Showing posts with label அரசன். Show all posts
Showing posts with label அரசன். Show all posts

Thursday, November 17, 2011

தியானம்‍-கவனித்தல் ஆனந்தம்


      ஒரு மிகப் பெரிய துறவி தன்னுடைய சீடன் ஒருவனிடம் அவனுடைய பாடத்தின் கடைசி அத்தியாயத்தை படிப்பதற்காக அரசவைக்கு போகச் சொன்னார். சீடன் தேர்வு பெற்று விட்டதை அறிவிப்பதற்கு முன் அவன் அரசவைக்கு சென்று அங்கு சில நாட்கள் தங்கி இருக்க வேண்டுமென்று சொன்னார்.
      இதுதான் குருவின் விருப்பமா என்று எண்ணிய சீடன் சென்றான். ஆச்சரியம்தான், எல்லாவற்றையும் துறந்த ஒரு துறவி தன்னுடைய சீடர்களை எதையும் துறக்காத, பதவி வெறி பிடித்த, அடுத்த நாடுகளை வெற்றி கொள்ளும் வெறி பிடித்த சாதாரண ஒரு அரசனிடம், ஆயிரக்கணக்கான மக்கள் சாவதைப் பற்றி ஒரு சிறிதும் கவலைப்படாத, பொருட்களிடம் பற்றுக் கொண்ட மனிதனிடம் எதற்காக அனுப்புகிறார் அதில் ஏதாவது ரகசியம் இருக்க வேண்டும் நானும் எதற்காக அனுப்பப்படுகிறேன் தெரியவில்லையே என்று நினைத்தவாறே சென்றான்.
      அவன் சென்ற நேரம் மாலை நேரம். அவன் உடனடியாக அரசவைக்கு அழைத்துச் செல்லப் பட்டான். அது அரசர் மதுவருந்தும் நேரம், மேலும் ஒரு அழகான நடன மாது நடனமாட வந்திருந்தாள். அரசவை அந்த மாலை நேரத்தை அனுபவிக்க ஆரம்பித்திருந்தது.
     இது எல்லாவற்றையும் பார்த்த அந்த இளம் துறவி அதிர்ச்சியடைந்து, திகிலடைந்து போனான். அவன் அரசரிடம் நான் இங்கே சில நாட்கள் தங்க வந்தேன். ஆனால் என்னால் இங்கே ஒரு மணி நேரம்கூட தங்க முடியாது. என்னை என் குருநாதர் எதற்காக இந்த நரகத்திற்கு அனுப்பினார் என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை. என்றான்.
     அரசர், உன்னை உன் குருநாதர் இங்கே அனுப்பினார் என்றால் அதற்கு ஏதாவது காரணம் இருக்கும். இவ்வளவு சீக்கிரமாக தீர்மானித்துவிடாதே. இரண்டு மூன்று நாட்களில் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது மேலும் நினைவில் கொள், இது உனது இறுதி கட்ட பரீட்சை. என்னுடைய அங்கீகாரம் இல்லாமல் நீ தேர்வடைந்தவன் என்று ஒரு போதும் அறிவிக்கப்படமாட்டாய். நீ உன்னுடைய குருலத்திலேயேதான் உன் வாழ்நாள் பூராவும் இருக்கவேண்டி வரும். அதனால் நீ உணர்வுடன் பேசு. இங்கே மூன்று நாட்கள் இரு. நீ இங்கே என்னை மதிப்பிட வரவில்லை, நான் உன்னை மதிப்பிடவே நீ இங்கே வந்திருக்கிறாய் என்பதை நினைவில் கொள்.
      இது மிகவும் அதிகம். எல்லாவற்றையும் துறந்த ஒரு துறவியை ஒரு அரசன் மதிப்பிடுவதா ஆத்திரமடைந்தாலும் என்ன செய்வது திரும்பி போனால் குருநாதர் மகிழ்ச்சியடையமாட்டார். எப்படி இருந்தாலும் இங்கே இருந்துதான் தீர வேண்டும் என்பது உறுதி என்றால் எப்படியோ இந்த மூன்று நாட்களை இங்கேயே கடத்திவிட்டு இந்த தலைகனம் பிடித்த மனிதனிடமிருந்து வேண்டியதை சாதித்து சென்று விடலாம்.
     அரசர் கூறினார், அமைதியடைந்து சுயஉணர்வு கொள். முதலில் குளி, நீ வரப் போகும் செய்தி முதலிலேயே எனக்கு வந்துவிட்டது. அதனால் நான் உனக்காக எல்லாம் தயார் நிலையில் வைத்திருக்கிறேன். கவலைப்படாதே. இளமை அப்படித்தான். எதையும் சீக்கிரமே தீர்மானம் செய்யச் சொல்லும். தீர்மானம் செய்யாமல் இருக்க, அல்லது உடனடியாக மதிப்பீடு செய்யாமல் இருக்க ஒரு சிறிதளவு அனுபவம் வேண்டும். நீ இதுவரை எதையும் பார்த்ததில்லை.
      இங்கே மூன்று நாட்கள் இரு, கவனி, பார். நீ மதிப்பீடு என்பதை உன் வாழ்நாள் முழுவதும் செய்யலாம். அதில் எந்த பிரச்னையும் இல்லை. முதலில் என்னுடைய ஒப்புதல் பெற்றுக் கொள். என்னுடைய மதிப்பீட்டை கவனித்து அதன்படி நடந்து கொள்ள முயற்சி செய். அப்போதுதான் நீ என்னிடமிருந்து சாதகமான தீர்ப்பை பெறலாம். இல்லாவிடில் நீ திரும்ப திரும்ப உனது வாழ்க்கை முழுவதும் இங்கே வர வேண்டியிருக்கும். அதனால் போய் குளி. நான் சகல ஏற்பாடும் செய்து வைத்திருக்கிறேன்.
      இந்த இளம் துறவி இதுவரை அரசனின் குளியலறையை பார்த்ததேயில்லை. அது போன்ற அழகான ஒரு இடத்தில் அவன் இருந்ததேயில்லை. நிர்வாணமான பெண்கள் மசாஜ் செய்ய அங்கே இருந்தனர்.....அவன், கடவுளே, இந்த பரீட்சை என்னை முடித்துவிடும் போலிருக்கிறதே. இந்த மூன்று நாட்களில் இவர் என்னை கொன்று விடப் போகிறார். என்றான். அவன் எதுவும் சொல்வதற்கு முன், உண்மையில் அவன் பதட்டத்தின் உச்சியில் இருந்தான். அவன் எப்போதும் பெண்களிடமிருந்து தப்பித்து வந்திருந்தான், இப்போது இங்கே நிர்வாணமான பெண்கள்.... அவன் இதற்கு முன் இவ்வளவு அழகான பெண்களை பார்த்ததேயில்லை, அதுவும் அவர்கள் மசாஜ் செய்யப் போகிறார்கள்.
      ஆனால் அவன் எதுவும் சொல்வதற்கு முன் உண்மையில் அவனால் எதுவும் பேச முடியவில்லை, அவன் பேசும் சக்தியை இழந்திருந்தான். அவனால் ஆஹாஹாஹா என்று மட்டுமே சொல்ல முடிந்தது. வேறு எதுவும் சொல்ல முடியவில்லை. அவர்கள் அவன் ஆடைகளை கழற்ற ஆரம்பித்தனர். அவன் எதையும் செய்யும்முன், அவன் நிர்வாணமாக நின்றிருந்தான். அந்த நான்கு பெண்களும் அவனை முழுமையாக தங்கள் வசம் எடுத்துக் கொண்டு அவனை குளியல்அறையின் தொட்டியில் அமிழ்த்தினர். அதில் முழுமையாக பன்னீர் இருந்தது.
      அரசர்களும் மிகப் பெரும் பணக்காரர்களும் பன்னீரில்தான் குளிப்பர். இரவில் குளியல்தொட்டியில் நூற்றுக்கணக்கான ரோஜாக்களை போட்டு வைத்தனர். அதனால் அந்த வாசம் தண்ணீரில் ஊறி விடும். காலையில் அந்த இதழ்களை எடுத்து விட்டால் நீ அந்த ரோஜாக்களை பார்க்காவிட்டாலும் ரோஜாவாசம் உன்னை சூழ்ந்திருக்கும்.
      அவன் இதுவரை தன் வாழ்நாளில் அது போன்ற ஆடம்பரமான எதையும் பார்த்ததேயில்லை. அந்த குளியல் தொட்டி முழுவதும் தங்கத்தால் ஆனது. அரிய வகை எண்ணெய் ஊற்றி அவன் மசாஜ் செய்யப்பட்டான். அதிலிருந்து தப்பிப்பதற்குள் அவனுக்கு போதும் போதுமென்றாகி விட்டது. அதற்குள் அவன் உறைந்தவன் போலாகி விட்டான்.
     பின் அரசர் அவனை விருந்துக்கு அழைத்தார். அவன் இதுவரை இது போன்ற உணவு வகைகளை ருசித்ததேயில்லை. ருசிக்காமல் சாப்பிட வேண்டும் என்றுதான் அவன் இதுவரை படித்துள்ளான். இங்கோ, ருசியான, சுவையான அற்புதமான உணவு. அதன் வாசனையே மணமே உனக்கு பசியெடுக்க வைத்துவிடும்.
      அரசர், உட்கார், உட்காரந்து சாப்பிடு. ருசிக்காமல் சாப்பிட வேண்டும் என்ற உனது ஒழுங்கை நினைவில் கொள். உனது குருநாதரின் இல்லத்தில் உள்ள சுவையில்லாத உணவை சாப்பிடும்போது அதை நினைவில் கொள்வதில் என்ன சிரமம் ஒரு ஒழுங்கினால்தான் அதை அங்கே நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமா அங்கே சுவையில்லை. எந்த முட்டாளும் ஒழுங்காக இருப்பான். இங்கே அதை நினைவில் கொள்.
      இளைஞன் அதில் உள்ள கஷ்டத்தை பார்த்தாலும் அதில் உள்ள நியாயத்தையும் பார்த்தான். அரசர், குளியல் எப்படி இருந்தது சொல்லவே இல்லையே, அந்த பெண்கள் நன்றாக இருந்தார்களா ஏனெனில் அவர்கள்தான் மசாஜ் செய்வதில் சிறந்தவர்கள் நீ திருப்தியடைந்திருப்பாய் என நினைக்கிறேன்.
      அவன் திருப்தியா, நான் மூன்று நாட்களை எப்படியோ கடத்த நினைக்கிறேன். எனக்கு நம்பிக்கை இல்லை, அப்படி கடந்து விட்டால்..... இதுதான் முதல் மாலை. இந்த மூன்று நாட்களும் எனக்கு மூன்று வாழ்க்கை போல இருக்கிறது. இந்த உணவு அதை என் வாழ்நாள் முழுவதும் என்னால் மறக்க முடியாது. நான் துறவி, மேலும் இந்த அழகான பெண்களை என்னால் மறக்கமுடியாது. இது என்ன வகையான பரீட்சை நான் இத்தனை வருடங்களாக என்னை தயார் செய்து வைத்திருப்பதற்கு நேர் எதிரான அனுபவங்களை நீங்கள் எனக்கு கொடுக்கிறீர்கள் என்றான்.
      பின் மது வந்தது. அரசர் அவனுக்கு சிறிது ஊற்றிக் கொடுத்தார். இளைஞன், இது அதிகப்படியானது. ஏனெனில் மது எனது குருநாதரின் இல்லத்தில் தடை செய்யப்பட்ட ஒன்று. என்றான்.
      அரசர், இது உனது குருவின் இல்லம் அல்ல. இது உனது பரிசோதகரின் இல்லம். உனக்கு ஒப்புதல் வழங்கும் பரிட்சை. கவனமாக இரு, நான் சொல்வதை செய். உனது குருநாதர் சுயஉணர்வின்றி இருக்காதே என்று தான் கூறியிருக்கிறார். சுயஉணர்வின்றி இருக்காதே. குடி, சுயஉணர்வை இழக்காமல் இரு. குடிக்காமல் சுயஉணர்வோடு இருப்பதில் என்ன பிரச்னை யாரும் அதை செய்யலாம், எல்லோரும் அப்படித்தான் இருக்கின்றனர்.
      அவன் குடிக்க வேண்டி வந்தது. பின் என்ன நடக்கிறது என்றே அவனுக்கு தெரியாது. என்ற அளவுக்கு அவன் சுயஉணர்வை இழந்து விட்டான். மது, மாது, அழகான உடை, யாவும் அவனை மயக்கி விட்டன. அவன் தங்க வேண்டிய இடத்திற்கு அரசர் அவனை தூக்கிச் சென்றார். அவனால் நம்பவே முடியவில்லை. அவன் தான் சொர்க்கத்திற்கு வந்து விட்டதாக எண்ணினான். மது பலருக்கு சொர்க்கத்தை பற்றிய நினைப்பை கொடுத்து விடும்.
      அவன் தான் சொர்க்கத்தில் இருப்பதாக எண்ணினான். அவன் தான் தேர்வடைய வந்திருப்பதை சுத்தமாக மறந்து விட்டான். அரசர் அவனுக்கு அவனுடைய படுக்கையை காண்பித்தார். அவன் படுத்த மறுகணம் அவன் தன் தலைக்கு மேல் நூலில் ஒரு வாள் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்தான். எல்லா மயக்கங்களும் காணாமல் போய் விட்டது. திடீரென அவன் தான் சொர்க்கத்தில் இல்லையென கண்டான். அந்த வாள்... யாரையும் எங்கிருந்தாலும் - சாவு - உடனே பூமிக்கு கொண்டு வந்து விடும்.
      அவன் அரசரிடம் எதற்காக இந்த வாள் இங்கே தொங்கிக் கொண்டிருக்கிறதென்று கேட்டான். அரசர், இது உன்னை சுயஉணர்வில் வைத்திருப்பதற்காக அங்கே தொங்கிக் கொண்டிருக்கிறது என்று கூறினார். இதுதான் உனது அறை. இப்போது தூங்கு. கடவுளின் கருணையிருந்தால் நாள் இருவரும் உயிரோடிருந்தால் சந்திப்போம். என்றார்.
     அவன், உங்களுக்கு எதுவும் நடக்காது. நீங்கள் உயிரோடிருப்பீர்கள். பிரச்னை எனக்குத்தான். கடவுளின் கருணையிருந்தால்கூட எனது தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் இந்த கூரான வாளை தாங்கிப் பிடிக்கும் சக்தி இந்த நூலுக்கு இருக்குமா என்பது எனக்கு சந்தேகம்தான். ஒரு தென்றல் காற்று போதும், அது எந்த வினாடியும் அறுந்து விழுந்துவிடும். நான் செத்தேன். என்றான்.
      அரசர், கவலைப்படாதே. நீ இறந்து விட்டால்கூட உனது குரு சொல்லிருப்பாரே மறுபிறப்பு பற்றி – நீ மறுபிறப்பு எடுப்பாய் – மறுபடியும் பிறப்பாய். நீ கற்றது அனைத்தும் உன்னுடன் வரும். அதனால் இந்த கடைசி கணங்களை தவற விட்டு விடாதே. அது விழலாம், அதற்கு நான் உறுதிமொழி கொடுக்கமுடியாது. நீ இந்த கணங்களை எப்படி உபயோகப்படுத்திக் கொள்கிறாய் என்பது உன்னை பொறுத்தது. தன்னுணர்வோடு இரு, நீ தன்னுணர்வோடு இறந்தால் அதை விட சிறப்பானது எதுவும் கிடையாது. என்றார்.
      இளைஞன், நான் இறக்க விரும்பவில்லை. நான் இங்கே ஒப்புதல் பெறவே வந்தேன். ஆனால் நீங்கள் என்னை வாழ்விலிருந்தே காலி செய்கிறீர்கள். என்றான்.
      அரசர், இதுதான் ஒருவர் ஒப்புதல் பெறும் வழி. நீ தூங்கு. என்ன நிகழ்கிறதோ அதுவே நிகழும். அதுதான் உனது குரு சொல்லிக் கொடுத்தது. இதைதான் இந்துக்கள் சொல்கிறார்கள் அவனின்றி அணுவும் அசையாது, ஒரு இலை கூட அவனது விருப்பமின்றி அசையாது, பின் எப்படி ஒரு வாள் உன்னை கொன்று விடும். அதுதான் அவன் விருப்பம் என்றால் வாளோ, வாளின்றியோ நீ கொல்லப்படுவாய்.
      அதனால் தூங்கு, நான் அப்படித்தான் தூங்கப் போகிறேன். உன்மேல் ஒரே ஒரு வாள்தான் தொங்கிக் கொண்டிருக்கிறது. அங்கே என்மேல் ஆயிரக்கணக்கான வாட்கள் தொங்கிக் கொண்டிருக்கிறது. சீக்கிரமே என் குறட்டை சத்தத்தை அடுத்த அறையில் இருந்து நீ கேட்கலாம். என்றார்.
      இளைஞனால் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. இரவு முழுவதும் அடுத்த அறையில் அரசர் விடும் குறட்டை சத்தம் அவனுக்கு கேட்டது. காலையில் அரசர் அவனது அறைக்கு வந்தார். இளைஞன் விழிப்புடன் வாளை பார்த்தவாறே படுத்திருந்தான். இந்த முழு உலகத்திலும் வாளைத் தவிர வேறு எதுவும் இல்லை.
      அரசர், நான் குளிக்கப் போகிறேன். அவரது அரண்மனைக்கு பின் புனித கங்கை ஆறு ஓடிக் கொண்டிருந்தது. என்னுடன் வா, சிறிது தூரம் நடந்து விட்டு ஆற்றில் நீச்சல் அடித்து வரலாம். வா என அழைத்தார். அவர்கள் சென்றனர். அந்த துறவியிடம் கோவணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.
      பிச்சை பாத்திரம், கோவணம், ஒரு குச்சி ஆகிய இவையே அந்த இளைஞன் தன்னுடன் கொண்டு வந்த பொருட்கள். காலையில் அவன் அந்த மூன்று பொருட்களை திரும்பவும் எடுத்துக் கொண்டான். ஏனெனில் அரசர் கொடுத்த மிக மதிப்பு வாய்ந்த ஆடைகளோடு, உடையோடு வெளியே வர அவனுக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்தது.
      அவன், அரண்மனையில் இருக்கும்போது நான் அவற்றை அணிந்து கொள்கிறேன். ஆனால் வெளியே வரும்போது அவற்றை நான் போட்டிருப்பதை யாராவது பார்த்துவிட்டால் அது எனக்கும் உங்களுக்கும் சங்கடமாகி விடும். அதனால் நான் என் கோவணத்தை கட்டிக் கொள்கிறேன் என்றான்.
      அரசர், அது உன் பிரச்னை என்று கூறி விட்டார். ஆகவே அரசர் தனது ராஜ ஆடையிலும் இவன் தனது கோவணத்தோடும் சென்றனர். இருவரும் தங்களது ஆடைகளை கழற்றி கரையில் வைத்துவிட்டு குளிக்க நதியில் இறங்கினர். அவர்கள் குளித்துக் கொண்டிருக்கும்போது துறவி அரசரிடம் உங்களது அரண்மனையில் தீ பிடித்திருக்கிறது என்று கத்தினான்.
      அரசர், நீ பார்ப்பதற்க்கு முன்பே நான் பார்த்துவிட்டேன். ஆனால் கவலைப்பட ஏதுமில்லை. இப்போது என்ன செய்ய முடியும் அது தீப்பிடித்துவிட்டது. கடவுளின் விருப்பமின்றி எதுவும் நடவாது. அதனால் கவலைப்படாதே. நீ குளி. என்றார்.
      துறவி, என்ன சொல்கிறீர்கள், நான் என் துணிகளை காப்பாற்றிக் கொள்கிறேன். அது அரண்மனைக்கு அருகில் இருக்கிறது என்று கூறியவாறே ஓடிப் போய் தன் ஆடைகளை எடுத்துக் கொண்டான். அரண்மனை பற்றி எரிகிறது அரசரின் ஆடைகள் அங்கே இருந்தன. ஆனால் அவன் தனது ஆடைகளை பற்றி மட்டும் கவலைப்பட்டான். அரசர் குளித்துமுடித்தார். அரண்மனை எரிந்து முடிந்தது. அது அவரது ஆணையின்மேல் பற்ற வைக்கப்பட்டிருந்தது. துறவி, அதிர்ச்சியில் நடுக்கத்தில் இருந்தான். கோடிக்கணக்கான ரூபாய்கள்........ எத்தனை நஷ்டம் என்றான்.
      ஆனால் அரசர், கவலைப்படாதே அது உன்னுடையது அல்லவே உன்னுடைய பொருட்கள் பாதுகாப்பாக உள்ளதா என்றார்.
      அவன் எனது பொருட்கள் பாதுகாப்பாக இருக்கிறது என்றான்.
அரசர், அது உனக்கு போதும் – நீ உன் பொருட்களை பற்றி மட்டுமே கவலைப்பட வேண்டும். இவைதான் உன் செல்வம், உனது ராஜாங்கம். ஆனால் எனது முழு ராஜாங்கமும் பற்றி எரிந்து போனாலும் நான் கவலைப்பட மாட்டேன். அது பிரச்னையே அல்ல. ஏனெனில் நான் இங்கில்லாத போதும் உலகம் இருந்தது, அரசாங்கம் இருந்தது. ஒரு நாள் நான் இல்லாமல் போவேன், அப்போதும் உலகம் இங்கிருக்கும். இங்கே நான் ஒரு சாட்சியாளன், பார்வையாளன் மட்டுமே. இதில் நான் ஏன் ஒன்றி போக வேண்டும்
      ஆனால் நீ எதையும் துறக்கவில்லை என்பதை நீ நினைவில் கொள்ள வேண்டும். நீ இன்னும் பார்வையாளனாகவில்லை. உன்னால் எனது வீடு பற்றி எரிவதைக்கூட பார்க்கமுடியவில்லை. உனது துணி எரிந்துபோயிருந்தால் உனக்கு பயித்தியம் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன். என்னுடைய இழப்பை பார்த்த்திலேயே உனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. ஆனால் அதற்க்கும் உனக்கும் என்ன சம்பந்தம். நான் குடித்ததை பார்த்ததிலேயே நீ அதிர்ச்சியடைந்துவிட்டாய், ஆனால் நான் குடிக்கும்போதுகூட நான் ஒரு சாட்சியாளன்தான். என்னைச் சுற்றி அழகான பெண்கள் இருந்ததை பார்த்த போது அதிர்ச்சியடைந்து விட்டாய். ஆனால் அப்போதும் நான் பார்வையாளன்தான். ஆனால் நீ சாட்சியாளனாக இல்லை. இந்த இரண்டு நாட்களில் விழித்துக் கொள். காலம் அதிகமில்லை. மிகவும் குறைவாகவே உள்ளது. சாட்சியாளனாக இரு. நான் உனக்கு சான்றிதழ் கொடுப்பதற்கு முன் நீ தேர்வடையவேண்டும். நீ ஒரு பார்வையாளன் என்பதை நீ நிரூபிக்க வேண்டும்.
      அவன் நான் எப்படி நிரூபிப்பது என்று கேட்டான்.
      அரசர், இன்று எல்லாவற்றையும் முயற்சி செய். அது எதுவாக இருந்தாலும் அது நீ கவனிப்பதற்கு உதவி செய்வதாக மாற வேண்டும். வெறுமனே கவனி, தப்பிக்க முயற்சி செய்யாதே. அமுக்காதே, சண்டையிடாதே. தவிர்க்காதே. கவனி, விஷயங்கள் நிகழட்டும். என்றார்.
      மூன்றாவது நாளில் இறுதி பரீட்சை ஒரு அழகிய நடனம். இந்த துறவியின் கையில் எண்ணெய் நிரம்பிய ஒரு கோப்பை கொடுக்கப்பட்டது. ஒரு சிறிதளவு அசைந்தால்கூட எண்ணெய் சிந்திவிடும். நடனமாதர்கள் – அனைவரும் நிர்வாணமாக - சுற்றிலும் வட்டமாக நடனமாடுவர். அரசர் நடுவில் அமர்ந்திருப்பார். அந்த இளைஞன் அந்த அரிய வகை எண்ணெய் நிரம்பிய கோப்பையை கையில் வைத்துக் கொண்டு சுற்றி வர வேண்டும். ஒரு சிறிதளவு எண்ணெய் சிந்தினாலும் போச்சு, நீ தேர்வடையவில்லை. என்று கூறப்பட்டிருந்தது.
      அவ்வளவு அழகான மாதர்கள் நடனமாடும்போது அக்கம் பக்கம் திரும்பி என்ன நடக்கிறதென்று பார்க்கும் ஆசை யாருக்குத்தான் வராது தூண்டுதல் இருக்கத்தான் செய்யும். ஆனால் அந்த கோப்பையிலிருந்து ஒரு சொட்டு எண்ணெய்..... ஒரே ஒரு கணம் கவனமில்லாமை...... பெண்களை அவன் சுற்றி வந்தான். அவர்களை அவன் கடந்து வந்தான். அவன் சுற்றி வர வர, அவனுள் சாட்சிபாவம் மெதுமெதுவே படிந்தது. அவன் நடனத்தை மறந்தான், இக்கணம், எண்ணெய், கவனம் மட்டுமே இருந்தது.
      கவனித்தல் ஒரு சிறிய விஷயம்.ஆனால் அதில் ஏதும் ஆணவத்தை பூர்த்தி செய்யக் கூடியதில்லை. தியானமும் அப்படித்தான்.
      பல்வேறு பெயர்கள் – கவனித்தல், சாட்சி, தியானம், விழிப்போடு இருத்தல் – ஒரே விஷயத்துக்கு பலப் பெயர்கள். இவை யாவும் நீ ஏதும் செய்யாத போதுதான் நிகழும். இப்போது இதுதான் கேள்வி செய்யாமல் இருப்பது என்பது என்ன
      நீ எப்படி என்று கேள்வி கேட்கும்போது நீ அதை தவற விட்டு விடுகிறாய் ஏனெனில் எப்படி என்றாலே செய்வதுதான்
      நீ - செய்யாமல் இருப்பதை அடைவதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் என்று கேட்கிறாய்.
      செய்யாமல் இருப்பது என்பதை நீ வெறுமனே புரிந்து கொள்ள வேண்டும்.
மடத்தனமான கேள்வியை கேட்காதே. செயல் மூலம் உனது ஆணவம் நிறைவடைவதை புரிந்துகொள்ள முயற்சி செய். நீ எதை செய்தாலும் – பிரார்த்தனை, பட்டினி, கோவிலுக்கு போவது, துறவியாவது – நீ எதை செய்தாலும் அது உன் ஆணவத்திற்கு தீனிதான். உனது ஆணவம் உனக்கும், பிரபஞசத்திற்க்கும், உனக்கும், உண்மைக்கும் இடையே தடை.
      எதையும் செய்யாதே.
      நீ இந்த மடத்தனம் எதையும் செய்யாமல் ஏன் வாழக்கூடாது
      பசிக்கும்போது சாப்பிடு.
      தாகம் எடுக்கும்போது தண்ணீர் குடி
      தூக்கம் வரும்போது தூங்கு
      விழிப்பு வரும்போது எழுந்து கொள்.
      மற்ற எல்லாவற்றையும் மறந்துவிடு.
      தேவையான சிறிய விஷயங்களை செய்.
      சாதாரண வாழ்க்கையை வாழ்.
      நீ கண்டுபிடிப்பாய். அது தான் தியானம், உன்னை புத்தனாக்கும், இயேசுவக்கும், கிருஷ்ணனாக்கும். வாழ்க வளமுடன்!

Friday, November 11, 2011

மரணத்தின் கதை ஆனந்தம்


      இது கண்டிப்பாக எப்பேர்பட்டவனுக்கும், எப்படியாகிலும் மரணம் நிகழ்ந்தே தீரும் என்பதற்க்கான  ஒரு மிகவும் பிரசித்தி பெற்ற சூஃபி கதை.  ஒரு அரசன் தன் கனவில் ஒரு கறுப்பு உருவம் ஒன்றைக் கண்டார். அது கனவு என்ற போதிலும் அவர் அரண்டு விட்டார். அவர்,“நீ யார்? எதற்காக என் கனவில் வந்தாய்?” என்று கேட்டார்.
      அதற்கு அந்த உருவம், “நான் தான் உன் மரணம். நாளை சூரிய அஸ்தமனத்தில் நாம் சந்திப்போம். உனக்கு மிகவும் பொறுப்புக்கள் இருப்பதால் நான் உன்னிடம் இதை தெரிவிக்கலாம் என்று வந்தேன். சாதாரணமாக நான் யாரிடமும் முன்கூட்டியே தெரிவிக்க போவதில்லை. ஆனால் நீ ஒரு அரசன், மிக முக்கியமானவன், மிக மிக அரிதானவன். என்னால் உன்னை சரியான இடத்தில் சந்திக்க முடியாமல் போய்விடுமோ என்று பயப்படுகிறேன். நீ வேறு எங்காவது சந்திப்பில் சிக்கிக் கொண்டு விட்டால் நான் என்ன செய்வது நீ என்னை சரியான இடத்தில் சரியான நேரத்தில் சந்திக்க வேண்டும் நினைவில் கொள்.” என்று சொல்லியது.
      அரசர், “எது சரியான இடம்?” என்று கேட்பதற்கு முன் பயத்தினால் அவரது தூக்கம் கலைந்துவிட்டது. நிழல் உருவம் மறைந்துவிட்டது. நேரம் தெரிந்துவிட்டது, சரியான காலம் – நாளை சூரிய அஸ்தமனம் – ஆனால் இடம் எது நான் உன்னை சந்திக்க வேண்டிய இடம் எங்கிருக்கிறது என்று கேட்பதற்க்காக அவர் பலமுறை கண்களை மூடி அந்த நிழல் உருவத்தை பார்க்க முயற்சித்தார். இறப்பை சந்திக்கவேண்டும் என்று அவர் விரும்பினார் என்பதல்ல. அந்த இடம் எது என்று தெரிந்தால் அதை தவிர்த்து விடலாம். ஆனால் இந்த முழு உலகத்தில் அந்த இடம் எது
      ஆனால் உன்னால் கனவை தொடர முடியாது  -அது மிகவும் கடினம். ஒரு முறை கனவு கலைந்துவிட்டால் எவ்வளவு முயற்சி செய்து கண்களை மூடி கனவை தொடர முயன்றாலும் அது வராது.
      அரசர் மிகவும் பயந்து போய் தனது அரசவை ஜோதிடர்கள், குறி சொல்பவர்கள், அமைச்சர்கள், குருமார்கள், பூசாரிகள், ரேகைசாஸ்திரம் சொல்பவர்கள் என யாவரையும் அழைத்து,“அந்த சரியான இடம் எது என்று எனக்கு கண்டுபிடித்து சொல்லுங்கள். அப்போதுதான் நான் அங்கு செல்லாமல் அதை தவிர்க்க முடியும்” என கூறினார்.
      உடனே அவர்கள் அனைவரும் தங்களது பழமையான நூல்களில் பதில் தேட ஆரம்பித்தனர். காலை வந்து சூரியன் எழுந்தது. காலை முழுமையாக விடிந்தவுடன் அரசர் மிகவும் பயந்து போனார். ஏனெனில் பொழுது விடிந்தால் முடியுமே! முடிவின் ஆரம்பம் தானே விடியல். சூரியன் விடிந்தால் அஸ்தமனம் வெகு தொலைவில் இல்லையே.
      சூரியன் ஏற்கனவே அஸ்தமனத்தை நோக்கி செல்ல துவங்கி விட்டான். இன்னும் இவர்கள் எந்த முடிவுக்கும் வரவில்லை. அதற்கு பதிலாக அவர்கள் தங்களுக்குள் சண்டையிட ஆரம்பித்துவிட்டனர். அரசர்,“உங்களுடைய நூல்களைப் பற்றி எனக்கு எந்த அக்கறையும் இல்லை. அது எந்த இடம் என்று மட்டும் சொல்லுங்கள், போதும். அப்போதுதான் அங்கு நான் போகாமல் இருக்கமுடியும் ” என்றார்.
      அவர்கள், “ இருங்கள். இது ஒரு எளிமையான கேள்வி அல்ல. நாங்கள் அதற்கான வழிமுறைகளை கண்டு, பின் ஒரு முடிவுக்கு வர வேண்டும். ஜோதிடர் ஒன்றை சொல்கிறார், பூசாரி வேறு ஒன்றை சொல்கிறார். நாங்கள் உங்களுக்கு பதினைந்து பதில்கள் கொடுத்தால் அதனால் என்ன பயன் ? ஆகையால் நாங்கள் ஒரு முடிவுக்கு வந்த பின் சொல்கிறோம்” என்றனர்,
      அரசரின் வயதான வேலையாள் ஒருவன் அருகில் நின்று கொண்டிருந்தான். அவன் அரசரது காதில் மெதுவாக, “ நான் கிழவன். நான் இந்த பெரிய மனிதர்களின் வாக்குவாதத்தில் தலையிடகூடாது. நான் ஒரு வேலையாள். ஆனால் வயதானவன், எனக்கு உன் தந்தையின் வயதிருக்கும். உங்களது சிறிய வயதிலிருந்து நான் உங்களை வளர்த்திருக்கிறேன். நான் சொல்வதை கேளுங்கள். இவர்கள் ஒருபோதும் ஒரு முடிவுக்கு வர மாட்டார்கள்.
      இவர்கள் தங்களுக்குள் வருடக்கணக்கில் சண்டையிடுவார்களே தவிர ஒரு போதும் ஒரு முடிவுக்கு வர மாட்டார்கள். இரண்டு தத்துவவாதிகளோ, இரண்டு ஜோதிடர்களோ, இரண்டு குறி சொல்பவர்களோ ஒரு போதும் ஒத்துப் போக மாட்டார்கள். ஒத்துப் போகாமைதான் அவர்களது வியாபாரம், அவர்கள் அப்படி ஒத்துப் போகாமல் இருப்பதில்தான் வாழ்கிறார்கள். அதனால் காத்திருக்காதீர்கள். காலம் மிகவும் குறைவாக உள்ளது. நீங்கள் என்னைக் கேட்டால் உங்களிடம் உள்ள மிகச் சிறந்த குதிரை ஒன்றை எடுத்துக் கொண்டு – உங்களிடம் அப்படிபட்ட சிறப்பான குதிரைகள் உள்ளன. – இந்த இடத்திலிருந்து ஓடிப் போய்விடுங்கள். ஒரு விஷயம் நிச்சயம். நீங்கள் இந்த இடத்தில், இந்த அரண்மனையில், இந்த நகரத்தில், உங்களது ராஜ்ஜியத்தில் இருக்கக்கூடாது. எங்காவது தப்பிச் சென்று விடுங்கள்” என்று கூறினான்.
      அரசருக்கு இது சரியென்று பட்டது. அரசர், “ நீ சொல்வது சரிதான். ஏனெனில் இவர்கள் இதை சூரிய அஸ்தமனத்திற்க்குள் முடிக்க மாட்டார்கள் போலிருக்கிறது.” என்றவாறே அவர் தன்னுடைய குதிரைகளில் சிறப்பான ஒன்றை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடினார். மாலையாவதற்குள் அவர் தனது ராஜ்ஜியத்தின் எல்லையை கடந்து வேறொரு ராஜ்ஜியத்திற்க்குள் நுழைந்து விட்டார். அவர் தான் தப்பியதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். இப்போது இவர் எங்கிருக்கிறார் என்று இறப்பினால் கண்டுபிடிப்பது சாத்தியமில்லை.
      இரவு ஓய்வெடுப்பதற்காக அவர் ஒரு சோலையினுள் நுழைந்தார். அவர் தனது குதிரைக்கு மிகவும் நன்றி செலுத்தினார். ஏனெனில் இந்த குதிரை உண்மையிலேயே ஒரு அற்புதமான விஷயத்தை செய்து முடித்திருக்கிறது. நாள் முழுவதும் அது மிகவும் வேகமாக ஓடி வந்திருக்கிறது. அது அப்படி ஓடி அரசர் கூட இது வரை பார்த்ததேயில்லை. அது தண்ணீர் குடிக்கக் கூட ஓய்வெடுக்கவில்லை. அது ஒரு வினாடி கூட ஓய்வெடுக்க நிற்கவும் இல்லை. அது இந்த அவசரத்தை புரிந்து கொண்டதைப் போல நடந்து கொண்டது.
      அரசர் அதற்கு நன்றி கூறினார். அவர் அதனிடம், “ நீ என்னை காப்பாற்றி விட்டாய். நான் உனக்கு நன்றி கூறுகிறேன், எனக்கு உன் மேல் அன்பு பெருகுகிறது, நான் உனக்கு தகுந்த சன்மானம் அளிப்பேன். நாளை நாம் நமது ராஜ்ஜியத்திற்க்குள் சென்றவுடன் எனக்கு அளிக்கப்படும் அதே அளவு மரியாதையை நீயும் பெறுவாய் ” என்றார்.
      அந்த நேரத்தில் சூரிய அஸ்தமனம் ஆனது, அப்போது ஒரு கரம்....... அரசர் தனது தோள் மீது ஒரு கரம் படிவதை உணர்ந்தார். அவர் திரும்பி பார்த்தார். அவர் கனவில் பார்த்த அதே கறுப்பு நிழல் உருவம் அங்கே இருந்தது.
      அந்த நிழல் உருவம் சிரித்தபடி, “நீ அந்த குதிரைக்கு நன்றி சொல்லக் கூடாது. நான் தான் அந்த குதிரைக்கு நன்றி சொல்ல வேண்டும். இதுதான் நான் காத்துக் கொண்டிருக்கும் இடம். உன்னுடைய குதிரையால் இங்கு வர முடியுமோ வர முடியாதோ என்று நான் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் அது வந்து சேர்ந்து விட்டது. இந்த உலகிலேயே மிக அற்புதமான குதிரை உன்னுடையது. நீ சரியான நேரத்திற்கு சரியான இடத்திற்கு வந்து சேர்ந்து விட்டாய்.” என்றது.
      நீ என்ன செய்து கொண்டிருந்தாலும் இறப்பை சந்திக்க சரியான இடத்திற்கு சரியான நேரத்திற்கு வந்தடைந்து விடுவாய்.

Sunday, October 30, 2011

சரியான தீர்வு யாரால்? ஆனந்தம்


      அரசியல்வாதிகளில் பலர் ஆன்மீகவாதிகளிடம் ஆலோசனை கேட்டு நடக்கிறார்களே, ஆன்மீகவாதிகளால் சமூகப்பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா?
      இந்த வாதிகளில் பெரும்பாலானோர் உண்மையில் வியாதிகள்! அவர்களால் பிரச்சனையை உருவாக்க முடியுமே தவிர, தீர்வு சொல்ல முடியாது. அரசியைல் பிரச்சனைகள், ச்மூகப்பிரச்சனைகள் மட்டுமல்ல ஆன்மீகப் பிரச்சனைகளைக் கூட அவர்களால் தீர்த்து வைக்க முடியாது.
      தங்கள் குறுகிய கண்ணோட்டத்தின் அடிப்படையில் கருத்துக்களைக் கோர்த்து, நல்ல கோட்பாடுகளின் அடிபடையில் நடப்பதாக நினைத்து அவர்கள் கொடுத்துவரும் ஆலோசனைகள் பிரச்சனைகளை தீவிரப் படுத்தியிருக்கின்றனவே தவிர தீர்த்துவைக்கவில்லை.
      சில பிரச்சனைகள் தீர்வு பெறாமலேயே தலைமுறை தலைமுறையாக தொடர்கின்றனவே ஏன்? அவற்றை தெளிவான கண்ணோட்டத்துடன் அனுகும் பக்குவம், அவற்றைக் கையாள்பவரிடம் இல்லை. அதுதான் விஷயம். அந்த பிரச்சனைகள் பூதகரமாக வளர்ந்திருப்பதற்க்கு அதுதான் காரணம்.
      "முன்பு அரசவைகளில் மன்னர்களுக்கு அறிவுரை வழங்கிய துறவிகளும் இந்த வகையை சார்ந்தவர்கள் தானோ?"
      இல்லை, இல்லை; தன்னை ஆன்மீகவாதி என அறிவித்துக்கொண்டு மரியாதை எதிர்பார்ப்பவர்கள் வேறு; ஆன்மீகத்திலேயே ஈடுபட்டிருப்பவர்கள் வேறு!
      ஆன்மீகப் பாதையில் தன்னை உணர்ந்து செல்பவர்களின் பார்வை மற்றவர்களைக் காட்டிலும் மிகத்தெளிவாக இருக்கும். வாழ்க்கை பற்றியும், மனித உறவுகளைப் பற்றியும் அவர்களுடைய கணிப்பு இன்னும் ஆழமாக, அனுபவப்பூர்வமாக இருக்கும்(ஏனென்றால் அவர்களுக்கென்று எந்த தனிப்பட்ட எதிர்பார்ப்பும் இருக்காது). எதிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, அவரால் பிரச்சனைகளை எல்லாக் கோணங்களில் இருந்தும் பாரபட்சமின்றி மிகத்தெளிவாக பார்க்க முடியும். சரியான தீர்வும் சொல்ல முடியும்.
      அதனால் தான் அரசவைகளில் முற்றும் துறந்த ஞானிகளின் ஆலோசனைகளுக்கு மதிப்பு இருந்தது. ஆடம்பர வாழ்வை எதிர்பார்த்து அவர்கள் அரண்மனைகளில் குடியேற‌வில்லை. அரிய ஞானம் கொண்டு அலோசனைகள் வழங்கவே மன்னனுடன் அவர்கள் வசித்தார்கள்.
      ஜனக மன்னன் தன்னை உணர்ந்து ஞானம் பெற்ற போது, தன் குருவுடன் ஆசிரமக்குடிலுக்கு போகவே பிரியப்பட்டான். ஆனால் அவன் குரு அஷ்டவக்கிரர் அவனைத் தடுத்தார்.
      "உன் சுகங்களை விட்டுகொடுப்பது பற்றிய பிரச்சனை அல்ல இது. ஒரு ஞானவானின் ஆட்சி எப்படி இருக்கும் என்று மக்கள் அறிந்து, அனுபவித்து மகிழ வேண்டும். எனவே, நீ அரியணையிலேயே இரு!" என்று அவனைத்திருப்பி அரண்மனைக்கே அனுப்பினார்.
      ஞானிகளின் தீர்கமான அணுகுமுறை மன்னனுக்கும் மக்களுக்கும் பலவிதங்களில் உபயோகமாக இருக்கும்.
      மனிதப் பிறவியை பற்றிய பல அம்சங்களைத் தெரிந்து வைதிருப்பர் ஞானிகள். மனித உடல் எப்படி இயங்குகிறது, மனம் எப்படிச் செயல்படுகிறது. அவனுடைய சக்தியை எப்படி மேம்படுத்துவது என்று ஞானிகள் அறிவர். அவர்களுடைய சேவையை சமூகம் பயன் படுத்திக்கொள்ள முன்வந்தால், அது மிகச் சிறந்த பலன்களையே கொடுக்கும்.
      ஆனால் உண்மையான ஞானிகள் சமூகம் பற்றிய விசயங்களுக்கு வருவதே அபூர்வம். யாரோ ஓரிருவர் தான் அத்தி பூத்தார் போல் சமூகத்திற்கே வருவர். மிகுந்து ஞானிகள் தனித்தே இருப்பர். அவ்வாறு யாராவது நிஜமாக வந்து தீர்வு கொடுத்தால் அந்தத் தலைமுறை மிகுந்த பாக்கியம் செய்த தலைமுறையாகும். அதனால் தான் அந்தக் காலத்து மன்னர்கள் துறவிகளைத் தேடிப்பிடித்து தீர்வு கேட்க அழைத்து வருவர். அல்லது அவர்களது ஆசிரமம் இருக்கும் இடத்திற்க்கு சென்று தீர்வு கேட்பர்

      "ஒழுக்கம் உள்ளவர்களாலும், நல்லவர்களாலும் கூட பாரபட்சமின்றி தீர்வு தரமுடியுமே? இதற்க்கு ஆன்மீக ஞானம் அவசியமா?
      பிரச்சனை என்பதற்க்கு ஒரு தீய பகுதி இருக்கும். மிகந‌ல்லவர்களால் நல்லதைப் பார்க்க முடியுமே தவிர, தீயதை உண்ர்ந்து கொள்ள முடியாது.
      ஆஸ்திரேலியாவில் ஒரு நாடோடிக் கதை உண்டு.
      தன்னை ஆன்மீகவாதி என்று சொல்லிக்கொண்ட ஒருவன் தன் மூன்று சகோதரிகளுடன் ஒரு பயணம் மேற்க்கொண்டான்.
      வழியில், அந்தப் பகுதியின் இளவரசன் எதிர்ப்பட்டான், "இந்த மூன்று அழகான பெண்களில் ஒருத்தியை என் மனைவியாக்கிக் கொள்கிறேன் சம்மதமா?" என்று கேட்டான் இளவரசன்.
      மூவரில் ஒருத்திக்கு மட்டும் பெரிய இடத்தில் திருமணம் செய்து கொடுத்தால் மற்றவர்கள் இருவர் வேதனைப் படுவார்கள் என நினைத்துக் கொண்டு, "மூவரையும் ஒரே தகுதி கொண்டவர்களுக்கு தான் திருமணம் செய்து கொடுப்பதாய் இருக்கின்றேன்" என மறுத்துவிட்டான் ஆன்மீகவாதி.
      அப்படி எல்லா விததிலும் ஒரே தகுதி கொண்டா மூவரைத் தேடித் தேடி பல வருடங்களை வீண‌டித்தான். கடைசி வரை அந்த பெண்கள் கன்னிகளாகவே வாழ வேண்டியதாகி விட்டது.
      "எங்களில் ஒருத்திக்காகவாவது கிடைக்க வேண்டிய நல்ல வாழ்க்கையை உன் எண்னத்தினால் வீணாகப்போயிற்றே" என புலம்பி கண் கலங்கினர் சகோதரிகள்.
      மற்ற இரு சகோதரிகள் வேதனை கொள்வார்கள் என அவன் நினைத்து தீர்மானித்து அவன் எடுத்த 'நல்ல' முடிவால், யாருக்குமே சந்தோசம் கிடைக்காமல் போனது. ஒரு சரியான முடிவெடுக்க அவர்கள் நல்லவர்களாக மட்டுமிருந்தால் போதாது என்பதைச் சுட்டிக் காட்டும் கதை இது.
      அதே போல் தான் ஒழுக்கம் உள்ளவர்களும்! தங்கள் விதி முறைகளில் சிக்கிக் கொண்டு விட்டால், பிரச்சனைகளின் முழுப் பரிமாணத்தை அவர்களால் கவனிக்க முடியாது. அதற்க்கொரு தீர்வும் சொல்லமுடியாது. இரு வெவ்வேறு மனிதர்களின் ஒழுக்க நிலைகளின் பெரும்பாலும் சண்டைகளில் தான் கொண்டுவந்து விட்டிருக்கின்றன. நல்லவர்களிடமும், ஒழுக்கம் பற்றிய கவனம் கொண்டவர்களிடம் பாரபட்ச மற்ற தீர்வு என்பது சாத்தியமே இல்லை.
      ஞானிகளிடம் தான் அந்த அமுதம் கிடைக்கும்.

Friday, June 10, 2011

இல்லறம்-துறவறம் ஆனந்தம்


      அரசன் ஒருவனுக்கு ஓர் ஐயம் எழுந்தது – ‘உலகைத் துறந்தவன் உயர்ந்தவனா? உலகியல் கடமைகளை ஒழுங்காகச் செய்யும் இல்லறத்தான் உயர்ந்தவனா?’ என்று. இதற்கு விடை தரும்படி துறவி ஒருவரிடம் அரசன் வேண்டினான். ‘அவரவர் நிலையில் இருவரும் உயர்ந்தவரே’ என்றார் துறவி. ‘இதை நிருபிக்க வேண்டும்’ என்றான் வேந்தன். ‘நிச்சயமாக! என்னோடு வாருங்கள்’ என்றார் துறவி.
      வேந்தனும் துறவியும் வேறொரு நாட்டில் நுழைந்தபோது, அங்கே சுயம்வரம் நடப்பதாக அறிந்தனர். சுயம்வர மண்டபத்தை இருவரும் அடைந்தனர். இளவரசி கையில் மணமாலையுடன் நின்றபடி, மண்டபத்தில் வீற்றிருந்த மன்னர்களைப் பார்த்தாள். ஒருவரிடமும் அவள் மனம் மயங்கவில்லை. வேடிக்கை பார்த்த இளம் துறவி ஒருவரின் பேரழகு அவளை ஈர்த்தது. ஓடிச்சென்று அவன் கழுத்தில் மாலையிட்டாள்.
      இளந்துறவியோ மாலையை வீசியெறிந்து விட்டு விரைவாக வெளியேறினான். மனம் நிறைந்த அவனையே மணாளனாக அடைவது என்ற முடிவுடன் இளவரசியும் பின் தொடர்ந்தாள். எந்த நிலையிலும் தன்னால் அவளை ஏற்க இயலாது என்று மறுத்துவிட்டு, அந்த இளந்துறவி நடந்தார். அழுத கண்ணீருடன் இளவரசி இதயம் வருந்த, அங்கேயே நின்றாள். அரசனும் துறவியும் அந்தக் காட்சியைக் கண்டனர். அவர்களது வழிப்பயணம் தொடர்ந்தது.
      அடர்ந்த காட்டில் நடந்த இருவரும் ஒரு மரத்தின் அடியில் வந்து நின்றனர். இருவருக்கும் கடுமையாகப் பசித்தது. இரவுக் குளிரில் உடல் நடுங்கியது. மரக்கிளையில் ஒரு குருவி தன் துணையுடனும், மூன்று குஞ்சுகளுடனும் கூடு கட்டி வாழ்ந்து வந்தது.
      வேந்தனும் துறவியும் கீழே வாடி நிற்பதை பார்த்த குருவி, பறந்து சென்று சுள்ளிகளைச் சுமந்து வந்து தீ வளர்த்து, முதலில் அவர்களது குளிரைப் போக்கியது. விருந்தினரின் பசியாற்ற விரும்பிய குருவி, ‘என் உடலை அவர்களுக்கு உணவாக்குகிறேன்’ என்று பெண் குருவியிடம் சொல்லிவிட்டு நெருப்பில் விழுந்தது. ஒரு சிறிய குருவியால் எப்படி இருவர் பசி தீரும் என்று சிந்தித்த பெண் குருவி, தன் கணவன் வழியைப் பின்பற்றித் தானும் தீயில் விழுந்தது. ‘நம் பெற்றோருடன், நாமும் வந்த விருந்தினர்க்கு உணவாவோம்’ என்று மூன்று குஞ்சுகளும் நெருப்பில் விழுந்து கரிந்தன.
      அரசனும் துறவியும் அந்த அன்பிற் சிறந்த பறவைகளின் பண்பைக் கண்டு வியந்தனர். ‘மன்னா, அவரவர் நிலையில் அவரவர்  உயர்ந்து நிற்க முடியும் என்பதை இப்போது உணர்ந்திருப்பாய். அழகான பெண்ணையும்,  பேரரசையும் துரும்பென உதறித் தள்ளிய அந்த இளந்துறவி எப்படி உயர்ந்தவனோ, அப்படித்தான் பிறருக்காகத் தம்மைத் தியாகம் செய்த இந்தப் பறவைகளின் இல்லறமும் உயர்ந்தது. ஏற்றுக் கொண்ட நெறியில் இருந்து எள்ளளவும் பிறழாமல் வாழ்வதுதான் முக்கியம்’ என்றார் துறவி

Wednesday, February 2, 2011

ஆணவம் என்பதே இல்லை ஆனந்தம்

        நான் என்பது என்ன நீ இதைப் பற்றி அமைதியாக சிந்தித்துப் பார்த்திருக்கிறாயா அது உன்னுடைய காலா, கையா, அல்லது உன்னுடைய இதயமா, தலையா அல்லது இது வெறும் அகங்காரமா?
        எது உன்னுடைய "நான்"? எங்கே உன்னுடைய  "நான்"? உன்னுடைய ஆணவமா?
        அது அங்கிருத்தலின் உணர்வு இருக்கிறது, ஆனாலும் அதை குறிப்பாக எங்கேயும் காண முடியவில்லை. மௌனமாக ஒரு நிமிடம் அமர்ந்து அந்த "நானை" தேடிப் பார். நீ ஆச்சரியமடைவாய். எவ்வளவு ஆழமாக தேடினாலும் உன்னை எங்கும் கண்டு பிடிக்க முடியாது. ஆனால் ஆழமாக தேடும்போது "நான்" என்று ஒன்று இல்லை என்பதை உணர்வாய். அது போல ஆணவம் என்பதும் கிடையாது. சுயத்தின் உண்மை அங்கிருக்கும்போது "நான்" அங்கிருக்காது.
        எல்லோராலும் நன்கு மதிக்கப்பட்ட நான்சென் என்ற ஞானியை அப்போதிருந்த மாமன்னன் மாலிண்ட் தனது அரசவைக்கு அழைத்தான்.
        தூதுவன் நான்சென்னிடம் சென்று, “குரு நான்சென் அவர்களே, அரசர் உங்களை காண விரும்புகிறார். நான் உங்களை அழைப்பதற்காக வந்திருக்கிறேன்.” என்றான்.
நான்சென், “நீ விரும்பினால் நான் வருகிறேன், ஆனால் நான்சென் என்று யாரும் இங்கு இல்லை. அது வெறும் ஒரு பெயர்தான், ஒரு தற்காலிக குறியீடு.” என்றார்.
        தூதுவன் அரசரிடம் சென்று நான்சென் ஒரு வித்தியாசமான மனிதர், அவர் வருவதாக ஒத்துக் கொண்டார், ஆனால் நான்சென் என்று யாரும் இல்லை என்று அவர் கூறியதைக் கூறினான். மாமன்னன் ஆச்சரியமடைந்தான்.
        நான்சென் வருவதாக கூறிய நேரத்தில் தேரில் அழைத்து வரப் பட்டார். மன்னன் வாசலில் நின்று அவரை, “குரு நான்சென் அவர்களே, வாருங்கள், வாருங்கள்!” என வரவேற்றான்.
        இதைக் கேட்டவுடன், துறவி சிரித்தார். “நான்சென்னாக நான் உன்னுடைய வரவேற்பை ஏற்றுக் கொள்கிறேன், ஆனால் நினைவில் கொள், நான்சென் என்ற பெயருடைய யாரும் இங்கு இல்லை.” என்றார்.
        அரசன், “நீங்கள் வித்தியாசமாக பேசுகிறீர்கள், நீங்கள், நீங்கள் இல்லை என்றால் யார் என்னுடைய அழைப்பை ஏற்றுக் கொண்டது? யார் என்னுடைய வரவேற்புக்கு பதில் சொல்வது?” என்று கேட்டான்.
        நான்சென் பின்னே திரும்பி பார்த்து கேட்டார், “நான் வந்த ரதம் அதுதானே?”
        “ஆம், அதுவேதான். இதுதான்”
        “தயவுசெய்து குதிரைகளை கழற்றி விடுங்கள்” என்றார்.
        அது செய்யப்பட்டது.
        குதிரைகளை காட்டி, “அது ரதமா?” என்று கேட்டார் நான்சென்.
        அரசர், “குதிரைகளை எப்படி ரதம் என்று அழைக்க முடியும்?” என்று கேட்டார்.
        துறவி கூறியதின் பேரில் குதிரைகளை கட்டும் நுகத்தடி கழற்றப்பட்டது.
        “அந்த நுகத்தடிதான் ரதமா?” என்று துறவி கேட்டார்.
        “அது எப்படி?, அவை நுகத்தடிகள், அது ரதமல்ல.”
        துறவி கூற கூற, ஒவ்வொரு பாகமாக கழற்றப்பட்டது, ஒவ்வொரு பாகமாக கழற்றப்பட, பட அரசரின் பதில் ‘ இது ரதமல்ல ‘ என்பதாக இருந்தது.
        கடைசியில் ஒன்றும் மிச்சமில்லை.
        துறவி, “எங்கே உனது ரதம்? ஒவ்வொரு பாகம் எடுத்துச் செல்லப் பட்டபோதும் இது ரதமல்ல என்று நீயே கூறினாய். ஆகவே இப்போது சொல், உனது ரதம் எங்கே?” என்று கேட்டார்.
        அரசரிடம் ஒரு நிலைமாற்றம் நிகழ்ந்தது.
        துறவி தொடர்ந்தார், “நான் சொல்வதை புரிந்து கொண்டாயா? ரதம் என்பது ஒரு கூட்டுமுயற்சி. சில குறிப்பிட்ட விஷயங்கள் சேர்ந்த சேகரிப்பு. ரதம் என்பது தனித்து இருப்பதல்ல. இப்போது உள்ளே பார். எங்கே உனது ஆணவம்?, எங்கே
        உனது ‘ நான் ‘?.
        நீ எங்கேயும் ‘ நானை ‘ கண்டு பிடிக்க முடியாது. அது பல சக்திகள் ஒன்று சேர்ந்த ஒருமித்த ஒரு வெளிப்பாடு. அவ்வளவுதான். ஒவ்வொரு உறுப்பையும் எண்ணிப்பார், உன்னுடைய ஒவ்வொரு பார்வையை பற்றியும் நினைத்துப்பார், பின் ஒவ்வொன்றாக வெளியேற்று, இறுதியில் ஒன்றுமற்றது தான் இருக்கும்.  
.........................................................ஓஷோ.........................................

Wednesday, January 26, 2011

வாழ்வின் உண்மை ஆனந்தம்

ஒரு அரசர் தனது அரசவையிலுள்ள அறிஞர்களிடம், நான் எனக்காக ஒரு அழகான மோதிரம் செய்யப் போகிறேன். அதில் மிகச்சிறந்த வைரங்கள் பதிக்கப் போகிறேன்.அந்த மோதிரத்திற்க்குள் மிக மோசமான சமயத்தில் படித்தால் எனக்கு உதவக்கூடிய ஒரு செய்தியை வைத்திருக்க விரும்புகிறேன். அது மிகவும் சிறியதாக இருக்கவேண்டும். அப்போதுதான் அதை மோதிரத்தில் பதிக்கும் வைரத்தின் கீழே மறைத்து வைக்கமுடியும். அப்படி ஒரு செய்தி வேண்டும். என்று கேட்டான்.
        அவர்கள் யாவரும் அறிஞர்கள், மிகச்சிறந்த பண்டிதர்கள். அவர்களால் மிகச்சிறந்த உபதேசங்களை எழுத முடியும். ஆனால் மிக மோசமான தருணத்தில் உதவக்கூடிய இரண்டு அல்லது மூன்று வார்த்தைகளுக்குள் அடங்கும் ஒரு செய்தியை எழுதுவது என்றால்...... அவர்கள் சிந்தித்தனர், தங்களது புத்தகத்தில் தேடிப்பார்த்தனர், ஆனால் அவர்களால் அப்படி ஒன்றை கண்டு பிடிக்கவே முடிய வில்லை. அரசரிடம் ஒரு வயதான வேலையாள் இருந்தான். அவனுக்கு அவரது தந்தையின் வயது. அவன் அரசரது தந்தையின் வேலையாள். அரசி சிறுவயதிலேயே மரணமடைந்து விட்டதால் இந்த வேலையாள்தான் அரசரை பாதுகாப்பாக வளர்த்தான். அதனால் அரசர் இவனை ஒரு வேலையாளாக கருதுவதில்லை. அவனிடம் மிகவும் மதிப்பு வைத்திருந்தான்.
        அந்த வயதானவன், நான் அறிவாளியுமல்ல, பண்டிதனுமல்ல, படித்தவனுமல்ல, ஆனால் எனக்கு அந்த செய்தி என்னவென்று தெரியும் – அப்படி பட்ட செய்தி ஒன்றே ஒன்றுதான் உள்ளது. இவர்களால் அதை உங்களுக்கு கொடுக்கமுடியாது. ஏனெனில் தன்னை உணர்ந்த ஒரு மனிதனால்தான், ஒரு ஞானியால்தான் அது போன்ற ஒரு செய்தியை கொடுக்கமுடியும். என்றான்.
        இவ்வளவு காலம் இந்த அரண்மனையில் இருந்ததால் நான் பல்வேறு தரபட்ட மக்களை சந்தித்திருக்கிறேன். அதில் ஒருமுறை ஒரு ஞானியை சந்தித்திருக்கிறேன். அவர் உனது தந்தையின் விருந்தாளியாக வந்திருந்தார். அவருக்கு சேவை செய்வதற்காக உனது தந்தை என்னை அனுப்பினார். அவர் விடைபெறும்போது, நான் அவருக்கு செய்த பணிவிடைகளுக்கு நன்றியுரைக்கும் விதமாக அவர் இந்த செய்தியை எனக்கு அளித்தார். எனக்கூறி அந்த செய்தியை ஒரு சிறுதாளில் எழுதி அதை சுருட்டி அரசரிடம் கொடுத்து, இதை படிக்க வேண்டாம். மோதிரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். எல்லாமும் முடிந்து விட்டது, வேறு வழியேயில்லை எனும் சமயத்தில் இதை திறந்து பாருங்கள் என்றார்.
        அந்த சமயமும் விரைவிலேயே வந்தது. அந்த நாட்டின்மீது படையெடுப்பு நடந்தது. அரசர் தனது நாட்டை போரில் இழந்தார். அவர் தனது குதிரையில் தப்பித்து ஓடினார். அவரது பின்னால் அவரது எதிரி படை வீரர்கள் குதிரையில் துரத்தி வந்தனர். அவர் ஒரு ஆள், அவர்கள் பலர். அவர் ஒரு பாதை முடிவுக்கு, அதற்கு மேல் பாதையில்லை என்ற இடத்திற்கு, ஒரு மலைமுகடுக்கு வந்து விட்டார். கீழே பெரும் பள்ளத்தாக்கு, அதில் விழுந்தால் முடிந்தது. அவரால் திரும்பியும் போக முடியாது, எதிரிகள் வந்து கொண்டிருந்தனர், குதிரைகளின் குளம்படி சத்தம் கேட்டது. – முன்னேயும் போக முடியாது, அங்கே வழியில்லை.
        திடீரென அவருக்கு மோதிரத்தின் நினைவு வந்தது. அவர் அந்த மோதிரத்தை திறந்து, அந்த பேப்பரை எடுத்தார், அதில் மிகச் சிறந்த பொருளுடைய ஒரு வாசகம் இருந்தது. அது இதுவும் கடந்து போகும் அந்த வாசகத்தை படித்தவுடன் அவருக்குள் மிகப் பெரும் அமைதி வந்தமர்ந்தது. இதுவும் கடந்து போகும், அதுவும் கடந்து போயிற்று.
        எல்லாமும் கடந்து போகும், எதுவும் இந்த உலகில் தங்காது. அரசரை பின்தொடர்ந்து வந்த எதிரிகள் வழி மாறி போய் விட்டனர், வேறு வழியில் அவரை தேடி சென்று விட்டனர். குதிரைகளின் குளம்பொலி படிப்படியாக குறைந்து தேய்ந்து போய் விட்டது. அரசருக்கு அந்த ஞானியிடமும், அந்த வேலையாளிடமும் அளப்பரிய நன்றியுணர்வு தோன்றியது. இந்த வார்த்தைகள் அபூர்வ சக்தி படைத்தவை. அவர் அந்த தாளை மடித்து, திரும்பவும் அந்த மோதிரத்தினுள் வைத்தார்.
        பின் தனது படைகளை திரட்டிக் கொண்டு வந்து, திரும்பவும் போராடி தனது அரசை வென்றார். அவர் தனது தலைநகரத்தில் வெற்றியோடு நுழையும்போது, ஆடல்பாடலோடு கோலாகலமாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அரசர் தன்னைப் பற்றி பெருமையாக உணர்ந்தார். அந்த வேலையாள் அவரது ரதத்தின் கூட நடந்து வந்து கொண்டிருந்தார். அவர், இதுவும் சரியான தருணம். அந்த வாசகத்தை திரும்பவும் பாருங்கள். என்றார்.
        அரசர், என்ன சொல்கிறீர்கள், இப்போது நான் வெற்றி பெற்று இருக்கிறேன். மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள், நான் தோல்வியுற்ற நிலையில் இல்லையே. வேறு வழியே இல்லை என்ற நிலையில் நான் இப்போது இல்லையே. எனக் கேட்டார்.
        அந்த வயதானவன், பாருங்கள், இதைத்தான் ஞானி என்னிடம் கூறினார். அந்த செய்தி கையறு நிலைக்கானது மட்டுமல்ல, அது சந்தோஷ தருணங்களுக்கானதும்தான். நீங்கள் தோல்வியுற்ற நிலையில் மட்டுமல்ல, வெற்றி பெற்ற நிலையில் கூட அந்த செய்தி உண்மையானது தான். நீ தொலைந்து போன சமயத்தில் மட்டுமல்லாமல் முதல் ஆளாக நீ இருக்கும் நேரத்தில்கூட அது தேவைதான். என்று கூறினார்
        அரசர் தனது மோதிரத்தை திறந்து, இதுவும் கடந்து போகும் என்ற செய்தியை படித்தார். உடனே திடீரென அந்த கூட்டத்தினுள்ளும், மகிழ்ந்து கூத்தாடிக் கொண்டிருக்கும் அந்த நேரத்திலும் அதே அமைதி, அதே மௌனம் கவிழ்ந்தது. அந்த பெருமை, அந்த ஆணவம் அகன்றது............ எல்லாமும் கடந்து போகும்..........
..........................ஓஷோ

Friday, January 7, 2011

முடிவெடுக்காதீர்கள் ஆனந்தம்

        ஒரு கிராமத்தில் வயதான ஏழை ஒருவன் இருந்தான். ஆனால் அரசர்களே பொறாமை கொள்ளுமளவு அழகான வெண் குதிரை ஒன்று அவனிடம் இருந்தது. யாரும் அப்படிப்பட்ட அழகான, வலிமை பொருந்திய, அம்சமான. கம்பீரமான குதிரையை அதற்குமுன் பார்த்திருக்க முடியாது. அரசன் அந்த குதிரையை என்ன விலை கொடுத்தாவது வாங்க தயாராக இருந்தான். ஆனால் அந்த மனிதன், "இந்த குதிரை என்னை பொருத்தவரை வெறும் குதிரையல்ல, என் குடும்பத்தில் ஒருவன். நான் எப்படி மனிதர்களை விற்கமுடியும்? அவன் ஒரு நண்பன். அவன் ஒரு உடமையல்ல, உன்னால் நண்பனை விற்க முடியுமா? அது சாத்தியமில்லை." என்று கூறி விட்டான். அவன் மிகவும் ஏழை, எல்லா வழியிலும் சபலம் வர வாய்ப்பிருந்தது.   ஆனால் அவன் அந்த குதிரையை விற்கவில்லை.
        ஒருநாள் காலை லாயத்தில் குதிரை இல்லை என்பதை அவன் கண்டான். முழு கிராமமும் ஒன்று திரண்டு, "நீ ஒரு முட்டாள் கிழவன். இப்படி நடக்குமென்று – என்றாவது ஒருநாள் யாராவது குதிரையை திருடி விடுவார்கள் என – எங்களுக்கு முன்பே தெரியும். நீயோ மிகவும் ஏழை – இப்படிப் பட்ட அரிதான ஒன்றை உன்னால் எப்படி பாதுகாக்க முடியும்? இதற்கு பதிலாக அதை நீ முன்பே விற்றிருக்கலாம். நீ என்ன விலை கேட்கிறாயோ அந்த விலைக்கு விற்றிருக்கலாம். நினைத்து பார்க்க முடியாத விலை கிடைத்திருக்கும். இப்போது குதிரை போய்விட்டது. உனக்கு இது ஒரு கெட்டநேரம், இது ஒரு சாபம்" என்றனர்.
         அந்த கிழவன், "அதிகம் பேச வேண்டாம் – குதிரை லாயத்தில் இல்லை என்று மட்டும் கூறுங்கள். இதுதான் உண்மை மற்ற அனைத்தும் அனுமானங்களே. இது அதிர்ஷ்டமா இல்லையா என்பது யாருக்கு தெரியும்? எப்படி உங்களால் முடிவு செய்ய முடியும்?" என்றான்.
மக்கள், "எங்களை முட்டாளாக்காதே. நாங்கள் சிறந்த தத்துவவாதிகளல்ல, ஆனால் இதற்குத் தத்துவம் எதுவும் தேவையில்லை. அரிதான ஒன்று காணாமல் போய்விட்டது. அது கெட்டநேரம் என்பது மிக சாதாரண உண்மை." என்றனர்.
         அந்த கிழவன், "லாயம் காலியாக உள்ளது, குதிரை போய்விட்டது என்பது உண்மை என நானும் ஒத்துக்கொள்கிறேன். மற்றபடி எதுவும் எனக்குத் தெரியாது – அது கெட்டநேரமா நல்லநேரமா – ஏனெனில் இது நிகழ்வின் ஒரு பகுதியே. இதை தொடர்ந்து என்ன நடக்குமென்பது யாருக்கு தெரியும்?" என்றான்.
         மக்கள் சிரித்தனர். கிழவனுக்கு புத்தி பிசகிவிட்டதென அவர்கள் நினைத்தனர். அவன் எப்போதும் கொஞ்சம் கிறுக்கனாகவே இருப்பான். அது எல்லோருக்கும் தெரியும். இல்லாவிடில் இந்த குதிரையை நல்ல விலைக்கு விற்று பணக்காரனாகி இருக்கலாம். ஆனால் அவன் விறகுவெட்டியாகவே வாழ்ந்துவந்தான். அவனுக்கும் மிக வயதாகிவிட்டது. இருப்பினும் காட்டுக்கு சென்று மரங்களை வெட்டி கொண்டுவந்து விற்றுக் கொண்டிருந்தான். அவன் சம்பாதிப்பது கைக்கும் வாய்க்குமே போதவில்லை. அவன் வறுமையிலும் வேதனையிலும் வாடிக் கொண்டிருந்தான். இப்போது அவன் ஒரு கிறுக்கன் என்பது மிகவும் ஊர்ஜிதமாகிவிட்டது.
        பதினைந்து நாட்களுக்கு பிறகு, திடீரென ஒரு இரவில் அந்த குதிரை திரும்பி வந்துவிட்டது. இது திருடப்பட வில்லை. அது காட்டுக்கு தப்பி ஓடிவிட்டது. இப்போது தான் மட்டுமின்றி அது தன்னுடன் கூட தன் இனத்தைச் சேர்ந்த ஒரு டஜன் குதிரைகளையும் கூட்டிக் கொண்டு திரும்பி வந்துள்ளது. திரும்பவும் கிராமத்து மக்கள் திரண்டு வந்து,"அந்த கிழவனிடம், பெரியவரே, நீங்கள் சொன்னது சரிதான், நாங்கள் கூறியது தவறாகிவிட்டது. அது கெட்டநேரமல்ல. அது நல்லநேரம்தான் என்பது நிருபணமாகிவிட்டது. நாங்கள் வலியுறுத்தி கூறியதற்காக மன்னித்துக் கொள்ளுங்கள்." என்றனர்.
அந்த கிழவன், "மறுபடியும் நீங்கள் அதிகமாக யோசிக்கிறீர்கள். அந்த குதிரை திரும்ப வந்துவிட்டது என்றும் அதனுடன் இன்னும் பனிரெண்டு குதிரைகள் வந்துள்ளன என்று மட்டும் கூறுங்கள்.- ஆனால் தீர்மானிக்காதீர்கள். இது ஆசீர்வாதமா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது. இது ஒரு நிகழ்வின் ஒரு பகுதியே. முழு கதையும் தெரியாமல் எப்படி உங்களால் முடிவு செய்ய முடிகிறது? ஒரே ஒரு பக்கத்தை படித்துவிட்டு முழு புத்தகத்தையும் எப்படி விமர்சனம் செய்ய முடியும்? ஒரு பக்கத்தில் ஒரே ஒரு வரியை படித்துவிட்டு எப்படி அந்த பக்கத்தை பற்றி பேச முடியும்? ஒரே ஒரு எழுத்தை மட்டும் பார்த்துவிட்டு எப்படி அந்த வரியை பற்றி கூற முடியும்? நமது கையில் அந்த எழுத்து அளவு கூட இல்லை, வாழ்வு மிகப் பெரியது – எழுத்தின் பகுதிதான் இருக்கிறது. நீங்கள் முழு வாழ்வையும் பற்றி முடிவெடுக்கிறீர்கள். இது ஒரு ஆசீர்வாதம் எனக் கூற வேண்டாம், யாருக்கும் தெரியாது. முடிவெடுக்காமல் இருப்பதே எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அதனால் என்னை தொந்தரவு செய்யாதீர்கள்." என்றார்.
        இந்த முறை மக்கள் எதுவும் கூறவில்லை. அந்த பெரியவர் சொல்வது சரியாக இருக்கலாம். அதனால் அவர்கள் மெளனமாக இருந்துவிட்டனர், ஆனால் உள்ளே இவன் கூறுவது தவறு என நினைத்துக் கொண்டனர். பனிரெண்டு குதிரைகள் அந்த குதிரையுடன் வந்திருக்கின்றன. சிறிதளவு பயிற்சி கொடுத்தால் போதும் அவைகளை விற்று ஏகப்பட்ட பணம் சம்பாதிக்கலாம் என நினைத்தனர்.
        அந்த பெரியவருக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். அவன் இளஞன். இவன் அந்த குதிரைகளுக்கு பயிற்சி கொடுக்க ஆரம்பித்தான். ஒரு வாரத்திற்க்குள் ஒரு குதிரை மேலிருந்து விழுந்து அவனது கால் எலும்பு முறிந்துவிட்டது. மக்கள் திரும்பவும் கூடி – மக்கள் எப்போதும் எங்கும் ஒரே மாதிரிதான், உங்களைப் போலவே தான் – தீர்மானித்தனர். அவர்களின் முடிவு மிக எளிதாக வந்துவிடக் கூடியது. அவர்கள், "நீங்கள் கூறியது சரிதான். மறுபடியும் நீங்கள் சொல்வதுதான் சரி என நிருபணமாகியிருக்கிறது. இது ஒரு வரப்பிரசாதமல்ல, இது ஒரு கெட்டகாலம்தான். உனது ஒரே மகன் தனது கால்களை இழந்துவிட்டான். உன்னுடைய வயதான காலத்தில் அவன்தான் உனக்கு ஒரே ஆதரவு. இப்போது நீ மிகவும் கஷ்டப் படப் போகிறாய்." என்றனர்.
        அந்த வயதானவன், "நீங்கள் முடிவெடுப்பதற்க்கு மிகவும் ஆவலாக உள்ளீர்கள். வெகுதூரம் நினைப்பை ஓடவிட வேண்டாம். எனது மகன் தனது கால்களை ஒடித்துக் கொண்டான். என மட்டும் கூறுங்கள். இது ஒரு சாபமா வரமா என யாருக்குத் தெரியும்?– யாருக்கும் தெரியாது. மறுபடியும் இது நிகழ்வின் ஒரு பகுதியே, முழுமையாக கொடுக்கப்படவில்லை. வாழ்க்கை பகுதிகளாகத்தான் நிகழ்கிறது, முடிவு முழுமையை ஒட்டித்தான் எடுக்க முடியும்." என்றான்.
        இது நிகழ்ந்து சில வாரங்களுக்குப் பின் இந்த நாடு பக்கத்து நாட்டுடன் சண்டையிட சென்றது. நகரத்தின் அனைத்து வாலிபர்களும் படைக்கு வலுக்கட்டையமாக அழைத்து செல்லப்பட்டனர். அந்த பெரியவரின் மகன் மட்டும் விட்டுவைக்கப் பட்டான். ஏனெனில் அவன் முடமானவன். மக்கள் எல்லோரும் அழுது அரற்றினர். ஏனெனில் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் இளைஞர்கள் வலுக்கட்டாயமாக கூட்டிச் செல்லப் பட்டனர். அவர்கள் திரும்பி வருவதற்க்கான சாத்தியக் கூறே இல்லை, ஏனெனில் அவர்கள் சண்டையிடப் போகும் நாடு மிகப் பெரியது. இந்த சண்டை தோல்வியுறப் போகும் சண்டைதான். அவர்கள் திரும்பி வரப் போவது இல்லை. அந்த நகரம் முழுவதும் அழுது கொண்டும், அரற்றிக் கொண்டும் விம்மிக் கொண்டும் இருந்தது.  அவர்கள் அந்த வயதானவனிடம் வந்து, "நீங்கள் சொன்னது சரியே பெரியவரே! கடவுளுக்குத்தான் தெரியும்! நீங்கள் கூறியது மிகவும் சரிதான் – இது வரம்தான் என்பது நிருபணமாகிவிட்டது. உனது மகன் முடமாகி இருக்கலாம், ஆயினும் அவன் உன்னுடன் இருப்பான். எங்களது மகன்கள் ஒரேயடியாக போகப் போகிறார்கள். குறைந்தபட்சம் இவன் உயிருடன் உன்னோடு இருப்பான், மெது மெதுவாக நடக்கக் கூட ஆரம்பிக்கலாம், சிறிதளவு நொண்டி நடப்பானாக இருக்கலாம், ஆனாலும் அவன் சரியாகி விடுவான்." என்றனர்.
       அந்த வயதானவன், "உங்களுடன் பேசவே முடியாது. நீங்கள் மேன்மேலும் கற்பனை செய்துகொண்டே போகிறீர்கள். – முடிவெடுத்துக் கொண்டே இருக்கிறீர்கள். யாருக்கும் தெரியாது உங்களது மகன்கள் வலுக்கட்டாயமாக படைக்கு போர்முனைக்கு இழுத்துச் செல்லப் படுகிறார்கள்., என்னுடைய மகன் இழுத்துச் செல்ல பட வில்லை என்பதை மட்டும் கூறுங்கள். இது வரமா சாபமா என்பது யாருக்கும் தெரியாது. யாராலும் தெரிந்து கொள்ளவும் முடியாது. கடவுளே அறிவார்." என்றார்.
        நாம் எதையும் கடவுளே அறிவார் எனக் கூறுவதன் அர்த்தம் முழுமைக்கு மட்டுமே தெரியும் என்பதுதான். முடிவெடுக்காதே, முடிவெடுத்தால், தீர்மானித்தால், ஒருபோதும் உன்னால் முழுமையுடன் ஒருங்கிணைய முடியாது. நிகழ்வின் பகுதிகளால் கவரப்பட்டு விடுவீர்கள். சிறிய விஷயங்களின் மூலம் முடிவெடுக்கவும் தீர்மானிக்கவும் ஆரம்பித்து விடுவீர்கள்.

Thursday, January 6, 2011

மனநிலை ஆனந்தம்

        ஒரு நாட்டின் ராஜா ஒவ்வொரு நாள் இரவும் நகர்வலம் வருவான். அப்போது அவன் தினமும் ஒரு துறவி மரத்தடியில் அசைவின்றி சிலைபோல அமர்ந்திருப்பதை போல பார்ப்பான். அவனுக்கு அமைதியாக அந்த துறவி அமர்ந்திருப்பதை பார்க்க மிகவும் ஆச்சரியமாக இருக்கும்.
        அவனால் தனது ஆர்வத்தை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அதனால் ஒருநாள் தனது குதிரையை நிறுத்தி இறங்கி, "சுவாமி, உங்களது தியானத்தைக் கலைத்ததற்காக என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்." என்றான்.
        அந்த துறவி தனது கண்களை திறந்து, இங்கே எந்த மன்னிப்புக்கும் இடமே இல்லை, நான் தியானம் செய்யவில்லை, இங்கே தியானம்தான் இருக்கிறது – யாரும் அதை தொந்தரவு செய்ய முடியாது. ஆனால் உனது ஆர்வம் எதுவோ அதை பூர்த்தி செய்துகொள்,என்றான்.
        அரசன், "நீங்கள் எனது அரண்மனைக்கு வர வேண்டும். நான் உங்களை கவனித்துக் கொள்வேன். இந்த மரத்தடியில் உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களது தவத்தினாலும், உங்களது பொலிவினாலும், அமைதியினாலும் நான் ஈர்க்கப்பட்டு விட்டேன். அமைதியாக இந்த மரத்தடியில் நீங்கள் அமர்ந்திருப்பதை பார்த்தால் ஒரு புத்தரை பார்ப்பது போல இருக்கிறது. நான்தான் இந்த நாட்டின் அரசன், நான் உங்களை எனது அரண்மனைக்கு அழைக்கிறேன்."  என்றான்.
        இப்படித்தான் காட்டுமிராண்டிதனமான மனம் வேலை செய்கிறது. அரசன் அந்த இளைஞனை தனது அரண்மனைக்கு வருமாறு அழைக்கிறான் – ஆனால் அவனது ஆழ் மனதில் இவர் தனது அழைப்பை ஏற்றுக் கொள்ளக் கூடாதென தோன்றுகிறது. ஏனெனில் அப்போது அவர் அரண்மனையையும் ஆடம்பரத்தையும் விரும்புகிறார் என ஆகி விடுமென பயப்படுகிறான்.
        ஆனால் அந்த துறவியோ எழுந்து நின்று, "போகலாம்" எனக் கூறுகிறார். 
        இப்போது உடனடியாக அந்த சூழ்நிலையே மாறுகிறது. அரசனின் மனம், "நான் இப்போது என்ன செய்வது?  அரசனின் விருந்தாளியாக இருப்பதற்கு, அரண்மனையில் இருக்கும் சுகங்களை அனுபவிப்பதற்கு இவர் ஆர்வமாக இருப்பது போல தோன்றுகிறதே, இவர் உண்மையான துறவியே அல்ல." என அரசன் மனம் நினைக்கிறது. எந்த அளவு ஒருவர் தன்னை துன்புறுத்திக் கொள்கிறாரோ அந்த அளவு அவர் ஒரு துறவி என்பது பழமையான ஒரு கருத்து. வசதியின்றி இருப்பது மதம். நோய், பசி, என தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்ள ஆயிரம் வழிகள்........ அப்போது தான் அவர் ஒரு சிறப்பான துறவி. அரசனின் மனதில் அந்த துறவி தனது துறவிதன்மையிலிருந்து கீழிறங்கி விட்டார். ஆனால் இப்போது ஒன்றும் செய்ய முடியாது. தனது வார்த்தையிலிருந்து மாற முடியாது.
        ஆனால் அந்த துற‌வி எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் எதுவும் பேசவில்லை. அரசன் அரண்மனையின் சிறப்பான இடத்தை கொடுத்து நல்ல வேலையாட்களை அமர்த்தி துறவியை கவனித்துக்கொள்ள இளம்பெண்களை ஏற்பாடு செய்தான். துறவி இது ஒவ்வொன்றையும் ஏற்றுக் கொள்ள கொள்ள அரசனின் மனதில் அந்தத் துறவி தனது துறவிதன்மையிலிருந்து கீழிறங்கி கொண்டே வந்தார். என்ன வகையான துறவி இவர்? அழகான மிகப் பெரிய படுக்கையை ஏற்றுக் கொண்டார். அரண்மனையின் சிறப்பான உணவு வகைகளை உண்டார்.
        அரசன், "கடவுளே, மடையன் நான். இவன் என்னை ஏமாற்றிவிட்டான். இவன் வலை விரித்து பிடித்துவிட்டான். நான் ஒவ்வொரு நாள் இரவும் போகும் வழி அறிந்து அந்த இடத்தில் ஒரு புத்தரைப் போல அமர்ந்து என்னை ஏமாற்றும் வகை அறிந்து என்னை வீழ்த்தியிருக்கிறான். நானும் ஏமாந்து விட்டேன். இப்போது இவனை மெல்லவும் முடியாது, துப்பவும் முடியாது. அரண்மனைக்குள் வந்துவிட்டான். மிகவும் ஏமாற்றுக்காரன் இவன்." என்று நினைத்தான்.
        ஆனால் இப்படிப்பட்ட மனநிலையோடு எவ்வளவு நாள் தாக்கு பிடிக்கமுடியும்?
        ஆறு மாதம் கழித்து ஒருநாள் அதிகாலையில் தோட்டத்தில் உலாவியபடி பேசிக் கொண்டிருக்கையில், அரசன், ஒரு விஷயம் உங்களிடம் கேட்க வேண்டும். அது என்னை துன்புறுத்திக் கொண்டிருக்கிறது. என்னால் அதிலிருந்து விடுபட முடியவில்லை. அதனால் ஆறு மாதங்களாக சரியாக தூங்கக் கூட முடியவில்லை. என்றான்.
        துறவியோ, நீ எதை வேண்டுமானாலும் கேட்கலாம். என்று கூறினான்.
        நான் இப்படி உங்களிடம் கேட்கக்கூடாது. ஆனாலும் இவ்வளவு காலமாக இந்த அரண்மனை சுகத்தை அனுபவிக்கும் துறவியாகிய‌ உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று எனக்கு தெரிய வேண்டும். நீங்களும் அரண்மனையில்தான் இருக்கிறீர்கள், எல்லா சுகங்களையும் அனுபவிக்கிறீர்கள், உங்களுக்கும் எனக்கும் உள்ள வேறுபாடு என்ன?
        என்றாவது ஒருநாள் இந்த கேள்வி வரும் என்று எனக்குத் தெரியும். உண்மையில் நான் இங்கே வருவதற்காக மரத்தடியில் எழுந்து நின்றபோதே அது உன்னுள் எழுந்து விட்டது. நீ தைரியசாலி அல்ல. நீ இந்த கேள்வியை அப்போதே கேட்டிருக்க வேண்டும். ஆறு மாதங்கள் தேவையின்றி உனது தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை, ஆறு மாதங்களை வீணடித்திருத்த வேண்டியதில்லை. நான் உனது கேள்விக்கு பதிலை இங்கு சொல்ல போவதில்லை. நீ என்னுடன் வர வேண்டும், என்றார் துறவி.
        இருவரும் பல மைல் தாண்டி சென்று கொண்டிருந்தனர். ஒரு ந‌தியை கடந்தனர். கரையை கடந்தவுடன் துறவி, "நான் தொடர்ந்து போகப் போகிறேன். என்னுடன் வர நீங்கள் தயாரா" என்றார்.
        அரசன், "என்னால் எப்படி தொடர்ந்து வர முடியும்?  என்னுடைய அரண்மனை, என்னுடைய அரசாங்கம், என்னுடைய மனைவி, என்னுடைய குழந்தைகள்....... ஆயிரக்கணக்கான கவலைகளும் பிரச்னைகளும் எனக்கு உள்ளன. என்னால் எப்படி உங்களோடு தொடர்ந்து வர முடியும்?" என்றான்.
        துறவியோ, வித்தியாசத்தை பார்த்தாயா, நான் போகிறேன். நான் அரண்மனையில் எவ்வளவு ஆனந்தத்தோடு இருந்தேனோ அதே ஆனந்தத்தோடு மரத்தடியிலும் இருப்பேன் – இம்மியளவும் கூடவும் குறைவும் இல்லாமல். நான் காட்டில் இருந்தாலும் சரி, அரண்மனையில் இருந்தாலும் சரி எனக்கு எல்லாம் ஒரே நிலைதான். என்றார்.
        தான் இவ்வளவு மோசமாக நினைத்ததை எண்ணி அரசன் மிக வருந்தினான். அவன் துறவியின் காலில் விழுந்து, இப்படி நினைத்ததற்காக  என்னை மன்னித்து விடுங்கள். என்னை நினைத்தால் எனக்கே கேவலமாக இருக்கிறது. என்றான். நீங்க‌ள் மீண்டும் என் அர‌ண்ம‌னைக்கே வ‌ர‌வேண்டும் என்றான்.
        துறவியோ, அப்படி நினைக்காதே. நீ மன்னிப்பு கேட்டு கண்ணீர் விடுவதால் திரும்பி வருவதற்கு எனக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை. ஆனால் நீ திரும்பவும் கடவுளே, என்னை இவன் திரும்பவும் ஏமாற்றி விட்டானோ என்று நினைக்க ஆரம்பித்துவிடுவாய். நான் திரும்பவும் வருவதில் எனக்கு எந்த வித கஷ்டமும் இல்லை. ஆனால் உன் மீதுள்ள கருணையால் நான் வரப் போவதில்லை. என்னை போகவிடு. இந்த முழு உலகமும் பரந்து விரிந்திருக்கிறது, எனக்கு எதுவும் பெரிதாக தேவையில்லை. ஒரு மரநிழல் மட்டுமே போதுமானது. எதுவாக இருந்தாலும் சரியே. என்றார்.
       ஆனால் அரசன், இல்லை, இல்லை. நீங்கள் வராவிட்டால் நான் மிகவும் கவலைப்படுவேன், காயப்பட்டுப்போவேன், நான் என்ன செய்துவிட்டேன் என வருத்தப்பட்டுப் போவேன். என்று வலியுறுத்திச் சொன்னான்.
       அந்த துறவியோ, நீ இப்போது என்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்திவிட்டாய். நான் வருவதில் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை என நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். ஆனால் நினைவில் வைத்துக் கொள், என்ன வித்தியாசம் என திரும்பவும் உனக்கு தோன்ற ஆரம்பித்துவிடும். என்றார். உன் தூக்க‌ம், நிம்மதி போய்விடும். ஆகவே உன் மீது கருணை கொண்டு நான் வரப்போவதில்லை, என் வழியே போகவிடு என்று கூறிவிட்டு போய் விட்டார்........ எந்த மனநிலையிலும்  நிலையிலும் ஆனந்தமாக வாழ்பவர்களே.... உயிர்ப்போடு வாழ்பவர்கள்.

Friday, December 24, 2010

மண் தொட்டியை உடைத்துப் போடுங்கள்-ஆனந்தம்:

    பல திறமையானவர்களை நீங்கள் கவனித்திருக்கலாம். கிடுகிடுவென உயர்ந்து வருவார்கள். சடாரென்று ஒரு கட்டத்தில் நிலைகுத்தி நின்றுவிடுவார்கள். அதன் பின் புதிதாக அவர்களிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது!
       ஏன்?
       அதற்க்குப் பிறகும் வளர வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு இருக்காதா என்ன? இருக்கும்.. ஆனால் கிடைத்திருப்பதை விட்டுவிடக் கூடாது என்று அச்சத்துடன் கெட்டியாக பிடித்துக்கொண்டு விடுவார்கள்.
       அதற்கு அப்புறம் எப்படி வளர்ச்சி இருக்கும்?
    குட்டி மண்தொட்டியில் வேரோடு வைத்து விற்க்கப்பட்ட ஒரு செடியை வாங்குகிறீர்கள்.
       பத்திரமாக நிழலில் வைத்து பார்த்துக்கொண்டால், தொட்டியில் செடி ஓரளவிற்கு வேகமாக வளரும். பிறகு ஒரு கட்டத்தில் போதிய இடமின்றி அது தன் வளர்ச்சியை குறுக்கிக்கொள்ளும்.
       அதே செடியை பூமியில் எடுத்து நட்டிருந்தால் அது பெரிய விருட்சமாக வளர்ந்திருக்கும். புதிது புதிதாக எல்லா திசைகளிலும் கிளைகளை அனுப்பிக்கொண்டிருக்கும்.
       உங்கள் வாழ்கையும் அப்படித்தான்!
       வளர வேண்டும் என்ற முனைப்பு உங்களுக்குள் தகதகத்துக்கொண்டு இருக்கிறது.
       இப்போதிருக்கும் மண் தொட்டியை உடைத்து போட தயங்குவதால், வளர முடியாமல் தவிக்கிறது.
       உங்க‌ளைச் சுற்றி நீங்களே பின்னிக் கொண்டிருக்கும் வலைகளிருந்து விடுபட்டால் தான் வளர்ச்சி என்பது சாத்தியம்!
       அரசனைத்தேடி அவ்வப்போது ஓர் இளைஞன் அரண்மனைக்கு வருவான். அவனுக்கு ராஜமரியாதை தந்து நிறைய செல்வங்கள் கொடுத்த‌னுப்புவான் அரசன்.
       அத்தனையும் தொலைத்துவிட்டு அவன் மீண்டும் வந்து நிற்பான். அரசனும் முகம் கோணாமல் மீண்டும் அவனுக்கு வாரி வழங்குவான்.
       ஒரு முறை தலைமை அமைச்சர் அரசனிடம் மெல்லக் கேட்டார்...
       "மன்னா, இவன் நீங்கள் வழங்கும் செல்வங்களை பொறுப்பில்லாமல் தவறான நண்பர்களோடு சேர்ந்து தொலைத்து விட்டு, வீணடித்துவிட்டு வருகிறான். எதற்காக அவனுக்கு மீண்டும் மீண்டும் செல்வத்தை வாரி வழங்குகிறீர்கள்?"
       "அமைச்சரே நான் பிறந்தபோதே என் தாய் இறந்துபோனாள். அரண்மனைப் பணியில் இருந்த இவன் தாய்தான் இவனுடன் சேர்த்து எனக்கும் தாய்ப்பால் கொடுத்து வளர்த்தாள். அதனால், இவனை என் சகோதரனாகவே நினைக்கிறேன்" என்றான் அரசன்.
       அடுத்த முறை அந்த முட்டாள் பையன் வந்த போது வேறு ஒரு விபரீத கோரிக்கையை முன் வைத்தான்.
       "உன்னைச் சுற்றி புத்திசாலிகள் இருப்பதால் என்னை விட மேன்மையாக இருக்கிறாய். உன் அமைச்சர் என்னுடன் இருந்தால் என்னாலும் ராஜ்ஜியத்தை ஆளமுடியும். அவரை என்னுடன் அனுப்பு!" என்று மன்னனிடம் கேட்டான் அவன்.
       என்ன செய்வது என்று புரியாமல் மன்னன் தினறினான்.
       "மன்னா... உஙளுடன் பால்குடித்து வளர்ந்த சகோதரனுக்கு உதவ என்னுடன் பால்குடித்து வளர்ந்த என் சகோதரனை அனுப்புகிறேனே" என்றார் அமைச்சர்.
       மறு நாள் அரசவைக்கு அமைச்சர் வந்த போது ஒரு எருமைக்கடாவை கயிறு கட்டி இழுத்து வந்தார்.
       ஏன் சிரிக்கிறீர்கள் இவனும் நானும் ஒரே எருமைத்தாயின் பாலைக்குடித்து தான் வளர்ந்தோம். மன்னனின் சகோதரனுக்கு அமைச்சராக இருக்க இந்த என் சகோதரனை அனுப்புகிறேன்" என்றார்.
       நாம் ஒரே தாயிடம் பால்குடித்து வளர்ந்திருக்கலாம். ஆனால் நம் உடலை, மனதை, உண்ர்ச்சிகளை, சக்தியை எப்படி திறம்பட பயண்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து தானே நம் வளர்ச்சி அமையும்!
       பொதுவாக உங்கள் நண்பர்களைச் சந்திக்கும் போது என்னவெல்லாம் பேசுவீர்கள்?
       பட்ஜெட்டில் வரிகளை எப்படி விதிக்க வேண்டும், எந்ததெந்த கட்சிகள் கூட்டணி வைத்துக்கொண்டால் வெற்றி பெற முடியும்... அரசாங்கம் எப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்றெல்லாம் விவாதிப்பீர்கள்.
       முஷாரப் பற்றியும், ஜார்ஜ்புஷ் பற்றியும், பின்லேடன் பற்றியும் எல்லா விவரங்களும் வைதிருப்பீர்கள்.
       இப்படி உலக விவரங்களை எல்லாம் விரல் நுனியில் வைத்திருக்கிறீர்களே, உங்களைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?
       உங்களுடைய திறமையின் வீச்சு பற்றி உங்க‌ளுக்கு முழுமையாகத் தெரியுமா?
       கண்ணாடி அணிபவர்களுக்கு முதன்முதலாக அதை அணிபவர்களுக்கு அணியும்போது அது வேண்டாத பாரமாகத் தெரியும். பழக்கமான பின் அதைப்பற்றியே கவனமிருக்காது. கவனிக்கப்படவிட்டாலும் அது தன் வேலையை திறம்பட செய்துகொண்டிருக்கும்.
       அதே போலத்தான் உங்கள் திறமையும்!
       இருபத்தி நாண்கு மணிநேரமும் அதனைக் கூர்மையாக வைத்திருக்க முதலில் கவனத்துடன் பயிற்சி செய்யுங்கள். பழக்கவசத்தால் அது உங்கள் இயல்பான குணமாகிவிடும். பிறகு எந்த சந்தர்ப்பத்திலும் அது பயண் படத்தயாராக இருக்கும்.
       சாலையில் வண்டி ஓட்டிப் பழகும் போது, உங்கள் மொத்த கவனமும் அதிலேயே இருக்கும். நல்ல பயிற்சி பெற்ற பிறகு, அது பற்றிய பயமோ, பதற்றாமோ இல்லாமல், மிக இயல்பாக வண்டியில் பயணம் செல்ல ஆரம்பித்திருப்பீர்களே, அது போல்!
       மோட்டார் வாகனத் தொழிலில் பெரும் சாதனை புரிந்த ஹென்றிபோர்டு ஒரு முறை...
       "நீங்கள் பெரிய ஜீனியஸ்" என்று புகழப்பட்ட போது அவர் என்ன சொன்னார் தெரியுமா?
       "அதிமேதவித்தனமாவது, மண்ணாங்கட்டியாவது! உங்களிடம் இருக்கும் அதே புத்திசாலித்தனம் தான் என்னிடமும் இருக்கிறது. விடாமுயற்ச்சியுடன் உழைத்து, நான் அதைப் பயண்படுத்தினேன் அவ்வளவு தான்!" என்றார்.
       கிடங்கில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் தானியம் விநியோகம் செய்யப்படதவரை, யாருக்கும் உபயோகம் இல்லை. வீணாகி மக்கி குப்பைக்கு தான் போய் சேரும்.
       திறமைகளைத் தேக்கி வைக்காதீர்கள், அவற்றைப் பயண்படுத்தி கொண்டே இருந்தால் தான் பலன்!
       புதிய வாய்புகளை திறமையோடு எதிர்கொள்ள பழகினால் தான், உங்கள் திரமையும் முழுதாக பரிமளிக்கும். அது உங்களை அடுத்தடுத்த தளங்களுக்கு உயர்த்திக் கொண்டே இருக்கும்!

வாழ்க வளமுடன்!