Showing posts with label உடல். Show all posts
Showing posts with label உடல். Show all posts

Friday, May 23, 2014

வாழ்க்கை முறைக்கான கடிகாரம்! ஆனந்தம்



     
      நாம் தன்னிறைவுடன் வாழ்வதற்கு நம் உடலும் ஒத்துழைக்க வேண்டும். உடல் நிலை சீராக இருந்தால் நம் மனமும் சீராக இருக்கும். நாம் எண்ணியதை முடிக்க முடியும்! ஆம் ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்க முடியும். எனவே உடலைக்காத்து மனதைப்போற்றுவோம். உடல் ஆரோக்கியம் தான் நமக்கு நம்பிக்கையும், தன்னம்பிக்கையையும் கொடுக்கும் சக்திகளிளேயே முதன்மையானதாகும்.

      நம் உடல் ஒவ்வொரு பாகத்திற்கென த‌னித்தனியே நேரத்தை ஒதுக்கிக்கொண்டு சுழன்று கொண்டிருக்கிறது ஒவ்வொரு உறுப்புக்கும் இரண்டு மணி நேரத்தை ஒதுக்கிக்கொண்டு வேலை செய்கிறது. அந்த இரண்டு மணி நேரம் முடிந்தவுடன், தன் நேரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.அதன் அட்டவணை இதோ....

      விடியற்காலை 3.00 ‍- 5.00 மணி‍‍‍‍‍‍‍‍‍ - நுரையீரலின் நேரம் - இந்த நேரத்தில் சுவாசப்பயிற்ச்சி செய்து காற்றின் மூலம் வரும் ப்ராணசக்தியை உடலில் சேகரித்தால் ஆயுள் நீளும். தியானம் செய்ய ஏற்ற நேரம் இது. ஆஸ்துமா நோயளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.

      விடியற்காலை 5.00 ‍- 7.00 மணி‍‍‍‍‍‍‍‍‍ - பெருங்குடலின் நேரம் - கலைக்கடன்களை இந்த நேரத்தில் முடித்து விட வேண்டும். உயிரணுக்களின் எண்ணிக்கை மிகஅதிகமாக உள்ள நேரமும் இதுவே. உடற்ப்பயிற்ச்சி செய்ய ஏற்ற நேரமும் இதுவே.

      காலை 7.00 ‍- 9.00 மணி‍‍‍‍‍‍‍‍‍ - வயிற்றின் நேரம் - இந்த நேரத்தில் கல்லைத் தின்றாலும் வயிறு அரைத்து விடும். காலை உணவை பேரரசன் போல உண்ண வேண்டும் என்று சொல்வார்கள். இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு செரிமானமாகி உணவு உடலில் ஓட்டும்.

      காலை 9.00 ‍- 11.00 மணி‍‍‍‍‍‍‍‍‍ - ம‌ண்ணீர‌லின் நேரம் - காலையில் சாப்பிட்ட‌ உணவை மண்னீரல் செரித்து ஊட்டச்சத்தாகவும் இரத்தமாகவும் மாற்றுகிர நேரம். இந்த நேரத்தில் தண்ணிர் குடிப்பதை தவிர்ப்பது நல்லது. மண்ணீரலின் செரிமான சக்தி பாதிக்கப்படும். நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.

      முற்பகல் 11.00 ‍- 1.00 மணி‍‍‍‍‍‍‍‍‍ - இதயத்தின் நேரம்  - இந்த நேரத்தில் அதிகமாக பேசுதல், கோபப்படுதல், அதிகமாக படபடத்தல் கூடாது. இதயம் பாதிக்கப்படும். இதய நோயளிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரமிது.

      பிற்பகல் 1.00 ‍- 3.00 மணி‍‍‍‍‍‍‍‍‍ - சிறுகுடலின் நேரம் - இந்த நேரத்தில் மிதமான மதிய உணவை உண்டு சற்று ஓய்வெடுப்பது நல்லது

      பிற்பகல் 3.00 ‍- 5.00 மணி‍‍‍‍‍‍‍‍‍ - சிறுநீர்ப்பையின் நேரம் - நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்

      மாலை 5.00 - 7.00 மணி - சிறுநீரகங்களின் நேரம் - பகல் நேர பரபரப்பில் இருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க, தியானம் செய்ய வழிபாடுகள் செய்ய இதுவே உகந்த நேரம்

      இரவு 7.00 - 9.00 மணி - பெரிகார்டியத்தின் நேரம் - பெரிகார்டியம் என்பது இதயத்தை சுற்றியிருக்கும் ஒரு ஜவ்வு இதயத்தின் ஷாக் அப்சார்பர். இதுவே இரவு உணவுக்கு உகந்த நேரம்.

      இரவு 9.00 - 11.00 மணி - டிரிப்பிள் கீட்டர் நேரம் - டிரிப்பிள் கீட்டர் என்பது ஒரு உறுப்பல்ல. உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை இணைக்கும் பாதை. இந்த நேரத்தில் உறங்கச்செல்வது நல்லது.

      இரவு 11.00 - 1.00 மணி - பித்தப்பை இயங்கும் நேரம் - இந்த நேரத்தில் தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை குறைபாடு ஏற்படும்.

      இரவு 1.00 - 3.00 மணி - கல்லீரல் இயங்கும் நேரம் - இந்த நேரத்தில் நீங்கள் உட்கார்ந்திருக்கவோ, விழித்திருக்கவோ கூடாது. கட்டாயம் படுத்திருக்க வேண்டும். உடல் முழுதும் ஓடும் இரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. இந்தப்பணி பாதிக்கப்பட்டால் மறுநாள் முழுது நீங்கள் சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள்

      இந்த அட்டவணை மூலம் தெரிந்து கொண்டதை உபயோகப்படுத்தி, சாப்பாடு, தூக்கம், வ்ழிப்பு, வேலை இவற்றை சரியான நேரத்தில் செய்து ஆரோக்கியமான் உடலைப் பெற்று ஆரோக்கிய வாழ்வு பெறுவோம்! வாழ்க வளமுடன்!

Sunday, October 20, 2013

ஞானமடைந்தவர் உடலோடு இருக்க முடியுமா? ஆனந்தம்

      


      ஞானோதயம் அடைந்த மனிதர், உயிர் விடாமல் தன் உடலை தக்க வைத்துக் கொள்வது சிரமம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உயிரை தக்க வைத்துக் கொள்ள அவர் என்னென்ன தந்திரங்கள் செய்கிறார் என்று சொல்ல முடியுமா?

சத்குரு:

      ஒரு மனிதர் ஞானமடையும் வரை எல்லா பிறவிகளிலும் தன் கர்மவினையை கரைப்பதற்காக முயல்கிறார்; ஞானமடைந்த பிறகு. விழிப்புணர்வோடு கர்மவினைகளை உருவாக்குகிறார். ஏனென்றால் போதிய கர்மவினை இல்லையென்றால், அவருடைய பக்கம் சமநிலையாக இல்லையென்றால், இந்த உடலில் அவரால் இருக்கமுடியாது.

      90 சதவிதம் பார்த்தால், ஞானமடைகிற நேரமும் உடலை விடுகிற நேரமும் ஒன்றாகவே இருந்திருக்கிறது. இந்த உடல் இயக்கம் குறித்து நிபுணத்துவம் இருக்கிற மனிதர்கள்தான் உடலிலே தொடர்ந்திருக்கிறார்கள். பிறரால் முடிவதில்லை. இதற்கென்று பல வழிகள் உண்டு. உங்கள் இயக்கத்தின் மேல் உங்களுக்கு நிபுணத்துவம் இல்லையென்றால் இன்னொரு வழி, விழிப்புணர்வோடு கர்மவினைகளை ஏற்படுத்திக்கொண்டே போவது. நான் இங்கே என்ன செய்கிறேன் என்பது குறித்து இந்த நேரத்தில் நான் பேச விரும்பவில்லை.

      இராமகிருஷ்ண பரமஹம்சரை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். அவர் தெளிந்த விழிப்புணர்வில் இருந்தவர். மிக அற்புதமான ஒரு உயிர். பல எல்லைகளையும் கடந்தவர். ஆனால் உணவின் மீது அவருக்கு ஒரு வெறியே இருந்தது. சீடர்களோடு பேசிக்கொண்டே இருப்பார். “கொஞ்சம் இருங்கள்”’ என்று சொல்லிவிட்டு சமையலறைக்குச் சென்று சாரதா தேவியாரைப் பார்த்து, “இன்று என்ன சமையல்?” என்று கேட்பார். சாரதாதேவிக்கு வெட்கமாக இருக்கும். இந்த மனிதர் கடவுளைப் போல் இருக்கிறார். எல்லோரும் இவரை வணங்குகிறார்கள். ஆனால் உணவின் மீது இவ்வளவு பைத்தியமாக இருக்கிறாரே என்று.

      புராணங்கள் எல்லாம் என்ன சொல்கின்றன? நீங்கள் ஆன்மீகவாதியாகிக் கொண்டிருந்தால் உணவிலே நாட்டம் குறையவேண்டும் என்று, இல்லையா? ஆனால் இங்கே கடவுளாகவே கருதி வழிபடக்கூடிய ஒரு மனிதர், உணவின் மீது இவ்வளவு பிரியத்துடன் இருக்கிறார். பலவிதங்களில் அவரை சாரதாதேவி கேட்பார். ஆனால் இவர் பதில் எதையும் சொல்லமாட்டார். ஒவ்வொரு நாளும் சாரதாதேவி உணவு பரிமாறுவார். இவர் ஒரு ஊஞ்சலில் அமர்ந்துகொண்டு சாப்பிடுவார்.

      ஒருநாள் மிகவும் கோபம் வந்து சாரதாதேவி சொன்னார். “உங்களை நினைத்தாலே எனக்கு மிகவும் வெட்கமாக இருக்கிறது. உணவின் மீது ஏன் இவ்வளவு பைத்தியமாக இருக்கிறீர்கள்? பலர் உங்களைத் தேடி வருகிறார்கள். அவர்கள் உணவைப்பற்றி நினைப்பதே இல்லை. உணவே இல்லாமல் உங்கள் முன் அமர்ந்திருக்க விரும்புகிறார்கள். நீங்கள் உணவின் மீது இவ்வளவு பைத்தியமாக இருக்கிறீர்கள், ஏன்?” என்று. அப்போது இராமகிருஷ்ணர் சொன்னார், “சாரதா, நீ என்னிடம் உணவு கொண்டு வந்து, நான் அந்த நாளில் அதில் ஈடுபாடு காட்டவில்லை என்றால், அன்று தொடங்கி 3 நாட்கள் வரையே நான் உயிரோடு இருப்பேன் என்று தெரிந்து கொள்,” என்றார்.

      ஏழு ஆண்டுகள் கழித்து சாரதாதேவி உணவு கொண்டுவந்து அந்த ஊஞ்சலில் வழக்கமான இடத்தில் வைத்தபோது, ராமகிருஷ்ணர் உணவில் நாட்டம் கொள்ளவில்லை. நேரம் வந்துவிட்டது என்று தெரிந்து சாரதாதேவி அழத்தொடங்கினார். ராமகிருஷ்ணர் சொன்னார், “இப்போது அழுது எந்தப் பயனும் இல்லை. நேரம் வந்துவிட்டது, அது எல்லோருக்கும் வரும்,” என்றார்.

      இது கர்மவினையை உருவாக்குகிற முறை. தெரிந்தே உணவில் ஒரு விருப்பத்தை வளர்த்துக்கொள்வது. விழிப்புணர்வோடு வேண்டுமென்றே எப்போதும் உணவை விரும்புவது. இந்த விருப்பம் இல்லை என்றால் அவரால் அந்த உடலில் இருந்திருக்க முடியாது. நான் இந்த உடலில் தொடர்ந்து இருக்க என்னென்ன தந்திரங்கள் செய்கிறேன் என்று எனக்கு நெருக்கமாக இருப்பவர்களுக்குத் தெரியும்.

      நீங்கள் விழிப்புணர்வோடு இத்தகைய கர்மவினையை ஏற்படுத்தவில்லை என்றால் உடலில் இருப்பது என்பது முடியாது. கர்மவினையின் கட்டமைப்பு இல்லாமல் உங்களுக்கும் உங்கள் உடம்புக்கும் ஒன்றுக்கொன்று செய்துகொள்ள ஒன்றுமே இல்லை.
................வாழ்க வளமுடன்!

Wednesday, May 22, 2013

இறந்த உடலை ஏன் எரிக்கிறோம்? ஆனந்தம்


நமது கலாசாரத்தில், இறந்தவர் உடலை எரிக்க வேண்டும் என்ற பழக்கம் எப்படி வந்தது?

      நமது கலாசாரத்தில் இறந்தவர் உடலைப் பாதுகாக்கும் வழக்கம் இல்லை. இந்தத் தேசத்தின் கலாசாரம், வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சமும் மனிதனை மேல்நோக்கிக் கொண்டுசெல்வதாக அமைய வேண்டும் என்றே நினைக்கிறது. உடலை எரிப்பது என்ற சடங்கும் அந்த நோக்கத்திலேயே அமைக்கப்பட்டது.

      உங்களைப் பொறுத்தவரையில் அவர் இறந்துவிட்டார். ஆனால் அந்த உயிரைப் பொறுத்தவரையில் உடலைவிட்டு நழுவிவிட்டதாகத்தான் நினைத்துக்கொண்டு இருக்கும்.

      இறந்தவர் இந்த உடல்தான் தனது உயிர் என்று வாழ்ந்திருப்பார். அந்த உடலோடு மிகவும் ஆழமான தொடர்போடு வாழ்ந்திருப்பார். உங்களைப் பொறுத்தவரையில் அவர் இறந்துவிட்டார். ஆனால் அந்த உயிரைப் பொறுத்தவரையில் உடலைவிட்டு நழுவிவிட்டதாகத்தான் நினைத்துக்கொண்டு இருக்கும். எனவே மீண்டும் அந்த உடலுக்குள் நுழைந்துவிடலாம் என்றே அந்த உயிர் துடிக்கும். எனவே, வாய்ப்பை எதிர்நோக்கி அந்த உடலைச் சுற்றியே உயிர் சுற்றிக்கொண்டு இருக்கும். உடல் முழுமையாக இருக்கும் வரை அந்த உயிரால் அங்கிருந்து நகர முடியாது. அந்த மனிதர் ஞானம் அடைந்திருந்தால், அந்த உடலைவிட்டு நீங்கிய கணத்திலேயே அந்த உயிர் மகிழ்ச்சியாக அங்கிருந்து வெளியேறிவிடும். ஆனால், சரியான புரிதல் இல்லாத உயிர் அந்த உடலையே சுற்றிவரும். இது அந்த உயிருக்கும் நல்லதல்ல. இறந்தவருடன் பழகியவர்க்கும் அந்த உடலைப் பார்த்துப் பார்த்து பல நினைவுகளால் வருத்தம் அதிகமாகியே போகும்.

      உயிரை விட்டவரும் சரி, உறவினர்களும் சரி, உடல் அங்கிருக்கும் வரை, வேதனையோடு இருப்பர். எனவே விடைபெற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை அந்த உயிர் உணர வேண்டும் என்பதால், அந்த உடலை முழுமையாகவும் விரைவாகவும் அழிக்க வேண்டும் என்னும் நடைமுறை உண்டாக்கப்பட்டது. எனவேதான் இறந்த ஒன்றரை மணி நேரத்துக்குள் உடலை எரிக்க வேண்டும் என்ற விதி ஏற்படுத்தப்பட்டது. அவசரத்திலும் பதற்றத்திலும் தவறான முடிவெடுத்து உயிருடன் இருக்கக்கூடியவரையும் தவறுதலாக எரிக்கப்பட்டுவிடலாம் என்பதால், அதை நான்கு மணிநேரம் என பிற்பாடு மாற்றி அமைத்தார்கள்.

      தாம் அறிந்த அந்த உடல் இனி இல்லை, அடையாளமற்று எரிந்து கையளவு சாம்பலாகிவிட்டது என்னும் உண்மையை அறியும்போது, இறந்த உயிரும் அந்த இடத்திலேயே பரிதவித்துக்கொண்டு இருக்காது. இங்கு உயிருடன் இருப்பவர்களும் மாண்டவன் இனி மீளப்போவதில்லை என்று ஒருவித அமைதி கொள்வார்கள். எனவேதான் ஒருவர் இறந்துவிட்டால் அவரை உடனடியாக எரிப்பது நமது கலாசாரத்தில் இருந்து வருகிறது.

      போதிய விறகு இல்லாத பாலைவனங்களிலும், நெருப்பு நின்று எரியாத குளிர்ப் பிரதேசங்களிலும் எரிப்பதைவிட புதைப்பது சுலபமாக இருந்தது. எனவே அத்தகைய நாடுகளில் அதுவே அவர்களது நடைமுறையாக மாறிவிட்டது!

Wednesday, November 14, 2012

நீங்கள் இறந்திருக்கிறீர்களா? ஆனந்தம்



      மரணம் குறித்த சிந்தனைகள் உலகம் முழுவதும் பரவியிருக்கிற விதத்தைப் பார்த்தால் விசித்திரமாக இருக்கிறது. நீங்கள் இதற்குமுன் இறந்திருக்கிறீர்களா? மரணம் குறித்த அனுபவம் உங்களுக்கு இல்லை. மரணமடைந்த யாரையாவது பார்த்திருக்கிறீர்களா? அவர்களுடைய உடல்களை வேண்டுமானால் பாத்திருப்பீர்கள். மரணமடைந்த யாரேனும் உங்களிடம் வந்து ‘என் மரண அனுபவம் இப்படி இருந்தது’ என்று சொல்லியிருக்கிறார்களா? அதுவும் இல்லை.
      மரணத்தை நீங்கள் அனுபவித்ததில்லை. அதை நீங்கள் பார்த்ததில்லை. அது குறித்த நேரடி அனுபவம் பெற்ற யாரும் விளக்கம் சொல்லிக் கேட்டதும் இல்லை, அப்படியானால் மரணம் குறித்த இந்த யோசனைகள் உங்களுக்கு எங்கிருந்து வந்தன? அறியாத சிலர் ஏற்படுத்திய மாயைதான் மரணம் என்பது. விழிப்புணர்வே இல்லாமல் வாழ்க்கையை வாழ்பவர்களின் உருவாக்கம் அது. வாழ்க்கை என்ற ஒன்று மட்டுமே நிகழ்கிறது. ஒரு பரிமாணத்திலிருந்து மற்றொரு பரிமாணம் நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறது. வாழ்க்கைக்கென்று எத்தனையோ பரிமாணங்கள் உண்டு. உடல் என்ற எல்லையைத் தாண்டிய பரிமாணத்துக்குள் வாழ்க்கை செல்கிறபோது அதனை மரணம் என்கிறீர்கள்!

மரணம் நல்லதா? கெட்டதா?

      இந்தக் கேள்வியே அபத்தமானது. அது நல்லதோ, கெட்டதோ, நிகழத்தான் போகிறது. நீங்கள் பிறந்த விநாடியே உங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுவிட்டது. எங்கே, எப்போது நிகழும் என்பதுதான் கேள்வி. பிறந்ததும் ஒருவர் கல்வி கற்பாரா, கல்யாணம் செய்வாரா, ஆனந்தமாய் இருப்பாரா என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. பிறந்தால் இறந்து போவார் என்பது மட்டும் உறுதி.
      மரணம் என்ற ஒன்று இருப்பதாலேயே வாழ்க்கை என்ற ஒன்றும் இருக்கிறது.
      மரணத்தில் எந்தத் தவறும் இல்லை. அது நிகழ்ந்தே தீரும். மரணம் என்ற ஒன்று இருப்பதாலேயே வாழ்க்கை என்ற ஒன்றும் இருக்கிறது. மரணமென்றால் என்னவென்று தெரியாததால்தான் அச்சம் ஏற்படுகிறது. வாழ்க்கை பற்றி என்னென்ன எண்ணங்கள் உங்களுக்கு இருந்தாலும் மரணம் வருகிறபோது அது காணாமல் போய்விடுகிறது. மனித மனத்தால் மாசுபடுத்த முடியாத ஒரே பகுதி அதுதான். அன்பு, உறவு, கடவுள், புனிதம், அனைத்தையும் மனிதர்கள் பலவிதமாக மாசுபடுத்தியும் திரித்தும் பேசிவருகிறார்கள். மரணம் குறித்துதான் அவர்களால் உறுதிபட எதையும் சொல்ல முடியவில்லை. ஒரு சிலர் அது குறித்தும் பேசுகிறார்கள். தாங்கள் சொர்க்கத்துக்குத்தான் போகப்போவதாக அடித்துச் சொல்கிறார்கள். அவ்வளவு தூரம் உறுதியாக இருப்பவர்கள் புறப்படலாம். எதற்காகக் காத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இதைவிடவும் சிறந்த இடத்துக்குச் செல்வதென்று நிச்சயமாகத் தெரிந்தால், விரைந்து போகத் தோன்றும். எங்கே எப்படி போவதென்று தெரியாதபோது, ஆறுதலுக்காக இப்படிச் சில கற்பனைகளை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள்!
      மரணம் குறித்த விழிப்புணர்வு இல்லாததாலேயே, அது பெரிய சிக்கலாக உங்களுக்குத் தோன்றுகிறது. உங்கள் உடல், இந்த பூமியின் ஒரு பகுதி. பூமியிலிருந்து தோன்றியது பூமிக்குள் மீண்டும் போகப் போகிறது. நீங்களும் நானும் இந்த பூமிக்கு வரும் முன்பு எண்ணிலடங்காத எத்தனையோ பேர் வாழ்ந்து மடிந்திருக்கிறார்கள். அவர்கள் இந்த மண்ணின் மேற்பரப்பாக மாறிவிட்டார்கள். ஆழப் புதைத்துவைக்காத பட்சத்தில் நீங்களும் இந்த மண்ணின் மேற்பரப்பாக மாறிவிடுவீர்கள்!
      உடலைக்கொண்டு சில அற்புதங்களை நிகழ்த்தியிருந்தால், இதைத் திருப்பித் தருகிற நேரம் வரும்போது மகிழ்ச்சியடைவீர்கள். இல்லையென்றால் நடுநடுங்கிப் போவீர்கள்.
      நான் உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் கடன் தருவதாக வைத்துக்கொள்வோம். அதனைப் பத்து கோடியாக நீங்கள் பெருக்கிவிட்டீர்கள். பத்தாண்டுகள் கழித்து நான் உங்களைத் தேடி வந்தால் என்னை மகிழ்வுடன் வரவேற்று, ஒரு கோடிக்கு இரண்டு கோடியாய் திருப்பித் தருவீர்கள். ஒருவேளை அந்த ஒரு கோடி ரூபாயை நீங்கள் வீணடித்திருந்தால் கடன்காரர் வரும்போது அஞ்சுவீர்கள்.
      இந்த உடம்பும் அப்படித்தான். உலகத்திடம் நீங்கள் பெற்ற கடன் இது. இதைக் கொண்டு சில அற்புதங்களை, மிக முக்கியமானவற்றை நீங்கள் நிகழ்த்தியிருந்தால் இதைத் திருப்பித் தருகிற நேரம் வரும்போது மகிழ்ச்சியடைவீர்கள். இல்லையென்றால் நடுநடுங்கிப் போவீர்கள். நீங்கள் எப்படி மரணமடைகிறீர்கள் என்பதே, உங்களுக்குள் எப்படி வாழ்ந்திருக்கிறீர்கள் என்பதன் அடையாளம்தான். ஒரு மனிதனின் கடைசி விநாடி குறித்து பல ஆன்மீக மரபுகள் ஆழமாகப் பேசுகின்றன. அந்த விநாடியில் உங்களால் விழிப்புணர்வுடன் இருக்க முடிந்தால், அந்தத் தன்மையே காலங்கடந்தும் தொடர்கிறது. இன்றிரவு தூங்கச் செல்லும்போது, அன்புமயமான உள்நிலையை உருவாக்கிக் கொண்டு, புன்னகையுடன், விழிப்புணர்வுடன் தூங்கச் செல்லுங்கள். இரவு முழுவதும் அன்பு நிலை உங்களுக்குள் ததும்பி, காலை வேளையிலும் வெளிப்படுவதை உணர்வீர்கள்!
      இன்றிரவு படுக்கப் போகும்போது, விழிப்பு நிலையிலிருந்து உறக்கத்துக்குள் நீங்கள் ஆழ்கிற அந்தக் கடைசி விநாடியில் விழிப்புணர்வுடன் இருக்க முடிகிறதா என்று பாருங்கள்.
      உங்களுக்கு அது சாத்தியமானால், நீங்கள் கற்பனை செய்துகூடப் பாராத பல அம்சங்கள் உங்கள் வாழ்வில் நிதர்சனமாய் நடப்பதை உணர்வீர்கள். விழிப்பு நிலையிலிருந்து உறக்கத்துக்குள் அமிழ்கிற விநாடியில் விழிப்புணர்வுடன் இருக்க முடிந்தால், வாழ்விலிருந்து மரணத்துக்குள்ளும் முழு விழிப்புணர்வுடன் நுழைய முடியும்! வாழ்க வளமுடன்!

Wednesday, June 13, 2012

மறு பிறவி உண்டா? ஆனந்தம்


      மறு பிறவி உண்டா? என்ற கேள்வி உங்களுக்கு வருவது என்பது.....
      நான் என்பது இந்த உடலா? உயிரா? அல்லது இந்த இரண்டும் சேர்ந்த ஒன்றா? அல்லது அதையும் தாண்டிய ஏதாவது ஒன்றா? அந்த நான் என்பது யார்? அல்லது உயிர் இந்த உடம்பில் எங்கே இருக்கிறது? எப்படி இயங்குகிறது? என்கிற மிகப்பெரிய கேள்விகளை தான் அப்படி கேட்கிறீர்கள்....
      உண்மையாக இந்தக் கேள்வி உங்களுக்குள் ஆழமாகப் பதிந்து உண்மையில் விடைகாண முற்பட்டால், விடை கிடைக்கும். ஆனால் வேகு சாதரணமாக இந்தக் கேள்வி மறு பிறவி உண்டா? என்றால் பதில் கிடையாது, பதில் கொடுத்தாலும் சிலர் நம்பலாம். சிலர் நம்பாமல் போகலாம். மறு பிறவி உண்டு என்றாலும் அல்லது இல்லை என்றாலும் அது உங்கள் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.
      இந்தக் கணத்தில் உங்களுக்கு "வாழ்க்கை" என்றால் உங்கள் உடல் மனதைத் தாண்டி எதுவும் தெரியாது, ஆகையால் எதையும் நீங்களாக கற்பணை செய்து கொள்ளாதீர்கள். உங்கள் வாழ்க்கையை உடல் மற்ரும் மனதிற்க்கு உட்பட்டு, எத்தனை உயர்ந்த வழியில் வாழ முடியுமோ அந்த வழியில் ந‌டத்துங்கள்.
      உள்ள இந்த வாழ்கையையே நீங்கள் பல அழகான வழிகளில் வாழ அனுமதிப்பதில்லை. இப்படிப்பட்ட நிலையில் உடலைக் கடந்து இருப்பவற்றையும், மரணத்திற்க்கு பிறகு நிகழவிருப்பதையும் எப்படி நீங்கள் சரியாக புரிந்து கொள்வீர்கள்? மறுபிறவியை அறிந்து கொள்ள தீவிர ஈடுபாடு வந்துவிட்டால் தற்போது வாழும் வாழ்க்கையை மறந்து விடுவீர்கள்.
      இங்கில்லாத ஒன்றைப் பற்றித் தேடுவதைத்தான் மனம் எப்போதும் விரும்பும். இங்கே வாழவேண்டிய வாழ்க்கையே நிறைய மிச்சமிருக்கிறது. ஆனால் அதன் மேல் உங்கள் ஈடுபாடு எபோதும் மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது. உங்கள் இப்பொது வாழுகிற வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்கிற எண்ணமே உங்களுக்கு இல்லை. ஆனால் நாளைக்கு என்ன நடக்கும்? 10 வருடங்களுக்கு பிறகு என்ன நடக்கும்? என்ன கல்யாணமே இன்னும் ஆகவில்லையென்றால் கூட என் குழந்தை எப்படியிருக்கும்? என் பேரக்குழந்தைகள் எப்படியிருக்கும்? என்ற பல்வேறு கற்பனைக் கணக்குகளைத் தான் போட்டுக்கொண்டிருப்பீர்கள். மனம் எப்போது நிஜத்தில் இருந்து தப்பித்து, கற்ப்பனைக்குத் தான் உங்களை இழுத்துச் செல்லும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
      உங்களால் அதிகம் சிந்திகாமல் வெறுமனே இருக்க முடிந்தால் ஒன்று ஞானி ஆகிவிடுவீர்கள் அல்லது 'நான் ஒரு முட்டாள்' என்பதைப் புரிந்து கொள்வீர்கள். இதைத் தவிர வேறு வாய்புகளே கிடையாது. அதனால் தான் உங்கள் மனம் ஏதவது ஒன்றைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருக்கிறது. அது அமைதியாக இருக்கும் போதே, தான் ஒரு முட்டாள் என்பதைப் புரிந்து கொள்ளும். அப்படி புரிந்து கொண்டால் நீங்கள் யோகாவில் மிகப்பெரிய அடி எடுத்து வைக்கிறீர்கள் என்று அர்த்தம்? ஆன்மீகப் பயணம் தொடங்கிவிட்டது என்று அர்த்தம்? ஒரு மனிதன் தான் ஒரு முட்டாள் என்று புரிந்து கொள்ளும் அந்த கணத்தில் அவனுடைய அறிவுணர்ச்சி மலர்கிறது.
      இந்த நொடியில் உங்கள் மனதில் நடப்பவை உங்கள் கட்டுப்பாட்டில் இல்லையென்றால், வாழ்க்கையை கடந்து சிந்திப்பதோ, மரணத்தைக் கடந்து ஆரய்வதோ, உங்களது நேரத்தையும், வாழ்க்கையையும், சக்தியையும் வீணடிக்கும் வேலை தான். ஏனென்றால் இப்போது உங்கள் அனுபவநிலையைத் தாண்டி இருக்கும் ப‌ரிணமங்களை துளைத்துச் செல்வதற்கான தீவிரத்தன்மை உங்களிடம் இருக்காது.
      இதுவரை உங்களுக்கு கிடைத்த அனுபவங்கள் அனைத்தும் உங்கள் ஐம்புலன்களுக்கு உட்பட்டவை. இந்த நிலையில் உடல் தன்மையைத் தாண்டி உள்ளவற்றை உங்களால் உணர முடியாது. எனவே 'மரணத்திற்க்கு பிறகு வாழ்க்கையிருக்கிறதா?' என்று நீங்கள் அறிய விரும்பினால், அதாவது 'இந்த உடல் தன்மையைத் தாண்டி ஏதாவது இருக்கிறதா?' என்று உண்மையிலேயே நீங்கள் அறிய விரும்பினால், இந்த ஐந்து புலன்களைக் கடந்து எப்படிச் செல்வது என்று பாருங்கள். உங்களுக்கான விடை அங்கு தான் ஆரம்பிக்கிறது? .........................................வாழ்க வளமுடன்!..................................................

Tuesday, February 14, 2012

உணர்ந்தால் தெளிவு! ஆனந்தம்




      உடல் ஜீரணிக்கிற அளவுக்கு மேலே எப்போதும் யாரும் உணவுண்டதே கிடையாது, அது முடியவும் முடியாது. அதிகமாக உண்டால் தொல்லைதான் விளைவாக வரும். அது போன்றே உடல் சுமக்கும் அளவுக்கு மேலே உடைகளைப் போட்டுக் கொள்ள முடியுமா? நின்றால் காலளவு. படுத்தால் உடலளவு. இதற்குமேல் பூமியை யாரும் அனுபவிக்கிறதில்லை.
      உண்மையிலேயே நாம் எல்லோருமே ஞானிகளாக, அனைத்தையும் துறந்தவர்களாக, தியாகிகளாகத் தான் இருக்கிறோம். அப்படி ஏதேனும் பொருள் சேர்த்து வைத்துக் கொண்டிருந்தாலும் கூட, உயிர் போகும் போது எல்லாவற்றையும் விட்டுவிட்டு, கொடுத்து விட்டுத் தான் போகிறோம், சிறிது கூட அதிலே எடுத்துக் கொண்டு போவதில்லை. இந்த உண்மையை உணர்ந்து கொண்டால் போதும். நினைத்துக் கொண்டால் போதும்.
      உணர்ந்தாலும் சரி, உணராது போனாலும் சரி எந்தப் பொருள் எங்கே ஒட்டிக் கொண்டிருக்கிறது? உணர்ந்து விட்டால் உண்மையோடே இருக்கிறோம். உணராதபோது மயக்கத்திலே இருக்கிறோம். உணர்ந்தால் தெளிவு உணராவிட்டால் மயக்கம். ஆகையினாலே அந்த மயக்கத்தை விட்டு, உணர்ந்த‌ நிலையிலே இருந்து நான் பிறருக்கு எந்த அளவிலே உதவியாக இருக்க முடியும் என்று கணித்துக் வாழ வழி வகுத்துக் கொள்ள வேண்டும்.
                             வாழ்க வளமுடன்!

Wednesday, August 31, 2011

மனித நாகரீகம் என்பது இதுவா? ஆனந்தம்


      எந்தப் புலியாவது தன்னை நல்ல புலியாக காட்டிக்கொள்ள வேண்டும் என்று தன் இயல்பை மறைத்து மாறாக நடந்து கொள்ள முயற்சிக்கிறதா? எந்த எருதாவது தன்னை கெட்ட எருதாக காட்டிக்கொள்ளக் கூடாது என்று கபடமாக நடந்து கொள்கிறதா?
      பசி எடுத்தால் உணவு, இச்சை பிறந்தால் இணை என்ற இரண்டே வேட்கைகளில் தான் அதற்க்குள் சண்டை நடக்கிறது. அது மிருக இனம் பிழைத்திருப்பதற்கும் இனப்ப்பெருக்கம் செய்வதற்க்கும் இயற்க்கை விதித்திருக்கும் விதி.
      மற்ற‌படி மிருகங்கள் ஒன்றை ஒன்று பார்த்து, பொறாமைப்படுவது இல்லை, வஞ்சம் கொள்வது இல்லை, சதிச் செயல்களில் ஈடுபடுவது இல்லை.
      மனிதன் தான் இயல்பை உணராமல் தடுமாறுகிறான். ஆரம்பத்தில் அவனும் தன் உணவுக்காக, உடைக்காக, உறைவிடத்திற்க்காக சண்டைபோடத்துவங்கினான். பிற்பாடு நாகரீகம் வளர வளர அவனுடைய தேவைகளும் பெருகிவிட, கூடுதலான வசதிகளுக்காகவும் தன் பெருமைகளுக்காகவும் போரிடும் குணம் அவன் அடிப்படை குணம் ஆகிவிட்டது. அதை மறைத்து தன்னை நல்லவனாக காட்டிக் கொள்ளும் முனைப்பு அவன் இயல்பு ஆகிவிட்டது.
      சட்ட திட்டங்களால் ஆளப்படுவதால் மட்டுமே எந்த சமூகமும் நாகரீகம் அடைந்து விட்டதாக சொல்ல முடியாது. லண்டன், பாரீஸ், மும்பை, நியூயார்க் என இன்றைக்கு மிக நாகரீக நகரம் என்று நீங்கள் கருதும் எந்த நகர‌த்தை வேன்டுமானால் எடுத்துக்கொள்ளுங்கள் அங்கே சட்டத்தை விலக்கி காவல்த்துறையை கலைத்து விட்டு பாருங்கள்....மூன்றே நாளில் எல்லாம் தலைகீழாகிவிடும். மிக நாகரீகமான மனிதன் என்று நீங்கள் கருதியவர் கூட குகை மனிதனை விடக் கேவலமானவனாக நடந்து கொள்வதை நீங்கள் பார்க்கலாம்.
      சங்கரன்பிள்ளை ஒருநாள், தன் தோட்டக்காரன் திண்ணையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார்.
      "ஏய், ஏன் தோட்டத்திற்க்கு த‌ண்ணீர் ஊற்றப் போகவில்லை?" என்றார்.
      தோட்டக்காரன் அவரை சந்தேகத்தோடு பார்த்து, "வெளியே மழை கொட்டிக்கொண்டு இருக்கிறதே ஐயா" என்றான்.
      "அதனால் என்ன குடையை எடுத்துகொண்டு போ" என்று விரட்டினார் சங்கரன்பிள்ளை.
      மனிதன் வகுத்த சட்டங்கள் இப்படித்தான்...., சூழ்நிலையை கணக்கில் எடுத்துக் கொள்ளாவிட்டால், அந்த சமயங்களில் சட்டங்கள் அர்த்தமற்றுப் போகின்றன.
      காடுகளில் வாழ்க்கை கடினாமாக இருக்கின்றது என்று தான் மனிதன் நகரங்களை உருவாக்கினான், இப்போது நகரங்களில் நகரங்களில் வாழ்க்கை அதை விடக் கடுமையானதாக ஆகிவிட்டிருக்கிறது.
      அட்த்தவனை விட தான் குறைவான நிலையில் இருந்தால் கூசிக்குறுகிப் போகின்றான். எந்த நிலையில் வாழ்கிறானோ அதில் சிறிதளவு குறைந்து விட்டால் கூட, தன் நிலை தாழ்ந்து விட்டதாக எண்ணி, நிம்மதியை தொலைக்கிறான், உயிரே போய்விட்டது போல் துக்கப்படுகிறான்.
      எப்போது மனிதன் தன்னை உடலோடு அடியாளப் படுத்திக் கொள்ள ஆரம்பித்தானோ, அப்போதே இந்தப் பிரச்சனை ஆரம்பமாகிவிட்டது.
      உடல் என்பது மிருகம் தான். உடலின் அபாரத் தேவைகளுக்காக நீங்கள் இறங்குகையில் அந்தப் போரட்டத்தில் உங்களுடைய பெரும்பாலான சக்தி விரயமாகிறது.
      நாகரீகம், கல்வி உங்களின் மிருக குணங்களைப் பின்னிழுக்க வைத்து உங்களை போலியாக வெளியுலகில் காட்டிக் கொள்ளத் தூண்டுகின்றன. எப்பொழுதெல்லாம் நாகரீகமும், கல்வியும் மறந்து போகின்றதோ அப்பொழுதெல்லாம் உங்களின் அடக்கி வைத்த குணம் தன்னை முன் தள்ளி வெடித்துக் கிளம்புகின்றது.
      உங்களை உடலுடன் அடையாளபடுத்திப் பார்க்கும் தன்மை விலகி, உள்ளத்தின் நிலையை புரிந்து கொள்ளும் தன்மை வரவேண்டும். அப்போது தான் உங்களின் உயிர்த்தன்மை வெளிப்ப‌ட்டு உங்களை சீர்படுத்தும். உண்மையான ஆன்மீகமும் அதுவே. என்றென்றும் உங்களை ஆனந்தமாக வைத்திருக்கும்.

Saturday, July 30, 2011

அகங்காரம்-தியானம் ஆனந்தம்


      அகங்காரத்துக்குள்ளேயே சிக்கி உழுன்று கொண்டிருக்கும் ஒரு மனிதன் அந்த அகங்காரத்தையே தன் அடையாளம் என்று கருதிக் கொண்டே இருக்கிறான். அது தன் அடையாளம் அல்ல என்கிற தெளிவு ஏற்படும் போது, அதற்கு “விழிப்புணர்வு” என்று பெயர். அடிப்படையில், அகங்காரம் என்பது ஒரு பாதுக்காப்பு ஏற்பாடு. அது பாதுகாப்பு உணர்வின் வெளிப்பாடு.
      ஒரு மனிதன், தன் எல்லையற்ற தன்மையை, ஒரு எல்லைக்குட்பட்ட உடலோடோ, வேறு சில எல்லைகளோடோ அடையாளப்படுத்தத் தொடங்கும் போது அது “அகங்காரம்” ஆகிறது. தன்னுடைய அகங்காரம் இன்னொரு மனிதனின் அகங்காரத்தால் ஆக்கிரமிக்கப்படும் போது சிக்கல் ஏற்படுகிறது. மாறாக, அன்பு நிலையில் அவரிடம் இன்னொருவர் கரைந்து போகிபோது அங்கே ஆக்கிரமிப்பு, ஆதிக்கம், போன்றவற்றிற்கு இடமில்லை.
      ஒரு கைக்குழந்தைக்குக் கூட தேவையான நேரத்தில் தேவையான உணவு தரப்படாவிட்டால் கோபம் வருகிறது.கோபத்தை வெளிப்படுத்த குழந்தை வீறிட்டு அழுகிறது இத்தனைக்கும் அந்தக் குழந்தைக்கு தன் பெயர் என்னவென்று கூட தெரியாது. ஆனால், தன்னைப் பற்றிய எண்ணம் அதற்குள் ஏற்பட்டு விடுகிறது.
      “அகங்காரம்” எனபது நிழலைப் போன்றது. உடல் என்ற ஒன்று ஏற்பட்டுவிட்டால் எப்படி நிழல் விழுவதைத் தடுக்க முடியாதோ அதைப்போல அகங்காரம் எழுவதையும் தடுக்க முடியாது. சிலர், என்னிடம் வந்து “ஊரில் மழை பெய்யவில்லை ஏதாவது செய்து மழை வர ஏற்பாடு செய்யுங்கள்” என்றுசில சமயங்களில் கேட்பதுண்டு. இதுவே, அகங்காரத்தின் வெளிப்பாடுதான்.
      இயற்கைக்கு எதிரான செயல்களைச் செய்வது, தங்கள் சுயநலத்திற்கு இயற்கைய மாசுபடுத்தும் தொழில்களை செய்வது, பிறகு யாரைக் கொண்டாவது மழையை வரழைத்து விடாலம் என்று கருதுவது, அகங்காரம் இல்லாமல் வேறென்ன?
      மகாத்மா காந்தி ஒரு முறை சொன்னார். “இந்த உலகில் எல்லா மனிதர்களின் தேவைக்கும் உரிய செல்வம் இருக்கிறது. ஆனால் ஒரு தனிமனிதனின் பேராசைக்குத்தான் அது போதாது” என்றார்.
      இத்தைகய அகங்காரம் அழிவுகளை ஏற்படுத்தும், அகங்காரத்தை முழுமையாக அகற்றுவதைவிட அதனை நேர்மறையாகப் பயன்படுத்துவதே நல்லது. அகங்காரத்தை உற்றுக் கவனித்து, அதுவே “தான்” என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் தன்மையிலிருந்து விடுபட்டு, அகங்காரத்தால் தனிமைப்பட்டுப் போகும் உயிரை மற்ற உயிர்களோடு அன்பில் கரைத்துக் கொள்வதே மனிதகுலத்திற்கு மேன்மைகள் தரும்.
      வாழ்க்கையை பலரும் வாக்குவாதங்களிலேயே கழிக்கிறார்கள். தாங்கள் விரும்புவதை செய்வதுதான் “சுதந்திரம்” என்று பலரும் எண்ணுகின்றனர். போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையில் எதைச் சுதந்திரமென்று மனிதன் கருதுகிறானோ, அதுவே அவனைப் பிணைத்து வைக்கிற விலங்காக மாறுகிறது.
      புகைப்பிடிப்பதை ஒரு மனிதர் விரும்புகிறார். அதையே தன் சுதந்திரம் என்றும் கருதுகிறார். ஆனால், சுற்றிலும் பெட்ரோல் சிந்தியிருக்கும்போது, “ சிகரெட் பிடிப்பது என் விருப்பம்” என்கிற அகங்காரம் வெளிப்பட்டால், அது அழிவைத் தரும்.
      சின்ன சின்ன விஷயங்களுக்கும், நிபந்தனை விதிக்கிற மனப்பான்மை மனிதனுக்கு இருக்கிறது. வாழ்க்கை எந்த நிபந்தனைகளும் இல்லாமல் மனிதனுக்கு, எல்லா வாய்ப்புகளையும் வழங்குகிறது. ஆனால், தனகுத்தானே விதித்துக் கொள்கிற நிபந்தனைகளால் மனிதன், தன் எல்லைகளைக் குறுக்கிக்கொண்டு சிரமப்படுகிறான்.
      ‘விழிப்புணர்வு’ இந்த நிலையை மாற்றி மனினை அன்புமயமாக ஆக்கும்.
      மனிதனின் உணர்வு நிலையிலேயே உச்சகட்டமானது அன்புதான். அன்பு என்பது ஆழமான அழகான வலி. அன்பு சக உயிர்கள் மீதான, பரிவாக வெளிப்படும். அந்த வலியின் விளைவாகக் கண்ணீர் வெளிப்படும்.அது அற்புதமான அனுபவம் மற்றவர்களுக்காக பொறுப்பேற்றுக் கொள்வதுதான் அன்பின் அடையாளம்.
      மேற்கத்திய நாடுகளில்தான் கண்ணீர் என்பது பலவீனத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. ஆனால், இந்தியப் பாரம்பரியத்தில் கண்ணீர் என்பது மனம் அன்புமயமாகவும், மென்மையாகவும் இருப்பதைக் குறிக்கிறது. உள்முகமாக, மனிதனைத திருப்பி விடுகிற நிகழச்சிகள் பல. அதை மனிதன், எந்த விதத்தில் உணர்ந்து கொள்கிறானோ, அதற்கேற்ப அவன் இயல்பு மாறுகிறது.
      உதாரணமாக, பெங்களூரில் காய்கறி விற்பனையாளர் ஒருவர் இருந்தார் கடும் நோய்வாய்ப்பட்டு ஆறு மாதம் படுக்கையில் இருந்தார். மரணத்திற்கும், வாழ்க்கைக்குமான போராட்டமாக அது இருந்தது.
      ஆறு மாதங்களுக்குப் பிறகு குணமடைந்தார். அத்தனை காலம், மருத்துவமனையில் இருந்ததால், எல்லாவற்றையுமே இழந்திருந்தார். எனினும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புபோது முன்பைவிடவும் அமைதியாக, ஆனந்தமாக, மகிழ்ச்சியாக வாழத் தொடங்கியிருந்தார்.
      கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலை அவருக்கு எத்தனையோ இழப்புகளை ஏற்படுத்தியிருந்தாலும், அந்த மரணப் போராட்டம் காரணமாக வாழ்க்கை குறித்த தெளிவு அவருக்கு ஏற்பட்டிருந்தது.
      உள் நிலையில், தெளிவு தோன்றவும், தன்னைக் குறித்த அகங்காரமும், அடையாளங்களும் மாறவும், ஒரு மனிதனுக்கு தியானம் மிகவும் அவசியம். தியானம் என்பது ஒருவர் மேற்கொள்கிற பயற்சியல்ல, தன் இயல்பு நிலையோடு இருப்பது தனக்குள் இருக்கிற உண்மையை உணர்வது.
      வெளிச்சூழ்நிலையை மனிதன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால், தன்னுடைய உள்நிலை குறித்த தெளிவு அவசியமாகிறது. அந்தத் தெளிவு வரும்வரை சிறிய நிபந்தனைக்களுக்குள், எல்லைகளுக்குள் மனிதன் சிறைபட்டிருப்பதோடு அதுவே, வாழ்வின் பலம் என்றும், தவறாகப் புரிந்து கொள்கிறான்.
      தானே, வகுத்திருக்கும் தடைகளிலிருந்து, மனிதனை விடுவிக்க வல்லதுதான் “தியானம்”. தியானம் என்று சொன்ன மாத்திரத்திலேயே அது குறித்து ஏராளமான, சந்தேகங்கள் தான் எல்லருக்கும் ஏற்படுகின்றன.
      தியானமும், பிரார்த்தினையும் ஒன்றா? வாழ்வில், நாம் விரும்பும் நன்மைகளை தியானம் தருமா? என்றெல்லாம், பலர் கேட்கின்றனர். முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கையோடு யாரக்கும், எந்தப் பிரச்னைஐயும் இல்லை. இவர்கள் விருப்பத்திற்கேற்ப, வாழ்க்கை இல்லை என்பதில் தான் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
      உடல், மனம், ஆகிய இரண்டு எல்லைகளுக்குள் மனிதன் இருக்கிற வரை அவன் விருப்பத்திற்கேற்ப வாழக்கை அமையாது. ஏனெனில், அந்த நிலைகளைப் பொறுத்தவரை புறச்சூழ்நிலைதான் வாழ்வைத் தீர்மானிக்கிறது. இந்த எல்லைகளைக்கடந்து உயிரின் மூலத்தை உணர்தற்கான கருவிதான் தியானம்.
      பிரார்த்தனை என்பது, இப்போதெல்லாம் பக்தியின் வெளிப்பாடாக இருப்பதில்லை. கடவுளிடம் வைக்கின்ற கோரிக்கைகளையே நாம், பிரார்த்தனை என்று புரிந்து கொள்கிறோம். உங்கள் கவலைகள், தேவைகள், ஆசைகள், அச்சங்கள் என்று நீண்ட புலம்பல்களின் பட்டியலை, பிரார்த்தனை என்று கருதுகிறீர்கள். அதுவம், உங்களுக்கு போதிக்கப்பட ஒரு சடங்காகவே ஆகிவிட்டது. அது வெறும் கோரிக்கைகளை இருக்கும் வரை பிரார்த்தனையால் புனிதத்தன்மை இருக்காது. ஆனால்; பிரார்த்தனையின் அடிப்படை கடவுளிடம் பேசுகிற முயற்சி, பிரார்த்தனை வழியாக கடவுளிடம் பேசுகிறீர்கள்.
      இதி என்ன சிக்கல் என்றால், இத்தனை ஆண்டுகளில் நீங்களே தொடர்ந்து, பேசிக்கொண்டேயிருக்கிறீர்களே தவிர அவரை ஒருவார்த்தைக்கூடப் பேச அனுமதிக்கவில்லை. நீங்கள் ஒரு நண்பரைப் பார்க்க போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர் வீட்டில் போய் அவரை ஒரு வார்த்தைகூட பேச அனுமதிக்காமல் நீங்களே தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறீர்கள். அரை மணி நேரம், ஒரு மணி நேரம் பேசினால் என்னாகும். அடுத்தமுறை நீங்கள் அவர் வீட்டுக்குப் போகும் போது அவர் உங்களைப் பார்க்கவே பயப்படுவார். வீட்டுக்குள் இருந்து கொண்டே இல்லை என்று சொல்லி அனுப்பிவிடுவார்.
      இப்போது கடவுளிடமும் அதுதான் நிகழ்ந்திருக்கிறது. நீங்கள் சொல்வதைப் பார்த்து அவர் இருந்து கொண்டே இல்லாது போல் பாசாங்கு செய்கிறார். எனவே, நீங்கள் பேசுவதை நிறுத்திக்கொண்டு, கடவுளைப் பேச அனுமதிப்பதற்குத்தான், தியானம் என்று பெயர்.
      தியானம் என்பது, இந்தப் படைப்பின் மூலத்தை உணர்வதற்கான வழி. வெறுமனே கண்மூடி அமர்வது, தியானமல்ல. பலர், வசியக் கலைக்கும், தியானத்துக்கும் உள்ள வேறுபாடு பற்றி என்னிடம் கேட்டிருக்கிறீர்கள். இரண்டும் ஒன்றுக்கொண்டு எதிரான நிலைகள். வசயத்தின் போது, யாரோ ஒருவர், அல்லது ஏதோ ஒன்றின் ஆளுமைக்குள் நீங்கள் அல்லது ஏதோ ஒன்றன் ஆளுமைக்குள் நங்கள் அகப்படுகிறீர்கள். அப்போது விழிப்புநிலை இருக்காது. ஆனால், தியானம் என்பது முழு விழிப்புணர்வில் நிகழ்வது. தியானத்தில் எல்லாற்றிடமிருந்தும் விலகி, சுதந்திரமாக இருக்கிறீர்கள். சுதந்திரம் பொதுவாகவே அச்சமூட்டுவதாய் இருக்கிறது. அதனால் தான் மேலை நாடுகளில், தியானம் என்றாலே அஞ்சுகிற நிலை இருந்தது. எல்லோரும், சுதந்திரத்தை விரும்புவதாகச் சொல்லிக்கொண்டால் கூட அடிப்படையில் ஏதாவதொன்றில் சிறைப்பட்டிருக்கவே விரும்புகிறார்கள்.
      மனைவிமார்கள் மீது, கணவன்கள் ஒரு புகார் சொல்வதுண்டு. எப்பதும் தங்களைத் தொந்தரவு செய்து கொண்டேயிருக்கிறாரகள். அது வேண்டும், அது வேண்டும். அங்கே அழைத்துச் செல்லுங்கள் என்று தொல்லைப்படுத்திக்க கொண்டேயிருக்கிறார்கள், என்று கணவன்மார்கள் அலுத்துக்கொள்வதுண்டு. அந்தப் பெண்கள் தியானம் செய்யத் தொடங்கியபின் தமது கணவர்களிடம் எதையுமே கேட்பதில்லை. உடனே இந்தக் கணவன்மார்கள் கவலைப்படத் தொடங்குகிறார்கள். பெண்கள் யாரையும் சாராமல் தனித்திருப்பதும் தங்களையும் தொல்லை செய்யாமல் இருப்பதும், அவர்களை தடுமாறச் செய்கிறது.
      தியானத்தின் வழியாக சார்பு நிலையிலிருந்து விடுதலைபெற முடியும், என்கிற அனுபவ உண்மைக்கு மனம், முதலில் தயாரடைய வேண்டும். தியானம் என்பது விழிப்புநிலை, தியானம் என்பது சுதந்திரம். தியானம் என்பது சுதந்திரம் என்பதைவிட தியானம் என்பதே சுதந்திரம் என்று சொல்ல வேண்டும்.
      தன்னை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் மனிதனை யாரும், எதுவும், அடிமைப்படுத்திவிட முடியாது. மனிதனின் புறவாழ்வுக்காக சில திறமைகள், தகுதிகள் தேவைப்படுகின்றன. அந்தத் திறமைகளோடும், தகுதிகளோடும் மனிதன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுவிட்டால், அதைத் தாண்டி வளர இயலாது. புறச்சூழலின் வெற்றிக்காக பெற்றிருக்கும் தகுதிகளே தடைகளாக மாறி மனிதனை அடிமைப்படுத்த வாய்ப்புண்டு.
      மாறாக, விழிப்புணர்வு நிலையில், எதனோடும், தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாத தன்மையில் இருக்கும்போது மனிதன் விரைவாக வளரமுடியும். அந்த விழிப்புணர்வை தியானம் தருகிறது. மனிதன் தேடிப் பெறுகிற தகவல் அறிவு அவனது உலக வாழ்க்கைக்குத் துணை புரிகிறது. ஆனால், தகவல் திரட்டு மட்டுமே இருந்தால் அந்தத் தகவல் திரட்ட உரிய முறையில் அறிவாக வெளிப்படுத்த முடியும்.
      தன் இயல்பான தன்மையை உணர்த்த ஒருவன், வாழ்வில் அன்பாக, அமைதியாக, ஆனந்தமாக இருக்க முடியும். தன்னுடைய சக்தியைத் தெரிந்து கொள்ளாத போதுதான் பதட்டம் வளரும், பயம் வளரும், சுயநலம் கூடும். மனிதனின் உடல் - மனம் - அறிவு - ஆன்மீகத் தேடல் அனைத்தையும் ஒரே புள்ளியில் சந்திக்க வைத்து, உள்நிலை வளர்ச்சிக்கு உறுதுணை புரிய ஈஷா யோகா மையம் ஏற்படுத்தியிருக்கும் வழியே “சஹஜ ஸ்திதி யோகா”
      சஹஜ ஸ்திதி யோகா என்றால், “இயல்பாக வாழும் கலை” என்று பொருள். தன் இயல்பு வாழ்க்கையில் இருந்தபடியே தன்னை மேம்படுத்திக் கொள்ள அனைவருக்கும் வழங்கப்படும் அரிய வாய்ப்பு இது.
      சஹஜ ஸ்திதி யோகா, எந்தவொரு பழக்கத்தயும் விடச்சொல்லி வற்புறுத்துவதில்லை. எந்தவொரு மனநிலையையும் மாற்ற சொல்லி வற்புறுத்தவதில்லை. அனுபவ ரீதியாக எதையும் உணர்ந்து, வேண்டாதவறை விலக்கிக் கொள்வதற்கான, விழிப்புணர்வைத் தருகிறது.
      இதுவரை உணராத பரிமாணத்தில் வாழ்கையை மனிதன் உணரத் தொடங்குகிறான். அன்பு, அமைதி, ஆனந்தம் ஆகியவை வெளியிலிருந்து பெருவதர்க்கல்ல. மனிதனிடம் ஏற்கனவே இருக்கும் இயல்புதான் என்பதை அனுபவ அடிப்படையில் உணரும்போது முற்றிலும் புதிய பார்வை கிடைக்கிறது.
      செயல்திறன் அதிகரித்தல், உடல் நலம், மன அமைதி இவையெல்லாம் சஹஜ ஸ்திதி யோகாவில் முக்கிய அம்சங்களல்ல. அவை பக்க விளைவுகள்தான். மனிதன் தன்னை உணர்ந்து, தனக்குள் இருக்கும் பேராற்றலை உணர்ந்து, உயிர்களிடையே பேதமில்லை என்கிற அனுபத்தைப் பெறுவதே சஹஜ ஸ்திதி யோகாவின் முக்கிய நோக்கம்.
     நோய் வாய்ப்பட்டிருக்கும் மனிதன் சஹஜ ஸ்திதி யோகாவிற்குப் பிறகு, நோயின் தன்மையை உணர்கிறான். ஆனால், அதனால் துன்பமடைவதில்லை. சில அடிப்படை அணுகுமுறைகள் மாறும்போதே சில நோய்கள் அவனைவிட்டு விலகுவதை இங்கே காணமுடியும்.
      கோபம், பதட்டம், போன்றவை தங்கள் பிறவிக் குணங்கள் என்று கருதியவர்கள், வகுப்புகள் தொடங்கி சில நாட்களிலேயே அந்த குணங்கள் தங்களை விட்டு விலகுவதைக் காண்கிறார்கள். சஹஜ ஸ்திதி யோகா, நீண்ட கால அனுபவத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள, ஆழ்ந்த யோக அறிவியலின் வெளிப்பாடு.
      எல்லா வயதினருக்கும் பொதுவான தன்மையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பயிற்சி, மனிதன் தனது அடிப்படை சக்தியை நன்கு உணரவும் அதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பாக அமைந்துள்ளது. உலகின் பல பகுதிகளிலும் பரவியுள்ள சஹஜ ஸ்திதி யோகாவை “தன்னை உணர்வதற்கான அமைதிப்புரட்சி” என்று அழைக்கிறோம். இந்த அமைதிப் புரட்சிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

..............சத்குரு ஜக்கிவாசுதேவ்...................

Monday, July 11, 2011

விரதங்கள் ஏன்? ஆனந்தம்

      ஆன்மிகத்தின் பெயரால் பலர் விரதமிருக்கிறார்கள். ஆன்மிகத்திற்கும் உணவுக்கும் என்ன சம்பந்தம் என்கிற கேள்வி இதில் எழும். உணவு, உடல் சார்ந்த விஷயம்தான். ஆனால், இங்கே நீங்கள் வாழ உடலே அடிப்படை. துரதிருஷ்டவசமாக பலரும் கொடூரமான விரத முறைகளை பயன்படுத்தி உடலை வருத்திக்கொள்கிறார்கள். எல்லாவற்றிலும் வெறித்தனமாக ஈடுபட்டு தங்கள் வளர்ச்சிக்கான படிக்கற்களையே தடைக்கற்களாக மாற்றிக்கொள்ள முற்படுகிறார்கள்.
      ஒருசிலர் உடலை அதீதமாக வருத்தி அதனை சிறுமைப்படுத்துவது, இன்னும் சிலர் உடலையே பிரதானப்படுத்தி அதனை தேவைக்கு அதிகமாக கொண்டாடுவதும் நடைபெறுகிறது. இரண்டுமே தேவையில்லாதது. ஒவ்வொன்றுக்கும் உரிய இடத்தை தருகிறபோதுதான் அது உங்களுக்கு பயன்படும். மிகையான முக்கியத்துவமோ, சிறுமைப்படுத்துவதோ உடலை சீர்குலைக்கத்தான் செய்யும். உடல் என்பது எவ்விதத்திலும் சிக்கலில்லை என்கிற முறையில் உடலைக் கையாள வேண்டும்.
      ஏனெனில் உடலுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க துவங்கிவிட்டால், அது உங்களை வேறெதையும் செய்யவிடாது. உங்களுக்கு அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டியிருந்தால், அப்போது நான் ஞானோதயத்தை பற்றி பேசினால், ஞானோதயம் உங்களுக்கு முக்கியமாக இருக்காது. உங்கள் சிறுநீர் அவ்வளவு சக்தி வாய்ந்தது.
      சக்கரவர்த்தி அக்பர் மிகவும் அறிவுப்பூர்வமான கேள்விகள் என்று கருதி சிலவற்றைக் கேட்பார். அவர் சக்கரவர்த்தி என்பதாலேயே பலரும் அவை அறிவுப்பூர்வமான கேள்விகள் என்று ஆமோதித்து பதில் சொல்வார்கள். தங்கள் தலையை காப்பாற்றிக்கொள்ளும் முயற்சிதான் அது.
      ""உலகிலேயே மிக இன்பமான அனுபவம் எது?'' என்று அவர் கேட்டார். ""சக்கரவர்த்தி அவர்களே! உங்களுக்கு சேவை செய்வதுதான்'', என்று சிலர் சொல்வார்கள். இப்படியே அவருக்கு சந்தோஷம் தரும் செய்திகளை பலரும் சொல்லச்சொல்ல, அவையில் பீர்பால் அலுப்புடன் அமர்ந்திருந்தார்.
     ""சக்கரவர்த்திகளின் முகத்தை பார்ப்பதுதான் இன்பம் தரும் செயல்,'' என்றெல்லாம் பலரும் பதில் சொல்லிக்கொண்டிருக்க, பீர்பால் பதில் தரவேண்டிய நேரம் வந்தது. சற்றும் தயங்காமல், ""மனிதனுக்கு அதீத இன்பம் தரும் செயல் மலம் கழிப்பதுதான்,'' என்று பதிலளித்தார். அனைவரும் அதிர்ந்தனர். அவையில் இப்படி ஆபாசமாக பேசியதால், அதை நிரூபிக்க வேண்டுமென்றும், இல்லையென்றால் பீர்பால் தலைக்கே ஆபத்து என்றும் அக்பர் எச்சரிக்க, 15 நாட்கள் அவகாசம் கேட்டார் பீர்பால்.
      ஒரு வாரம் கழித்து அக்பருக்கு வேட்டை பயணம் ஒன்றை அவர் ஏற்பாடு செய்தார். அரண்மனையில் இருந்த அத்தனை பெண்களும் அதில் பங்கேற்கும்படி செய்தார். நடுவில் அக்பரின் கூடாரத்தை அமைத்து, அதைச்சுற்றி பெண்களும், குழந்தைகளும் தங்குமிடங்களை அமைத்தார். சமையற்காரர்களிடம் சொல்லி, அக்பருக்கு விருப்பமான உணவுகளை சமைக்கச் செய்தார்.
      மறுநாள் காலை அக்பர் வெளியே வந்து பார்த்தால் மலம் கழிக்கும் கூடாரத்தைக் காணோம். அக்பர் அங்குமிங்கும் நடந்தார். பொறுமையிழந்த நிலையில் காட்டுக்குள் மறைவிடம் தேடிப் போனார். அங்கே எல்லா இடங்களிலும் பெண்கள் நின்றுகொண்டிருக்கும்படி செய்திருந்தார் பீர்பால். அக்பரால் தாங்கவே முடியாது என்ற நிலை வந்தபோதுதான் கழிப்பறை கூடாரத்தை எங்கே அமைப்பது என்கிற பேச்சு எழுவதை கவனித்தார். ஒரு வழியாய் கூடாரம் அமைக்கப்பட்டு, அவசரமாய் கூடாரத்திற்குள் நுழைந்தார் அக்பர். நிம்மதிப் பெருமூச்சு விட்டார். கூடாரத்திற்கு வெளியே பீர்பாலின் குரல் கேட்டது. ""நான் சொன்னதை ஒப்புக் கொள்கிறீர்களா?''.
      ""ஆமாம்! உண்மைதான். இதுதான் உலகிலேயே இன்பமான விஷயம்,'' என்றார் அக்பர்.
      தாங்கமுடியாத ஒன்றிலிருந்து கிடைக்கும் விடுதலைதான் உலகிலேயே இன்பமான விஷயம். அது எதுவாக இருந்தாலும் சரி. உடல் அவ்வளவு முக்கியமானதாக ஆகிவிடக்கூடும். காலை வேளைகளில் சூரிய நமஸ்காரம், ஆசனங்கள் ஆகியவற்றை சரியாக பயிற்சி செய்து வந்தீர்கள் என்றால், எவ்வித சிரமமுமின்றி நீங்கள் இங்கே அமர்ந்திருக்கலாம். உடல் எவ்விதத்திலும் உங்களை சிரமப்படுத்தாது.
      உங்கள் உடலை எதற்கு தயார் செய்கிறீர்கள் என்பதை பொறுத்தே நீங்கள் சாப்பிடும் உணவு அமைகிறது. ஒரு நாயைப்போலவோ, சிறுத்தையைப் போலவோ ஓடுவதற்கு உங்கள் உடலை தயார் செய்கிறீர்களா? அல்லது 100 கிலோ எடையை தாங்கி நடைபோட தயார் செய்கிறீர்களா?
உடலை தெய்வீகத்திற்கான ஏணியாகவும் பயன்படுத்தலாம். பள்ளத்தில் கொண்டு சேர்க்கும் கருவியாகவும் பயன்படுத்தலாம். சாப்பிட வேண்டும் என்று தோன்றும்போதோ அல்லது வேறு வகையான உணர்வுகளிலோ அந்த நிர்ப்பந்தத்தை அகற்றுவது மிகவும் முக்கியம். ஆசிரமத்தில்கூட, நீங்கள் பசியாக இருக்கும்போது உங்கள் முன் உணவு பரிமாறப்படும். அள்ளி விழுங்க நீங்கள் ஆயத்தமாகும்போது, கைகூப்பி இறைவணக்கப்பாடல் சொல்லத் துவங்குவார்கள். "ஐயோ பசிக்கிறதே!' என்று நீங்கள் அயர்ந்துபோகலாம். சாப்பிட்டே ஆகவேண்டும் என்ற உந்துதல் வரும்போது அதனை இரண்டு நிமிடங்கள் ஒத்திப்போடுகிற உத்திதான் இது.
      இப்படி ஒத்திப் போடுவதால் நீங்கள் இறந்துவிட மாட்டீர்கள். மாறாக மேலும் வலிமையடைவீர்கள். கவுதம புத்தர் ஒருமுறை சொன்னார், ""நீங்கள் பசியாக இருக்கும்போது உங்கள் உணவை வேறொருவருக்கு கொடுத்துவிட்டால் நீங்கள் வலிமையடைவீர்கள்,'' என்று. நான் அந்தளவுக்கு போகவில்லை. கடுமையாக பசிக்கும்போது உணவு சாப்பிடுவதை இரண்டு நிமிடங்கள் ஒத்திப்போடுங்கள் என்றுதான் சொல்கிறேன். இது உங்களை மேலும்
வலிமையாக்கும். உடல் சார்ந்த நிர்ப்பந்தங்களை அகற்றுவது மிகவும் முக்கியம்.
இது தொடர்பாக பல விஷயங்கள் உள்ளன. என் பாட்டியும் என் அம்மாவும் இத்தகைய முயற்சிகளை கையாண்டுள்ளார்கள். என் அம்மா உணவு சாப்பிடும் முன் ஒரு கைப்பிடி சோறை ஈ, எறும்புகளுக்கு இடுவார்கள்.
      உலகின் எல்லா உயிரினங்களும் இந்த உலகில் உண்டு வாழவும், வளரவும் வாய்ப்புண்டு என்பதன் வெளிப்பாடே இது. மக்கள் மனதில் எறும்பு மிகச்சிறியது. யானை மிகப்பெரியது. இருப்பதிலேயே சின்னஞ்சிறு ஜீவராசிக்கு முதலில் உணவு படைத்தார்கள். உணவுக்கு நீங்கள் அடிமையானால் ஒருவேளை உணவை துறந்திடுங்கள். இது உங்களை கொடுமைப்படுத்துவதற்கு அல்ல.உடம்பின் கொடுமையிலிருந்து விடுபட, நிர்ப்பந்தங்களிலிருந்து நீங்கவே விரதங்கள்.

Saturday, July 9, 2011

உடலே தெய்வீகம் ஆனந்தம்

      நீங்கள் உயிர் வாழ்வதற்கான முக்கிய அம்சங்களில் ஒன்று உங்கள் உடல். ஆனால், இதன் வலிமையை விலங்குகளுடன் ஒப்பிடவே முடியாது. ஒரு வெட்டுக்கிளியை எடுத்துக்கொள்ளுங்கள். தன் உடலின் நீளத்தைவிட 50லிருந்து 100 மடங்கு வரையிலான உயரத்திற்கு அதனால் குதிக்க முடியும். அப்படியானால் நீங்கள் ஆறடி உயரம் இருந்தால் 600 அடி உயரத்திற்கு குதிக்க வேண்டும். அப்போதுதான் ஒரு வெட்டுக்கிளிக்கு நீங்கள் நிகராக முடியும்.
      "உடல் வலிமை' என்று வரும்போது மனிதர்களைவிட விலங்குகளே வலிமையானவை. ஆனால், பிழைப்பு என்கிற எல்லையைத்தாண்டி வாழ்வை அணுகவும், கையாளவும் மனிதர்களுக்கு தகுதி, அறிவு, சக்தி இருக்கிறது. ஆனால், மனிதனோ தன்னுடைய பிழைப்பின் தரத்தை உயர்த்த மட்டுமே தன் சக்தியைப் பயன்படுத்துகிறான். ஒரு காலத்தில், உயிர் வாழ்வதற்கு வெறுமனே இரண்டு வேளை உணவு மட்டுமே போதுமானதாய் இருந்தது. இப்போது அதன் எல்லைகள் நீட்டிக்கப்பட்டிருக்கிறது, அவ்வளவு தான்! மனிதன் தன் அடிப்படையான செயல் கட்டமைப்பை மிகவும் முட்டாள்தனமாக கையாள் கிறான் என்பதற்கு இது அடையாளம். மிகவும் வித்தியாசமான முறையில் அதனை பயன் படுத்தும் வாய்ப்பு மனிதனுக்கு இருக்கிறது.
      யோகமரபில், மனிதனின் முதுகுத்தண்டு "மேருதண்டம்' என்று அழைக்கப்படுகிறது. இதற்கு "பிரபஞ்சத்தின் அச்சாணி' என்று பொருள். ஒரு மனிதனுடைய முதுகுத்தண்டு எப்படி பிரபஞ்சத்தின் அச்சாணி ஆகமுடியும்?
உலகிலுள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அதிர்வு இருக்கிறது என்பதை நவீன விஞ்ஞானம் நிரூபித்திருக்கிறது. மனிதனைப் பொறுத்தவரை அடிப்படையான அதிர்வுகள் முதுகுத் தண்டிலிருந்து தொடங்குகின்றன. அது எவ்வளவுக்கெவ்வளவு சூட்சுமமான நிலையை அடைகிறதோ, அந்த அளவுக்கு மேல் நோக்கிச் செல்கிறது. இல்லையென்றால் முதுகுத்தண்டிலேயே (தொடங்கிய இடத்திலேயே) நின்றுவிடுகிறது. அது சூட்சுமமாகிறபோதுதான் அதனை எல்லா இடங்களுக்கும் நீங்கள் கொண்டுசெல்ல முடியும். அந்த அதிர்வுகள் எல்லா இடங்களிலும் பரவுகிறபோது உங்கள் புரிதலும் எல்லா இடங்களுக்கும் பரவுகிறது, அப்போது நீங்கள் மிகச்சிறந்த ஆனந்தமான மாமனிதனாக முடியும்.
      இந்த உடலே ஒரு கருவி. இதனை உங்களுக்கு உணவு சேகரிக்கவும் மற்ற விஷயங் களுக்காகவும் மட்டும் பயன்படுத்தப் போகிறீர்களா? அல்லது அதன் உச்சபட்சமான சாத்தியத்தை அதாவது ஆனந்தத்தை நோக்கி பயன்படுத்தப் போகிறீர்களா? உடலை ஒரு கருவியாக பயன்படுத்துவீர்கள் என்றால் முதலில் அதனை உங்களுடன் அடையாளப் படுத்திக் கொள்வதை நிறுத்த வேண்டும். இந்த உடம்பை எங்கிருந்து சேகரித்தீர்கள் என்பது உங்களுக்கு தெரியும். நீங்கள் சேகரித்த ஒன்று நீங்களாக இருக்க முடியாது. குறிப்பிட்ட காலம் வரையில் அது உங்களுடையதாக இருக்கலாம்.
      ஒரு மனிதன் சராசரியாக‌ தன் வாழ்நாளில் 50 டன் உணவு சாப்பிடுகிறான்,'' அப்படியானால் உங்கள் எடை எவ்வளவு இருக்க வேண்டும்? உணவை சேர்த்துக்கொண்டே போவது பற்றி மட்டுமல்ல இது. நீங்கள் சேகரித்துக்கொண்டே போகும் கர்மவினை எவ்வளவு என்று பாருங்கள். ஒவ்வொரு பிறவியிலும் இந்த உடம்பை உதறிவிட்டு இன்னொரு உடம்பை எடுத்துக்கொள்கிறீர்கள். ஆனால் கர்மவினையையோ சேர்த்துக்கொண்டே போகிறீர்கள்.
      மனித உடல் அற்புதமான ஒரு கருவி. இதன் நுணுக்கமான விஷயங்களை நீங்கள தெரிந்துகொள்ள ஒரு பிறவி போதாது. ஈஷா யோகாவின் அறிமுக வகுப்பிற்கு வந்த முதல் நாளிலேயே உங்களுக்கும் உங்கள் உடம்புக்கும் நடுவே ஒரு இடைவெளியை உருவாக்க நாங்கள் முயன்று வருகிறோம். அப்போதுதான் எவ்வளவு நல்ல கருவி ஒன்று உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து நீங்கள் ஆனந்தம் கொள்ள முடியும். இந்த உடல் சாதாரணமான ஒன்றல்ல. பந்தத்திற்கும் விடுதலைக்குமான அனைத்து அம்சங்களும் இதில் இருக்கின்றன. இதன் சக்தி நிலையை சரியான விதத்தில் நீங்கள் மேலெடுத்துச் சென்றால் இதையே தெய்வீகத்தின் உச்சமாக உருவாக்கவும் முடியும்! அல்லது பிணம் போல் வாழவும் முடியும்!இந்த உடம்பை நீங்கள் சிவமாக்குகிறீர்களா? சவமாக்குகிறீர்களா என்பது உங்களைப் பொறுத்தது.
      புதிதாக ஒரு கார் வாங்கியிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த வாகனத்தில் என்னவெல்லாம் உள்ளது என்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் திறமைமிக்க ஓட்டுனர் ஒருவரிடம் அதனை ஒப்படைக்க வேண்டும். இது உங்கள் உடம்புக்கும் பொருந்தும். அதனை எப்படி சரியாக பயன்படுத்துவது என்று தெரிந்துகொண்டுவிட்டால் இந்த உடலை தெய்வீகத்திற்கான ஏணியாக பயன்படுத்தலாம். இன்னும் சரியாக பயன்படுத்தினால் உடலே தெய்வீகம் என்பதையும் உணர்ந்துகொள்ளலாம்.

Monday, May 23, 2011

மரணத்திற்க்குப் பின்? ஆனந்தம்


      "மரணத்துக்குப் பின் எங்கேதான் போகிறோம்?"

      "சங்கரன் பிள்ளை ஒரு முறை தன் நண்பரிடம் சொன்னார், "செத்துப்போனால், மற்றதெல்லாம் இல்லாமல்கூடச் சமாளித்துவிடலாம். ஆனால், மேல் உலகத்தில் கிரிக்கெட் இல்லை என்றால், போரடிக்குமே. அங்கே கிரிக்கெட் இருக்குமா?"
      நண்பர் சொன்னார், "நீ முதலில் போனால், நீ பார்த்துச் சொல். நான் முதலில் போனால், நான் பார்த்துத் தெரிவிக்கிறேன்".
      அந்த நண்பர்தான் முதலில் இறந்தார். அவர் இறந்த மூன்றாவது நாள் சங்கரன் பிள்ளைக்கு மேலே இருந்து அவர் குரல் மட்டும் கேட்டது.
       "கிரிக்கெட் பற்றிக் கேட்டாயே, ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி. எது முதலில் வேண்டும்?"
      "ஐயோ, நல்ல செய்தியை முதலில் சொல்."
      "இங்கே கிரிக்கெட் இருக்கிறது."
      "கெட்ட சேதி?'"
      "திங்கள்கிழமை நடக்கும் மேட்ச்சில் நீதான் ஓப்பனிங் பேட்ஸ்மேன்!"
      ஏதோ சங்கரன்பிள்ளைக்கு வருகிறது என்றவுடன் உங்களால் சிரிக்க முடிகிறது. ஆனால், எந்த ஒரு மனிதனும் இதில் இருந்து தப்பிக்க முடியாது.
      உங்கள் உயிர் எங்கே இருக்கிறது என்று கவனித்திருக்கிறீர்களா? மூச்சு உள்ளே வருகிறது. வெளியே போகிறது. வெளியே போன மூச்சு திரும்பவும் உள்ளே வராவிட்டால், மரணம் நிகழ்கிறது. அதாவது, ஒவ்வொரு சுவாசத்திலும் உயிர் வெளியே போய்விட்டு உடல்கூட்டுக்குள் திரும்புகிறது. அப்படித் திரும்பும் போது, அதை ஏற்கும் நிலையில் உடல் இருந்தாக வேண்டியிருக்கிறது.
      அப்படியானால், நம் உயிருக்கு அடிப்படையானது நமக்கு உள்ளே மட்டும் இல்லை. வெளியேயும் இருக்கிறது என்று புரிகிறதா? உங்கள் உயிர் இங்கேதான் இருக்கிறது என்றோ, அங்கேதான் இருக்கிறது என்றோ சொல்ல முடியவில்லை என்றால், என்ன அர்த்தம்? அது எல்லை இல்லாமல் இருக்கிறது.
      நம் கற்பனைதான் இது ஒரு தனி உயிர், அது ஒரு தனி உயிர் என்றெல்லாம் பிரித்துப் பார்க்கிறது. எப்படி இருந்தாலும், மரணத்தில் இருந்து தப்பிக்க முடியாது. அப்புறம் எப்படி வாழ்ந்தால் என்ன என்று வாழப்பார்த்தால், வாழ்க்கை பலவிதமாகப் புரட்டிப் போட்டுவிடும்.
      அப்படி இல்லாமல், ஆனந்தமாக வாழ வேண்டும், ஆனந்தமாக முடிய வேண்டும் என்றால், அதற்கு விழிப்பு உணர்வு தேவைப்படுகிறது. விழிப்பு உணர்வு இல்லாதவர்கள் உடல் கீழே விழுகையில் மட்டும்தான் இறப்பைப் பார்க்கிறார்கள். விழிப்பு உணர்வோடு இருப்பவர்கள் வாழும் ஒவ்வொரு கணத் திலும் மரணத்தையும் சேர்த்துப் பார்க்கிறார்கள். அப்படி மரணத்தை வாழ்வின் ஓர் அங்கமாகக் கவனித்துவிட்டால், அப்புறம் மரணத்தால், நம்மைத் தளையிட முடியாது.
      ஆனால், இந்தப் புரிதல் இல்லாமல், மரணமற்ற ஒரு வாழ்க்கை வேண்டும் என்ற வெறி புராண காலத்திலேயே இருந்திருக்கிறது. ஆயிரம் நிபந்தனைகள் போட்டு ஹிரண்யகசிபு வரம் வாங்கினான். அவன் உயிரை எடுப்பதற்கு கடவுளே தந்திரமாக மனிதனும் அல்லாத, மிருகமும் அல்லாத நரசிம்ம அவதாரம் எடுக்க வேண்டியிருந்தது.
      பஞ்சதந்திரத்தில் ஒரு கதை இருக்கிறது. குரங்கு ஒன்று குடுவையில் இருக்கும் கடலைகளை அள்ளி எடுக்கப் பார்த்தது. கை நிறையக் கடலைகளை எடுத்து விட்டால், குடுவையின் சிறு கழுத்துப்பகுதியைத் தாண்டி கையை வெளியே எடுக்க முடியவில்லை. கடலைகளை விட்டால்தான் கை வெளியே வரும். ஆனால், ஆசையோடு அள்ளிய கடலைகளை விட குரங்குக்கு
மனம் வரவில்லை. கையை வெளியே எடுக்கவும் முடியாமல், கடலைகளை விடவும் முடியாமல் குரங்கு அல்லாடியதைப் போல்தான் அல்லாடுகிறது மரணத்தை மறுக்க நினைக்கும் மனது.
      மரணம் என்பது இல்லாமல் போனால் என்ன ஆகும்?
      ஓர் இளைஞன் இமயத்தில் இருந்த யோகிகளைச் சந்தித்து சில அபூர்வ சக்திகளைப் பெற்று தன் ஊருக்குத் திரும்பினான். தன் தெருவில் முக்காடு போட்டபடி, முகமே இல்லாத ஓர் உருவம் தன் வீட்டுக்குள் நுழையப் பார்ப்பதைக் கவனித்து அதை வழி மறித்தான். 'வழிவிடு. நான் மரணதேவன். உன் தாயின் மரண நாள் வந்துவிட்டது' என்றது அந்த உருவம். இளைஞன் தன் சக்தியைப் பிரயோகித்து மரணதேவனைப் பிடித்து தன் கமண்டலத்தில் அடைத்தான். கமண்டலத்தைப் பூமியில் புதைத்துவிட்டு, வீட்டுக்குப் போனான்.
      அவனுடைய அம்மா வுக்குப் பல வருடங்கள் கழித்து மகனைப் பார்த்ததும், அளவற்ற மகிழ்ச்சி. அவனுக்குப் பிடித்த கோழிக்கறி யைச் சமைத்துப் போட விரும்பினாள்.
      கோழியைப் பிடித்துக் கழுத்தை வெட்டினாள். எத்தனை தடவை வெட்டினாலும், வெட்டுப் பட்ட கழுத்து மறுபடி சேர்ந்துகொண்டது. கோழி சாக மறுத்தது. இது என்னடா அதிசயம்?
      ஒரு வேளை மகன் பூரண சைவத்துக்கு மாறிவிட்டானோ என்று குழப்பம் வந்தது. தோட்டத்துக்குப் போய் கீரையைப் பிடுங்கினாள். கீரை வரவில்லை. காய்களைப் பறித்தால், அவை மறுபடி செடியில் போய் ஒட்டிக்கொண்டன. அம்மா மிரண்டுபோய் மகனிடம் வந்தாள். நடந்ததைச் சொன்னாள்.
      "ஏதோ மந்திர தந்திரம் எல்லாம் கற்று வந்திருக் கிறாயே! என்னடா செய்தாய்?" என்று கேட்டாள். மகன் அவளைத் தேடி வந்த மரண தேவனைப் பிடித்து புதைத்துவிட்டதைச் சொன்னான்.
      "வேண்டாமடா இந்த விபரீதம்! முதலில் அவனை விடுவித்துவிடு. அவனுடைய வேலையை அவன் செய்யட்டும். நம் வேலையை நாம் செய்வோம். இல்லை என்றால், உலகத்தில் யாரும் உண்ண முடியாது. எதுவும் செய்ய முடியாது" என்றாள், அவன் அம்மா.
      மரணத்தை நிறுத்தினால், அப்படித்தான் ஆகி விடும். ஏனென்றால், உயிர் என்பதோ, மரணம் என்பதோ தனித்தனியாக வரவில்லை. இரண்டும் சேர்ந்துதான் வந்திருக்கின்றன.
      இதை நீக்கினால், அது நடக்காது. அதை நீக்கினால், இது நடக்காது.
      ஓர் அறைக்குள் நீங்கள் உள்ளே போக முடி யும்; வெளியேயும் வர முடியும் என்றால், அதை உங்கள் குடியிருப்பு என்கிறீர்கள். உள்ளே போனீர்கள், வெளியே வர முடியவில்லை என்றால், அது அரண்மனையாகவே இருந்தாலும், அதைச் சிறை என்கிறீர்கள். ஆக, வெளியே வந்துவிட்டு உள்ளே போக முடியாது என்றாலும் பிரச்னைதான். இங்கே வந்தால் இங்கே
சிக்கிப்போவீர்கள். அங்கே போனால், அங்கே சிக்கிவிடுவீர்கள் என்றால், அதைச் சுதந்திரம் என்று எப்படிச் சொல்ல முடியும்?
      வாழ்ந்தாலும் ஒருவிதச் சிறை. செத்தாலும் ஒரு விதச் சிறை என்பதை எப்போது நாம் உணர்வுபூர்வமாகப் புரிந்துகொள்கிறோமோ, அப்போது இதைத் தாண்டிப் போக வேண்டும் என்ற ஆர்வம் நமக்கு வந்துவிடும். உயிரின் தன்மையைப் புரிந்துகொள்ளும் தேடுதல் துவங்கிவிடும். முக்திக்கான முதல் அடிஎடுத்து வைத்துவிடுவோம்.
      விழிப்பு உணர்வோடு இருந்தால், உங்களுக்குள்ளேயே ஒரு பகுதியில் பிறப்பு நிகழ்வதும், இன்னொரு பகுதியில் மரணம் நிகழ்வதையும் பார்க்க முடியும். இதை முழுமையாக உணர்ந்து, அடுத்த கணத்தில் உயிர் பிரியும் என்று தெரிந்தாலும் ஒரு மனிதன் ஆனந்தமாக இருக்க முடிந்தால், அதுவே அவன் மேன்மையான நிலையை எட்டிவிட்டதற்கு அடையாளம். ஆனந்த வாழ்வே மேண்மையான நிலை....
      மரணத்துக்குப் பின் எங்கே போவோம் என்ற கேள்வி இன்னும் உங்கள் மனதில் தொக்கி நின்றால், அனுபவித்துப் பார்த்தால்தான் புரியும் என்று சொல்வேன்!

Saturday, May 7, 2011

விழிப்புணர்வு ஆனந்தம்

       உங்கள் வாழ்க்கையில் பல எல்லைகளை வகுத்துக் கொண்டிருக்கிறீர்கள். பகல்பொழுதைவிட இரவுதான் உங்களுக்கு அதிகமாக பிடித்திருக்கிறது. தூக்கத்தில்இருந்து விழித்து பகல்பொழுதை எதிர்கொள்வதென்றால் உங்களை அறியாமலேயே பல வழிகளில் தயங்குகிறீர்கள்.
      ஏதாவது ஒரு நாள் காலையிலேயே எழுந்து நண்பர்களுடன் பிக்னிக் போக முடிவெடுத்தீர்கள் என்றால், அன்று மட்டும் சூரிய உதயத்திற்கு முன்பே ஆர்வத்துடன் எழுந்துகொள்கிறீர்கள். முந்தைய நாளே விழிப்புணர்வுடன் முடிவெடுத்து விடுகிறீர்கள். நாளை எப்போது வரும் என்று ஆவலுடன் காத்திருக்கிறீர்கள்.
      மற்ற நாட்களில் போர்வையால் முகம் மூடி படுத்திருக்கிறீர்கள். சூரிய உதயத்தை நீங்கள் விரும்பவில்லை. ஏனெனில் அது தனியாக வருவதில்லை. அதனுடன் விலைவாசி பிரச்னை, வீட்டுப்பிரச்னை, அலுவலக பிரச்னை, ஏன்... முழு உலகமே ஒட்டுமொத்தமாக வருகிறது. எனவே உங்களை அறியாமலேயே சூரிய ஒளியை தவிர்க்க விரும்புகிறீர்கள்.
      ஆனால், ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். ஆன்மிக சாதகர்களைப் பொறுத்தவரை குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு உடற்பயிற்சி செய்வதுபோன்ற வசதியற்ற வேலைகளை கண்டிப்பாக செய்ய வேண்டியிருக்கிறது. நீங்கள் பசியாக இருக்கும்போது ஓடிச் சென்று அள்ளி வாயில் போட்டுக்கொள்ள வேண்டும் என்பதுதான் உங்கள் இயல்பாக இருக்கிறது. இதுபோன்ற சமயங்களில் விழிப்புணர்வுடன் நீங்கள் ஒரு முடிவெடுக்கிறீர்கள். ""நான் மிகவும் பசியாக இருக்கிறேன். என்றாலும் நான் இப்போது சாப்பிடப் போவதில்லை. இந்த உணவு எனக்குக் கிடைக்க காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி சொல்லிவிட்டே சாப்பிடுவேன்,'' என்று பசியிருந்தும் சாப்பிடாமல் இருக்க வேண்டுமானால் அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது.
      வாழ்வின் மிகவும் கடினமான நேரங்களில் விழிப்புணர்வு பற்றி நீங்கள் பயிற்சி செய்ய வேண்டும். விழிப்புணர்வுடன் இருங்கள் என்று சொல்லும்போது ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். யாரோ ஒருவர் உங்களை திட்டுகிறார், திருப்பி நீங்கள் அவரை திட்டுவதற்கு விழிப்புணர்வு தேவையில்லை. ஆனால் அந்த நேரத்தில் அமைதியாக இருப்பதற்கு மிகவும் விழிப்புணர்வு தேவைப் படுகிறது இல்லையா? எனவே பிடிக்காத செயல் செய்வது உங்களுக்கு மிகுந்த விழிப்புணர்வை தரும்.
   உடல்நிலையில், சுவாச நிலையில், சக்தி நிலையில் மற்றும் உணர்ச்சி நிலையில் இப்படித்தான் விழிப்புணர்வு கற்றுக்கொள்ளவேண்டும். இப்படிக் கற்றுக்கொள்ளும் நிலையில் பொருட்களை தனித்துப் பார்க்கும்படி விழிப்புணர்வு உண்டாகிறது. ஒன்றின்மீது, மேலும் மேலும் நீங்கள் விழிப்புணர்வைக் கொண்டுவரும்போது - உடல்நிலையில் கொண்டு வரும்போது நீங்கள் வேறு, உடல்வேறு என்பதைப் பார்க்கமுடியும். மனநிலையில் கொண்டு வரும்போது நீங்கள் வேறு, மனம் வேறு என்பதைப் பார்க்க முடியும்.
      உணர்ச்சி நிலையில் கொண்டு வரும்போது நீங்கள் வேறு, உங்கள் உணர்ச்சிகள் வேறு என்பதை பார்க்க முடியும். எனவே "நீங்கள்' எனப்படுவதற்கு ஒரு வடிவம் இல்லை என தெரிகிறது. நீங்கள் உண்மையில் வடிவமற்றவர் என்பது உங்கள் வாழ்க்கையைப் பொறுத்தவரை இன்னமும் உண்மை இல்லாததாக இருக்கலாம். வடிவமற்றது என்றால் எல்லையற்றது என்றும் சொல்லலாம். வடிவம் என்பது எல்லை. எனவே வடிவமற்றது என்பது
எல்லையற்றது. விழிப்புணர்வை பயிற்சி செய்யச்செய்ய காலப்போக்கில் வடிவம் தனது வலிமையை இழக்கத் துவங்கும். அது உறுதி.