்கள் சுவாசிக்கும் காற்றைக் காதலோடு கவனியுங்கள். நமக்குள் போய், நம்மில் ஒரு பாகமாகவே மாறும் உணவைக் காதலோடு புசியுங்கள்.
      காதலாக இருக்கும்போது, உங்களுடைய உணர்வு இனிப்பாக இருக்கிறது. உயிர் போனாலும் சரி என்ற ஆனந்த உணர்வு நிறைகிறது. ஒரே ஒருவராலேயே இவ்வளவு கிடைக்கும் என்றால், எல்லா ஜீவராசிகளிடமும், ஜீவனுக்கு மூலமாக இருக்கிற காற்றிடமும், மண்ணிடமும், கல்லிடமும், செடியிடமும் காதல்கொண்டால், எப்பேர்ப்பட்ட அளவில்லாத ஆனந்தம் கிடைக்கும் என்று கற்பனை பண்ணிப் பாருங்கள். மலை, நதி, பூ, புல்வெளி, பட்டாம்பூச்சி, ஆடு, மாடு என்று காணும் ஒவ்வொன்றின் மீதும் காதல்கொள்ளலாம்.
      காதலிப்பது கையில் கிடைக்க வேண்டும் என்று நினைத்தால்தான், பிரச்னை. அதைத் தவிர்த்துவிட்டால், கடலின் மீதும், ஆகாயத்தின் மீதும், நிலவின் மீதும்கூட உண்மையான காதல்கொள்ளலாமே? அந்த உணர்வை உங்களிடம் இருந்து யாரால் தட்டிப் பறிக்க முடியும்?''
      காதலியோடு நின்றுவிடாமல், அனைத்தையும் காதலியுங்கள் ஆனந்தமாக வாழ.....காதலே ஆனந்தம்.....

பெண்கள் ஆண்களுக்கு சமமா? ஆனந்தம்


      ஆண்களைவிடவும் பெண்கள் பலவீனமானவர்கள் என்பதால், பெண்களை உளவியல் ரீதியாகவும் வலிமையிழந்தவர்களாக்கி, ஆன்மிகத்திலும் அவர்களைப் பலவீனப்படுத்தி, பொருளாதாரத்திலும் ஒன்றும் இல்லாமல், ஆக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்தார்கள். இந்த நிலை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது. எல்லாமே ஆண்களைவிடப் பெண்கள் உடல் ரீதியாக பலவீனமானவர்கள் என்கிற ஒரே காரணத்தால்தான் வேறெந்த விதத்திலும் ஆண்கள் பெண்களைவிட மேம்பட்டவர்கள் என்று சொல்லிவிட முடியாது. 


      கொஞ்சம் கூடுதலான வலிமையிருக்கிறது; அவ்வளவுதான். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இது தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இது மிகவும் நீளமானதொரு காலம் என்றே கருதுகிறேன். இதுபற்றி கவனம் கொண்டு மக்கள் எதையாவது செய்ய வேண்டும். பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்ளும்வரை- ஒவ்வொரு ஆணும் பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்ளும்வரை அவன் தன்னைத்தானே உணர வாய்ப்பேயில்லை. ஏனெனில், அவனின் பாதியே பெண்மைதான்.


      இந்திய ஆன்மிக உலகில், தன்னை உணருகின்ற விழிப்பு நிலையின் உச்சத்தைத் தொடுதலில், ஆண்களும், பெண்களும் பெரும்பங்கு வகித்திருக்கிறார்கள். உள் நிலையைப் பொறுத்தவரையில் ஆணிற்கு இணையான தன்மை பெண்ணிற்கும் உண்டு என்பது ஐயத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலேயிருக்கிற தோலைத்தான் ஆண் என்றும், பெண் என்றும் பிரிக்கிறோமே தவிர, உள்ளே இருக்கிற தன்மை ஒன்றுதான். ஆண் தோலா? பெண் தோலா? என்பதுதான் பேதம். உங்கள் ஆன்மிக சக்தியை நிர்ணயிக்கக் கூடியவை இந்தத் தோல்கள் அல்ல. வேண்டுமானால் உடல்கூற்று அளவில் சில பின்னடைவுகள் பெண்களுக்கு இருக்கலாம். ஆனால், உளவியல் ரீதியில் அவர்கள் இன்னும் கூடுதல் வலிமை பெற்றவர்கள். வேத காலங்களிலிருந்தே பெரிய முனிவர்களாகப் பெண்கள் திகழ்ந்திருக்கிறார்கள். வழிபாட்டு முறையின் தொடக்கமே பரம் பொருளை ஓர் அன்னையாக வணங்குவதில்தான் தொடங்கியது.       
      
      விலையில்லாத இறைத்தன்மையை அன்னையாகத்தான் பார்த்தார்கள். அன்று முதல் இன்றுவரை அது தொடர்கிறது. இன்று கூட பெண் தெய்வ வழிபாடு என்பது ஆண் தெய்வ வழிபாட்டை விட அதிகம் இருக்கிறது. அறியாமையில் இருக்கிற ஒரு மனிதன் கூட, அனைத்துக் கடவுள்களும் தன்னைக் கைவிட்டுவிட்டதாகக் கருதினால், விரைவான நன்மைகளைப் பெறுவதற்கு அம்மன் கோவிலுக்குத்தான் செல்கிறான்.


      வேத காலங்களில் அந்தணர்கள் அணிகிற பூணூலைப் பெண்களும் அணிந்திருந்தார்கள். பூணூல் அணிகிற தகுதி அவர்களுக்கு இருந்தது. ஏனென்றால் பூணூல் இல்லாமல் வேதங்களையோ, இதிகாசங்களையோ படிக்கக்கூடாது என்கிற விதிமுறை அன்றைக்கு இருந்தது. ஆன்மிகம் ஆண்களுக்கு மட்டும் உரியதல்ல. பெண்களுக்கும்கூட என்பதாஅல் பூணூல் அணிவிக்கப்பட்டிருந்தது. மைத்ரேயி போன்ற பெண் முனிவர்கள் நிறைய பேர் அன்று இருந்தார்கள்.


      ஜனக மகாராஜாவின் அரண்மனையில் ஒருமுறை ஆன்மிக விவாதம் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. அதில் பங்கேற்க எல்லா முனிவர்களும், ஞானிகளும், சாதுக்களும் கூடியிருந்தார்கள். எது உண்மை, எது போய், என்று கண்டறிவதர்க்கான போட்டி என்றுகூட அதைச் சொல்லலாம். ஜனக மகாராஜா தன்னை உணர்ந்த ஒருவர். தன்னுள் இருக்கும் உண்மையை உணர்ந்த ஒரு அரசர். எனவே, இப்படியொரு விவாதத்தை ஏற்படுத்தி நாட்டில், ஆன்மிகப் பாதையில் இருக்கிற ஒவ்வொரு மனிதரும் பங்கேற்கும் விதமாக அமைத்திருந்தார். விவாதம் தொடரத் தொடர சூட்சும நிலையில் அது நடைபெறத் துவங்கியது. தொடக்கத்தில் அங்கே குழுமியிருந்த அத்தனை பேருமே ஆன்மிக விவாதத்தில் பங்கேற்றார்கள். ஆனால் நேரம் செல்லச் செல்ல பலர் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்களே தவிர, என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அவர்களால் உணர முடியவில்லை. அந்த அளவுக்கு விவாதங்கள் சூட்டுமமாய்ப் போய்க்கொண்டிருந்தது. இரண்டே இரண்டு பேர்தான் தொடர்ந்து விவாதித்துக் கொண்டிருந்தார்கள். ஒருவர் யாக்ஞவல்கியர், இன்னொருவர் மைத்ரேயி.


      இந்த இருவருக்கும் இடையிலான விவதம் நாட்கணக்கில் தொடர்ந்து நடைபெற்றது. உணவு இல்லாமல், உறக்கம் இல்லாமல் விவாதம் நடந்து கொண்டேயிருந்தது. எல்லோரும் உட்கார்ந்து அதைப் பார்த்து கொண்டிருந்தார்களே தவிர, எதைப் பற்றிப் பேசுகிறார்கள் என்பதுகூடத் தெரியாத அளவுக்குச் சூட்சுமநிலையிலேயே விவாதங்கள் போய்க்கொண்டிருந்தன. இறுதியில் மைத்ரேயி கேட்ட ஒரு கேள்விக்கு யாக்ஞவல்கியரால் பதில் சொல்ல முடியவில்லை. ஆன்மிகப் பாதையில் செல்வதற்காக அரசையே துறந்துவிட்டு வந்த அந்த மானிதர், கூர்மையான மதிக்கு மிகவும் பகழ் பெற்றிருந்த ஆவர், மைத்ரேயியின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாத நிலையிலிருந்தார். கோபமும், பதட்டமும் அடைந்தார். மைத்ரேயியிடம் சொன்னார்: “இன்னமும் ஒரு கேள்வி கேட்டால் நீ துண்டு துண்டாக வெடித்துவிடுவாய்” என்று. ஜனக மகாராஜா தலையிட்டு, “உங்களுக்கு எல்லாம் தெரிந்திருப்பது போல் ஒரு தோற்றம் இருந்தாலும் வாழ்க்கை அனுபவத்துக்குள் அவையெல்லாம் வராததால் கேள்விகளுக்குப் யாக்ஞவல்கியரிடம் பதில் சொல்ல முடியவில்லை” என்றார். குழுமியிருந்த அத்தனைபேர் மத்தியிலும் அவர் மைத்ரேயிக்கு உரிய மரியாதைகள் செய்தார் என்று பார்க்கிறோம்.


      யாக்ஞவல்கியர் தன் குறைகளை உணர்ந்து, மைத்ரேயியின் கால்களில் விழுந்து, தன்னையும் ஒரு சீடராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார். மைத்ரேயி அவரிடம் சொல்கிறாள்: “நீங்கள் என் சீடராக இருக்க வேண்டாம். கணவராக இருங்கள்”, என்று. ஏனென்றால் தன் ஆற்றலுக்கு ஓரளவு இணையாக வருகிற எந்த மனிதரையும் அவள் இதுவரை சந்தித்ததில்லை. அவள் உணர்ந்ததை அவர் உணராவிட்டாலும் கூட, ஓரளவுக்காகவாவது இணையாக வருபவர் யாக்ஞவல்கியர் என்பதால் அவரைக் கணவராகக் கொள்வது என்று மைத்ரேயி முடிவெடுக்கிறாள். பல ஆண்டுகள் குடும்பம் நடத்துகிறாள். வேத காலங்களில் ஆண்களுக்கு இருந்த அனைத்து ஆத்ம சாதனைகளும் பெண்களுக்கும் இருந்தன. ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு, யாக்ஞவல்கியர் மைத்ரேயிடம் வந்து, “இந்த உலக வாழ்க்கை போதும் என்று கருதுகிறேன், என்னிடம் இருப்பதெல்லாம் உன்னிடம் கொடுத்துவிட்டு நான் கானகங்களுக்குப் போய் என்னை நானே உணர முற்படுகிறேன்” என்று சொல்லுகிறார்.


      உடனே மைத்ரேயி. “இதுபோன்ற சொற்ப விஷயங்களின் பின்னால் செல்வேன் என்று எப்படி நினைத்தீர்கள்? உண்மையான பொக்கிஷத்தைத் தேடி நீங்கள் போகிறபோது, இந்தச் சின்ன சின்னப் பொருட்களைப் பெரிதென்று எண்ணி நான் இருந்துவிடுவேனா?” என்று கேட்கிறாள். பிறகு இருவருமே கானகத்துக்குப் போய் ஞானமடைந்த நிலையிலே வாழ்கிறார்கள் என்று பார்க்கிறோம்.


       இதுபோல நிறைய கதைகள் உண்டு. இது நமக்கு உணர்த்துவது என்னவென்றால், வேதகாலங்களில் ஆன்மிக வாஅழ்க்கையைப் பொறுத்தவரை பெண்கள் சரிசமமாகக் கருதப்பட்டார்கள் என்பதுதான். இவை மிகவும் சீர்பட்ட சமுதாயங்களாகத் திகழ்ந்தன. சமூகம் சீராக இருந்தாஅல் ஒரு பெண்தான் ஆதிக்கம் செலுத்துவாள். ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்றுகூட அவசியமில்லை. எல்லாஅத் துறைகளிலும் சரிசமமாக அவள் திகழ்வாள். சமூகத்தில் சிக்கல்கள் ஏற்படுகிறபோதுதான், சமூக வாழ்க்கை சீர்குலைக்கப்பட்டு, இடப்ப்லெயர்ச்சி நிகழ்ந்து ஆணின் கை ஓங்குகிறது. அத்தகைய சூழ்நிலகளில் ஒரு பெண் பெரிதும் ஆணையே சார்ந்து வாழ்கிறாள். வாழ்க்கை கடுமையாகும்போது ஆண் ஆளுமை செலுத்துவதும், வாழ்க்கை மிகவும் சூட்டுமநிலையிலேயே இயங்குகிறபோது பெண் ஆளுமை செலுத்துவதும் இயல்பு. அந்த நேரங்களில் ஒரு பெண்ணைச் சார்ந்துதான் ஒரு சமூகம் இருக்கும். ஒருவேளை இதனால்தான் ஆண்கள் சமூகத்தில் எப்போதும் குழப்பங்களை மேலும் மேலும் உருவாக்கிக்கொண்டு அதன்மூலம் தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்கிறார்களோ என்னவோ?


      கி.மு.3000-த்திலிருந்தே வரலாறு நமக்குச் சொல்வது என்னவென்றால் ஆணும், பெண்ணும் சரிநிகராஅக இருந்து வந்திருக்கிறார்கள் என்பதுதான். அதற்குப் பிறகு ஆசிய நாடுகளில் பல்வேறு பகுதிகளாஅன மங்கோலியாஅ, மத்திய சீனா, இந்தோசீனா போன்ற இடங்களிலிருந்து காட்டுமிராண்டித்தனமான படையெடுப்புகள் நிகழ்ந்த போதுதான் – கொள்ளையடித்து உண்டு வாழும் ஒரு வாழ்க்கை வந்த போதுதான் – பெண் மெல்ல மெல்ல தன் சுதந்திரத்தை இழக்கலானாள். எது கிடைத்தாலும் அள்ளிக்கொண்டு போகிறவர்கள் வந்தவுடன், ஆண்கள் பாதுகாப்புப் பணிகளில் நாட்டம் செலுத்தத் துவங்கினார்கள். எனவே செயல்முறைகள் ஒருதலைபட்சமாகி சாத்திரங்களும், சூத்திரங்களும் கொண்டுள்ள விதிமுறைகள் மாற்றி ஸ்மிருதிகளாக எழுதப்பட்டன. வேதங்கள்தான் ஸ்மிருதிகள். அவை வாழ்வின் அடிப்படை உண்மைகளைப் பேசுகின்றனவே தவிர, வாழ்க்கை குறித்த எந்த நிர்ணயமும் வகுப்பதில்லை.


      பிறகு ஸ்மிருதிகள் எழுதினார்கள். 50-லிருந்து 60 சதவிகிதம் வரை ஸ்மிருதிகள் ஒரு பெண்ணின் வாழ்க்கை எப்படியிருக்க வேண்டும் என்பதை நிர்ணயிப்பதாகவே அமைந்தது. ஒருவேளை அதற்கான கட்டாயம் அப்போது இருந்தது இன்று சொல்லலாம். வெளிச்சூழ்நிலை காரணமாகப் பெண்மீது சில தடைகள் வகுக்கப்படவேண்டியதாக இருந்திருக்கலாம். ஆனால், அவை நிராந்தரமான சட்டங்களாகா மாறியது துரதிர்ஷ்ட்டவசமானது. ஸ்மிருதிகளைப் பொறுத்தவரை பெண்ணுக்கு அதிராகச் செய்த முதல் மாற்றாம் எனபது பெண்கள், ஆண்களைப் போல பூணூல் அணிய முடியாது என்று நிர்ணயித்ததுதான். அது ஒரே நேரத்தில் எழுதப்பட்டிருக்க முடியாது. படிப்படியாகத்தான் நிகழ்ந்திருக்கக்கூடும். மெல்ல அது மேலும் வளர்ந்து, ஒரு பெண் முக்தியடைய ஒரே வழி அல்லது தன்னை உணர்வதற்கான இரே வழி தன் கணவனுக்குப் பணிவிடை செய்வதன் மூலமாகத்தான்; அதைத்தவிர வேறு வழியே இல்லை என்று முடிவு செய்தார்கள்.


      வேதகாலங்க்ளில் ஒரு பெண் தன்னுடைய குடும்ப வாழ்வை எப்போது வேண்டுமானாலும் முடித்துக் கொள்ளலாம். ஆணுக்கு இருந்த அதே சுதந்திரம் பெண்ணுக்கும் இருந்தது. சமூகத்தில் எந்த ஒரு எதிர்விளைவையும் ஏற்படுத்தாமல், இத்தகைய முடிவுகளைப் பெண்கள் எடுத்ததற்கான பல சான்றுகள் உள்ளன. அது சமூகத்தால் ஏற்கப்பட்டது. ஒரு பெண் தான் விரும்பிய கணவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள். அந்த எல்லை தாண்டி அவள் வளர்ந்துவிட்டதாகக் கருதினால், அக்குடும்பம் என்கிற அமைப்பைவிட்டு ஒரு ஆண் வெளிவருவதைப் போலவே பெண்ணும் வெளிவந்து கொண்டிருந்தாள். ஆண் ஒருவனுக்குத் திருமணம் ஆகிறது. பத்து, இருபது ஆண்டுகள் குடும்பம் நடத்துகிறான். பிறகு ஆன்மிக நாட்டம் வருகிறது. குடும்பத்தை துறந்துவிட்டுப் போகிறான். அதே உரிமை ஒரு பெண்ணுக்கும் இருந்தது. ஆன்மிகப் பாதையில் செல்லவேண்டும் என்ற நாட்டம் அவளுக்கு வந்தபோதெல்லாம் குடும்பத்தைத் துறந்துவிட்டு அவள் சென்றிருக்கிறாள். இது வேதகாலத்தில் முழு மனதோடு ஏற்கப்பட்டிருக்கிறது.


      காலப்போக்கில் யாரோ துறவு மேற்கொள்வது ஆணுக்குத்தான் சாத்தியம் என்று வரையறுத்துவிட்டார்கள். இது பற்றி யாருமே கேள்வி எழுப்புவது இல்லை. ஒரு ஆண், ஒரு பெண்ணைத் துறந்துவிட்டு ஆன்மிகப் பாதையில் போகலாம். தன்னிடம் இருப்பது எதையும் துறப்பது எல்லாருக்கும் உள்ள உரிமைதானே. ஒரு ஆண் ஒரு பெண்ணைத் துறந்துவிட்டால் அந்தப் பெண்ணை யார் பார்த்துக்கொள்கிறார்கள் என்பது போன்ற கேள்விகளுக்கு விடையே இல்லை. இதை அப்படியே விட்டு விட்டார்கள். இருவருக்கும் அதே சுதந்திரம் இருந்தால் அது வேறு. ஒருவருக்கு மட்டும் இந்தச் சுதந்திரம் இருந்து, இன்னொருவருக்கு இல்லாதபோது அது தீமையிழைப்பதாகத்தான் இருக்க முடியும். துரதிர்ஷ்டவசமாக அப்படியொரு சட்டம் போடப்பட்ட பிறகுதான் மகிழ்ச்சியாகச் சேர்ந்து வாழ்கிற ஆண்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகக் கருதுகிறேன்.


      ஆமாம்! ஏனென்றால், இரண்டு பேர் முழு மகிழ்ச்சியாக- ஆனந்தமாக சேர்ந்து வாழ்வது எப்போது சாத்தியமென்றால், அவர்கள் சுதந்திரமான நிலையில் சந்திக்கிறபோதுதான். ஒரு கட்டுப்பாட்டுடன் சந்திக்க நேருமானால், பிறந்த நாள் முதல் அடிமையாகவே இருந்த ஒரு பெண்ணை திருமணம் செய்ய நேர்ந்தால், அந்தப் பெண்ணை உங்களுக்கு அடிமையாக இருக்கத்தான் பழக்கியிருப்பார்களே தவிர, வேறு எதுவும் இல்லை. ஒருவேளை அதிக பட்சம் அந்த வாழ்க்கை அவளுக்கு வசதியாக இருக்கலாம். ஆனால் வாழ்க்கை ஆனந்தமாக இருக்க முடியாது. அவள் வசதியாக இருப்பாள். உங்கள் தேவைகளைப் பார்த்துக்கொள்வாள்.. அவ்வளவுதான்.


      துரதிர்ஷடவசமாக இன்று கூட இதுதான் தொடர்கிறது. ஒரு உயிர், பெண்ணாகப் பிறந்த உடனேயே, ஒன்று தன் தந்தைக்கு அல்லது கணவனுக்குச் சேவைகள் செய்வதற்குத்தான் அந்த பிறப்பே எடுத்ததாகச் சொல்லப்படுகிறது. அதைத் தாண்டி எதுவுமேயில்லை என்பதுபோல் சொல்லப்பட்டிருக்கிறது. அதுவும் இதைச் சொல்பவர்கள் யாரென்றால் அத்வைதம் பேசுகிறவர்கள் தான் இதைச் சொல்லிக் கொடுக்கிறார்கள். “உலகில் எல்லாமே ஒன்றுதான். ஆனால், ஆண்களைவிடக் குறைந்தவள் பெண்.” இது, அவர்களுக்கு எப்படித் தோன்றியது என்று எனக்குப் புரியவில்லை. பிறப்பிற்குக் காரணமான பாலியல் ரீதியான வேற்றுமையைக் கூட ஏற்றுக்கொள்ள முடியாத யாருமே அத்வைதிகளாக இருக்க முடியாது. ஆணுடைய வாழ்க்கை பெண்ணைச் சார்ந்தே இருக்கிறது. எனவே அவளை ஒப்புக்கொள்ள இயலாவிட்டால், வாழ்க்கையின் அனைத்து இருமைகளையும் ஒன்றாக ஏறுக்கொள்வதென்பது சாத்தியமே இல்லாத ஒன்று. 


      மனித குல வாழ்க்கையிம் ஆதாரங்களில் ஆணைவிட, பெண்ணுக்குத்தான் அதிகப்பங்கு இருக்கிறது. ஆணுக்குப் பங்கு ஒரு அளவு வரைதான். எனவே, பெண்ணை ஏற்றுக்கொள்ளாத போது, ஆண் மிகவும் குறுகிய மனப்பான்மை கொண்டிருக்கக் கூடும், அல்லது அறியாமையில் இருக்கக் கூடும். அனால் இவை எல்லாமே சில வசதிகள் கிடைக்கின்றன என்பதனால் இருக்கின்ற குறுகிய மனப்பான்மைகள் தான். என்ன நந்தாலும் வசதியாக இருந்தால் எதற்காக அதை விட்டுக் கொடுப்பது? அது சரியா? தவறா? என்ப்லதெல்லாம் கேள்வியல்ல. அதில் நன்மை கிடைக்கிறது என்றால் ஏன் விடவேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த மனநிலை மாறாவிட்டால் அங்கே ஆன்மிகம் இருக்காது. அங்கே ஆன்மிகம் இருக்க வழியே கிடையாது.


      இன்றுகூட நாம் பார்க்கிறோம், அம்மன் கோவில் முன்னால் போய் விழுந்து கும்பிடுகிற ஒரு ஆண் வீட்டுக்குப் போய் மனைவியை அடிக்கிறான். அவன் அறியாம கொண்டவன் மட்டுமல்ல; நேர்மையில்லாதவன். குறுகிய மனப்பான்மை இல்லாவிட்டால் இப்படியொரு பார்வை வாராது.


      அதேபோல் ஆண் செய்வதை எல்லாம் பெண்ணும் செய்வது என்று வந்தால் அதுவும் சரியாக இருக்காது. அது மிகவும் ஆபாசமாகத்தான் இருக்கும். மேற்கில் இதுதான் நடக்கிறது. இங்கேயும்கூட இது ஒரளவு இருக்கிறது. ஆக பெண்கள், முயற்சி செய்து வருகிறார்காள். அது நிகழ்ந்தால் இரு சாராருக்குமே சேதம்தான் அதிகம். ஒரு பெண், பெண்தன்மையை இழந்தால் அது மிகவும் அசிங்கமாக இருக்கும். ஆண் போல ஆகவேண்டும் என்று பெண் நினைப்பதே தவறு. அவள் ஏன் ஒரு ஆண்போல ஆகவேண்டும்? ஏனென்றால், அவளுக்குள்ளேயே ஏதோ ஓரிடத்தில் தான் தாழ்ந்தவள் என்றும்; ஆண் உயர்ந்தவன் என்றும் ஒரு எண்ணம் இருக்கிறது. எனவே ஆண்போல ஆக அவள் நினைக்கிறாள்.


      அவளது இந்த எண்ணம் மாறினால் மட்டுமே, ஒரு பெண் உன்னதமடைய முடியும். ஆனந்தமடைய முடியும்...... ஆனந்தமாக வாழலாம்.... ஆனந்தமே எல்லாம்..... 

Saturday, May 7, 2011

விழிப்புணர்வு ஆனந்தம்

       உங்கள் வாழ்க்கையில் பல எல்லைகளை வகுத்துக் கொண்டிருக்கிறீர்கள். பகல்பொழுதைவிட இரவுதான் உங்களுக்கு அதிகமாக பிடித்திருக்கிறது. தூக்கத்தில்இருந்து விழித்து பகல்பொழுதை எதிர்கொள்வதென்றால் உங்களை அறியாமலேயே பல வழிகளில் தயங்குகிறீர்கள்.
      ஏதாவது ஒரு நாள் காலையிலேயே எழுந்து நண்பர்களுடன் பிக்னிக் போக முடிவெடுத்தீர்கள் என்றால், அன்று மட்டும் சூரிய உதயத்திற்கு முன்பே ஆர்வத்துடன் எழுந்துகொள்கிறீர்கள். முந்தைய நாளே விழிப்புணர்வுடன் முடிவெடுத்து விடுகிறீர்கள். நாளை எப்போது வரும் என்று ஆவலுடன் காத்திருக்கிறீர்கள்.
      மற்ற நாட்களில் போர்வையால் முகம் மூடி படுத்திருக்கிறீர்கள். சூரிய உதயத்தை நீங்கள் விரும்பவில்லை. ஏனெனில் அது தனியாக வருவதில்லை. அதனுடன் விலைவாசி பிரச்னை, வீட்டுப்பிரச்னை, அலுவலக பிரச்னை, ஏன்... முழு உலகமே ஒட்டுமொத்தமாக வருகிறது. எனவே உங்களை அறியாமலேயே சூரிய ஒளியை தவிர்க்க விரும்புகிறீர்கள்.
      ஆனால், ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். ஆன்மிக சாதகர்களைப் பொறுத்தவரை குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு உடற்பயிற்சி செய்வதுபோன்ற வசதியற்ற வேலைகளை கண்டிப்பாக செய்ய வேண்டியிருக்கிறது. நீங்கள் பசியாக இருக்கும்போது ஓடிச் சென்று அள்ளி வாயில் போட்டுக்கொள்ள வேண்டும் என்பதுதான் உங்கள் இயல்பாக இருக்கிறது. இதுபோன்ற சமயங்களில் விழிப்புணர்வுடன் நீங்கள் ஒரு முடிவெடுக்கிறீர்கள். ""நான் மிகவும் பசியாக இருக்கிறேன். என்றாலும் நான் இப்போது சாப்பிடப் போவதில்லை. இந்த உணவு எனக்குக் கிடைக்க காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி சொல்லிவிட்டே சாப்பிடுவேன்,'' என்று பசியிருந்தும் சாப்பிடாமல் இருக்க வேண்டுமானால் அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது.
      வாழ்வின் மிகவும் கடினமான நேரங்களில் விழிப்புணர்வு பற்றி நீங்கள் பயிற்சி செய்ய வேண்டும். விழிப்புணர்வுடன் இருங்கள் என்று சொல்லும்போது ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். யாரோ ஒருவர் உங்களை திட்டுகிறார், திருப்பி நீங்கள் அவரை திட்டுவதற்கு விழிப்புணர்வு தேவையில்லை. ஆனால் அந்த நேரத்தில் அமைதியாக இருப்பதற்கு மிகவும் விழிப்புணர்வு தேவைப் படுகிறது இல்லையா? எனவே பிடிக்காத செயல் செய்வது உங்களுக்கு மிகுந்த விழிப்புணர்வை தரும்.
   உடல்நிலையில், சுவாச நிலையில், சக்தி நிலையில் மற்றும் உணர்ச்சி நிலையில் இப்படித்தான் விழிப்புணர்வு கற்றுக்கொள்ளவேண்டும். இப்படிக் கற்றுக்கொள்ளும் நிலையில் பொருட்களை தனித்துப் பார்க்கும்படி விழிப்புணர்வு உண்டாகிறது. ஒன்றின்மீது, மேலும் மேலும் நீங்கள் விழிப்புணர்வைக் கொண்டுவரும்போது - உடல்நிலையில் கொண்டு வரும்போது நீங்கள் வேறு, உடல்வேறு என்பதைப் பார்க்கமுடியும். மனநிலையில் கொண்டு வரும்போது நீங்கள் வேறு, மனம் வேறு என்பதைப் பார்க்க முடியும்.
      உணர்ச்சி நிலையில் கொண்டு வரும்போது நீங்கள் வேறு, உங்கள் உணர்ச்சிகள் வேறு என்பதை பார்க்க முடியும். எனவே "நீங்கள்' எனப்படுவதற்கு ஒரு வடிவம் இல்லை என தெரிகிறது. நீங்கள் உண்மையில் வடிவமற்றவர் என்பது உங்கள் வாழ்க்கையைப் பொறுத்தவரை இன்னமும் உண்மை இல்லாததாக இருக்கலாம். வடிவமற்றது என்றால் எல்லையற்றது என்றும் சொல்லலாம். வடிவம் என்பது எல்லை. எனவே வடிவமற்றது என்பது
எல்லையற்றது. விழிப்புணர்வை பயிற்சி செய்யச்செய்ய காலப்போக்கில் வடிவம் தனது வலிமையை இழக்கத் துவங்கும். அது உறுதி.

மெளனம் ஆனந்தம்


      மவுலங்கப் பட்டர் என்ற பண்டிதர் புத்தரிடம் சீடராகச் சேர்ந்தார். ""புத்தரே! நீரே எமக்கு ஞானத்தைத் தரவேண்டும்,'' என்று வேண்டிக்கொண்டார்.
      "மவுலங்கா! இங்கே என்னுடன் ஒரு வருஷ காலம் தங்கியிரு. மவுனமாக இருப்பது ஒன்று தான் என்னுடைய போதனை. எந்த சந்தேகத்தைக் கேட்க விரும்பினாலும் ஒரு வருஷத்திற்குப் பிறகு தான் கேட்கவேண்டும்," என்று சொல்லி தன்னருகே இருக்க வைத்தார்.
      புத்தரின் நிபந்தனையைக் கேட்ட பண்டிதரும் அமைதி காத்துவந்தார். ஒரு வருஷம் ஓடிவிட்டது. புத்தரே அவரை அழைத்து, ""நீ விரும்பியதை என்னிடம் கேட்கலாம்'' என்றார்.
      மவுலங்கப் பட்டர் அவரை வணங்கி, ""என் மனதில் ஏற்பட்ட குழப் பத்தை எல்லாம் மவுனமே போக்கிவிட்டது. இப்போது நான் விழிப்புணர்வுடன் தெளிவாக இருக்கிறேன். தங்களிடம் கேட்பதற்கு எதுவுமில்லை,'' என்று கூறினார்.