பத்து ரூபாய் சம்பாதிப்பவன் நூறு ரூபாய் ஈட்டிவிட்டால், அது அவனைப் பொறுத்தவரை வெற்றி. ஆயிரம் ரூபாய் சம்பாதித்துக்கொண்டு இருப்பவன் கண்ணோட்டத்தில் அது தோல்வி!
சமூக அளவுகோல்களால் அளந்து பார்க்கப்படும் வெற்றிக்கும் மனிதனின் அடிப்படையான புத்திசாலித்தனத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. வாழ்க்கையை அமைதியாகவும் ஆனந்தமாகவும் உயிர்ப்புடனும் வைத்திருப்பதே உண்மையான வெற்றி. உங்களுடைய உள் சூழ்நிலையையும் வெளிச் சூழ்நிலையையும் நீங்கள் வெற்றிகரமாகக் கையாள்வதற்கு அடிப்படைப் புத்திசாலித்தனம் நிச்சயம் தேவை.
புத்திசாலித்தனம் என்பது இன்றைய கல்வி மூலம் பெறப்படும் அறிவாற்றலை அல்ல; பல தரப்புகளிலிருந்து சேகரிக்கப்படும் விஷய ஞானத்தையும் அல்ல!
புத்திசாலித்தனம் என்பது வாழ்க்கையைத் தோலுரித்து, அதன் அடிப்படை உண்மையை அறிந்துகொள்ளும் திறன். பக்குவத்துடனும் தெளிவுடனும் வாழ்க்கையை நடத்துவதற்கு இந்த புத்திசாலித்தனம் மிக மிக அவசியம்!
ஒரு மனிதனிடம், புத்திசாலித்தனத்துடன் அமைதியும் சேர்ந்து இருந்தால் அவன் ஆனந்தமானவன்.
அமைதி என்பது நம் உள்ளம் சார்ந்த விஷயமே. எந்த இடத்தில் இருந்தாலும் மனம் கூடவே தான் இருக்கும். அமைதியைத் தேடி மலைகளுக்குச் செல்கிறீர்கள் என்றால், மலை அமைதியாக இருப்பதாகத் தான் அர்த்தமே தவிர நீங்கள் அமைதியாக இருப்பதாக அர்த்தம் அல்ல. இரைச்சல் மிக்க சந்தைக்கு நடுவிலும் அமைதியாக இருக்க முடிந்தால் தான் நீங்கள் அமைதியானவராக இருப்பதாக அர்த்தம்.
மகிழ்ச்சியாக,ஆனந்தமாக இருக்கும் போது, உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கு நீங்கள் அற்புதமான மனிதர் தான். ஆனால், மகிழ்ச்சியின்றி இருக்கும்போது, இந்த உலகுக்கு நீங்கள் ஒரு ஆபத்தான மனிதர். நமது மனநிலை நாம் இருக்கும் சூழ்நிலையை வெகுவாகப் பாதிக்கிறது.
உங்கள் வாழ்வின் மிக அழகான தருணங்கள் நீங்கள் மகிழ்ச்சியைத் தேடிக் கொண்டு இருந்த கணங்கள் அல்ல. நீங்கள் மனமகிழ்ச்சியை ஆனந்தத்தை, வெளிப்படுத்திய நல்ல தருணங்களே. அமைதியும் ஆனந்தமும் வாழ்வின் உச்சக்கட்ட நிலை அல்ல. அவை வாழ்வின் தொடக்கமே. அந்த தொடக்க கட்டம் உங்களை உச்சகட்ட நிலையான பேரானந்த நிலைக்கு தானாகவே அழைத்துச் செல்லும்.
No comments:
Post a Comment