Showing posts with label பயம். Show all posts
Showing posts with label பயம். Show all posts

Wednesday, May 29, 2013

இருளைக் கண்டு ஏன் பயம்? ஆனந்தம்








      மாயாஜாலக் கதைகளும், அம்புலி மாமா கதைகளும் நமக்கு சகஜம். ஆனால் கேட்பதற்கு அம்புலி மாமா கதைப்போல் தோன்றினாலும், சத்குருவுக்கு தன் சிறு வயதில் ஏற்பட்ட சில விஷயங்களை நம்மால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை, இது சாத்தியம்தானா எனப் புரியவில்லை. படித்துவிட்டு கமென்டில் சொல்லுங்களேன்…



சத்குரு:

      என் தாத்தா வீட்டில் ஒரு மாட்டுக் கொட்டகை இருந்தது. அங்கே இரண்டு மாடுகள் கட்டப்பட்டு இருக்கும். இருட்டில் பார்த்தால், மாடுகளின் கண்கள் மட்டும் பெரிய கோலிக் குண்டுகளாகத் தெரியும். இரவுகளில் அதைக் காட்டி, ‘கும்மா வந்திரும்’ என்று சொல்லி, என் அத்தைகள், மாமிகள் எல்லோரும் குழந்தைகளைப் பயமுறுத்திச் சாதம் ஊட்டுவார்கள்.

      அதே மாட்டுக் கொட்டகையைக் காட்டி, சாதம் ஊட்டுவதற்காக என்னையும் பயமுறுத்த முனைந்தார்கள். ‘அது கும்மா இல்லை… பசுமாடு’ என்று சொல்லித் சிரித்தேன். அவர்கள் வாயடைத்துப் போனார்கள். அதுபற்றிப் பல நாட்கள் ஆச்சர்யப்பட்டுப் பேசிக் கொண்டு இருந்தார்கள்.

      இருள் என்றால் ஒன்றுமில்லை என்றுதானே அர்த்தம்! ஏதோ இருந்தால்கூட அது உங்களை ஏதாவது செய்யலாம். எதுவுமே இல்லாத ஒன்று உங்களை என்ன செய்துவிட முடியும்?
எனக்கு ஏன் இருளைப் பார்த்து பயம் வரவில்லை? எளிமையான காரணம்தான். மற்றவர்களுக்கு இருட்டில் மாட்டின் கண்கள் மட்டும் புலப்பட, எனக்கோ மொத்த மாடும் தெரிந்தது. அன்றைக்கே, இருளில் மற்றவர்களைவிடத் தெளிவாக என்னால் பார்க்க முடிந்தது. இருள் எனக்கு ஒருபோதும் பிரச்சனையாக இருந்ததில்லை.

      எத்தனையோ முறை வனங்களில் சுற்றித் திரிந்திருக்கிறேன். 11 வயதில் ஒருமுறை மூன்று நாட்கள் காட்டில் தனியாக அலைந்திருக்கிறேன். இரவுகளில் பயன்படுத்த ஒரு தீப்பெட்டி கூட என்னிடம் கிடையாது. இருள் என்னிடம் நட்பாகவே இருந்திருக்கிறது.

      மூன்று நாட்களுக்கு நான் வீடு திரும்பாததால், என்னைக் கண்டுபிடிக்க வீட்டில் பல முயற்சிகள் நடந்தன. ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரும் என்னைத் தேடிக் கொண்டு இருந்ததாக அறிந்தேன். நான் வீடு திரும்பியபோது, எல்லோருக்கும் ஒரு கேள்விதான் பெரிதாக இருந்தது. ‘இரவுகளில் தூங்குவதற்கு என்ன செய்தாய்? ஏதாவது பாழடைந்த கோயில் இருந்ததா?’

      “இல்லை. இருட்டிலும் காட்டில் நடந்து கொண்டுதான் இருந்தேன். ஓய்வெடுக்க நினைத்தபோதெல்லாம் ஏதாவது ஒரு மரக்கிளையில் போய்த் தங்கினேன்” என்றேன்.

      “அடப்பாவி! இருட்டைக் கண்டால் உனக்கு பயமாக இல்லையா?” என்று கேட்டார்கள். “என்னால்தான் இருட்டில் வெகு தெளிவாகப் பார்க்க முடிந்ததே… நான் பார்த்த எதுவும் என்னைப் பயமுறுத்துவதாக இல்லை” என்றேன். என் அப்பா தலையில் அடித்துக் கொண்டார். ‘ஐயோ, இந்தப் பையனுக்கு பயமே இல்லையே! இவனுக்கு என்ன ஆகப்போகிறதோ?’

      எனக்குப் புரியவே இல்லை. எதையாவது தெளிவாகப் பார்க்க முடியாமல் இருந்தால்தான், அதன்மீது பயம் வர வாய்ப்பு இருக்கிறது. பயப்படும் மகனாக இருந்தால், அவனுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று கவலைப்பட வேண்டும். எனக்கு பயம் இல்லை என்பதே அவருக்கு பயமாக இருந்தது. எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

      இருள் என்றால் ஒன்றுமில்லை என்றுதானே அர்த்தம்! ஏதோ இருந்தால்கூட அது உங்களை ஏதாவது செய்யலாம். எதுவுமே இல்லாத ஒன்று உங்களை என்ன செய்துவிட முடியும்? இருளைக் கண்டு எதற்குப் பயப்பட வேண்டும்?

      எதையாவது கண்டு பயந்தால்தான் அது பூதாகரமாகத் தோன்றும். பயம் இல்லாதபோது ஒருவருக்கு என்ன இழப்பு நேர்ந்துவிட முடியும்?

      நீங்கள் குழந்தையாக இருந்தபோது, உங்களை அன்பால், நம்பிக்கையால் கட்டுப்படுத்தத் திறனில்லாத பெரியவர்கள், இதையும் அதையும் சொல்லிப் பயமுறுத்தி வைத்திருப்பார்கள். இருளைக் கண்டு அச்சப்படுவதற்குக் கற்றுத் தந்தது அவர்கள்தான். பழைய பிம்பங்கள், கற்பனை உருவங்கள், ஏற்கனவே சேகரித்த அச்சங்கள் இவைதான் உங்களை இருளில் ஆட்டிப் படைக்கின்றன.

      வெளிச்சத்தில் சுற்றிலும் என்ன இருக்கிறது என்று உங்களால் பார்க்க முடிகிறது. இருட்டில் எதுவும் புலப்படாதபோது, கட்டுப்பாடு இல்லாத மனம், அதுவாகவே விபரீதமான பிம்பங்களைக் கற்பனையாகத் தோற்றுவிக்கிறது. அந்த பிம்பங்கள்தான் அச்சத்தின் அடிப்படை. இல்லாத ஒன்றை உருவகித்துக் கொண்டு அச்சப்படுவதும், அதனால் துன்பப்படுவதும் புத்திசாலித்தனமா? பைத்தியக்காரத்தனமா? நீங்களே சொல்லுங்கள்.

      என் மண்டைக்குள் எந்தவிதமான பிம்பங்களும் இல்லை என்பதால், எனக்குள் இந்தப் பயமுறுத்தும் விளையாட்டு நேர்வதில்லை. எதை வேண்டுமானாலும் என்னால் வெறித்துப் பார்க்க முடியும். இப்போதும் கண்களை மூடிக் கொண்டால், எனக்குள் வெறுமைதான் நிறைந்திருக்கும்.

      ரோகி, போகி, யோகி மூவருமே இரவில் தூங்கமாட்டார்கள். ரோகி என்றால் நோயாளி. உடல்நிலை மோசமாக இருக்கும்போது, ஒருவனுக்குத் தூக்கம் வராது. போகி என்றால் இன்பத்தை நாடிப் போகிறவன். அவன் நாடும் இன்பங்கள் பலவற்றுக்கு இரவுதான் உகந்தது. யோகி இரவில் தூங்காமல் இருப்பதற்குக் காரணம், இரவும் இருளும் அவருடைய ஆன்மீகப் பயிற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும்.

      காரணம், இருளில் எல்லாம் ஒன்றுடன் ஒன்று பாகுபாடு இன்றி ஐக்கியமாகிவிடுகின்றன. வெளிச்சம் வந்ததும் ஒவ்வொன்றும் தன் அடையாளத்தோடு விறைத்து நிற்கிறது. இருள் என்பது உண்மைக்கு வெகு அருகில் இருக்கிறது. வெளிச்சம் என்பது பொய்க்கு அருகில் இருக்கிறது.

Friday, November 19, 2010

அச்சம் தவிர்த்தால் ஆனந்தம்:

            “நான் வண்டி ஓட்டும்போதெல்லாம் விபத்தில் சிக்கப்போகிறேன் என்கிற ஒருவித பயம் எழுகிறது, என்ன செய்ய?"
      ஆபத்து என்று பயந்து எதைச் செய்யாமல் விட முடியும்?
      அறையில் உட்கார்ந்திருந்தாலும் சுழலும் மின்விசிறி திடீரென்று கழன்று உங்கள் தலை மேலே விழலாம். சுவிட்சை போடும்போது மின்சாரம் தாக்கலாம். மழைகாலத்தில் இடி விழுந்து பொசுக்கலாம். வாழ்க்கையில் எதில்தான் ஆபத்தில்லை?
      வாகனத்தை சாலையில் செலுத்தும் முன், அது எப்படி வேலை செய்கிறது என்று அறிந்து கொள்ளுங்கள், அதை சீராக செலுத்தும் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். சாலை விதிகளை மீறாமல், போக்குவரத்தை மதியுங்கள்.
      வாகனத்தை செலுத்தும் போது, வேறு சிந்தனையில் மூழ்கிப்போகாமல், செல்போன் பேசிக்கொண்டு இராமல், வாகனத்தின் மீதே முழுகவனம் செலுத்தி ஒட்டுங்கள், எப்படி விபத்து நேரும்? செய்யும் வேலையை முழுகவனத்தோடு செய்தால் எதற்கு பயம்?
      வாகனம் ஓட்டும் போது, இயல்பாக எழும் அச்சத்தை எவ்வாறு அடக்குவது?
      அச்சத்தை அடக்குவது என்றால் என்ன? அதன் மீது எறி உட்கார்ந்து கொள்வதா? அப்படி அதை அசைய விடாமல் அதன் மீது அழுத்தி உட்கார்ந்து கொண்டால், என்ன ஆகும்? அதனுடன் நீங்கள் தீராத உடன்படிக்கை போட்டுக்கொண்டவராகி விடுவீர்கள். எப்போது நீங்கள் அசைந்தாலும், அது விருட்டென்று நழுவி வெளியே வரப்பார்க்கும். நீங்கள் எழுந்து நின்றால், அது வான்வரை வளர்ந்து, பூதாகரமாக எழுந்து நின்று, படமெடுத்து ஆடும்.
ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது….
      ஓர் அமெரிக்க பெண்மணி சென்னைக்கு சுற்றுலா வந்திருந்தார். சென்னையின் ஆட்டோக்களால் கவரப்பட்டு, அதில் ஒரு ஆட்டோவில் எறி உட்கார்ந்தார், தான் செல்ல வேண்டிய இடத்தை சொன்னார்.
      உடனே ஆட்டோ பந்தய வேகத்தில் சீறிப் புறப்பட்டது. சென்னையின் நெரிசலான போக்குவரத்தினுடையே அந்த ஆட்டோ சடார் சடார் என்று புகுந்து விரைய, அமெரிக்க பெண்மணி பயத்தில் வீறிட்டார்.
      ஒரு திருப்பத்தில் இரண்டு லாரிகள் ஒரு குறுகளான தெருவில் ஒன்றை ஒன்று முந்திய படி தெருவையே அடைத்தபடி வர, அவள் நெஞ்சைக் கையில் பிடித்துக்கொண்டு, ஆட்டோவை நிறுத்தச் சொல்லி கதறினார்.
      ஆனாலும் சற்றும் வேகம் குறையாமல், அந்த ஆட்டோ இரண்டு லாரிகளுக்கிடையே புகுந்து விரைந்தது. காற்றை அதிரடித்து விரைந்து திருப்பி அவர் குறிப்பிட்ட முகவரியில் வந்து நின்றது.
      அந்த அமெரிக்க பெண்மணி அச்சத்தில் நடுங்கியபடி, "லாரிகளுக்கு நடுவில் அவ்வளவு சிறிய இடை வெளியில் எவ்வாறு உன்னால் தைரியமாக‌ வண்டியை செலுத்த முடிந்தது" என்று கேட்டாள்.
            “தைரியமாவது.... அந்த மாதிரி ஆபத்தான சமயங்களில் பயப்படக்கூடாது என்று என் கண்களை இறுக்க மூடிக்கொண்டு விடுவேன்" என்றார் ஆட்டோ டிரைவர்.
      கண்களை இறுக்க மூடிக்கொண்டு விட்டால், அச்சம் அகன்று விடுமா? முதலில் அச்சம் என்பது அகற்றப்பட வேண்டியதோ, அடக்கப்பட வேண்டியதோ இல்லை;
      அச்சம் என்பதே ஓர் அர்தமற்ற உணர்வு என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.
      அச்சம் என்பது அடுத்த கனத்தைப் பற்றியது தானே. அடுத்த கனம் என்பது இன்னும் உங்கள் அனுபவத்தில் வராத ஒரு கற்பனை. அப்படியானால் அச்சம் என்பதும் கற்பனை தானே? இந்த கனம் பற்றிய கவனம் மட்டும் இருந்தால், அந்த அனாவசிய கற்பனைகள் உங்களை ஏன் வதைக்கப் போகின்றன?
      உண்மையில், தைரியம் அற்றவர்கள், வாகனத்தை செலுத்துவது மற்றவர்களுக்கு தான் ஆபத்து! உங்கள் மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லையென்றால், பேச்சாமல் பொது வாகனங்களில் செல்லுங்கள். உங்கள் வாகனத்தால் சுற்றுப்புற சூழலுக்கும் ஆபத்தில்லை. எரிபொருள் தட்டுப்பாட்டை கணக்கில் கொண்டால் அது நாட்டுக்கும் நல்லது தானே.
      உங்கள் கற்பனை அச்சத்தால் வாழ்க்கையை வீணடிக்காதீர்கள், இந்தகனம் மட்டும் வாழ்ந்து ஆனந்த்தை பருகுங்கள், ஆனந்தமாக வாழுங்கள்..
வாழ்க வளமுடன்!