Monday, May 23, 2011

இறந்த காலம் ஆன்ந்தம்


      சத்குரு! "நான் என் இளமைக் காலத்தில் வெளியில் சொல்ல முடியாத சில தவறுகளைச் செய்திருக்கிறேன். நெருக்கமானவர்களிடம்கூடப் பலப் பொய்களைச் சொல்லி ஏமாற்றியிருக்கிறேன். இப்போது, உடல் ஓய்ந்து விட்டது. என்னைப்பற்றி முழுமையாகத் தெரியாத என் குடும்பத்தார் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும், மரியாதையும் என்னை உறுத்துகின்றன.
      எவ்வளவுதான் முயன்றாலும், இறந்த காலத்தில் செய்த பிழைகள், தவறுகள் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்து தாங்க முடியாத வருத்தத்தில் தள்ளுகின்றன. இதிலிருந்து மீள வழி இல்லையா ?"
      " சிறு வயதில் செய்ய முடிந்ததை எல்லாம் இப்போது செய்ய முடியவில்லையே என்று வருத்தம் வந்துவிடவில்லையே உங்களுக்கு ?
வாழ்க்கையில், ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விஷயம் முக்கியமாகத் தோன்றுகிறது. அதற்கு முன்னுரிமை கொடுக்கும்போது, மற்றவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்களில்கூட ஈடுபடத் தோன்றுகிறது. யாரோ ஒருவரைக் கொலை செய்யும் ஒருவன்கூட அந்தக் கணத்தில் அதுதான் சரியான செயல் என்று கருதுவதால்தான் அப்படிச் செய்கிறான்.
      கோயிலுக்கு அழைத்துச் சென்று அப்பா மகனிடம் சொன்னார்,கடவுளிடம் பிரார்த்தனை செய்து, உனக்கு வேண்டியதைக் கேள். கொடுப்பார்."
      " நீங்கள் பிரார்த்தனை செய்து கேட்டால், அதையும் உங்களுக்குக் கொடுப்பாரா அப்பா?"
      " ஆம், மகனே. நிச்சயமாக!"
      மகன் இப்போது அப்பாவைச் சந்தேகத்துடன் பார்த்தான். "அதெப்படி அப்பா நடக்கும் ? நம் இரண்டு பேரில்யார் பேச்சை அவர் கேட்பார் ?"
      உலகம் அப்படித்தான். ஒரு விஷயத்தை இருவர் ஒரே மாதிரி பார்ப்பது இல்லை.தவறு என்று மற்றவர்கள் கருதியது அந்தக் கணத்தில் உங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் சந்தோஷம் கொடுத்திருக்கிறது. அதனால், அந்தச் செயலில் ஈடுபட்டீர்கள். எப்போது தவறு என்று மனதார உணர்ந்துவிட்டீர்களோ,அதை மறுபடியும் செய்ய மாட்டீர்கள்.
      ஆனால், நினைவுகள் சுமையாகத் தங்கி அவதிக்கு உள்ளாக்குகின்றன. நரகத்துக்குப் போய்விடுவோமோ, அல்லது வேறு ஏதாவது பாதிப்பு வந்துவிடுமோ என்று இப்போது பயம் வந்து விட்டது. இந்தப் பயம், குற்ற உணர்வு இதெல்லாம் மனதின் செயல்.
      நமக்கு ஏற்கனவே நடந்தது எல்லாம் ஞாபகங்களாகத் தங்கி விடுகின்றன. அந்த ஞாபகங்கள் மீது கட்டப்படும் கற்பனைதான் எதிர்பார்ப்பாக, குற்ற உணர்வாக, அச்சமாக எழுகிறது. கற்பனை என்று புதிதாக ஒன்றும் வரப்போவது இல்லை. நம் அனுபவத்தில் உள்ளதை அடிப்படையாகக் கொண்டு, ஏற்கனவே உள்ள ஞாபகங்களைச் சற்று மிகைப்படுத்தினால், அதுதான் கற்பனை.
      ஒரு சின்னப்பையன் தன் அம்மாவிடம் ஓடி வந்தான்.
      " அம்மா, நான் நீச்சலடிக்க ஆற்றுக்குப் போகலாமா ?"
      "ஐயோ, அங்கே எல்லாம் போகாதே...ஆற்றில் பெரிய பெரிய முதலைகள் இருக்கும். உன்னை இழுத்துப்போய்விடும்." என்றாள் அம்மா.
பையனுக்கு ஆச்சர்யம், "ஆனால், தினமும் அப்பா அங்கே போய் நீச்சல் அடிக்கிறாரே... அம்மா?" என்றான்.
      "டேய் ! உங்கப்பா பெரிய தொகைக்கு இன்ஷூரன்ஸ் எடுத்திருக்கார். அவர் போகலாம்... நீ போகக்கூடாது!"
      அந்த அம்மாவுக்கு கணவனைப் பற்றிய ஞாபகம், மகனைப்பற்றிய கற்பனை... இரண்டும் எப்படி இருக்கிறது பாருங்கள். நிறையப் பேர் என்னிடம் தங்கள் குழந்தையைக் கூட்டி வந்து நிறுத்துவார்கள், "சத்குரு, இவனுக்கு ஞாபகசக்தி கம்மியாக இருக்கிறது. அதை அதிகப்படுத்திக் கொள்ள வழிசொல்லுங்கள்" என்பார்கள்.
      "பழசெல்லாம் ஞாபகம் இருப்பதால்தானே நீங்கள் இப்படிக் கஷ்டப்படுகிறீர்கள்? எல்லாம் மறந்துபோனால் நல்லதுதானே? நேற்று பள்ளிக்கூடத்தில் நடந்தது ஒன்றும் ஞாபகம் இல்லாமல் உங்கள் பையன் ஆனந்தமாகத் தானே இருக்கிறான்?" என்று வேடிக்கையாகச் சொல்வேன்.
      உங்கள் தாய்,தந்தை, கணவன்,மனைவி,குழந்தை தொழில் எதுவானாலும் உங்களுடைய ஞாபகசக்தி காரணமாகத்தானே அடையாளம் காண முடிகிறது? அதேபோல், உங்கள் சாதி, மதம்,அந்தஸ்து எல்லாமே ஞாபகப் பதிவுகள்தானே?
      ஞாபக சக்தியும், கற்பனையும் கூடாது என்று சொல்லவில்லை. ஆனால், அவை மனதின் மிக அடி நிலையில் உள்ள சக்தி. அந்த நிலையிலேயே மனதைப் பயன்படுத்தினால், இறந்தகாலம் என்பது நம் வாழ்க்கையின் நிகழ்காலமாகி விடும்.
      கடற்கரையில் இருக்கிறீர்கள். சிலுசிலுவென்று காற்று பிரமாதமாக வீசுகிறது. ஆனால், அதை அனுபவிக்காமல், பத்து நாட்களுக்கு முன்னால் நடந்த அசம்பாவிதம் பற்றியே புத்தி சிந்தனை செய்கிறது. இந்தக் கணத்தின் சுகம் கிடைக்காமல் போகிறது.பழைய வேதனையை அதற்கான சூழ்நிலை இல்லாதபோதிலும், மறுபடி அனுபவிக்கிறீர்கள்.
      ஜப்பானில் இருந்து வருபவர்களிடம் ஒரு விசித்திர நோய் இருக்கும். ஒரு வீட்டில் இருந்து நான்கு பேர் சுற்றுலா வந்தால், நான்கு பேரிடமும் தனித்தனி கேமரா இருக்கும். மலையை, நதியை, சூரிய உதயத்தை, அஸ்தமனத்தை எதையும் நேரடியாக அனுபவிக்காமல், கேமரா வழியே கவனிப்பதிலேயே நேரம் செலவு செய்வார்கள்.
      துருக்கி சென்றிருந்தேன். அங்கே வெப்பக் காற்றை நிரப்பிய பலூன்களில் மேலே பறக்கையில், அதை ஆழ்ந்து அனுபவிக்காமல், நான்கைந்து ஜப்பானியர்கள் கேமரா வழியே படம் எடுப்பதிலேயே குறியாக இருந்தார்கள்.
      கண்கள் இப்படிச் சிறைபட்டுப் போனதில்,அதில் ஒருவர் தவறாக நகர்ந்து, கிட்டத்தட்ட முப்பதடி உயரத்தில் இருந்து தவறி விழுந்தார். தோள்பட்டையில் எலும்பு முறிவோடு அவரைத் தூக்கிப் போனார்கள். தலத்தில் அனுபவிப்பதை விடுத்து, வீட்டில் போய் நினைத்துச் சந்தோஷப்படுவதற்கு என்ன இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை.
      உலகத்தில் பொதுவான பிரச்னையாக இருப்பதே, இந்த மனதை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளத் தெரியாமல் இருப்பதுதான். இறந்த காலத்தை நினைத்தபடி, உயிர் இல்லாத ஒன்றுக்கு உயிர் கொடுக்க முயற்சி செய்தால், உயிரோடு இருப்பது கூட உயிர் அற்றதாகிவிடும்.
      இப்படி மனதை மிகமிக அடிநிலையிலேயே உபயோகப்படுத்தி வராமல், நினைவாற்றல்,கற்பனை இரண்டையும் கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு மனதைப் பயன்படுத்தினீர்கள் என்றால், அது எப்பேர்ப்பட்ட கூர்மையான கருவி என்று உணர்வீர்கள். உங்கள் அனுபவத்தில் இல்லாத பரிமாணங்கள்கூட உங்கள் அனுபவத்தில் வந்து சேரும். அதற்காகத்தான் தியானம் என்று கொண்டு வந்தார்கள்.
      உண்மையில், எந்தக் கணத்திலும் ஆனந்தமாக இருப்பது எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது இல்லையா? உங்கள் வாழ்க்கையில் ஆனந்தம்தான் முக்கியம் என்று நினைத்தால், அதுபற்றி மட்டுமே உங்ள் மனம் செயல்படட்டும்!" ஆனந்தமே எல்லாம்!....

No comments:

Post a Comment