Wednesday, November 3, 2010

ஆனந்தமே இயல்பு :

    சாலைகள் கூடும் இடத்தில் சில நிமிடம் நில்லுங்கள், உங்களை கடந்து செல்பவர்களை கவனியுங்கள், எத்தனை முகங்கள் சந்தோசமாக இருக்கின்றன? நூறு பேர் கடந்து போனால், அதில் நான்கோ ஐந்தோ முகங்களில் தான் சிரிப்பி்ருக்கிறது. அவர்களும் இளைஞர்களாகத்தான் இருக்கிறார்கள், மற்றவர்கள் எதோ வாழ்கையை தொலைத்துவிட்டவர்கள் போல் தெரிகிறார்கள். ஏன் இப்படி?
         வெளியெ ஏன் போக வேண்டும்? உங்களையே கண்ணாடியில் பாருங்களேன்.... உங்கள் முகத்தில் ஆனந்தமும் கொண்டாட்டமும் தெரிகிறதா? அல்லது சிரிப்பை வற்புறுத்தி அழைத்து வரவேண்டியிருக்கிறதா?
        உங்களின் ஐந்து வயது விசயங்கள் ஞாபகமிருகிறதா? எப்படி எல்லா விசயங்களுக்கும் பொங்கி பொங்கி ஆனந்தப்பட்டீர்கள் என்று ஞாபகமிருகிறதா? ஐந்து வயதில் உங்கள் உயரமென்ன? இப்போது உங்கள் உயரமென்ன? உங்கள் சந்தோசமும் குறைந்தபட்சம் அதே விகிதத்தில் வளர்ந்திருக்க வேண்டாமா?         
        கள்ளம் கபடமற்ற அந்த வயதில் உங்களுக்கு சந்தோசத்தை தவிர வேரெதுவும் தெரியாது. பிறகு என்ன ஆனது? நீங்கள் வளர்ந்தீர்கள் சசந்தோசமாக இருக்க பல விஷயங்களை தேடி தேடி சேகரித்தீர்கள் பெரிய படிப்பு, கம்ப்யூட்டர்,மோட்டார் சைக்கிள்,கார்,வீடு,டி.வி,கிரெடிட் கார்டு, டி.வி.டி, ஏ.சி, செல்போன் என அவரவர் முயர்ச்சிகேர்ப்ப வசதி சேர்த்து விட்டீர்கள்... ஆனால் என்ன ஆனது? சந்தோசத்துக்காக இவ்வளவு தேடிய நீங்கள், கடைசியில் உங்கள் சந்தோசத்தை மட்டும் தொலைத்துவிட்டீர்கள். எங்கே போயிற்று உங்கள் சந்தோசமெல்லாம்?
         ஒரு முறை சங்கரன்பிள்ளை மூச்சு முட்டக் குடித்துவிட்டு பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தார். வந்த பஸில் கூட்டம் பிதுங்கிவழிந்தது. எப்படியோ அதில் ஏறிவிட்டார். பத்து பதினைந்து பேர் காலை மிதித்து, நான்கைந்து பேரை முழங்கையால் நெட்டித்தள்ளி உள்ளே நகர்ந்தார்.
       ஒரு மூதாட்டிக்கு பக்கத்து இருக்கையில் இருந்தவர் எழுந்ததிருப்பதை பார்த்ததும், சங்கரன்பிள்ளை பலரையும் இடித்து தள்ளி பாய்ந்தார். குடிகாரனோடு மல்லுக்கு நிற்கவேண்டமே என்று அனைவரும் முகச்சுழிப்புடன் ஒதுங்கி வழி விட்டனர். சங்கரன்பிள்ளை பெரிமிதத்தோடு அந்த இருக்கையில் தொப்பென‌ அமர்ந்தார்.
        உட்கார்ந்த வேகத்தில் அந்த இருக்கையில் இருந்த மூதாட்டியின் மேல் சரிந்தார். மூதாட்டி மடிமீது வைத்திருந்த பழக்கூடை சரிந்தது. மூதாட்டி கோபமாக பார்த்து "நீ நேரே நரகத்திற்கு தான் போகப்போகிறாய்" என்று ஆத்திரத்தோடு சொன்னார்.
        சங்கரன்பிள்ளை பதறி அடித்துக்கொண்டு எழுந்தார் "ஹோல்டன் ஹோல்டன், வண்டியை நிறுத்துங்கள். நான் போக வேண்டியது காந்தி நகருக்கு, மாறி வேற வண்டியில் ஏறிவிட்டேன் என்று கத்தினார்.
        இப்படித்தான் உங்களில் பலர் எந்த பஸில் ஏறியிருக்கிறோம் என்றே தெரியாமல் ஏறுவதும் இறங்குவதுமாக அல்லாடிக் கொண்டிருக்கின்றோம்.
        ஆசைப்பட்டது கிடைக்காமல், சோகத்தில் முகத்தை தூக்கி வைத்துக்கொள்வதே முட்டாள்தனம். ஆசைப்பட்டது கிடைத்தும் கூட ஏன் சந்தோஷத்தை முழுமையாக அனுபவிக்கத் தெரியாமல் தவிக்கிறீர்கள்?
        இயற்கையிடமிருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது.
        தென்னை மரத்தை கவனியுங்கள், உஙள் தோட்டத்தில் நெடு நெடுவென வளர்ந்திருக்கிறது. சுவையான தேங்காய்களாக வ்ழங்கிக் கொண்டு இருக்கின்றது. மற்ற மரங்களை வெட்டிப் போடும் நேரத்தில் கூட தென்னையை வெட்ட மனசு வராது உங்களுக்கு. அதற்கு தண்ணீர் ஊற்றி கவனித்துக் கொள்வீர்கள். ஆனால் உங்களிடம் தண்ணீரை எதிர்பார்த்தா அது தேங்காய்களை சுமக்கிறது?
        அது அதன் இயல்பு. அதன் இயல்பு என்னவோ அதன் படி நடந்து கொள்கிறது. அதற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் தானாகவே கிடைத்துவிடும்.
        இயல்பு, அதை ஒட்டிய செயல், அதற்கான பலன் என்பது தான் இயற்கை வகுத்துள்ள நியதி.
         ஆனால் நீங்கள்? உங்களுக்கு சச்சின் போல கிரிக்கெட் ஆட வெண்டும், ஐஸ்வர்யாராய் போல அழகாக இருக்க வேண்டும், பில்கேட்ஸ் போல ப்ணக்காரராக வேண்டும். அந்த மாதிரி ஒரு கார், இந்த மாதிரி ஒரு பங்களா, அவரைப்போல ஒரு வாழ்க்கை, இவரைப் போல செல்வாக்கு.. இப்படி பலனை முதலில் தீர்மானிதீர்கள், அதை எதிர்பார்த்து செயலில் இற‌ங்கினீர்கள்.அது உங்க‌ளுக்கு சரி வருமோ இல்லையோ அதை உங்களுக்கு இயல்பாக்கப் பார்கிறீர்கள்.
        இப்படி அடுத்தவரைப் பார்த்து, அதே போல் உங்கள் வாழ்கையை அமைத்துக் கொள்ள முயற்சிக்கும் போது உங்கள் வாழ்கை நரகமாகிப் போகும்....ஆம்....உங்கள் இயல்பை புரிந்து கொள்ளாமல் எதிர்திசையில் துடுப்புப் போடுவதே வாழ்கையில் அத்துனை துன்ங்களுக்குமே காரணம்.
       உங்கள் அடிப்படை எண்ணம் குற்றமல்ல. உங்கள் இயல்பை எப்படி புரிந்து கொள்வது? எப்படி ஆனந்தமாக வாழ்வது?

No comments:

Post a Comment