Friday, January 7, 2011

கடவுளைத் நம்பாதீர்கள் ஆனந்தம்

       வாழ்க்கையின் ஒவ்வொரு கோணத்தையும், படைபின் ஒவ்வொரு ரகசியத்தையும் நுணுக்கமாக கவனித்து உருவான கலாச்சாரம், இங்கு போல் உலகத்தில் வேறு எங்கும் இல்லை.
       வாழ்க்கையின் பூரணத்துவத்தை வேர் வரை உய்ந்து உணரக்கூடிய கலாச்சாரத்தில் பிறந்தும், உலகில் நாம் கோமாளிகளாகத் தோற்றம் அளிக்கக் காரணம் என்ன?
       அடிப்படையான பிழைப்புக்குக் கூட நம்மை நம்புவதை குறைத்துக் கொண்டு, கடவுளை நம்பி இருப்பது தான்!
       இந்த உலகில் த்ங்களுக்குத் தேவையானதை தேடிப் பெற, மண்புழுவிலிருந்து மாபெரும் யானை வரை யாவும் த‌ங்கள் திறமையை நம்பித்தான் இருக்கின்றன. யாரிடமும் போய் உதவி கேட்பதில்லை.
       அவற்றையெல்லாம் விட மிக அதிகமான புத்திசாலித்தனம் கொண்ட மனிதன் மட்டும்தான் தனக்குத் தேவையானதைக் கடவுளிடம் கேட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கிறான்.
       நீங்களும் பிழைத்திருக்க உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கைகளும் கால்களுமே போதும்!
       உங்கள் உடலையும் மனதையும் எப்படி திறம்படப் பயன்படுத்துவது என்பதற்கான பயிற்சிகள் கொடுத்தால் போதும்!
       அதை விட்டுவிட்டு, கடவுளை உங்கள் பிழைப்புக்காக உதவுவதற்கு அழைப்பது கேவலம்.
       ஆம், தினப்படி வாழ்க்கைக்குக் கடவுள் தேவையில்லை!
       பல லட்சம் கோயில்கள் இருந்தும், எங்கு திரும்பினாலும் ஏன் வேதனை மிகுந்த முகங்களைப் பார்க்கிறோம்?
       உண்மையையும், உபதேசத்தையும் போட்டுக் குழப்பிக் கொண்டதால் வந்த பிரச்சனை இது.
       கடவுள் உங்களை விட மிக சக்தி வாய்ந்தவர்; அவர் இல்லாமல் ஓர் அணுவும் அசையாது என்பீர்கள்.
       ஆனால் அவரை நம்பி உண்மையிலேயே உங்களை ஒப்படைப்பீர்களா? மாட்டீர்கள்?
       அவரின் புத்திசாலித்தனத்தின் மீது சந்தேகம் கொண்டு தினம் தினம் அவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் முன் நின்று கண்களை மூடிய படி, நீங்கள் அல்லவா அவருக்கு சொல்லிக் கொடுக்கிறீர்கள்?
       உழைக்காமல் சாப்பிடவும், படிக்காமல் தேர்வுகளில் பாஸ் செய்யவும், உங்கள் த‌வறுகள் கவனிக்கப்படாமல் போகவும் கடவுளைத் துணையிருக்கச் சொல்லுகிறீர்கள்.
       வாழ்க்கை திடுமெனப் புரண்டுவிட்டால் என்ன செய்வது என்று கடவுளை ஒரு இன்சூரன்ஸாக வைத்திருக்கிறீர்கள். கோயில் கோயிலாக அதற்கான பிரிமியம் கட்டுகிறீர்கள்.
       'இதையெல்லாம் கொண்டு வா!' ' இதிலிருந்து காப்பாத்து!' என்று உங்கள் சேவகனாகவும், பாதுகாப்பு சிப்பாயாகவும் கடவுளை நியமிக்கப் பார்க்கிறீர்கள்.
       வாழ்க்கையை பற்றிய அச்சம் மட்டுமே உங்களிடம் கடவுள் நம்பிக்கையை வளர்த்திருந்தால் உங்களிடம் தெய்வமும் தங்காது... வாழ்க்கையும் மிஞ்சாது!
       சங்கரன்பிள்ளையிடம் ஒரு வேலைக்காரன் இருந்தான். ஒரு முறை உப்பும் சர்க்கரையும் வாங்கி வர அவனை சங்கரன்பிள்ளை கடைத்தெருவுக்கு அனுப்பினார்.
       வேலைக்காரன் முத‌லில் பை நிறைய சர்க்கரை வாங்கினான். அடுத்ததாக உப்பு வாங்கப் போனபோது, 'இரண்டையும் கலந்து வாங்கி வந்து விடாதே' என்று சங்கரன்பிள்ளை எச்சரிக்கை செய்திருந்தது நினைவுக்கு வந்தது.
       பையை உள்ளும் வெளியுமாக புரட்டி விட்டால் வேறொரு பையாகி விடுமே என்று புரட்டினான், சர்க்கரையெல்லாம் தெருவில் கொட்டி வீணானது.
       பையில் உப்பை நிரப்பிக் கொண்டு வீடு திரும்பினான்.
       "உப்பு இருக்கிறது சர்க்கரை எங்கே?" என்று சங்கரன்பிள்ளை கேட்டார்.
       அந்த புத்திசாலி வேலைக்காரன், 'பையின் அந்தப் பக்கம் இருக்கிறது' என்று பையை மறுபடி புரட்டினான். உப்பும் பூமியில் கொட்டி மண்ணில் கலந்தது.
       அச்சமும் கடவுள் நம்பிக்கையும் இப்படித்தான். இரண்டையும் குழப்பிக்கொண்டால் எதற்கும் உதவாது. இத்ற்கு பக்தி என்று பெயர் சூட்டி ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்.
       உண்மையில் கடவுளை உங்க‌ளுக்கு மேலானவராக எண்ணினால், உங்கள் வாழ்க்கை எதிர்பார்த்தபடி நடக்காத போது, ஆஹா, கடவுள் விருப்பப்படி நடக்கிறதே! என்று ஆனந்தமல்லவா கொள்ள வேண்டும்! முடிகிறதா?
       மாறாக, வாழ்க்கையை எப்படி நடத்தித்தர வேண்டும் என்று பிரார்த்தனை என்ற பெயரில் கடவுளுக்கு உத்தரவு அல்லவா கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்?
       சந்தேகம் இருக்கும் மனதில் பக்தி நிகழ்வதில்லை. கடவுளிடம் பணிவது போன்ற பாசங்கு தான் நிகழ்கிறது.
       பக்தி என்பது உங்கள் அடையாளங்களை இழந்து எதன் மீது பக்தி கொண்டீர்களோ அதனுடன் இரண்டரக் கரைவது.
       உங்கள் தவறுகளுக்கான பழியை சகமனிதர்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லாத‌ போது, தெய்வச் செயல் என்று அவற்றை சுமத்த வசதியான தோள்களாகக் கடவுளை வைத்திருக்கிறீர்கள்.
       அதன் பெயர் பக்தி இல்லை. போலித்தனம்!
       உங்கள் வாழ்க்கையை, கடவுளின் உதவியைக் கோராமல் நீங்களாக வாழக் கற்றுக் கொண்டீர்களானால், உங்கள் வாழ்க்கை மேன்மையாகிவிடும்.
       உங்களூக்குத் தேவையான உணவு கிடைத்துவிட்டது, விரும்பிய துணை, குழந்தைகள், வசதிகள் அனைத்தும் கிடைத்து விட்டது, இருந்தாலும் இன்னும் வேறு எதற்காகவோ மனம் ஏங்குகிறதே அதன் பெயர் என்ன?
       இந்தப் படைபின் வேர் என்ன என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் அப்போது தான் தலையெடுக்கிறது என்று அர்த்தம். அதுதான் உண்மையான தேடல்......
       அப்போது தான் கடவுளைப் பார்க்க நீங்கள் தயார். உண்மையான ஆனந்தத்தை அடைய நீங்கள் தயார்..........அதுவரை கடவுளைத் துரத்தாதீர்கள், விட்டுவிடுங்கள்........
வாழ்க வளமுடன்!

1 comment:

Post a Comment