உலகத்தில் இருக்கும் எல்லா விஷயங்களையும், ஒரு மனிதனால் செய்ய முடிகிறபோது, ஏன் யோகா செய்ய வேண்டும்?
மனிதர்களால் செய்ய முடிந்த அத்தனையும் அடிப்படையில், அவர்கள் யார் என்பதன் வெளிப்பாடுதான். யாரோ ஒருவர் பாடுகிறார்கள், யாரோ ஆடுகிறார்கள், யாரோ புத்தகம் எழுதுகிறார்கள், யாரோ ஒரு ஓவியத்தை வரைகிறார்கள். நீங்கள் எதைச் செய்தாலும் அது நீங்கள் யார் என்பதன் வெளிப்பாடுதான்.
நீங்கள் விழிப்புணர்வுள்ளவராக முடியும், இருந்தாலும், நீங்கள் சொல்லும் அனைத்தும், செய்யும் அனைத்தும், உங்களிடமிருந்து வெளி வரும் அனைத்தும் அடிப்படையில் நீங்கள் யார் என்பதன் வெளிப்பாடுதான். அப்படிப் பார்க்கும்போது, யோகா இதற்கு முற்றிலும் மாறானது, ஏனென்றால் அது நீங்கள் யார் என்பதன் வெளிப்பாடு அல்ல – அது நீங்கள் யார் என்பதை தீர்மானிப்பது. நீங்கள் என்னவாக ஆக விரும்புகிறீர்கள் என்பதைத் தீர்மானித்து, ஒருவரது இருப்பின் அடிப்படையையே, மூலத்தையே மாற்றிவிடுவது.
இன்று, யோகாவின் மூலம் உங்கள் மூளையின் செயல்பாடுகளை, உங்கள் இரசாயனத்தை, உங்கள் மரபணுக்களின் அடிப்படையைக் கூட மாற்றிவிட முடியும் என்று நிரூபிப்பதற்குப் போதுமான அளவு மருத்துவரீதியான, விஞ்ஞானரீதியான சான்றுகள் இருக்கின்றன. உண்மையில் இதற்கு எந்த நிரூபணங்களும் தேவையில்லை, ஏனென்றால், அதை நாம் எப்போதுமே அனுபவத்தில் பார்த்து வந்திருக்கிறோம், ஆனால் இன்று இதை நிரூபிக்க வேண்டுமானால் அதற்கும் விஞ்ஞானரீதியான சாட்சியங்கள் உள்ளன.
எனவே, யோகா என்பது நீங்கள் யார் என்பதன் வெளிப்பாடு அல்ல, அது நீங்கள் எந்த தன்மையில் இருக்க விரும்புகிறீர்கள் என்பதைத் தீர்மானிப்பது பற்றியது. தற்போது நீங்கள் யார் என்பதை உருவாக்கியிருக்கும் அடிப்படை மூலக்கூறுகளையே மாற்றுவது. யோகாவை ஒரு அமைப்பு ரீதியாகப் பார்த்தால், நாம் செய்யும் மற்ற எந்த செயலையும் விட, இதற்கு மிகுந்த ஈடுபாடு தேவைப்படுகிறது. மற்ற செயல்களெல்லாம் நாம் யார் என்பதன் வெளிப்பாடுகள் மட்டுமே. ஒரு குறிப்பிட்ட செயலிலேயே உங்கள் முழு திறனையும் வெளிப்படுத்தினால், அதுவும் கூட ஓரளவு உங்களை நிலைமாற்றும்.
சமைப்பதில் முழு மனதுடன் ஈடுபட்டால், சில மாற்றங்கள் நிகழும். முழு மனதுடன் பாடினால், முழு மனதுடன் ஆடினால் சில மாற்றங்கள் நிகழும். ஆனால் அவற்றில் ஒரு குறிப்பிட்ட தாக்கம் மட்டுமே இருக்கும், ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட செயலில் மட்டுமே நீங்கள் முழுமையான ஈடுபாட்டைக் காட்டினீர்கள். ஆனால் அடிப்படையில் அந்த செயல், இயல்பிலேயே நீங்கள் யார் என்பதன் வெளிப்பாடுதான். அது உங்கள் தன்மை என்ன என்பதை தீர்மானிப்பதில்லை.
நாம் நம்முடைய செயலை நிலைமாற்றுவதற்காக ஆசனா, தியானம் செய்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த ஆசனா மற்றும் தியானம் ஒரு வெளிப்பாடு அல்ல. இது ஒரு முறை. இது ஒரு வழி. நீங்கள் யார் என்பதை மாற்றுவதற்கான ஒரு தொழில்நுட்பம். இதன் மூலம் உண்மையில் நீங்கள் இப்போது யாராக இருக்கிறீர்களோ அந்த வடிவத்தை மாற்றலாம். அதை மாற்ற முடியும், ஏனென்றால் நீங்கள் என்பது உங்கள் மரபணு சார்ந்த விஷயங்கள், அதற்கு முன்னர் உங்களது கர்மவினைகள் என அனைத்தும் கலந்தே உள்ளது. அதனால்தான் நீங்கள் ஒரு குறிப்பிட்ட கருவறையைத் தேர்ந்தெடுத்து அதில் பிறந்தீர்கள். நீங்கள் பிறந்த அந்த கணத்திலிருந்து, பலவகையான அனுபவங்கள், சூழ்நிலைகள், எண்ணங்கள், உணர்ச்சிகள், உறவுகள், தொடர்புகள் என்று எவையெல்லாம் உங்களுக்குள் சென்றிருக்கின்றனவோ, நீங்கள் எதையெல்லாம் உள்வாங்கிக் கொண்டீர்களோ, அவையெல்லாம் சேர்ந்து உங்களை ஒரு குறிப்பிட்ட வகையான மனிதராக ஆக்கியிருக்கிறது.
“நான் ஒரு குறிப்பிட்ட வகையான மனிதன்” என்று நீங்கள் சொல்லும்போது, எனக்கு இந்த மாதிரியான கட்டாயங்கள் இருக்கின்றன என்பதைத்தான் அப்படிச் சொல்கிறீர்கள். “நான் இப்படிப்பட்ட ஒரு மனிதன்” என்று நீங்கள் சொன்னால், இந்த வகையான கட்டாயங்களுடன் என்னை நான் அடையாளப்படுத்திக் கொண்டுவிட்டேன், அதனால் நான் இப்படிப்பட்ட மனிதனாக இருக்கிறேன் என்று சொல்கிறீர்கள். நான் காலை மனிதர் அல்லது மாலை மனிதர் அதாவது மாலையில் என்னால் விழிப்புணர்வுடன் வேலை செய்ய முடியாது அல்லது காலையில் என்னால் விழிப்புணர்வுடன் வேலை செய்ய முடியாது என்று சொல்கிறீர்கள். இப்படி உங்கள் வெளிப்பாடுகள் வளர்ந்து கொண்டே போகிறது. சிலர் ப்ளாக்பெரி அலைபேசி வைத்திருக்கிறார்கள், சிலர் ஆப்பிள் அலைபேசி வைத்திருக்கிறார்கள்; இப்படி இந்த உலகம் ஏகப்பட்ட வழிகளில் பகுக்கப்பட்டுள்ளது. அவை வெறும் அலைபேசிகள் அல்ல, அவற்றை நீங்கள் பயன்படுத்திவிட்டு கீழே வைப்பதுடன் முடிந்துவிடுவதில்லை, அவற்றுடன் நீங்கள் அடையாளப்பட்டு விடுகிறீர்கள். சிலர் சப்பாத்தி சாப்பிடுவார்கள், சிலர் அரிசி சாப்பிடுவார்கள், சிலர் தோசை சாப்பிடுவார்கள், சிலர் இட்லி சாப்பிடுவார்கள்… இப்படி எல்லா வகையான மனிதர்களும் இருக்கிறார்கள்.
நீங்கள் எந்த வகை என்பது ஒருவிதமான கட்டாயம்தான். இதுபோன்ற கட்டாயங்களில் சிக்கிக் கொள்ள விரும்பாததால் நீங்கள் உங்களை யோகாவின் செயல்முறைகளில் ஈடுபடுத்திக் கொள்கிறீர்கள். அந்தக் கணத்துக்கு என்ன தேவையோ அப்படிப்பட்டவராக இருக்க விரும்புகிறீர்கள். அது காலையாக இருந்தால் ஒரு காலை மனிதராக இருக்கிறீர்கள், மாலையில் ஒரு மாலை மனிதராக இருக்கிறீர்கள். அதாவது நீங்கள் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கிறீர்கள். இந்த நெகிழ்வுத்தன்மையை முதலில் உங்கள் உடலிலிருந்து தொடங்குகிறீர்கள். பிறகு அது உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் வந்துவிட வேண்டும் – உங்கள் உடல் அமைப்பு, உங்கள் மன அமைப்பு, உங்கள் உணர்ச்சிகளின் அமைப்பு, உங்கள் கர்ம அமைப்புகள் என்று அனைத்திலும் வந்துவிட வேண்டும். அனைத்தும் நெகிழ்வுத்தன்மையுடன் ஆகிவிட வேண்டும், எப்படித் தேவையோ அப்படி ஆக வேண்டும். இந்த வழி அல்லது அந்த வழியில் சிக்கிக் கொண்டிருக்கக் கூடாது.
யோகா என்பது, நாம் ஆளுமைத்தன்மை என்று அழைக்கும், நமக்குள் வலிமையாகப் பதிந்திருக்கும் குறிப்பிட்ட சில கட்டுப்பாடுகளை உடைக்கும் ஒரு செயல்முறை, ஒரு தொழில்நுட்பம், ஒரு விஞ்ஞானம். நீங்கள் ஒரு குறிப்பிட்ட மனிதராக இருப்பதிலிருந்து ஒரு இருப்பாக மாறுவதற்கு உதவுவது. நீங்கள் ஒரு மனிதராக இருக்கிறேன் என்னும்போது உங்களைச் சுற்றி ஒரு கூட்டை உருவாக்கிவிட்டீர்கள் என்று பொருள். நீங்கள் உருவாக்கிவிட்ட அந்த கூட்டிற்குள்தான் உங்களால் செயல்பட முடியும். இந்த கூட்டை உடைத்தால், அதற்கு மேல் நீங்கள் ஒரு மனிதராக இல்லாமல், வெறும் ஒரு இருப்பாக இருப்பீர்கள் – ஒரு உயிராக, கடவுளைப் போன்று ஒரு இருப்பாக மட்டும் இருப்பீர்கள். யோகா என்றால் மெதுவாக அந்தக் கூட்டை மெலிதாக்கி, மெலிதாக்கி, அதில் நிறைய நுண்துளைகளை இட்டு, ஒருநாள் அந்தக் கூடு இல்லாமல் நீங்கள் இருக்கமுடியும் என்ற நிலையை ஏற்படுத்துவது என்று பொருள்.
இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் பொருட்தன்மையின் அத்தனை அம்சங்களும் ஒரு சுழற்சி முறையில் செயல்படுகின்றன. கிரகங்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன, சூரிய மண்டலம் நகர்ந்து கொண்டிருக்கிறது. பால்வெளி மண்டலத்தில், பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்தும் சுழன்று வருகின்றன. உங்கள் உடலுடன் நீங்கள் அதிகமாக அடையாளப்படும்போது, நீங்களும் ஒரு சுழற்சியில் சிக்கிக் கொள்கிறீர்கள். உங்கள் அனுபவங்கள் சுழற்சி அடைகின்றன, வாழ்க்கையின் செயல்பாடு சுழற்சி முறையில் அமைகிறது. நீங்கள் கவனமாக ஆராய்ந்து பார்த்தால், உங்கள் வாழ்வில் நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் கூட சுழற்சி முறையில்தான் வருகின்றன.
யோகா என்றால், ஒரு நிலையில், வாழ்வின் சுழற்சியினை உடைப்பது; இப்போது சுழற்சியில் இருக்கும்போது நீங்கள் எங்கோ செல்வதைப் போன்று ஒரு எண்ணம் உங்களுக்கு ஏற்படுகிறது, ஆனால் உண்மையில் நீங்கள் எங்கும் செல்வதில்லை. மீண்டும், மீண்டும் அதே சுழற்சிக்குள்தான், அதே விஷயத்தைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள். யோகா என்றால் இந்த வளையத்தைத் திறந்து, ஒரு நேர்கோடாக நீட்டி, அந்த நேர்கோட்டை நீங்கள் பின்தொடர்ந்து சென்றால், ஏதோ ஓரிடத்திற்கு நீங்கள் சென்று சேர்வதற்கு உதவுவது என்று பொருள். நீங்கள் சுற்றி, சுற்றி வந்து கொண்டிருக்க மாட்டீர்கள்.
உங்களில் பலர் இதை ஏற்கனவே ஆராய்ந்து பார்த்திருக்கக் கூடும். இதுவரை ஆராயவில்லையென்றால் இனி இதை ஆராயாதீர்கள், ஏனென்றால் அந்த ஆராய்ச்சியின் முடிவுகளை நான் இப்போதே தருகிறேன். இரண்டு, மூன்று, ஐந்து வருடங்களாக நீங்கள் சாதனா செய்து வந்திருக்கலாம். அதை நீங்கள் ஒரு மூன்று மாதங்கள் நிறுத்திப் பாருங்கள். திடீரென்று இவையெல்லாம் என்னுள் ஒரு பகுதியாக இருந்தனவா என்று நீங்கள் கற்பனை கூட செய்து பார்த்திராத கட்டாயங்களையெல்லாம் பார்ப்பீர்கள். முன்பே போய்விட்ட அவையெல்லாம், திடீரென்று உங்களில் ஒரு பகுதியாகிவிடும். ஆசிரமத்தில் நடக்கும் ஒரு சாதாரண விஷயம், காலை பத்து மணிக்கும், மாலை ஏழு மணிக்கும் பரிமாறப்படும் உணவு. குறைந்தபட்சம் 90 சதவிகித மக்கள் இதை கடைப்பிடிக்கிறார்கள், இன்னொரு பத்து சதவிகிதம் பேர் – அவர்களுடைய கைகள் எதையோ தின்று கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு நொறுக்குத்தீனியை அவர்கள் சாப்பிட வேண்டியிருக்கிறது.
தங்கள் சாதனாவை ஒழுங்காக செய்பவர்கள் காலையில் உண்கிறார்கள், மீண்டும் மாலை வரை அவர்கள் உணவைப் பற்றி நினைப்பதில்லை. அதைப் பற்றி அவர்களுக்குள் நினைவு தோன்றுவதில்லை, ஏனென்றால் அது இனியும் அவர்களுக்கு ஒரு கட்டாயமாக இருப்பதில்லை.
நீங்கள் உண்ணுங்கள், விழிப்புணர்வுடன் உண்ணுங்கள், இல்லையேல் வேண்டாம். உங்கள் சாதனாவை மூன்று மாதங்களுக்கு நிறுத்திப் பாருங்கள்; உங்கள் கை எதை எதையோ எடுத்து உங்கள் வாயில் போட்டுக் கொள்ளும். இந்த கட்டாயங்களெல்லாம் நீங்கள் சாதனாவை உடைத்த உடன் மீண்டும் உங்களுக்குள் திடீரென வந்துவிடும். ஏனென்றால் இயற்கை உங்களை அத்தனை சுலபமாக விட்டுவிடாது. அதற்காக நீங்கள் தொடர்ந்து செயலாற்ற வேண்டும். இல்லையேல், வட்டத்தில் சுழன்று கொண்டிருப்பதிலேயே நீங்கள் மகிழ்ச்சி அடைய வேண்டியதுதான்.
ஒரு சுழற்சியை ஒரு சர்கஸ் என்றும் சொல்லலாம். நீங்கள் விழிப்புணர்வடைந்து விட்டால், அனைத்தும் உங்களுக்கு ஒரு சர்கஸ் என்று தோன்றும். நீங்கள் விழிப்புணர்வுடன் இல்லையென்றால், உங்களுக்கு முன்னே மூன்று அடி வரை மட்டும்தான் உங்களால் பார்க்க முடியும். பிறகு அது மட்டுமே உங்களுக்கு உண்மையாக இருக்கும். உங்கள் வாழ்வின் முழு சுழற்சியையும் உங்களால் பார்க்க முடிந்தால், திடீரென்று அது ஒரு சர்கஸ் போல ஆகிவிடுகிறது. அது ஒரு சர்கஸ் என்று நீங்கள் உணரும்போது, மீண்டும், மீண்டும் அந்த சர்கஸுக்குள் போக நீங்கள் விரும்ப மாட்டீர்கள். உங்கள் தொலைநோக்குப் பார்வை மிகவும் குறுகியதாக இருந்தால்தான், உங்களுக்கு முன்னால் மூன்று அடி வரை மட்டும் பார்ப்பீர்கள், அவை அனைத்தும் உங்களுக்கு உண்மையானதாகத் தெரியும். நீங்கள் உங்களைத் திறந்த நிலையில் வைத்துக் கொண்டு முழு வட்டத்தையும் பார்த்தால், நீங்கள் சென்று கொண்டிருக்கும் வழியைப் பார்த்தால், அப்போது அது ஒரு சர்கஸ் போலத் தோன்றும். கண்டிப்பாக அதை நீங்கள் முடிவின்றி தொடர விரும்ப மாட்டீர்கள். அதற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள்.
வாழ்க வளமுடன்!........