Wednesday, August 31, 2011

மனித நாகரீகம் என்பது இதுவா? ஆனந்தம்


      எந்தப் புலியாவது தன்னை நல்ல புலியாக காட்டிக்கொள்ள வேண்டும் என்று தன் இயல்பை மறைத்து மாறாக நடந்து கொள்ள முயற்சிக்கிறதா? எந்த எருதாவது தன்னை கெட்ட எருதாக காட்டிக்கொள்ளக் கூடாது என்று கபடமாக நடந்து கொள்கிறதா?
      பசி எடுத்தால் உணவு, இச்சை பிறந்தால் இணை என்ற இரண்டே வேட்கைகளில் தான் அதற்க்குள் சண்டை நடக்கிறது. அது மிருக இனம் பிழைத்திருப்பதற்கும் இனப்ப்பெருக்கம் செய்வதற்க்கும் இயற்க்கை விதித்திருக்கும் விதி.
      மற்ற‌படி மிருகங்கள் ஒன்றை ஒன்று பார்த்து, பொறாமைப்படுவது இல்லை, வஞ்சம் கொள்வது இல்லை, சதிச் செயல்களில் ஈடுபடுவது இல்லை.
      மனிதன் தான் இயல்பை உணராமல் தடுமாறுகிறான். ஆரம்பத்தில் அவனும் தன் உணவுக்காக, உடைக்காக, உறைவிடத்திற்க்காக சண்டைபோடத்துவங்கினான். பிற்பாடு நாகரீகம் வளர வளர அவனுடைய தேவைகளும் பெருகிவிட, கூடுதலான வசதிகளுக்காகவும் தன் பெருமைகளுக்காகவும் போரிடும் குணம் அவன் அடிப்படை குணம் ஆகிவிட்டது. அதை மறைத்து தன்னை நல்லவனாக காட்டிக் கொள்ளும் முனைப்பு அவன் இயல்பு ஆகிவிட்டது.
      சட்ட திட்டங்களால் ஆளப்படுவதால் மட்டுமே எந்த சமூகமும் நாகரீகம் அடைந்து விட்டதாக சொல்ல முடியாது. லண்டன், பாரீஸ், மும்பை, நியூயார்க் என இன்றைக்கு மிக நாகரீக நகரம் என்று நீங்கள் கருதும் எந்த நகர‌த்தை வேன்டுமானால் எடுத்துக்கொள்ளுங்கள் அங்கே சட்டத்தை விலக்கி காவல்த்துறையை கலைத்து விட்டு பாருங்கள்....மூன்றே நாளில் எல்லாம் தலைகீழாகிவிடும். மிக நாகரீகமான மனிதன் என்று நீங்கள் கருதியவர் கூட குகை மனிதனை விடக் கேவலமானவனாக நடந்து கொள்வதை நீங்கள் பார்க்கலாம்.
      சங்கரன்பிள்ளை ஒருநாள், தன் தோட்டக்காரன் திண்ணையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார்.
      "ஏய், ஏன் தோட்டத்திற்க்கு த‌ண்ணீர் ஊற்றப் போகவில்லை?" என்றார்.
      தோட்டக்காரன் அவரை சந்தேகத்தோடு பார்த்து, "வெளியே மழை கொட்டிக்கொண்டு இருக்கிறதே ஐயா" என்றான்.
      "அதனால் என்ன குடையை எடுத்துகொண்டு போ" என்று விரட்டினார் சங்கரன்பிள்ளை.
      மனிதன் வகுத்த சட்டங்கள் இப்படித்தான்...., சூழ்நிலையை கணக்கில் எடுத்துக் கொள்ளாவிட்டால், அந்த சமயங்களில் சட்டங்கள் அர்த்தமற்றுப் போகின்றன.
      காடுகளில் வாழ்க்கை கடினாமாக இருக்கின்றது என்று தான் மனிதன் நகரங்களை உருவாக்கினான், இப்போது நகரங்களில் நகரங்களில் வாழ்க்கை அதை விடக் கடுமையானதாக ஆகிவிட்டிருக்கிறது.
      அட்த்தவனை விட தான் குறைவான நிலையில் இருந்தால் கூசிக்குறுகிப் போகின்றான். எந்த நிலையில் வாழ்கிறானோ அதில் சிறிதளவு குறைந்து விட்டால் கூட, தன் நிலை தாழ்ந்து விட்டதாக எண்ணி, நிம்மதியை தொலைக்கிறான், உயிரே போய்விட்டது போல் துக்கப்படுகிறான்.
      எப்போது மனிதன் தன்னை உடலோடு அடியாளப் படுத்திக் கொள்ள ஆரம்பித்தானோ, அப்போதே இந்தப் பிரச்சனை ஆரம்பமாகிவிட்டது.
      உடல் என்பது மிருகம் தான். உடலின் அபாரத் தேவைகளுக்காக நீங்கள் இறங்குகையில் அந்தப் போரட்டத்தில் உங்களுடைய பெரும்பாலான சக்தி விரயமாகிறது.
      நாகரீகம், கல்வி உங்களின் மிருக குணங்களைப் பின்னிழுக்க வைத்து உங்களை போலியாக வெளியுலகில் காட்டிக் கொள்ளத் தூண்டுகின்றன. எப்பொழுதெல்லாம் நாகரீகமும், கல்வியும் மறந்து போகின்றதோ அப்பொழுதெல்லாம் உங்களின் அடக்கி வைத்த குணம் தன்னை முன் தள்ளி வெடித்துக் கிளம்புகின்றது.
      உங்களை உடலுடன் அடையாளபடுத்திப் பார்க்கும் தன்மை விலகி, உள்ளத்தின் நிலையை புரிந்து கொள்ளும் தன்மை வரவேண்டும். அப்போது தான் உங்களின் உயிர்த்தன்மை வெளிப்ப‌ட்டு உங்களை சீர்படுத்தும். உண்மையான ஆன்மீகமும் அதுவே. என்றென்றும் உங்களை ஆனந்தமாக வைத்திருக்கும்.

No comments:

Post a Comment