Saturday, July 9, 2011

உடலே தெய்வீகம் ஆனந்தம்

      நீங்கள் உயிர் வாழ்வதற்கான முக்கிய அம்சங்களில் ஒன்று உங்கள் உடல். ஆனால், இதன் வலிமையை விலங்குகளுடன் ஒப்பிடவே முடியாது. ஒரு வெட்டுக்கிளியை எடுத்துக்கொள்ளுங்கள். தன் உடலின் நீளத்தைவிட 50லிருந்து 100 மடங்கு வரையிலான உயரத்திற்கு அதனால் குதிக்க முடியும். அப்படியானால் நீங்கள் ஆறடி உயரம் இருந்தால் 600 அடி உயரத்திற்கு குதிக்க வேண்டும். அப்போதுதான் ஒரு வெட்டுக்கிளிக்கு நீங்கள் நிகராக முடியும்.
      "உடல் வலிமை' என்று வரும்போது மனிதர்களைவிட விலங்குகளே வலிமையானவை. ஆனால், பிழைப்பு என்கிற எல்லையைத்தாண்டி வாழ்வை அணுகவும், கையாளவும் மனிதர்களுக்கு தகுதி, அறிவு, சக்தி இருக்கிறது. ஆனால், மனிதனோ தன்னுடைய பிழைப்பின் தரத்தை உயர்த்த மட்டுமே தன் சக்தியைப் பயன்படுத்துகிறான். ஒரு காலத்தில், உயிர் வாழ்வதற்கு வெறுமனே இரண்டு வேளை உணவு மட்டுமே போதுமானதாய் இருந்தது. இப்போது அதன் எல்லைகள் நீட்டிக்கப்பட்டிருக்கிறது, அவ்வளவு தான்! மனிதன் தன் அடிப்படையான செயல் கட்டமைப்பை மிகவும் முட்டாள்தனமாக கையாள் கிறான் என்பதற்கு இது அடையாளம். மிகவும் வித்தியாசமான முறையில் அதனை பயன் படுத்தும் வாய்ப்பு மனிதனுக்கு இருக்கிறது.
      யோகமரபில், மனிதனின் முதுகுத்தண்டு "மேருதண்டம்' என்று அழைக்கப்படுகிறது. இதற்கு "பிரபஞ்சத்தின் அச்சாணி' என்று பொருள். ஒரு மனிதனுடைய முதுகுத்தண்டு எப்படி பிரபஞ்சத்தின் அச்சாணி ஆகமுடியும்?
உலகிலுள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அதிர்வு இருக்கிறது என்பதை நவீன விஞ்ஞானம் நிரூபித்திருக்கிறது. மனிதனைப் பொறுத்தவரை அடிப்படையான அதிர்வுகள் முதுகுத் தண்டிலிருந்து தொடங்குகின்றன. அது எவ்வளவுக்கெவ்வளவு சூட்சுமமான நிலையை அடைகிறதோ, அந்த அளவுக்கு மேல் நோக்கிச் செல்கிறது. இல்லையென்றால் முதுகுத்தண்டிலேயே (தொடங்கிய இடத்திலேயே) நின்றுவிடுகிறது. அது சூட்சுமமாகிறபோதுதான் அதனை எல்லா இடங்களுக்கும் நீங்கள் கொண்டுசெல்ல முடியும். அந்த அதிர்வுகள் எல்லா இடங்களிலும் பரவுகிறபோது உங்கள் புரிதலும் எல்லா இடங்களுக்கும் பரவுகிறது, அப்போது நீங்கள் மிகச்சிறந்த ஆனந்தமான மாமனிதனாக முடியும்.
      இந்த உடலே ஒரு கருவி. இதனை உங்களுக்கு உணவு சேகரிக்கவும் மற்ற விஷயங் களுக்காகவும் மட்டும் பயன்படுத்தப் போகிறீர்களா? அல்லது அதன் உச்சபட்சமான சாத்தியத்தை அதாவது ஆனந்தத்தை நோக்கி பயன்படுத்தப் போகிறீர்களா? உடலை ஒரு கருவியாக பயன்படுத்துவீர்கள் என்றால் முதலில் அதனை உங்களுடன் அடையாளப் படுத்திக் கொள்வதை நிறுத்த வேண்டும். இந்த உடம்பை எங்கிருந்து சேகரித்தீர்கள் என்பது உங்களுக்கு தெரியும். நீங்கள் சேகரித்த ஒன்று நீங்களாக இருக்க முடியாது. குறிப்பிட்ட காலம் வரையில் அது உங்களுடையதாக இருக்கலாம்.
      ஒரு மனிதன் சராசரியாக‌ தன் வாழ்நாளில் 50 டன் உணவு சாப்பிடுகிறான்,'' அப்படியானால் உங்கள் எடை எவ்வளவு இருக்க வேண்டும்? உணவை சேர்த்துக்கொண்டே போவது பற்றி மட்டுமல்ல இது. நீங்கள் சேகரித்துக்கொண்டே போகும் கர்மவினை எவ்வளவு என்று பாருங்கள். ஒவ்வொரு பிறவியிலும் இந்த உடம்பை உதறிவிட்டு இன்னொரு உடம்பை எடுத்துக்கொள்கிறீர்கள். ஆனால் கர்மவினையையோ சேர்த்துக்கொண்டே போகிறீர்கள்.
      மனித உடல் அற்புதமான ஒரு கருவி. இதன் நுணுக்கமான விஷயங்களை நீங்கள தெரிந்துகொள்ள ஒரு பிறவி போதாது. ஈஷா யோகாவின் அறிமுக வகுப்பிற்கு வந்த முதல் நாளிலேயே உங்களுக்கும் உங்கள் உடம்புக்கும் நடுவே ஒரு இடைவெளியை உருவாக்க நாங்கள் முயன்று வருகிறோம். அப்போதுதான் எவ்வளவு நல்ல கருவி ஒன்று உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து நீங்கள் ஆனந்தம் கொள்ள முடியும். இந்த உடல் சாதாரணமான ஒன்றல்ல. பந்தத்திற்கும் விடுதலைக்குமான அனைத்து அம்சங்களும் இதில் இருக்கின்றன. இதன் சக்தி நிலையை சரியான விதத்தில் நீங்கள் மேலெடுத்துச் சென்றால் இதையே தெய்வீகத்தின் உச்சமாக உருவாக்கவும் முடியும்! அல்லது பிணம் போல் வாழவும் முடியும்!இந்த உடம்பை நீங்கள் சிவமாக்குகிறீர்களா? சவமாக்குகிறீர்களா என்பது உங்களைப் பொறுத்தது.
      புதிதாக ஒரு கார் வாங்கியிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த வாகனத்தில் என்னவெல்லாம் உள்ளது என்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் திறமைமிக்க ஓட்டுனர் ஒருவரிடம் அதனை ஒப்படைக்க வேண்டும். இது உங்கள் உடம்புக்கும் பொருந்தும். அதனை எப்படி சரியாக பயன்படுத்துவது என்று தெரிந்துகொண்டுவிட்டால் இந்த உடலை தெய்வீகத்திற்கான ஏணியாக பயன்படுத்தலாம். இன்னும் சரியாக பயன்படுத்தினால் உடலே தெய்வீகம் என்பதையும் உணர்ந்துகொள்ளலாம்.

1 comment:

Ramarajan said...

அருமை. நன்றி.

Post a Comment