Sunday, November 25, 2012

நீங்கள் சாகத்தான் வேண்டும்! ஆனந்தம்


     
      முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, அந்த மாலைப்பொழுதில், பேரானந்த வெள்ளத்திலிருந்து, தன்உணர்தல் அனுபவத்திலிருந்து வெளிவந்த நான், இயல்புநிலைக்கு வந்த போது, “இது மிகவும் எளிமையானது. இது உலகம் முழுவதும் பற்றிக்கொள்ளுமாறு செய்யப் போகிறேன்” என்று நினைத்தேன். அன்று முதல், மிகவும் மெதுவாக ஆனால் தொடர்ச்சியாக, இந்த உலகம், என்னைப் பணிய வைத்து, என் பூகோள எல்லைகளைக் குறைக்க முயற்சித்து வருகிறது.
      நான் இவ்வுலகை குறை சொல்லவில்லை. வாழ்க்கை என்று எடுத்துக் கொண்டால், உள்நிலையில் எனக்கு அது மிகச் சிறந்ததாகவே அமைந்துள்ளது. வெளியிலும் கூட அது மிகச் சிறந்ததாகவே உள்ளது. எனவே நான் அதையும் குறை சொல்லமுடியாது. ஆனாலும் கூட இது எனக்கு நெருடலாகவும் மிகவும் சஞ்சலமாகவும் இருக்கிறது. முப்பது ஆண்டுகள் ஆகியும், நான் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை.
      மக்களிடம், என் குறிக்கோள்களின் எல்லையைக் குறைத்துக் கொண்டு நான் பேச ஆரம்பித்து விட்டாலும், உள்ளுக்குள், ‘இது ஏன் எல்லோருக்கும் நிகழக்கூடாது?’ என்ற இச்சையுடன் இன்றளவிலும் தகித்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஏனெனில் காரண அறிவு கொண்டு பார்த்தாலும், இது ஏன் அனைவருக்கும் நிகழக்கூடாது என்பதற்கு எனக்கு ஒரு காரணம் கூட கிடைக்கவில்லை. இது ஏன் அனைவருக்கும் சாத்தியமற்றது என்பதற்கு என் அறிவிற்கு எட்டியவரை ஒரு காரணமும் கிடைக்கவில்லை.
      இதை, மக்கள் தங்களுக்குப் புரிந்தபடி பல அற்புதமான பெயர்களில் அழைக்கிறார்கள். மக்கள் இதை ‘ஞானமடைதல்’ என்கிறார்கள். அப்படிச் சொல்லும்போது அது உங்களைக் கடந்து இருக்கும் ஒன்று என்று அர்த்தமாகிறது. சிலர் அதை ‘கடவுள் உணர்தல்’ என்பதாக – உங்கள் உயரத்திற்கு எட்டாத அளவில் அது ஏதோ சொர்க்கத்தில் இருப்பதாக – சொல்கிறார்கள். இன்னும் சிலர் அதை ‘தன்னை உணர்தல்’ என்று சொல்லும்போது, அது இன்னும் கொஞ்சம் பணிவான வர்ணனையாக இருக்கிறது. அல்லது இது ஒரு விழித்தெழுதலாக இருக்கலாம். நான் இதை ‘நினைவூட்டல்’ என்பேன்.
      ஏதோ ஒன்றைக் குறித்து உங்களுக்கு பல வழிகளில் நினைவூட்ட முடியும். நாளை காலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நீங்கள் எழ வேண்டும். இதை உங்களுக்கு நீங்களே நினைவூட்டிக் கொள்ளலாம். அது முடியவில்லை என்றால் ஒரு கடிகாரத்தில் அலாரம் வைத்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் யாரோ ஒருவர் சிறுமுரசு கொட்டி எழுப்பலாம். அல்லது உதைத்து எழுப்பலாம். அந்த தேர்வு உங்களிடம் உள்ளது. ஆனால் நீங்கள் விழிப்படைய முடியும். அல்லது நாங்கள் உங்களை நினைவூட்ட முடியும். அது வெறும் நினைவூட்டல் மட்டும்தான், அது ஒரு பெரிய சாதனை அல்ல. அது எங்கோ சென்றடைவது பற்றியும் அல்ல.
      ஒருமுறை இப்படி நிகழ்ந்தது. ஒரு பெண்மணி ஒரு ஆற்றங்கரையில் நின்று கொண்டிருந்தாள். அங்கிருந்து பார்த்தபோது, அந்த ஆற்றின் அகலமும் மறுகரையும் மிகவும் அழகாக இருந்தது. மறுகரையில் இன்னொரு பெண் இருப்பதை அப்போதுதான் கவனித்தாள். எனவே அவளை உரக்க அழைத்து, “நான் எப்படி அக்கரைக்கு வருவது?” என்று கேட்டாள். அதற்கான வழி கண்டுபிடித்து சொல்வதற்காக ஆற்றை அங்குமிங்கும் பார்த்த அவள் பிறகு சொன்னாள், “நீ ஏற்கனவே அக்கரையில்தான் இருக்கிறாய்!”
      இது அத்தனை எளிமையானது. அத்தனை தெளிவானது. ஆனால் நமக்கு குறிப்பிட்ட திறனுடன் கூடிய மனம் கொடுக்கப்பட்டுள்ளது. தற்காலத்தில் நிறைய மக்கள் ‘மனமற்ற நிலைக்கு’ நீங்கள் செல்ல வேண்டும் என்று பேசி வருவது எனக்குத் தெரியும். ஏற்கனவே நிறைய பேர் அப்படித்தான் ஆகிவிட்டார்கள். இதுதான் இந்த உலகில் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. உலகின் மிகப்பெரிய பிரச்சனையே, சில மனிதர்கள் தங்கள் மனங்களை பயன்படுத்த மறுப்பதுதான். இந்த மனத்தைக் கொண்டு அடுத்த கணம், அடுத்த நாள், அல்லது ஆயிரம் வருடங்கள் கழித்து, இலட்சம் வருடங்கள் கழித்து, போன்றவற்றை யோசிக்கமுடியும். நீங்கள் ஒரு வரலாற்று ஆராய்ச்சியாளரா அல்லது ஜோதிட நிபுணரா என்பதைப் பொறுத்து காலத்தால் முன்னும் பின்னும் சென்று யோசிக்கமுடியும். அதற்காகத்தான் இந்த மனம் உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
      நீங்கள் எப்போதும் இந்த விளையாட்டைத்தான் விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த இரண்டு தொழில்களுக்கு இடையேதான் எப்போதும் ஊசலாடிக் கொண்டே இருக்கிறீர்கள். சிலர் நேற்று நிகழ்ந்தது குறித்து வருந்திக் கொண்டிருக்கிறீர்கள். சிலர் எதிர்காலத்தில் அற்புதம் நிகழும் என்றோ அல்லது எதிர்காலம் குறித்து பயத்துடனோ இருக்கிறீர்கள். எனவே நீங்கள் வரலாற்று ஆராய்ச்சியாளர் அல்லது ஜோதிட நிபுணர் என்ற நிலையில்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இதுதான் எப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதில் தவறேதும் இல்லை. அது மனதின் திறன். அதை அது அற்புதமாகவே செய்கிறது.
      ஒரே பிரச்சனை என்னவென்றால், உங்கள் கணிப்புகள் மிகவும் உண்மை போலாகி, நிகழ்வில் இருக்கும் உண்மையை முற்றிலும் அழித்துவிடுகிறது. அந்தக் கணிப்புகள், உங்கள் உடல் சார்ந்த, இரசாயனம் சார்ந்த, சுரப்பிகள் சார்ந்த, கர்மா மற்றும் சமூகம் சார்ந்த பலவித கட்டாயங்களின் குவியலில் இருந்து தோன்றுகிறது. உடலும் மனமும் இது போன்ற கட்டாயங்களின் பேரில் செயல்படுவதால், உங்கள் இயல்பான தன்மையை உங்களுக்கு நினைவூட்டுவதுகூட, மிகவும் சிக்கலானதாகத் தோன்றுகிறது.
      தேவாலயத்தைச் சார்ந்த ஒரு ஞாயிறு பள்ளியில் இருந்த ஆசிரியர், வாழ்வின் உயர் இலட்சியம் குறித்து குழந்தைகளுக்கு ஆர்வமூட்ட விரும்பினார். அப்பள்ளிகளில், இறைவனை விடவும் சுவர்க்கம்தான் உயர்வானது. அந்த ஆசிரியர் தன் மாணவர்களிடம், “நான் என் சொத்து முழுவதையும் இந்த தேவாலயத்திற்கு வழங்கி, இங்கேயே தொண்டு செய்தால், நான் சொர்க்கத்தை அடைவேனா?” என்று கேட்டார். மாணவர்கள் ஒரே குரலில், “இல்லை” என்றார்கள். “நான் ஏழைகளுக்குத் தொண்டு செய்து, தொழுநோயாளியின் கால்களைக் கழுவி, குழந்தைகளின் கண்ணீரைத் துடைத்தால் சொர்க்கம் சேர்வேனா?” என்று கேட்டார். குழந்தைகள் “இல்லை” என்றனர். “நான் என் மனைவி மக்களை நேசித்து, என் குடும்பத்தை நன்றாக கவனித்து, என் தேசத்துக்கு ஆற்றவேண்டிய கடமைகளை ஆற்றினால் சொர்க்கத்தை அடைவேனா?” என்றார். அவர்கள் மீண்டும், “இல்லை” என்றார்கள். “அப்படியானால் நான் சொர்க்கத்துக்குப் போகவேண்டும் என்றால், என்னதான் செய்யவேண்டும்? “என்று கேட்டார். கடைசி பெஞ்சில் அமர்ந்திருந்த சிறிய பையன் டாமி எழுந்து, “சொர்க்கம் அடைய வேண்டும் என்றால், அதற்கு நீங்கள் சாக வேண்டும்” என்றான்.
      அவ்வளவுதான் விஷயம்! நீங்கள் சாகவேண்டும். இதுதான் இருக்கும் ஒரே பிரச்சனை. ‘நான்’ என்று எதை நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ, அது உங்கள் மனம் உருவாக்கியுள்ள பிம்பம் என்பது தான் அந்த நினைவூட்டல். அந்த பிம்பத்தை நீங்கள் கொன்றுவிட்டால், பின்னர் எல்லாமே இங்குதான் இருக்கிறது; வாழ்க்கை என்பது ஆனந்தத்தின் பிரவாகமாக ஆகிவிடும். நீங்கள் உலகைக் கொல்லவேண்டாம்; இந்த ஒன்றை, ‘நான்’ என்பதை, மட்டும் கொன்றால் போதும்.
      உங்கள் உடலைக் கொல்வதற்கு உங்களுக்கு உரிமை இல்லை; ஏனென்றால் அதை நீங்கள் உருவாக்கவில்லை. ஆனால் நீங்களே உருவாக்கிய அனைத்தையும் கொல்லும் உரிமை உங்களுக்கு உண்டு; படைத்தவன் உருவாக்கியதை கொல்லும் உரிமை உங்களுக்கு இல்லை. உங்களால் உருவாக்க இயலாத எதையும் அழிக்கும் உரிமை உங்களுக்கு இல்லை. ஆனால் ‘நான்’ என்று நீங்கள் சொல்லிக்கொள்ளும் நபர் உங்கள் உருவாக்கமே. அந்த ஒரு நபரை நீங்கள் கொன்றுவிட்டால், பிறகு எல்லாமே உங்களுடையது; பிரபஞ்சமே உங்களுடையது.
      இது ஒரு வணிகம் – உங்களுக்கு ‘நான்’ வேண்டுமா? பிரபஞ்சம் வேண்டுமா? உங்களுடன் வணிகம் செய்பவர் பணம் கேட்கவில்லை; உங்களைத்தான் கேட்கிறார். இந்த வணிகமே இவ்வளவுதான். ஞானோதயம் குறித்த முழு வணிகமும் இவ்வளவுதான். கடவுள் உணர்தல், விழித்தெழுதல், நினைவூட்டல் என்று எப்படி அழைத்தாலும் சரி, மொத்தமும் இவ்வளவுதான். நீங்களே உருவாக்கியவற்றை முழுமையாகக் கொல்லுங்கள், பிறகு படைத்தவனின் படைப்பு உங்களுக்குள் வெடித்தெழும். வாழ்க வளமுடன்!
                                                                                                  அன்பும் அருளும்,
                                                                                                  சத்குரு

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

எடுத்துக்காட்டுக்கள் நன்றாக விளக்கியது... விரிவான சிறந்த பகிர்வுக்கு நன்றி...

Post a Comment