Monday, November 19, 2012

ஹிக்ஸ் போஸான் – கடவுள் துகளா அல்லது கடவுள் சபித்த துகளா? ஆனந்தம்


      கேள்வி: சத்குரு, ஹிக்ஸ் போஸான் என்று ஒரு புதிய அணுத் துகளை கண்டுபிடித்திருக்கிறார்கள். இதன் மூலம் கடவுள் இருப்பது நிரூபிக்கப்படுமா? அறிவியல் மூலம் அது விளக்கப்படுமா?

      கடவுள் துகள் (god particle) என்று அதற்கு பெயர் வைத்தது நல்லதாய் போயிற்று. ஏனென்றால் யாரோ ஒருவர் அதற்கு கடவுள் சபித்த துகள் (god damn particle) என்று பெயரிட வேண்டும் என்று நினைத்தார்கள்.
      உலகம் முழுவதிலும், பௌதிகத்தில் ஈடுபாடு இல்லாதவர்கூட, இப்பொழுது அணுத்துகள் பௌதிகம் (particle physics) பற்றி பேசுவதே மிகப் பெரிய சாதனைதான். தற்சமயம் போஸானால் தொழில்நுட்ப ரீதியாக உபயோகம் இல்லாவிட்டாலும் அதனை அறிந்து கொள்வதற்காக மட்டுமே பத்து பில்லியன் டாலர் செலவழிக்கப் போகிறார்கள்.
      அறிவியல் ரீதியாக இதன் விளக்கம் என்ன? யோகாவில் படைப்பனைத்தையும் ஸ்தூலம், சூட்சுமம், சூனியம், சிவம் என்று பகுத்துள்ளார்கள். ஸ்தூலம் என்றால் பொருள்தன்மையில் இருப்பது. நீங்கள் பார்ப்பவை, கேட்பவை மற்றும் ஐம்புலன்களால் உணரக்கூடிய அனைத்தும் ஸ்தூலமாகக் கருதப்படுகிறது. அவற்றை உங்கள் அறிவுத்திறனால் புரிந்துகொண்டு கிரகித்துக்கொள்ள முடியும். ஒரு பொருளின் அடிப்படைக் கட்டுமானப்பொருள் அணு. தேவையான அணுக்கள் சேர்ந்தால் நம் கண்ணுக்கு அது புலப்படுகிறது.
      சூட்சுமம் என்பது நம் கண்ணுக்கும் மற்ற புலங்களுக்கும் அப்பாற்பட்டு இருக்கும், ஆனாலும் அதுகூட பொருள்தன்மை கொண்டதுதான். சூட்சும நிலைக்கு வந்துவிட்டால், அப்பொருளை உங்கள் புத்தியால் ஆராய்ந்து அறிய முடியாது. அதற்கு அசாதாரணமான அறிவுத்திறன் அதாவது, விசேஷ ஞானம் தேவைப்படும்.
      இந்த விசேஷ ஞானம்தான் விஞ்ஞானம் எனப்படும். ஐம்புலங்களால் கூட உணர முடியாதவற்றை உங்களால் உணர முடிந்தால் அதுவே விஞ்ஞானம். ஹிக்ஸ் போஸானை யாருமே பார்த்த்தும் இல்லை, பார்க்கவும் முடியாது – அதன் கால்தடம் மட்டுமே பார்க்கமுடியும். கால்தடத்தைப் பார்த்து தான் ஹிக்ஸ் போஸான் இருப்பதாக நம்புகிறார்கள். காட்டில் புலியின் கால்தடத்தைப் பார்த்து புலி நடமாட்டம் இருப்பதாக நம்புகிறோம் அல்லவா, அதுபோலத்தான்.
      இன்னும் மேற்கொண்டு சென்றால் சூன்யம் ஆகிவிடும். சூன்யம் என்றால் முழு வெறுமை என்று அர்த்தம். சூன்யத்தில் உங்கள் அறிவுத்திறன், ஐம்புலங்கள் எல்லாமே பயனற்று போய்விடும். ஏனென்றால் அங்கே பொருள், உருவம் எதுவும் இல்லை. சூன்யத்திற்கும் அப்பாற்பட்டது சிவம். எது இல்லையோ அதுவே சிவம். அது உருவமாக இல்லை. இதனை உங்கள் தர்க்க மனம் கொண்டு உணரவும் முடியாது.
      இன்று நவீன அறிவியல் பிரபஞ்சம் முழுவதையும் தர்க்க மனம் கொண்டு புரிந்து கொள்ளமுடியும் என்று நம்புகிறது. உங்கள் அறிவு வேண்டுமானால் இந்த பிரபஞ்சத்திற்குள் அடங்கலாம்; ஆனால் பிரபஞ்சம் உங்கள் அறிவுக்குள் அடங்கிவிடாது. புலன்களுக்கு அப்பாற்பட்ட பரிமாணத்தை தாண்டியவுடனேயே உங்கள் தர்க்க அறிவு பயனற்றுப் போகிறது.
      பிரபஞ்சம் பற்றி யோகக் கலாச்சாரத்தில் இப்படியெல்லாம் விவரித்து இருக்கிறார்கள் என்று நோபல் பரிசு பெற்ற அறிஞர் ஒருவரிடம் விளக்கினேன். பிரபஞ்சம் குறித்த விஷயங்கள் யோகக் கலாச்சாரத்தில் கதைகளாக சொல்லப்படுகின்றன. அவற்றை எல்லாம் ஒருவர் தன் அனுபவத்தின் மூலம் நிதர்சனமாய் அறிந்தால் மட்டுமே நம்பவேண்டும். அதுவரை எதையும் அப்படியே நம்பக்கூடாது என்றும் இக்கலாச்சாரத்தில் சொல்வார்கள் என்று சொன்னேன்.
      மேலும் என் அனுபவத்தில் இது தான் பிரபஞ்சம் குறித்த நிதர்சனம் என்று என் அனுபவத்தைச் சொன்னேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டேன். உடனே அவர்கள், “சத்குரு, நீங்கள் சொன்ன விஷயத்திற்கு, கூடவே கணிதம் மூலம் ஆதாரம் காண்பித்தால், நோபல் பரிசே கிடைத்து விடும்,” என்றார்கள்
      எனவே அறிவியல் மூலம் அறிய விரும்பும் விஷயங்களை எனக்குள் உண்மை என்று உணர்ந்திருக்கிறேன். இருந்தாலும் பத்து பில்லியன் டாலர் கருவி செய்துதான் நிரூபிக்க முடியும் என்று சிலர் நினைத்தால் அது அவர்கள் பாடு. இது (தன்னைச் சுட்டிக் காட்டுகிறார்) என்ன என்பதின் ஆழத்திற்கு நீங்கள் போகத் தயாராக இருந்தால், உங்களுக்கு அந்த உண்மை நிரூபணமாகிவிடும்.
      ஏனென்றால் இதுவும் (தன்னைச் சுட்டிக் காட்டுகிறார்) பிரபஞ்சமும் ஒரே விதமாகத்தான் உருவாக்கப்பட்டுள்ளது. இது எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது என்று அறிந்தால் பிரபஞ்சம் உருவாக்கப்பட்டுள்ள விதத்தையும் ஊகித்து அறிய முடியும். விஞ்ஞானமும் இப்பொழுது ஊகம் தானே செய்கிறது.
      பிரபஞ்சம் முடிவில்லாதது என்று விஞ்ஞானம் இப்போது ஒப்புக்கொண்டுள்ளது. முடிவில்லாத ஒன்றில் போய் படைப்பின் மூலத்தை தேடுவது எளிதா? அல்லது உங்களுக்குள்ளேயே தேடுவது எளிதா? காலையில் சாப்பிட்ட இட்லி, தோசை எப்படி சிலமணி நேரங்களில் மனிதனாக மாறியது? படைப்பின் மூலமே உங்களுக்குள் இருப்பதால்தான் இது சாத்தியமாகிறது. எனவே படைப்பினைப் பற்றி ஏதேனும் அறிந்து கொள்ள வேண்டும் என்றால், நமக்குள் பார்ப்பது தானே சிறந்த வழியாக இருக்க முடியும்?
      விஞ்ஞானம் இன்று பிழைத்திருப்பதன் காரணம், அது வழங்கும் தொழில்நுட்பம்தான். தொழில்நுட்பமாக மாறாமல் இருந்திருந்தால், விஞ்ஞான ஆய்விற்கு யார் இவ்வளவு செலவு செய்யப்போகிறார்கள்? எனவே விஞ்ஞானத்தால் இத்தகைய பயன்கள் உள்ளன. ஆனால் அந்த விஞ்ஞானத்தால் பிரபஞ்சத்தை உங்களுக்கு திறந்து காட்ட முடியாது. ஏனென்றால் அது அறிவின் மூலம் மட்டுமே அறியமுயல்கிறது. உங்கள் அறிவுத்திறன் எதையும் கூறுபோட்டுதான் பார்க்கும்.
      அழகிய மலரை கூறுபோட்டு அதன் அங்கங்களை அறிய முடியும் – ஆனால் அதன் அழகை, அதன் முழுமையை, தெய்வீகத்தின் கரங்களைப் பார்க்க முடியாது. நீங்கள் அந்த மலரில் முழு கவனம் செலுத்தினால் அதில் பிரபஞ்சத்தையே காண முடியும்.
      இப்பொழுது விஞ்ஞானம் எப்படி ஆகிவிட்டது தெரியுமா? பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றையும் நாம் எப்படி உபயோகப்படுத்துவது என்று பார்க்கிறார்கள். கண்ணுக்குத் தெரியாத அணு, ஏன் அந்த கடவுள் துகள் போஸானைக் கூட விட்டு வைக்கவில்லை. ஒருவேளை ‘போஸான் குண்டு’ செய்தால்? உலகமே ஒரு நொடியில் காணாமல் போய்விடும். புரிகிறதா?
      இன்று இந்த உலகத்தையே நாசப்படுத்துவது இதே தொழில்நுட்பம் தானே? ஒன்றை நன்றாக புரிந்துகொள்ளுங்கள், நவீன தொழில்நுட்பம் முதலில் இராணுவத்தில் பயன்படுத்தி பல உயிர்களை வாங்கிய பின்பே மற்ற பயன்பாட்டிற்கு வரும். இன்னும் எவ்வளவு உயிர்ச்சேதம் வேண்டும்?
      எதைப்பார்த்தாலும் அதை எப்படி உபயோகிப்பது? அதிலிருந்து எனக்கு என்ன பயன்? இப்படித்தான் பார்க்கிறோம். இது தான் நவீன யுகத்தின் போக்காக உள்ளது. எப்போதுமே எனக்கு என்ன பலன் என்று வாழ்வது பெறுமைக்குரிய முறை அல்ல. அப்படி வாழ்ந்தால், எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதது போல்தான் உணர்வீர்கள்.
      எனவே உங்களை முழுமையாக வழங்குவது எப்படி என்று நீங்கள் அறிய வேண்டும். இதோ இந்த மரத்தைப் பார்த்தால் கூட நாம் எப்படி இந்த மரத்திற்கு நம்மை முழுமையாக அர்பணிக்க முடியும் என்று பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் வாழ்க்கையை உணர்வீர்கள். இதில் எனக்கு என்ன கிடைக்கும் என்ற மனப்பான்மையால் வாழ்க்கை உங்களை தவிர்த்து போய்விடும்.
      இந்த போஸான், இந்திய விஞ்ஞானி சத்யேந்திரநாத் போஸ் பெயர்கொண்டிருக்கிறது தெரியுமா? அவர் ஒரு கணித மேதை. ஐன்ஸ்டைன் சொன்னார், “மேற்கத்திய விஞ்ஞானிகள், இந்திய கணிதவியல் வல்லுனர்களின் உதவி இல்லாமல் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை.” கணிதத்தின் அடிப்படையே கிழக்கு நாடுகள்தான். ஆனால் நாம் நம் கலாச்சாரத்தில் இயற்கைக்கு மாறாக எதுவும் செய்ய மாட்டோம். இங்கே இயற்கையை இயற்கை அன்னை என்றுதான் குறிப்பிடுகிறோம்.
      அன்னையிடம் இருந்து என்ன வேண்டுமோ அது மட்டும்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அவளை கற்பழிக்கக்கூடாது. விஞ்ஞானத்தை ஒரு கருவியாக, தேடுதலாக பயன்படுத்துவதே சிறந்ததாகும். இல்லையேல் அதுவே நமக்கு வீழ்ச்சியாகி எல்லாமே ‘கடவுள் சபித்தது’ ஆகிவிடும்.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் ஆதங்கம், கோபம், கேள்விகள், விளக்கங்கள் அனைத்தும் அருமை... நன்றி...

Post a Comment