Saturday, December 18, 2010

கரை அருகிலேயே கப்பல் ஓட்டாதீர்கள்‍ - ஆனந்தம்:

       நீங்கள் ஆசைப்பட்ட எத்தனையோ விஷயங்களை, கிடைக்குமோ கிடைக்காதோ என்ற அச்சத்தால் கைநழுவவிட்டிருப்பீர்கள்.
       புதிய முயற்ச்சிகளில் பங்கு கொள்ள துணிச்சலின்றி, வாய்ப்புகளை இழந்து தவிக்கிறர்கள்.
       இசை, ஓவியம் போன்ற இனிமையான களைகளைச் சொல்லித்தரும் கல்லூரிகளை வலைவீசித் தேடவேண்டியிருக்கிறது.
       ஆனால் தெருவுக்குத் தெரு ஒரு பொறியியல் கல்லூரி என்ற நிலை விரைவிலேயே வந்துவிடும் போலிருக்கிறது.
       வருடத்திற்கு வருடம் லட்சக்கணக்கில் வெளியே அனுப்பப்படும் இஞ்சினியர்களுக்கு வேலை கிடைக்கிறதோ இல்லையோ, அந்தப் படிப்பை பெற்றோர் தங்கள் மகனுக்கும், மகளுக்கும் கொடுத்துவிட வேண்டும் என்று பெற்றோர் தவிக்கிறார்கள்.
       ஏன் இப்படி?
       ஒரு காலகட்டத்தில் அந்தப் படிப்பு முடிந்ததும் வேலை கிடைத்துக் கொண்டிருந்தது. உடனே அது தான் பத்திரமான பந்தயம் என்று தங்கள் பிள்ளைகளை பகடைக்காய்களாக பெற்றோர் உருட்ட ஆரம்பித்துவிடார்கள்.
       அவர்களை பொறுத்தவரை, மனித உடல் கிடைத்துவிட்டாலும், மனதளவில் பரிணாம வளர்ச்சி செம்மறி ஆட்டின் தன்மையோடு ந்ன்றுவிட்டது போலத்தான்!
       ஆயிரம் பேர் செய்வதைத் தான் செய்வார்கள். சுயமாக எந்த முடிவும் எடுக்கவும் துணியமாட்டார்கள்.
       ராத்திரி பகலாக இதையே சொல்லி சொல்லி த்ங்கள் பிள்ளைகளின் மன‌தையும் மந்தமாக்கி வைத்திருப்பார்கள்.
நான் பொறியியல் துறையை மட்டும் சொல்லவில்லை, எந்தத் துறையாக இருந்தாலும் அதை நீங்கள் ஆசைப்பட்டு தேர்ந்தெடுத்திருந்தால், வரவேற்கலாம். பிழைப்புக்காக தேர்ந்தெடுத்திருந்தால் உங்கள் வாழ்கையை அல்லவா வீணடித்து விடுவீர்கள்?
       இது தனக்குத் தேவையா? உலகத்துக்குத் தேவையா? என்றெல்லாம் மனதளவில் யோசிக்காமல், எல்லோரும் குதிக்கும் மலை முகட்டிலிருந்து குதிப்பதற்க்காகவா இத்தனை படிகளில் ஏறிவந்தீர்கள்?
       அதற்கு ஒரு கதை....
       யாரோ ஒரு ஜோசியர் அரசனுக்கு கண்டம் என்று சொல்லிவிட்டார்.
       உடனே அரசன், எந்த பீரங்கியாலும் துளைக்கமுடியாத கோட்டைச் சுவர்களை நான்கு அடி தடிமனுக்கு கட்டிக் கொண்டான். கோட்டையைச்சுற்றி அகழியை ஆழமாக்கினான்.
ஒன்றிரண்டு ஜன்னல்களைத்தவிர மற்ற திறப்புகளையெல்லாம் அடைத்துவிட்டான்.
       மிகவும் நம்பிக்கைக்குறிய சிப்பாய்களை நூறு பேரை தன் கதவருகிலேயே நிறுத்திக் கொண்டான். அந்தக் கதவைத்தாண்டி அரசன் வெளியே போகவே இல்லை.
       ஒருமுறை தற்செயலாக அரசன் ஜன்னல் வழியே வெளியே பார்த்த போது அங்கிருந்த பிச்சைக்காரன் அரசனைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தான். அரசன் கடும் கோபம் கொண்டு, அவனை இழுத்து வரச்சொன்னான்.
       கோட்டையின் அத்தனை காவல்களையும் தாண்டி பிச்சைக்காரன் உள்ளே கொண்டுவரப்பட்டான். அப்போதும் அவன் சிரிப்பு அடங்கவேஇல்லை....
       "எதற்காக சிரிக்கிறாய், சொல் இல்லாவிட்டால் உன்தலை துண்டிக்கப்படும்" என்றான் அரசன்.
       "ஒன்றிரண்டு ஜன்னல்களை மட்டும் ஏன் திறந்து வைத்திருக்கிறாய்... அதையும் அடைத்து விடுவது தானே? கதவையும் பூட்டிக் கொண்டுவிட்டால் எந்த ஆபத்தும் உள்ளே வரமுடியாதே?" என்று பிச்சைக்காரன் தொடர்ந்து சிரிக்கத் தொடங்கினான்.....
       "முட்டாளே எல்லவற்றையும் அடைத்துவிட்டால் நான் மூச்சு முட்டி உள்ளேயே செத்துவிடுவேன்" என்றான் அரசன்.
       "இப்போது மட்டுமென்ன! நீ கல்லறையில் தானே வாழ்ந்து கொண்டு இருக்கிறாய். என்ன வித்தியாசம், இந்தக் கல்லறைக்கு கதவு இருக்கிறது, காவலுக்கு ஆள் இருக்கிறது, அவ்வளவு தான்..." என்று சிரித்தான் பிச்சைக்காரன்.
       உங்களுக்கும் அதுதான்! புதிதாக எதையும் முயற்ச்சித்துப் பார்க்கும் தைரியம் இல்லையென்றால், நமது வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்?
       எந்த ஆபத்தும் இல்லாத ஒரு இடம் வேண்டும் என்றால் பேசாமல் கல்லறைக்கு செல்ல வேண்டியாதுதான்.
பாதுகாப்பான வாழ்க்கை என்று நம்மைச் சுற்றி சுவர்கள் எழுப்பிக்கொண்டால், நம்மால் உயிர்ப்போடு, ஆனந்த்தோடு வாழமுடியாது. அப்படி உயிரைப் பறிகொடுத்துவிட்டு உடல் மட்டும் எதற்காக அறுபது, எழுபது வருடங்கள் வரை அல்லாடிக் கொண்டு இருக்கவேண்டும்?
      கரையை விட்டு விலகத் தைரியமில்லாமல் கரையோரமாகவே கப்பலைச் செலுத்திக்கொண்டிருந்தால், எந்த ஊருக்கும் போய்ச் சேரமுடியாது. கப்பல் த‌ரை தட்டித் தான் போகும்.
       நீங்கள் எதிர்பார்த்தபடி அமையாமல் பக்கத்துக்கு பக்கம் திகைக்க வைக்கும் திடுக்கிடும் திருப்பங்கள் வந்தால் தானே ஒரு சஸ்பென்ஸ் கதையை மிகப்பிரமாதம் என்று பாரட்டுவீர்கள்.
       ஆனால் வாழ்க்கையை மட்டும் திருப்பங்கள் இல்லாமல் சலிப்புடன் அமைத்துக் கொள்ள விரும்புகிறீர்களே ஏன்?
இளைஞனாக இருப்பதற்குறிய தகுதி வலுவான உடல் மட்டுமல்ல! உறுதியான மனமும் கூட!
       எதிர்பாரதையும் துணிச்சலோடு எதிர்கொள்ளுங்கள். ஆனந்தம் மட்டுமே கிடைக்கும். ஆனந்தத்தை மட்டுமே அடைவீர்கள்.......

வாழ்க வளமுடன்!

1 comment:

venkat said...

//எதிர்பாரதையும் துணிச்சலோடு எதிர்கொள்ளுங்கள். ஆனந்தம் மட்டுமே கிடைக்கும். ஆனந்தத்தை மட்டுமே அடைவீர்கள்.......\\

பாராட்டுகள் .

Post a Comment