Monday, December 13, 2010

தன்ன‌ம்பிக்கையே ஆனந்தம்:

       ஒரு போலிச்சாமியார் இருந்தார். அவரிடம், ஒரு உண்மையான தேடலுள்ள சீடன் ஒருவன் வந்தான். "சுவாமி எனக்கு மந்திர உபதேசம் செய்யுங்கள்" என்று கேட்டான். "என் பெயர்தான் மந்திரம் அதனை உளமார உச்சரித்தாலே நன்மைகள் நடைபெறும்" என்றார் சாமியார்.
       கொஞ்சநாள் கழித்து நதிக்கரை பக்கமாகப் போனார் சாமியார். அங்கே ஒரே கூட்டம், ஒருவர் வந்து "சுவாமி உங்கள் சீடன் தண்ணீர் மீது நடக்கிறான்", என்றார். ஓடிப்போய் பார்த்தார் சாமியார்.
       சமீபத்தில் வந்த அதே சீடன் தான்! இவருக்கு ஆச்சரியம் தாங்க வில்லை. அவன் கரைக்கு வந்ததும் தனியாக அழைத்துப் போய், "அதன் ரகசியம் என்ன? எனக்குக் கற்றுத்தரக் கூடாதா?" என்றார் சாமியார்.
       சீடன் சொன்னான், "உங்கள் பெயரை உச்சரித்துக் கொண்டே நடந்தேன் சுவாமி! வேறேதும் ரகசியமில்லை" என்றான். அதற்குள் கூடியிருந்தவர்கள், "சீடனுக்கே இவ்வளவு சக்தி என்றால், உங்களுக்கு எவ்வளவு சக்தியிருக்கும்! நீங்களும் நதியில் நடந்து செல்லுங்கள் சுவாமி" என்று வற்புறுத்தி இழுத்துச் சென்றார்கள். தண்ணீரில் நடக்க முயன்று "தொப்" என்று விழுந்தார் சாமியார்.
       சீடனை அழைத்துச் சொன்னார், "ஐயா! நான் ஒரு போலி! இத்தனை காலம் உண்ணை இந்த ஊரை ஏமாற்றியிருந்தேன். நீ தண்ணீரில் நடக்கக் காரணம் நானல்ல! உன் நம்பிக்கை" என்றார்.
    
       ஒவ்வொரு மனிதனும் தன்னை முழுமையாக நம்பினால் புத்தனாய் மலர முடியும். மற்றவர்களை நம்புவது என்பது பழக்கத்தின் காரணமாகத்தான். உனக்கு உதவி நீதான்.
       ஒவ்வொரு சின்ன விஷயத்திலிருந்து, பெரிய சாதனைகள் வரையிலான அனைத்திற்குமே ஆனந்தமாய், அமைதியாய், தன்நம்பிக்கையுடன் இருந்தால் உங்கள் உள்சக்தியே உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும்.
       வெற்றி பெற விரும்புகிறவர்கள், முதலில் தன்னை முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டும் என்பது காலங்காலமாய் வலியுறுத்தப்படும் கருத்து.
       "தன்னுடன் பொருந்திவாழ முடியாதவனால் பிறருடன் பொருந்தி வாழ முடியாது. தன்னை நேசிக்காதவனால் பிறரை நேசிக்க முடியாது. அத்தகைய மனிதர்கள் பிறரை ஏமாற்றுவதும் பிறரிடம் ஏமாறுவதும் தொடர்ந்து நடைபெறும். இன்று ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்கிறவை எல்லாம் முகமூடிகளே தவிர முகங்களல்ல. தன்னை முகமூடிகளுக்குப் பின்னால் ஒளித்துக் கொள்கிற மனிதர்கள் தங்களையே தொலைத்து விடுவார்கள்"
       "வாழ்க்கை ஒரு கொண்டாட்டம்" என்ப‌தன் உட்பொருள், மனிதன் சோகங்களுக்குள்ளும், குற்ற உணர்வுகளுக்குள்ளும் அழுந்திவிடாமல், தன்னை உணர்ந்து, தன் இயல்பான தன்மையான ஆனந்தத்தோடு வாழ‌ வேண்டும் என்பதற்காகத்தான். ஆனந்தமாக வாழுங்கள்..........

No comments:

Post a Comment