துன்பம் என்பது, தன்னுணர்வற்ற மனதின் ஒரு நிலை. நாம் என்ன செய்கிறோம், நாம் என்ன நினைக்கிறோம், நாம் என்ன உணர்கிறோம் என்கின்ற விழிப்புணர்வு இல்லாததால், நாம் துன்பம் அடைகிறோம். அதனால்தான் ஒவ்வொரு நொடிப்பொழுதும் நாம் நம்முடனேயே முரண்பட்டுக் கொண்டிருக்கிறோம். நமது செயல் ஒரு திசையில் செல்கிறது, சிந்தனை மற்றொரு திசையில் செல்கிறது, உணர்வுகள் வேறு எங்கோ செல்கிறது. நாம் பிரிந்து பிரிந்து செல்கிறோம். நாம் மேலும் மேலும் பிளவுபட்டுச் செல்கிறோம். அதுதான் துன்பம் ஆகும். நாம் நமக்குள் ஒருங்கிணைந்து இருப்பதில்லை. நாம் நமக்குள் ஒற்றுமையை இழந்து விட்டோம். நாம் முற்றிலுமாக மையத்தில் இல்லாமலும், வெறுமனே வெளிவட்டத்திலுமாக இருக்கிறோம். எனவே, இயல்பாகவே ஒத்திசைவு இல்லாததொரு வாழ்க்கை துன்பம் நிறைந்ததாகவும், துக்கமானதாகவும், ஏதோ ஒருவித சுமை போன்றும், ஒரு கஷ்டமாகவும் இருக்கிறது. அதிகபட்சமாக, ஒருவர் இந்த துன்பத்தை கொஞ்சம் வேதனை குறைந்ததாக ஆக்கிக் கொள்ளலாம். மேலும், வாழ்க்கையில் ஆயிரக்கணக்கான வலி நிவாரணிகள் கிடைக்கின்றன.
மக்கள் துன்பத்தில் வாழ்கிறார்கள். அதில் இருந்து விடுபட இரண்டு வழிகள்தான் உள்ளன. அவர்கள் தியானம் செய்பவர்களாக, உஷாரானவர்களாக, விழிப்புணர்வு உள்ளவர்களாக, தன்னுணர்வு பெற்றவர்களாக ஆக முடியும். ஆனால், அது மிகவும் கடினமான வேலை. அதற்கு தைரியம் தேவை. அல்லது இன்னொரு மலிவான வழி என்னவென்றால், நீங்கள் இப்போது எப்படி இருக்கிறீர்களோ, அதைவிட இன்னும் அதிகமான தன்னுணர்வு இழந்த நிலைக்கு நீங்கள் சென்றுவிட்டு, அந்த நிலையில் நீங்கள் அந்த துன்பத்தை உணராமல் இருக்க முடியும். உங்களை முற்றிலும் புலன்நுகர்ச்சி அற்றவர்களாக ஆக்குகின்ற ஒரே ஒரு பொருளை, ஏதோ ஒரு மயக்க மருந்தை, ஏதோ ஒரு வலி நிவாரணியை, போதைப்பொருளை எடுத்துக் கொள்வதால், அது உங்களை தன்னுணர்வு இழந்த நிலைக்கு கொண்டு சென்றுவிடுவதால், நீங்கள் அந்த தன்னுணர்வு அற்ற நிலையில் உங்களது கோபம், துன்பம், அர்த்தமற்ற தன்மை இவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
இந்த இரண்டாவது வழி, உண்மையான வழி அல்ல. இந்த இரண்டாம் வழி, உங்களது துன்பத்தை கொஞ்சம் சௌகரியமானதாகவும், கொஞ்சம் தாங்கக்கூடியதாகவும், கொஞ்சம் வசதியானதாகவும் மட்டுமே ஆக்கக் கூடியது. ஆனால் இது உங்களுக்கு உதவிகரமாக இருக்காது. இது, உங்களை மாற்றியமைக்காது. உங்களுக்குள் மாற்றம் ஏற்பட வேண்டுமென்றால், அது தியானத்தால் மட்டுமே முடியும். ஏனெனில் தியானம் ஒன்றுதான் உங்களை விழிப்புணர்வு உள்ளவர்களாக ஆக்குகின்ற வழி.
இங்கு, என்னுடைய முயற்சி என்னவென்றால், உங்களை இந்த துன்பத்தைக் கடந்து அதற்கு அப்பால் கொண்டு செல்வதுதான். நீங்கள் துன்பத்தை நீங்கள் விரும்பிய வகையில் மாற்றி அமைத்துக் கொள்ள மட்டுமே முடியும் என்பது கிடையாது. நீங்கள் இந்த துன்பத்திலிருந்து முற்றிலும் விடுதலை பெறுகின்ற ஒரு சாத்தியம் உள்ளது. ஆனால், அந்தப் பாதை கொஞ்சம் கடினமானது. ஆனால் அந்தப் பாதை சவாலானது. அதில் நீங்கள், உங்களது உடல் குறித்த விழிப்புணர்வுடன் மட்டுமல்ல; அதனால் நீங்கள் செய்கின்ற காரியங்கள் குறித்தும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
ஒரு நாள் புத்தர் தனது காலை சொற்பொழிவை நிகழ்த்திக் கொண்டிருந்தார். அந்த நாட்டின் அரசரும் அதைக் கேட்பதற்கு வந்திருந்தார். அவர், புத்தரின் முன்னால் உட்கார்ந்து கொண்டிருந்தார். மேலும் அவர், தனது பெருவிரலை ஆட்டிக் கொண்டே இருந்தார். புத்தர், பேசுவதை நிறுத்திவிட்டு, அரசரின் பெருவிரலைப் பார்த்தார். புத்தர் தனது பெருவிரலைப் பார்ப்பதைக் கண்டவுடன், அரசர் தனது பெருவிரல் அசைப்பதை நிறுத்திவிட்டார். புத்தர் தனது பேச்சை தொடர்ந்தார். அரசரும் மீண்டும் தனது பெருவிரலை அசைக்க ஆரம்பித்தார். உடனே புத்தர் அவரிடம், “ நீங்கள் ஏன் அப்படிச் செய்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அரசர், “நீங்கள் பேசுவதை நிறுத்திவிட்டு, எனது பெருவிரலை பார்க்கும் போதுதான் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்கின்ற விழிப்புணர்வு எனக்கு வருகிறது. மற்றபடி நான் எனது தன்னுணர்வுடன் இருப்பதே இல்லை.” என்று பதில் கூறினார். அதைக் கேட்ட புத்தர், “அது உங்களது பெருவிரல்தானே! அப்படியிருக்கும்போது, அது அசைவதைக் கூட உங்களால் தன்னுணர்வுடன் கவனிக்க முடியாதா? இப்படியிருந்தால், நீங்கள் ஒருவரைக் கொலை செய்துவிட்டும் கூட அதைப் பற்றி எந்தவிதமான விழிப்புணர்வும் இல்லாமலும்கூட இருக்கலாமே!” என்றார்.
மேலும், இது போன்றதொரு வழியில் தான் மக்கள் கொலை செய்யப் படுகின்றனர். மேலும், கொலைகாரர்களும், தாங்கள் என்ன செய்கிறோம் என்கின்ற தன்னுணர்வு இல்லாமல் செய்கின்றனர். நீதிமன்றங்களில் அநேகமுறை கொலை செய்தவர்கள் தாங்கள் கொலை செய்ததை முழுமையாக மறுத்துள்ளனர். ஆரம்பத்தில் அவர்கள் நீதிமன்றத்தை ஏமாற்றுவதாகத் தான் எண்ணப் பட்டது. ஆனால் சமீபகால கணடுபிடிப்புகள் மூலம், அவர்கள் ஏமாற்றவில்லை என்றும், அவர்கள் அதை தங்களது சுயநினைவு இழந்த நிலையில் செய்து விடுகிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. அந்த நொடிப் பொழுதில், அவர்கள் அந்த அளவுக்கு ஆக்ரோஷத்துடனும், அந்த அளவுக்கு கோபத்துடனும் இருந்துவிட்டதால், அவர்கள் அந்த ஆக்ரோஷத்தின் பிடியில் அகப்பட்டுக் கொள்கின்றனர். மேலும் நீங்கள் ஆக்ரோஷம் அடையும்போது உங்களது உடலில் சில வெறியூட்டும் விஷங்கள் சுரக்கின்றன. அதனால் உங்களது இரத்தம் வெறியூட்டப் படுகிறது. ஆக்ரோஷத்தில் இருப்பது என்பது தற்காலிகமாக புத்தி சுவாதீனம் இல்லாமல் இருப்பதைப் போன்றது. இதனால் அந்த மனிதர் அந்த சம்பவத்தைப் பற்றி முழுமையாக மறந்துப் போய்விடுவார். ஏனெனில் அவருக்கு அந்த சம்பவம் எப்படி நடந்தது என்கின்ற விழிப்புணர்வு இருக்காது. இப்படித்தான் மக்கள் காதல் வசப்படுவதும், ஒருவரை ஒருவர் கொலை செய்வதும், தற்கொலை செய்து கொள்வதும், இது போன்ற காரியங்களைச் செய்வதும் நடக்கிறது.
எனவே, நீங்கள் உங்களது உடல்குறித்து நிறைகவனத்துடன், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது தான் முதல்படி. கொஞ்சம் கொஞ்சமாக ஒருவர் தனது ஒவ்வொரு அசைவையும், ஒவ்வொரு நகர்வையும் குறித்து விழிப்புணர்வு கொள்ள முடியும். மேலும் இப்படி நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்க ஆரம்பித்துவிட்டால், ஒரு அதிசயம் நடக்கும்; இதற்கு முன்புவரை நீங்கள் செய்துவந்த அநேக காரியங்கள் வெறுமனே மறைந்து போகும். உங்களது உடல் ஓய்வுடன் இருக்கும். உங்களது உடல் ஒத்திசைந்துவிடும், உங்களது உடலில் ஒரு ஆழ்ந்த அமைதி நிலவும், உங்களது உடலில் ஒரு மெல்லிய சங்கீதம் துடிக்கும்.
அதன்பின்னர், உங்களது எண்ணங்கள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க ஆரம்பியுங்கள். நீங்கள், உங்களது உடல் மீது செலுத்திய விழிப்புணர்வை இப்போது அப்படியே உங்களது எண்ணங்களின் மீது செலுத்த வேண்டும். உங்களது எண்ணங்கள், உங்களது உடலைவிட மிகவும் கண்ணுக்கு புலப்படாதவை. மேலும், அவை அபாயகரமானதும்கூட. மேலும், நீங்கள் உங்களது எண்ணங்கள் குறித்து விழிப்புணர்வு பெற்றுவிட்டால், அதன்பின்னர் உங்களுக்குள் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்து, நீங்கள் ஆச்சரியமடைவீர்கள். எந்த நேரத்திலும் உங்கள் மனதினில் ஓடிக் கொண்டிருக்கும் எண்ணங்களை எழுத ஆரம்பித்தால், உங்களுக்கு அது மிகப் பெரிய ஆச்சரியத்தைக் கொடுக்கும். “இதுதான் எனக்குள் நடந்து கொண்டிருக்கிறதா?” என்று நீங்கள் அதை நம்ப மாட்டீர்கள். வெறும் பத்து நிமிடங்கள் வரை உங்களுக்குள் என்னென்ன எண்ணங்கள் ஓடுகின்றன என்று வெறுமனே குறித்து வைத்துப் பாருங்கள். அப்போது வேண்டுமானால், யாரும் உள்ளே வராதபடிக்கு கதவை மூடி தாழிட்டுக் கொள்ளுங்கள். எனவே, அப்போது நீங்கள் நேர்மையுடன் உங்களுக்குள் ஓடுகின்ற எண்ணங்களை எழுத முடியும். மேலும் எழுதி முடித்து அதை படித்த பின்னர், அதை தீயிட்டுக் கொளுத்துவதற்கு ஒரு தீப்பெட்டியையும் தயாராக வைத்திருங்கள். எனவே உங்களைத் தவிர வேறு யாரும் அதில் உள்ளதை அறிய முடியாது. அதனால் அப்போது நீங்கள் நேர்மையுடன் இருந்து, உங்களுக்குள் என்னென்ன எண்ணங்கள் வருகின்றனவோ, அதையெல்லாம் எழுதி விட வேண்டும். அதை திரித்துக் கூறாதீர்கள், அதை மாற்றி விடாதீர்கள், அதை வெட்டிச் சுருக்கிவிடாதீர்கள். அதை அப்படியே நிர்வாணமானதாக காகிதத்தில் எழுதுங்கள். சரியாக அப்படியே எழுதுங்கள்.
அதன்பிறகு, பத்து நிமிடங்கள் கழித்து அதைப் படித்துப் பாருங்கள். அப்போது நீங்கள் உங்களுக்குள் ஒரு பைத்தியக்கார மனம் இருப்பதைக் காண்பீர்கள். இப்படிப்பட்ட முழு பைத்தியக்காரத்தனம் ஒன்று நமக்குள் ஒரு அடி நீரோட்டம் போல் ஓடிக் கொண்டிருப்பதை நாம் ஒருபோதும் கவனிப்பதில்லை. உங்களது வாழ்க்கையின் முக்கியமான விஷயங்களை அது பாதிக்கும். அது எல்லாவற்றையும் பாதிக்கும். ஆனால், இதுதான் உங்களது ஒட்டுமொத்த வாழ்வாகவும் இருந்துவருகிறது!
ஆகவே, இந்த பைத்தியக்காரத்தனம் மாற்றப்பட வேண்டும். மேலும், விழிப்புணர்வின் அற்புதம் என்னவென்றால், நீங்கள் விழிப்புணர்வுடன் இருப்பதைத் தவிர வேறு எதுவும் நீங்கள் செய்ய வேண்டியதில்லை என்பதுதான். நீங்கள் அதை கவனிக்கின்ற விஷயமே அதை மாற்றிவிடும். கொஞ்சம் கொஞ்சமாக உங்களது எண்ணங்கள் ஒரு குறிப்பிட்ட வகைக்குள் விழ ஆரம்பித்து விடும். அதன் பின்னர், அவைகளில் குழப்பம் இருக்காது. அவைகள் குழப்பங்கள் இல்லாத இந்த பிரபஞ்சம் போல ஆகிவிடும். எனவே அதன்பிறகு மீண்டும் அங்கே ஒரு ஆழ்ந்த அமைதி நிலவும்.
மேலும், இவ்வாறு உங்களது உடலும், உங்களது மனமும் அமைதியடைந்து விட்டால், அப்போது அவைகள் இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒத்திசைந்து செல்வதையும் நீங்கள் காண்பீர்கள். அங்கே ஒரு பாலம் அமைந்து விடும். இப்போது உங்களது உடலும் மனமும் வெவ்வேறு திசையில் ஓடாது. அவைகள் வெவ்வேறு குதிரைகளில் சவாரி செய்யாது. முதல் முறையாக அவைகள் இரண்டும் ஒத்துப் போகும். மேலும், அவைகளின் இந்த ஒத்து போகும் செயலானது நீங்கள் அதற்கடுத்த மூன்றாவது படிக்கு செல்வதற்கு மிகவும் உதவும். அதாவது, மூன்றாவதாக நீங்கள் உங்களது உணர்வுகள், மனக் கிளர்ச்சிகள், மனநிலைகள் ஆகியவைகள் குறித்து விழிப்புணர்வுடன் இருப்பதற்கு ஏதுவாக இருக்கும். இந்த உணர்வுகள்தான் உங்களுக்குள் உள்ள கண்களுக்குப் புலப்படாத, அதே சமயம் மிகவும் கடினமானதொரு அடுக்கு. ஆனால் நீங்கள் உங்களது எண்ணங்கள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க முடியுமெனில், அதன்பின்னர் இது இன்னும் ஒரே ஒரு படிதான் அதிகம். உங்களது மனநிலையை, உங்களது மனக்கிளர்ச்சியை, உங்களது உணர்வுகளை பிரதிபலிக்கும்போது, நீங்கள் கொஞ்சம் விழிப்புணர்வுடன் இருந்தால் போதும்.
இப்படி நீங்கள் இந்த மூன்று நிலைகளிலும் விழிப்புணர்வுடன் இருந்துவிட்டால், அவைகள் எல்லாம் ஒரே விஷயமாக ஒன்று சேர்ந்துவிடும். மேலும், இவைகள் மூன்றும் இப்படி ஒன்றாக ஆகிவிட்டால், முற்றிலும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டால், உங்களால் இந்த மூன்றின் சங்கீதத்தையும் உணரமுடியும். அவைகள் ஒரு இசைக்குழு போல ஆகிவிடும். அதன்பின்னர்தான் நான்காவது விஷயம் நடக்கும். இந்த நான்காவது விஷயத்தை, நீங்கள் ஏதாவது செய்வதால் கொண்டு வரமுடியாது. அது தானாகவே நிகழ்வது. அது பூரணத்தின் வரமாகும். இந்த மூன்றையும் செய்தவர்களுக்கு கிடைக்கின்ற வெகுமதியாகும்.
மேலும் இப்படி நான்காவதாக எழுகின்ற அந்த விழிப்புணர்வுதான் உங்களை ஞானமடைந்த ஒருவராக ஆக்கும். அப்போது ஒருவர் தனது விழிப்புணர்வு குறித்தே விழிப்புணர்வுடன் இருப்பார். இதுதான் நான்காவது படி. அது ஒருவரை புத்தராக ஆக்கிவிடும். ஞானமடைந்தவராக ஆக்கிவிடும். மேலும் இப்படி ஒருவர் விழிப்படைந்தால் மட்டுமே ஒருவர் பேரானந்தம் என்றால் என்ன என்று அறிந்து கொள்ள முடியும். உடலை அறிவது சுகம், மனதை அறிவது சந்தோஷம், உள்ளத்தை அறிவது மகிழ்ச்சி, நான்காவதாக அறியப்படுவது பேரானந்தம். எனவே பேரானந்தம்தான் நமது லட்சியம்; விழிப்புணர்வு தான் அதற்கான பாதையாகும். எல்லா நிலையிலும் ஆனந்தமாக வாழமுற்ப்படுவோமானால் பேரானந்தம் என்கிற நிரந்தர ஆனந்த நிலை கிடைக்கும்.அதுவே ஒவ்வொரு மனித உயிரின் குறிக்கோளாக இருக்கவேண்டும். அதுதான் ஆனந்த வாழ்வு. அதுதான் ஞானவாழ்வு. அதுதான் அனைத்து மகான்களின் வாழ்க்கை நிலை.
...........................................ஓஷோ..................................................................