Showing posts with label பிரச்சனை. Show all posts
Showing posts with label பிரச்சனை. Show all posts

Thursday, August 22, 2013

சிகரத்தை அடைவதற்க்கு சுலபமான‌ வழிகள்! ஆனந்தம்

      


      வாகனம் ஓட்டுவது என்று தேர்ந்தெடுத்துவிட்டால் போக்குவரத்து நெரிசலை ஏற்றுக்கொண்டாக வேண்டும். ஆரோக்கியம் குறித்து அக்கறை கொண்டிருந்தால், நாக்கு கேட்டதையெல்லாம் அதற்கு கொடுக்க முடியாது! வருமானம் என்றால் வருமான வரியும் உடன் வரும்.

      வாழ்க்கையில் நீங்கள் எதைத்தேர்ந்தெடுத்தாலும் அதோடு ஒட்டிப்பிறந்த நன்மைகளோடும் தீமைகளும் தான் அதுவரும். முட்களற்ற ரோஜாவைத் தேடுவது எவ்வளவு மடத்தனம்! நானயத்தின் ஒரு பக்கத்தை நீங்கள் தேர்ந்தெடுத்தால் அதன் மறுபக்கத்தையும் சேர்த்துதான் நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள். பிரச்சனைகளற்ற ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு வாழ்க்கை வாழவேண்டும் என்று கேட்க்காதீர்கள். அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை மகான்க‌ளால் கூட வாழமுடியாது! அப்படிப்பட்ட வாழ்க்கை எதுவும் கிடையாது!

      கனவுகள் பெரிதாகும் போது பிரச்சனைகளும் பெரிதாகும். நீங்கள் நடக்க விரும்பும் போது ஒருசில பிரச்சனைகள் மட்டுமே இருக்கும். அதே நேரம் ஒரு ஓட்டப்பந்திய வீரனாக பந்தயங்களில் கலந்து கொள்ள நீங்கள் விரும்பினால், பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும் என்பது வெளிப்படை. வெறுமனே வாழ்க்கையை ஓட்டினால் மட்டும் போதும் என்று நீங்கள் நினைத்தால், பிரச்சனைகள் குறைவு தான். ஆனால் உங்கள் முழுத்திறனையும் வெளிப்படும் விதத்தில் வாழ நினைத்தால், நீங்கள் பெரிய பெரிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

      செதுக்கப்பட நீங்கள் தயாராக இருந்தால் தான், துதிக்கப்படும் ஒரு சிலையின் நிலையை அடையும் தகுதியை உங்களால் பெற‌ முடியும். சிகரத்தை அடைவதற்க்கு சுலபமான‌ வழிகள் ஏதும் கிடையாது. சிகரத்தை அடைந்தவர்கள் அதை சுலபமாக சென்றடையவில்லை.

      என்ன இருந்தாலும் வரலாற்றை படிப்பவனுக்கும், வரலாற்றைப் ப‌டைப்பவனுக்கும் வித்தியாசம் இருக்கத்தானே வேண்டும்?

வெள்ளியின் கதை:    

      பைபிள் வாசிப்புக் குழு ஒன்றில் இப்படி ஒரு வாசகத்தைப் படித்தனர்: "வெள்ளியை சுத்தப்படுத்தும் மாசு அகற்றும் நபர் போல அவர் அமர்ந்திருப்பார்." கடவுளின் குணம் மற்றும் இயல்பு குறித்து இங்கு கூற முற்படுவது என்ன?
      அந்த வாரம் அக்குழுவில் இருந்த ஒரு பெண்மனி வெள்ளி உலோகக்கொல்ல‌ன் ஒருவன் வேலை செய்வதைப் பார்ர்கச் சென்றாள். அங்கே
முதலில் கொல்லன் ஒரு துண்டு வெள்ளியை  எடுத்து தீயில் வைத்து அது சூடாவதற்காக காத்திருந்தான். "வெள்ளியை தீயின் நடுவில் வைக்கவேண்டும். ஏனெனில் அங்கே தான் சூடு அதிகமாக இருக்கும், அது அனைத்து மாசுகளையும் எரித்துவிடும்" என்று எடுத்துரைத்தான் கொல்லன். "முழுநேரமும் உலையின் முன்னாலேயே உட்கார்ந்திருக்க வேண்டும் என்பது உண்மையா?" என்று அந்தப் பெண்மனி கேட்டாள். "உண்மைதான்! முழுநேரமும் உட்கார்ந்திருப்பது மட்டுமல்லாமல், வெள்ளியில் இருந்து கண்களை அகற்றவும் கூடாது" என்றும் தெரிவித்தான். "அதிகப்படியான் ஒரே ஒரு கணம் வெள்ளியை நெருப்பில் விட்டுவிட்டால் அது உருகி ஓடிவிடும்". உடனே அப்பெண்மனி "வெள்ளி முழுவதும் மாசு அகற்றப்பட்டுவிட்டது என்பது உனக்கு எப்படித் தெரியும்?" "ஓ! அது ரொம்ப சுலபம்...... என் உருவத்தை நான் அதில் பார்க்கும் போது!"
      வாழ்க்கைப் பிரச்சனை உங்களை அதிகமாகத் தாக்குவதாக நீங்கள் உணர்ந்தால், கடவுள் உங்கள் மீது தான் வைத்த கண்னை எடுக்கவில்லை என்பதையும், அவரது பிம்பம் உங்களில் தெரியும் வரை அவர் தனது கண்களை அகற்ற மாட்டார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒவ்வொரு மனிதனுள்ளும் ஒரு தீர்கதரிசி உறங்கிக்கொண்டிருக்கிறான். கடவுள் மனிதனாக மாறியதற்க்கு காரணம், மனிதன் மீண்டும் கடவுளாக ஆக வேண்டும் என்பதற்காகதான். வாழ்க்கை என்பது உங்களை எரித்துக் கொண்டிருக்கும் ஒரு உலை அல்ல. ஜொலிக்கும் வெள்ளியாக மாற்றிக் கொண்டிருக்கும் ஒரு உலை!
      வாழ்க வள‌முடன்! 

Sunday, October 30, 2011

சரியான தீர்வு யாரால்? ஆனந்தம்


      அரசியல்வாதிகளில் பலர் ஆன்மீகவாதிகளிடம் ஆலோசனை கேட்டு நடக்கிறார்களே, ஆன்மீகவாதிகளால் சமூகப்பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா?
      இந்த வாதிகளில் பெரும்பாலானோர் உண்மையில் வியாதிகள்! அவர்களால் பிரச்சனையை உருவாக்க முடியுமே தவிர, தீர்வு சொல்ல முடியாது. அரசியைல் பிரச்சனைகள், ச்மூகப்பிரச்சனைகள் மட்டுமல்ல ஆன்மீகப் பிரச்சனைகளைக் கூட அவர்களால் தீர்த்து வைக்க முடியாது.
      தங்கள் குறுகிய கண்ணோட்டத்தின் அடிப்படையில் கருத்துக்களைக் கோர்த்து, நல்ல கோட்பாடுகளின் அடிபடையில் நடப்பதாக நினைத்து அவர்கள் கொடுத்துவரும் ஆலோசனைகள் பிரச்சனைகளை தீவிரப் படுத்தியிருக்கின்றனவே தவிர தீர்த்துவைக்கவில்லை.
      சில பிரச்சனைகள் தீர்வு பெறாமலேயே தலைமுறை தலைமுறையாக தொடர்கின்றனவே ஏன்? அவற்றை தெளிவான கண்ணோட்டத்துடன் அனுகும் பக்குவம், அவற்றைக் கையாள்பவரிடம் இல்லை. அதுதான் விஷயம். அந்த பிரச்சனைகள் பூதகரமாக வளர்ந்திருப்பதற்க்கு அதுதான் காரணம்.
      "முன்பு அரசவைகளில் மன்னர்களுக்கு அறிவுரை வழங்கிய துறவிகளும் இந்த வகையை சார்ந்தவர்கள் தானோ?"
      இல்லை, இல்லை; தன்னை ஆன்மீகவாதி என அறிவித்துக்கொண்டு மரியாதை எதிர்பார்ப்பவர்கள் வேறு; ஆன்மீகத்திலேயே ஈடுபட்டிருப்பவர்கள் வேறு!
      ஆன்மீகப் பாதையில் தன்னை உணர்ந்து செல்பவர்களின் பார்வை மற்றவர்களைக் காட்டிலும் மிகத்தெளிவாக இருக்கும். வாழ்க்கை பற்றியும், மனித உறவுகளைப் பற்றியும் அவர்களுடைய கணிப்பு இன்னும் ஆழமாக, அனுபவப்பூர்வமாக இருக்கும்(ஏனென்றால் அவர்களுக்கென்று எந்த தனிப்பட்ட எதிர்பார்ப்பும் இருக்காது). எதிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, அவரால் பிரச்சனைகளை எல்லாக் கோணங்களில் இருந்தும் பாரபட்சமின்றி மிகத்தெளிவாக பார்க்க முடியும். சரியான தீர்வும் சொல்ல முடியும்.
      அதனால் தான் அரசவைகளில் முற்றும் துறந்த ஞானிகளின் ஆலோசனைகளுக்கு மதிப்பு இருந்தது. ஆடம்பர வாழ்வை எதிர்பார்த்து அவர்கள் அரண்மனைகளில் குடியேற‌வில்லை. அரிய ஞானம் கொண்டு அலோசனைகள் வழங்கவே மன்னனுடன் அவர்கள் வசித்தார்கள்.
      ஜனக மன்னன் தன்னை உணர்ந்து ஞானம் பெற்ற போது, தன் குருவுடன் ஆசிரமக்குடிலுக்கு போகவே பிரியப்பட்டான். ஆனால் அவன் குரு அஷ்டவக்கிரர் அவனைத் தடுத்தார்.
      "உன் சுகங்களை விட்டுகொடுப்பது பற்றிய பிரச்சனை அல்ல இது. ஒரு ஞானவானின் ஆட்சி எப்படி இருக்கும் என்று மக்கள் அறிந்து, அனுபவித்து மகிழ வேண்டும். எனவே, நீ அரியணையிலேயே இரு!" என்று அவனைத்திருப்பி அரண்மனைக்கே அனுப்பினார்.
      ஞானிகளின் தீர்கமான அணுகுமுறை மன்னனுக்கும் மக்களுக்கும் பலவிதங்களில் உபயோகமாக இருக்கும்.
      மனிதப் பிறவியை பற்றிய பல அம்சங்களைத் தெரிந்து வைதிருப்பர் ஞானிகள். மனித உடல் எப்படி இயங்குகிறது, மனம் எப்படிச் செயல்படுகிறது. அவனுடைய சக்தியை எப்படி மேம்படுத்துவது என்று ஞானிகள் அறிவர். அவர்களுடைய சேவையை சமூகம் பயன் படுத்திக்கொள்ள முன்வந்தால், அது மிகச் சிறந்த பலன்களையே கொடுக்கும்.
      ஆனால் உண்மையான ஞானிகள் சமூகம் பற்றிய விசயங்களுக்கு வருவதே அபூர்வம். யாரோ ஓரிருவர் தான் அத்தி பூத்தார் போல் சமூகத்திற்கே வருவர். மிகுந்து ஞானிகள் தனித்தே இருப்பர். அவ்வாறு யாராவது நிஜமாக வந்து தீர்வு கொடுத்தால் அந்தத் தலைமுறை மிகுந்த பாக்கியம் செய்த தலைமுறையாகும். அதனால் தான் அந்தக் காலத்து மன்னர்கள் துறவிகளைத் தேடிப்பிடித்து தீர்வு கேட்க அழைத்து வருவர். அல்லது அவர்களது ஆசிரமம் இருக்கும் இடத்திற்க்கு சென்று தீர்வு கேட்பர்

      "ஒழுக்கம் உள்ளவர்களாலும், நல்லவர்களாலும் கூட பாரபட்சமின்றி தீர்வு தரமுடியுமே? இதற்க்கு ஆன்மீக ஞானம் அவசியமா?
      பிரச்சனை என்பதற்க்கு ஒரு தீய பகுதி இருக்கும். மிகந‌ல்லவர்களால் நல்லதைப் பார்க்க முடியுமே தவிர, தீயதை உண்ர்ந்து கொள்ள முடியாது.
      ஆஸ்திரேலியாவில் ஒரு நாடோடிக் கதை உண்டு.
      தன்னை ஆன்மீகவாதி என்று சொல்லிக்கொண்ட ஒருவன் தன் மூன்று சகோதரிகளுடன் ஒரு பயணம் மேற்க்கொண்டான்.
      வழியில், அந்தப் பகுதியின் இளவரசன் எதிர்ப்பட்டான், "இந்த மூன்று அழகான பெண்களில் ஒருத்தியை என் மனைவியாக்கிக் கொள்கிறேன் சம்மதமா?" என்று கேட்டான் இளவரசன்.
      மூவரில் ஒருத்திக்கு மட்டும் பெரிய இடத்தில் திருமணம் செய்து கொடுத்தால் மற்றவர்கள் இருவர் வேதனைப் படுவார்கள் என நினைத்துக் கொண்டு, "மூவரையும் ஒரே தகுதி கொண்டவர்களுக்கு தான் திருமணம் செய்து கொடுப்பதாய் இருக்கின்றேன்" என மறுத்துவிட்டான் ஆன்மீகவாதி.
      அப்படி எல்லா விததிலும் ஒரே தகுதி கொண்டா மூவரைத் தேடித் தேடி பல வருடங்களை வீண‌டித்தான். கடைசி வரை அந்த பெண்கள் கன்னிகளாகவே வாழ வேண்டியதாகி விட்டது.
      "எங்களில் ஒருத்திக்காகவாவது கிடைக்க வேண்டிய நல்ல வாழ்க்கையை உன் எண்னத்தினால் வீணாகப்போயிற்றே" என புலம்பி கண் கலங்கினர் சகோதரிகள்.
      மற்ற இரு சகோதரிகள் வேதனை கொள்வார்கள் என அவன் நினைத்து தீர்மானித்து அவன் எடுத்த 'நல்ல' முடிவால், யாருக்குமே சந்தோசம் கிடைக்காமல் போனது. ஒரு சரியான முடிவெடுக்க அவர்கள் நல்லவர்களாக மட்டுமிருந்தால் போதாது என்பதைச் சுட்டிக் காட்டும் கதை இது.
      அதே போல் தான் ஒழுக்கம் உள்ளவர்களும்! தங்கள் விதி முறைகளில் சிக்கிக் கொண்டு விட்டால், பிரச்சனைகளின் முழுப் பரிமாணத்தை அவர்களால் கவனிக்க முடியாது. அதற்க்கொரு தீர்வும் சொல்லமுடியாது. இரு வெவ்வேறு மனிதர்களின் ஒழுக்க நிலைகளின் பெரும்பாலும் சண்டைகளில் தான் கொண்டுவந்து விட்டிருக்கின்றன. நல்லவர்களிடமும், ஒழுக்கம் பற்றிய கவனம் கொண்டவர்களிடம் பாரபட்ச மற்ற தீர்வு என்பது சாத்தியமே இல்லை.
      ஞானிகளிடம் தான் அந்த அமுதம் கிடைக்கும்.

Sunday, November 7, 2010

ஆனந்தமாக எதிர்கொள்ளுங்கள்:

     உங்களுக்கு சந்தோசமானது என்று நம்பி ஏற்றுக் கொண்டது எதுவாக இருந்தாலும், அத்தோடு சில சவால்கள் இலவச இணைப்பாக வந்து சேரும்.
     அது கடின உழைப்பாக இருக்கலாம், மும்முரமான போட்டியாக இருக்கலாம், எதிர்பாராத தடைகளாக இருக்கலாம், எதுவாக இருந்தாலும் ஆசையோடு, சந்தோசத்தோடு ஏற்றுக்கொள்ளுங்கள்.
     உங்கள் வளர்ச்சியில் உண்மையில் விருப்பம் இருந்தால், பிரச்சனைகளை ஆனந்தத்தோடு ஏற்றுக்கொள்ளுங்கள்.
     தோற்றுக் களைத்தவர்கள், பொதுவாக சொல்லும் காரணம் என்னவென்று தெரியுமா?
     'எனக்கு மட்டுமே நேரம் சரியில்லை, நான் மாவு விக்கப்போனால் காற்று அடிக்கிறது, உப்பு விக்கப்போனால் மழை பெய்கிறது
     நீங்கள் கேட்டாலும், கேட்காவிட்டாலும், இந்த உலகம் உங்கள் மீது பிரச்சனைகளை வீசித்தான் பார்க்கத்தான் போகிறது. அப்புறம் ஏன் பிரச்சனைகளை எதிர்கொள்ள தயங்குகிறீர்கள்.
     கடினமான சந்தர்ப்பங்கள் உங்களுக்கு கிடைத்த சாபங்கள் அல்ல, உங்களுக்கு அருளப்படும் வரங்கள்.
     ஒரு சினிமாவுக்கு போகிறீர்கள், அடுத்தடுத்த காட்சிகள், நீங்கள் எதிர்பார்த்த மாதியே வந்து கொண்டிருந்தால், அந்த சினிமாவை ரசிப்பீர்களா அல்லது போர் என்று எழுந்து வெளியே வருவீர்களா?
எதிர்பாரத திருப்பங்கள் தானே ஒரு வாழ்க்கையை சுவையானதாக அமைத்து தரமுடியும். கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாக சண்டைக்கு போனான்.
     " உனக்கு பயிர்களை பற்றி என்ன தெரியும், நீ நினைத்த போது மழையை அனுப்புகிறாய், தப்பான சமயத்தில் காற்றை வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்திரவாக இருக்கிறது. பேசாமல் அந்த வேலைகளை ஒரு விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்து விடேன்"
     கடவுள் உடனே, "அப்படியா? சரி, இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பட்டிலேயே இருக்கட்டும்" என்று வரம் அருளிவிட்டு போய்விட்டார்.
     விவசாயிக்கு சந்தோசம் பிடிபடவில்லை, அடுத்த பருவம் வந்தது.
     மழையே, பெய் என்றான். பெய்தது. நிறுத்தச் சொன்னபோது நிறுத்தியது. ஈரமான நில‌த்தை உழுதான், தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து, விதைகளை தூவினான். மழை, வெய்யில், காற்று எல்லாம் அவன் சொன்ன பேச்சைக் கேட்டன. பயிர் பச்சைபசேல் என்று வளர்ந்தது, வயலைப் பாக்கவே படுரம்மியமாக இருந்தது.
     அறுவடை காலம் வந்தது, விவசாயி ஒரு கதிரை அறுத்தான். திறந்து பார்த்தான். அதிர்ந்தான். உள்ளே தானியத்தை காணவில்லை. அடுத்தடுது எல்லாவற்றிலுமே தாணியமே இல்லை.
     "ஏ கடவுளே!" என்று கோபத்தோடு கூப்பிட்டான். மழை, வெய்யில், காற்று என்று எல்லாவற்றையுமே சரிவிகிதத்தில் தானே பயன்படுத்தினேன், ஆனால் பயிர் நாசமாகிவிட்டதே? ஏன் என்றான்.

     கடவுள் புன்னகைத்தார்! "என் கட்டுப்பாட்டில் இருந்தபோது, காற்று வேகமாக வீசும், அப்போது கதிர்களெல்லாம், அம்மாவின் மடியை இருக்கிக்கொள்ளும் குழந்தையை போல, பூமிக்குள் தனது வேர்களை எல்லாம் மிக ஆழமாக அனுப்பி பிடித்துக்கொள்ளும். மழை குறைந்தால், தண்ணீரைத் தேடி வேர்களை அனுப்பி நாலபக்கமும் அனுப்பும், போராட்டங்கள் இருந்தால் தான் தாவரங்கள் தங்களை பாதுகாத்துக்கொண்டு, மிக வலுவாக வளரும். எல்லாமே வசதியாக அமைத்துக் கொடுத்ததில், உன்பயிர்களுக்கு சோம்பேரித்தனம் வந்துவிட்டது. தளதள வென்று வளர்ந்ததே தவிர, அரோக்கியமான தானியங்களை வழங்க தவறிவிட்டது!.
     வேண்டமடா! உன் மழையும், காற்றும்! நீயே வைத்துக்கொள் என்று அவற்றை, கடவுளிடமே திருப்பித் த‌ந்து விட்டான்.
ஆம், வாழ்க்கையில் எல்லாமே செளகிரியமாக அமைந்து விட்டால், அதைப் போன்றதொரு வெறுமை வேறெதுவும் இல்லை.
     பிரச்சனைகள் உங்களைப் போட்டு அழுத்தும் போதுதான், உங்கள் திறமை அதிகரிக்கும். சவால்கள் தான் ஒரு மனிதனை முழுமையாக்கும்.
     இருட்டு என்ற ஒரு பிரச்சனை இருந்ததால் தானே, மின்விள‌க்கை கண்டுபிடித்தீர்கள். பயணம் என்பது ஒரு பிரச்சனையாக‌ இருந்ததால் தானே, வாகனங்களுக்கு உருக்கொடுத்தீர்கள், தொலைவில் இருப்பவர்களை தொடர்புகொள்வது பிரச்சனையாக‌ இருந்ததால் தானே, தொலைபேசியை கண்டுபிடித்தீர்கள்.
      பிரச்சனைகள் இல்லாவிட்டால், உங்களின் மூளையின் திறனை எவ்வாறு அறீவீர்கள். சங்கரன்பிள்ளை வீடு கட்ட விரும்பினார், கட்டட நிபுனர் விதவிதமான பிளான்களைக் காட்டினார்.
"இல்லை, இது இல்லை, நான் நினைத்திருப்பது வேறு மாதிரி என்று, ஒவ்வொரு பிளான்னையும் நிராகரித்தார் சங்கரன்பிள்ளை. நிபுனர் களைத்துப் போனார். "உங்க‌ள் மனதில் என்ன தான் இருக்கிறது?" என்று கேட்டார்.
     ஒரு புராதண பித்தளைக்குமிழை சங்கரன்பிள்ளை தன் பாக்கெட்டில் இருந்து எடுத்துக் காட்டினார். " இதைக் கதவில் பொருத்தக்கூடியது மாதிரி ஒரு வீட்டுப்பிளானை இதுவரை நீங்கள் எனக்கு காட்டவில்லையே" என்றார்.
     பிரச்சனைகளை எதிர்கொள்ள தைரியம் இல்லை...ஆனால் வாழ்க்கை மட்டும் வசதியாக அமைய வேண்டும் என்று நினைப்பவர்கள் தான், சங்கரன்பிள்ளையைப் போல் கதவுக்குமிழை வைத்துக்கொண்டு அரண்மனைக்கு அசைப்படுகிறார்கள்.
     எதற்காக எல்லாமே திட்டமிட்டபடி முடியவேண்டும், ஏதாவது ஒன்று பிய்த்துக்கொண்டு போகட்டுமே... அதை எதிர்கொள்வோம், சமாளிப்போம், அது தானே உண்மையான வெற்றி.
     முடிவு சாதகமாக இருக்குமா? இருக்காதா? என்று வீண் யோசனைகள் செய்யாமல். முழுமையான ஈடுபாட்டுடன், ஆனந்ததோடு சவால்களை எதிர்கொள்ளுங்கள்…………