நினைத்தது நிறைவேற வேண்டுமானால், முதலில் உங்களுக்கு எது வேண்டும் என்ற தெளிவு வேண்டும்...உறுதி வேண்டும், உங்களில் பெரும்பாலானவர்களுக்கு எது வேண்டும் என்று கேட்கத்தெரியாது. எது வேண்டாம் என்று சொல்லித் தான் பழக்கம்.
'நான் தோல்வி அடையக்கூடாது, என் தொழிலில் நஷ்டம் அடையக் கூடாது, இதை நான் இழந்துவிடக்கூடாது' என்று 'வேண்டாம்' களையும், 'கூடாது' களையும் தான் அதிகம் நினைக்கிறீர்கள்.
நீங்கள் எதற்கு ஆசைப்பட்டீர்களோ, அதை முதலில் மனதளவில் கற்பனையில் உருவாக்குங்கள் அப்போது தான் அது நிஜத்திலும் உருவெடுக்கும்!
அஸ்திவாரம் போடும் நிலையிலேயே, மனதில் உறுதியில்லாமல், இது என்னால் முடியுமா? என்று சந்தேகப்பட ஆரம்பித்தால், உங்கள் வீடு கற்பனையில் கூட எழும்பாது.
போர்களம் நோக்கி படையை நடத்திக் கொண்டிருந்தான் ஒரு தளபதி. பாதி வழியில் ஒரு ஒற்றன் எதிர்கொண்டான்.
"தளபதியாரே, நம்மிடம் ஆயிரம் வீரர்கள் தான் இருக்கிறார்கள், எதிரிகளிடமோ பத்தாயிரம் வீரர்கள் இருக்கிறார்கள், நாம் பேசாமல் சரணைந்து விடலாம்" என்றான்.
தகவல் அறிந்ததும் ஆயிரம் வீரர்களும் தைரியமிழந்தார்கள். அவர்கள் எல்லோரையும் அம்மன் ஆலயத்துக்கு வரச்சொன்னான் தளபதி.
“வலுவான எதிரியை நம்மால் வெல்ல முடியுமா? என்பதை தெய்வத்திடமே கேட்டுவிடுவோம். சந்நிதியில் இந்த நாணயத்தை சுண்டுகிறேன், தலை விழுந்தால் போருக்கு போக அம்மன் உத்தரவு தந்ததாக ஏற்போம். பூ விழுந்தால் இப்படியே திரும்பி விடுவோம்" என்று நாணயத்தை சுண்டினான்.
தலை விழுந்தது. வீரர்கள் அனைவரும் உற்சாகமானார்கள். போருக்கு போனார்கள். அவர்களைப் போல் பத்து மடங்கு படை பலம் கொண்ட எதிரியை வீழ்த்தி விட்டார்கள். வெற்றியுடன் நாடு திரும்புகையில் அம்மனுக்கு நன்றி சொல்ல, எல்லோரும் அதே கோயிலில் கூடினார்கள்.
தளபதி அப்போது தான் தம்மிடம் இருந்த நாணயத்தை எடுத்துக் காட்டினான். அதில் இரண்டு பக்கமும் தலை தான் அசசாகி இருந்தது.
தெய்வமே உத்தரவு தந்துவிட்டதாக எண்ணிய வீரர்கள், எப்படியும் வெற்றி பெறுவோம் என்று முழுமையாக நம்பினார்கள். அவர்களிடம் எதிர்மறையான எண்ணங்கள் எழவில்லை, அதனால் வெற்றியே பெற்றார்கள்.
அந்த விதத்தில் கடவுள் என்பது, மனதை ஒருமுகப் படுத்த பயண்படும் ஒரு கருவி. அவ்வளவுதான்.
மற்றபடி எதற்கெடுத்தாலும் கோயிலுக்கு போய் வேண்டிக்கொண்டால் காரியங்கள் நடந்துவிடுமா? கடவுள் மீது இம்மியளவும் சந்தேகம் இல்லாத பூரண நம்பிக்கை இருக்கிறதா? கள்ளம் கபடமற்ற அந்த குணம் இருந்தால் தான் உங்களுக்கு எதிர்மறையான எண்ணங்கள் எழாது, ஆசைப்பட்டது கிடைக்கும்.
ஆனால் சந்நிதியில் ஒரு கண்ணும், வாசலில் விட்டு வந்த செருப்பின் மீது ஒரு கண்ணுமாகத்தான் உங்களால் கடவுளுடன் உறவு கொண்டாட முடியும் என்றால், கடவுளை நம்புவதாக நீங்களே உங்களை ஏமாற்றிக் கொள்கிறீர்கள். அவ்வளவு தான். அந்த பொய் விசுவாசம், உங்கள் காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள உதவாது.
கடவுளிடம் வேண்டிக்கொண்ட பிறகும், அது நடக்குமோ, நடக்காதோ என்ற பயமும், மனப்போராட்டங்களும் தொடர்ந்திருந்தால், ஆசைப்பட்டது எப்படி கிடைக்கும்?
சங்கரன்பிள்ளை ஒருமுறை வெகு தூரம் நடந்து, தற்செயலாக சொர்கத்துக்குள் நுழைந்துவிட்டார். அவருக்கு அகோரப்பசி, மிகவும் களைப்பாக இருந்ததால் ஒரு மரத்தடியில் உட்கார்ந்தார்.
அது கேட்கும் வரங்களையெல்லாம் அள்ளித் தரும் கற்பகவிருட்சம். அது தெரியாமலேயே, 'இப்போது மட்டும் வயிறார, விதவிதமாக உணவு கிடைத்தால் எப்படி இருக்கும்?' என்று நினைத்தார்.
அடுத்த கனம் ஆசைப்பட்ட உணவுவகைகளெல்லாம் அவர் முன் தங்கத் தட்டில் இருந்தன. விரும்பிய பழச்சாறுகளெல்லாம் தங்க கோப்பைகளில் இருந்தன.
வயிறு நிரம்பியவுடன் தூக்கம் வந்தது. 'வசதியான கட்டில் இருந்தால்?' என்று நினைத்தார். உடனே ஒரு சொகுசான கட்டிலும் மெத்தையும் வந்தது.
அவருக்கு இப்போது அச்சம் வந்தது.
'நினைத்தவுடன் எப்படி எல்லாம் கிடைக்கிறது? இதென்ன பிசாசுகளின் இருப்பிடமா?' என்று நினைத்தார். உடனே பிசாசுகள் அவரை சூழ்ந்தன.
'ஐயையோ, பிசாசுகள் என்னைக் கொன்று விட்டால்?' என்று நினைத்தது தான் தாமதம், அடுத்த கனம் பிசாசுகள் அவரை கிழித்துத் தின்றன.
சங்கரன்பிள்ளைக்கு நேர்ந்த கதியை கவனித்தீர்களா? உங்கள் எண்ணங்கள் எதிர்மறையாக இருந்தால் இது தான் விளைவு.
உங்கள் மனதில் தேவையானதிற்க்கு ஆசைப்படும் எண்ணம் ஒன்று எழுந்தால், நம்பிக்கையின்றி அச்சப்படும் எண்ணங்கள் ஆயிரம் தோன்றுகின்றன. உங்கள் ஆசைஎண்ணத்தின் சக்தியை பலவீனப்படுத்தும் அபத்தத்தை முதலில் விட்டொழியுங்கள்.
No comments:
Post a Comment