Sunday, December 12, 2010

சலிப்பல்ல‌-ஆனந்தமே வாழ்க்கை:

       தினம் அதே பேருந்து. அதே நெரிசல். அதே அலுவலகம். அதே மனிதர்கள். அதே வேலை. மாற்றம் இல்லாத இந்தவாழ்க்கை எனக்குச் சலிப்பை எற்படுத்துகிறது. ஆனால், வீட்டில் உள்ளவர்கள் என்னை நம்பி இருக்கையில், பொறுப்பே இல்லாமல் அதில் இருந்து வெளியேறவும் இயல வில்லை. என் வாழ்வைச் சுவையாக்கிக்கொள்ள ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா?"
       "அதே அலுவலகம், அதே வேலை என்று சலித்துக்கொள்ளும் நீங்கள், அதே வீட்டில் உள்ள மனிதர்கள் என்று சொல்லாமல்விட்டீர்களே! ஒருவேளை புது வேலை ஒன்றை உங்களுக்கு வழங்கினால், அதே எண்ணம் புதிய வேலையின் மீதும் விரைவிலேயே வந்துவிடக்கூடும்.
       எதுவும் மாற்றம் இன்றி இருப்பதாக நீங்கள் உணர்வது உங்கள் மனதின் விளையாட்டு. அலுவலகத்தை மாற்றினால், குடியிருப்பை மாற்றத் தோன்றும். குடியிருப்பை மாற்றினால், குடும்பத்தை மாற்றத் தோன்றும். குடும்பத்தை மாற்றினால், உங்கள் முகத்தை மாற்றத் தோன்றும். இது முடிவில்லாத பிரச்னையாகிவிடும்........
       உண்மையில், மாற்றம் இல்லாமல் எதுவும் இங்கே இயங்கவில்லை. நேற்று பார்த்த சூரியனில் இருந்து இன்று பார்க்கும் சூரியன் மாறுபட்டுத்தான் இருக்கிறது. இந்தத் தருணம் புதியது. சென்ற கணத்தில் இல்லாதவிதமாக எங்கோ ஓர் இலை உதிர்ந்திருக்கும். எங்கோ ஒரு விதை முளைத்திருக்கும். இந்தத் தருணத்தில், சென்ற வருடமோ, நேற்றோ, ஏன் கடந்து போயிற்றே ஒரு நொடி அதைக்கூட உங்கள் அனுபவத்தில் உணர இயலாது.
       உற்சாகமோ, சலிப்போ எதுவானாலும் அது உங்கள் மனதின் உருவாக்கம்தான். குடும்பத்தையே தன் தோளில் சுமப்பதாக நினைத்து நினைத்து, துக்கத்துடன் வேலை செய்பவர்களுக்குச் சலிப்பு வராமல் எப்படி இருக்கும்? நீங்கள் மனதால் வாழ்ந்துகொண்டு இருப்பதால், நேற்று செய்ததையே திரும்பத் திரும்பச் செய்வது போன்ற ஓர் உணர்வு உங்களைத் தாக்குகிறது.
       நேற்று என்பது நினைவு. நேற்று மேகங்கள் எப்படி எங்கெங்கே இருந்தன என்பதை வானம் பதிவுசெய்து வைத்துக்கொள்வது இல்லை. எவ்வளவு அலைகளைக் கரை மீது மோதினோம் என்று கடல் எழுதிவைத்துக் கொள்வது இல்லை. பிரபஞ்சத்தில் எங்கு பார்த்தாலும், நிகழ்வுகள் அதிகபட்சம் தடயங்களைப் பதிவுசெய்துவிட்டுப் போகின்றனவே தவிர, நினைவுகளாக சுமையாகி அழுத்துவதே இல்லை.
       இயற்கையில் எதுவும் பழையது இல்லை. ஒவ்வொன்றும் புதியதுதான். விஞ்ஞானமும் அதையேதான் சொல்கிறது. ஒரு பாறை கூட, அதற்குரிய அதிர்வுகளை வெளிப்படுத்தித் தன்னைக் கணத்துக்குக் கணம் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது.
       வெயில் காலம். சங்கரன்பிள்ளை தெருத் தெருவாகத் தொப்பிகள் விற்றுக்கொண்டு இருந்தார். மதிய நேரம். களைத்துப்போய் ஒரு மரத் தடியில் அவர் கண்ணயர்ந்துவிட்டார். விழித்துப் பார்த்தால், விற்பனைக்கு அவர் வைத்திருந்த தொப்பிகள் எல்லாவற்றையும் குரங்குகள் எடுத்துப்போய் தங்கள் தலைகளில் அணிந்துஇருந்தன.
       அவருடைய தாத்தா ஒருவர் இதே போன்ற சூழ்நிலையில், என்ன செய்தார் என்று சங்கரன்பிள்ளையின் பாட்டி சொல்லியிருந்தாள். மனிதன் செய்வதைக் குரங்கு திருப்பிச் செய்யும் என்பதால், அவருடைய தாத்தா தன் தொப்பியைக் கழற்றித் தரையில் எறிந்தார் என்றும், அதைப் பார்த்துக் குரங்குகளும் அதே போல் தொப்பி களைக் கழற்றிக் கீழே எறிந்தன என்றும் சங்கரன் பிள்ளை அறிந்திருந்தார்.
       அதே வித்தையை இப்போது செயல்படுத்தினார். குரங்குகளைப் பார்த்துக் கையை ஆட்டினார். அவையும் அதேபோல் ஆட்டின. தன் கன்னத்தில் தட்டிக்கொண்டார். குரங்குகளும் தங்கள் கன்னங்களில் தட்டிக்கொண்டன. தன் தொப்பியைக் கையில் ஒரு முறை சுழற்றி அணிந்தார். குரங்குகளும் அதேபோல் செய்தன. இப்படிச் சிறிது நேரம் விளையாட்டுக் காட்டிவிட்டு, அவர் தன் தொப்பியைக் கழற்றித் தரையில் எறிந்தார்.
       மரத்தில் இருந்து ஒரு குரங்கு தாவி இறங்கி வந்து, சங்கரன் பிள்ளையின் தொப்பியையும் பாய்ந்து எடுத்துக்கொண்டது. திகைத்து நின்ற அவரை நெருங்கி, அவர் கன்னத்தில் பளாரென்று அடித்தது.
       "முட்டாள், உனக்கு மட்டும்தான் தாத்தா இருப்பாரா?" என்று கேட்டது.
       குரங்குகளின் பார்வைகூடப் புதிதாக மாறிவிட்டதே, உங்களுக்கு மாறவே இல்லையா? வாழ்க்கை ஒருபோதும் சலிப்பேற்படுத்துவது அல்ல. நீங்கள் வாழும் பூமிகூட நிற்காமல் சுழன்றுகொண்டுதான் இருக்கிறது. எந்தத் தருணம் நீங்கள் அண்ணாந்து பார்த்தாலும் ஆகாயத்தின் ஒரு புதிய பகுதியைத்தான் பார்க்கிறீர்கள்.
       உங்கள் மனம்தான் அதை ரசிக்கத் தெரியாமல் அல்லாடுகிறது.
கட்டுப்பாட்டில்வைத்துக்கொள்ளத் தெரியாமல், கட்டவிழ்த்துவிட்டுவிட்டால்,
மனதுக்கு வேறுவிதமாகச் செயலாற்றத் தெரியாது. சலிப்புக்குக் காரணம் உங்கள் அலுவலகம்அல்ல; நீங்கள் உங்கள் மனதுக்கு அடிமையாகிவிட்டது தான். மனதைப் பயன்படுத்துவது எப்படி என்று உங்களுக்குத் தெரியாததால், அது உங்களைப் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறது. ஒரு கட்டத்தில், அது உங்களை விழுங்கிச் சாப்பிட்டு ஒன்றும் இல்லாதவராக்கிவிடும்.
       சலிப்பில் இருந்து விடுபட வழி இருக்கிறது. எதைச் செய்தாலும், அதில் உங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். முழுமையாக என்றால், உங்களையே அதற்காக அர்ப்பணிக்கத் தயாராக இருக்கும் முழுமை.
       செய்வதைச் சந்தோஷமாகச் செய்வதாக உணர்ந்தால்மட்டுமே உங்களால் முழுமையாகச் செயலாற்ற முடியும். கட்டாயத்துக்காக வேலை செய்வதாக நினைத்து அலுத்துக்கொண்டு செய்தீர்கள் என்றால், ரத்தக் கொதிப்பும், இதய வலியும், மற்ற மன நோய்களும் அழைக்காமலேயே வந்து குடியேறிவிடும்.
       உங்கள் உடலும் மனமும் உங்களை ஆள்வதில் இருந்து விடுபட்டு, நீங்கள் அவற்றைப் பயன்படுத்தி விரும்பிய இடத் துக்குப் போக வேண்டாமா? இப்படிச் சுழலில் சிக்கிக்கொண்டு ஒரே இடத்தை வட்டமிட்டுக்கொண்டு இருப்பதில் இருந்து விடுவித்து, ஓர் அம்பு போல் நேர்க்கோட்டில் பயணம் செய்வதற்கு வழி செய்வதுதான், ஆன்மிகத்தின் நோக்கமே.
       ஆன்மீகத்தில் பயணிப்பவர்களுக்கு அதே பழைய விசய‌ங்களில் ஈடுபட்டு இருந்தாலும், அவர்களுடைய பார்வை மாறி விடுகிறது. ஒவ்வொன்றும் இப்போது அவர்களுக்குப் புதியனவாகத் தெரியும்.
       வெளியில் எதை மாற்றினாலும், எத்தனை மாற்றினாலும், அது உண்மையான மாற்றமாக இராது. ஆன்மீகத்தில் பயணம் செய்தால், வாழ்க்கையை விழிப்பு உணர்வுடன் வாழ்ந்து பார்த்தால், ஒவ்வொரு தருணமும் உயிர்ப்போடு இருந்தால், எதிலும் ஆனந்தமே குறிக்கோளாக இருந்தால், வாழ்வில் ஒரு தருணம்கூட பழையதாக இருக்காது. ஆனந்தமாக வாழ்கையை வாழ்பவர்க்கு, மாற்றம் உள்ளுக்குள்ளே நிகழும். அங்கிருக்கும் சலிப்பு பறந்து போய்விடும்!" ஆனந்தமே வாழ்க்கை என்பது புரிந்துவிடும்..........

1 comment:

Saravanan A said...

I enjoyed reading it. I guess this from Sadhguru - Athanaikum Asaipadu book. It would be nice if quote the reference, so that interested can read further.

Post a Comment