Friday, November 26, 2010

ஆனந்தமாக இருந்தால்:

தனக்காக வாழ்பவன் கெட்டவன், பிறருக்காக வாழ்பவனே நல்லவன் என்பது பெரியோர் கூற்று. கடவுள் இதைத்தான் எதிர்பார்க்கிறாரா?

ந‌ல்லது, கெட்டது என்பதெல்லாம் உங்கள் கண்ணோட்டம் தான். ஒன்றைக் குற்றம் என்றோ அல்லது ஒன்றைக் நல்லது என்று நினைக்கும் போதே, மனம் சிதைந்து விடுகிறது. கடவுளைக் கொண்டு வந்து இதில் சேர்க்காதீர்கள்.
கடவுள் நல்லவரா, கெட்டவரா என்றால், இரண்டும் இல்லை, அவர் ஆனந்தமானவர், அவ்வளவு தான்.
டாக்டரிடம் போகிறீர்கள், அவர் உங்கள் உடம்பை பரிசோதித்து முடிவுகள் சொல்வார் என்று காத்திருக்கும் போது, அவர் கண்களை மூடி கடவுளிடம் பிரார்த்திக்க தொடங்கினால், எப்படி உணருவீர்கள்? நீங்கள் செய்ய வேண்டியதை செய்யாமல், கடவுளைப் பற்றி கவலைப்படுவது அப்படித்தான் இருக்கிறது.
நல்லவனாயிருப்பதாகச் சொல்லிக் கொள்வதே கூட ஒருவித நோய் தான்!
வீட்டுக்கு தாமதமாகத் திரும்பிய சங்கரன்பிள்ளையிடம்' "ஏன் இவ்வளவு லேட்?" என்று கேட்டாள் மனைவி.
" அலுவல‌கத்தில் தாமதமாகிவிட்டது!"
"விசாரித்தேன், நீங்கள் அலுவல‌கத்திலிருந்து ஐந்து மணிக்கே புறப்பட்டுவிட்டதாக சொன்னார்கள்!"
மறுநாளும் அதே தாமதம். அதே கேள்வி. அதே பதில். அதே எச்சரிக்கை. மூன்றாவது நாள் அவர் மனைவி பொறுமையிழந்து, " நாளைக்கு பொய் சொன்னால், நாக்கில் சூடு வைப்பேன்" என்றாள்.
அதற்க‌டுத்த நாள் சங்கரன்பிள்ளை வீடு திரும்பியதும், " அடுப்பு எரிகிறதா?" என்று கேட்டார்.
"இல்லையே ஏன்?"
"அப்ப‌டியானால் இன்றைக்கும் அலுவ‌ல‌க‌த்தில் லேட்டாகி விட்ட‌து!" என்றார், ச‌ங்க‌ர‌ன்பிள்ளை.
இப்ப‌டித்தான் த‌ன‌க்கு ஆப‌த்து இல்லாத‌வ‌ரை தான் நல்ல‌வ‌ன், ந‌ல்ல‌வ‌னாக‌ ந‌ட‌ந்துகொள்வான்.
ந‌ல்ல‌வ‌ர்க‌ளுக்கு கெட்ட‌து எதுவும் தெரியாது என்று நினைக்கிறீர்க‌ளா? அவ‌ர்க‌ள் கெட்ட‌து என்று நினைப்ப‌வ‌ற்றை த‌விர்க்க‌ முய‌லுகிறார்க‌ள். அவ்வ‌ள‌வுதான்! ஒன்றைத் த‌விர்க்க‌ முய‌லும் போது அதைப் ப‌ற்றிய‌ க‌வ‌ன‌ம் தான் அதிக‌மாகும். ஒன்றின் மீது க‌வ‌ன‌ம் அதிக‌மாகும் போது அதிலிருந்து விடுப‌ட‌வில்லை என்று தானே அர்த்த‌ம். முற்றிலும் அவைக‌ளில் இருந்து விடுப‌ட‌ வேண்டும்....

"நான் தேடிப்போய் யாருக்கும் உதவமாட்டேன், அதே சமயம் மனதாலும் யாருக்கும் கெடுதல் செய்யமட்டேன், நான் நல்லவனா? கெட்டவனா?"
மூன்று வித நிலைகளில் இயங்கும் மனிதர்கள் இருக்கிறார்கள்.
தன்னைப் பற்றிய பொறுப்பை கூட எற்றுக்கொள்ளாமல், யார் கையிலாவது தன்னை ஒப்படைக்க காத்திருப்பவர்கள் ஒரு வகை. அவர்கள் புழுவைவிடக் கேவலமானவர்கள்.
மற்றவர்களைப் பற்றிக் கவலையின்றி தன்னை மட்டும் பார்த்துக்கொள்பவர்கள் அடுத்தவர். இவன் மிருகத்தைப் போன்றவன். மிருகங்கள் பொதுவாக யாருக்கும் தீங்கு நினைப்பதில்லை, சிங்கம் பசித்திருக்கும் போது அதன் எதிரே போனால், அது உங்களை உணவாக மட்டுமே பார்க்கிறது. மற்றபடி அது உங்களை எதிரியாகப் பார்ப்பது இல்லை.
தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஒருதேவை என்றால், தாமகவே அவர்களை அண்டி உதவி செய்பவர்கள் மூன்றாவது வகை. இவர்கள் தான் மனிதன் என்ற பதத்துக்கு அருகதையானவர்கள். மற்றபடி யாரோ சொன்னதற்காக மற்றவருக்கு உதவுபவர்கள் எதிலும் சேர்த்தியில்லை.
சங்கரன்பிள்ளைக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு, ஒரு புதிய அறை ஒதுக்கப்பட்டது. தனக்கு கீழே பணிபுரிபவர்களுக்கு எதிரில் தன்னை பெரியாளாகக் காட்டிக்கொள்ள விரும்பினார் அவர்.
அறைக்கதவு தட்டப்பட்ட போது , ட்க்கென்று தொலைபேசி ரிசீவரைக் காதில் எடுத்து வைத்துக்கொண்டார். கம்பெனி முதலாளியுடன் உரிமையோடு பேசுவது போல் பாவனை செய்தார். பிறகுதான் உள்ளே வந்தவனைக் கவனித்தாகக் காட்டிகொண்டு " சொல்தம்பி, உனக்கு என்ன வேண்டும்?" என்றார்.
அவன் நமட்டுச் சிரிப்பு சிரித்துவிட்டு சொன்னான், "ஐயா, தங்கள் அறையில் உள்ள தொலைபேசிக்கு கனெக்ஷன் கொடுக்க வந்திருக்கிறேன்!"
மற்றவர்களிடம் செயற்கையாக தன் பிம்பத்தை உயர்த்திக் காட்டுவதற்காக முனைபவர்கள் இப்படித்தான் மூக்குடைபடுவார்கள். அவர்கள் போலிகள்!
உங்களிடம் மனிதகுணம் முழுவீச்சில் இயங்கினால், எந்தக் கோட்பாடுகளுக்காவும் காத்திருக்க மாட்டீர்கள்.உங்கள் சக்திக் உட்பட்டு அடுத்தவர்களுக்கு தேவையானதை கவனித்து வழங்குவீர்கள். எங்கெங்கு உதவி தேவையோ அங்கெல்லாம் தாமாகவே உங்கள் கரங்கள் உதவியுடன் நீளும்!

எப்படி எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் உதவி செய்து கொண்டு இருக்க முடியும்?
உங்களால் முடியாததை நீங்கள் செய்யாவிட்டால், அது தவறில்லை. செய்யக்கூடியதை நீங்கள் செய்யாவிட்டால் நீங்கள் மனிதராகவே இருக்க தகுதியற்றவராகி விடுவீர்கள்.
மனிதன் எட்டக்கூடிய உயரங்களை, எட்டாமல் இருப்பது எவ்வளவு பரிதாபகரமான நிலை?
க‌டவுளை விடுங்க‌ள், அடுத்த‌வ‌ர்க‌ளை விடுங்க‌ள், உங்க‌ளைப்ப‌ற்றிய‌ க‌வ‌ன‌ம் கொள்ளுங்க‌ள். நீங்க‌ள் ஆன‌ந்தமாக‌ இருந்தால், உங்க‌ளைச் சுற்றி ம‌ற்ற‌வ‌ர்க‌ள் ஆன‌ந்த‌மாக‌ இருப்பார்க‌ள். வாழ்க்கையும் ஆன‌ந்த‌மாக‌ இருக்கும்.....
ம‌னித‌ன் மேம்ப‌ட்டால் தான், ம‌னித‌த‌ன்மை மேம்ப‌டும், ம‌னித‌த‌ன்மை மேம்ப‌ட்டால் யாருக்கும் எந்த‌ போத‌னையும் செய்ய‌த்தேவை இல்லை.
அத‌னால் தான் யோகமார்க்கம்(ஆனந்தவழி) என்பதில் கடவுளைப் பற்றிய‌ கவனம் என்பதே இல்லை. ம‌னித‌னை, ம‌னித‌த்த‌ன்மையை மேம்ப‌டுத்துவ‌திலேயே இருக்கிற‌து. முழுமையான ஆன‌ந்தத்தை அடைய‌வே வ‌ழிக‌ட்டுகிற‌து......

வாழ்க வளமுடன்!

No comments:

Post a Comment