Saturday, May 7, 2011

விழிப்புணர்வு ஆனந்தம்

       உங்கள் வாழ்க்கையில் பல எல்லைகளை வகுத்துக் கொண்டிருக்கிறீர்கள். பகல்பொழுதைவிட இரவுதான் உங்களுக்கு அதிகமாக பிடித்திருக்கிறது. தூக்கத்தில்இருந்து விழித்து பகல்பொழுதை எதிர்கொள்வதென்றால் உங்களை அறியாமலேயே பல வழிகளில் தயங்குகிறீர்கள்.
      ஏதாவது ஒரு நாள் காலையிலேயே எழுந்து நண்பர்களுடன் பிக்னிக் போக முடிவெடுத்தீர்கள் என்றால், அன்று மட்டும் சூரிய உதயத்திற்கு முன்பே ஆர்வத்துடன் எழுந்துகொள்கிறீர்கள். முந்தைய நாளே விழிப்புணர்வுடன் முடிவெடுத்து விடுகிறீர்கள். நாளை எப்போது வரும் என்று ஆவலுடன் காத்திருக்கிறீர்கள்.
      மற்ற நாட்களில் போர்வையால் முகம் மூடி படுத்திருக்கிறீர்கள். சூரிய உதயத்தை நீங்கள் விரும்பவில்லை. ஏனெனில் அது தனியாக வருவதில்லை. அதனுடன் விலைவாசி பிரச்னை, வீட்டுப்பிரச்னை, அலுவலக பிரச்னை, ஏன்... முழு உலகமே ஒட்டுமொத்தமாக வருகிறது. எனவே உங்களை அறியாமலேயே சூரிய ஒளியை தவிர்க்க விரும்புகிறீர்கள்.
      ஆனால், ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். ஆன்மிக சாதகர்களைப் பொறுத்தவரை குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு உடற்பயிற்சி செய்வதுபோன்ற வசதியற்ற வேலைகளை கண்டிப்பாக செய்ய வேண்டியிருக்கிறது. நீங்கள் பசியாக இருக்கும்போது ஓடிச் சென்று அள்ளி வாயில் போட்டுக்கொள்ள வேண்டும் என்பதுதான் உங்கள் இயல்பாக இருக்கிறது. இதுபோன்ற சமயங்களில் விழிப்புணர்வுடன் நீங்கள் ஒரு முடிவெடுக்கிறீர்கள். ""நான் மிகவும் பசியாக இருக்கிறேன். என்றாலும் நான் இப்போது சாப்பிடப் போவதில்லை. இந்த உணவு எனக்குக் கிடைக்க காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி சொல்லிவிட்டே சாப்பிடுவேன்,'' என்று பசியிருந்தும் சாப்பிடாமல் இருக்க வேண்டுமானால் அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது.
      வாழ்வின் மிகவும் கடினமான நேரங்களில் விழிப்புணர்வு பற்றி நீங்கள் பயிற்சி செய்ய வேண்டும். விழிப்புணர்வுடன் இருங்கள் என்று சொல்லும்போது ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். யாரோ ஒருவர் உங்களை திட்டுகிறார், திருப்பி நீங்கள் அவரை திட்டுவதற்கு விழிப்புணர்வு தேவையில்லை. ஆனால் அந்த நேரத்தில் அமைதியாக இருப்பதற்கு மிகவும் விழிப்புணர்வு தேவைப் படுகிறது இல்லையா? எனவே பிடிக்காத செயல் செய்வது உங்களுக்கு மிகுந்த விழிப்புணர்வை தரும்.
   உடல்நிலையில், சுவாச நிலையில், சக்தி நிலையில் மற்றும் உணர்ச்சி நிலையில் இப்படித்தான் விழிப்புணர்வு கற்றுக்கொள்ளவேண்டும். இப்படிக் கற்றுக்கொள்ளும் நிலையில் பொருட்களை தனித்துப் பார்க்கும்படி விழிப்புணர்வு உண்டாகிறது. ஒன்றின்மீது, மேலும் மேலும் நீங்கள் விழிப்புணர்வைக் கொண்டுவரும்போது - உடல்நிலையில் கொண்டு வரும்போது நீங்கள் வேறு, உடல்வேறு என்பதைப் பார்க்கமுடியும். மனநிலையில் கொண்டு வரும்போது நீங்கள் வேறு, மனம் வேறு என்பதைப் பார்க்க முடியும்.
      உணர்ச்சி நிலையில் கொண்டு வரும்போது நீங்கள் வேறு, உங்கள் உணர்ச்சிகள் வேறு என்பதை பார்க்க முடியும். எனவே "நீங்கள்' எனப்படுவதற்கு ஒரு வடிவம் இல்லை என தெரிகிறது. நீங்கள் உண்மையில் வடிவமற்றவர் என்பது உங்கள் வாழ்க்கையைப் பொறுத்தவரை இன்னமும் உண்மை இல்லாததாக இருக்கலாம். வடிவமற்றது என்றால் எல்லையற்றது என்றும் சொல்லலாம். வடிவம் என்பது எல்லை. எனவே வடிவமற்றது என்பது
எல்லையற்றது. விழிப்புணர்வை பயிற்சி செய்யச்செய்ய காலப்போக்கில் வடிவம் தனது வலிமையை இழக்கத் துவங்கும். அது உறுதி.

No comments:

Post a Comment