எது நல்லது? எது கெட்டது?
உண்மையில் இதை உங்கள் உள்ளுணர்வுதான் முடிவு செய்யவேண்டும்.
ஆனால் இன்றைக்கு யார் முடிவுசெய்கிறார்கள்?
உங்கள் மீது...சமூகத்தாலும், குடும்பத்தாலும் சுற்றியுள்ளவர்களாலும் நிறைய எதிர்பார்ப்புகள் வைக்கப்படுகிறது. அவற்றை நிறைவேற்றினால் நீங்கள் நல்லவராகவும், நிறைவேற்றாவிடில் கெட்டவராகவும் கருதப்படுகிறீர்கள்.
சூதாடுவது கெட்ட பழக்கம் என்று சிறு வயதிலிருந்தே கற்பிக்கப்பட்டிருந்தால், வீட்டில் அதைப் பற்றிப் பேசுவது கூடக் குற்றமாகத் தோன்றும். அதே சமயம் நீங்கள் சூதாட்டக் கிளப்பில் போய் உட்கார்ந்து கொண்டால், அந்தக் குற்றஉணர்வு மாயமாய் மறைந்துவிடும்.அங்கே சூதாடாமல் இருந்தால் தான் பலவீனமானவர்களாக கருதப்படுவீர்கள்.
சில கொள்ளைக்கார சமூகங்களில் சிறு வயதிலிருந்தே திருடுவதற்கும், கொள்ளையடிப்பதற்கும் சொல்லித்தரப்படுகிறது.
அந்தக் கலையில் மேன்மை பெற, அதற்கென்று இருக்கும் கடவுள்களை வேண்டிக்கொள்ளும் பழக்கம் கூட அங்கே இருக்கிறது.
அங்கு பிறந்து வளர்ந்தவராயிருந்தால், திருட்டுத் தொழிலில் மேன்மையானவராக இருந்தால் தான் நீங்கள் வல்லவர், நல்லவர்....
வளர்க்கப்பட்ட விதத்தில், மறுபடி மறுபடி சொல்லிக் கொடுக்கப்பட்டதை வைத்து தான் நல்லது, கெட்டது என்று பிரித்துக்கொண்டீர்கள்.
சமூகத்தில் உங்களை நல்லவராக காட்டிக்கொள்ள, இயல்பை மறைத்து வாழத்துவங்கினால் தான் பிரச்சனை!
இப்படித்தான் நல்லது செய்பவனே சொர்கத்துக்குப் போவான் என்று மற்றவர்கள் சொல்லி சொல்லி மிகக் கவனமாக வாழ்ந்தார் சங்கரன்பிள்ளை. ஒரு நாள் அவர் வாழ்க்கை முடிந்து போனது.
அடுத்த காட்சி சொர்கத்தின் வாசலில் அறங்கேறியது. அவரைக் காக்க வைத்துவிட்டு அங்கிருந்த தேவதைகள் கூடி கூடி பேசினர். பின்பு அவரிடம் வந்தனர்.
"ஒரே ஒரு கெட்டது செய்திருந்தால் முதல் மாடி. இரண்டு கெட்டகாரியங்கள் செய்திருந்தால் இரண்டாவது மாடி என்று சொர்கத்தில் வெவ்வேறு மாடிகள் இருக்கின்றன. ஒரு பாவமும் செய்யாமல் உங்களைப் போல் இதுவரை யாரும் இங்கே வந்தது இல்லை. உங்களை எங்கே அனுப்புவது என்று ஒரே குழப்பமாக இருக்கிறது!" என்றனர்.
சங்கரன்பிள்ளை அதிர்ந்தார்."என்னது… நல்லவனாயிருந்ததால் பூமியில் தான் என்னை யாரும் சேர்த்துக் கொள்ளவில்லை. இங்கேயுமா?"
"ஆமாம் மிஸ்டர் பிள்ளை! அடுத்த மூன்று மணி நேரத்திற்க்கு உங்கள் உயிரைத் திரும்பத் தருகிறோம், சீக்கிரம் போய் ஏதாவது தப்பை செய்து விட்டு வாருங்கள்."
பூமியில் சங்கரன்பிள்ளையின் உடல் எழுந்தது. அவசரத்துக்கு என்ன பாவம் செய்வது? என்று யோசித்தார்.
பக்கத்துத் தெருவில் இருக்கும் முதிர்கன்னி எப்போதும் அவரைப் பார்த்தால் கண்ணால் அழைப்பாள்.
மனைவி இருக்கும் போது அடுத்த பெண்னைப் பார்ப்பதே பாவம் என்று அவளைத் தவிர்த்து வந்தார்.
இப்போது அங்கே விரைந்தார்.
"உன்னோடு சந்தோசமாக இருக்கவே வந்தேன்" என்றார். அவளும் ஆச்சர்யமாகி விருப்பத்தோடு இணங்கினாள்.
எல்லாம் முடிந்து புறப்பட்ட போது,"அப்பாடா! ஒரு கெட்ட காரியம் செய்துவிட்டேன். சொர்க்கத்தில் ஈடம் உண்டு" என்று சங்கரன்பிள்ளை நிம்மதியானார்.
அவளோ, அவரது கரங்களைப் பற்றிக் கொண்டு நன்றியுடன் சொன்னாள்..." இன்பத்தையே அனுபவிதிராத ஒரு பெண்ணுக்கு நீங்கள் எப்பேர்பட்ட நல்லகாரியம் செய்திருக்கிறீர்கள் தெரியுமா?"
சொர்க்கத்தின் கதவுகள் அறைந்து மூடப்படும் சத்தம் இங்கேயே சங்கரன்பிள்ளையின் காதுகளில் விழுந்தது.
நல்லவர்களாக் தங்களை நினைத்துக்கொள்பவர்கள் இப்படித்தான் இங்கேயும் வாழாமல், அங்கேயும் இடமில்லாமல் அல்லாடுகிறார்கள்.
உலகில் பெரும்பாலான துன்பங்கள் தங்களை நல்லவர்கள் என்று நினைத்துக் கொள்பவர்களால்தான் நிகழ்கின்றன.
உண்மையில் நல்லது, கெட்டது என்பது செயலில் இல்லை. எண்ணத்தில் இருக்கிறது.
இதைப் பற்றி ராமகிருஷ்ண பரமஹம்சர் வழக்கமாக சொல்லும் ஒரு கதை......
வாரக்கடைசியில் விலைமகளைத் தேடிப்போகும் இரு நபர்கள் இருந்தார்கள்.
ஒருமுறை பகவத் கீதை சொற்ப்பொழிவு அங்கே வாரக் கடைசியில் நடந்தது. ஒருவன் அதற்குப் போவது என்று முடிவு செய்தான். அடுத்தவனோ வழக்கம் பொல் விலைமகளைத் தேடிப் போனான்.
சொற்பொழிவில் இருந்தவனுக்கோ மனதில் "முட்டாள்த் தனமாக இங்கே வந்து சிக்கிக் கொண்டுவிட்டோமே, அங்கே நமது நண்பன் ஜாலியாக இருப்பானே" என்று எண்ணிக்கொண்டிருந்தான்.
விலைமகளிடம் போனவனோ, " அடடா, வாழ்க்கையில் வளர்ச்சிக்கு முக்கியமான தேவை பகவத்கீதையல்லவா! நண்பனுக்கு இருந்த தெளிவு நமக்கில்லையே?" என்று வருந்தினான்.
இதில் யார் நல்லவன்... யார் கெட்டவன்?
கீதையைக் கேட்டாலே புண்ணியம் என்று தன்னை ஏமாற்றிக்கொண்டு, விலைமகளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தவனை விட, விலைமகளுடன் இருந்தாலும் கீதையை நினைத்தவன் மேலல்லவா?
வஞ்சமோ, வேதனையோ இன்றி, அன்போடு செய்யும் எந்தக் காரியமும், ஆனந்தத்தை (உங்களுக்கும், பிறருக்கும்) வழங்கும் எந்தக் காரியமும் நல்லகாரியம் தான்.
ஒரு மானை புலி வேட்டையாடுவது அதன் மீதுள்ள வஞ்சத்தால் அல்ல... பசியால்! சக மனிதனை மனதாலும் உடலாலும் வருந்தச் செய்யும் பாவமல்லவா முற்றிலும் கொடியது?
மற்றவர்கள் கண்களீல் நல்லவராகத் தெரிய வேண்டும் என்று முயற்சிப்பதை விட்டுவிட்டு, உண்மையானவராக, அன்பானவராக, ஆனந்தமானவராக, தூய்மையானவராக் வாழப்பழகுங்கள்...
வாழ்க வளமுடன்!
No comments:
Post a Comment