Showing posts with label மகாத்மா. Show all posts
Showing posts with label மகாத்மா. Show all posts

Wednesday, November 14, 2012

காந்தி எப்படி மகாத்மா ஆனார்? ஆனந்தம்


     
      அனைத்து ஆன்மீகச் செயல்முறைகளையும் ஒவ்வொருவரும் செய்யமுடியும். இதில் கேள்விக்கே இடமில்லை. அவர்கள் அப்படிச் செய்யவில்லையென்றால், அது மிகவும் துன்பகரமானது. ஏதோ ஒன்றுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டதால்தான் அவர்கள் ஓர் எல்லைக்குள் தங்களை குறுக்கிக் கொள்கிறார்கள். நம் அடையாளங்கள் குறுகிய எல்லைக்குள் இருப்பதால், நம்முடைய சாத்தியங்களும் குறுகிய எல்லைக்குள்ளேயே இருக்கிறது. உடலுடன் உள்ள அடையாளத்தை விட, எவ்வளவு பெரிய செயல்களைச் செய்ய முடியும் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.
      சரித்திரத்தில் இடம் பெற்ற பலருடைய வாழ்க்கையில் இப்படி நடந்திருக்கிறது. ஒரு குறுகிய எல்லைக்குள் வாழ்ந்துகொண்டு இருந்திருப்பார்கள். ஏதோ ஒரு காரணத்தால், அவர்கள் வாழ்க்கையில் எதிர்பாராமல் ஏதாவது நடந்து அவர்கள் எல்லையை உடைத்துவிடும். பிறகு அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள விரிந்த செயல்முறைகளுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு தாங்களே எதிர்பார்க்க முடியாத விஷயங்களைச் செய்வார்கள். உங்களுக்கெல்லாம் தெரிந்த ஓர் உதாரணம்… மகாத்மா காந்தி, மிகுந்த எல்லைக்குள் இருந்த மனிதர். அவர் திறமையான வழக்கறிஞரும் அல்ல. நீதிமன்றத்தில் தைரியமாக எழுந்து சரளமாக பேசக்கூடியவரும் அல்ல. ஆனால் ஒரே ஒரு சம்பவம், திடீரென அவருடைய அடையாளங்கள் கழன்றுவிட்டன.
      தென் ஆப்பிரிக்காவில் அவர் வழக்கறிஞர் தொழில் செய்துகொண்டு இருந்தபோது ஒரு நாள் புகைவண்டியில் முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்தார். அப்போது நடுவில் ஒரு ரயில் நிறுத்தத்தில் ஏறிய ஒரு வெள்ளைக்காரர், காந்தியிடம் ஒழுங்கான பயணச்சீட்டு இருந்தபோதும் அவர் கறுப்பர் என்பதால் இறங்கச் சொன்னார். காந்தி மறுக்க, அந்த வெள்ளைக்காரர் பயணச்சீட்டு பரிசோதகருடன் சேர்ந்து காந்தியை அவருடைய உடைமைகளுடன் அந்த பெட்டியிலிருந்து தூக்கி வெளியே வீசினார்.
      அப்போது பிளாட்பாரத்தில் விழுந்த காந்தி பல மணி நேரங்களுக்கு அங்கிருந்து எழுந்திருக்கவே இல்லை. “எனக்கு இது ஏன் நடந்தது? நானும் முதல் வகுப்பு டிக்கெட் வைத்திருந்தேன், பிறகு நான் ஏன் தூக்கி எறியப்பட்டேன்? இதற்கு வழி காண வேண்டும்” என்று அன்று முதல் மக்களின் பெரிய பிரச்சனைகளுடன் தன்னை தானே அடையாளப்படுத்திக் கொள்ள, காந்தி மகாத்மாவாய் மலர்ந்தார். சிறிய அடையாளங்களைத் தகர்த்தெறிந்து மிகப் பெரிய அடையாளங்களுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டதால் மகாத்மாவானார்.
      மகாத்மா காந்தியைப் போல் வேறு யாரும் இந்தப் பிரபஞ்சத்தில் இவ்வளவு மனிதர்களை வழிநடத்தியதில்லை. அதுவும் மிக எளிய வழிகளில். இந்த நாட்டில் நன்றாக வேர் ஊன்றியிருந்த அன்னியரை போர், வன்முறை போன்ற எந்த வழிகளுமின்றித் துரத்தினார். இந்தப் பிரபஞ்சத்தில் இதற்கு முன் நடந்திராத அதிசயம் இது. இந்த நாட்டை வென்றவர்கள் அதற்கென்று சில விலை கொடுத்துதான் இந்த நாட்டைக் கைப்பற்றினர். அவர்களும் எளிதாகப் போய்விடவில்லை. ஆனாலும், சண்டையில்லாமல், துப்பாக்கி ஏந்தாமல், வன்முறையைக் கடைப்பிடிக்காமல் அவர்களைத் துரத்தியடித்தார் மகாத்மா. இந்த நாட்டு மக்களை ஓரணியில் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுத்த அவரால் முடிந்தது.
      காவலர்களைப் பார்த்து துப்பாக்கியால் சுடுவது ஒரு விஷயம். அவர்கள் மீது குண்டு எறிவது மற்றொரு விஷயம், ஆனால் நிராயுதபாணிகளாகத் தெருவில் சென்று தலையில் அடிவாங்கி மண்ணில் வீழ்வது முற்றிலும் வேறு விஷயம். முதல் பகுதி மக்கள் அடிபட்டு வீழ்ந்தவுடன் அடுத்த குழுவைச் சார்ந்த மக்கள் அடிவாங்கப் போய் நிற்பது என்பது மிகவும் வேறுவிதமான வலிமையான விஷயம். அது அவ்வளவு எளிதல்ல. ஒருவர் அப்படிச் செய்வதற்கு மிகவும் ஆழமான மன வலிமை வேண்டும். லட்சக்கணக்கான மக்களை அவரால் அப்படி ஈடுபடுத்த முடிந்தது.
      தான், தன் குடும்பம், தன் வாழ்க்கை என்ற எல்லையை விட்டுவிட்டு அப்போது சமூகத்தில் நிலவிவந்த மக்களின் முக்கியப் பிரச்சனைகளோடு அவர் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டதால் அவருடைய சிறிய அடையாளம் சிதறியது. எனவே நீங்கள் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்று நிர்ணயித்து ஓர் எல்லைக்குள் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

      உங்களால் செய்ய முடிந்த எதையும் செய்யுங்கள். செய்ய முடியும் என்று நினைக்கும் எதையும் செய்யுங்கள்! வாழ்க வளமுடன்!

Tuesday, July 26, 2011

மாபெரும் மனிதராக வேண்டுமா? ஆனந்தம்


      சமூகத்தில் மாபெரும் மனிதராக வேண்டும் என்று நினைப்பதே சிறுமையான மனநிலை. அற்பமாக உணர்பவர்கள் தான் வித்தியாசமாகத் தங்களைக் காட்டிக்கொள்ள வேண்டும் என்று முனைவார்கள். சிறப்பானவராகவோ, பெருமைக்கு உரியவராகவோ ஆக வேண்டும் என்று ஆசைப்படுவதற்கு அவசியமே இல்லை.
      மற்றவர்கள் உங்களைக் கவனிக்க வேண்டும் என்று எதற்காக நினைக்கிறீர்கள்?
      அந்தத் திரையரங்கம் நிரம்பிவிட்டது.
      ''எங்கள் இருக்கைகளை வேறு ஒருவன் ஆக்கிரமித்து இருக்கிறான். எவ்வளவு சொன்னாலும் நகர மறுக்கிறான்'' என்று ஒரு தம்பதி மேனேஜரிடம் புகார் செய்தனர்.
      மேனேஜர் கோபமாக உள்ளே சென்றார். ஒரு ஆள் அடுத்தடுத்து மூன்று இருக்கைகளை ஆக்கிரமித்து மல்லாந்து படுத்துக்கிடப்பதைக் கவனித்தார்.
      ''தம்பி, குடித்துவிட்டு வந்திருக்கிறாயா? படம் ஆரம்பிக்கப் போகிறது. உனக்கான இருக் கையில் உட்கார். மற்ற இரண்டு இருக்கைகளை உடனே காலி செய்.''
      படுத்துக்கிடந்தவன் ஏதோ முனகினானே தவிர, அசையவில்லை. மேனேஜர் கோபமாகி போலீஸ்காரரை அழைத்து வந்தார்.
      போலீஸ்காரர் மிரட்டலாகக் கேட்டார்.
      ''டேய், உன் பெயர் என்ன?''
      அவன் இமைகளைக் கஷ்டப்பட்டுத் திறந்தான்.
      ''சங்கரன்'' என்றான்.
      ''எங்கே இருந்து வருகிறாய்?'' என்று அதட்டலாக அடுத்த கேள்வி வந்தது.
      வலி கலந்த முனகலாகப் பதில் வந்தது: ''பால்கனியிலிருந்து.''
      இப்படி மற்றவர்கள் கவனத்தைக் கவர்ந்தவராக மாறவா ஆசை? 'இல்லை. என்னை மற்றவர்கள் போற்றும் அளவு நடக்க வேண்டும்' என்று சொல்கிறீர்களா?
      வாழ்க்கையில் எதை அணுகினாலும், 'நான் என்ன ஆவேன்? எனக்கு என்ன கிடைக்கும்?' என்ற கணக்குகளை நீக்கிவிட்டு வாழ்ந்து பாருங்கள். உங்கள் திறனை 100 சதவிகிதம் முழுமையாகப் பயன்படுத்திச் செயல்படுங்கள். உங்களுக்கான ஆதாயங்களைப் பற்றிய கவனம் இல்லாமல் உங்கள் வாழ்க்கையின் நோக்கம் அமைந்துவிட்டாலே நீங்கள் பெருமைக்கு உரியவராகிவிடுவீர்கள்.
      தவிர, ஒருவர் வாழும் நாட்கள் சரித்திரத்தில் எந்தக் கட்டத்தில் இருக்கின்றன என்பதைப் பொறுத்து அவருக்கான பெருமையும் மாறும். மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற நபர் இந்தத் தேசத்துக்கு மிகத் தேவையாக இருந்தபோது கிடைத்ததால்தான் மகாத்மா காந்தி ஆனார். மகாத்மா என்றால், மிகச் சிறந்த உயிர் என்று அர்த்தம். இன்றைய காலகட் டத்தில் அவர் அரசியலுக்கு வந்தால், மற்றவர்க ளோடு தாக்குப்பிடிப்பாரா... யோசியுங்கள்.
      ஊழலிலே மூழ்கிப்போன ஓர் அரசியல்வாதி தனியே ஓய்வு எடுக்க கடற்கரைக்குச் சென்றார். தண்ணீரில் கால்களை நனைத்து அவர் நின்றிருந்த போது, திடீரென்று அலைகள் அவரை உள்ளே இழுத்துச் சென்றுவிட்டன.
      இதைக் கவனித்த இளைஞன் ஒருவன் தண்ணீரில் பாய்ந்தான். அவரைக் காப்பாற்றிக் கரை சேர்த்தான்.
      அரசியல்வாதி வெலவெலத்துப் போயிருந்தார். ''நன்றி, தம்பி. எனக்குப் பெரும் செல்வாக்கு இருக்கிறது. உனக்கு என்ன வேண்டுமோ கேள். நிறை வேற்றிவைக்கிறேன்.''
      ''ஐயா, என் இறுதிச் சடங்குகளை ராணுவ மரியாதையுடன் செய்ய வேண்டும். இதுவே என் ஆசை.''
      அரசியல்வாதி திகைத்தார்.
      ''தம்பி, இவ்வளவு இளைஞனாக இருக்கிறாய். அதற்குள் உனக்கு எதற்கு மரணத்தைப் பற்றிய கவலை?''
      ''நான் கடலில் இருந்து யாரைக் காப்பாற்றி இருக்கிறேன் என்பது வெளியில் தெரிந்தால், என் உயிருக்கு ஏது ஐயா உத்தரவாதம்?'' என்றான், இளைஞன் நடுக்கத்துடன்.
      இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் நிறைந்த இன்றைய இந்தியாவில், மகாத்மா காந்தி தனது நேர்மையான கொள்கைகளை வைத்துக்கொண்டு தேர்தலில் நின்றால், வெற்றி பெற முடியுமாஎன்பதே சந்தேகம்தான்.
      அவர் வாழ்ந்த காலகட்டத்திலும் தான் பெருமைக்கு உரியவராக அறியப்பட வேண்டும் என்ற முனைப்புடனா செயல்பட்டார்? இல்லை. தன் தனிப்பட்ட தேவைகளைப் பின்தள்ளி வைத்துவிட்டு, தேசத்துக்கு எது தேவையானதோ, அதற்கு அவர் முக்கியத்துவம் தந்தார். அதனால், பெருமை பெற்றார்.
      உங்களுக்கு என்ன கிடைக்கும் என்ற ஆதாயக் கணக்கை நீக்கிவிட்டு உங்களைச் சுற்றியுள்ள வாழ்க்கையைக் கவனியுங்கள். தானாகவே உங்களால் என்ன செய்ய முடியும் என்பதைத்தான் கவனிப்பீர்கள். தேவையானதைச் செய்வதற்கு உங்கள் திறமையை இன்னும் எப்படி மேலோங்கச் செய்யலாம் என்று யோசிப்பீர்கள். திறமைகளைக் கூர்தீட்டிக்கொள்வீர்கள்.
      இந்தியாவிலேயே செய்வதற்கு எவ்வளவோ விஷயங்கள் பாக்கி இருக்கும் போது, வேலையில்லாத் திண்டாட்டம் என்று பேசுவது எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. செய்து முடிப்பதற்கு இன்னும் பல நூறு விஷயங்கள் மிச்சம் இருக்கின்றன. அவற்றைக் கவனிக்காமல், உங்கள் தேவைகளை முன்னிறுத்தி மட்டுமே வேலைகளைத் தேடுவதால்தான் அவை கிடைப்பது இல்லை.
      'எனக்கு என்ன கிடைக்கும்?' என்ற கணக்கு விலகியவுடன் நீங்கள் பிரகாசிக்கத் துவங்கிவிடுவீர்கள்.
      உங்களுக்கு எந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும், எந்த அளவுக்கு மதிப்பு கிடைக்கும் என்பதெல்லாம் உங்கள் திறனைப் பொறுத்துதான் அமையும். தேசத்தில் உயர்ந்தவராக நீங்கள் அறியப்படலாம். அல்லது, உங்கள் ஊரில் பெருமைமிக்கவராக மாறலாம். உங்கள் தெருவில் கவனிக்கப்படுபவராக இருக்கலாம். எதுவும் இல்லாமல், உங்கள் வீட்டளவில் மட்டுமே நீங்கள் சிறப்பானவராக மதிக்கப்படலாம். அதனால் என்ன?
      மற்றவர்கள் உங்களை மகாத்மா என்று அழைக்கட்டும். அழைக்காமல் போகட்டும். அது ஒரு பொருட்டல்ல. உங்கள் அளவில் நீங்கள் மகாத்மாவாக உணர்வீர்கள். மகாத்மாவாக வாழ்வீர்கள்!

Friday, February 4, 2011

சினம் - மன்னிப்பு ஆனந்தம்

        சமீபத்தில் ஒரு கருத்துக்கணிப்பு. மகாத்மா எழுதிய ஆயிரமாயிரம் வாசகங்களில் தலைசிறந்த வாசகம் எது? அதன் முடிவு, பலகீனமானவன் யாரையும் மன்னிப்பதில்லை, பலம் பொருந்தியவன் அனைவரையும் மன்னிக்கிறான்.
        மன்னிப்புக்கு மாற்றுப்பாதை கோபம். நாம் தவறு செய்யும் போது, அப்பாவோ, அம்மாவோ அல்லது உயரதிகாரிகளோ "ந‌டந்தது நடந்து போச்சு, சரி பரவயில்லை" என மன்னிக்க மாட்டார்களா என ஏங்குகிறோம், நாம் மன்னிப்புக்கு ஏங்குகிறோம், பிறரை மன்னிக்கத் தயங்குகிறோம்.
        நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களில் பல ரகங்கள் உண்டு. சாதுக்கள், சண்டாளர்கள், ஏமாற்றுபவர்கள், ஏமாறுபவர்கள், கருமிகள், தருமவான்கள், முன்கோபிகள், மூர்க்கர்கள், அருளாளர்கள் என பலவகையினரை நாம் பார்க்கிறோம். இவர்களுக்கு மத்தியில் தான் நாம் வாழவேண்டியிருக்கிறது. யாருடனும் பகைமை கொள்ளாது அனைவரிடமும் இணக்கமாக வாழ, நமக்கு அவரவர்களை அவரவர் நிலையில் ஏற்றுக்கொண்டு வாழவேண்டும்.
        நமது வாழ்க்கையில் நித்தம் நித்தம் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் சம்பவங்களே! சிலது நல்ல பலனைத் தரும், சிலது நல்ல பாடத்தைத் தரும். பலனைப் பெறும்போது சந்தோசமடைகிறோம், பாடத்தைப் பெறும் போது சம்மந்தப்பட்ட மனிதர்களை கோபம் கொண்டு காயப்படுத்துகிறோம்.

        கண்டிப்பு வேண்டும், ஆனால் கோபம் கொண்டு வார்த்தைகளை தாறுமாறாக கொட்டும் கோபம் வேண்டாம். கோபம் கொண்டால் மனிதனுக்கும் விலங்கிற்கும் வித்தியாசமில்லை. ஆனால் மன்னித்தல் என்பது மனிதனுக்கு மட்டுமே சாத்தியமானது. மனிதனின் த்னித்தன்மையை இழக்கச் செய்வது சினம். ஆகவே வள்ளுவர் அருளினார்,
                      " தன்னைத்தான் காக்கின் சினம் காக்க, காவாக்கால்
            தன்னையே கொல்லும் சினம்"
        அன்பின் அடையாளம் மன்னிப்பு. ஆணவத்தின் ஆரவாரம் சினம்.
        வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சிறுசிறு சம்பவங்கள்-கல்யாணத்திற்கு என்னை அழைக்கவில்லை, வசதி மிகுந்த சிலர் என்னை மதிக்கவில்லை, வெளிநாடு போகும் போது என்னிடம் சொல்லிக்கொண்டு போகவில்லை, மருத்துவமனையில் இருக்கும் போது என்னை வந்து பார்க்கவில்லை என்ற எண்ணங்கள் சில சிக்கல்களை கோபத்தை மனதில் ஏற்படுத்தலாம். உருவான சிறுசிறு சிக்கல்களை  பெரிதாக்குவது நம்கையில் தான் இருக்கிறது. சிக்கல் உருவானது நம் மனதில் ஆகவே தீர்வும் அங்கே தான் உருவாக வேண்டும். சிக்கல் சிறிதாக இருக்கும் போது அதை உருவாக்கியவரை மன்னித்து சம்பவம் நடக்காதது மாதிரி நாம் நடந்து கொண்டால் அந்த சிக்கலுக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்கிறோம். மாறாக, சினம் கொண்டு சம்மந்தப்பட்டவர்களை வார்த்தைகளால் வாரி இறைத்தால் சிக்கல் பெரிதாகி விடுகிறது. அவர் மீது நமக்கு வெறுப்பும், நம் மீது அவருக்கு வெறுப்பும் உண்டாகி நல்ல உறவுகளை இழக்கிறோம்.
                      "சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி
                     இனமெனும் ஏமப்புனையைச் சுடும்"
        சென்னையில் எனது நெருங்கிய உறவுக்காரர், மிகவும் வேண்டியவர். அவர் வீட்டுக் கல்யாணத்திற்கு பத்திரிக்கை இன்னும் வரவில்லை, விடிந்தால் கல்யாணம் கல்யாணத்திற்கு செல்வதா? வேண்டாமா?
        நெருங்கிய உறவுக்காறர் ஆயிற்றே பத்திரிக்கை கொடுத்து தான் கல்யாணத்திற்கு செல்ல வேண்டுமா? என்று அவரை மன்னித்து கல்யாணத்திற்கு சென்றால், நான் இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன். "நேரில் வந்து அழைக்கலாமென்று இருந்தேன், கடைசி நேரத்தில் விட்டுப் போய்விட்டது என்று கட்டிப் பிடிப்பார் அவர். அங்கே நல்உறவு  வாழ்க்கை முழுவதும் நீடிக்கும். அல்லது சென்னையில் எத்தனையோ திருமணங்கள் அழைப்பில்லாமல் நடக்கின்றன அதில் இதுவும் ஒன்று என்று பேசாமல்(கல்யாணத்திற்கு போகாமல்) விட்டுவிட்டால் அதோடு சிக்கல் தீர்ந்து உறவு நீடிக்கும். அதை விடுத்து கோபத்தில் போகாமல் விட்டுவிட்டதுடன், நாளைக்கு நம்வீட்டு விசேஷத்திற்கும் அவருக்கு அழைப்பு கொடுக்கக் கூடாது என்ற முடிவுடன், அவரைப் பற்றி தகாத வார்த்தைகளை அள்ளி வீச, அதை நான்கு பேரிடம் சொல்ல உறவு முறிகிறது.
        வீட்டிலாகட்டும், வெளியிலாகட்டும் கோபம் கொண்டு எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செயல்பட்டு உறவுகளை முறித்து விடாதீர்கள். உறவுகள் முறிய முறிய தனிமைப் படுத்தப்படுவோம். உற‌வுகளைக் கட்டிக் காப்பற்றுவது தெய்வீகம். அந்த தெய்வீகத் தன்மையை வளர்ப்பது நமது மன்னிக்கும் தன்மையே.
        சினம் நம்மைத் தாழ்த்திவிடும், மன்னிக்கும் தன்மை ஒன்றே நம்மை உயர்த்தவல்லது. மன்னிப்பே மகத்தானது. மன்னிப்பே நமக்கும் நிம்மதியைத் தந்து, மற்ற‌வர்களுக்கும் நிம்மதியைத் தரும். மன்னிப்பதால் ஆனந்தம் நிலைக்கும், ஆனந்தம் பெருகும்..........
…………………… அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி…………………….