நிறைய தூரம் பயணம் செய்தால் மனமுதிர்ச்சி வரும் என்று சொல்கிறான் என் நண்பன், ஆண்மிகப் புத்தகங்கள் படித்தால் பக்குவம் வரும் என்கிறார் இன்னொருவர், வாழ்க்கையில் கஷ்டமான சூழ்நிலைகள் வந்தால் தான் ஒருவனைப் பக்குவப்படுத்தும் என்பது என் கருத்து. நீங்கள்?
உண்மையில் உலகில், துன்பங்கள் என்று எதுவும் கிடையாது. வாழ்க்கை என்பது அடுத்தடுத்து வரும் வெவ்வேறு சூழ்நிலைகள் தான். அந்த சூழ்நிலைகளை கஷ்டமாக்கிக் கொள்வதோ, சந்தோசமாக்கிக் கொள்வதோ, அதை நீங்கள் எப்படிக் கையாள்கிறீர்கள் என்பதைப் பொறுத்து தான். வாழ்க்கை கஷ்டமாக தோன்றுகிறதா? நீங்கள் பக்குவம் அடையவில்லை என்று அர்த்தம்.
பயணங்கள் பிடிக்குமா? பயணம் செய்யுங்கள். படிக்கப் பிடிக்குமா? புத்தகம் படியுங்கள். ஆனால் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்...
பார்ப்பது, கேட்பது, படிப்பது என இவற்றால் உங்களுக்கு வந்து சேர்வது எதுவுமே முழுமையானது அல்ல. இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம் என்று துணுக்கு துணுக்காக கிடைத்த கிழிசல் துண்டுகள் உங்களுக்கு முழுமையான தெளிவைத் தரமுடியாது.
பயணங்களில் கற்றதும், புத்தகங்களால் அறிந்ததும் உங்கள் பிழைப்பை வலியில்லாமல் நடத்திப் போக உதவலாம். சூழ்நிலைகளை சமாளிக்க பயன்படலாம். ஆனால் அவற்றால் வாழ்க்கையின் மேன்மையான நிலைகளுக்கு உங்களை உயர்த்திச் செல்ல முடியாது.
பக்குவமடைவதற்க்கு வேறு சுலபமான வழி இங்கே இருக்கிறது. கண்களை மூடிக்கொண்டு, எதுவுமே செய்யாமல், எதுவுமே பேசாமல், உஙளால் நீண்ட நேரம் உட்கார முடிந்தால், உட்கார்ந்தால் வெகுசீக்கிரமே பக்குவமடையாலாம்.
ஒருநாள் ஈசாப் சிறு குழந்தைகளுடன் சரி சமமாக விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவருடைய நண்பர் கேட்டார்... " சாதிக்க வேண்டிய நேரத்தில் குழந்தைகளுடன் விளையாடி பொழுதைக் கழிக்கிறாயே"
ஈசாப் விளையாடிக் கொண்டிருந்தை வில்லை அதன் நாணிலிருந்து விடுவித்தார் "இது தான் என் நோக்கம்" என்றார். நண்பர் குழப்பத்துடன் பார்த்தார்.
"எப்போதும் நாணேற்றி , இழுத்துக் கட்டியே வைத்திருந்தால், சிறிது காலம் கழித்து வில்லின் திறம் குறையும். அவ்வப்போது அதை தளர்த்தி வைத்திருந்து விட்டு, பின் முறுக்கேற்றி இழுத்துக் கட்டினால், அதன் வலிமை குறையாது, ஆயுள் கூடும். மனிதனும் அப்படித்தான்!"
ஈசாப் சொன்னது போல மாதம் ஒரு நாளாவது நீங்கள் முற்றிலும், முழுமையாக எல்லாவற்றிலிருந்தும் விடுபட வேண்டும். அலுவலகம் கிடையாது, வீட்டுக்கவலை கிடையாது, தொலைக்காட்சி, புத்தகம், ரேடியோ எதுவும் இல்லாமல், ஒரு நாள் முழுமையாக ஒன்றும் செய்யாமல் உட்கார்ந்து பாருங்கள்.
உங்கள் மனதில் சதா ஊற்றெடுத்துக் கொண்டிருப்பவை எத்தனை அர்தமற்றக் கருத்துக்கள் என்று புரியும். அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை நிறுத்துங்கள். உங்கள் மூளைக்குள் நடக்கும் ஆரவாரமான போராட்டத்தை பொருட்படுத்தாதீர்கள். உங்கள் சரித்திரத்தை மறந்து ஒருகணம் ஒரே கணம் ஒன்றுமில்லாது இருந்து பாருங்கள். வாழ்க்கைத் தெளிவாகத் தெரியும். அதுவரை நீங்கள் எப்படி வாழ்ந்திருந்தாலும், புத்திசாலித்தனமாக வாழ முடியும் என்று தெரிந்து கொள்வீர்கள்.
ஒவ்வொரு நிகழ்வுக்கும் நீங்களாக ஏதும் அர்த்தம் கற்பிக்காதீர்கள். நல்லவன், கெட்டவன் என்று யாரைப் பற்றியும் தீர்ப்பெழுதி வாழ்க்கையை கொச்சைப்படுத்தாதீர்கள். ஆயிரம் கருத்துக்கள் சொல்லத் தெரிந்து விட்டதாலேயே ஞானம் பெற்று விட்டதாக தப்புக் கணக்கு போடாதீர்கள், வாழ்க்கையை வாழ்க்கையாக அனுபவித்து வாழ்ந்து பாருங்கள். சீக்கிரம் பக்குவமடைவீர்கள்
சங்கரன்பிள்ளையின் பக்கத்து வீட்டுக்காரருக்கு குதிரைப் பந்தயத்தில் பத்து லட்சம் கிடைத்தது. அந்தப் பணத்தை யாருக்கும் தெரியாமல் தன் வீட்டுத் தோட்டத்தில் புதைத்து வைத்தார்.
மறுநாள் பணத்தைக் காணவில்லை, காலடித்தடங்களை வைத்து பணத்தைப் பின் வீட்டிலிருந்தவன் எடுத்திருக்கிறான் என்பதை அவர் புரிந்து கொண்டார்.
அங்கே இருந்தவனோ ஆப்பிரிக்கன். அவன் பேசிய மொழி அவருக்கு புரியவில்லை. கோபத்தில் துப்பாக்கியை எடுத்துவிட்டார். இதைக் கவனித்துவிட்டு சங்கரன்பிள்ளை ஓடி வந்தார்.
"அவசரப்படாதீர்கள் நான் விசாரிக்கிறேன்" என்றார்.
துப்பாக்கியால் மிரட்டப்பட்டதுமே ஆப்பிரிக்கன் பயந்து, பணத்தை தன் வீட்டுத் தோட்டத்தில் பூமிக்கடியில் புதைத்து வைத்தருப்பதாகக் சங்கரன்பிள்ளையிடம் கூறினான். 'பூமிக்கடியில்' என்பதை சைகையிலும் காண்பித்தான்.
பக்கத்துவீட்டுக்காரர் புரியாமல், சங்கரன்பிள்ளையை நோக்கி, "என்ன... தன்னை உயிரோடு புதைத்தாலும், பணத்தைத் திருப்பித்தர முடியாது என்கிறானா?" என்று கேட்டார், சங்கரன்பிள்ளையும் 'ஆமாம்' என்றார் நிதானமாக.
அந்த பக்கத்துவீட்டுக்காராரைப் போல தான் நீங்களும் வாழ்க்கைக்கு ஏதெதோ அர்த்தம் கற்பித்துக் கொள்கிறீர்கள்
நீங்கள் நினைப்பது தான் சரி, உங்கள் எண்ணம் தான் முக்கியம் என்ற இரண்டும் தான் உங்களை விலங்கிட்டு வைத்திருக்கின்றன. அவற்றைக் களையுங்கள். எதுவுமே முக்கியமில்லை என்னும்போது, எது உங்களை கட்டிப் போட முடியும்!
உங்கள் பழுதான கண்ணாடி வழியே பார்க்காமல், தெளிவாகப் பார்க்கத் தயாராக இருந்தால்தான், வாழ்க்கைப் பயணம் எந்தக் காயமும் இல்லாமல் நிகழும். உங்கள் மனதின் படபடப்புகளை நிறுத்தினால் தான், எதனுடனும் சிக்கிக் கொள்ளாமல், வாழ்க்கையின் உண்மையான பக்குவம் கிடைக்கும். அப்பொது தான் நீங்கள் என்றென்றும் ஆனந்தாமாக வாழலாம்.
No comments:
Post a Comment