Tuesday, July 26, 2011

உண்ணாவிரதப் போராட்டம் ஆனந்தம்


      இன்றைக்கு ஏதாவது பிரச்னை என்றால், அரசியல்வாதிகள் உண்ணாவிரதம் என்று அறிவிக்கிறார்கள். பிரபலம் அடைகிறார்கள். அவர்களுக்கு உடல்நலம் மோசமானால், மக்கள் கொதித்து எழுந்து வன்முறையில் ஈடுபடுகிறார்கள். ஆட்சியில் இருப்பவர்களை அச்சுறுத்தும் ஆயுதமாகிவிட்ட உண்ணாவிரதப் போராட்டத்தைத் தடைசெய்தால் என்ன?''
      ''பொதுவாக, போராட்டம் என்றால் என்ன நடக்கிறது? கடை அடைப்பு அறிவிக்கிறார்கள். தொழில் நடத்துபவர்கள் தாக்கப்படுகிறார்கள். வேலைக்குச் செல்பவர்கள் மிரட்டப்படுகிறார்கள். பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் அடைக்கப்படுகின்றன. தெருவில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, தீ வைத்துக் கொளுத்தப்படுகின்றன.
      நினைத்ததைச் சாதிப்பதற்காக, சாலை மறியல்களில் ஈடுபட்டு மக்களின் அன்றாட வாழ்வைப் புரட்டிப்போடுவதைவிட, உண்ணாவிரதம் சிறப்பான போராட்டம் இல்லையா?வாகனங்கள் மீது கல் எறிவதிலும், பேருந்துகளுக்குத் தீ வைப்பதிலும், கடைகளை உடைத்துச் சூறையாடுவதிலும் ஈடுபடாமல், உண்ணாவிரதம் அறிவித்து அமைதியாக
எதிர்ப்பைக் காட்டுவது கண்ணியமான போராட்டம்.
      இந்தியாவில் இரண்டு வகையான மனிதர்கள் இருக்கிறார்கள். வயிறு பெருத்தவர்கள். வயிற்றுக்குக் கிடைக்காதவர்கள். வயிறு பெருத்தவர்கள் உண்ணாவிரதம் இருந்தால், அது அவர்களுக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது.
      பிரேசிலில் ஒரு நாடோடிக் கதை உண்டு.
      ஒரு பாதிரியார் வாரத்துக்கு ஒரே ஒரு முறை உணவு அருந்தி ஓர் ஆண்டு முழுவதும் விரதம் இருந்தார். கேட்டால், பைபிளில் உள்ள குறிப்பிட்ட வாசகங்களுக்கு நேரடியாகக் கடவுளிடம் இருந்து அர்த்தம் அறியப்போவதாகச் சொன்னார். ஆனால், கடவுளிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை.
      ''சே, உணவையே விட்டுக்கொடுத்தேனே? கடவுளுக்குக் கருணையே இல்லை. வேறு அறிஞர் யாரிடமாவது கேட்டுத் தெரிந்துகொண்டால் போயிற்று!'' என்று அவர் சொன்னதுதான் தாமதம், அவர் முன் ஒரு தேவதை தோன்றியது.
      ''ஒரு வருடம் உண்ணாவிரதம் இருந்தது, மற்றவர்களைவிட நீ உயர்ந்தவன் என்று காட்டிக்கொள்வதற்காக. அப்படிப்பட்டவர்களுக்குக் கடவுள் உதவுவது இல்லை. இப்போது மற்றவர்களிடம் கேட்டு அறியலாம் என்று உன்னிடம் பணிவு வந்தது. உனக்கு விளக்கம் கொடுக்கக் கடவுள் என்னை அனுப்பினார்'' என்றது.
      உங்கள் கொள்கைக்காக உண்ணாவிரதம் என்று நாடகம் போடுவது சரியல்ல. உண்மையான உறுதியுடன் உண்ணாவிரதம் இருந்தால், அது நிச்சயம் வெற்றிபெறும்.
      உண்ணாவிரதம் இருக்கும் தலைவருக்கு உடல்நிலையில் ஏதாவது பிரச்னை வந்தால், தொண்டர்கள் கொதித்துப்«¦பாகிறார்கள். எதையெல்லாம் தலைவர் தவிர்த்தாரோ, அவற்றில் தவறாமல் ஈடுபடுகிறார்கள். பஸ்களுக்குத் தீ வைக்கிறார்கள். கடை அடைப்பை
வற்புறுத்துகிறார்கள். ரயில் தண்டவாளங்களைப் பெயர்த்து எறிகிறார்கள்.
      இதை நிறுத்த வேண்டுமானால், உண்ணாவிரதத்தில் அமர்வதற்கு முன் தலைவர் இப்படி ஓர் அறிக்கை வெளியிட வேண்டும். வன்முறையில் ஈடுபடுவது நம் கொள்கைகளுக்கு எதிரானது. எனக்கு ஏதாவது நடந்தால், எதிர்ப்பைக் காட்ட நினைக்கும் தொண்டர்கள் அனைவரும் உண்ணாவிரதத்தில் ஈடுபட வேண்டும்.'
      ஒரு மனிதர் ஒற்றையாக உண்ணாவிரதம் இருந்தால், நாடு அவரை அலட்சியம் செய்யலாம். ஆனால், நூற்றுக் கணக்கானோர் அமைதியாக உண்ணாவிரதம் மேற்கொண்டால், நாடு அதைக் கவனிக்காமல் தவிர்க்க முடியாது.
      சுமார் 50 வருடங்களுக்கு முன்பு ஆந்திராவில் நடந்த சம்பவம் இது. குறிப்பிட்ட ஒரு கோரிக்கைக்காக 58 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மரணம் அடைந்தார் ஒருவர். அதே கோரிக்கைக்காக அடுத்த நபர் உண்ணாவிரதத்தில் அமர்ந்தபோது, பத்தே நாட்களில் தீர்வு கிடைத்தது.
      1814. பிரான்ஸ் தேசத்துக்கும் பிரிட்டனுக்கும் நடந்த போர் முடிந்திருந்தது. சிறைப்பிடிக்கப்பட்ட ஆங்கிலேய ராணுவக் கைதிகளைச் சொந்த நாட்டுக்கு அனுப்ப பிரான்ஸ் அரசு முடிவு செய்தது. அவர்களை அழைத்துச் செல்ல கப்பல் வரும் வரை, அவர்களை விருந்தினர்களாக ஏற்று, கவனித்து உணவு வழங்கும் பொறுப்பு உள்ளூர் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
      இரண்டு நாட்கள் சென்றிருக்கும்... ஆங்கிலேயத் தளபதி ஒருவர் பிரான்ஸ் அதிகாரியைச் சந்தித்தார்.
      'கப்பல் வரும் வரை எங்களை மறுபடி சிறையிலேயே அடைத்துவிடுங்கள், பிரபு' என்றார் பிரிட்டிஷ் தளபதி.
      'ஏன்? உங்களைக் கவனித்துக்கொள்ள வேண்டிய குடும்பம் உங்களிடம் மோசமாக நடந்துகொண்டதா?'
      'ஐயோ, அப்படி இருந்தால் பிரச்னை இல்லையே? நாங்கள் தங்கியிருப்பது ஒரு விவசாயியின் வீட்டில். அந்தக் குடும்பத்தில் கணவன், மனைவி, ஆறு குழந்தைகள் இருக்கின்றனர். போர் காரணமாக எங்கும் உணவுப் பற்றாக்குறை. அவர்களிடம் இருக்கும் தானியங்கள் அவர்களுக்கே அரை வயிற்றுக்குத்தான் காணும். அதையும் எங்களுக்கு இன்முகத்துடன் வழங்கிவிட்டு, அவர்கள் இரண்டு நாட்களாகப் பட்டினி கிடப்பதைக்
கண்டுபிடித்தோம். சிறையின் கொடுமைகளை எங்களால் தாங்க முடிகிறது. இந்த ஏழைகளின் கருணையை எங்களால் தாங்க முடியவில்லை' என்றார் பிரிட்டிஷ் தளபதி.
      பிரான்ஸ் அரசு, ஆங்கிலேயர் முன் பெருமையுடன் தலை நிமிர்ந்தது. அதே சமயம், அதன் குடிமக்கள் முன் நன்றியுடன் தலை குனிந்தது. விருந்தோம்பலில் ஈடுபட்ட அத்தனைக் குடும்பங்களுக்கும் மகிழ்ச்சியுடன் பரிசளித்தது.
      நீங்கள் உணவு அருந்தாமல் இருப்பது, வெறும் அரசியல் நாடகமாக இல்லாமல், இது போல் மற்றவர் இதயத்தைத் தொட வேண்டும்.
      அமெரிக்காவில், சாலை விபத்தில் உங்கள் மனைவியை, குழந்தையை, நெருக்கமான உறவினரை, நண்பரை நீங்கள் இழந்திருக்கலாம். ஆனால், அந்த விபத்தில் பொதுச் சொத்து எதையாவது
உங்கள் வாகனம் சிதைத்திருந்தால், அதற்கான கட்டணத்தை நீங்கள் கட்டித்தான் ஆக வேண்டும்.
      பொதுச் சொத்துக்களை விறகுகளைப்போல் நினைத்து தீக்கு இரையாக்கும் வன்முறையாளர்கள் நிச்சயம் நிறுத்தப்பட வேண்டும்.
      நீங்கள் எரித்த வாகனத்துக்காக அதன் சொந்தக்காரன் தன் வாழ்க்கையையே அடமானம் வைத்திருக்கக்கூடும். அதை ஓட்டித்தான் அவனுடைய வயிற்றுப்பிழைப்பே நடக்கக்கூடும். மற்றவர் சொத்தை எரிப்பதற்கு உங்களுக்கு ஏது உரிமை?
      மகாத்மா காந்தி வன்முறையில் நம்பிக்கை இல்லாதவர். அதனால், தன் கொள்கைகளை அடுத்தவர் கவனத்துக்குக் கொண்டுவர மற்றவரை வருத்துவதை விடுத்து, தன்னை வருத்திக்கொள்ள உண்ணாவிரதம் இருந்தார்.
      'என் முன் எரியும் பிரச்னை ஒன்று இருக்கலாம். ஆனால், அதற்காக என் உயிரை முன்வைத்தேனே தவிர, உங்கள் உயிரை நான் துச்சமாக நினைக்கவில்லை' என்பதே மகாத்மா காந்தி மற்றவர்களுக்கு முன்வைத்த சேதி.
      'என் கொள்கைக்காக, உங்கள் உயிரையோ, அன்றாட அலுவல்களையோ எந்தவிதத்திலும் ஆபத்துக்கு உள்ளாக்க மாட்டேன்' என்பதுதான் அரசியல்வாதிகள் விடுக்கும் சேதியாக இருக்க வேண்டும். தொண்டர்களும் அதை முழுமனதாகப் புரிந்துகொண்டு தலைவருக்கு
ஆதரவு தெரிவிக்க வன்முறையை நாடாமல், உண்ணாவிரதங்களையே நாட வேண்டும்!''

No comments:

Post a Comment