Saturday, December 11, 2010

ஆனந்தமே உந்து சக்தி:

       இந்த சமூகத்தில் நீங்கள் எப்படி வளர்ந்தீர்கள்?
       பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள், உறவினர்கள் எல்லோரும் உங்களுக்கு நல்லது செய்வதாக நினைத்து என்ன செய்தார்கள்?
சுற்றியுள்ளவர்கள் யாருடனாவது ஒப்பிட்டு உங்களை குறைத்து மதிப்பிட்டே வந்திருக்கிறார்கள் ஏன்?
       இன்னொருத்தரை விட தாழ்வாக உண்ர்ந்தால் தான், உங்களுக்குள் ஒரு உந்து சக்தி பிறக்கும் என்றும், அது உங்களை வெற்றியை நோக்கி விரட்டி அழைத்துச் செல்லும் என்று கருதினார்கள், அதனால் தான்...
       உங்களை சிறப்பாக பரிமளிக்க வேறு வழிமுறைகளை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
       ஒரு கட்டத்தில் அவர்கள் அதை நிறுத்தி விடுகிறார்கள், ஆனால் அவ்வாறு உங்களால், உங்களை அடுத்தவரோடு ஒப்பிடும் பழக்கத்தை நிறுத்திக் கொள்ள முடியவில்லை, சிக்கிக்கொண்டுவிட்டீர்கள்.
       ஒரு தடவை சங்கரன்பிள்ளை, தன் மனைவியோடு பெரிதாக சண்டை போட்டுவிட்டு, வீட்டை விட்டு கோபித்துக்கொண்டு வெளியேறினார். மூன்று நாட்களுக்கு இங்கும் அங்கும் அலைந்தார். நான்காவது நாள் காலையில் ஒரு உணவு விடுதிக்குள் நுழைந்தார்.
       சப்ளையரை அழைத்தார்.
       "கல்லு போன்ற சூடில்லாத இட்லி, வாயில் வைக்க முடியாத சாம்பார், தண்ணீர்ப் பாலில் பழைய டிக்காஷன் போட்டு ஆறிப்போன காப்பி" என்று ஆர்டர் கொடுத்தார்.
       சப்ளையர் திகைத்தார், "என்ன கேவலமான ஆர்டர் இது?"
       "நண்பரே, நான் பசியால் வரவில்லை. என் வீட்டு ஞாபகம் வந்து விட்டது" என்றார்.
       இப்படித்தான் பழைய பழக்கத்தை சுலபத்தில் விடமுடியாமல் நீங்களும் அவதிப்படுகிறீர்கள்.
       மற்றவரை உயர்வாக நினைத்து அவரையே இலக்காக தீர்மானித்துக் கொள்கிறீர்கள். உங்களுக்கு சவால் விட்டுக்கொள்கிறீர்கள். இல்லாத சிறகுகளை கட்டிக்கொண்டு படபடக்கிறீர்கள். அவரை விட உயர்ந்த இடத்தை போராடி அடைவீர்கள். அதற்குள் இன்னொருத்தர் முன்னே போய் பெப்பே காட்டுவார். உடனே அடுத்த சாட்டையை சுழட்டுவீர்கள். இது எப்படி இருக்கு தெரியுமா?
       ஒரு எலாஸ்டிக் பட்டையை இருபுறமும் இழுத்துப்பிடித்தால் டென்சன் தாங்காமல் இரு முனையும் ஒன்றை ஒன்று அடையத் துடிக்கும். விட்டதும் ஒன்றை ஒன்று மோதும். அப்புறம்?
    செயலற்றுக்கிடக்கும். மறுபடியும் தூண்டினால் தான் அதில் துடிப்பான இயக்கத்தைக் காண முடியும்.
       இப்படி வெளிசக்தியால் உந்தப்பட்டு இலக்கில் போய் விழுந்தால், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழிப்பீர்கள். அடுத்த இலக்கை காட்டினால் தான் நீங்கள் இயக்கத்துக்கு வருவீர்கள்.
       இப்படி வாழ்க்கை பூராவும் ஏன் உங்களை யாரோ செலுத்த வேண்டும்?
       உங்களுக்கு மலை ஏற வேண்டும் என்று ஆசையிருந்தால், அதற்கான திறமையை வளர்த்துக் கொண்டு, கால்களைப் பலப்படுத்தி கொண்டு, மலை ஏறி, அதன் உச்சியை அடைய வேண்டும். அதை விடுத்து இன்னொருத்தரைக் காட்டி சும்மா மனதை விரட்டிக்கொண்டிருந்தால் போதுமா? அதுவே மலை உச்சிக்கு கொண்டுபோய் விடுமா?
       உங்களால் எப்போது சிறப்பாக செயலாற்ற முடியும்? மற்றவருடன் ஒப்பிட்டுப் பார்த்து ஓடிக்கொண்டு இருக்கும் போதா? விழிப்புணர்வுடன் அமர்ந்து அமைதியாக திட்டமிட்டு செயலாற்றும் போதா?
       அமைதியாக விழிப்புணர்வுடன் திட்டமிட்டு செயலாற்றுவது என்பது உங்களுக்கான வேகத்தடையில்லை. அது உங்களை விரும்பிய திசையில் சுதந்திர‌மாக செயல்பட அனுமதிக்கும் உள்சக்தி.
       அந்த சக்தி உங்களை வளர்ச்சிப் பாதை நோக்கி அழைத்துச் செல்லும். அந்த நீங்கள் விரும்பிய செயலை செய்ய, அந்த உள்சக்தி மட்டுமே உங்களை செலுத்தும் சக்தியாக இருக்கட்டும். 
    அப்படி செயல்படும் போது, இன்னொருவர் சென்று சேர்ந்த உச்சத்தை அடையமுடியாமல் போகலாம், ஆனால் உங்கள் திறமைக்கேற்ற உயரத்தை அடைந்திருப்பீர்கள். 
    அந்த திறமைக்கேற்ற உயரம் உங்க‌ளுக்கு திருப்தியையும், ஆனந்தத்தையும் வழங்கும். ஆனந்தாமாக இருப்பது தான் உங்கள் அடிப்படை இயல்பு என்பதை மறவாதீர்கள்..........

வாழ்க வளமுடன்!

No comments:

Post a Comment