Wednesday, September 28, 2011

வேலையிலேயே மூழ்குதல் ஆனந்தம்


      வேலையிலேயே மூழ்கி கிடப்பவனுக்கும் தங்களது வேலையில் முழுமையாக இருப்பவனுக்கும் என்ன வித்தியாசம்
      இந்த வேற்றுமை மிகப் பெரிது. வேலையில் முழ்கி இருப்பவன் தனது வேலையில் முழுமையாக இல்லை. வேலை வெறி பிடித்தவன் வேலைக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறான். அவனால் மௌனமாக அமைதியாக உட்கார முடியாது. எதையாவது செய்தாக வேண்டும். அது தேவையா இல்லையா அது கேள்வியே கிடையாது.
      எப்படி மக்கள் போதைக்கு அடிமையாகி இருக்கிறார்களோ அது போல வேலை வெறி பிடித்தவன் வேலைக்கு அடிமையாகி கிடக்கிறான். வேலைதான் அவர்களது போதை. அது அவர்களை ஆக்ரமித்திருக்கிறது. அது அவர்களது கவலையிலிருந்து அவர்களை நகர்த்தி வைத்திருக்கிறது. அது அவர்களது பதட்டத்திலிருந்து அவர்களை நகர்த்தி வைத்திருக்கிறது. அது மற்ற போதைகளைப் போலவே உனது கவலை, பயம், பதட்டம், வேதனை ஆகியவற்றை முழ்கடித்து விடுகிறது.
      அதனால் வேலைவெறி பிடித்தவர்கள் தியானத்திற்கு எதிரானவர்கள். ஒவ்வொரு பழக்கமும் நீ தியானிப்பவனாக மாறுவதை தடுக்கக் கூடியது. எல்லா பழக்கங்களும் விட வேண்டியவையே.
      உனது வேலையில் நீ முழுமையாக இருப்பது என்பது முற்றிலும் வேறுபட்ட விஷயம். வேலையில் முழுமையாக இருப்பது ஒரு பழக்கமல்ல. அது ஒருவிதமான தியானம். நீ உனது வேலையில் முழுமையாக இருக்கும் போது உனது வேலை நேர்த்தியாக அமையக்கூடிய சாத்தியமுள்ளது. அந்த நேர்த்தியான வேலையின் மூலம் ஒரு சந்தோஷம் உன்னுள் எழும்.
      உன்னால் வேலையில் முழுமையாகவும் நேர்த்தியாகவும் இருக்க முடிந்தால், வெறுமனே உட்கார்ந்திருக்கவும் முழுமையான மௌனத்தில் அமரவும் உன்னால் முடியும். எப்படி முழுமையாக இருப்பது என்று உனக்குத் தெரியும். உனது கண்களை மூடிக் கொண்டு முழுமையாக உள்ளே இருப்பாய். முழுமையாக வாழ்வது எப்படி என்பதன் ரகசியம் உனக்குத் தெரியும்.
      அதனால் வேலையில் முழுமையாக இருப்பது தியானத்தில் உதவி செய்யும். வேலை வெறி பிடித்தவனால் தியானம் செய்ய முடியாது. அவனால் ஒரு சில நிமிடங்கள் கூட அமைதியாக உட்கார்ந்திருக்க முடியாது. அவன் அமைதியற்று இருப்பான். அவன் தனது நிலையை மாற்றிக் கொண்டேயிருப்பான். அவன் எதையாவது செய்வான். இந்த பாக்கெட்டில் அல்லது அந்த பாக்கெட்டில் பார்ப்பான். அதில் எதுவும் இல்லையென அவனுக்குத் தெரியும். அவன் தனது கண்ணாடியை எடுத்து சுத்தம் செய்து போட்டுக் கொள்வான். அது சுத்தமாகத்தான் இருக்கிறதென்று அவனுக்குத் தெரியும்.
      தனது வேலையில் முழுமையாக இருக்கும் மனிதன் வேலை வெறி பிடித்தவனல்ல. அவன் முழுமையாக இருப்பான், எதிலும் முழுமையாக இருப்பான். அவன் காலாற நடந்தாலும் சரி, தூங்கினாலும் சரி, அதில் அவன் முழுமையாக இருப்பான். அவன் நடக்கும் போது வெறுமனே நடப்பது மட்டுமே வெறெதுவும் இல்லை. வேறு நினைப்பு எதுவும் இல்லை. கற்பனை செய்வதில்லை. தூங்கும் போது கனவு காண்பதில்லை. தூங்கும் போது தூக்கம் மட்டுமே. சாப்பிடும்போது சாப்பிடமட்டுமே செய்வான்.
நீ அப்படி செய்வதில்லை. நீ சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாய், உனது மனம் ஆயிரத்தோரு இடங்களுக்கு போய் வருகிறது.
      நான் பார்க்கிறேன். ஒரு படுக்கையில் இரண்டு பேர் மட்டும் இருப்பதில்லை. ஒரு கூட்டமே இருக்கிறது. கணவன் மனைவியுடன் கூடிக் கொண்டிருக்கிறான். ஆனால் அவன் சோபியா லாரன்ஸை நினைத்துக் கொண்டிருக்கிறான். மனைவி தனது கணவனுடன் கூடுவதில்லை. அவள் முகம்மது அலியை நினைத்துக் கொள்கிறாள். ஒவ்வொரு படுக்கையிலும் நீ ஒரு கூட்டத்தை காணலாம். ஒருவரும் எந்த செயலிலும் முழுமையாக இருப்பதில்லை. – கூடுவதிலும் கூட.
      செய்யும் செயலை முழுமையாக செய். இல்லாவிடில் செய்யாதே. முழுமையாக இரு. – அப்போது உனது வாழ்வு முழுவதுமே தியானமாகி விடும்.

எதிர் செயல்‍ பதில் செயல் ஆனந்தம்


      எதிர் செயல் எண்ணங்களிலிருந்து வருவது. பதில் செயல் புரிதலிலிருந்து வருவது. எதிர் செயல் கடந்த காலத்திலிருந்து வருவது. பதில் செயல் நிகழ்காலத்தில் இருப்பது. ஆனால் நாம் எப்போதும் எதிர் செயல்தான் செய்கிறோம். – நம்மிடம் எப்போதும் உள்ளே எதிர்செயல் ஏற்கனவே தயாராக உள்ளது.
      யாரோ எதையோ செய்கிறார்கள். நாம் ஏதோ பட்டன் அழுத்தப்பட்டது போல எதிர்செயல் செய்கிறோம். யாரோ உன்னை அவமதிக்கிறார்கள். – நீ கோபமடைகிறாய். அது முன்போ நிகழ்ந்தது. அது எப்போதும் அப்படித்தான் நடக்கிறது. அது ஒரு பட்டன் போல ஆகி விட்டது. யாரோ அதை அழுத்துகிறார்கள். நீ கோபமடைகிறாய். ஒரு வினாடி கூட காத்திருக்கவில்லை. ஒரு வினாடி நேரம் கூட சூழ்நிலையை பார்க்கவில்லை. ஏனெனில் சூழ்நிலை வேறுபட்டிருக்கலாம். உன்னை அவமதித்த ஆள் சரியாக கூறியிருக்கலாம். அவர் உன்னிடம் உன்னைப் பற்றிய உண்மையை கூறியிருக்கலாம். அதனால் நீ அவமானமாக உணர்ந்திருக்கலாம். அல்லது அவர் தவறாக இருக்கலாம். அல்லது அவர் ஒரு குசும்பு பிடித்த ஆளாக இருக்கலாம். ஆனால் நீ அவரைத்தான் பார்க்க வேண்டும்.
      அவர் சரியாக சொல்லியிருந்தால் நீ அவருக்கு நன்றி சொல்ல வேண்டும், ஏனெனில் அவர் உனக்கு ஒன்றை சுட்டிக் காட்டியிருக்கிறார். அவர் உன்னிடம் கருணை காட்டி இருக்கிறார். உண்மையை சொன்னதன் மூலம் உன் நெஞ்சுக்கு நெருக்கமாயிருக்கிறார். அது சுடலாம், ஆனால் அது அவர் தவறல்ல, அல்லது அவன் மடையனாக, அறியாதவனாக, உன்னைப் பற்றி எதுவுமே தெரியாமல் ஏதாவது சொல்லிருக்கலாம். அப்போது அங்கே கோபப்பட வேண்டிய அவசியம் இல்லை. அவர் சொல்வது தவறு எனில் முற்றிலும் தவறான ஒன்றைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. அதில் ஏதோ சிறிதளவு உண்மையில்லாவிட்டால் நீ அதனால் கடுப்படைய மாட்டாய். நீ அதைப் பார்த்து சிரிப்பாய். அதன் முட்டாள்தனத்தைப் பார்த்து அதன் பொருந்தாதன்மையினால் சிரிப்பு வரும். அல்லது அந்த ஆள் ஒரு முசுடு, அவர் எப்போதும் அப்படித்தான், எல்லோரையும் அவமதித்துக் கொண்டிருப்பார். அதனால் அவர் குறிப்பாக உன்னைப் பார்த்துகூறவில்லை. அவர் எப்போதும் போல சொல்லிக் கொண்டிருக்கிறார், அவ்வளவுதான். உண்மையில் செய்ய வேண்டியது எதுவும் இல்லை. அவர் அது போலத்தான்.
      உன்னைக் கவனி. மற்றவர்களை கவனி, மற்றவர்கள் எப்படி ஒரு இயந்திரத்தனமாக, சுயநினைவின்றி, தூக்கத்தில் நடப்பவர்கள் போல செயல்படுகிறார்கள் என்று பார்.
எதிர் செயல் மனதிலிருந்து எழுவது,
பதில் செயல் மனமற்ற நிலையிலிருந்து வருவது.

Friday, September 23, 2011

நம்மை பற்றிய நமது கருத்து ஆனந்தம்


      ஓ-நமி – மாபெரும் அலைகள் என்று பொருள் – என்ற பெயர்கொண்ட ஒரு குத்துச் சண்டை வீரன் ஜப்பானில் இருந்தான். அவன் மிகவும் வலிமையானவன். மேலும் குத்துச்சண்டையில் மிகவும் ஆற்றல் படைத்தவனாக இருந்தான். தனிப்பட்ட முறையில், பள்ளியில் பயிலுகையில் அவன் தனது ஆசிரியரைக் கூட வீழ்த்திவிடுவான். ஆனால் பொதுமேடையில் அவனைவிடச் சிறியவர்கள் கூட அவனை தூக்கி வீசி விடுவர்.
      அவனது இந்த பிரச்சனைக்காக அவன் ஒரு ஜென் குருவிடம் சென்றான். அவரது குருகுலம் கடற்கரையோரம் இருந்தது.
      ஜென் குரு அவனிடம், மாபெரும் அலைகள் என்பது உனது பெயர். ஆகவே இந்த குருகுலத்தில் இன்றிரவு தங்கி கடலின் அலையோசையை கேள். உன்னை அந்த கடலின் அலை என நினைத்துக்கொள். நீ ஒரு குத்துச்சண்டை வீரன் என்பதை மறந்துவிட்டு அந்த கடலலை என எண்ணிக்கொள். அது எப்படி எது எதிரே வந்தாலும் அதை மூழ்கடிக்கிறதோ அது போல உன்னையும் நீ பெரும் அலை என எண்ணிக்கொள். என்றார்.
      ஓ-நமி அங்கே தங்கினான். அவன் அந்த அலையை நினைத்துப்பார்க்க முயன்றான். அவனுக்கு பல்வேறு விஷயங்கள் நினைவுக்கு வந்ததே தவிர அலையை மட்டும் அவனால் நினைக்க முடியவில்லை. பிறகு மெதுமெதுவாக அவன் அந்த அலைகளை மட்டுமே நினைத்தான். இரவு ஏறஏற அலைகள் மேலும் அளவில் பெரிதாகிக் கொண்டே வந்தன. முதலில் புத்தர் சிலைக்கு முன்னே இருந்த பாத்திரத்திலிருந்து பூக்களை கொண்டு சென்றது. பின் அந்த பாத்திரத்தையே கொண்டு சென்றது. பின் புத்தர் சிலையையே கொண்டு சென்றது. அதிகாலையில் அந்த குருகுலம் முழுமையும் நீரால் சூழப்பட்டு இருந்தது. ஓ-நமி முகத்தில் புன்னகையுடன் அங்கே அமர்ந்திருந்தான்.
      அன்று அவன் பொதுமேடையில் குத்துச்சண்டைக்கு சென்றான், வென்றான். அன்றிலிருந்து ஜப்பானில் யாராலும் அவனை வெல்ல முடிந்ததில்லை.
      இது நம்மை பற்றிய நமது கருத்தை எப்படி இழப்பது, எப்படி விடுவது, எப்படி அதிலிருந்து வெளியே வருவது என்பதைப் பற்றிய கதை.
      ஒவ்வொருவரும் அளவற்ற ஆற்றல் படைத்தவர்கள்தாம். உனக்கு உன் பலம் தெரியாது. அது வேறு விஷயம். ஒவ்வொருவரும் பலம் பொருந்தியவர்கள்தாம். அப்படித்தான் இருக்க வேண்டும். ஏனெனில் எல்லோரும் கடவுளிலிருந்து வந்தவர்கள்தான். ஒவ்வொருவரும் இந்த பிரபஞ்சத்திலிருந்து பிறந்தவர்கள்தான். நீ பார்ப்பதற்கு எவ்வளவு சிறியவனாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் நீ சிறியவனல்ல. இருக்கவும் முடியாது. இயல்புப்படி அது அப்படி இருக்கமுடியாது. இப்போது பௌதீக விஞ்ஞானம் சின்னஞ்சிறு அணுவிற்குள் அதீத அளவு சக்தி இருக்கிறது என்று கூறுகிறது. ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரு நகரங்களும் அணுசக்தியால்தான் அழிக்கப்பட்டன. அணு மிகவும் சிறியது. யாராலும் அதைப்பார்க்க முடியாது. அது மிகச்சிறிய புள்ளி போன்றது. மிகவும் கடுகளவானது. இன்றைய விஞ்ஞானத்தால் கூட மிகப்பெரிதாக்கிக் காட்டும் கருவிகளின் உதவியால்தான் அதைப் பார்க்க முடிகிறது. ஆனால் அந்த அளவு சிறிய அணுவிற்கே அளவற்ற ஆற்றல் இருக்குமானால் மனிதனைப்பற்றி என்ன சொல்ல. மனிதனுக்குள்ளே உள்ள தன்ணுணர்வுச் சுடரைப்பற்றி என்ன சொல்ல. என்றாவது ஒருநாள் அந்தச்சுடர் மிகப் பெரிதாகி வெடிக்கும். அப்போது அளவற்ற ஆற்றலும் ஒளியும் வெளிப்பட்டே தீரும். அதுதான் ஒரு புத்தருக்கும், ஒரு ஜீஸஸூக்கும் நிகழ்ந்தது.
      இந்த சூத்திரத்தை நினைவில் கொள். நீ உன்னை நினைவில் கொள்ளும்போது கடவுளை மறந்து விடுகிறாய். நீ உன்னை மறந்துவிடும்போது நீ கடவுளை நினைவில் கொள்கிறாய். உன்னால் இரண்டையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. அலை தன்னை அலை என்று நினைவில் வைத்துக்கொள்ளும்போது, அது தான் கடல் என்பதை மறந்து விடுகிறது. அலை தன்னைக் கடலாக உணரும்போது, அது தான் அலை என்பதை எப்படி நினைவில்கொள்ள முடியும். ஏதாவது ஒன்றுதான் சாத்தியம். அலை தன்னை அலை அல்லது கடல் என ஏதாவது ஒன்றைத்தான் நினைவில் கொள்ள முடியும். அது ஒரு கண்கட்டி வித்தை. உன்னால் இரண்டையும் நினைவு கொள்ள முடியாது. அது சாத்தியமில்லை.
      தனிப்பட்ட முறையில் அவனால் தனது அகங்காரத்தை, தன்னை முழுமையாக மறந்துவிட முடியும். அப்போது அவன் மிகவும் ஆற்றல் உள்ளவனாய் இருக்கிறான். ஆனால் பொது மேடையில் அவன் தன்னை மிகவும் நினைவில் வைத்துக் கொள்கிறான். அப்போது அவன் பலவீனமடைந்து விடுகிறான். நான் – என்பதை நினைவில் வைத்துக் கொள்வது பலவீனம். நான் – என்று நினைவில் கொள்ளாமல் இருப்பது பலம்.
      அவனது இந்த பிரச்சனைக்காக அவன் ஒரு ஜென் குருவிடம் சென்றான். அவரது குருகுலம் கடற்கரையோரம் இருந்தது. ஜென் குரு அவனிடம், மாபெரும் அலைகள் என்பது உனது பெயர். ஆகவே இந்த குருகுலத்தில் இன்றிரவு தங்கி கடலின் அலையோசையை கேள்.....................
      ஒரு குரு என்பவர் ஒவ்வொருவருக்கும் ஏற்ற வழிமுறையை உருவாக்குபவர். ஒரு குரு என்பவர் குறிப்பிட்ட வழிமுறை ஏதும் இல்லாதவர். அவர் இந்த ஓ-நமி – மாபெரும் அலைகள் – என்ற மனிதனைப் பார்த்தார். அவனது பெயரிலிருந்தே அவனுக்கு ஒரு வழிமுறையை உருவாக்கிக் கொடுத்தார்.
      மாபெரும் அலைகள் என்பது உனது பெயர். ஆகவே இந்த குருகுலத்தில் இன்றிரவு தங்கி கடலின் அலையோசையை கேள்.....................
      கடவுளின் கோவிலுக்குள் நுழைவதற்கான அடிப்படை ரகசியங்களில் ஒன்று கவனிப்பது.கவனிப்பது என்றால் ஒன்றுவது. கவனிப்பது என்றால் உன்னை முற்றிலுமாக மறந்து விடுவது. அப்போது மட்டுமே உன்னால் கவனிக்க முடியும். யாரையாவது நீ கவனித்தால் அப்போது உன்னை நீ மறந்து விடுவாய். உன்னை உன்னால் மறக்கமுடியாவிட்டால் நீ கவனிக்கமாட்டாய். நீ உன்னைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தால் நீ கவனிப்பது போல பாசாங்குதான் செய்து கொண்டிருப்பாய். கவனிக்க மாட்டாய். நீ உனது தலையை ஆட்டிக் கொண்டிருப்பாய். ஆம் என்றோ இல்லை என்றோ சிறிது நேரத்திற்கொருமுறை சொல்லிக் கொண்டிருப்பாய். ஆனால் நீ கவனிக்கமாட்டாய்.
      கவனிக்கும்போது நீ வெறும் வழி போல, கருவறை போல, பெற்றுக் கொள்ளுதல் போல மாறி விடுகிறாய். ஒரு பெண்மை போலாகிவிடுகிறாய். மேலும் சென்றடைய ஒருவர் பெண்மைதன்மை அடைந்தாக வேண்டும். போராடிக்கொண்டு, சண்டையிட்டுக் கொண்டு நீ கடவுளை சென்றடைய முடியாது. நீ கடவுளை சென்றடைய வேண்டுமானால்.......அல்லது இப்படி சொன்னால் சரியாக இருக்கும். நீ பெற்றுக் கொள்பவனாக, பெண்மை தன்மையுடன் இருக்கும்போதுதான் கடவுள் உன்னை வந்தடைவார். நீ‍இன் என்பது போல, ஒரு பெறுபவனாக மாறும்போது கதவு திறக்கிறது. நீ காத்திருக்கிறாய்.
      பொறுமையாளனாக மாற கவனிப்பது உதவும். புத்தர் கவனிப்பதை மிகவும் வலியுறித்தினார். மகாவீரர் கவனிப்பதை மிகவும் வலியுறுத்தினார். கிருஷ்ணமூர்த்தி சரியான கவனித்தல் என்பதை திரும்ப திரும்ப கூறினார். காதுதள் அதன் சின்னம் போல உள்ளதை நீ கவனித்திருக்கிறாயா. உன்னுடைய காதுகள் வெறுமனே ஓட்டைகள் மட்டுமே. வழிதான். வேறெதுவும் இல்லை. உனது காதுகள் உனது கண்களை விட அதிகம் பெண்மையானவை. கண்கள் அதிக ஆண்மையானவை. காதுகள் – இன் – பாகம். கண்கள் – யாங் – பாகம். யாரையாவது பார்க்கும்போது நீ ஆக்கிரமிக்கிறாய். கேட்கும்போது நீ பெறுபவனாகிறாய்.
      அதனால்தான் யாரையாவது உற்றுப்பார்ப்பது நாகரீகமற்றதாக, வன்முறையானதாக மாறுகிறது. அதற்கு அளவு உள்ளது. மனோவியலார் மூன்று நிமிடங்கள் என்று கூறுகின்றனர். மூன்று நிமிடங்கள் ஒருவரை உற்று பார்த்தால் சரி, அதை தாங்கி கொள்ள முடியும். அதற்கு மேல் என்றால் நீ பார்க்கவில்லை. நீ உறுத்துகிறாய். அவரை நீ தண்டிக்கிறாய். நீ அத்துமீறுகிறாய்.
      ஆனால் கவனிப்பதற்கு எல்லை இல்லை. ஏனெனில் காதுகள் அத்து மீறுவதில்லை. அவை எங்கே உள்ளனவோ அங்கேயே இருக்கின்றன. கணகளுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. இரவில் கவனித்திருக்கிறாயா, கண்களுக்கு ஓய்வு தேவை. காதுகளுக்கு ஓய்வு தேவையில்லை. அவை 24 மணி நேரமும் திறந்திருக்கின்றன – வருடம் பூராவும். கண்கள் சில நிமிடங்கள் கூட திறந்திருப்பதில்லை. தொடர்ந்து சிமிட்டிக் கொண்டே இருக்கின்றன. தொடர்ந்து களைப்படைந்து கொண்டே இருக்கின்றன. ஆக்கிரமித்தல் களைப்படைய செய்யும். ஏனெனில் ஆக்கிரமித்தல் உனது சக்தியை வெளியே எடுக்கிறது. இதனால் கண்கள் ஓய்வெடுப்பதற்காக தொடர்ந்து சமிட்டிக் கொண்டே இருக்கின்றன. அது ஒரு தொடர் செயல். ஆனால் காதுகள் ஓய்வில்தான் இருக்கின்றன.
      அதனால்தான் பல மதங்களும் இசையை பிராத்தனைக்கு உபயோகிக்கின்றன. ஏனெனில் இசை உனது காதுகளை மேலும் துடிப்புள்ளதாக, மேலும் உணர்வுள்ளதாக ஆக்குகிறது. ஒருவர் காதுகளாக அதிக அளவிலும் கண்களாக குறைந்த அளவிலும் இருக்க வேண்டும்.
நீ உன்னுடைய அகங்காரத்தை விட்டுவிட்டால் எல்லா தோல்விகளையும் எல்லா விரக்திகளையும் எல்லா அவமானங்களையும் விட்டுவிட்டாய். அதை சுமந்து சென்றால் நீ தோல்வியில்தான் முட்டிக் கொள்ள வேண்டும். அந்த அகங்காரத்தை விட்டுவிடு. முடிவற்ற ஆற்றல் உன் மூலம் பெருகியோட ஆரம்பிக்கும். அந்த அகங்காரத்தை விடுவதன் மூலம் நீ நதியாகிறாய், நீ ஓட ஆரம்பிக்கிறாய், நீ கரைகிறாய், நீ பெருகியோடுகிறாய். – நீ உயிர் துடிப்புள்ளவனாகிறாய்.
      நீ உன் முயற்சிப்படி வாழ ஆரம்பத்தால் நீ மடத்தனம் செய்கிறாய். அது ஒரு மரத்தில் உள்ள இலை அதன் முயற்சிப்படி வாழ ஆரமபிப்பதை போன்றது. அது மட்டுமல்ல, அது மரத்துடன் சண்டையிடும், வேருடன் சண்டையிடும். இவை யாவும் அதற்கு கெடுதல் செய்வதாக நினைக்கும். நாம் ஒரு மிகப் பெரிய மரத்தில் உள்ள இலைகள்தான். அதை கடவுள் என்றோ, இயற்கை என்றோ, முழுமை என்றோ எப்படி வேண்டுமானாலும் அழை. ஆனால் நாம் அடிமுடியற்ற வாழ்வெனும் மரத்தில் இருக்கும் சிறிய இலைகள்தான். போராட வேண்டிய அவசியம் இல்லை.
      உயிர் துடிபுள்ளவனாகும் போது உன்னிடம் இருந்து அகங்காரம் மறைகிறது. அகங்காரம் மரையும் போது நீ கடவுள் தன்மை உள்ளவனாகிறாய். கடவுள் தன்மை வரும்போது அளவற்ற ஆற்றலும் நிதானமும் சரியாக சிந்திக்கும் திறனும் வரும். வெற்றிக்காக உழைக்க வேண்டாம். அது உன் செயலிலேயே ஒளிந்துள்ளது, தானாக் கிடைக்கும். அப்போது மகிழ்ச்சியாக உண‌ர்வாய். இந்த மாதிரி வெற்றியே உனக்கு முழுமை கொடுக்கும்.