Showing posts with label பெற்றோர். Show all posts
Showing posts with label பெற்றோர். Show all posts

Wednesday, September 5, 2012

"கடவுளைத் தொலைத்துவிட்டார்கள்?" ஆனந்தம்


      ஓர் ஊரில் குறும்புக்கு பெயர் போன இரண்டு சிறுவர்கள் இருந்தனர். வம்பை விலைக்கு வாங்குவது அவர்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு. பெற்றோர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர்கள் கேட்டபாடில்லை. எனவே பெற்றோர் அவர்களை ஒரு மதகுருவிடம் அழைத்துச் சென்றனர். முதலில் இளையவனை மட்டும் அழைத்துச் சென்று மதகுருவிடம் விட்டுவிட்டு வந்தனர்.
      குறும்பு கார‌ச் சிறுவனை மேலும் கீழும் பார்த்த மதகுரு, நாடக பாணியில் அங்கும் இங்கும் நடக்க ஆரம்பித்தார். "எப்படியாவது கடவுள் அவனுள் தான் இருக்கிறார் என்று உணர்த்திவிட்டால், அவன் குறும்புத்தனம் எல்லாம் அடங்கிவிடும்!" என்று நினைத்தார்.
      பாதி நடையில் நின்று விட்டு கணீர் குரலில், "எங்கே கடவுள்?" என்று கேட்டார். அந்த சிறுவன் மொத்தமாக குழம்பிப்போய் கடவுள் அந்த இடத்தில் தான் எங்கோ இருக்கிறார் போலும் என்று நினைத்து அங்கும் இங்கும் கண்களால் தேடினான்.
      "அவர் உண்ணுள் தான் இருக்கிறார் என்று சிறுவனுக்கு உணர்த்த, மேஜையின் குறுக்கே சாய்ந்து கொண்டு, "கடவுள் எங்கே?" என்று மறுபடியும் கேட்டார் மதகுரு. சிறுவன் இன்னும் குழம்பிப்போய் மேஜைக்கு கீழே குணிந்து கடவுளைத் தேடினான். ஆனால் மதகுரு அவனுடைய இதயத்தை சுட்டிக்காட்டி, "கடவுள் எங்கே?" என்று திரும்பக் கேட்டார். கடவுள் அங்கு தான் இருக்கிறார் என்பதை அந்த பையனுக்கு புரிய வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தார்.
      அவ்வளவு தான் அந்த சிறுவன் கதவு தாள்ப்பாளைத் திறந்து கொண்டு தன் அண்ணன் இருக்கும் இடத்திற்க்கு ஓட்டமாய் ஓடிவிட்டான். அங்கே அண்ணனிடம், "அண்ணா! நாம் பெரும் பிரச்சனையில் மாட்டிக் கொண்டுவிட்டோம்!, அவர்களுடைய கடவுளைத் தொலைத்து விட்டார்கள், அதை நாம் தான் திருடினோம் என்று நினைக்கிறார்கள்!" என்றான்.

Thursday, June 14, 2012

எது சரி? எது தப்பு? ஆனந்தம்


      எது சரி? எது தப்பு? என்கிற போதனை வழ‌ங்குவது......
      முக்கியமாக வீட்டில் குழந்தைகளுக்கு பெற்றோரின் போதனை இது சரி, இது தப்பு, என்று கூறும் விசயங்கள் அனைத்தும் ஒரு மிகப்பெரிய பட்டியலாக இருக்கிறதே? ஏன்? அதனால் குழப்பம் தான் மிஞ்கிறது! எதுவெல்லாம் சரி? எதுவெல்லாம் தப்பு?
      மக்களை கட்டுப்பாட்டுக்குள் வைக்க குற்றவுணர்ச்சி மிகச் சிறந்த வழி. பயமும், குற்றவுணர்ச்சியும் மக்களை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவும் சிறந்த இரண்டு வழிகள். சில மதங்கள் பயம் மூலம் மக்களை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயலுகின்றன. சில மதங்கள் குற்றவுணர்ச்சி மூலம் அவர்க‌ளை கட்டுப்படுத்த நினைக்கின்றன. இந்த உலகில் பாவம் புண்ணியம் எல்லாம் எதற்கு உருவாக்கப்பட்டன? மக்களை குற்றவுணர்ச்சியில் தள்ளி அவர்களை அமைதிப்படுத்தத்தான். குற்றவுணர்ச்சியில் இருப்பவர்கள் எப்படி அமைதியாக, ஆனந்தமாக இருப்பார்கள்? அவர்கள் எப்போதும் துயரப்படும் மனிதர்கள் தான் இல்லையா? உங்களைப் பொருத்தமட்டில் ஒழுக்கத்தோடு இருப்பது தான் சிறந்த மனிதனாக‌ இருக்கும் வழியல்லவா?
      பெரும்பாலான பெற்றோர்களுக்கு தனது பிள்ளைகள் புத்திசாலியாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஒழுக்கத்தோடு இருக்கவேண்டும். இது துரதிருஷ்டம் இல்லையா? பெற்றோர் சொல்லும் அத்தனை முட்டாள் தனங்களையும் அவன் கேட்டுக்கொண்டிருந்தால், அவர்களைப் போலவே அவனும் துயரம் மிகுந்த மனிதாகத்தான் அவான் இல்லையா? இன்னொரு துயர மிக்க மனிதன் உருவாக வேண்டுமா? அல்லது முட்டாள் தனங்களிலிருந்து விடுதலை பெற்ற மனிதன் உருவாக வேண்டுமா? துயரமா? ஆனந்தமா? நீங்களே முடிவு செய்யுங்கள்.
..........................வாழ்க வளமுடன்!.............................

Wednesday, July 20, 2011

முன்னோர்களுக்காக திதி செய்ய வேண்டுமா? ஆனந்தம்

      பெற்றோர், முன்னோர் மூலமாகத் தான் நாம் இந்த உலகிற்கு வந்தோம். அவர்கள் உயிரைக் கொடுக்கா விட் டாலும் இந்த உடலைக் கொடுத்தவர்கள் அவர்களே. எனவே, நன்றி உணர்வோடு திதி செய்ய வேண்டும்.
      மறைந்தவர்களின் புகைப் படத்தை சுவரில் மாட்டி வைத்தால் மட்டும் போதாது. அவர்களை வருடத்திற்கு ஒரு முறையாவது அவசியம் சிந்திக்க வேண்டும். அவர்கள் பெயரில் முடிந்த நல்லவற்றை செய்யுங்கள். காகம், பசு போன்ற உயிர்களுக்கு உணவளியுங்கள். அதாவது திதி எனபது இவ்வாறாக இருக்க வேண்டும். அதனால், நல்ல மாற்றத்தை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் காண்பீர்கள்.
      அவர்களது நினைவு நாளில் உணவுக்காக வாடும் ஏழைகளுக்கு உணவளியுங்கள். உறவினர்களை மட்டும் அழைக்காமல் ஏழை, எளியவர்களையும் அழைத்து உணவிடுவது தான் சாலச்சிறந்தது.
      ஏழைகள் உண்பதால் இறந்தவரின் ஆன்மா சாந்தி அடைகிறதோ இல்லையோ நிச்சயமாக நமக்கு நன்மையகள் உண்டு. நம் நிம்மதிக்காகவும், ஆனந்தத்திற்க்காகவும் அமைதிக்காவும் இந்த நல்ல விஷயத்தை மேற்கொள்ள வேண்டும்.

Monday, June 20, 2011

நல்ல பெற்றோராக இருப்பது எப்படி? ஆனந்தம்


      உண்மையில்,  பெற்றோராக இருப்பதே ஒரு வேடிக்கையான விஷயம்தான். இதுவரை யாரும் இருந்ததைவிட, நான் ஒரு நல்ல பெற்றவராக அல்லது பெற்றவளாக இருக்க வேண்டும் என்றும் ஒவ்வொருவரும் முயற்சிக்கிறீர்கள். ஆனால், இதுவரை யாருக்குமே, குழந்தைகளை வளர்ப்பதில் எது சிறந்த வழி என்று தெரிந்திருக்கவில்லை. உங்களுக்கு 12 குழந்தைகள் இருந்தாலும் நீங்கள் இன்னும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறீர்கள். 11 குழந்தைகளை நன்றாக வளர்த்திருப்பீர்கள். ஆனால், அந்த 12வது உங்களுக்கு நிறைய வேலையை கொடுக்கலாம். எனவே உங்கள் வேலையை இன்னமும் சிறப்பாக செய்ய ஆசைப்படுகிறீர்கள். அப்படி சிறப்பாக நீங்கள் என்ன செய்யமுடியும்?
      அதற்கு முன் முக்கியமாக உங்களையே நீங்கள் ஒருசில விஷயங்களில் கவனித்து சரிசெய்து கொள்ள வேண்டும். அதற்கு போதுமான நேரம் செலவு செய்ய வேண்டும். நீங்கள் எப்படி  இருக்கிறீர்கள்? எப்படி உட்காருகிறீர்கள்? எப்படி நிற்கிறீர்கள்? எப்படி பேசுகிறீர்கள்? என்ன செய்கிறீர்கள்? என்ன செய்யவில்லை....              
      எல்லாவற்றையும் நன்கு கவனியுங்கள். ஏனெனில், குழந்தைகள் உங்களிடமிருந்து எல்லாவற்றையும் மிக வேகமாக கற்றுக்கொள்கிறார்கள். அதுமட்டுமல்ல, அவர்கள் நீங்கள் செய்வதை எல்லாம் மிகைப்படுத்தியும் செய்வார்கள். எனவே உங்களை முதலில் மாற்றிக்கொள்ளுங்கள். மகிழ்ச்சி, அன்பு, கவனிப்பு, அக்கறை, கட்டுப்பாடு கொண்ட ஒரு சூழ்நிலையை உங்களுக்கும், உங்கள் வீட்டு சூழ்நிலைக்கும் நீங்கள் ஏற்படுத்தினால் நிச்சயமாக குழந்தைகளும் வளர்ச்சி பெறுவார்கள். உங்கள் எல்லைகளுக்குட்பட்டு எவ்வளவு வாய்ப்புகளை உருவாக்கித் தரமுடியுமோ அவ்வளவு வாய்ப்புகளை அவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்க வேண்டும். ஆனால், அடக்கமான குழந்தையை வளர்க்கிறீர்களா? அல்லது அடங் காப்பிடாரியை வளர்க்கிறீர்களா என்பதும் மிகவும் முக்கியமானதுதான். உங்கள் மனைவி கர்ப்பமடைந்துவிட்டால், நீங்கள் உங்களையே மாற்றிக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம். ஏனெனில், இன்னொரு உயிர் இப்போது உங்கள் குடும்பத்திற்குள் வருகிறது. நீங்கள் தற்போது இருக்கும் வழி உங்களுக்கே பிடிக்காதபோது இன்னொரு உயிரும் அந்த வழியில் போகவேண்டாமல்லவா? எனவே நாம் செய்யக்கூடிய செயல்களில் விழிப்புணர்வுடன் இருப்பது மிகவும் அவசியம். அவர்களுக்கு எதைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதுபற்றியும் நான் சொல்கிறேன். அவர்கள் எதைப்பற்றியும் கேள்வி கேட்கும்படி நீங்கள் கற்றுக்கொடுக்க வேண்டும்.  ஆனால் அவர்களின் கேள்வி சந்தேக மனப்பான்மையில் இருக்கக்கூடாது. தெரிந்துகொள்ளும் மனப்பான்மையில் இருக்க வேண்டும். கேள்வி கேட்பது என்பது ஒரு நோயைப் போலவும் ஆகலாம். அல்லது ஒரு ஆரோக்கியமான செயலாகவும் முடியலாம்.
      "எல்லாமே மோசம்' என்று மக்கள் ஏற்கனவே சந்தேகத்துடன் இருப்பதால்தான் கேள்வி கேட்கிறார்கள். இது ஒரு நோய். ஆனால் ஒரு கேள்வியின் அடிப்படை நோக்கம், இன்னமும் சிறிது ஆழமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்பதாகத்தான் இருக்க வேண்டும். உங்கள் குழந்தைகள் தங்கள் மனதில் தோன்றும் எதைப்பற்றி வேண்டுமானாலும், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதையும் சேர்த்து கேள்வி கேட்கலாம் என்ற நிலையை கொண்டுவந்தால் அவர்கள் ஆரோக்கியமான  வழியில் கேள்விகேட்க ஆரம்பிப்பார்கள். நல்ல வழியில் அவர்களுடைய அறிவை உபயோகிப்பார்கள். நீங்கள் இப்படிசெய்வதால் அவன் ஒரு டாக்டராகிவிடுவான்  அல்லது இன்ஜினியர் ஆகிவிடுவான் என்று நினைத்துவிடக்கூடாது. ஆனால் அவனுடைய மூளை எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். எதிலும் விருப்பமுடனும், திறந்த மனதுடனும் இருக்குமாறு அவனை வளர்த்தால் அவன் தன்னுடைய வாழ்க்கையை எந்த அளவு முடியுமோ அந்த அளவு சிறப்பாக அமைத்துக் கொள்வான்.  வேறு யார்  போலவோ ஆகாவிட்டாலும் அவனால் எவ்வளவு முடியுமோ அதைச் செய்வான். ஆனால் இவையெல்லாம் அவன் தன் பாதையில் யாரை சந்திக்கிறான், எந்தெந்த சூழ்நிலைகளை பார்க்கிறான், ஆன்மிக சூழலை பார்க்கிறானா, போர் முனையைப் பார்க்கிறானா, இவை அனைத்தையும் பொறுத்தது. ஏனெனில் இவையெல்லாம் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் இல்லை அல்லவா? நீங்கள் உங்கள் குழந்தையை அன்பு, தியானம், திறந்த மனது போன்ற சூழ்நிலைகளுடன் வளர்த்தால் அவர்கள் பொதுவாகவே நன்றாகத்தான் வளர்வார்கள்.
      அவன் யாரையோ பார்த்து ஏதோ ஒரு சூழ்நிலையில் சிக்கி, தவறாகப் போகிறான் என்றால் அது வேறு விஷயம். ஆனால் அவன் உங்களைப் பார்த்து தவறான வழியில் சென்றுவிடக்கூடாது அல்லவா? நீங்கள் அவர்களுக்குள் பயத்தையோ பாரபட்சத்தையோ, வெறுப்பையோ கொண்டுவந்தால், அது நீங்கள் அவனுக்கு செய்யும் குற்றமாகும்.
      ஏனென்றால் இப்போது உங்களால் அவர்கள் பாதை தவறிப் போக முடியும். எந்தப் பெற்றோருமே இதைத் தன் குழந்தைக்கு செய்யக்கூடாது. ஆனாலும் இது பலவிதமாக நடைபெறத்தான் செய்கிறது.  நீங்கள் உங்கள் பயத்தையும் உங்களுடைய  "இது', "அது' போன்ற குறைகளை எல்லாம் அவர்களுக்குள் விதைக்கிறீர்கள். உங்களுடைய பலவீனத்தை அடுத்த தலைமுறைக்கு மாற்றுகிறீர்கள். இது உங்கள் வேலையினால் இருக்கலாம். நீங்கள் எங்கு வாழ்கிறீர்கள்? என்ன செய்கிறீர்கள் என்பதுபோல பல விஷயங்கள் இருக்கலாம்.
      எல்லா பெற்றோருமே தங்கள் குழந்தைகளை நன்றாக வளர்ப்பதற்கான திறமையைக் கொண்டிருப்பார்கள் என்று சொல்ல முடியாது. எனவே, குழந்தைகள் சிறப்பாக வளர நிறைய இடங்களை உருவாக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இம்மாதிரி இடங்களை உருவாக்க தொழில் ரீதியாக யாரையும் ஆசிரியர் போல நியமித்து செய்ய முடியாது. அவர்கள் இன்னொருவர் குழந்தைக்காக தன்னைக் கொடுக்க மாட்டார்கள். இதற்காக அர்ப்பணிப்பு உணர்வுள்ள தன்னார்வ தொண்டர்களை வேண்டுமானால் நியமிக்கலாம். இது ஒரு சவாலான வேலைதான். ஆனால் அடுத்த தலைமுறையின்மேல் அக்கறை கொண்டவர்கள் இதை செய்யத்தான் வேண்டும். அடுத்த தலைமுறையில் வளர்பவர்கள் உங்களையும் என்னையும் விட ஒருபடி மேலாக இருக்க வேண்டும். அவர்கள் அதிக ஆனந்தத்துடனும்,குறைந்த பயத்துடனும் குறைந்த துன்பத்துடனும், குறைந்த வெறுப்புடனும் இருக்கவேண்டும். இதற்கு நாம் ஏதாவது செய்தாக வேண்டும்.
      உங்களுக்கு இரண்டுகுழந்தைகள் என்றால், அவர்களை அடுத்த தலைமுறைக்கு நீங்கள் விட்டுச்செல்லும் நன்கொடையாக இருக்க வேண்டும். அடங்காப் பிடாரிகளாக இருக்கக்கூடாது. உங்களைவிட சிறிதளவாவது உயர்ந்த மனிதர்களை நீங்கள்  விட்டுச் செல்வதுதான், இந்த மனித சமுதாயத்திற்கு நீங்கள் செய்யக்கூடிய பெரிய பங்களிப்பாக இருக்கும்.

Monday, December 6, 2010

கடமையல்ல! அன்பே ஆனந்தம்:

     "என் அப்பாவுக்கு எழுபது வயது. நடமாட்டம் குறைந்துவிட்டது. 24 மணி நேரமும் தனக்கு தேவைப்படுவது பற்றியே கவலைப்படுகிறார். வயதானால் சுயந‌லம் மிகுந்து விடுமா? 'முதுமை கற்றுத் தருவதெல்லாம் ஒட்டுண்ணியாகும் தந்திரம்' என்று நான் அண்மையில் நான் படித்த கவிதை உண்மைதானோ?" ஆனால் நாங்கள் அவரை கவனிக்கும் கடமையில் இருந்து துளிகூட மாறவில்லை. முடிந்த அளவு (நானும், என் மனைவியும் வேலைக்கு போகிறோம். பிள்ளைகள் கல்லூரிக்கு போகிறார்கள்) கவனிக்கிறோம்.
     உங்களை மூப்பும் தள்ளாமையும் தாக்கும் போது,  நீங்கள் எப்பேர்ப்பட்ட ஒட்டுண்ணியாக இருக்கப்போகிறீர்கள் என்று யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?
     ஏதோ ஒரு கவிஞர் சொன்னாலும் சரி,  நீங்கள் சொன்னாலும் சரி... முதியவர்களை ஒட்டுண்ணிகள் என்று நினைக்கும் சிந்தனையே மகா கேவலமானது.
     பாதுகாப்பின்மை உணர்வு வந்தால்தான், சுயநலம் வரும். உங்கள் மீது முழு நம்பிக்கை இருந்தால், அப்படிபட்ட உணர்வு அவர்களுக்கு ஏன் வரப்போகிறது?
     வயதானவர்களுக்கான தேவைகள் பற்றி உங்க‌ளுக்கு தெரியாதபோது, அவர்கள் அதைக் குறிப்பிட்டு கேட்கிறார்கள்.
இளமை காரணமாக இன்றைக்கு நீங்கள் யாரையும் சார்ந்திருக்க அவசியம் இல்லாமல் இருக்கலாம். இயலாமையும் தள்ளாமையும் முடக்கிவைத்து விட்டதால், உங்கள் அப்பாவால் உங்களுடன் உடல்ரீதியாக போட்டி போடமுடியாது, அதற்காக?

     ஓர் அரசன் தன் நாட்டில் வசிக்கும் முதியவர்களால் எந்த உதவியும் இல்லை என்பதால், 60 வயது நிறைந்தவர்கள் அனைவரையும் கண்காணாத தீவில் கொண்டுவிடச் சொல்லி உத்தரவு பிற‌ப்பித்தான்.
     மக்களின் கண்ணீருக்கு இடையில் உத்தரவு நிறைவேற்றப்பட்டது.
     சில மாதங்கள் கழித்து நாட்டில் கடும் மழை. ஊர் வெள்ளத்தில் மிதந்தது. நிலமையை சமாளிக்க சரியான தீர்வு கொடுப்பவருக்கு பெரும் பரிசு வழங்குவதாக மன்னன் அறிவித்தான்.
     குமரன் என்பவன் கொடுத்த யோசனை மற்றவர் எல்லோரும் கொடுத்த யோசனைகளை விட மிகச் சிறப்பாக இருந்தது. அதை அமல்படுத்தி வெள்ளத்தில் இருந்து மக்களைக் காப்பாற்றினான் அரசன்.
     அடுத்த வருடம் நாட்டில் கடும் தொற்று நோய் பரவியபோதும், குமரன் கொடுத்த‌ யோசனைதான் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அதற்கடுத்த வருடம் பஞ்சம் தாக்கிய போதும், குமரனின் ஆலோசனைதான் நாட்டைக் காப்பற்றியது.
     குமரனால் மட்டும் எப்படி சரியான தீர்வு கொடுக்க முடிகிறது என்று அரசன் திகைத்துக் கேட்டான்.
     "அரசே, முதியவர்களை நீங்கள் நாடு கடத்தினீர்கள். ஆனால் நான் என் தந்தையை பிரிய மனமில்லாமல், அவரை என் வீட்டு பரணில் ஒளித்து வைத்து பராமரித்து வருகிறேன். உடலால் இயலாமல் போனாலும், அவருடைய பழுத்த அனுபவம் தான் நம் நாட்டில் ஒவ்வொரு முறை பிரச்சனை வரும் போது தீர்வு சொன்னது" என்றான் குமரன்.
     அரசன் தன் தவறை உணர்ந்து, நாடு கடத்திய முதியவர்களைச் சகல மரியதைகளோடு தன் நாட்டுக்கு மீட்டு வந்தான். உண்மைதான் வயதானவர்கள் மொத்தமாக பயணற்றவர்கள் அல்ல!
     நீங்கள் இந்த பூமியில் அடியெடுத்துவைத்த கணத்தில் இருந்து, உங்களுக்கான உணவைத்தேடிக் கொள்ளக்கூட உங்களிடம் எந்த திறனும் இல்லாத சமயத்தில் உங்களை உங்கள் அம்மா தன் மார்போடு அனைத்து பாலூட்டவில்லை என்றால், என்னவாகி இருப்பீர்கள்? உணவு மட்டுமல்ல மொத்த உலகமே உங்களுக்கு அவள் தந்தது தானே?
     என்றைக்காவது கடவுளை நீங்கள் நேரில் சந்திதது உண்டா? கடவுள் த்ன்மைக்கு நெருக்கமாக உணர்ந்த நபர் உங்கள் அம்மாவாகத்தானே இருக்கமுடியும்?

     இன்றைக்கு நீங்கள் ஏதோ ஒரு நிலையில் இருக்கிறீர்கள் என்றால், அது உங்கள் இளமைக்காலத்தை உங்கள் பெற்றோர் பராமரித்து வந்ததால் தானே?
     வேர்களைக் கத்தரித்து விட்டு பூக்கள் செழிக்கவேண்டும் என்றால், எப்படி நடக்கும்?
     உங்க‌ளைச் சுற்றி இருப்பவர்களை கவனித்துக்கொள்வதை, ஒரு கடமையாக மட்டுமே நினைத்தால், அது அவர்களை இழிவு படுத்துவதற்குச் சமம்.
     குழந்தையுடன் தினம் 15 நிமிடம் செலவு செய்வதை, உங்கள் கடமை என்று நினைத்து செய்தால், நீங்கள் ஒரு மோசமான தந்தை. மனைவியிடம் கடமை உணர்வோடு காதல் வார்த்தைகளை உதிர்ப்பவரானால், நீங்கள் ஒரு மோசமான கணவன். வயது முதிர்ந்த அப்பவை கவனித்துக்கொள்வதை கடமையாக நினைத்தால், நீங்கள் ஒரு மோசமான மகன்.
     கடமையாக செய்வதில் பாதியளவு செய்தால் கூட, அன்பினால் செய்வதே மேன்மையானது. எந்தக்கட்டத்திலும் கடமை என்பது அன்புக்கு ஒரு மாற்றாக முடியாது.
     இழப்பினாலோ வருத்ததினாலோ வரும் குடம் குடமான கண்ணீரைவிட, அன்பினால் வெளிப்படும் ஒற்றைத் துளி கண்ணிருக்கு மதிப்பு அதிகம்.
     இதயத்தில் அன்பு இல்லாமல், கடமை உணர்வோடு உங்கள் கைகள் வழங்கும் எதையும், அடுத்தவர் சந்தோசமாக எற்றுக்கொள்வது இல்லை. ஒரு குற்ற உணர்வுடன் தான்,  அவர்களின் இயலாமையால் தான் எற்கிறார்கள். இந்த நிலமைக்கு ஆளாகிவிட்டோமே என்று அவர்களுக்கு அது வேதனையைத்தான் தருகிறது..
     உறவுகள் கசந்து போவதற்கு முக்கிய காரணமே, அன்பை வற்றிப் போக விட்டுவிட்டு, வெறும் கடமை உணர்வோடு செய்யப்படும் செயல்கள் தாம்.
     அன்பு என்பது பூரணமானது, உண்மையான அன்பில் எதிர்பார்ப்புகள் கிடையாது. ஏமாற்றங்கள் கிடையாது.
     செய்வதை கடமையாக நினைத்து செய்யாமல், அன்பு உணர்வோடு செய்து பாருங்கள். உறவுகள் அமுதமாக இனிக்கும்........ உங்கள் வாழ்கையிலும் ஆனந்தம் மலரும்......

வாழ்க வளமுடன்!