Friday, December 10, 2010

ஆனந்தத் தென்றல்:

    வாஜஸ்பதி மிஸ்ரா என்பவர் பிரம்மசூத்திரம் என்ற நூலுக்கு விளக்க உரை எழுதியிருக்கிறார். அவர் எழுதிய உரையைப் போல வேறு யாரும் எழுதியிருக்க முடியாது என்கிற அளவுக்கு உலகத்தில் உள்ள எல்லாத் தத்துவங்களையும் உள்ளடக்கி எழுதியிருக்கிறார்.
       அவர் அந்த உரையை எழுதத் துவங்கும் முன் வாஜஸ்பதியின் குரு அவரிடம் "பிரம்மசூத்திரத்திற்க்கான உரையை நீ தான் எழுத வேண்டும், எனக்கு வயதாகிவிட்டது, என் மகளைத் திருமணம் செய்து கொண்டு பின் இந்த உரையை எழுதத் துவங்கு. திருமணம் வரை நான் உயிரோடு இருப்பேனா என்று தெரியாது, உரையை எழுதுவதை செம்மையாக செய்ய என் ஆசிகள்" என்றார்.
       குரு சொன்னபடியே வஜஸ்பதிக்கும் குருவின் மகளுக்கும் திருமணம் நடந்து குடித்தனம் ஆரம்பித்தனர். வாஜஸ்பதியும் உரையை எழுத ஆரம்பித்தார்.
       காலங்கள் கடந்தன...... வருடங்கள் உருண்டோடின....
       உரை எழுதிமுடித்தாகி விட்டது. அந்த நூலுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார் வாஜஸ்பதி.
       தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த போது, அவர் அருகில் இருந்த விளக்கிற்கு ஒரு பாட்டி நெய் ஊற்றி விளக்கேற்றிக் கொண்டிருப்பதை கவனித்தார்.
       "அம்மா நீ யார்?" என்று கேட்டார் வாஜஸ்பதி.
       "நான் தான் உங்கள் மனைவி, குருவின் உத்தரவை எற்று திருமணம் முடிந்தகையோடு உரை எழுத ஆரம்பித்துவிட்டீர்கள், உங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து பக்கத்திலிருந்து கவனித்து வருகிறேன்" என்றார்
       வாஜஸ்பதிக்கு ஒரே பரிதவிப்பாக இருந்தது, ஆனாலும் உள்ளுக்குள் பரவசமாக உணர்ந்தார். இவ்வளவு அர்ப்பணிப்பு உணர்வோடு ஒரு பெண் இருக்க முடியுமா?
       வாஜஸ்பதி கேட்டார், ஒரு முறையாவது என் கவனத்தை திருப்பியிருக்கக்கூடதா? உன் வாழ்க்கையை வீனடித்து விட்டேனே? என்றார்.
       "உங்களுக்கு சேவை செய்வதே என் பாக்கியம். அது நிறைவேற நீங்கள் தான் எனக்கு உத‌வினீர்கள், அதற்க்கு அனேக கோடி நன்றிகள்" என்றாள் மனைவி.
       அவள் பெயர் தான் பாமதி, அந்த பெயரைத் தான் பிரம்மசூத்திரத்துக்கு தலைப்பாக வைத்தார், வாஜஸ்பதி.
       பல ஆண்டு காலம் பாமதியை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இயங்க வைத்தது எது. அள்ள அள்ள குறையாதது தான் அன்பு. அந்த அன்பின் உச்சம் தான் அது.
       ஆனால், இன்றோ நமது உறவுகள் அனைத்தும் எதையோ எதிர்பார்த்துதான் இருக்கிறது. மகன் எதிர்காலத்தில் நம்மைக் காப்பற்றுவானா? என்று தந்தையும், அப்பா நிறைய சொத்து சேர்த்து வைப்பாரா என்று மகனும் எதிர்பார்க்கின்றனர். இப்படி எல்லா உறவுகளிடேயும் ஏதொ ஒரு எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது
       சிலர் பணம், புகழ், பதவியை எதிர்பார்ப்பார்கள், இன்னும் ஒரு சிலர் கவனம், முக்கியத்துவம், அன்பு என்று  காஸ்ட்லியானதாக எதிர்பார்ப்பார்கள்.
       இதில் அன்பு, காதல், பாசம், எல்லாமே திருவோடு ஏந்துகிற கதைதான். இதில் நாம் ஒவ்வொருவரும் மகாராஜாக்கள், மகாராணிகள் என்ற உண்மை தெரியாமல் விட்டு விட்டு அடுத்தவரிடம் கையேந்தி ஓடுகிறோம்.
       நீங்கள் உலகையே நேசிக்கத்தேவையில்லை, வீட்டில் உள்ளவர்களையும், பக்கத்து வீட்டுக் காரர்களையும் நேசித்தாலே போதும்.
       நான் அன்பு நிறைந்தவன், பாசமிகுந்தவன் என்று சொல்லிக் கொண்டு இருக்காமல், உங்களின் திருப்திக்காக, அடுத்தவருக்கு உண்மையில் ஏதாவது செய்து பாருங்கள்.
       அதற்காக யார் மீதும் உங்கள் கவனத்தை திருப்ப வேண்டாம், யார் கவனத்தையும் கவர வேண்டாம். உங்கள் உணர்வில் மையம் கொண்டு, ஏற்கனவே அதில் நிறைந்துள்ள அன்போடு வாழுங்கள். அப்பொழுது எதையும் கேட்டுப் பெற வேண்டியதில்லை என்பதை உணர்வீர்கள்.
       கொட்டிக் கொட்டிக் கொடுக்க பிறந்த கோடீஸ்வரர்கள் நீங்கள், அவ்வளவு சக்தி அன்பெனும் தேவதையாக உங்க‌ளுக்குள்ளே உறங்கிக் கொண்டு இருக்கிறது.
       கேட்பதை நிறுத்தி கொடுக்க ஆரம்பித்தால், நீங்கள் அன்பை வீசும் தென்றல் காற்றாய் மாறுவீர்கள். ஆனந்ததை வெளிப்படுத்திக் கொண்டேயிருப்பீர்கள். நீங்கள் ஆனந்தமாய் இருப்பதோடு, மற்றவர்களையும் ஆனந்தமாய் வைத்திருக்கும் பண்பாளராய் இருப்பீர்கள்.

வாழ்க வளமுடன்!

No comments:

Post a Comment