Friday, November 19, 2010

அச்சம் தவிர்த்தால் ஆனந்தம்:

            “நான் வண்டி ஓட்டும்போதெல்லாம் விபத்தில் சிக்கப்போகிறேன் என்கிற ஒருவித பயம் எழுகிறது, என்ன செய்ய?"
      ஆபத்து என்று பயந்து எதைச் செய்யாமல் விட முடியும்?
      அறையில் உட்கார்ந்திருந்தாலும் சுழலும் மின்விசிறி திடீரென்று கழன்று உங்கள் தலை மேலே விழலாம். சுவிட்சை போடும்போது மின்சாரம் தாக்கலாம். மழைகாலத்தில் இடி விழுந்து பொசுக்கலாம். வாழ்க்கையில் எதில்தான் ஆபத்தில்லை?
      வாகனத்தை சாலையில் செலுத்தும் முன், அது எப்படி வேலை செய்கிறது என்று அறிந்து கொள்ளுங்கள், அதை சீராக செலுத்தும் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். சாலை விதிகளை மீறாமல், போக்குவரத்தை மதியுங்கள்.
      வாகனத்தை செலுத்தும் போது, வேறு சிந்தனையில் மூழ்கிப்போகாமல், செல்போன் பேசிக்கொண்டு இராமல், வாகனத்தின் மீதே முழுகவனம் செலுத்தி ஒட்டுங்கள், எப்படி விபத்து நேரும்? செய்யும் வேலையை முழுகவனத்தோடு செய்தால் எதற்கு பயம்?
      வாகனம் ஓட்டும் போது, இயல்பாக எழும் அச்சத்தை எவ்வாறு அடக்குவது?
      அச்சத்தை அடக்குவது என்றால் என்ன? அதன் மீது எறி உட்கார்ந்து கொள்வதா? அப்படி அதை அசைய விடாமல் அதன் மீது அழுத்தி உட்கார்ந்து கொண்டால், என்ன ஆகும்? அதனுடன் நீங்கள் தீராத உடன்படிக்கை போட்டுக்கொண்டவராகி விடுவீர்கள். எப்போது நீங்கள் அசைந்தாலும், அது விருட்டென்று நழுவி வெளியே வரப்பார்க்கும். நீங்கள் எழுந்து நின்றால், அது வான்வரை வளர்ந்து, பூதாகரமாக எழுந்து நின்று, படமெடுத்து ஆடும்.
ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது….
      ஓர் அமெரிக்க பெண்மணி சென்னைக்கு சுற்றுலா வந்திருந்தார். சென்னையின் ஆட்டோக்களால் கவரப்பட்டு, அதில் ஒரு ஆட்டோவில் எறி உட்கார்ந்தார், தான் செல்ல வேண்டிய இடத்தை சொன்னார்.
      உடனே ஆட்டோ பந்தய வேகத்தில் சீறிப் புறப்பட்டது. சென்னையின் நெரிசலான போக்குவரத்தினுடையே அந்த ஆட்டோ சடார் சடார் என்று புகுந்து விரைய, அமெரிக்க பெண்மணி பயத்தில் வீறிட்டார்.
      ஒரு திருப்பத்தில் இரண்டு லாரிகள் ஒரு குறுகளான தெருவில் ஒன்றை ஒன்று முந்திய படி தெருவையே அடைத்தபடி வர, அவள் நெஞ்சைக் கையில் பிடித்துக்கொண்டு, ஆட்டோவை நிறுத்தச் சொல்லி கதறினார்.
      ஆனாலும் சற்றும் வேகம் குறையாமல், அந்த ஆட்டோ இரண்டு லாரிகளுக்கிடையே புகுந்து விரைந்தது. காற்றை அதிரடித்து விரைந்து திருப்பி அவர் குறிப்பிட்ட முகவரியில் வந்து நின்றது.
      அந்த அமெரிக்க பெண்மணி அச்சத்தில் நடுங்கியபடி, "லாரிகளுக்கு நடுவில் அவ்வளவு சிறிய இடை வெளியில் எவ்வாறு உன்னால் தைரியமாக‌ வண்டியை செலுத்த முடிந்தது" என்று கேட்டாள்.
            “தைரியமாவது.... அந்த மாதிரி ஆபத்தான சமயங்களில் பயப்படக்கூடாது என்று என் கண்களை இறுக்க மூடிக்கொண்டு விடுவேன்" என்றார் ஆட்டோ டிரைவர்.
      கண்களை இறுக்க மூடிக்கொண்டு விட்டால், அச்சம் அகன்று விடுமா? முதலில் அச்சம் என்பது அகற்றப்பட வேண்டியதோ, அடக்கப்பட வேண்டியதோ இல்லை;
      அச்சம் என்பதே ஓர் அர்தமற்ற உணர்வு என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.
      அச்சம் என்பது அடுத்த கனத்தைப் பற்றியது தானே. அடுத்த கனம் என்பது இன்னும் உங்கள் அனுபவத்தில் வராத ஒரு கற்பனை. அப்படியானால் அச்சம் என்பதும் கற்பனை தானே? இந்த கனம் பற்றிய கவனம் மட்டும் இருந்தால், அந்த அனாவசிய கற்பனைகள் உங்களை ஏன் வதைக்கப் போகின்றன?
      உண்மையில், தைரியம் அற்றவர்கள், வாகனத்தை செலுத்துவது மற்றவர்களுக்கு தான் ஆபத்து! உங்கள் மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லையென்றால், பேச்சாமல் பொது வாகனங்களில் செல்லுங்கள். உங்கள் வாகனத்தால் சுற்றுப்புற சூழலுக்கும் ஆபத்தில்லை. எரிபொருள் தட்டுப்பாட்டை கணக்கில் கொண்டால் அது நாட்டுக்கும் நல்லது தானே.
      உங்கள் கற்பனை அச்சத்தால் வாழ்க்கையை வீணடிக்காதீர்கள், இந்தகனம் மட்டும் வாழ்ந்து ஆனந்த்தை பருகுங்கள், ஆனந்தமாக வாழுங்கள்..
வாழ்க வளமுடன்!

No comments:

Post a Comment