உடல் ஜீரணிக்கிற அளவுக்கு மேலே எப்போதும் யாரும் உணவுண்டதே கிடையாது, அது முடியவும் முடியாது. அதிகமாக உண்டால் தொல்லைதான் விளைவாக வரும். அது போன்றே உடல் சுமக்கும் அளவுக்கு மேலே உடைகளைப் போட்டுக் கொள்ள முடியுமா? நின்றால் காலளவு. படுத்தால் உடலளவு. இதற்குமேல் பூமியை யாரும் அனுபவிக்கிறதில்லை.
உண்மையிலேயே நாம் எல்லோருமே ஞானிகளாக, அனைத்தையும் துறந்தவர்களாக, தியாகிகளாகத் தான் இருக்கிறோம். அப்படி ஏதேனும் பொருள் சேர்த்து வைத்துக் கொண்டிருந்தாலும் கூட, உயிர் போகும் போது எல்லாவற்றையும் விட்டுவிட்டு, கொடுத்து விட்டுத் தான் போகிறோம், சிறிது கூட அதிலே எடுத்துக் கொண்டு போவதில்லை. இந்த உண்மையை உணர்ந்து கொண்டால் போதும். நினைத்துக் கொண்டால் போதும்.
உணர்ந்தாலும் சரி, உணராது போனாலும் சரி எந்தப் பொருள் எங்கே ஒட்டிக் கொண்டிருக்கிறது? உணர்ந்து விட்டால் உண்மையோடே இருக்கிறோம். உணராதபோது மயக்கத்திலே இருக்கிறோம். உணர்ந்தால் தெளிவு உணராவிட்டால் மயக்கம். ஆகையினாலே அந்த மயக்கத்தை விட்டு, உணர்ந்த நிலையிலே இருந்து நான் பிறருக்கு எந்த அளவிலே உதவியாக இருக்க முடியும் என்று கணித்துக் வாழ வழி வகுத்துக் கொள்ள வேண்டும்.
வாழ்க வளமுடன்!
1 comment:
நின்றால் காலளவு. படுத்தால் உடலளவு. இதற்குமேல் பூமியை யாரும் அனுபவிக்கிறதில்லை.
உணர்ந்து சிறப்பித்த பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
வாழ்க வளமுடன்!
Post a Comment