Monday, December 20, 2010

நன்றியுணர்வு – ஆனந்தம்:

       பிறக்கும் போதே சித்தார்தர் புத்தராகப் பிறக்கவில்லை. ஒரு காலத்தில் அவரும் உங்களைப் போல் சாதாரண மனிதர் தான். சாதாரண சித்தார்த்தனால் புத்தனாக முடியும் போது உங்களால் முடியாதா?
       ஒரு சூஃபி ஞானி தினமும் ஒவ்வொரு தடவையும் இறைவனுக்கு நன்றி சொல்வதை வழக்கமாக வைத்திருந்தார். பிரார்த்தணை செய்யமாட்டார், இறைவனுக்கு நன்றி மட்டும் தான் சொல்வார். அவ்வளவுதான்.
       "இறைவா ஒரு நாள் முழுவதும் என்னை கவனத்தில் எடுத்துக் காத்துக் கொண்டாயே! நன்றி"
       இன்று கண் திற‌ந்தேன்! அற்புதமான நாள்! நன்றி"
       "இன்னும் சுவாசிக்கிறேன்! நன்றி"
       இப்படி ஒவ்வொரு விசயத்திற்கும் சூஃபி ஞானி நன்றி சொல்ல சொல்ல, சீடர்களும் நன்றி சொன்னார்கள். வழக்கம் போல சீடர்கள் அவர்களின் குருவோடு சேர்ந்து யாத்திரையை தொடர்ந்தார்கள்.
       இஸ்லாமியத்தின் ஒரு பகுதி தான் சூஃபித் தத்துவம் என்றாலும், அந்த காலத்தில் சூஃபி ஞானிகளுக்கு பெரிய மரியாதை கிடைக்காது. உணவு தரமாட்டார்கள்.
       ஒரு நாள் ஒரு ஊரில் சாப்பாடு கிடைக்கவே இல்லை. மறுநாள் அடுத்த ஊருக்கு சென்றார்கள். அந்த ஊரிலும் உணவு கிடைக்கவே இல்லை. மூன்றாவது நாளும் அதே நிலை நீடித்தது, உணவு கிடைக்கவேஇல்லை.
       ஆனால் அந்த ஞானி தங்களை பகல் முழுவதும் வழிந‌டத்தியதற்கும், நன்றாக பொழுது விடிந்ததற்கும் நன்றி சொல்லாமல் விடவில்லை.
       நான்காவது நாளும் அவர்களை ஒரு ஊரில் கூட தங்க விடாமல் விரட்டி அடித்துக் கொண்டிருக்கின்றனர். அன்று வேறு வழியில்லாமல் ஒரு சுடுகாட்டில் படுத்துக்கொண்டனர்.
       நான்கு நாள் பட்ட அவஸ்தைகளால் சீடர்கள் நொந்து போயினர். பசியின் கோரம் அவர்களைத் தூங்க விடவில்லை.
       ஐந்தாம் நாள் காலையும் சூஃபி ஞானி கடவுளுக்கு நன்றி சொல்ல ஆரம்பிதார். ஆனால் சீடர்களோ... நன்றி சொல்ல மறுத்தனர். மறுத்ததோடு நில்லாமல், தங்களுடைய வெறுப்பை உமிழ ஆரம்பித்தனர்.
       "மூன்று நாட்களாக உணவு இல்லை, நான்காம் நாள் தங்க இடமில்லை. இன்று என்ன ஆகுமோ தெரியவில்லை. ஏன் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்?" என்று கேட்டனர்.
       ஞானி சிரித்துக் கொண்டே சொன்னார்: " மூன்று நாள் இறைவன் உணவு வழங்காததற்காக இவ்வளவு கவலைப் படுகிறீர்களே, நமக்கு முப்பது வருடங்களாக இறைவன் உணவு வழங்கி வருகிறாரே!
       ஒரே ஒரு நாள் தங்க இடம் தரவில்லை ஆனால், முப்பது வருடமாக இந்த உலகத்தில் தங்கியிருக்கிறோம்.
முப்பது வருடம் நம்மைக்காத்தவருக்கு இந்த மூன்று நாட்கள் பற்றித் தெரியாதா என்ன?
       முப்பது வருடம் நம்மைக் காத்ததற்க்கு இன்றிலிருந்து நன்றி சொல்ல ஆரம்பித்தாலே. நம் நன்றிக்கடன் தீர முப்பது வருடமாகும். நடுவில் எங்கிருந்து வந்தது இவ்வளவு வெறுப்பும், கோபமும்?" எனக் கேட்டார்.
       வாழ்க்கையில் இயற்கை நமக்கு எல்லாமும் கொடுத்திருந்தாலும் அதிருப்தியே நம்மில் பலரிடம் காணப்படுகிறது.
       அதிருப்தி பிறந்ததற்கான காரணம் நன்றியுணர்வு என்ற பெரிய தியான முறையை மனிதன் மறந்து போனதுதான்.
       நம் வாழ்வில் சரியாக யோசித்துப் பார்த்தால் புரியும் இந்த வாழும் வாழ்க்கையே நமக்கு ஒரு பரிசு போலத்தான்.
       ரமண மக‌ரிஷி அற்புதமான ஒரு சுலோகம் சொல்வார்....
       "கிடைக்கும் முன் கடுகேயானாலும் மலையாக்கி காண்பித்து
       கிடைத்த பின் மலையேயானாலும் கடுகாக்கி காண்பிக்கும் -
       மடமனம்!"
       நம்முடைய மனதின் இயல்பே, எவ்வளவு கிடைத்தாலும், அதை அனுபவிக்காமல் அடுத்து, அடுத்து என்று பெரிய பெரிய விசய‌ங்களை நோக்கியே ஆசையை திசை திருப்பி விடும்.
திருப்தியோடு வாழ அதற்க்கான காரணங்களை கண்டுபிடித்து, அதனோடு ஒன்றி நன்றியுணர்வு கொண்டு வாழ ஆரம்பிதீர்கள் என்றால் ஆனந்தமே உஙள் வாழ்வில் பொங்கும். நன்றியுணர்வே ஆனந்தத்தை கொண்டுவரும் சக்தி....

வாழ்க வளமுடன்!

No comments:

Post a Comment