மனம் உற்சாகமாக இருந்தால், புல் கூட ஆயுதமாக தோன்றும், தோல்வியும் கூட குருவாக தோன்றும். சாத்தியம் இல்லாததிலும் சாத்தியம் ஆவதற்கான சாத்தியக்கூறுகள் மனக்கண்ணில் தெளிவாகத் தெரியும்.
மனம் சோர்வுற்றிருந்தால் படையே உடன் இருந்தால் பயம் இருக்கும். வெற்றி கூட இப்போதைக்கு ஒ.கே. அடுத்த தோல்வி எப்போது வருமோ? என்று யோசிக்கத் தோன்றும். மிகச்சிறிய சாத்தியமின்மைகள் கூட பெரியதாகத் தெரியும்.
"இந்த நூற்றாண்டில் மனிதனை மிகாதிகம் பாதித்த வியாதி எது என்று கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது. அது எயிட்ஸ், கேன்சர், ரத்தக்கொதிப்பு, சர்கரைவியாதி, வறுமை போன்றவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என்ற ரீதியில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு. கருத்துக்கணிப்பின் முடிவு சற்றும் எதிர்பாராதது..
மனிதனை அதிகம் பாதிப்பது துக்கம், மனச்சோர்வு ( Depression) தான் காரணம் என்பது தான் அது.
ஒரு கிராமத்தில், ஒரு பெண்மணி நகரத்தில் வாழும் தன் மகன்களையே நினைத்து எப்போதும் கஷ்டப்பட்டுக்கொண்டே இருந்தார். பக்கத்து ஊருக்கு ஒரு ஞானி வந்திருப்பதாகவும், அவர் மக்களின் கஷ்டங்களை தீர்த்து வைப்பதாகவும் பெண்மணியின் காதுகளுக்கு எட்டியது. பெண்மணி ஞானியை தரிசிக்க கிளம்பினார்.
"என் பையன்களைப் பற்றிய கவலை தான் எப்போதும்! என் பையன்களுக்கு நல்ல காலம் பிறக்க வேணடும் அதற்கு ஏதாவது வழி சொல்லுங்க" என்றார் ஞானியிடம்.
ஞானி, "அப்படியாம்மா.. சரி.. ஏன் எப்போதும் உங்கள் மகன்களை நினைத்தே கவலைப் படுகிறீர்கள்?" என்று கேட்டார்.
பெண்மணி, " என்னுடய மூத்த மகன் உப்பு வியாபாரம் செய்கிறான். மழைகாலத்தில் மழையில் உப்பு எல்லாம் நனைந்து விடுமே. வெய்யில் முழுமையாக இல்லாததால் உப்பளம் கட்டமுடியாதே. அவன் வியாபாரம் மழைகாலத்தில் சரியாக நடக்காதே. என்னுடய இளைய மகன் குல்லா, கம்பளி வியாபாரம் செய்கிறான். வெய்யில் காலத்தில் இளையவனுக்கு வியாபாரம் சரியாக நடக்காதே.
இப்படி மூத்த மகன் பாதி காலத்திலும், இளைய மகன் பாதி காலத்திலும் சரியாக சம்பாதிக்காத போது, நான் எப்படி சந்தோசமாக இருக்கமுடியும்?" என்றார்.
ஞானி, "ஏம்மா இப்படி உங்களை நீங்களே தேவையே இல்லாமல் வருத்திக்கொள்ளுகிறீர்கள்? வெய்யில் காலத்தில் மூத்த மகன் உப்பு வியாபாரம் நன்றாக செய்வதையும், இளைய மகன் மழைகாலத்தில் குல்லா, கம்பளி வியாபாரம் நன்றாக செய்வதையும் நினைத்து சந்தோசப்படுங்கள், இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்" என்றார்.
பலர் இப்படித் தான் எதையாவது நினைத்து கவலைப்பட்டுக் கொண்டே இருப்பர். தொடர்ந்து கவலைப் படும்போது அது துக்கமாக மாறுகிறது. துக்கத்துக்கு காரணம் தேடுவதை நிறுத்துங்கள் கவலையைத் தாண்டி நிம்மதி உணர்ச்சி பெறுவீர்கள்.
"யாருக்காக கவலைப்படுகிறேன்?, எல்லாம் என் குடும்பத்துக்காகவும், ஊருக்காகவும் தானே கவலைப்படுகிறேன். மத்தவங்க மேல இருக்கிற கருனையால் தானே கவலைப்படுகிறேன். மற்றபடி எனக்கு ஒரு கவலையும் இல்லை என்று சுயபச்சதாபம் தேடும் சிலர் சொல்வதுண்டு. நம் கவலைகளை ஒழிக்க நம் எண்ண ஓட்டத்திலும் ஓடும் சில துன்புறுத்தும் வார்த்தைகளை கண்டுபிடித்து நாமே களையவேண்டும்.
நான் பிரயோஜனமில்லாதவன், நான் முட்டாள், நான் துரதிருஷ்டசாலி என்று எண்ண ஓட்டத்தில் ஓடும் வார்த்தைகளை களைய வேண்டும்.
கவலைகளை களைந்தால் வெளிப்படாமல் இருக்கும் ஆனந்த சக்தி வெளிப்பட ஆரம்பிக்கும். ஆனந்தம் பொங்கும்.......
No comments:
Post a Comment