Saturday, May 21, 2011

கல்வி ஆனந்தம்


      'நான்கு அரியர்களை வைத்துஇருக்கும் என் மாணவன், யாரோ ஒரு பெண்ணுக்காக மூன்று மணி நேரம் தெருவில் காத்திருப்பதைக் கவனித்தேன். நன்றாகப் படிக்க வேண்டும், வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டும் என்ற ஆர்வத்தைவிட, ஒரு பெண் பின்னால் சுற்றும் ஆர்வம்தானே அவனுக்கு அதிகமாக இருக்கிறது?' என்று அண்மையில், கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்னிடம் கேட்டார்.
      நான் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தபோது, எங்களுக்கு ஓர் ஆசிரியை இருந்தார். ஆங்கிலக் கவிதைகள் பற்றிப் பாடம் நடத்துவார். சரியாகப் புரிந்துகொள்ளாத மாணவர்களைப் பார்த்து, 'காதல் இல்லாமல் கல்லைப்போல் உட்கார்ந்தால், கவிதை எப்படிப் புரியும்? போய், மகாராணி காலேஜ் முன்னால் நின்று பாருங்கள். காதல் வந்தால் கவிதையும் தானே வரும்' என்பார்.
      ஈஷா நடத்தும் பள்ளிக்கூடத்தில், ஜூன் மாதத்தில் திடீர் என்று மழை பிய்த்துக்கொண்டு கொட்டியது. பள்ளி ஆசிரியர்கள் பெரிய பெரிய பாடத் திட்டங்களுடன் வந்து என்னைச் சந்தித்தார்கள்.
      'நான் ஒரு குழந்தையாக இருந்தால், இப்படி எல்லாம் வகுப்பு நடத்தும் பள்ளிக்குப் போகவே மாட்டேன். குழந்தைகளைச் சும்மா காட்டுக்குள் கூட்டிப்போங்கள். ஆற்றில் விளையாடட்டும். மழையில் நன்றாக நின்று நனைந்து ஊறட்டும். அதன் பிறகு அழைத்து வாருங்கள்' என்றேன்.
      குழந்தைகள் குதூகலமாக மழையில் விளையாடினார்கள். போதும் என்று தோன்றிய பிறகு, உள்ளே வந்தார்கள். இப்போது அவர்களிடம் மழை பற்றி உணர்வுபூர்வமாக ஓர் ஆர்வம் வந்துவிட்டது. மழையின் மீது பிறந்த காதல், அதுபற்றிய விஞ்ஞானத்தை அறிந்துகொள்வதிலும் வந்துவிட்டது. மழையின் புவியியல் பின்னணி என்ன? உயிர்களுக்கும் மழைக்குமான தொடர்பு என்ன? மழையை வைத்து நம் நாட்டின் வரலாறு, கலாசாரம், பொருளியல், ரசாயனம், சமூகவியல் என்று அனைத்தைப்பற்றியும் அவர்களிடம் பேச முடிந்தது.
      எதன் மீதாவது ஆர்வம் வந்துவிட்டால், அதுபற்றி அறிந்துகொள்ளாமல் தூங்க முடிவது இல்லை. அந்த ஆர்வத்தைத் தூண்டிவிடாமல், பாடப் புத்தகங்களை எழுதினால், தொட்டுப் பார்க்கவே பிடிக்காமல் போகிறது. தொட்டுத் திறந்தாலே... தூக்கம்தான் வருகிறது.
      இது எப்படி மாணவனின் தப்பாகும்? பாடப் புத்தகத்தை ஒரு காதல் கதை மாதிரி எழுதி இருந்தால், ஏன் படிக்காமல் தவிர்க்கப்போகிறார்கள்? அறிவியலையும், வரலாற்றையும், கணிதத்தையும் காதலுக்குரிய சுவாரஸ்யத்தோடு எழுதக் கூடாதா? காதலை கெமிஸ்ட்ரி என்பவர் கள், கெமிஸ்ட்ரியைக் காதலாகத் தர முடியாதா? பாடத்தின் மீது காதல் பிறப்பதுபோல் அமைக்காத கல்வி முறையின் மீதுதானே அடிப்படைத் தவறு?
                                            ................சத்குரு....................

No comments:

Post a Comment