Monday, May 30, 2011

விருப்பு‍-வெறுப்பு அமைதி ஆனந்தம்


      சில விஷயங்கள் எனக்கு வசதியாகவே இல்லை” என்று பலபேர் சொல்லக் கேட்டிருக்கிறோம். வேண்டிய வசதி வாய்க்காததால், வாழ்க்கை சிலருக்கு நரகமாய் இருக்கிறது. ஒரு உண்மை தெரியுமா? உள்ளபடியே வாழ்க்கை எப்போது வசதியாகுமென்றால், சில வசதிகளுக்கான தேவைகள் நம் மனதிலிருந்து நீக்கும் போதுதான்.
      “ஒரு காலத்தில் விஷமாய் இருந்தது. இன்னொரு காலத்தில் அமுதம்”, “ஒரு காலத்தில் அமுதமாய் இருந்தது இன்னொரு காலத்தில் விஷம்” என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். இதுதான் வாழ்க்கையின் அடிப்படை உண்மை. விருப்பு, வெறுப்பு என்று சிலவற்றை வைத்துக் கொண்டிருக்கும் வரை, வாழ்க்கை போராட்டமாகத்தான் இருக்கும்.
      வாழ்க்கையை, தன் தன்மையோடு முழுமையாக நாம் ஏற்றுக்கொள்ளுகிறபோது, வசதி குறைவு என்கிற ஒன்றே வராது. மாறாக ஆனந்தம் மட்டும்தான் நிலைத்திருக்கும். சிலபேர் நிலையான மகிழ்ச்சியை ஆனந்தம் என்று சொல்லுவதைவிட பேரானந்தம் என்று சொல்வதில் கூடுதல் சுகம் காண்கிறார்கள். ஆனந்தம் என்றாலே அது உச்சநிலைதான். பேரானந்தம் என்கிற சொல் மிகையானது. ஆனந்தம் என்பதே பொதுவானது. மகிழ்ச்சிக்கும், ஆனந்தத்திற்கும் இருக்கும் அடிப்படை வேற்றுமை அதுதான்.
      மகிழ்ச்சியை நீங்கள் விலைக்கு வாங்கலாம். அது நீண்டகாலம் நிலைத்திருக்காது. உதாரணத்திற்கு இரண்டு சக்கர வாகனம் வைத்திருப்பவர் ஒரு கார் வாங்கினால் மகிழ்ச்சியடைவார். அந்தக் கார் நிறைய தொந்தரவு தரத் தொடங்கினால், அதே கார் அவருடைய துன்பத்திற்கும் காரணமாகி விடுகிறது. ஆனால், ஆனந்தம் என்பது நம் உள்ளிருந்து ஏற்படுவது. இந்த ஆனந்தம், இன்பம், துன்பம் இரண்டுக்குமே அப்பாற்பட்டது.
      ஒரு மனிதன் எப்போதும் ஆனந்தமயமாக இருப்பானேயானால் சராசரி வாழ்க்கையின் இன்ப, துன்பங்கள் அவனைப் பாதிப்பதில்லை. அதற்காக வாழ்க்கையின் அன்றாட அம்சங்களிலிருந்தும் அவன் விடுபட்டிருப்பான் என்பதும் அர்த்தமல்ல.
      ஒரு மரணம் நிகழ்கிறதென்றால் அதற்காக வருந்திக்கொண்டே அவனால் ஆனந்தமாக இருக்க முடியும். அவனுடைய அடிப்படைத் தன்மையாகிய ஆனந்தத்தை யாராலும், எந்த சம்பவத்தாலும் மாற்ற முடியாது. அதற்கு ஒரே வழி விருப்பு, வெறுப்பு போன்றவற்றைக் கடந்து வருவது.
      சில விஷயங்கள் நமக்கு வேண்டும், வேண்டாம் என்கிற போதே சில எதிர்பார்ப்புகள், தொடங்கி விடுகின்றன. அந்த எதிர்ப்பார்ப்புகள் அகந்தையின் காரணமாக எழுபவை. அகந்தை உங்களைக் கட்டி வைக்கிற ஒரு கயிறு போல. அதனை அறிவு என்கிற நெருப்பு கொண்டு நீங்கள் எரித்து விட முடியும். எரித்த போதும் அது ஒரு கயிறு போலத்தான் தோன்றுமே தவிர, அந்த கயிற்றால் யாரையும் கட்டிவிட முடியாது.
      அகந்தை என்கிற கயிறு எரிக்கப்படாத வரையில் அது நமை வாழ்வில் கட்டிப்போடுகிறது. அதை எரித்தபிறகு அகந்தை இருப்பது போல் தோன்றினாலும், அதனால் நம்மை எதுவும் செய்ய இயலாது. அப்போதுதான் முழுமையான, ஆனந்தத்தை நம் மனம், உணரத் தொடங்கும்.
      உள்ளுணர்வில் ஆனந்தம் இருக்கிறபோது, வாழ்வின் சகல அம்சங்களிலும், நம்மால் முழுமையாக பங்கேற்க இயலும். வீண் விவாதங்கள், தேவையில்லாத வாக்குவாதங்கள் போன்றவற்றில் நாம் ஈடுபட மாட்டோம். ஒரு முட்டாளும் எப்போதும் அமைதியாக இருப்பான், முற்றும் உணர்ந்த ஞானியும் அமைதி நிலையிலிருப்பார். ஆனால் இருவரின் அமைதியும் ஒன்றே அல்ல.
      முட்டாளின் அமைதிக்கும், ஞானியின் அமைதிக்கும் மூலத்திலேயே வேறுபாடு உண்டு. ஒருமுட்டாள் எப்படிப் பேசுது என்று தெரியாததால் அமைதியாக இருக்கிறான். ஒரு ஞானியோ வெறுமனே விவாதிப்பதால் பயனில்லை என்று உணர்ந்து அமைதியாக இருக்கிறார். ஒரு முது மொழி உண்டு. “ஒரு மனிதன், தான் எண்ணுவது சரி என்று உணர்ந்தும், அமைதியாக இருப்பாரேயானால் அவர் இறைத்தன்மைக்கு மிக நெருக்கமானவர்” என்று, இது மிக முக்கியம்.
      நம் கருத்து சரியென்று தெரிந்துவிட்டால், வாழ்க்கை முழுக்க விவாதித்துக் கொண்டு இருக்கத்தான் தோன்றும். ஆனால் நம் உள்ளுணர்வுக்கு சரியென்று பட்டாலே போதும். அதை உலகுக்கு அறிவிக்க வேண்டிய அவசியம் கிடையாது.
     விருப்பு, வெறுப்பால் ஏற்படுகிற தீமை என்னவென்றால், நமது கண்ணோட்டங்களுக்கு ஏற்ப இந்த உலகம் முழுவதையும் வளைப்பதற்கு நாம் வாழ்க்கை முழுவதும் முயன்று கொண்டிருப்போம். விருப்பு, வெறுப்பின் அடிப்படையில் உலகத்தைப் பார்க்கிறபோது, நிபந்தனை இல்லாத வாழ்க்கையை நம்மால் முழுமையாக நுகர முடியாது. 
      விருப்பு, வெறுப்பு ஆகிய நிலைகளைக்கடந்து நிற்கிற மனிதர், வாழ்க்கையிலிருந்து விலகி ஓடுபவரல்ல. வாழ்க்கையில் முழுமையாக ஈடுபடுபவர். ஆனந்தமானவர். ஆனந்தத்தில் திழைப்பவர்...

No comments:

Post a Comment