Tuesday, May 31, 2011

கருத்து ஆனந்தம்


      ஒரு முறை ஒரு விவசாயி தன்னுடைய கழுதையை விற்று விடத் தீர்மானித்தான். அருகிலுள்ள கிரமாத்துக்குத் தன் மகனையும் அழைத்துக் கொண்டு சென்றான். அவர்கள் இருவரும் கழுதையை இழுத்துக் கொண்டு நடந்தே போனார்கள். வழியில் செல்லும்போது சில வழிப் போக்கர்கள் இவர்களைப் பார்த்துச் சிரித்தனர். பிறகு, “அந்த முட்டாளைப் பாருங்கள்! இருவருமே நடந்து போகிறார்கள்! யாராவது ஒருவர் கழுதையின் மீது சவாரி செய்யலாமே”, என்று கேலியாகச் சொன்னார்கள். அதனால், தன் மகன் கழுதையின் மீது ஏறி உட்காரட்டும் என்று விவசாயி தீர்மானித்தான். மகன் கழுதை மீது சவாரி செய்ய விவசாயி பயணத்தைத் தொடர்ந்தான்.
      சிறிது தொலைவு சென்ற பிறகு, வேறு சிலர் பார்த்தனர். வயதான தந்தை நடந்து வர இளவயது மகன் இவ்வாறு கழுதையின் மீது அமர்ந்து வருகிறானே என்று இவர்களைக் கோபித்துக் கொண்டனர். அவர்கள் பேச்சைக் கேட்டவுடன் அவர்களைத் திருப்தி செய்ய உடனே மகன் கீழிறங்கித் தந்தையைக் கழுதையின் மீது உட்காரச் செய்தான். தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். இன்னும் சிறிது தொலைவு சென்றதும், வீட்டுவாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த சில முதிய பெண்களைப் பார்த்தனர். அந்தப் பெண்கள், “தான் வசதியாக உட்கார்ந்து கொண்டு அந்த முதியவன் மகனை நடந்து வரச் சொல்லிக் கொடுமைப்படுத்துகிறானே”, என்று விவசாயியைக் குற்றம் சாட்டினார்கள். விவசாயிக்கு மிகவும் கோபம் ஏற்பட்டது. தன் மகனையும் தன்னோடு கழுதையின் மீது அமர்த்திக் கொண்டான்.
      இப்போது தந்தையும் மகனும் மகிழ்ச்சியாகக் கழுதையின் மீது அமர்ந்து பிரயாணத்தைத் தொடர்ந்தனர். வயலில் வேலை செய்து கொண்டிருந்த சில உழவர்கள் இவர்களைப் பார்த்தனர். “எத்தகைய கொடூரமானவர்கள்! பாவம், அந்தக் கழுதை, கண்டிப்பாகச் சுமை தாங்காமல் நொடிந்து போகும்”, என்று விமர்சித்தார்கள். இதைக் கேட்டவுடன் தந்தையும் மகனும் உடனே கழுதையின் மீதிருந்து கீழே குதித்தார்கள். கழுதையைத் தூக்கிக் கொண்டு செல்வது தான் சிறந்தது என்று அவர்கள் இருவரும் தீர்மானித்தனர். மிகவும் சிரமப்பட்டுக் கழுதையின் கால்களைக் கட்டியபிறகு, ஒரு கொம்பில் அதைக் கட்டி அதைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு அவர்கள் தொடர்ந்து நடந்தனர். கிராமத்தை அடைவதற்கு முன்னால் ஆற்றின் மீதிருந்த ஒரு பாலத்தை அவர்கள் கடக்க வேண்டியிருந்தது.
      விவசாயியும் அவன் மகனும் மிகவும் சிரமப்பட்டுக் கழுதையைத் தூக்கிக் கொண்டு வரும் வினோதக் காட்சியை, ஆற்றுக்கு அக்கரையில் இருந்த குழந்தைகள் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தனர். பெரிய சத்தத்தைக் கேட்டுப் பயந்து போன கழுதை பெரிதாக மூச்சு விட்டது. அதைத் தூக்கிக் கொண்டு வந்த தந்தை, மகன் இருவரின் பிடியும் நழுவியது. அந்தப் பரிதாபமான கழுதை ஆற்று நீரில் தூக்கி எறியப்பட்டது! ஏமாற்றமடைந்த விவசாயி வெறுங்கையுடன் வீடு திரும்பினான்.
      ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து. எல்லோரையம் திருப்திப் படுத்த முடியாது. அவ்வாறு திருப்தி படுத்த ஆரம்பித்தால், இந்த விவசாயிக்கு நேர்ந்த கதி தான் எல்லோருக்கும். அடுத்தவர் கருத்துக்காக மட்டும் வாழ ஆரம்பித்தால், அதில் ஆனந்தம் ஏது? சிரமம் தான் எற்படும். சுதந்திரமாக வாழ்வதே, நம் வாழ்க்கையை நாமே தீர்மானித்து அதற்கேற்ப்ப வாழ்வதே ஆனந்தம்.

No comments:

Post a Comment