Tuesday, November 9, 2010

ஆனந்தமாக செயலாற்றுங்கள்:

      உங்களுடைய ஆசை என்ன? எதைத்தொட்டாலும் வெற்றி கிடைக்கவேண்டும் என்பது தானே.
     மேல்நாட்டு உளவியல் நிபுணர்கள் என்ன சொல்லிக் கொடுக்கிறார்கள், 'ஜெயிக்கவேண்டும், ஜெயிக்கவேண்டும் என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். வெற்றியை குறிவைத்தே உங்களுடைய ஒவ்வொரு செயலும் இருக்கட்டும்' என்கிறார்கள்.
     பெரும்பாலும் இந்த முயற்சி உங்கள் ரத்தக் கொதிப்பை தான் அதிகரிக்கும், ஏன்?  
  வெற்றியையே நினைத்து உழைத்தால், அது கிடைக்குமா கிடைக்காதா என்ற சந்தேகத்தில் படபடப்பு, அச்சம், கவலை, மனஉளைச்சல் என்று ஏராள‌மான பிசாசுகள் உங்கள் மீது வந்து ஏறிக்கொள்ளும்.
     இலக்கின் மீது ஒரு கண்ணை பதித்துக்கொண்டால், அவன் பாதிக்குருடனாகி விடுகிறான் என்கிறது, ஜென் தத்துவம். மிச்சமிருக்கும் ஒரு கண்ணை வைத்துக்கொண்டு எவ்வளவுதூரம் செயலாற்ற முடியும்.

     அப்படி அரைகுறை கவனத்துடன் செயலாற்றாதீர்கள். இந்த கனம் செய்ய வேண்டியதை இரண்டு கண்களையும் பயன்படுத்தி முழுமையாகச் செய்யுங்கள். எட்டிப்பிடிக்க வேண்டிய அவசியமில்லாமல், வெற்றி இலக்கை சுலபமாக தொட்டு விடமுடியும்.
     நீங்கள் கவனமாக உழைக்க வேண்டுமே தவிர, கடுமையாக உழைக்கத் தேவையில்லை. இதை விளக்க ஜென்னில் ஒரு அருமையான சம்பவம் உண்டு...
     சான்ஸு என்ற ஒரு ஜென் குரு இருந்தார், மிகச்சிறந்த வாள் வீரர். அவரிடம் ஒரு புதிய சீடன் சேர்ந்தான். 'இந்த நாட்டிலேயே ஒரு சிறந்த வாள் வீரனாக என்னை ஆக்க முடியுமா?' என்றான்.
     ' அதற்கென்ன பத்து வருடங்களில் உன்னை தயார் செய்துவிடுகிறேன்' என்றார் குரு. 'என்னது பத்து வருடங்களா? ஐந்தே வருடங்களில் சாதிக்க வேண்டும் குருவே, மற்றவர்களை விட இரண்டு பங்கு அதிகமாக உழைக்கத் தயாராக இருக்கிறேன்.'
'அப்படியானால் இருபது வருடங்களாகும்என்றார், சான்ஸு.

     சீடன் திகைத்தான், 'போதாது என்றால், இன்னும் நான்கு பங்கு உழைக்கத்தயாராக இருக்கிறேன்' என்றான்.
     'அப்படி செய்தால், நாற்பது வருடஙளாகுமே' என்றார் குரு. ஆம் உங்களை வருத்திக்கொள்ள வருத்திக்கொள்ள‍, நீங்கள் நினத்ததை அடைய இன்னும் அதிக காலமாகும். அதைத்தான் சன்ஸு அந்த சீடனுக்கு புரியவைத்தார்.
     கடுமையாக உழைப்பவர்கள் சில சமயம் வெற்றி பெறலாம். ஆனால் அதன் சந்தோசத்தை அனுபவிக்க முடியாது.
     உலகின் மிக அற்புதமான கண்டுபிடிப்புகள், விஞ்ஞானிகள் ஓய்வாக இருந்த‌ போதுதான் நிகழ்ந்திருக்கின்றன. மரத்தடியில் சும்மா உட்கார்ந்திருந்த போது தான், ஆப்பிள் விழுவதைக் கவனித்தார் ஐசக் நியுட்டன். புவியீர்ப்பு பற்றிய விதியை கண்டுபித்தார்.
     'பாத் டப்'பில் ஓய்வாக குளித்துக் கொண்டிருந்தபோது தான், மிதப்பது பற்றிய விதிகளை கண்டுணர்ந்தார், ஆர்கிமிடீஸ்.
     டென்சனில்லாமல், ரசித்து முழு ஈடுபாட்டுடன் பணிகளை செய்யும் போதுதான், மூளை அதன் உச்சத் திறனுடன் வேலை செய்யும்.

     கவனித்து பாருங்கள், விளையாட்டில் கூட, வெற்றியை நினைத்து அதிக படபட‌ப்புடன் விளையாடும் குழு தான் தோற்கிறது. விளையாட்டை அனுபவித்து ஆடுபவர்கள் வெற்றி பெறுவார்கள்.
     வெற்றி...வெற்றி... என்று உங்களை நீங்களே வருத்திக்கொள்ளும் சந்தர்ப்பங்களில் உடலள‌விலும், மனதளவிலும் நீங்கள் பலவீனமாகிப் போவீர்கள்.
     வெற்றியை பற்றிய அச்சத்தை விட்டுவிட்டு, மனதை அமைதியாக வைத்திருங்கள், உடல் தானாகவே வேகமாக உழைக்கும்.
     ஆனால், உங்களில் பெரும்பாலானவர்கள் நேரெதிராக அல்லவா இருக்கிறீர்கள், உங்கள் மனம் நிலையில்லாமல் வேகமாக இயங்கிக்கொண்டிருக்கிறது, அதனால் உடலின் வேகம் குறைந்துவிடுகிறது.
     இப்படித்தான் சங்கரபிள்ளையின் வாழ்கையில் ஒரு வேடிக்கை நடந்தது.
     'ஒரு வேலையை, மாலையில் வீட்டுக்குப் போனதும் மறக்காமல் செய்யவேண்டும்' என்று  கைக்குட்டையில் ஒரு முடிச்சுப் போட்டுக்கொண்டார்.
     ஆனால், 'வீட்டுக்குப் போனதும் எதற்காக அந்த‌ முடிச்சுப் போட்டுக்கொண்டோம் என்பது அவருக்கு சுத்தமாக மறந்துவிட்டது.
     படபடப்பானார், மூளையை கசக்கினார், மொட்டை மாடியில் உலாத்தினார், நெற்றியில் தட்டிக்கொண்டார், நோட்டில் என்னென்னவோ கிறுக்கினார்.... உஹூம் நினைவுக்கு வரவேஇல்லை.
     'பேசாமல் படுத்தூங்குங்கள், எதுவாக இருந்தாலும் நாளைக்கு பார்த்துக்கொள்ளலாம்' என்று அவர் மனைவி அறிவுரை சொன்னார்.
     'மாட்டேன், எதாவது முக்கியமன விசயமாக இருக்கும், எப்படி தூங்குவது' என்று படுக்கையில் உட்கார்ந்தே இருந்தார்.
     இதுவா, அதுவா என்று மண்டைக்குள் நூறாயிரம் யோசனைகள் போச்சி மாதிரி பறந்தன. கடைசியில் இரண்டு மணிக்கு சலித்துப் போய் கைக்குட்டையை தூக்கி தூர எறிந்தார், சடக்கென ஞாபத்துக்கு வந்தது.
     ' இன்றைக்கு ஒண்பது ம்ணிக்கே தூங்கப் போகவேண்டும்' என்று நினைவுபடுத்திக்கொள்ள‌ போடப்பட்ட முடிச்சு அது.
     படபடப்பாக‌ மூளையை இயங்க விட்டால், சங்கரன்பிள்ளைக்கு நேர்ந்தது தான் உங்களுக்கு நேரும்.
     முடிவைப்பற்றிய கவலையை விடுங்கள், ஒவ்வொரு முறையும் முழுமையான ஆனந்தமான ஈடுபாட்டுடன் செயலாற்றுங்கள், வெற்றி தானாக உங்கள் கதவைத் தட்டும்….

No comments:

Post a Comment